சங்க இலக்கியங்களிலிருந்து சித்தர் இலக்கியம் வரை பெண்களின் நோய்களைப்பற்றியும், கரு உருவாவது முதல் பிரசவம் வரையிலும், அத்துடன் அதில் நேரும் பல இடையூறுகளைக் குறித்தும் பிறவிக் குறைபாடுகள் பற்றியும் இன்றைய அறிவியலில் கூறப்படும் உடலியக்கத்திற்கு ஒப்பக் கூறப்பட்டுள்ளன.
காமத்தூண்டுதல்:
சங்க நூல்களில் தொய்யில் எழுதும் முறை மகளிரிடையே பரவலாகக் காணப்பட்டது. திண்ணிய வயிரத்தையுடையதை அரிய சந்தனத்தை மருதப் பூவுடன் கலந்து இளமுலை மீது தடவி அதன் ஈரம் புலருமுன்னே வேங்கை மலரின் நுண்ணிய தாதை அப்பி, மேலே விளவின் சிறிய தளிரைக்கிள்ளி முலையின் மீது தடவுவர். இவ்வாறு செய்வதால் அழகை மிகுவித்து, காமம் தூண்டப்படும் என்று கருதுவர். இதனைத் தற்பொழுது ‘Vegetable Bath’ என்று இன்றைய பாலியலாளர் குறிப்பர். (திருமுருகு: ப. 30).
கருவுறுதலும் உடல் இயக்கமும்:
மேற்கூறப்பட்ட செய்திகளிலிருந்து கருவுறுதல் என்பது, “சூல்”, என்று குறிக்கப்படுவதும், ஒரு பெண் முதன் முதலில் கருவுறுதல் தலைச் சூல் அல்லது கடுஞ்சூல் (ஐங்குறுநூறு: 271-309) எனவும்; குறைப்பிரசவம் இயல்பு மீறிய செயலாகவும் கருதப்பட்டது. முழுகாலக் கர்ப்பம் நிறைசூல் எனவும் அழைக்கப்பட்டது. இது போல குறுகிய காலக் கருச்சிதைவு உறுப்பில் (உறுப்பு + இல்) பிண்டம் என்றழைக்கப்படுவதை,
“சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்” (புறம்: 28-1)
என்று புறத்தில் குறிப்பிடப்படுகிறது.
பூப்பு எய்திய மூன்று நாட்களும். தலைவி, தலைவனைப் பிரிந்து உறைவாள். மகப்பேறு நிகழும் இல்லத்தினை ஈனில் (குறுந்தொகை - 85) என்று குறித்தனர். இலங்கையில் இச்சொல் இன்றும் வழக்கிலுள்ளது. மகப்பேறு அடைந்தவுடன் சின்னாளளவு சிற்சில மகளிர்க்கு அல்கும் பக்க மெங்கும், வரி, வரியாகத் தோல் விரிவடையும். இதனை வரித்திவலை “அல்குல்” என்று குறித்தனர் (நற். 370). சூல் முதிர்ந்து அசையும் இயல்புடைய நிறைசூல் மகளிர் மார்பகம் பருத்துப் பால் கட்டி யிருக்கும். மகவு ஈன்றபின் வெண்கடுகை அரைத்து நெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொள்வர். (நற். : 370).
கரு உற்பத்தி:
திருமந்திரம் இரண்டாம் தந்திரத்திலுள்ள 14-ஆவது அதிகாரம் கரு உற்பத்தியைக் குறிக்கின்றது. இதிலுள்ள 39 பாடல்களும் தாய், தந்தையின் ஜீவ அணுக்கள் எவ்வாறு கலந்து குழந்தை உண்டாகிறது என்பதை விரிவாகக் காட்டுவதை
“ஆதினம் ஆருயிர் கரு உருவாகும்
விதங்கள் ஆக்குகின்றான்
கர்ப்பக் கோளனாக உள்ளிருந்து.” (436)
“பூவும் மொட்டும் பொருந்த, அலர்ந்த பின்
காவுடைத் தீபம் (கரு) கலந்து பிறந்திடும்.” (464)
“விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும்.” (440)
“புருடன் உடலில் பொருந்து மற்று, ஓரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்தது
உருவம் இரண்டாக ஓடி விழுந்தது.” (439)
என்ற பாடல் வரிகள் சுட்டியுள்ளது.
பூவும் மொட்டுமாக, பெண்ணும், ஆணும் கலந்து போது, பெண்ணின் கருக்குழியைத் தேடிப்புகுந்து, ஆண் ஜீவ அணுக்கள் உருவம் இரண்டாக ஓடி விழுந்தது என்னும் திருமூலரின் கருத்தை இன்றைய அறிவியலும் ஒப்புகிறது.
பெண்ணின் கருவணுவிலும், ஆணின் விந்தணு விலும் 46 இனக்கீற்றுகள் உள்ளன. அவை இரண்டாக இணைந்து 23 ஜோடி இனக்கீற்றுகளாக உள்ளன. இதுவே பண்பினக் கீற்றுகள் எனவும், ஆண், பெண் பாலின வேறுபாட்டை உணர்த்தும் ஒரு ஜோடி இனக்கீற்றுகளைப் பாலினக் கீற்றுகள் எனவும் அழைப்பர். ஆண், பெண் ஆகிய பாலினக் கீற்றுகளின் வேறுபாட்டை ஆணின் விந்தணுவில் காண இயலும். பெண்ணின் கருவணுவில் உள்ள இரண்டு பாலினக் கீற்றுகளும் அமைப்பில் ஒரே சீராக இருந்து XX என்று அழைக்கப்படுகின்றன. ஆணின் விந்தணுவில் உள்ள இரு பாலினக் கீற்றுகளும் அமைப்பில் ஒரே சீராக இராது. ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறிய தாகவும் உள்ளன. பெரிய பாலினக் கீற்று 44 X ஆகும். சிறிய பாலினக்கீற்று சீ என்றழைக்கப்படும். எனவே பெண்ணின் கருவணுவில் 44 பண்பினக்கீற்றுகளும் 44 + XX ஆகும். ஆணின் விந்தணுவில் உள்ள 44 பண்பினக்கீற்றுகளும் 44 + XY ஆகும்.
பெண்ணின் கருக்குழியில், ஆணின் ஜீவ அணுக்கள் ஓடிவிழுந்து இரண்டாகும் என்பது இன்றைய அறிவியலோடு ஒத்து நிற்கிறது.
ஆண், பெண் உறவு கலந்து கரு உருவாகும் நிலையைப் பற்றிக் கூறும் போது;
“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல்
சுக்கிரம் எட்டும் சாணது ஆமே.”
(திருமந்திரம் பா. எண். 464)
என்ற பாடலில் ஆணின் வெண்ணிற உயிரணுவும், பெண்ணின் செந்நிற உயிரணுவும் எட்டு விரற் கடையளவு தத்தம் இடத்தினின்று வெளிப்பட்டு, பெண்ணின் உயிரணுவுடன் சேர்ந்து, நான்கு விரற் கடையளவு உள்ளே சென்று எண் சாண் உடம்புக்கு வழி வகுக்கும் என்றும் “மோகத்தில் ஆங்கொரு முட்டை செய்தானே” (திருமந்திரம்: 465) எனத் தொடங்கும் பாடல் வரிகளில் இருவரது மயக்க நிலையிலும் ஒரே ஒரு கரு முட்டையே வெல்லும் தன்மை கொண்டது என்னும் மருத்துவ அறிவியல் உண்மையையும் புலப்படுத்துகிறது.
கருவமையும், தாயின் உடற்கூறு:
ஆணா! பெண்ணா! என்று பால் வேறுபாடு அறிய புணர்ச்சியின் போது பிராணவாயு வலது நாசியில் இயங்கினால், பிறப்பது ஆணாகும். இடது நாசியில் இயங்கினால் பெண்ணாகும். அப்படி இன்றி அந்நிலையில் பிராண வாயுவை அபான வாயு எதிர்த்தவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும். பிராண வாயு இரு மூக்கிலும் இயங்கினால் பிறப்பது அலியாகும்.
(திருமந்திரம்: 482)
கருவமையும் போதும், கரு வளரும் போதும் தாயின் வயிறு மலம், சிறுநீர் மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை ஊமை, குருடு, செவிடாக இல்லாமல் அறிவுடன் விளங்கும்.
(திருமந்திரம்: 1941)
கருவும், கரு வளர்ச்சியும்:
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்ததும்”
கருவில் வளர் நிலைகளை மாணிக்கவாசகர் தம் போற்றித் திரு அகவல் பகுதியில் மிக நுட்பமுடன் விளக்குகிறார்.
உயிரானது வினைக்கேற்பப் பல பிறவிகளை அடைகின்றது. மானிட யோனிவழி மனிதப் பிறவியை எய்துகிறது. கருப்பையில் இருக்கும் போது ஒன்றையன்று ஒத்துள்ள உயிர் தத்துவங் களுக்கிடையில் போராட்டம் ஏற்பட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்று மேம்பாட்டுடன் வளர்கிறது. தான்றிக்காய் அளவு இருக்கும் கருவானது இரு மாதத்தில் வலுவடைந்தும், மூன்றாம் மாதத்தில் தாயின் கருப்பையில் இருக்கும் சுரோணித நீரில் புதையுண்டு போகாமலும், நான்காம் மாதத்தில் இருளிலிருந்து உயிர் பிழைத்தும், ஐந்தாம் மாதத்தில் கருக்கலையாமலும், ஆறாவது மாதத்தில் அவயங்கள் முறையாக அமைந்து உயிர் வாழ்ந்தும், ஏழு, எட்டு, ஒன்பது மாதங்களில் பல்வேறு துன்பங்களிலிருந்து நீங்கியும், பத்தாவது மாதத்தில் தக்க நேரம் வரும்போது பிழைத்தும், இப்பிறப்பு எய்தலாயிற்று என்னும் கருத்தினை மாணிக்கவாசகர் 10 மாதம் கருப்பையில் நிகழும் பல்வேறு நிலைகளைக் குறிப்பிடுவது வியப்பிற்குரியது.
கரு முதலில் குழம்பாக இருந்து பின்னர்க் கட்டியாகி மூளை, நரம்பு, எலும்பு, தோல் முதலியன உண்டாகப்பெற்று உருவாகும். இந்த உண்மையை ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சுட்டியுள்ளார். (தாயின் மணி வயிற்றில்: அ.மு.பரமசிவானந்தம்: பக். 58-60)
மேலும் உயிர் கருவினுள் அருவுடம்போடு இருக்கும் நிலையினைப் புலம்பு நிலை என்று குறிப்பிடுவர் என்றும், கரு தாயின் வயிற்றில் முந்நூறு நாட்கள் தங்கும் என்றும், திருமந்திரம் (பா. 437, 440) விளக்குகிறது.
இதுபோலவே; (பட்டினத்தார் உடற்கூற்று வண்ணம்):
“ஒருமட மாதும் ஒருவனுமாகி
இன்ப சுகம்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து
பனியில் ஓர் பாதி சிறு துளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமடமி தென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று
உருவமும் ஆகி.
உயர வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
ஓரறிவு ஈரறிவாகி வளர்ந்து.”
என்று பட்டினத்தார் குறிப்பிடுவது மகப்பேறு மருத்துவ வேரைத் தொடுகின்றது.
தேவாரம் பாடிய மூவர்க்குப் பிற்பட்ட காலத்தவரான கல்லாடர் எனும் புலவர் எழுதிய கல்லாடம் கருவமையும் காட்சியையும் கருவுற்ற தாயின் உடல் நிலையையும்
“புல்நுனி பனியென மதல்”
என்று குறிக்கிறது.
உயிர்கள் கருவாகும் காலம் புல்நுனி மேல் வீழ்ந்த பனித்துளி அளவிற்றாக இருக்கும் என்பதை
“அறுகுநுனி பனியணைய சிறிய துளி
பெரியதொரு ஆகமாகி”
என்பது அருணகிரியார் திருப்புகழ் கூறுகிறது.
வயா நோய்:
இவ்வாறு கருவுற்ற பின் தாயின் உடலில் ஏற்படும் மாற்றம் வயா நோய் காரணமாக அவள் உடம்பில் தோன்றும் மாற்றங்களை
“பீர்க்கம் பூவின் சிறம் போலப் பசலை
பூத்தது புளிச்சுவையை விரும்பினாள்
இல்லத்தின் கண் உண்டான புகை படிந்த
கரிய மண்ணை வாயிட்டுச் சுவைத்தாள்.”
என்ற பாடல் வரிகள் விளக்குகிறது.
முலைக்கண் கருத்தன, கண்களில் குழி விழுந்தது என்ற அறிகுறிகள் தற்கால மகப்பேறு நூல்களில் குறிக்கப்பெறும் அறிகுறிகளைப் பெரிதும் ஒத்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருவுற்ற பெண்களுக்கு முதல் மூன்று மாதங் களில் மசக்கை மிகுதியாக உண்டாகும். இக்காலக் கட்டத்தில் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டுத் துன்புறுவர். இதுவே சங்க காலத்தில், “வயா நோய்,” வெட்கை நோய் எனக் குறிப்பிடப் பட்டது.
“வயா வென் கிளவி வேட்கைப் பெருக்கம்”
என்பதில் வயா ஒருவிதமான நிலை மாற்றம் எனப் படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு உணவு, மணம் அல்லது சுவையினாலோ ஏற்படும். இதை ஆங்கிலத்தில் ‘Picca’ என்பர்.
இந்நோய் உள்ள மகளிர் புளிப்புச் சுவையைப் பெரிதும் நாடுவர். புளியங்காய் (கலித். : 28), மண் (புறம் : 20), போன்றவற்றை உண்டு, இந்நோயின் துன்பத்திலிருந்து விடுபடுவர்.
“பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர்”
என்று (குறுந்தொகை - 287 : 4-5) குறிப்பிடுகிறது.
இதுபோல மற்றவர் அறியாது மண் உண்ணுவதை;
“வயவுறு மகளிர் வேட்டு ணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே”
(புறம்: 20: 14-15)
என்று புறமும் குறிப்பிடுகிறது.
பிள்ளைப் பேற்றின் பின் ‘நெய்யணி முயக்கம்’ என்று குறிப்பிடக் கூடிய எண்ணெய் நீராடும் செயலைப் பெண்கள் மேற்கொண்டனர் என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. (தொல். பொருள், பேரா. நூற். 46).
இது போலவே பிரசவித்த பெண்ணை நெய்யில் குளிப்பாட்டும் வழக்கு சங்க காலத்தில் இருந்து வந்துள்ளதை நற்றிணை,
“பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர்கெழு மடந்தை ஈர்க்கை பொருந்த,”
(நற்றிணை: 405-10)
என்று குறிப்பிடுகிறது.
இதில் பிரசவித்த தாய்க்கு அசதி, வலியைப் போக்க வெண்கடுகு, உடல் வெப்பத்தைத் தணிக்க பசுநெய் ஆகியவைகள் பயன்பட்டிருப்பது அறிய வருகிறது.
இத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்டி வளர்த்ததையும், (நற்றிணை - 355: 1-2). தாய்ப்பால் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பின் அவர்களைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி யதும் (பத்துப்பாட்டு- 6: 601-602) அறியப்படுகிறது.
கருப்பை அறுவை முறை (Caesarean):
காந்தபுரத்தை ஆண்டவேந்தன் மகள் பிரசவ வேதனையால் துடிப்பதைப் பார்த்த நறையூர் மருத்துவச்சி வயிற்றைக் கிழித்து, குழந்தையை எடுத்தாள். அவள்தன் மருத்துவத் திறமையால் குணப்படுத்தினாள் என்று கொங்குமண்டலச் சதகம் (92) கூறுகிறது.
“குறைவறு தெண்ணீர் நதியணை காந்தபுரத் தொரு நல்
லிறை மகளார் மக வீனப் பொறாதுட லேங்க வகிர்
துறை வழி பேற்று மகிழ்வூட்டு மங்கல தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர்நாடு சூழ் கொங்கு மண்டலமே”
என்ற பாடல் வழி இந்நிகழ்ச்சியினை எடுத்துரைக்கிறது.
கருச்சிதைவு:
சங்க காலத்தில் கருச்சிதைவு ஒரு பாவச் செயலாகவும், அதற்குப் புறம்பான ஒரு செய லாகவும், நீதி முறைக்கும் ஒழுக்கம் பண்பிற்கு மாறு பட்டதாகவும் சித்திரிக்கப்படுகிறது. மருத்துவர் களோ அல்லது மற்றவர்களோ கருச்சிதைவுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டது. மீறினால் அறமே அவர்களைத் தண்டித்துவிடும் என்று நம்பப்பட்டது. இதனை;
“மாணிழை மகளிர் கருச் சிதைத் தோர்க்கும்
உய்தி இல்லென அறம் பாடிற்றே” (புறம்: 34)
என்று புறநானூறு விளக்குகின்றது.
பிறவிக் குறைபாடு:
(மக்கள்) பிறக்கும்போது குழந்தை பல மாறுபாட்டுடன் பிறப்பது உண்டு. அதில் ஒருவகை கவைமகன் எனும் வியப்பான பிறவி. தாயின் கருவில் இரு பகுதிகளாகப் பிரிந்து உருவும், அதன் நிழலும் போல ஒன்றுபட்டு உருவாகிப் பிறக்கும் ஒட்டிய இரட்டைப் பிள்ளையைத்தான் கவைமகன் (சாயாமிய இரட்டையர் - Siamese Twins) என குறுந்தொகை கூறுகிறது.
“கவை மக நஞ்சு உண்டா அங்கு
அஞ் சுவல் பெரும
என் நெஞ்சத்தானே” (குறுந்தொகை: 324)
இது 10 லட்சத்தில் ஒருவர் இவ்வித மாறுபட்ட பிறவியாகப் பிறப்பர் என்ற உண்மையை ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. பிறவிக் குறைபாடு கூட குறுந் தொகையில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது அறிய வருகிறது. இந்தப் பாடலைப் பாடிய புலவரும் கலைமகனார் என அழைக்கப் பெறுகிறார்.
இவை மட்டுமின்றி அறிவு மங்கிக் குழந்தை பிறக்கும் தன்மையும், தசைத்திரளாகக் குழந்தை பிறப்பதும், விலங்கு வடிவுடன் பிறப்பதுமாகிய நிலைகளும் புறத்தில் (பா. 28) சுட்டப்படுகின்றன.
ஆண் குழந்தை பெற்றெடுப்பது என்பது தொன்று தொட்டுப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்க, வாரிசுகளைப் பெற்றுக் குடும்பத்திற்குப் புகழ் வாங்கிக் கொடுத்தது என்பதைக் குறித்த கருத்தை;
“கடும்பு உடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி
நெய்யடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்றென.” (நற்றிணை - 370:2-5)
கருவியல் (Embryology):
“மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே,” என்ற சூத்திரத்தில் உயிர்மெய் எழுத்துக்களில் மெய் முன்னரும், உயிர் அதன் பின்னரும் ஒலிக்கும் என்பதை, இலக்கணம் கூறும் வகையில் ஓர் உண்மை புலப்படுத்தப்படுகிறது. உடல் வழியாகத்தான் உயிர் தோன்றும் என்ற கருத்தைத் தொல்காப்பியர் மறை முகமாக உணர்த்தியுள்ளார். இதற்கு விளக்கம் கூறிய உரை ஆசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் “உயிர் காட்சிப் பொருள் அல்லவேனும் அவ்வுயிர் எடுத்த உடம்பின் வாயிலாக அவ்வுயிர் உண்மை தெரிய வரும்” என்கிறார். (தொல் எழுத்து நூன்மரபு: 18 கு. சுந்தரமூர்த்தி) மெய்ப்பொருள் கூறும் வகையில் இருப்பதாக இருந்தாலும் கருவியல்படி (Embryology) கருப்பையில் விந்தும், அண்ட அணுவும் சேர்ந்து கரு உண்டாகிப் படிப்படியாக வளர்ந்து, இரண்டாவது வாரத்தில் இருந்து எட்டாவது வாரம் வரையில் கரு வளரும் நிலையாகின்றது (Embryonic Stage). இந்த நிலையை அடுத்த உடலின் பாகங்கள் படிப்படியாகத் தோன்றி உருவம் அடையும் நிலை பிண்ட நிலை யாகும். இந்நிலை ஒன்பது வாரங்களில் இருந்து நாற்பது வாரம் வரையாகும். இந்த நிலையில்தான் பிண்டம் வளர்ச்சியடைந்து, அதன் இயக்கம் உண்டாகும். இந்த இயக்கம் முதல் பதினான்கு முதல் இருபது வாரம் உள்ளாக, இவ்வியக்கத்தைத் தாயால் நன்கு அறிய முடியும் (Essential of HumanEmbryology 1982, P.. 110-104). இயக்கம் இல்லாத பிண்ட நிலையை ஆங்கிலத்தில் Product of Conception என்றே கூறுவர். குழந்தை என்று சொல் வதில்லை. இவ்வியக்கத்தினால் உடல் வழியாக உயிர் தோன்றும், கருவியல் உண்மையைத் தொல் காப்பியர் காலத்தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிய வருகிறது.
ஆண், பெண் தோற்றம்:
பெண்ணின் கருவணுவிலுள்ள 44 பண்பினக் கீற்றுகளும், பாலினக்கீற்றும், ஆணின் 44 பண்பினக் கீற்றும், + XX பாலினக்கீற்றும் சேரும் போது, பிறக்கும் குழந்தை தந்தையின் கீற்றும் சேர்ந்து (44 + XY) ஆணாகவும், தாயின் பாலினக்கீற்றும் சேர்ந்து (44 + XX) பெண்ணாகவும், இதில் பாலினக்கீற்று தவறுகளால் அலியாகவும் தோன்றும் என்பதை இன்றைய அறிவியல் கூறுகிறது. இதே கருத்தைத் தான் திருமூலர்;
“பூண்டது மாதா பிதா வழிபோலவே
ஆம்பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே.”
(திருமந்திரம்: 461)
“ஆண்மிகில் ஆணாகவும், பெண்மிகில் பெண்ணாகவும்,
பூண் இரண்டும் ஒத்துப் பொருந்தில் அலியாகும்.”
(திருமந்திரம்: 462)
என்று கூறுவது வியப்பதைத் தருகிறது.
மகப்பேற்றுக்குப் பிறகு தனிமைப்படுத்துதல்:
மகப்பேற்றுக்குப் பிறகு மகளிர் சில நாட் களுக்குத் தனிமைப் படுத்தப்படுவர். மகளிருக்கு ஏற்படும் உடல்நலக்குறைவே தனிமைப்படுத்தப் படுவதற்குக் காரணமாகும். இதை “புனிறு தீர் பொழுது” (Postnatal Period) என்பர். இப்பழக்கம் தமிழர்கள் மிகப்பழங்காலத்திலிருந்தே கடைப் பிடித்த பழக்கமாகும். இதைத் தொல்காப்பியர் “புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே” (தொல். சொல் உரியியல் - 375) என்றும் “புதல்வர்ப் பயந்த புனிறு தீர் பொழுதின்” (தொல். பொருள், கற்பியல் - 144) என்றும் கூறுவர்.
மருத்துவச்சிக் கூலி:
இடைக்காலத்தில் மகப்பேறு மருத்துவம் பார்ப்பவர் மருத்துவச்சி என அழைக்கப்பட்டனர். இம்மருத்துவம் நாவிதப் பெண்களால் நடத்தப் பட்டது. அவர்கட்கு அதற்குரிய ஊதியமும் வழங்கப் பட்டது. இதுபோலவே தீவிர நோய்களைப் போக்கிய மருத்துவர்களுக்கும் தக்க ஊதியம் வழங்கவேண்டும் என்பது உலக நீதி என்று பின்வருமாறு குறிக்கின்றது.
“வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன் தன் கூலி.”
இவ்வாறாக தமிழ் இலக்கியங்களில் காணப் படும் மகளிர் மருத்துவம் குறித்த கருத்துகளை அறியமுடிகிறது.