திரு. நா. வானமாமலை அவர்கள் இன்றுள்ள தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்.  தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களுள் பின்பற்றப்பட வேண்டியவர்.

இக்கூற்று பேராசிரியர் நா.வா.  அவர்களின் நெருங்கிய நண்பராலோ, அவர் தோற்றுவித்து தலைமையேற்று நடத்திவரும் அவரது சிந்தனை வழித் தோன்றல்களான நெல்லை ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஒருவராலோ கூறப்பட்டக் கூற்றல்ல.  ஸ்ரீலங்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் சிறந்த ஆய்வாளராகத் திகழும் பேராசிரியர் கா. சிவத்தம்பி, எம்.ஏ., பி ஹெச். டி, அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய கூற்றாகும்.

பேராசிரியர் நா.வா. பின்பற்றப்பட வேண்டிய அறிஞராவார்? அவருக்கு முன்னும், இன்றும் எத்தனையோ அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வில்லையா? மு. இராகவ அய்யங்கார், வையாபுரிப் பிள்ளை, கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ.  என எத்தனையோ ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளனர்.  ஆனால், பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறை மற்ற ஆய்வாளர்களின் முறையில் இருந்து மாறுபட்டது.  மற்ற ஆய்வு முறைகளுடன் மாறு பட வேண்டுமென்பதற்காக விதண்டாவாதமாக மாறுபடுத்தப்பட்ட ஆய்வு முறை இல்லை.

எந்த ஆய்வும் ஆய்வாளரின் அறிவின் வீச்சையும், மேதா விலாசத்தையும் மட்டுமே வெளிப்படுத்த உதவுமாயின் அத்தகைய ஆய்வு முறையால் உலகிற்கு எவ்விதப் பயனும் இல்லை.  ஆய்வு என்பது பல்வேறு கருத்துக்களைச் சேகரித்து வகைப் படுத்தி வெளியிடுவது மட்டுமல்ல.  அத்தகைய ஆய்வு “இணரூழ்த்தும் நாறாமலரை ஒக்கும்” பெரும்பாலான ஆய்வுகள், இருக்கும் நிலை மையை விமர்சிப்பதோடு நின்றுவிடுகின்றன; மேலும் அவைகள் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் தனிமனித சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்டவை என்ற கருத்தோட்டத்தைக் கொண்டவை.

ஆனால், பேராசிரியர் நா.வா. அவர்களின் ஆய்வு முறை இந்தக் கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.  இன்று அவருடைய ஆய்வு முறை பலராலும் ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படுகின்றது.  அதன் அடிப்படைக் காரணம் ஆய்வு முறையில் அவர் கையாளும் விஞ்ஞான முறையாகும்.

இத்தகைய ஆய்வு முறை நம் நாட்டிற்கும் புதியது.  ஆனால், இன்றியமையாதது.  வட இந்தி யாவில் டாக்டர் கோசாம்பி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்றவர்கள் இந்த ஆய்வு முறையினை ஏற்கனவே பின்பற்றி ஆய்வுகள் செய்து ஆய்வுத் துறையில் தங்களுக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளனர்.  அவர்களது ஆய்வு முறை மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கு கிறது.

தமிழகத்தில் இப்புதிய விஞ்ஞான ஆய்வு முறையை அறிமுகப்படுத்தி வழிகாட்டி, வெற்றி நடைபோடும் முதல்வரும் முன்னோடியும் பேரா சிரியர் நா.வா. அவர்கள் ஆவார்.  இலக்கியம், வரலாறு, மானிடவியல், நாட்டுப் பாடல், விஞ்ஞானம் ஆகிய கல்வித் துறைகளைத் தனித் தனியே பிரித்து ஒன்றுடன் ஒன்றினை சம்பந்தப் படுத்தாது ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது.  ஆனால், பேராசிரியர் நா.வா. வின் ஆய்வு முறை இவை ஒவ்வொன்றையும் தனித்துப் பார்ப்ப தில்லை. இவைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை.  இவை அத்தனையையும் பிணைப்பது என்ற அடிப்படை அறிவைப் பெற முயலுகிறது. இதைக் கண்டுகொண்டால் உண்மையை அறிவதும் சிரமமாகாது.  இத்தகைய அடிப்படை அறிவைத் தரக்கூடியதுதான் பேராசிரியர் நா.வா.  அவர்களின் ஆய்வு முறையாகும்.

இயற்கையின் இயக்கத்திற்குச் சில அடிப் படையான நியதிகள் உள்ளன.  அவற்றின்படியே அது செயல்படும். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதிகளின்படி தான் ஏற்படுகிறது.  இந்த மாற்றங்கள் யாருடைய ஆணைக்காகவும் காத்திருப்பதில்லை.  யாருடைய கெஞ்சலுக்காகவும் தன் விதியை மாற்றுவதில்லை.  இந்த விதியை வரலாற்றுப் பொருள்முதல்வாத நியதிகள் என்று மார்க்ஸியம் அழைக்கிறது.  இந்த விதியினை தனது ஆய்வு முறைக்குப் பேராசிரியர் நா.வா. அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த விதிதான் எல்லாவித அறிவியல் கலைகளையும் கல்விப் பிரிவுகளையும் இணைக்கும் விதி.

“நிகழ்ச்சிகளே சிந்தனைகளை உருவாக்கு கின்றன.  சிந்தனைகள் நிகழ்ச்சிகளை உருவாக்குவ தில்லை” என்பது மார்க்ஸீயத்தின் அடிப்படைத் தத்துவம். சிந்தனைகள் உருவான பின் நிகழ்ச்சி களின் மீது அவை செல்வாக்குச் செலுத்துகின்றன.  நன்கு புரிந்த இவ்வியக்கவியலை நம் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப அதைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதில் தன்னிகரற்றவர் பேராசிரியர் நா.வா. அவர்கள்.  இவ்விதியினை வரட்டுத்தனமாகப் பயன் படுத்துவதில்லை.  தத்துவம் என்பது சிக்கல்கள் என்னும் கடலைக் கடக்கப் பயன்படும் தோணி யாகும்.  மாறாக தத்துவமே எல்லாம் என்று தத்து வத்தைக் காலில் கயிறுபோல் கட்டிக் கொண்டு கடலில் விழுந்தால் நீரில் மூழ்க வேண்டியது தான்.  பேராசிரியர் இயக்க இயல் என்னும் கப்பலில் பயணம் செய்வதால் எத்தகைய சமுதாயச் சிக்கல் கடல்களையும் கடக்க முடிகிறது.  எந்தச் சமுதாயச் சிக்கலுக்கும் தீர்வு காண்பது எளிதாக உள்ளது.  பேராசிரியர் நா.வா அவர்களின் புதிய ஆய்வு முறையினை உலகுக்குப் பறைசாற்றியவை உலகத்  தமிழ் மாநாட்டில் அவர் வாசித்தளித்த The motif in Silappadikaram, Consolidation of Feudalism ----- rules ----- சரடநள என்ற கட்டுரைகளாகும்.

ராஜ ராஜ சோழனைப்பற்றிய அவரது கட்டுரையும், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்களின் சான்றுகளைக் கொண்டு அக் கோயிலுக்கு ராஜ ராஜ சோழனால் அளிக்கப் பட்ட பல்வேறு வகையான சொத்துக்களைப் பற்றிய அவருடைய கட்டுரை ராஜ ராஜ சோழனின் மெய்க் கீர்த்தியைப் பாடி வந்தவர்களின் மனதில் அதிர்ச்சியையும், உண்மையான ஆய்வாளர்களின் மனதில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இராஜ ராஜன் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தச் செய்த  நிலமானிய முறை மாற்றங் களை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

எந்தத் துறையிலும் அவர் ஒப்புநோக்கும் முறையையும், மேலே விளக்கிய ஆய்வு முறையையும் கையாளுகிறார்.  சமுதாயத்தைப் பற்றியும், அதன் மீது வளர்ந்து வரும் கலை இலக்கியங்கள் பற்றியும் ஆராய்வதற்கு அவர் கையாளும் ஆய்வு முறையே அவருடைய சக்தி வாய்ந்த ஆயுதமாகும்.

இன்று பேராசிரியர் நா.வா.  அவர்களின் ஆய்வு முறையைப் பின்பற்றும் ஆய்வாளர்கள் தமிழகத்திலும், பிற தமிழ் கூறும் நல்லுலகத்திலும் அனேகர் தோன்றியுள்ளனர்.  எத்தனையோ ஆய்வாளர்கள் ஏகலைவர்களாக இவருடன் கடிதத் தொடர்பு மட்டுமே கொண்டு இவருடைய ஆய்வு முறையைப் பின்பற்றுகின்றனர்.  சமுதாய மாற்றத்திற்காகத் தனது ஆய்வுமுறையைப் பயன்படுத்தும் பேராசிரியர் நீண்ட நாள் வாழ்ந்து அவருடைய ஆய்வு முறையை வளம்படுத்த  வேண்டும் என விரும்புகிறேன்.

(நா.வா.மணிவிழா மலரில் வெளியான கட்டுரை)

Pin It