தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலமெங்கும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நல்ல நூல்களை தமிழ் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதும், பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களை வாசிப்புக்கு வசப்படுத்துவதும் வரவேற்கத்தக்க அறச்செயல்களாகும்.chennai international book fairஏற்கனவே பல ஆண்டுகளாக அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வந்த சில சேவை அமைப்புகள் புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக நடத்தி வந்தன.

மாவட்டத் தலைநகரில் அரசே புத்தகத் திருவிழாக்களை நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அத்தகைய சேவை அமைப்புகள் அரசுடன் இணைந்து புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்தி வருகின்றன.

அந்தந்த மாவட்டங்களில் கிடைக்கப்பெறும் அனுபவங்களுக்கு ஏற்ப ஆண்டுக்காண்டு புத்தகத் திருவிழாக்கள் செழுமைப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களை புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைப்பது திருவிழாவை அரசே நடத்தும் நோக்கங்களில் பிரதானமான ஒன்றாகும்.

பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள், மழைக்காலம், கல்வி நிறுவனங்களின் விடுமுறைக் காலம் என்பன போன்ற பல அம்சங்களைக் கணக்கிலெடுத்து அந்தந்த மாவட்டத்தின் திருவிழாத் தேதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிர்ணயிக்க வேண்டியுள்ளது.

இயன்றவரை ஒரே நேரத்தில் அருகருகே உள்ள மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வது சிறப்பாகும்.

மாவட்ட அளவில் நடத்தப்படுகிற அரசோ, அரசுடன் இணைந்து தனியார் சேவை அமைப்புகளோ நடத்துகிற புத்தகத் திருவிழாக்களில் அந்த மாவட்டம் முழுவதிலுள்ள ஊராட்சிகளில் இயங்குகிற நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் ஏற்பாடு இருந்தால் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும். அவ்வாறான கிராமப்புற நூலகங்களுக்கும் புதிய புதிய நூல்கள் ஆண்டுக்காண்டு கிடைக்கப் பெறும்.

அந்தந்த மாவட்டங்களில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள நூலகங்களுக்கும் இந்தப் புத்தகத் திருவிழாக்களில் நூல்களை வாங்கும் ஏற்பாடு இருக்க வேண்டும்.

விருப்பபூர்வமாக அல்லாமல் உணர்வுபூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் மாநிலமெங்கும் ஒரே சீராகவும் இவ்வாசிப்பு வேள்வி நடைபெறுவதை உறுதி செய்தால் அரசு இப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிற நோக்கம் முழுமையாக நிறைவேறும்.

பதிப்புத்துறை அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பல்கலைக்கழகங்களுக்கு நிகரான ஒரு சிறப்புத்துறை. பல காரணங்களால் அத்துறை தற்போது திக்கித் திணறிக் கொண்டுள்ளது. அத்துறை எக்காரணம் கொண்டும் நலிந்துவிடக்கூடாது என்பதில் அனைவருக்கும் கருத்தும் கவனமும் இருக்க வேண்டும்.

பதிப்புத்துறை என்பது ஒரு தொழில் மட்டுமல்ல மகத்தானதொரு தொண்டு என்பதை அனைத்துத் தரப்பினருமே உணரவேண்டும்.

அடுத்த தலைமுறையினரை திசைதிருப்பும் விதத்தில் சமூகப்புறச்சூழல் நிலவுவதை மனதில் கொண்டு ஒரு அறிவுச் சமூகத்தை, ஒரு அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை, அறிவியல் கண்ணோட்டமுள்ள புதிய தலைமுறையை, சுயசிந்தனையும் உலகப்பார்வையும் கொண்ட இளையோர் கூட்டத்தை இத்தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை அரசுக்கு உள்ளது. அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளது. குடிமக்களுக்கும் உள்ளது.

பதிப்புலகமும் மக்களை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் புதிய புதிய அரிய நூல்களை, சிந்தனையைத் தூண்டும் தனிச்சிறப்பு மிக்க நூல்களை, மனித நேயத்தையும் மானுடப் பண்புகளையும் வளர்க்கும் வல்லமை மிக்க நூல்களை, அறிவைச் செழிக்கச் செய்யும் அற்புதமான நூல்களை சிரத்தையெடுத்தேனும் பதிப்பிக்க சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

புத்தகத் திருவிழா என்பது ஒரு நிகழ்வு மேலாண்மை அல்ல. அறிவு வேளாண்மை. அது ஒரு சடங்கோ சம்பிரதாயமோ அல்ல. சரித்திரச் சந்தர்ப்பம்.

புத்தகத்திருவிழாக்கள் புத்தொளி பாய்ச்சும். புத்தெழுச்சியூட்டும்.

எந்தெந்த வழிகளில் வாசிப்பை வளப்படுத்த இயலுமோ, எந்தெந்த வகைகளில் புத்தகங்களுக்குப் புத்துயிரூட்ட முடியுமோ அந்தந்த முறைகளிலெல்லாம் அரசும் அனைத்து அமைப்புகளும் கல்வி நிலையங்களும் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேற்கொள்ள வேண்டும்.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.