erode kathirபுத்தகத்தின் பெயர் : கிளையிலிருந்து வேர் வரை

      ஆசிரியர்      : ஈரோடு கதிர்

      பக்கங்கள்     : 192

      விலை       : ரூ.170/-

      பதிப்பகம்      : டிஸ்கவரி புக் பேலஸ்

      கிட்டத்தட்ட 45 கட்டுரைகள்(!) ஒருசேர தொகுக்கப்பட்டு, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டில் வந்திருக்கும் ”கிளையிலிருந்து வேர் வரை” என்ற இந்நூல் ஈரோடு கதிரின் எழுத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். இந்நூலுக்கு பெருமாள் முருகன், தமிழ் நதி, ஷா நவாஸ், பழமை பேசி, வா.மணிகண்டன், யெஸ்.பாலபாரதி, ராமலஷ்மி, ஷான், தமிழ் அரசி, கோபால் கண்ணன், சக்தி ஜோதி போன்றோர் நறுக்குத் தெறித்தார் போல் சுருக்கமாயும், சற்றே அழுத்தமாயும் அணிந்துரை வழங்கி அலங்கரித்திருக்கிறார்கள்.

      அழகியல் தன்மையோடு வடிவமைக்கப்பட்ட அட்டைப் படமும் சரி, கட்டுரையை நகர்த்திச் செல்ல கையாண்டிருக்கும் அழகிய சொல்லாடலும் சரி, யாரையும் எளிதில் சட்டென திரும்பிப் பார்க்க வைத்து விடுகிறது. இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் ஈரோடு கதிர் அவர்களின் வலைப்பக்கத்தில் ஏற்கெனவே வலம் வந்து ஏராளமான ’லைக்ஸ்’களையும், எக்கச்சக்க ஒற்றைவரி ’கமெண்ட்ஸ்’களையும் பெற்றிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தனக்கென ஒரு தனித்துவத்தையும், எளிமையான எழுத்து நடையையும் உள்ளடக்கியிருக்கும் இந்நூலைக் ’கட்டுரைத் தொகுப்பு’ என்று கூறுவதைவிட ‘நினைவுக் குறிப்புகள்’ என்றோ ‘நாட்குறிப்புப் பதிவுகள்’ என்றோ எடுத்தவுடனே சொல்லி விடலாம். ஏனென்றால் இதில் இடம் பெற்றிருக்கும் அத்தனை நிகழ்வுகளும் இந்நூல் ஆசிரியரின் அனுபவமாயும், எண்ண ஓட்டமாயும், ஒரு சிலவற்றைத் தவிற மற்றவை ரத்த உறவுகள் சார்ந்தவர்கள் உடனான நினைவுகளை மீள் ஆய்வு செய்வதுமாய் நகர்கிறது.

நிதானித்து வாசிக்கும்போது நூல் ஆசிரியரின் சுய அனுபவங்களின் தழும்பல் போல் தெரிந்தாலும், கூடவே, வாசிப்பாளர்கள் அன்றாட வாழ்வில் சிலவற்றைக் கவனித்தும் சிலவற்றைக் கவனிக்க நேரமில்லாமலும் கடந்து வந்ததை நினைவு கூர்வதாய் அமைந்திருக்கிறது. இது போதாதென்று, கவித்துவமான வார்த்தைகளும், தத்துவார்த்த வரிகளும் வழி நெடுகிலும் வரிசைகட்டி நின்று வலம் சேர்க்கிறது.

ஒருவேளை, வரிகளை வளைத்து நெளித்து, வார்த்தைகளை வரிசையாய் அடுக்கி, வகைப்படுத்தியிருந்தால் இப்புத்தகம் கவிதைத் தொகுப்பாய்க்கூட மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வரியும் கவிதை நயம்.

தலைப்பிற்கேற்ற கட்டுரையும், கட்டுரைக்கேற்ற தலைப்பும் பொருந்திப்போக இந்நூலாசிரியர் ஈரோடு கதிர் நெடுநேரம் மெனக்கெட்டு மல்லுக்கட்டியிருப்பது தெளிவாய்த் தெரிகிறது. பேச்சாற்றல் கொண்டவர் என்பதால் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வாசகருக்கு சலிப்பேற்படாமல் இருக்க, தமிழ் மொழியை சிறுக சிறுக செதுக்கி இருக்கிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

பயணங்களில் பெற்ற அனுபவங்கள் ஒரு புறம் என்றால், குடும்ப உறவுகளுக்குள் நிகழ்ந்த சுக துக்கங்களை எதார்த்தமாய்ப் பகிர்ந்து கொள்கிறார். தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கு வியாக்யானம் சொல்லும் அதே வேளையில் இன்றைய இளம் தலைமுறையினர் இப்போது பெற்றுக்கொண்டிருப்பதையும் இழந்து கொண்டிருப்பதையும் கவலை தோய்ந்த குரலில் காட்சிப்படுத்துகிறார்.

அப்படியே போகிற போக்கில், விடுமுறை நாட்களில் இன்றைய விடலைகளின் விவேகமற்ற வேகத்தை வியப்புடன் விவரிக்கிறார். அதை பெருமை என்று அங்கீகரிக்கும் பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மைக்குச் செல்லமாய் சூடு வைக்கிறார். 

’எது எப்படிப் போனால் என்ன’ என்று வெறுமெனே இல்லாமல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு அதிகாரியின் இறுதி நாளை உணர்வுப் பூர்வமாய் பதிவிட்டு உதிர்ந்து போகும் அதிகார இறகுகளை சேகரித்து எது சரி எது தவறு என்பதை விமர்சிக்கிறார்.

பொருந்தா உறவுகளில் சிக்குண்டு கிடக்கும் தாம்பத்திய உறவுகளுக்கு ”ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு முயற்சி, ஒரு காட்சி, ஒரு நிகழ்வு, ஒரு திரைப்படக் காட்சி போதுமாய் இருக்கிறது புரட்டிப்போட” என்பதைச் சுட்டிக்காட்ட ‘பிரணயம்’ என்ற மலையாளப் படத்தின் மையக்கருவை சாறு பிழிந்து பருகத் தருகிறார். முடிவை வழக்கம் போல் நம்மிடமே விட்டுவிடுகிறார்.

வழக்கொழிந்து கொண்டிருக்கும் ஊர் (தேர்) திருவிழாக்களின் உன்னதத்தை ஏக்கத்துடன் விவரிக்கிறார். அதன் நினைவுகளிலிருந்து மீள்வதற்குள் பள்ளிப் படிப்பிற்குள் பிடித்துத் தள்ளப்படும் பால் மணம் மாறா பாலகனின் பரிதாபத்தையும் சேட்டையையும் இயல்பாய் கடக்கச் செய்கிறார்.

செல் போனில் எளிதாய் வலம் வரும் அபத்தமான ஆபாச சுயபடங்களுக்கு ‘உச்’ கொட்ட வைக்கிறார். அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில், தொடர் வண்டியில், ஏதோ ஒரு சூழ்நிலையால் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கும் மனிதத் தலைகளையும், அவர்கள் தேடும் மனிதங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறார்.

அடைமழையின் அழகை எப்படி ரசித்தாலும் தகும் என்பதை அழகியல் தன்மையுடன் வர்ணிக்கும் நூல் ஆசிரியர், பின் வரும் கட்டுரையில் தன் ஆயா (பாட்டி) வுடனான நினைவுகளில் மூச்சு முட்டி மேலெழுந்து வரும் வரை மூழ்கிக் கிடக்கிறார்.

தன் சிங்கப்பூர் பயணத்தில் கண்டு பிரமித்த கூறுகளையும் கட்டுக்கோப்பையும் அழுத்தமாய் பதிவுசெய்கிறார். இது போன்ற கட்டுரைகளை மட்டும் தொகுத்து ’பயணக்கட்டுரை’ என்று தனிப் புத்தகம் வெளியிட முயற்சிக்கலாம். ஏனென்றால் தற்போது தமிழில் பயணக்கட்டுரை எழுதுபவர்களின் இடம் காலியாய் இருக்கிறது.

அவ்வப்போது பள்ளி செல்லும் குழந்தைகளின் உளவியல் சிக்கலுக்குத் தீர்வு தேட முயற்சிக்கிறார். ’தங்கத்தில் செய்தாலும் கூண்டு என்பது சிறைதானே’ என்ற பழைய சொல்லாடலுக்கு புது விளக்கம் தர முயற்சிக்கிறார்.

தான் ஒரு விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவன் என்பதை வரிந்துகட்டிச் சொல்ல ஒற்றைக் கட்டுரை போதுமானதாய் இருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்பையே புத்தகத்தின் தலைப்பாகவும் தேர்ந்தெடுத்து பெருமை சேர்த்திருக்கிறார். இன்றைய பரபரப்பான நகரத்தின் நடுவில் வயல் வெளியையோ அதன் வாழ்வியல் சுகத்தையோ கண்டிராத இளம் தலைமுறையினருக்கு, கடைகளில் காசு கொடுத்தால் கிடைக்கும் அரிசி, தான் உண்ணும் உணவுத் தட்டுக்கு வருவதற்குள் எத்தனை பேரின் வியர்வைத் துளிகளை சுமந்து வருகிறது என்பதை விலாவாரியாக விவரிக்கிறார்.

நெல் நடவு செய்ய நிலத்தை பாந்தமாய் தயார் செய்வதில் தொடங்கி, ஈரத்தில் உறங்கும் நெல், சூரியனின் ஒளியால் பிறப்பெடுப்பதை விளக்கி, எலிகளை விரட்டி, சேற்று வயலாடி, வரப்புகளைச் செதுக்கிச் சேறு பூசி, நாற்றங்காலில் வேர் அறுபடாமல் பிடுங்கப்பட்ட நாற்றுகளை, சமன் செய்யப்பட்ட சேற்று வயலில் நடவு செய்து, சீரான இடைவெளியில் நீர் பாய்ச்சி, உரம் போட்டு, களை பிடுங்கி, முதலில் கதிர் விடும் நெல்லுக்குள் இருக்கும் பால் அரிசியைக் கண்டு பரவசம் கொண்டு, பச்சை நிற நெல், தங்க நிறமாக மாறும் வரை காத்திருந்து, அறுவடை செய்து, பின், களத்தில் நெல்லையும், வைக்கோலையும் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடித்து என்று சிறுக சிறுக சேகரிக்கப்பட்ட நெல் வீடு வந்து சேரும்வரை நிகழ்த்தப்படும் பொறுமையையும், அதன் பெருமையையும், அழகாகவும் அதன் சாராம்சத்தை ஆழமாயும் பதிவிட்டு இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தின் கூறுகளை பறைசாற்றுகிறார்.

தொடர்ந்து வரும் கட்டுரைகளில் உரையாடலின் மகத்துவத்தையும், நலம் விசாரித்தல் எந்த வகையைச் சாரும் என்பதையும் உற்று நோக்க வைக்கிறார். நுங்கு வண்டி ஓட்டி விளையாடிய பால்ய வயதை நினைவுகூர்கிறார். இருளுக்குள் ஒளிந்து கிடக்கும் அமைதியையும், அதன் ரூபத்தையும் ‘இருட்டு’ என்னும் கவிதையில் ரசிக்கிறார்.

குப்பை பொறுக்கும் பெண்மணி, ஐந்தறிவு ஜீவன் மேல் கொள்ளும் இளகிய மனதை இயல்பாய் சொல்லி வாசிப்பாளர் மனதிற்குள் ஊடுருவி ஈரம் சுரக்க வைக்கிறார்.

இப்படி எராளமாய், நினைவுகளையும், நிஜங்களையும், புனைவுகள் இல்லாமல் எட்ட நின்று, சாட்சி சொல்வது போல் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், உபயோகித்தெறியும் ‘யூஸ் அன் த்ரோ’ பொருட்களின் எச்சத்தை என்ன செய்வதெனக் கேட்டும், மரணத்தின் வலியை உரக்க உணர்த்தியும், அழுகையின் சுகத்தை உலகத்தரத்தோடு ஒப்பிட்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் வேறு வேறு உலகத்திற்குள் மாறி மாறி உலவ வைக்கிறார்.

போகிற போக்கில், எந்தக் கட்டுரை எதை வலியுறுத்துகிறது என்று நிமிர்ந்து நிதானிப்பதற்குள், விழுமியமில்லாமல் வாழும் வாழ்க்கையையும், சமூகத்தின் ஊடே நம் பங்கு என்ன என்பதை வலியுறுத்தியும், வேரிலிருந்து கிளம்பி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி வளர்ந்து நிற்கும் மரத்தின் கிளைகளைப்போல், ஒவ்வொரு கட்டுரையும், வேறு வேறு நிகழ்வுகளையும், சமகால மனிதர்கள் சந்திக்கும் விதவிதமான வன்மத்தையும் தொகுத்து வெளிவந்திருக்கிறது.

சில இடங்களில் மிகப் பரிட்சையமாய் தெரியும் ஈரோடு கதிரின் எழுத்துக்கள், வார்த்தைகளிலிருந்து வரிகளாய் வழுக்கிச் செல்லும்போது வறண்ட மனங்களை ஈரப்படுத்தியும், காலி நினைவுகளை நிதர்சனத்தால் நிரப்பியும், ஆங்காங்கே படபடப்பை திணித்தும், ஏக்கங்களை எரியவிட்டும், எக்கச்சக்க உணர்வுக் கலவையை உருண்டையாக்கி உருளவைத்தும், பன்முகத் தன்மையின் படிமங்களைக் காட்டியும் செல்கிறது.

ஒருமுறைக்கு இருமுறை வாசித்தும், ‘எப்படி இருக்கிறது இந்நூல்? என்று யாரேனும் கேட்டால் ‘ம்….பரவாயில்லை’ என்றோ ‘ம்….சூப்பராய் இருக்கு’ என்றோ ‘ப்ச்…ஒண்ணும் பெரிசா இல்லப்பா….’ என்றோ ஒற்றைவரியில் சொல்ல முடியவில்லை. ’இந்தாங்க இதை ஒரு முறை வாசித்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள் என்று தப்பித்துக் கொள்ளவே என்னை இப்புத்தகம் செய்ய வைத்திருக்கிறது.

சற்றேரக்குறைய, இப்புத்தகத்திற்கு (இந்தக் கட்டுரைத் தொகுப்பிற்கு) என் பார்வையிலிருந்து விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும் என்ற பிடிவாத எண்ணத்தில் உதித்து உயிர் பெற்றதுதான் இந்த விமர்சனக் கட்டுரை. அன்பர்களே, ‘கிளையிலிருந்து வேர் வரை’ புத்தகத்தை ஏற்கெனவே வாசித்தவர்கள், முடிந்தால் மேலும் ஒரு விரிவான விமர்சனத்தை முன் வைக்கவும். அது என்னைப் போன்ற ஆர்வலர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல ஏதுவாய் இருக்கும்.

- வே.சங்கர்

Pin It