copu vadakuகோப்பெருஞ்சோழன் என்னும் இம்மன்னன் இன்றைய திருச்சி -  உறையூரைத் தலைநராகக் கொண்டு சோழப் பேரரசை ஆட்சி செய்த தலைசிறந்த மன்னன் என்பதையும், தன் மக்களான 'நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி' ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பால் வடங்கிருந்து உயிர் துறந்தார் என்பதை நாம் அறிவோம்.

இவர் போன்றோரைத்தான் "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என உலகம் அடையாளப்படுத்துகிறது. 

பேராசிரியர் க. நெடுஞ்செழியனார் "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்" என்ற நூலில், இரண்டாம் பதிப்பில், பக்கம் 395இல், கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்தது, தற்போது 'திருவரங்கம் கோவில்' அமைந்துள்ள இடத்தில்தான் எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், இவர் ஆசீவக நெறியைப் பின்பற்றியவர் எனக்கூறி, அதற்குச் சான்றாக அம்மன்னனின் 

"செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி" 

எனத் தொடங்கும் புறப்பாடல் ஒன்றையும் மேற்கோள் காட்டுகிறார். 

இஃது இம்மன்னன் பாடிய புறநானூற்றுப் பாடலாகும். 

இது ஆசீவகத்தின் தற்செயல் கோட்பாட்டை வினை மறுப்பை செம்போக்கு-மண்டல நெறிகளை விளக்கும் ஆவணமாகும் எனவும் குறிப்பிடுகிறார். 

கோப்பெருஞ்சோழன் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர், க.நெடுஞ்செழியனார், அதன் தொடர்ச்சியாக இவன் வாழ்வின் துன்ப இன்பங்களில் இரணடறக் கலந்த பெரும்புலவர் 'பிசிராந்தையார்', கோப்பெருஞ்சோழன் உயிர் துறக்க வடக்கிருந்ததை கேள்வியுற்று, பின்னர் அவரும் அவ்விடத்திற்கு வருகை தந்து, அவனுடன் இணைந்து இருவரும் வடக்கிருந்த உயிர் துறந்த தற்போது 'திருவரங்கம் கோவில்' அமைந்துள்ள அதே இடத்தில் 'நடுகல்' எடுக்கப்பட்டிருந்ததும் அங்கேயே 'பொத்தியார்' உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்ததும் வரலாற்று நிகழ்வுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய இடத்தில் அவர்களுக்கு எடுக்கப்பட்ட 'நினைவுச் சின்னம்', பின்னர் கோவில் போன்று வழிபாட்டிற்குரிய இடமாக மாறி இருக்கலாம்.

பிற்காலச் சோழ மன்னர்கள் எடுத்த 'பள்ளிப்படைகள்' இவ்வாறு இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட கோவில்களே என்பதையும் ஒப்பிட்டால் 'திருவரங்கம் கோவிலின்' தொடக்கத்தை உய்த்து உணர முடியும் என பேராசிரியர். க.நெடுஞ்செழியனார் எடுத்துரைகிறார். 

ஆகையால், கோவில்களை எடுத்து ஆய்வதன் மூலமே, தமிழன் தன் பெருமையை நிலைநிறுத்த முடியும். 

இல்லையெனில் நாம் இனியும் ஏமாறத்தான் செய்வோம்.

- ப.தியாகராசன்

Pin It