கிறித்துவ இலக்கியங்கள் பல இருப்பினும் அவற்றுள் விவிலியக் கருத்துக்களை மிகுதியாக கையாண்டுள்ள இரட்சணிய சரிதத்தில் அன்பு, தாழ்மை, பணிவு, சமாதானம், பொறுமை போன்ற நற்குணங்களைப் பற்றிய பல சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு காலக் கட்டங்களில் பல சமயங்கள் தோன்றின. அச்சமயக் கருத்துக்களை அறிஞர்கள் நூல்கள் வாயிலாகவும், இலக்கியங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் பக்தி இயக்கம் தனி இயக்கமாக வளர்ந்து வந்தது. அறிஞர்கள் புற சமயக் கருத்துக்களின் ஈர்ப்பால் சைவம், வைணவம் சமயம் தவிர்த்து புற சமயங்களில் ஈடுபாடு கொண்டனர். அவ்வகையில் கிருஷ்ணப்பிள்ளை வைணவத்திலிருந்து கிறித்தவத்திற்கு மாறினார்.

christ with crossவிவிலியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எ.ஆ.கிருஷ்ணப்பிள்ளை விவிலியக் கருத்துக்களை மற்ற மதத்தினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இரட்சணிய சரிதத்தை உருவாக்கினார். தன்னைப் போல் பிறரும் இயேசு பெருமானின் திவ்ய செயல்களை உணர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தியதை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

கிறித்துவ மதம் போதிக்கும் கருத்துக்கள்

கிறித்துவ மதக்கருத்துக்கள் மக்களின் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகவும் சமுதாயத்திற்கு ஏற்ற நல் கருவியாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு மதமும் ஒரே செய்தியை தெரிவிக்கின்றன. அது மக்களின் வாழ்வை செம்மைப்படுத்தும் வழியாகவே அமைகின்றன.

எந்த ஒரு நிலமும் பண்படுத்தப்படாவிடில் நல்ல விளைச்சளை நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதே போல் ஒரு மனிதனை பண்படையச் செய்து, அவன் சமுதாயத்தில் சிறந்த சமூக அமைப்பை உருவாக்கவும் நற்சிந்தனை, நல்ல எண்ணங்கள், நோக்கம் போன்றவற்றைறக் கொண்டிருக்க வேண்டும்.

மதத்தின் பெயரால் மனிதன் சாயலையும், மனிதத்துவத்தையும் இழந்துவிடக் கூடாது. அனைத்து மதமும் பல நல்ல அறிய கருத்து, உண்மை, சிந்தனைகளை கூறுகிறது. அனைத்து மதத்திலும் முதன்மையான, உண்மையாக கருத்தான 'அன்பு' என்னும் நற்பண்பை பற்றி கூறுகின்றன. அன்பு என்னும் ஒரு பானைக்குள் பரிவு, பாசம், இரக்கம், பணிவு போன்ற பல நல்லுணர்வு அமைந்துள்ளது.

அவற்றின் அடிப்படையில் கிறித்துவ மதம் மக்களுக்காவும் அவர்களின் வாழ்க்கைக்காகவும் பல அறிய கருத்துக்கள், சிந்தனைகள், வழிக்காட்டுதல்களை கூறியுள்ளன. விவிலியத்தில் பல நற்சிந்தனை, போதிக்கப்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது. அவற்றின் சில.

அன்பு, கருணை, இரக்கம், விசுவாசம், நம்பிக்கை, சமாதானம், ஒற்றுமை, நல்லொழுக்கம், நன்னடத்தை, தியாகம், சகோரத்துவம், சகிப்புத் தன்மை, மன்னிப்பு, கடவுள் பக்தி, மக்களின் கடமைகள், நேர்மை, உண்மை, பரிவு, பணிவு, கீழ்ப்படிதல், பொறுமை, பகைவரை மன்னித்தல், தீமை செய்தோருக்கு நன்மை செய்தல், வரியோருக்கு உதவுதல், பெரியோரை மதித்தல், பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல், பாவம் செய்யாதிருத்தல், நீதி, பிறருக்குத் தீர்ப்பிடாமை, பிறருக்கு உதவுதல், பொய் சாட்சி சொல்லாமை.

இவை மட்டுமல்லாது பத்து கட்டளை செய்திகளும் சேர்த்து மக்களுக்காக தரப்பட்ட வேதக் கருத்துக்களாகும்.

பத்துக் கட்டளை

கடவுள் மோயிசன் வழியாக மக்களுக்கு கொடுத்த பத்து கட்டளைகளும் இவற்றின் கீழ் அடங்கும்.

1. கொலை செய்யாதிருப்பாயாக, 2. களவு செய்யாதிருப்பாயாக, 3. விபச்சாரம் செய்யாதே, 4. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே 5. பிறர் வீட்டை கவர்ந்திட விரும்பாதே, 6. பிறர் மனைவி, மாடு, கழுதை போன்ற பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே, 7. தாய் தகப்பனை மதித்து நடப்பாயாக, 8. வேற்று தெய்வங்களை, வழிப்படாதீர்கள், 9. கடவுளின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே, 10. ஆண்டவனின் நாளைத் தூயதாக கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.

என்று பத்துக் கட்டளைகளிலிருந்து ஏழு கட்டளைக் கருத்துக்கள் மற்றும் செய்திகள் இரட்சணிய சரித நூலில் இடம் பெற்றுள்ளது. அவற்றிற்கான ஆதாரங்கள் விவிலிய நூலிலிருந்து எடுத்து காண்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டளைகள் ஒரு மனிதன் செய்யக் கூடாததையும் வலியுறுத்துகிறது.

கிறித்தவ சமய கருத்துக்கள் மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது என்றும், வாழ்க்கைக்கான நல்வழி, சிந்தனை கருத்துக்களை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.

எ.ஆ.கிருஷ்ணப்பிள்ளையின் மதக்கருத்துக்கள்

கிருஷ்ணபிள்ளை இரட்சணிய சரிதம் மற்றும் பிற கிறித்தவ நூல்கள் படைப்பதற்கு முக்கிய காரணம் கிறித்தவ மதக் கொள்கையும் நல்ல கருத்துக்களுயும், சிந்தனைகளுமே ஆகும்.

விவிலிய கருத்தால் ஈர்க்கப்பட்டு அவர் இந்நூலைப் படைத்துள்ளார். அவர் படைத்த பல நூல்களிலும் இக்கருத்துக்கள் அமையப் பெறுவதை காணமுடிகிறது. கிருஷ்ணபிள்ளை விவிலிய கருத்துக்களாலும், சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டு அவற்றிற்கு செய்யுள் வடிவம் கொடுத்து வர்ணனை என்றும் அழகுபடுத்தி உருவாக்கியுள்ளவைதான் இரட்சணிய சரிதம் படைப்பாகும்.

தனது படைப்பாகிய இரட்சணிய சரிதத்தை ஆசிரியர் பல விவிலிய நற்சிந்தனைகளின் அடிப்படைகளை ஆதாரமாக வைத்தே உருவாக்கியுள்ளார்.

இரட்சணிய சரிதத்தில் விவிலியக் கருத்துக்கள்

விவிலிய நூல் பல அறிய நற்கருத்துக்களை கொண்டுள்ள போதும் ஆசிரிய மனதில் ஆளப்பதிந்த சில கருத்துக்களை எடுத்து அவற்றை இப்படைப்பில் கையாண்டுள்ளார். அவை யாவன, அன்பு, கருணை, இரக்கம், தியாகம், மன்னிப்பு, நேர்மை, உண்மை, பணிவு, கீழ்ப்படிதல், பொறுமை, பகைவரை மன்னிக்கும் தன்மை ஆகும்.

'அன்பு' விளக்கம்

ஒவ்வொரு உயிரிகளிடமும் காணப்படும் பண்பு, அன்பு, அன்பில்லா மனிதன் மரத்திற்கு ஒப்பானவன். அன்பு' - எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்காக வாழ்வது.

சிறந்த அன்பு

சிறந்த அன்பு என்பது சுயநலம் இன்றி பொதுநலத்துடன், பிறர் நலத்துக்காக தன் உயிரையே கொடுப்பது உண்மையான சிறந்த அன்பு ஆகும்.

விவிலியம் கூறும் கடவுளின் அன்பு

உண்மையான அன்பு என்பது நல்லோர், தீயோர் மீது காட்டும் அன்பு - மத்தேயு 5:45

நீதியுள்ளோர் மீதும், நீதியற்றோர் மேலும் காட்டும் அன்பு - மத்தேயு 5:45

பகைவரையும் அன்பு செய்யும் அன்பு - மத்தேயு 5:44

சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கும் அன்பு - லூக்கா 23:34

மனிதனுடைய பாவ நிலைக்கு தாழ்ந்து வந்து அவனை மீட்கும் அன்பு - பிலிப்பு 23:6-8

மனிதனை மீட்கும் பொருட்டு அவன் மீது விழவேண்டிய தண்டனைகளை தன் மீது ஏற்றுக்கொண்ட அன்பு - ஏசாயா 53:5

அன்பு பற்றி யோவான் 4 : 16-21 வரை வசனங்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம். அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். அன்பில் அச்சத்திற்கு இடமில்லை. மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில் அச்சத்திலே தண்டனை உணர்வு அடங்கியுள்ளது. அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழுநிறைவு அடையாது. அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம். கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செய்யாதோர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது. கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தனது சகோதர சகோதரிகளிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரிடமிருந்து நாம் பெற்ற கட்டளை (யோவான் 4: 16-21).

திருக்குறளில் ‘அன்புடைமை' என்னும் அதிகாரம் 71 முதல் 80 வரையிலான குறள் அன்பு பற்றிக் கூறுகிறது. அதிகாரம் 8 அன்புடைமையில்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பை) பலரும் அறிய வெளிப்படுத்தும் என்று மு. வரதராசனார் விளக்கம் தருகிறார்.

அன்பிற்கு பின்வருமாறு விளக்கம் தருகிறார் மணக்குடவர்

அன்பினையடைக்கம் தாழுமுளதோ?

அன்புடையார் மாட்டு உளதாகிப் புல்லிய

கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும் - உரை

கிரேக்க பதம் - agyann (Agape) அகாப்பே அன்பு எனும் சொல்லுக்கு குறிப்பிட்டளவு பொருத்தமாகவுள்ளது. கடவுளுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான அன்பை ஒத்தது எனவும் கருதப்படுகின்றது.

இரட்சணிய சரிதத்தில் அன்பு

திருவிருந்துப் படலத்தில் தனது உடலையும், இரத்தத்தையும் உங்களுக்காகவும், எல்லோருக்காகவும் தருகிறேன் எனக் கூறிய அன்பு.

கெத்செமெனெ படலத்தில் தான் படப்போகும் பாடுகளை உணர்ந்தவர் தன் தந்தை கடவுளிடம் கொண்ட அன்பால் அவர் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு தன் உயிரைத் தரத் துணிந்த அன்பு.

தீர்ப்புப் படலம் மற்றும் மரணப் படலத்தில் "தாங்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்" என்று தனக்கு தண்டனை கொடுக்கும் யூதர்களுக்காக தன் தந்தையிடம் வேண்டும் அன்பு.

இறுதியாக தன் மக்களுக்காக தனது உயிரையே கொடுத்து அவர்கள் பாவங்களைப் போக்கிய அன்பு.

தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு வேறெதுவுமில்லை என பல்வேறு இடங்களில் 'அன்பு' என்னும் நற்குணம் வெளிப்படக் காணலாம். அதிலும் மரணப்படலத்தில் செய்யுள் 439 அன்பிற்கு ஓர் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

'இயேசு உயிர் விடுத்தது யாருக்காக? என்ற கேள்வி தம் மனதில் எழும். கடவுள் கொடுத்த கட்டளைகளை மீறிச் சாத்தானுக்கு பாதக பணிவிடை செய்து வருகின்ற பொல்லாத மக்களுக்காகவே உயிர் விடுத்ததை எண்ணி மனிதனுக்காக மனித உரு எடுத்து உயிர்விடுத்த விந்தையைப் போல் வேறு விந்தையுண்டோ? என்று தனக்குள்ளே பல கேள்விக் கணைகளை கேட்டுக் கொண்டவராய் கீழ்க்காணும் செய்யுளை படைத்துள்ளார்.

சந்ததம் கற்பனை மீறிச் சண்டாள ராகி நின்றிதனை எண்ணாமல்

...................................................(இ.ச. செய்யுள் 439)

'பொல்லாருக்காய் மனுவாகி உயிர் விடுத்த விந்தை,

பொல்லாதவர்களுக்காக, அவர் பொருட்டு, மனிதனாகி உயிர்விடுத்த விந்தை என ஆசிரியர் விளித்துக் கூறியுள்ளார்.

நல்லவன் ஒருவனுக்காக யாராவது தன் உயிரைத் தர முன்வரக்கூடும். ஆனால் நாம் பாவிகளாய் இருந்த போதே கிறித்து நமக்காகத் தம் உயிரை நல்கினார். கடவுள் நம்மிடம் அன்பு கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இரக்கம்

"இரக்கம் என்ற வார்த்தையின் பொருள் 'நமக்கு வரவேண்டிய தண்டனையை தவிப்பதற்காக தேவன் நம்மீது காட்டும் பிரிவு' ஆகும்". பிறரின் நிலை கண்டு தானும் வருந்துதல், துன்பப்படுதல் என்றும் பொருள்படும். (இ.ச) நூலில் செய்யுள் 445 இரக்கம் பற்றி கூறியுள்ளது.

விவிலியம் புதிய ஏற்பாடு திருப்பாடலில் 145:8-9 கூறியுள்ளதாவது

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர், எளிதில் சினம் கொள்ளாதவர், பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார், தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுவர்

என்று கூறியுள்ளது.

"இயேசு தொழுநோயாளர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டார்" - மாற்கு 1:41

"ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர் அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே" - திருப்பாடல் - 145:17

"இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்'' - மத்தேயு 5:7

குறள் காட்டும் இரக்கம்

குறள் 571 முதல் 580 வரையிலான குறள் இரக்கம் பற்றிக் கூறுகிறது.

கண்ணோட்டம் என்னும் கழிபெருங்க காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு                               - (குறள் 571)

இரக்கம் என்று சொல்லப்படும் மிகப் பெரிய அழகு அரசனிடம் இருப்பதனால் தான், இந்த உலகம் அழியாமல் நிலைத்திருக்கிறது.

இரட்சணிய சரிதம் காட்டும் இரக்கம்

கண்ணியமான அன்பினால் கட்டப்பட்டு ஓங்கிய கருணைக் கடலில் மூழ்கித் தாழ்வுற்று, உள்ளத்தில் நிகழும் பொறுமை காரணமாக மூச்சொடுங்கிய இயேசுவை நினைத்தவராய்,

கண்ணிய அன்பினாற் கட்டுண்டோங்கிய

.................................... (இ.ச.) - (ச.ப.) - 445

என்ற செய்யுள் இரக்கத்தை விளக்குகிறது.

மன்னிப்பு

"மன்னிக்கும் குணம் மனிதர்களுக்கு மட்டும் உரியது. மன்னிப்பு பற்றிய பல கருத்துக்கள் இருப்பினும் ஒருசில இங்குச் சுட்டிக் காண்ப்பிக்கப்பட்டுள்ளன.''

"பலவீனமாக உள்ளவர்கள், பிறரை மன்னிக்க மாட்டார்கள் : மன்னிப்பது என்பது மனவலிமை உடையோரின் குணம்" - மகாத்மா காந்தி

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் - குறள் 314

"உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்'' - மத்தேயு 6:44, 45

மன்னிப்பு கிறித்தவ வாழ்வின் அடிப்படை மதிப்பீடுகளுள் ஒன்று. மன்னிப்பின் அருமையை, அவசியத்தைப் புதிய ஏற்பாடு பலவழிகளில் எடுத்துரைக்கிறது.

1. மன்னிப்பு ஒரு நிபந்தனை, இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கான நிபந்தனையாக நாம் பிறரை மன்னிக்க வேண்டும் - மத் 6:14-15

2. மன்னிப்பு ஓர் இறைச்செயல் - கொலோ 3:13

3. மன்னித்தல் ஓர் அழைப்பு - லூக் 6:37

4. மன்னித்தல் ஓர் அன்புச் செயல் - லூக் 17:3

5. மன்னிப்பு செப்பத்தை எளிதாக்குகிறது- மாற் 11:25

6. மன்னிப்பு ஒரு பழக்கம் - மத் 18:22

"மனிதருடைய தவறுகளை நீங்கள் மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களையும் மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் பரமபிதா உங்களையும் மன்னிக்க மாட்டார்.''                         - மத்தேயு 6:14-15

இரட்சணிய சரிதத்தில் மன்னிப்பு பற்றி கூறியுள்ளதாவது, எட்டுத்திக்குகளிலும் படுபாவி என்று இகழப்பட்ட கள்ளன் (தீயோன்) தன்னுயிர் போகும் நேரத்தில் நற்கதி பெற விரும்பி பெருமானது அருளுக்கு இலக்காகி மெய்ப்பேறு பெற்ற நிலையை எண்ணியவராய்

எம்மாதிர மும்படு பாவி என்று எள்ளு கள்ளன்

...............................................(இ.ச) செ.417

தன்னை இகழ்ந்தவர்களின் நிலையையும் பொறுத்துக் கொள்ளும் பொறுமை

தனது நிலையிலிருந்து கீழிறங்க நேர்ந்தாலும் தன்னிலை மாறாது பொறுத்துக் கொண்டு இருத்தல் சிறந்த பொறுமை ஆகும்.

பொல்லாங்கு பொறுத்த நம்மீசன்

'பொல்லாத யூதர்களும் ரோமப் போர்ச் சேவகர், கூட்டமும், எல்லாம் வல்ல ஈசனை எள்ளி நகையாடி, புறக்கணித்து, சொல்லத்தகாத நிந்தனை மொழிகளைச் சொல்லி தணிந்து செய்த பொல்லாங்கை எல்லாம் பொறுத்துக் கொண்ட ஈசனை எண்ணி,

பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குழுவும்

..............................................................

பொல்லாங்கை யெல்லாம் நம்மீசன் பொறுத்திருந்தார்

- (இ.ச) செ. 367

கூறியுள்ளார்.

விவிலியத்தில் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும், மூப்பர்களுடனும் சேர்ந்து இயேசுவை ஏளனம் செய்தனர். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள் (பு.ஏ) மத்-27:41/44.

உண்மை பேசுதல் நேர்மையாளனாய் நடந்து கொள்ளும் பண்பு

குறள் கூறும் உண்மை : 'வாய்மை' அதிகாரம் குறள் 291 முதல் 300 வரை உள்ள குறள் உண்மை பற்றி கூறுகிறது. உதாரணமாக,

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொல்லல்      - குறள் 291

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும் என விளக்குகிறது. "உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்."

வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின் தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களை சொல்லுதல்                                              - பரிமேலழகர் உரை

பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின் பிறர்க்கு யாதொன்றாலும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல் வாய்மை என்றாகும்.                                        - மணக்குடவர் உரை

உண்மை பற்றி பல கருத்துக்கள் இருப்பினும் விவிலிய நூலில் உண்மை பற்றிய கருத்துக்கள்.

பிலாத்துவிடம் இயேசு கூறியதாக அமைந்துள்ள பகுதி உண்மையை எடுத்துரைப்பதே என் பணி இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர். - (பு.ஏ.யோவான் 18:37)

இரட்சணிய சரிதப் பகுதியிலும் உண்மைக்கு சான்றாக பல செய்யுள்கள் அமைந்துள்ளன. எந்த சூழ்நிலையிலும் தன் நிலைமாறாது, பிறருக்கு உண்மையுள்ளவனாய் இருப்பது.

சத்தியத்திற்குச் சாட்சி கொடுக்க வந்தேன் சத்தியத்தை விளக்க

சாட்சியாய் இப்பூமிக்கு வந்த இயேசுவின் உண்மைகளை

மனத்தூய்மை உள்ளவர்கள் கடைப்பிடித்து வாழ்வர்

என்பதை,

இத்தரலாத்து இறுத்தனன் என்றென்றும் உலவாச் சத்தியம் தனைக் கடைப்பிடித்து உய்குவன் சாதம்

                                                             - (இ.ச. செ. 282)

 என்று கூறியுள்ளார்.

விசாரணைப் படலம் செய்யுள் 234 இந்த ஆலயத்தை இடித்து மூன்று நாளையிற் கட்டுவேன் என இயேசு நாதர் கூறிய உண்மையும் இங்கு காட்டப்பட்டுள்ளது.

இயேசு பாடுகள் பட்டு மரணம் அடைந்து விண்ணகம் புகும் அனைத்து நிகழ்வுகளையும் உண்மையாக தனது சீடர்களுக்கு கூறினார் என்று சுட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து இயேசு உண்மையுள்ள சான்றாய் சாட்சியால் விளங்கியுள்ள பான்மை தெளிவாகிறது.

விசுவாசம்

கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்கும் சொல்கிறேன் -மத்தேயு 17:20

விசுவாசம் என்பது ஒருவர் மற்றவர்கள் மீது நம்பிக்கை கொள்வதாகும்.

விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும். பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும். - எபிரேயர் ப.1

இரட்சணிய சரிதத்தில் காணப்படும் விசுவாசம் குறித்த பகுதிகள், தந்தை மகன் இருவரும் வேறுபாடியின்றி ஒன்றாக இருப்பதைப் போன்று நீர் கொடுத்த வாய்மொழியால் இவ்வுலகில் உள்ளோர் என்னில் விசுவாசம் வைத்து மன்றாடுவதை தந்திட வேண்டும் என இயேசு நினைத்ததை சிந்தித்து நேரில் கண்டு விசுவாசிக்கின்றவர்களை விட என்னை காணாமல் விசுவாசிக்கின்றவர்கள் பேறுபெற்றோர் எனக் கூறுகிறார். விவிலியத்தில் பேதமற்று ஒன்றாய் நாம் இருந்தலைப் போல் ............. தமியன் மன்றாடுகின்றேனே.                   - இ.ச. (தீ.ப.செ. 122)

இயேசு உயிர்த்தப் பின் தனது சீடர்களுக்கு காட்சியளித்த நிகழ்வு இரட்சணிய சரித நூலில் உயரிதெழுந்த படலத்தில் கூறப்பட்டுள்ளது. - செய்யுள் 533

என் பாதம் முதல் தலை மட்டும் என் உடலைத் தொட்டுப் பாருங்கள். வேத நூல்களில் முன்னே சொல்லப்பட்டது.

இயேசுவை அன்றி யாரையும் இல்லை என்று உணர்ந்து தனது ஐயங்கள் தீர தனது சீடர்களை தொட்டு உண்மையை உணர்ந்து நிகழ்வை எண்ணி பாருமின் பரிசித்து என பதாதியை ஒரு முன்னுரையால் அன்றி உண்மைவேறு ......... (இ.ச.பா. 533) என்றார்.

தனது சீடர் தோமையாரின் ஐயத்தை போக்கில் இயேசு கூறியதாவது நேரில் கண்டு விசுவாசிக்கின்றவர்களைவிட என்னை காணாமல் விசுவாசிக்கின்றவர்கள் பேறு பெற்றோர் எனக் கூறுகிறார்.

விவிலியத்தில்

மேலும் தீய ஆவிபிடித்தோர், கண் பார்வை அற்றோர், உடல் ஊனமுற்றவர்களுக்கு அவர்களின் விசுவாசத்தில் பேரில் விடுதலை அளித்த நிகழ்வும் சிலவற்றை இந்நூலில் காணமுடிகிறது.

சமாதானம்

ஒருவர் மற்றவருடன் எவ்வித வெறுப்புடனும், கோபத்துடனும் இருப்பினும் அவற்றை மறந்து அவர்களுடன் ஒற்றுமையாய் இணைந்து வாழ்வது ஆகும்.

இயேசு உயிர்த்து தனது சீடர்களுக்கு காட்சி கொடுக்கும் போதெல்லாம், உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக எனக் கூறினார். இவை இரட்சணிய சரித பலத்தில் செய்யுள் 320 மட்டும் கூறப்பட்டுள்ளது. எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பவர்கள் என்றார் - சாமுவேல் 17:3

நதியைச் சுற்றி இருபுறமும் எங்கும் சமாதானமாயிருந்து - இராஜாக்கள் 4:24 ஏழைகளைக் காக்கும் இயேசு பெருமான் அடியார்கள் நடுவில் தூய நலத்திகழ் மேனியோடு தோன்றி தெய்வத் தன்மையோடு பொருந்திய மெய்ச் சமாதானம் கூறிய நல்லாசியை நினைத்து ஆன போழ்தத்து அடியவர் நாப்பணே .......... தான மல்கித் தழைக்க வென்றார் - அரோ - இதே கருத்து விவிலியத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

                                                                           - இ.ச.செ.529

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன் என்றார் இயேசு.                                               - யோவான் 15:267

தாழ்மை, பணிவு

தாழ்ச்சி, பணிவு என்பது மனிதனிடம் காணப்படும் அறிய நற்குணங்களின் ஒன்றாகும். ஒருவன் எவ்வளவு உயர்நிலையில் இருப்பினும் தாழ்ச்சி, பணிவு உள்ளவனாய் இருப்பின் அனைத்தும் வெற்றிப்பெறும்.

தாழ்ச்சி, பணிவு பற்றி இரட்சணிய சரிதம் கூறுவன.

இயேசு தாழ்மையின் அவசியத்தைச் சொல்லாலும், செயலாலும் உணர்த்திய பான்மையைக் காண முடிகிறது.

இயேசு சீடரின் கால்களைக் கழுவி நிலையின் தாழ்மையும் மேன்மையும் உடைய செயல்களை நினைத்து அடிமைகளை ஆண்டவர் மாறாக, ஆண்டவன் அடிமையான நிகழ்வை தியானித்து...........

"அழகிய மேனிபோர்த்த அங்கியைக் களைந்தோர் ஆடை

.........................................................................................

செழுமலர்த் திருக்கரத்தால் சீடர்கள் கழுவச் சென்றான்

.............................................................................

               - இ.ச. தி.வி.பசெய்யுள். 49

தாழ்ச்சியின் அவசியம், முக்கியத்துவம் விவிலியத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக்

கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய

காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் நான் செய்தது போல் நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்     - யோவான் 13:14-15

இவ்வாறு ஆண்டவரே, அடியவர்களின் பாதங்களை கழுவும் அளவிற்கு தாழ்ச்சி பணிவுள்ளவராக இருப்பதையும், இதே கருத்தை இரட்சணியை சரித செய்யுள் பகுதி மீண்டும் நினைவுப்படுத்துவதை காணமுடிகிறது.

இவ்வாறு விவிலிய நற்கருத்துக்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு செய்யுள் வடிவம் கொடுத்ததும் தக்க ஆதாரங்களைக் கொடுத்தும் இரட்சணிய சரிதத்தில் மதக்கருத்துக்கள் மக்களுக்கு புரியும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்துக்கள் மக்களின் மனதை செம்மைப் படுத்தி நல்வழிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

- ஆ.பிரின்சி பெல்ஷீட்டா, முனைவர் பட்ட ஆய்வாளர், திருவையாறு அரசர் கல்லூரி, தஞ்சாவூர்

Pin It