பன்னெடுங்காலமாக மனித சமூகத்தையும் அதன் நடத்தைகளையும் புரிந்து கொள்ளவும், விளக்குவதற்கும் சமுதாயத் தத்துவவாதிகள் முயன்று வந்துள்ளனர். அதனைத் தெளிவாக விளக்குவதற்கான முயற்சிகள் அறிவொளிக் காலத்தில் உருவாகத் தொடங்கினாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தனித்தனியான கல்விப் புலங்கள் உருவாகி மனித சமூகம், பண்பாடு, மற்றும் நடத்தை குறித்துத் துல்லியமாக விவரிக்கும் முயற்சிகள் தோற்றம் கொண்டன. தற்போது, தனித்தனியான இக்கல்விப் புலங்களின் போதாமைகள் உணரப்பட்டு, கலப்புப்புல (inter-disciplinary) மற்றும் பல்-புலங்களின் (multi-disciplinary) துணைகொண்டு விவரிப்பதற்கானத் தேவைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தப் பின்புலத்தில், ஆ.தனஞ்செயன் தன்னுடைய 'தமிழில் இலக்கிய மானிடவியல்' என்ற நூலில் தமிழின் தொகை நூல்களை மானிடவியல், சமூகவியல் துறைசார் கருத்தாக்கங்களின் உதவியுடன் இலக்கிய மானிடவியல் முறைமையைப் பயன்படுத்தி ஆராய்ந்துள்ளார். இந்நூலைக் குறித்த விமர்சனத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.
ஆ. தனஞ்செயன் எழுதிய 'தமிழில் இலக்கிய மானிடவியல்' என்ற நூலானது, 2014 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டில், பரிசல் பதிப்பகத்தால் இரண்டாம் பதிப்பாக வந்துள்ளது. 166 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் முதல் பகுதியில், இலக்கிய மானிடவியல் என்ற முறையியலையும், தமிழில் தோன்றிய இலக்கிய மானிடவியல் ஆய்வின் முன்னோடிகளைக் குறித்தும் விவரிக்கின்றார். மேலும், இலக்கிய மானிடவியல் முறையியலைப் பயன்படுத்தி தொல் தமிழ் இலக்கியங்களை விரிவாக ஆராய்ந்துள்ளார். அது குறித்து விரிவாகக் காணலாம்.
இலக்கிய மானிடவியல் எனும் முறையியல்
1980-களில், கதையாடல் வடிவங்களை முதன்மைத் தரவுகளாகக் கொண்டு அவற்றில் இடம்பெற்றுள்ள சமூக நிறுவனங்களைக் குறித்து ஆராய்வதே இலக்கிய மானிடவியல் என்ற முறையியலின் நோக்கமாக ஃபெர்னாண்டோ பொயத்தோஸ் அறிமுகம் செய்தார். மேலும், இலக்கியப் படைப்புகளில் இடம் பெறுகின்ற புலனுணர்வு சார்ந்த ஒழுங்கமைப்புகள் மற்றும் புரிந்துகொள்ளத்தக்க ஒழுங்கமைப்புகள் ஆகியவற்றை மானிடவியல் சார்ந்தத் தரவுகளாகப் பயன்படுத்திக் கொள்வது வலியுறுத்தப்படுகிறது. ஒரு இலக்கியப் பனுவலில் இடம்பெறக் கூடிய புலனுணர்வு சார்ந்த ஒழுங்கமைப்புகளில் வரிவடிவப் படுத்தக்கூடிய வாய்மொழி (verbal language), வரிவடிவப் படுத்த இயலாத மொழி (paralanguage), கதாபாத்திரங்களின் உடல்மொழிக் கூறுகள் (kinesics), கதைமாந்தர்களுக்கு இடையே காணப்படும் வெளிகள் (proxemics), விவரணையில் இடம்பெறக்கூடிய புழங்குப் பொருள்கள், கால விவரணைகள் ஆகியவற்றைக் குறிப்பனவாகும். புரிந்து கொள்ளத்தக்க ஒழுங்கமைப்புகள் என்பன "மனித நடத்தைகள் பலவற்றின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் குழு சார்ந்த நிகழ்வுகள், பருப்பொருள் படைப்புகள், கருத்துருவங்கள், ஏனைய பண்பாட்டுக் கூறுகள்" (பக்.15) போன்றனவற்றைக் குறிப்பிடுவனவாகும்.
இலக்கியத்தின் சாத்தியப்பாடுகள்
மானிடவியல் ஆய்வில் களத்திற்குச் சென்று தகவல்கள் சேகரிக்கப்படுவது போன்று, இலக்கியப் படைப்புகளில் இருந்து தகவல்கள் திரட்டுவதனை இலக்கிய மானிடவியல் கவனப்படுத்துகிறது. இலக்கியப் படைப்புகள் என்பன தனிநபர்களின் படைப்புகளாக இருந்தாலும் அது குறிப்பிட்டதொரு பண்பாட்டுச் சூழலில் தோற்றம் கொள்வதனால் அந்தப் பண்பாட்டின் கூட்டொருமை (collective consciousness) யையோ அல்லது அதன் மேல் எழுப்பப்படும் விமர்சனத்தையோ ஆவணப்படுத்தக் கூடியதாக இருக்கும். இவ்வாறு ஆவணப்படுத்தும் பண்பை இலக்கியம் கொண்டிருப்பதனால் அதனை ஆய்வு செய்வதற்கான மூலாதாரமாகக் (source) கருத வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சமூக உண்மையை (social reality) விவரிப்பதில் சமூக அறிவியலைக் காட்டிலும் இலக்கியப் படைப்புகளே அதிகமான சாத்தியங்களைக் கொண்டுள்ளன என்று எம்.எஸ்.எஸ். பாண்டியன் (2008)[1] குறிப்பிடுகிறார்.
நெடும்பாடல்களை ஆராய்ந்த முன்னோடிகள்
"தமிழில் இலக்கிய மானிடவியல்: தோற்றமும் அதன் முன்னோடிகளும்" என்ற தலைப்பிலான கட்டுரையில் தமிழின் தொன்மை இலக்கியப் பாடல்களை மானிடவியல், சமூகவியல், வரலாறு, தொல்லியல் ஆகிய புலங்களின் உதவியுடன் ஆராய்ந்து மிக நுட்பமான முடிவுகளை வழங்கிய க. கைலாசபதி, நா. வானமாமலை, கா. சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். முன்னர் கூறியது போல, இலக்கிய மானிடவியல் என்ற முறையியலானது இலக்கியத்தில் மானிடவியல் தரவுகளைக் கண்டடைவதினை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது என்று முன்பே பார்த்தோம். அதனுடைய மற்றொரு முக்கியமான அம்சம் பண்பாட்டிடை ஒப்பாய்வு (cross-cultural) ஆகும். உதாரணமாக, க. கைலாசபதி தன்னுடைய 'பேய்மகளிர்' கட்டுரையில் தமிழ்த் தொகை நூல்களிலிருந்து மூலாதாரங்களைச் சேகரித்து அவற்றை ஒத்த வழக்கங்கள் பிற பண்பாடுகளில் எவ்வாறெல்லாம் காணப்படுகின்றன என்பதை மானிடவியல் கோட்பாடுகளாகிய மந்திரம், ஆவியியம், இயற்கை வழிபாடு ஆகியவற்றின் துணைகொண்டு பண்பாட்டிடை ஒப்பாய்வு நோக்கில் ஆராய்ந்துள்ளார். ‘பேய்மகளிர்' என்போரைக் குறித்து, காண்பார்க்கு அச்சத்தைக் கொடுப்பவர், பிணம் தின்பவர், குருதி குடிப்பவர், சுடுகாட்டை விரும்புபவர், மிருகங்களின் பிணத்தையும் தின்பவர், குடலை மாலையாகப் போடுபவர், துணங்கைக் கூத்தாடுபவர் போன்ற விவரணைகள் இடம்பெற்றுள்ளன. இவைகளைக் கலப்புப்புல உதவியுடன் ஆராய்ந்து, 'பேய்மகளிர்' என்போர் உண்மையான மகளிரேயாவர்; அவர்கள் பெண்தெய்வ வழிபாட்டிற்காக பிணந்தின்னும் சடங்கினைச் செய்யக்கூடிய மாந்திரீகளாயிருந்திருப்பர் என்று நிறுவுகிறார்.
இதே போன்று, கா. சுப்பிரமணியன் 'சங்ககாலச் சமுதாயம்' என்ற நூலில் தமிழின் தொகை நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள ஐந்திணைகளில் வாழ்ந்த இனக்குழு மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை பரந்துபட்டக் கருத்தாக்கங்களுக்குள் அடைக்காமல் குறிப்பாக மானிடவியல் கருத்தாக்கங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பயன்படுத்தித் துல்லியமாக விவரிக்கின்றார். உதாரணமாக, அச்சமூகங்களில் வழக்கில் இருந்த சடங்குகளை 'மந்திரச்சடங்கு, வளச்சடங்கு, மந்திர-வழிபாட்டுச் சடங்கு, வேட்டைச் சடங்கு' என்று விளக்குகின்றார். அத்துடன், அவர்களது தொல் பழைய சமய வழிபாடுகளில் குலகுறியியம் (totemism), ஆவியியம் (animism), உயிரியக் கொள்கை (animatism) ஆகியனவற்றின் கூறுகள் கலந்து காணப்படுவதைக் குறிப்பிட்டு, சங்ககாலச் சமுதாயம் எவ்வாறு இனக்குழு சமுதாயமாக இருந்துள்ளது என்று சான்றுகளின் துணைகொண்டு நிறுவுகிறார். தமிழில் இலக்கிய மானிடவியலின் முன்னோடியாக விளங்கியவர்களுக்கும், மேற்கத்திய இலக்கிய மானிடவியலாளர்களுக்கும் அடிப்படையில் காணப்படும் சில வேறுபாடுகளைத் தனஞ்செயன் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கத்திய இலக்கிய மானிடவியலாளர்கள் கதையாடல் சார்ந்த இலக்கிய வடிவங்களில் இருந்து மானிடவியல் சார்ந்த மூலாதாரங்களை வருவித்துக்கொண்டனர். இங்கு, தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவர்கள் நெடும் பாடல்களில் இருந்து சான்றுகளைச் சேகரித்து மானிடவியல் புலம் மட்டுமின்றி சமூகவியல், தொல்லியல், வரலாறு ஆகிய புலங்களின் உதவியுடன் ஆராய்ந்துள்ளனர்.
அலைகுடிக் கலைஞர்கள் - வறுமை
'ஆற்றுப்படை நூல்கள் காட்டும் அலைகுடிக் கலைஞர்கள் வாழ்வியல்' என்ற கட்டுரை அலைகுடிக் கலைஞர்களாகிய கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோர் நிகழ்த்தக்கூடிய கலைகளைக் குறித்து விரிவாகப் பேசுகின்றது. இதில், விறலியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் 'தனித்தனிக் கலைக் குழுவிற்குத் தலைமை தாங்கி'ச் செல்பவர்களாக இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். கூத்தர், பாணர், பொருநர் போன்றவர்களின் புரவலர்களாக அரசர்கள், வள்ளல்கள் மட்டும் விளங்கியுள்ளனர். இந்த அலைகுடிக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைக்கக்கூடிய/பாடல்களைப் பாடக்கூடிய உறவுமுறையைக்கொண்ட சமூகக்குழுக்களாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். இந்த அலைகுடிக் கலைஞர்கள் தங்களுடைய உணவுகளைத் தாங்களே சேகரிக்கும் திறனையோ அல்லது உற்பத்தி செய்யும் திறனையோ கொண்டிருக்கவில்லை. தங்களுடைய நிகழ்த்துதலின் வழியே பரிசில் பெற்று வாழ்க்கை நடத்தக்கூடிய இரவலர் அலைக்குடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தக் கலைஞர்கள் 'அரசு நிறுவனச் சார்புநிலைக் குடியினராகவே' இருந்துள்ளனர்; அப்படியிருந்தும், அவர்கள் பசியால் வாடிய உடல், கந்தல் ஆடைகளுடன் அலைந்து திரிந்ததாக ஆற்றுப்படை நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை மானிடவியல், சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆகிய கல்விப் புலன்களின் துணைகொண்டு இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். அதன்படி, இக்கலைஞர்களின் நிகழ்த்துக் கலைகள் திணைசார் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையோடு தொடர்பில்லாத காரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார்: "... அரசின் புரவலாதரவு வாய்க்கப் பெற்றிருப்பினும், மக்களின் சமூக-பண்பாட்டுச் சூழல்களுக்கு அப்பால் இயங்கிய அந்நிகழ்த்துதல் கலைஞர்களுக்கு அவர்களின் ஆதரவு கிட்டியதே இல்லை. எனவே மன்னரின் உபசரிப்புக் காலம் நீங்கலாக, ஏனைய காலக்கட்டங்களில் பசியோடும் வறுமையோடும் வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது" (ப. 48). சிறிய சமூகங்கள் (small-scale societies), சிக்கலான சமூகங்கள் (complex societies) ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஏற்பவே அச்சமூகங்களில் தோன்றக்கூடிய கலைகளின் வளர்ச்சியும், தன்மையும் அமைந்திருக்கும். இந்தச் சமூகவியல், மானிடவியல் கருத்தாக்கங்களுடன், நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் இடம்பெற்றுள்ள நிகழ்த்துதல் கோட்பாட்டின் பின்புலத்தில் தனஞ்செயன் இம்முடிவினை வருவித்துள்ளார். தற்காலத்தில் நாட்டார் நிகழ்த்துக்கலைகளில் வழிபாட்டுடன் நேரடித் தொடர்புடையன தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருவதையும், வழிபாட்டுடன் நேரடித் தொடர்பில்லாத கலைகள் மாறிவரும் சமூகப் பண்பாட்டு சூழலில் அழிந்துவரும் சூழலைக் கணக்கில் கொண்டு இங்கு பொருத்திக் காண்பதாகத் தோன்றுகிறது.
சடங்கியல் நிகழ்த்துதல்: வெறியாட்டு
'பண்டைத் தமிழரின் சடங்கியல் நிகழ்த்துதல் மரபுகளின் இயல்பும் பரிமாணமும்' என்ற கட்டுரையில் தமிழ்த் தொகை நூல்களில் விவரணை செய்யப்பட்டுள்ள சடங்கியல் நிகழ்த்துதலாகிய 'வெறியாட்டு' குறித்து நிகழ்த்துதல் கோட்பாட்டுப் பின்புலத்தில் விளக்கமளித்துள்ளார். வெறியாட்டு குறித்து வெவ்வேறு சூழல்களில் பாடப்பெற்றுள்ள பாடல்களை நேரடியாக உற்றுநோக்கிய நிகழ்த்துதலாக அன்றி, நிகழ்த்துப் பனுவல் என்று மட்டும் கருதிக்கொண்டு ஆராய்கிறார். ஆனால், இப்பாடல்களில் இடம்பெற்றுள்ள விவரணைகளை நிகழ்த்துதல் சார்ந்த கருத்தாக்கங்களாகிய நிகழ்த்துனர்கள், நிகழ்த்துதலின் வகைமைகள், நிகழிடம் (அகவெளி, புறவெளி), நிகழ்த்துதல் சார்ந்த ஒப்பனைகள், சடங்கியல் நிகழ்த்துதல்கள் மற்றும் ஆவிவயப்படுத்தல் (spirit possession) ஆகியவற்றின் துணைகொண்டு விரிவாக விளக்கும்போது வெறியாட்டு நிகழ்த்துதலின் பல பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அடிப்படையில், இலக்கிய மானிடவியலின் அணுகுமுறை முக்கியத்துவமுடையதாக விளங்குகிறது.
சிலப்பதிகாரத்தில் ஆவியேற்றம்
தற்போதைய தமிழ்ச்சூழலில், நாட்டார் வழிபாட்டு மரபில் சடங்கியல் நிகழ்த்துனர்கள் 'பூசாரி, மாந்திரீகப் பூசாரி, குறிசொல்லி, சாமியாடி, கோமரத்தடி' என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவை, சமயம் குறித்து மானிடவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் கருத்தாக்கங்களாகிய 'ஆவிவயப்படுதல்' (spirit possession), ஆவி ஊடகத்தன்மை (spirit mediumship), மாந்திரீகம் (shamanism) போன்றவைகளுடன் தொடர்புடையவர்கள். இக்கருத்தாக்கங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி, இவை தொல் தமிழ் இலக்கியங்களிலிருந்து சிலப்பதிகாரம் வரையில் எவ்வாறெல்லாம் விவரணை செய்யப்பட்டுள்ளன என்று ஆராய்ந்துள்ளார். பழந்தமிழ் இலக்கியங்களில் 'ஆவிவயப்படுத்தல்', 'மாந்திரீகம்' மற்றும் 'பரவசநிலைச் சமயம்' (ecstatic religion) ஆகியவற்றின் பண்புகள் காணப்படுவதைக் குறிப்பிடுகிறார். அதன் தொடர்ச்சியாக, சிலப்பதிகாரத்தில் 'ஆவிவயப்படுதல்', தெய்வமுற்றோரின் மெய்ப்பாடுகள், தெய்வமுற்று ஆடுதல் போன்றன சாலினி என்ற தேவராட்டி கொற்றவை வேடம் அணிந்து வழிபாடு நடத்துவதில் எவ்வாறு வெளிப்படுகிறது என்று ஆராய்ந்துள்ளார். மொத்தத்தில், பழந்தமிழ் இலக்கியங்கள் தொட்டு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் பனுவல்களில் மட்டுமின்றி, சமகால நாட்டார் வழிபாடுகளில் தெய்வமுறுதல்/ஆவிவயப்படுதல் வழக்கிலுள்ளதன் தொடர்ச்சியை மானிடவியல் கருத்தாக்கங்களின் துணைகொண்டு நிறுவுகிறார்.
பாலின வேறுபாடும் சமூகத் தகுநிலைகளும் (Gender and Social Status)
பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்கள் குறித்த விவரணைகள் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த விவரிப்புகளை மட்டும் மனதில் கொண்டு விளக்கமளிக்கையில், பண்டைய தமிழ்ச் சமூகம் என்பது ஏற்றத்தாழ்வுகளைக் குறைவாகக்கொண்ட ஒன்றாக இருந்துள்ளது என்ற பார்வையே மேலோங்கியுள்ளது. ஆனால், சமூகவியல் ஆய்வுகளில் மேக்ஸ் வெபர் (Max Weber) பயன்படுத்தியுள்ள கருத்தாக்கங்களாகிய சமூக அடுக்கமைவு (social stratification), தகுநிலை: பிறவித் தகுநிலை, எய்தப்பெற்றத் தகுநிலை (status: achieved status, ascribed status), பங்கு (role), அதிகாரம் (power) போன்றனவற்றைப் பயன்படுத்தி ஆராயும்போது அதன் விளக்கங்கள் சற்றுக் கூடுதலான புரிதலை உருவாக்குகிறது. அதாவது, வேந்தன், தந்தை, மனைவி/தாய், கொல்லன், காளை (வீரன்), புதல்வர், ஏவலர், சான்றோர் போன்றோரின் கடமை/பங்கு (role) என்னென்ன என்பது குறித்து விவரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டு பண்டைய தமிழ்ச் சமூகம் என்பது 'ஓர் ஒருமைச் சமூகமாகத் திகழவில்லை'. அத்துடன், அச்சமூகமானது 'பன்முகத்தன்மை உடைய சமூகமாகத் திகழ்ந்தது', பாலின ஏற்றத்தாழ்வும் கொண்டிருந்துள்ளது என்று சமூகவியல் கருத்தாக்கங்களின் உதவியுடன் நிறுவுகிறார்.
நெய்தல் மகளிர்
தொல் தமிழ் இலக்கியங்கள் தமிழின் திணைக் குடிகளுள் ஒன்றான பரதவர்களைக் குறித்து விரிவாகப் பேசுகின்றது. இச்சமூகமானது, எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டதனால் எளிய சமூகம் (simple society) என்று அழைக்கப்பட்டது. இது, மானிடவியலில் 'எழுத்தறிவுக்கு முந்தைய சமூகத்தினர்' (preliterate society), 'சமத்துவச் சமூகத்தினர்' (egalitarian society), 'எளிய தொழில்நுட்பக் குழுவினர்' (technologically simple society) என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சமூகத்தின் அடிப்படைப் பண்பு என்னவெனில், சமூகப் பொருளாதார அமைப்புகளில் ஓரளவு ஏற்றத்தாழ்வின்றி காணப்படக்கூடிய சமூக அமைப்பினைக் கொண்டிருக்கும். மீனவர்களின் எளிய தொழில்நுட்பக் கருவிகளாகிய மரக்கலங்களின் வகைகள், வலைகள், தூண்டில்கள் ஆகியன குறித்தும், மீன் பிடிக்கும் முறை பற்றியும் விவரிக்கக் கூடிய பாடல்கள் கணிசமாகக் காணப்படுகின்றன. இவற்றில், ஆண், பெண் ஆகிய இருபாலரின் வேலைப்பிரிவினைகள் இடம் பெற்றுள்ளன.
பொதுவாக, பரதவர் சமுதாயம் தந்தைவழிச் சமூகமாக இருந்துள்ளது. அந்தக் காரணத்தால் தான், ஆண்கள் தொழிற்கருவிகளையும், அதனைக் கையாளும் திறனையும் கைக்கொண்டுள்ளனர்; பரதவப் பெண்களோ பிடித்த மீன்களைப் பதப்படுத்துவது, சேகரிப்பது, உலர்த்துவது, விற்பனை செய்வது, பண்டமாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சமூகத்தில், பெண்கள் ஆண்களை விடவும் தங்கள் குடும்பப் பொருளியல் தேவைகளுக்காகக் கூடுதல் பங்களிப்பு செய்துள்ளதைப் பாடல்களில் வெளிப்படுத்துகின்றன. தற்கால நடைமுறைகளிலும் கூட, இந்த வகையிலான பங்களிப்பு தொடர்வதைப் பார்க்கலாம்.
இந்தச் செயல்பாட்டினை இரண்டு சமூகவியல் சார்ந்த கருத்தாக்கங்களின் துணைகொண்டு பகுப்பாய்வு செய்கின்றார். ஒன்று, 'வீடு சார்ந்த அகவெளி' (domestic sphere); மற்றொன்று, 'பொது வெளி' (public sphere). மீனவச் சமூகத்தில் மீன்பிடிக் கருவிகள், மீன் பிடித்தல் மற்றும் கலம் செலுத்துதல் போன்ற பணிகளில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். இது பொதுவெளியில் நடைபெறக்கூடிய செயல்களாகும். பரதவப் பெண்களைப் பொருத்தமட்டில், அவர்கள் முன்னர் கூறியது போன்று வீடு சார்ந்த அகவெளி தவிர்த்து பொது வெளிகளில் பொருளாதாரச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனடிப்படையில் காணும்போது, பரதவ மகளிர் பிற திணை மகளிரைக்காட்டிலும் கூடுதல் பண்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்கள்; இவர்கள் இரண்டு வெளிகளிலும் இயங்கக்கூடியவர்களாக உள்ளனர். இதனை அடியொற்றிக் காணுகையில், பரதவ மகளிர் ஆண்களை விடவும் கூடுதலாகப் பொருளீட்டும் செயல்களில் மேற்கூறிய இரண்டு வெளிகளிலும் இயங்குகின்றனர். மொத்தத்தில், பரதவ ஆண், பெண் ஆகிய இருபாலினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வானது பிற சமூகங்களில் காணப்படுவதை விடவும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது என்ற முடிவை மானிடவியல் கருத்தாக்கங்களின் துணையுடன் முன்வைக்கிறார்.
கதையாடல் சார்ந்த இலக்கிய வகைமைகள்
கதையாடல் சார்ந்த இலக்கிய வடிவங்களைக் குறித்து ஆராய்வதே மேற்கத்திய இலக்கிய மானிடவியலின் தனித்துவமாகும் என்று முன்னமே கண்டோம். அதனடிப்படையில், இமையத்தின் 'செடல்', ஜோடி குரூஸின் 'ஆழி சூழ் உலகு' ஆகிய இரண்டு புதினங்களை (novel) எடுத்துக்கொண்டு அவற்றில் வெளிப்படும் சமூக ஆவணங்களைக் குறித்து விவரிக்கின்றார். 'செடல்' நாவலில் நாட்டார் வழிபாட்டுடன் தொடர்புடைய 'பொட்டுக்கட்டுதல்' என்ற சடங்கியல் நிகழ்வு மூலமாக நிலவுடைமைச் சாதியினர் எவ்வாறு ஒடுக்கப்பட்டச் சமூகத்துப் பெண்களை நம்பிக்கைகளின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி பாலியல் ரீதியாகச் சுரண்டுகின்றனர்; ஒடுக்கப்பட்டச் சாதிகளைச் சேர்ந்த நாட்டார் கூத்து மரபைச் சார்ந்த கலைஞர்களை அவர்கள் சாதிகளைச் சார்ந்தவர்களால் இரண்டாம் தாரமானவர்களாகக் கருதுவதும், கிராமங்களில் அக்கலைஞர்களைத் தீண்டாமை உணர்வுடன் எவ்வாறு அணுகுகின்றனர் என்பதைக் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். ஜோடி குரூஸின் 'ஆழி சூழ் உலகு' புதினத்தில் பரதவர்களின் வாழ்வில் கத்தோலிக்கச் சமயம் எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பது குறித்து விரிவாக விவரித்த போதிலும் பூர்வீக சமயம் சார்ந்த சமய மரபுகள், நம்பிக்கைகள், மாந்திரீகச் சடங்குகள் போன்றன எவ்வாறு அவர்களிடம் வெளிப்படுகின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பரதவர்களின் நினைவுகளிலிருந்து எவ்வாறு அவர்களுடைய பழைய மரபுகள் வெளிப்படுகின்றன; அவர்களிடம் காணப்படும் 'கலகக்குரலும் தேவதூஷணமும்' எந்தெந்தச் சமயங்களில் மேலெழுகின்றன என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன.
முடிவுரை
'தமிழில் இலக்கிய மானிடவியல்' என்ற நூலானது இலக்கிய மானிடவியல் என்ற அணுகுமுறையைக் குறித்து விலாவாரியாக அது குறித்த வரையறை, கதையாடல் சார்ந்த இலக்கிய வகைமைகளில் வெளிப்படக்கூடிய இனவரைவியல் தகவல்கள், கலப்புப்புல அணுகுமுறைகளைக் கைக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்று அறிமுகம் செய்கின்றது. இவ்வாறு அறிமுகம் செய்வதுடன் நின்று விடாமல் தமிழ்ச் சூழலில் பழந்தமிழ் இலக்கியங்களைக் குறித்து கலப்புப்புலக் கருத்தாக்கங்களின் உதவியுடன் ஆராய்ந்துள்ள முன்னோடிகளையும், அவர்களின் பங்களிப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பங்களிப்புகளானது, இலக்கியப் பனுவலாக மட்டுமே அணுகியதிலிருந்து மாறுபட்ட, துல்லியமான புரிதலை வழங்கியுள்ளது. தனஞ்செயன் பழந்தமிழ்ப் பாடல்களை பிற கல்விப்புலக் கருத்தாக்கங்களின் உதவியுடன் நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார். மேற்கத்திய இலக்கிய மானிடவியல் பரிந்துரைக்கக்கூடிய கதையாடல் சார்ந்த இரண்டு புதினங்களை எடுத்துக்கொண்டு அதில் வெளிப்படக்கூடிய சமூக ஆவண விவரங்களைக் குறித்து ஆராய்கின்றது. மொத்தத்தில், தனஞ்செயனின் நூலானது மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் புலன்களில் எல்லைகளைக் கலைத்து ஆய்வுகள் விரிவடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில் காணும்பொழுது, தமிழியல் ஆய்வுகளை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான தேவையை வலியுறுத்தும் நூலாக விளங்குகிறது.
தமிழில் இலக்கிய மானிடவியல்
ஆ. தனஞ்செயன் | விலை: ₹60
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- மு. அறிவழகன், உதவிப்பேராசிரியர், நாட்டார் வழக்காற்றியல் துறை, தூய. சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை.
[1] M. S. S. Pandian. “Writing Ordinary Lives.” Economic and Political Weekly, vol. 43, no. 38, 2008, pp. 34–40.