“பத்திரிகை இல்லாத நாடு சூரியன் இல்லாத பகலையும், சந்திரன் இல்லாத இரவையும், பக்தியும் இரக்கமில்லாத நெஞ்சையும், நன்னடத்தை இல்லாத படிப்பையும், கண்ணில்லாத முகத்தையும் ஒத்தது” என்கிறார் ஜனமித்திரன் இதழ் தொடங்கப்பட்டபோது அந்த இதழுக்கு வாழ்த்து மொழி எழுதிய ஜி.சுந்தேரச சாஸ்திரி அவர்கள்.

தமிழகத்தின் முதல் அச்சிதழ்

தமிழகத்தின் முதல் அச்சிதழ் மெட்ராஸ் கூரியர்.  12.10.1785 அன்று ரிச்சர்டு ஜான்சன் இவ்விதழைத் தொடங்கினார். இந்த இதழ் ஆங்கிலத்தில் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த முதல் இதழ் அரசாங்க வர்த்தமானி (1802) இதழாகும். இது இலங்கை அரசிதழாகும். இந்த இதழ் கொழும்பிலிருந்து வெளிவந்தது. அடுத்து 1812 ஆம் ஆண்டு வெளியான ‘மாசத் தினச் சரிதை’ எனும் இதழைப் பலரும் தமிழில் வெளியான முதல் இதழ் என்கிறார்கள். இது கிறித்துவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் இந்த இதழ் கொண்டுவரப்பட்டது. ம. ஞானப்பிரகாசம் கொழும்பு நகரிலிருந்து இந்த இதழைக் கொண்டு வந்தார். இதற்கடுத்து திருச்சபை இதழ் (1815) கொழும்பிலிருந்து வெளிவந்தது.janamithran 6661823 ஆம் ஆண்டு புதுவை அரசு புதுவை அரசிதழ் எனும் இதழைக் கொண்டு வந்தது. 1829 ஆம் ஆண்டு சுஜந ரஞ்சனி எனும் கதை இதழ் பெங்களுர் நகரிலிருந்து வெளிவந்தது. இப்படியான இதழ்களுக்குப் பிறகு 1831 ஆம் ஆண்டு ‘தமிழ் மேகசின்’ எனும் கிறித்துவ இதழ் சென்னையிலிருந்து வெளியானது. தமிழகத்திலிருந்து தமிழில் வெளியான முதல் இதழ் இதுவாகும்.

புதுக்கோட்டையின் முதல் இதழ்

புதுக்கோட்டை சமஸ்தானம் பத்திரிகையில்லாத நாடாக இருந்து வந்தது. சமஸ்தானத்தில் நடந்தேறிய பல்வேறு மாநாடுகளில் புதுக்கோட்டையில் ஓர் பத்திரிகை தொடங்கப்பட வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றி வந்தார்கள். பி.எஸ்.விசுவநாதர் அய்யர் அவரது சகோதரர் பி.எஸ். சுப்பிரமணிய ஐயர் இவர்கள் மூலமாக பத்திரிகை கனவு செயல்வடிவம் கண்டது.

1924 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முதல் பத்திரிகை ஜனமித்திரன் இதழ் தொடங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை என்கிற குறிப்போடு இந்த இதழ் வெளிவந்தது. இதே ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மக்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபை அமைக்கப்பட்டது. இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் பி.எஸ். சுப்பிரமணிய ஐயர். புதுக்கோட்டையில் முதலில் ஜனமித்திரன் பிரஸ் தொடங்கிய இவர், அந்த பிரஸிலிருந்து இந்த இதழைக் கொண்டு வந்தார். இந்த இதழ் சமஸ்தான காலத்தில் நடந்தேறிய அரசு நிகழ்வுகளை வெளியிட்டு வந்தது.

பரந்த இந்திய வரைபடத்தில் நான்கு கைகள் கொண்ட பாரதத்தாய் ஒரு கையில் சூலமும்  இன்னொரு கையில் மலர்ச்செண்டும் பிடித்தபடி ஒரு கையைக் கட்டி மற்றொரு கையை நாணத்தோடு முகவாயில் வைத்தபடி நிற்கும்படியான வரைபடத்தில் மேலே ஜன மித்திரன் என்றும் வலதுபுறத்தில் புதுக்கோட்டை என்றும் வரைப்பட்ட ஓவியம் இந்த இதழின் அடையாளச் சின்னமாக இருந்தது. இந்த ஓவியத்திற்கும் கீழே பாரதியாரின் தேசிய கீதங்களிலிருந்து ஒரு பத்தி இடம் பெற்றது.

ஏழையராகி யினி மண்ணிற் றுஞ்சோம் / தன்னலம் பேணி யிழிதொழில் புரியோம் /தாய்த்திரு நாடெனி லினிக்கையை விரியோம் /    கன்னலுந் தேனும் கனியு மின்பாலும் / கதலியும் செந்நெலும் நல்குமெக் காலும் /  உன்னத ஆரிய நாடெங்கள்நாடே! /ஓதுவ மிஃதை யெமக்கிலை யீடே!

வருடச் சந்தா ( உள்நாடு ) - ரூபாய் 6.00 , வெளிநாட்டு சந்தா -  ரூபாய் 7.00, தனி இதழ் - 2 அணா என்று இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த இதழ் புதுக்கோட்டை சமஸ்தான நிகழ்வுகள், கவிதை, சிறுகதை, தொடர், இரங்கல் செய்தி, விளம்பரம் என்று பல பகுதிகளைப் பிரசுரம் செய்தது. கவியோகி சுத்தானந்த பாரதியாரின் கவிதை, கட்டுரைகளை இதழ் தொடர்ச்சியாக வெளியிட்டது. உலகவியல் எனும் தலைப்பின் கீழ் இவர் எழுதிய கட்டுரை உலக அரசியலைப் பேசும் தொடராக வந்தது. இதுதவிர மதுரை ஸ்ரீமான் கே. ராமனாதய்யர் பி. எ எழுதிய சுவர்ணமுகி தொடர் பெண்கள் விரும்பி வாசிக்கும் தொடராக இருந்துள்ளது. புதுக்கோட்டையில் பஞ்ச நிலைமை, புதுக்கோட்டை சட்டசபை, சமஸ்தான தமிழ் கலாசாலைகள், நீதிமன்ற நடவடிக்கை என்று பல்வேறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த இதழ் வெளிவந்த காலத்தில் இந்தியாவில் பட்டணங்கள்- 2316, கிராமங்கள் - 6, 85,665, பட்டணங்களின் ஜனத்தொகை - 3, 24, 75, 276, கிராமங்களின் ஜனத்தொகை - 28,64,76,205 இருந்துள்ளன என்பதை இந்த இதழ் தரும் ஒரு கட்டுரையிலிருந்து அறிய முடிகிறது. இது பாகிஸ்தான் பகுதி இந்தியாவுடன் இணைந்திருந்த காலத்திய புள்ளிவிபரமாகும். 

ஸ்ரீமான் ஜி.சுந்தரேச சாஸ்திரியின் வாழ்த்துமொழி

இவர் புதுக்கோட்டை சமஸ்தான சட்டசபையின் தலைவராகவும் வக்கீல் குழுமத்தின் தலைவராகவும் இருந்தவர். இதழ் தொடங்கப்பட்ட காலத்தில் இதழுக்கு இவர் எழுதிய வாழ்த்துச் செய்தி முக்கிய செய்தியாக இடம் பெற்றுள்ளது. எனது அன்பார்ந்த நண்பர் ஸ்ரீமான் விசுவநாத ஐயர் சமஸ்தானத்தில் ஓர் பத்திரிகை இயற்ற முன் வந்தார்.  சகோதரர் வாஞ்சையே உருவெடுத்து வந்ததெனச் சொல்லும்படி விளங்குபவர்களில் ஒருவரான அவர் இளைய சகோதரர் ஸ்ரீமான் பி.எஸ். சுப்பிரமணிய ஐயர் அவருக்குப் பக்கத் துணையாக நிற்கின்றனர்.  இப்பத்திரிகைக்குப் பொருளும் பெயரும் ஒருங்கே வாய்ந்து ஜனமித்திரன் என்ற பெயரும் அமைந்திருக்கிறது.

நமது நாட்டிற்கு ஓர் பத்திரிகை இல்லாதது பெருங்குறைவென்று கருதாதவரிலர். ஆயினும் அவ்வரும்பெருங்காரியத்தைச் செய்ய முன்வரும் பாக்கியம் எனது நண்பருக்கே கிடைத்தது.  அவருடைய வாய்மையும் தூய்மையும் ஜனங்கள் பால் அளவில்லா அன்பும், பொது ஜன நன்மையில் தீவிரமான அவாவும், குறைவுபடாது பொங்கும் ஊக்கமும், அவரை இவ்வழியில் தோன்றி நிற்கின்றன. அவர் பல வருஷங்களாகப் பழகித் தேர்ந்திருக்கும் தொழிலில் அவருக்கு மேன்மேலும் லாபமும் கீர்த்தியும் ஏற்படும் என்பதற்கு ஐயமில்லை.

அவர் முன்னேற்றத்தை மட்டில் கவனித்தால் அவருக்கு இப்பத்திராதிபத்தியம் அவசியமில்லை என்றும் நான் துணிவாய் சொல்லுவேன். இப்பெரும் காரியத்திற்கு அவசியமான பொருளைப் பற்றியும் அவர்   சிந்தித்தவரல்லர். அதற்கு வேண்டிய மற்ற பல சகாயங்களில் ஒன்றையும் அவர் தேடினதாக இல்லை. ஈஸ்வரனுக்கேற்கவும் தன் மனசாட்சிக்கேற்கவும் மிகவும் மேன்மையான காரியமிது என்ற ஓர் எண்ணத்தையே கடைப்பிடித்துக் கொண்டு இக்காரியத்தில் தலைப்பட்டிருக்கின்றனர்.

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பது சிறந்த முதுமொழியன்றோ? அதிலும் அவருக்கு இது விஷயத்தில் ஏற்பட்ட எண்ணம் எப்படிப்பட்டதென்பதை சற்று கவனிப்போம்.

ஆங்காங்கு அவ்வவருக்குத் தெரிந்திருக்கும் கல்வியும் செய்தியும் அவரவரிடம் அங்கிங்கு அடங்கிவிடாமல் நாடும் முழுமையும் பரவி அவரவர் மனதிலுள்ள தோற்றங்களையும், எண்ணங்களையும், பரிஷ்கரித்து வெளிப்படுத்தச் செய்து அவைகளை மற்றவர்கள் தெரிந்து உய்யவும், பிறரை உய்யச் செய்யவுமான வழியைத் தேடுவது நிகரற்ற, உண்மையான, கல்விக் கிளர்ச்சியல்லவோ?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று ஔவையார் சாதித்திருப்பதன் காரணம் மனிதர்களுடைய உடலை அன்பையும், பிதாவும் உண்டாக்கிக் காப்பதாலன்றோ? அழிவுக்கென்றே உண்டான உடலைக் கொடுத்துப் போசிப்பவர்களுக்கே அத்தகைய மகத்துவம் உண்டாகுமாயின் ஞானக் கண்களைக் கொடுப்போருக்கு என்ன மேன்மையுண்டென்று புகழவும் வேண்டுமோ?

பத்திரிகையில்லாத நாட்டில் பத்திரிகையை நாட்டி,  நிகழ்காலம், சென்றகாலம், வருங்காலம் என்ற முக்கால செய்திகளையும், அறிவையும் புகட்டும் காரியம் உத்தமமானதெனச் சொல்லாமலே விளங்கும். இதுகாறும் பத்திரிகையில்லாதிருந்த இச்சமஸ்தானம் பெரிய ஊமையாக இருந்ததைப் பேச செய்ததாகவே ஆகும். இந்நன்மைக்கு கைமாறான உதவியாதுமில்லை. ஆதலின் சமஸ்தானத்திலுள்ளோர் அனைவருக்கும் மற்றவர்களுக்கும் உண்மையில் ஆத்ம மித்திரனான ஸ்ரீமான் விசுவநாதய்யரும் அவர் சகோதரரும் யதார்த்தமான பெயர் படைத்த "ஜனமித்ரன்" என்னும் பத்திரிகையும் சீக்கிரத்தில் எங்கும் பிரக்கியாதி பெற்று நீடித்து ஓங்கி வாழ்ந்து வருகவென எல்லாம் வல்ல இறைவனை அனுதினம் பன்முறை வணங்கி போற்றுவோமாக."

ஜனமித்திரன் தடையும் கைதும்

ஜனமித்திரன் தொடங்கிய வெளிவந்த ஒன்றரை ஆண்டிலும் பிறகு 1927 ஆம் ஆண்டிலும் புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகம் அந்த இதழுக்குத் தடை விதித்து இதழின் கௌரவ ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. கி.பு.கோ 112 வது பிரிவின்படி, புதுக்கோட்டை அடிஷனல் சீப் மாஜிஸ்டிரேட் அவர்களால், புதுக்கோட்டை நகரத்தில் ஜனமித்திரன் அச்சுக்கூடத்தை நிறுவியவரும் ஜனமித்திரன் ஆசிரியருமான எஸ்.விஸ்வநாதய்யர் 1925 ஆம் ஆண்டு முதல் 1927 ஆம் ஆண்டு வரை  சில முக்கிய தேதிகளில் ராஜதுவேஷமான விசயங்களை வெளியிட்டதன் காரணமான இதழுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

புதுக்கோட்டை மன்னராக இருந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் மன்னர் பதவியைத் துறந்ததன் பிறகு அவரது மகன் சிட்னி மார்த்தாண்டாவிற்குப் பட்டம் சூட்டக்கூடாதென்றும் ஒரு இந்தியரும் இந்து வாரிசுக்குத்தான் ராஜாங்கம் கிடைக்க வேண்டுமென்று பத்திரிகையில் எழுதி வந்ததே காரணமாக அமைந்தது.

புதுக்கோட்டை மன்னர்களில் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் மார்த்தாண்ட பைரவர். இவரது ஆட்சிக் காலத்தில் மன்னர் கல்லூரி தொடங்கப்பட்டது. முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் உயர்கல்வி கற்பதற்குக் கல்லூரியில் இடமளித்தவர் இவரே. இவர் வெளிநாட்டிற்கு அடிக்கடி சென்று வருகையில் மெல்போர்ன் பாரிஸ்டரின் புதல்வி இ.எம்.பிங்க் எனும் பெண்ணின் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்திற்குப் பிற்கு அவர் மன்னராக நீடிக்க சமஸ்தான நிர்வாகம் ஏற்கவில்லை. மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆகவே தன் மன்னர் பதவியை அவர் ராஜினமா செய்யவேண்டியிருந்தது. இதன்பிறகு அடுத்த மன்னரைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வந்தது. மார்த்தாண்ட பைரவர் - பிங்க் தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அந்தக் குழந்தைக்குச் சிட்னி என்று பெயர்சூட்டினார்கள். புதுக்கோட்டையின் அடுத்த மன்னராக சிட்னி மார்த்தாண்டரை அறிவிக்கும் முயற்சியில் சமஸ்தானம் இறங்கியது. புதுக்கோட்டையின் மன்னராக ஒரு முழு ஹிந்துவே இருக்க வேண்டும் என்று ஜனமித்திரன் எழுதி வந்தது.

ராஜாங்கம் விசயத்தில் தலையிட்டு எழுதியதற்காக கோபம் கொண்ட சமஸ்தானம் 124 - ஏ பிரிவின்படி பத்திரிகையின் மீது வழக்குத் தொடர்ந்தது. பத்திரிகை அலுவலகம் மற்றும் அச்சுக்கூடத்தைப் போலீஸ் பரிவாரங்களால் முற்றுகையிட்டு, சோதனையிட்டதுடன் ஜனமித்திரன் இதழைத் தடை செய்தது. இதழின் கௌரவ ஆசிரியராக இருந்த எஸ். விசுவனாதய்யர் பி.எ அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் இதழின் ஆசிரியர் அரசு வழக்கறிஞர் என்பதால் அவர் இதழ் நடத்தியது தவறு என்று மாஜிஸ்திரேட் தண்டனையும் அபராதமும் விதித்தார். மேல்முறையீட்டில் சீப் கோர்ட்டார் அத்தீர்ப்பை ரத்து செய்தார்.

இதன்பிறகும் சமஸ்தான போலீஸார்கள் இதழாசிரியர் மீது அடுத்தடுத்த புகாரின் மீது கி.பு.கோட் 108 ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுத்தார்கள். அதையும் கோர்ட் தள்ளுபடி செய்தது. பிறகு சமஸ்தான ஏஜெண்ட் துரை மிஸ்டர் C.W.E.காட்டன் அவர்கள் வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டதன் பேரில் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

நீதிமன்றம் தடையை விலக்கிக் கொண்டதன் பிறகு இதழ் வெளிவர பொருளாதார நெருக்கடி இருந்தது. ஜனமித்திரன் இதழ் தேவையைக் கருத்தில் கொண்டு சமஸ்தானப் பகுதி மற்றும் அதற்கும் வெளியிலிருந்து வாசகர்கள் இதழுக்கு நிதியுதவி செய்தார்கள். உரூபாய் 1083 அளவில் சேர்ந்திருந்த நிதியைக் கொண்டு இதழ் மீண்டும் வெளிவந்தது.  

பி.எஸ். சுப்பிரமணிய அய்யர் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றதன் பிறகு ஜனமித்திரன் இதழின் வடிவமைப்பு மாற்றம் கண்டது. முகப்பு பக்கத்தில் காந்தியின் கைராட்டை, ஒரு பக்கம் பாரதியாரின் ஜாதி மதங்களைப் பாரோம் எனும் பாடலும் இன்னொரு புறம் ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே என்கிற பாடலும் இடம் பெற்று கீழே சுத்தம்,  சுதந்திரம், சமத்வம் என்கிற குறிப்புடன் வெளியானது.

தி ஹிண்டு பத்திரிகையின் ஆதரவு

எஸ். சுப்பிரமணிய ஐயர் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றதன் பிறகு பத்திரிகை எந்தத் தடையுமின்றி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தது. வாசகர்கள் இதற்காக ஒரு பெரியளவு பாராட்டு விழா எடுத்தார்கள். அந்த விழாவிற்கு தலைமையேற்க தி ஹிண்டு இதழின் அன்றைய ஆசிரியர் எ. ரெங்கஸ்வாமி அய்யங்கார் அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அவர் நிகழ்வுக்கு வருவதாக ஒப்புக் கொண்டார். விழாவிற்கும் முன்னதாக அவர் வேறொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் அந்த விழாவில் தலைமையேற்க முடியவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். பிறகு இந்த விழா சுதந்திரப் போராட்டத் தியாகியும் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ். சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தீரர் சத்தியமூர்த்திக்குத் தடை

எஸ்.சத்தியமூர்த்தி புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்தத் தடை விலகிக் கொண்டதன் பிறகு அக்டோபர் 24, 1929 அன்று ஜனமித்திரன் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட ஜனமித்திரன் இதழ் செய்த பங்களிப்புகளாக கதர் இயக்கம், மது ஒழிப்பு, கிராம சீர்த்திருத்தங்கள், கட்டாயக் கல்வி ஆகியவற்றை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

அன்றைய நிலையில் ஜனமித்திரன் இதழின் சந்தாதாரர்கள் ஐநூறிலிருந்து அறுநூறு என்கிற அளவில் இருந்தது. இதழுக்கு தொடர்ந்து விளம்பரம் கொடுத்துவந்த சமஸ்தான நிர்வாகம் விளம்பரம் தருவதை நிறுத்திக் கொண்டதற்குப் பிறகு கடுமையான பொருளாதார சூழலில் வார பத்திரிகையாக இதழ் வெளிவந்தது. இந்த விழாவில் பேசிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், “மகாராஷ்டிரா மொழியில் வெளியில் வெளிவந்த ‘கேசரி’க்கு எவ்வளவு கீர்த்தி உண்டோ அவ்வளவு கீர்த்தி ஜனமித்திரனுக்கு உண்டு. பத்திரிகையில்லாத அரசாங்கம் தலைவிரிக்கோலமாய் ஆடும் என்பதற்கு சந்தேகத்திற்கு இடமில்லை" ஜனமித்திரன் பத்திரிகையை விருத்தி செய்து இன்னும் சிறப்பாக நடத்துமாறு கேட்டுக் கொண்டார்.

காந்தியின் வருகையைப் பதிவு செய்த ஜனமித்திரன்

1927 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு மகாத்மா காந்தியடிகள் வருகை தந்தார்.  காந்தியடிகளோடு அவரது துணைவியார் கஸ்தூரிபாய், ராஜகோபாலாச்சாரியார், மகாதேவ் தேசாய், ராமனாதன், தேவதாஸ்காந்தி, டாக்டர் ராஜன் ஆகியோர் வருகைதந்தார்கள். காந்தியின் வருகைக்கு அன்றைய புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. காந்திய உரையின் சாராம்சமாக பசு வளர்ப்பு, கைராட்டை, கதர் இயக்கம், மது ஒழிப்பு இருந்துள்ளன.

காந்தியடிகள் புதுக்கோட்டைக்கு வருகை தந்த நாளன்று புதுக்கோட்டை நகரத் தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. காந்தியின் வருகையினால் நகரத் தொகுதி தேர்தல்களில் வாக்குப் பதிவு பெரிதும் பாதிக்கப்பட்டது. அதாவது 45 விழுக்காடு மட்டுமே வாக்குப் பதிவானது.

இப்படியான வரலாற்றுச் செய்திகளை வெளியிட்டு வந்த ஜனமித்திரன் இதழ் பொருளாதார நெருக்கடி மற்றும் இன்னும் பிற காரணங்களால் 1939 ஆம் ஆண்டோடு இதழ் பணியை நிறுத்திக் கொண்டது. ஆயினும் அச்சகப் பணியில் தொடர்ந்து செயலாற்றி வந்தது. புதுக்கோட்டை சுற்றி நடைபெறும் நாடகங்களுக்கு விளம்பர சுவரொட்டிகள், நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் யாவும் ஜனமித்திரன் பிரஸ் மூலமே அச்சடிக்கப்பட்டது. இந்த பிரஸ் அச்சடித்த நூல்களில் ‘ஸ்ரீராஜகோபால விஜயம்’ மிக முக்கியமான நூலாகும். இந்த இதழ் இந்தியாவிலுள்ள நூலகங்களில் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தில் மட்டுமே ஆவணமாக இருக்கிறது. இத்தகைய இதழ்களை அரசு மின் ஆவணமாக மாற்றினால் வருங்கால சந்ததியினர் பெரிதும் பயன்பெறுவார்கள்.

- அண்டனூர் சுரா

Pin It