கவிஞர்கள் காலந்தோறும் தம் கவிதைகளில் காதல், அன்பு, இயற்கை, சமூகம், அரசியல், குடும்பம், வறுமை, மக்கள் ஒற்றுமை குறித்து எழுதியுள்ளார்கள். அதேபோல் அன்றாடம் நடக்கும் நாட்டு நடப்புகள் குறித்து தங்களது கருத்துகளை கவிஞர்கள் பதிவு செய்துள்ளார்கள். குறிப்பாக சாதி மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்கி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதும் சமூக ஒற்றுமைக்கு இடையூறாகவும், மக்கள் வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கிறது. இந்நிலைகள் குறித்து தங்களது கோபத்தை தங்களது கவிதைகளில் கவிஞர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்றைய சூழலில் சாதியம் பல்வேறு வடிவங்களில் மக்களைப் பிளவுபடுத்தி வருகிறது. இக்கொடுமைகளை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தனது கவிதை நூல்களில் சாதியம் குறித்து கோபமாகவும், கேளிக்கையாவும், மிகுந்த வேதனையோடும் பதிவு செய்துள்ளார். கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளில் உள்ள சாதிய சிக்கல்கள் குறித்து இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் தங்கம் மூர்த்தியின் காதல் கவிதைகள் இருவேறு பிரிவின் உள்ளங்களின் எண்ணங்களை எடுத்துக்காட்டும் எண்ணப் பேழைகளாய் மணம் வீசி படிப்போரின் மனதில் இலக்கிய இன்பமாய் மனங்களின் பரிமாணங்களை நமக்கு விளக்குகின்றன. இதனை,

“காதல்

இல்லையேல்

சாதல்.

காதல்

இருந்தாலும்

சாதல்.” (தே.தே.ப.60)

என்னும் கவிதை புலப்படுத்தும்.

காதல் வாழ்வியல் இலக்கியங்களில் களவு, கற்பு என இரு நிலைகளைக் கொண்டுள்ளது. காதல் மலர்ந்து தலைவனும் தலைவியும் சாதியால் படுகின்ற வேதனைகளை எடுத்துரைத்துள்ளார்.

சாதிய அடக்குமுறைகள் காலங்காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனைக் கண்ட கவிஞர் தங்கம்மூர்த்தி சாதி குறித்துப் பின் வருமாறு கவிதை வடிக்கிறார்.

காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே கம்பும் தடியுமாய் மிரட்டி ஒடுக்கும் சமூகம் இன்னும் மாறவே இல்லை. அதனால், காதல் ஒன்றும் தன் சக்தியை இழந்து அழிந்து விடவுமில்லை. காதலர்கள் தோற்கலாம். ஆனால், காதல் என்றும் தோற்பதே இல்லை. அது அவரவர் மனங்களில் மணம் வீசிக் கொண்டுதான் இருக்கும். சாதி, மத பேதம் காட்டி மனித குலம் காதலின் உண்மைத்தன்மையை உணராமல் நசுக்கிப் போடும் நிலையைக் கவிஞர்,

“காதலின் தலையில்

அட்சதை தூவும்

கரங்கள் இன்னும்

தோன்ற வேண்டும்.

சாதிப் பேயை

சாம்பலாய் போடும்

தீயில் நெய்யை

ஊற்ற வேண்டும்” (த.மூ.க.ப.54)

என்று எடுத்துரைக்கிறார்.

மேலும், சமூகத்தின் படிநிலைகளில் தோன்றிய வேறுபாடுகளை, முரண்களை, சமூக அவலங்களை அவரது கவிதைகள் எடுத்துரைக்கின்றன. ஒவ்வோர் ஊர்களிலும் தேநீர்க் கடைகள்தோறும் இரட்டைக் குவளை முறை இருப்பதனைப் பின்வரும் கவிதை மூலம் சாடுகிறார்.

“தேசம்

ஒரு கவலை

இல்லாமல்

இருக்க வேண்டுமெனில்

இருகுவளை

இல்லாமல்

இருக்க வேண்டும்.” (பொ.பெ.ம.ப.24)

என்ற கவிதை அமைந்துள்ளது. மற்றொரு கவிதையில்,

“பகை கொள்வதில்லை

பழக்கடை ஈக்களும்

சாக்கடை ஈக்களும்” (பொ.பெ.ம.ப.31)

என்று மனிதப் பிறவிகளுக்கு எடுத்துரைக்கிறார்.

மத ஒற்றுமை

மதம் மனிதனிடம் உள்ள மனித நேயத்தை வெளிக்கொணர்கிறது. சமூகத்தில் வாழும் சக மனிதர்களுடன் இணக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உதவுகிறது. இது தனிமனிதனுக்கும் தெய்வீகத்திற்கும் இடையிலான பிணைப்பையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் இது காட்டுகிறது. அன்பு, தியாகம், சேவை மற்றும் நேர்மை ஆகியவை மதத்தின் முக்கிய அங்கங்கள் என்னும் மத ஒற்றுமையின் அவசியத்தை கவிதைகளின் வழி விளக்குகிறார் கவிஞர்.

“தேவாலயத்துக்

கற்கண்டோ

பள்ளிவாசல்

சர்க்கரையோ

பெருமாள் கோவில்

பொங்கலோ

எதுவென்றாலும்

இனிப்பாய் இருக்கிறது.

அதில்

அன்பைக் கலந்தால்

அமுதமாகிறது.

மதத்தைக் கலந்தால்

விஷமாகிறது” (எ.ப.நா.ப.88)

என்று மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறார்.

மேலும்,

“வறுமைத் தீ

வன்முறைத் தீ

இனத்தீ

மதத்தீ என

தேசம் எப்போதும்

வெளிச்சத்தில்

இருட்டில் மனிதர்கள்” ( த.மூ.க.ப.115 )

என்றுரைக்கிறார். மேலும், சாதிச் சண்டைகளால் நகரெங்கும் பல்வேறு வகுப்பினரின் இரத்தம் ஓடுவதைத் தடுக்கத் தாமிரபரணி,

“சாதி ரத்தம் மிதப்பதை நிறுத்துவோம்”

(க.ந.கா.ப.124)

என்று தென்மாவட்டக் கலவரங்கள் குறித்த நிகழ்வைப் பதிவு செய்கிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி.

சாதி மத வேற்றுமை:

மனித வாழ்வில் சக மனிதனை மதித்து, அன்பு செலுத்தி வாழ்ந்த வரை சமூகம் அமைதியுடனும் முன்னேற்றப் பாதையில் எவ்விதத் தடையுமின்றி வளர்ந்தும் வந்தது. எப்போது சாதி, மத, இன வேற்றுமைகள் உள்ளே நுழைந்ததோ அந்த நாள் முதல் மனிதகுல மாண்புகள் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதுமட்டுமன்றி இவ்வேறுபாடுகளால் அழிவுதான் மிச்சம் என்பதை,

“குடிசைகளின் மீது

சாதி நடந்தது

சாம்பல் கிடந்தது

மதம் நடந்தது

ரதம் நடந்தது

அங்கங்கே ரணம் கிடந்தது” (த.மூ.க.ப.117-118)

எனக் கூறி வருந்துகிறார்.

“கலவரத்தில்

வீடுகள் எரிந்தன

பீனிக்சாய் சாதிகள்” ( த.மூ.க.ப.72 )

எனக் கலவரங்களால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கிறார்.

காதலும் திருமணமும்

காதல் என்ற உணர்வு நிலையானதில்லை. காலத்திற்கு காலம் மாறக்கூடியது. பொருளாதாரச் சுதந்திரம், பிள்ளைப்பேறு இவையே திருமணத்தின் நோக்கங்கள். காதல் மணங்கள் இந்நோக்கங்களை நிறைவேற்றுவதில் உண்டாக்கலாம். எனவே, ‘கல்வி, தொழில், பொருளாதார நிலை ஆகியவை குறித்த ஒரு தெளிவுடன் மனமொப்பி ஆண், பெண் இருவரும் ஒன்றாக ஒப்பந்தம் செய்தால் அதுவே காதல் மணத்தைவிடச் சிறப்பாக இருக்கும்”11 என்பார் திரு.வி.க.

உலகில் காதல்தான் சமதர்மத்தை உருவாக்குகிறது என்பதை அறிந்து கொள்ள இயலுகிறது.

கவிஞர் தங்கம் மூர்த்தி தம் கவிதையில் காதல் குறித்த புதிய பரிமாணத்தை எடுத்துரைக்கக் காணலாம்.

கொஞ்சம்

காதலைக் கொண்டுவந்து

கொட்டுங்கள்

மண்ணுக்குள்ளிருந்து

புதிய ஊற்று ஒன்று

புறப்பட்டுவரும்

பாவநதிகளையும்

புனிதப் படுத்தும்

ஜீவநதிதான்

காதல். (க.ந.கா.பக்.14-17)

என்னும் கவிதையில் எடுத்துரைப்பார்.      

கவிஞர் தங்கம் மூர்த்தி தம்முடைய கவிதை நூல்களில் சமூகத்தில் கேடு உருவாக்கும் சாதியக் கொடுமைகளை வெறுக்கிறார். சாதிய அமைப்பில் கீழ், மேல் என்னும் பாகுபாடு உயிர்களை வதைக்கிறது. காதலை எதிர்க்கிறது. வன்மத்தைச் சாதியப் பிரிவு கொண்டாடுவதால் சமத்துவமின்றிச் சமூகம் மிகுந்த சீர்கேட்டிற்கு ஆட்படுகிறது. சமூகப் பன்மைக்குக் காதலே சிறந்த வழி என்பதைக் கவிஞர் தங்கம் மூர்த்தி கவிதைகள் எடுத்துரைக்கக் காணலாம்.

கல்வி நிலையங்களில் சாதி

சாதி பொதுச் சமூகத்தில் புரையோடிப்போயிருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். மதிப்பெண் அதிகமாக எடுத்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவரை ஆதிக்க சாதியென்று சொல்லப்படும் மாணவர்கள் தாக்குதல் நடத்துவதும், கல்வி நிலையங்களுக்குள் வளரும் இளம் தலைமுறையான மாணவர்கள் தங்களுக்கிடையே சாதியால் பிரிந்து கிடப்பதும் குறித்து கவிஞர் தங்கம் மூர்த்தி மிகுந்த வேதனையடைகிறார். வரும் காலத் தலைமுறையை மனித நேயமிக்க மனிதனாக உருவாக்க வேண்டிய கல்வி வெறும் மதிப்பெண் மட்டுமே எடுக்கும் எந்திரமாக உருவாகி வருவதை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்,

மாணவனாகும் பயிற்சியில்

வென்றுவிடுகிறார்கள்

மனிதனாகும் முயற்சியில்

தோற்றுவிடுகிறார்கள்.

மதிப்பெண்களைத் துரத்துகிறது

கல்வி.

(பக் 55 - பொய்யெனப் பெய்யும் மழை)

மேலும்

மாணவர்களும் ஆசிரியர்களும்

வேறு வேறு இனங்கள்

வகுப்புக் கலவரங்கள்.

( பக் 76 - முதலில் பூத்த ரோஜா )

என்ற கவிதை மூலம் வகுப்பறையில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களிடமும் சாதியப்பார்வை இருப்பதையும், சாதியின் பெயரில் மாணவர்களை அணுகும் பார்வை குறித்தும் மிக ஆழமாகப் பதிவு செய்கிறார். ஆசிரியர்களும் மாணவர்களும் வேறு வேறு திசையில் பயணிப்பதை 'வகுப்புக் கலவரங்கள்' என்று சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் சாதியை உருவாக்கியது யார்? அறிவியல் வளர்ச்சியில் நாம் ஏன் இன்னும் சாதியத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்? சமூகத்தில் சாதிக்க வேண்டிய மக்கள் சாதியால் பிளவுண்டு கிடப்பது நியாயமா..... சாதியை ஒழிக்க வேண்டிய தலைவர்கள் சாதிக்கு ஒரு தலைவராக இருக்கிறார் என்ற கருத்தை மிக நுட்பமாக தனது கீழ்க்கண்ட கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

ஆதிக்கரு

உருவானது

ஆதாமிடம் எனில்

சாதிக்கரு

உருவானது

சாத்தானிடம்

என்ற தொடர்ச்சியாக

சாதிக்கும் தலைவர்கள்

இல்லாத தேசத்தில்

சாதிக்குத் தலைவர்கள்

ஏராளம்.

(பக் 22 - பொய்யெனப் பெய்யும் மழை)

என்று தங்கம் மூர்த்தி கவிதை வரிகள் வாயிலாக சாடுகிறார்.

தொகுப்புரை :

இந்த உலகத்தில் முதலில் மதிக்கப்பட்ட மனித சமூகம் உயர்வு தாழ்வின்றி அனைவரும் சரிநிகர் சமானமாக ஆன பின்னரும் அவர்களுக்கான வாழ்வில் சாதியச் சிக்கல்கள் காலந்தோறும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சமூக உணர்வுகளைக் கொண்ட காதல், சமூகம் ஆகியன மதிக்கப்பட வேண்டும். மனிதனாக இருந்தாலும் மற்ற உயிர்களாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சமத்துவம் இருக்க வேண்டும். ஆகவே, அத்தகைய சமய ஒருமையைப் பெருமைப்படுத்தி சமத்துவத்துடன் வாழ வகை செய்ய வேண்டும். அதுவே வளர்ச்சியடைந்த நாகரிகம் பெற்ற சமூகம் என்பதைப் பறைசாற்றும்.

துணைநூற்பட்டியல்

திரு.வி .க., பெண்ணின் பெருமை , பூம்புகார் பதிப்பகம், சென்னை -16. 16 ஆம் பதிப்பு ஆகஸ்ட் 1998.

கவிஞர் தங்கம் மூர்த்தி,தேவதைகளால் தேடப்படுபவன் - டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை

கவிஞர் தங்கம் மூர்த்தி கவிதைகள், வள்ளல் அழகப்பர் பதிப்பகம்

கவிஞர் தங்கம் மூர்த்தி - பொய்யெனப் பெய்யும் மழை - வள்ளல் அழகப்பர் பதிப்பகம்.

கவிஞர் தங்கம் மூர்த்தி கவிதைகள் - வள்ளல் அழகப்பர் பதிப்பகம்.

கவிஞர் தங்கம்மூர்த்தி - அகரம் பதிப்பகம், காரைக்குடி

கட்டுரையாளர்கள்:

க.உஷாநந்தினி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி ), பூண்டி-613503, தஞ்சாவூர்.

ஆய்வு நெறியாளர்: முனைவர் ப.பாலமுருகன், ஆய்வு நெறியாளர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி), பூண்டி-613503, தஞ்சாவூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.