வரலாறு பற்றிய அறிவியல் என்ற ஒரே ஒரு அறிவியல்தான் நமக்குத் தெரிந்த அறிவியல். வரலாற்றை இரு பக்கங்களிலிருந்து பார்க்க முடியும்.அதை ‘இயற்கை பற்றிய வரலாறு’, ‘மனிதன் பற்றிய வரலாறு’ எனப் பிரிக்கமுடியும். இருப்பினும், அந்த இரண்டு பக்கங்களும் தனித்தனியே சுதந்திரமாக உள்ளன எனப் பார்க்க முடியாது.மனிதன் வாழும்வரை இயற்கையும் மனிதனும் ஒன்றின்மீது ஒன்று செயல்புரிந்து கொண்டிருக்கும்.(மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ்: ஜெர்மன் சித்தாந்தம்)

தமிழ்மொழி,தமிழ் இலக்கியம் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு,இம்மொழியோடு தொடர்புடைய மக்கள் கூட்டத்தையும் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பையும் சார்ந்து உருவான சமூகவியல் கூறுகளைப் புரிந்துகொள்ளும் தேவை நமக்குண்டு.இந்தப் பின்புலத்தில் இவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த தொடர்பின் வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். சுமார் 2500ஆண்டுகள் என்னும் நீண்ட காலத்திற்குள் இவர்களிடத்தில் உருப்பெற்று வளர்ந்த கடவுள் என்னும் கருத்துநிலையும் அது தொடர்பான உரையாடல்களும் எவ்வாறெல்லாம் நடந்தன/நடந்துகொண்டுள்ளன என்ற உரையாடல் இங்கு நமது நோக்கமாக அமைகிறது.

கடவுள் என்ற கருத்துநிலையோடு தொடர்புடைய வாதமாகவே நாத்திகம் என்பது அமைகிறது.பகுத்தறிவுவாதம்,பொருள்முதல்வாதம்,நாத்திகம்ஆகியவைதம்முள் நெருக்கமான உறவுடையவை.ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தனித்துப் பார்க்க இயலுமா?என்பதும் சந்தேகம்.நாத்திக மரபு என்பதை அக்கூட்டத்தின் பகுத்தறிவுக் கருத்து நிலையாகவும் பொருள்முதல்வாதக் கருத்து நிலையாகவும் புரிந்துகொள்ளும் தேவை இருப்பதாகவே கருதுகிறேன்.இந்தப் பின்புலத்தில் மேற்குறித்த நீண்ட காலத்தின் நாத்திக மரபைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்றுக் காலம் சார்ந்த சில பகுப்புகளை ஏற்படுத்திக் கொள்வது வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  • செவ்வியல் பிரதிகளாகக் கருதப்படும் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொள்ள வேண்டிய நாத்திக மரபு.
  • ஐரோப்பிய புத்தொளிமரபைப் பின்புலமாகக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான நாத்திக மரபு (1878-1900)
  • பெரியார் மற்றும் இடதுசாரிகள் உரையாடலுக்கு உட்படுத்திய நாத்திக மரபு (1925-1973) மிக நீண்ட இந்த வரலாற்றுக்குள் சமகாலம் எப்படிச் செயல் படுகிறது என்ற புரிதல் அவசியம்.சமகாலப் புரிதலுக்காகவே பழம் வரலாற்றுக்குள் பயணப்படவேண்டிய அவசியம் நேரிடுகிறது.

நமது செவ்வியல் பிரதிகள்,கலித்தொகை,பரி பாடல்,திருமுருகாற்றுப்படை நீங்கலாக எஞ்சியவற்றில்,குறிப்பாக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு,புறநானூறு ஆகியவற்றிலும் ஆற்றுப்படைப் பாடல்களிலும் இயற்கை வழிபாட்டு மரபுகளே 90 விழுக்காடு இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். இயற்கையை வழிபடும் தரவுகள் மிகுதியாக உள்ளன.

இம்மரபின் மூலம் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடக்க கால உறவு முறையை அறியமுடிகிறது.இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த காட்வெல் கருத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம் (மாயையும் யதார்த்தமும்:1937)

“மனிதர்கள் இயற்கையுடனான தங்கள் போராட்டத்தில் (அதாவது விடுதலைக்கான தமது போராட்டத்தில்)அந்த விடுதலையைப் பெறு வதற்காக ஒருவரோடொருவர் குறிப்பிட்ட உறவு களுக்குள் நுழைகின்றனர்.ஆனால் மனிதர்கள் தம்மை மாற்றாமல் இயற்கையை மாற்ற முடியாது.சமூகத்தில் வளர்ந்துவரும் உறவுகள் மற்றும் தேவைகள் ஊடாகச் செயல்படும்,பரஸ்பரம் உள்ஊடுருவிச் செல்லும்,வினைபுரியும் பொருளே வினைபுரியப்படும் பொருளாக மாறும் மனிதர்கள் மற்றும் இயற்கையின் இயக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதுதான் இயற்கையில் மட்டுமல்லாமல்,கூடவே நமக்குள் அதன் மூலம் சமூகத்திற்குள்ளும் உள்ள தேவையை அங்கீகரிப்பதாகும்.இந்தச் செயல்பூர்வ வினை புரிபவன்-வினைபுரியப்படும்பொருள்உறவைப்புறநிலையில்பார்ப்பதுஅறிவியல்,அகநிலையில் பார்ப்பது கலை;ஆனால் பருண்மையான உயிர்வாழ்வில் தனிமனிதர்களும் இயற்கையும் உள்ள ஒரு உலகத்தில் ஒரு மனிதனைப் போல உழைத்தல்,உணர்தல்,சிந்தித்தல் மற்றும் நடத்தல் என்றும் முழுமையான நிகழ்வுப் போக்கில் நடைமுறையுடனான செயல்துடிப்பான இணைவில் உணர்வு நிலை தோன்றுகிறது.”

எனவே, இயற்கை-மனிதஉறவு என்பதற்குள் செயல்படும் உணர்வுநிலையாகவே வழிபாடுகள் என்பவை உருப்பெற்றன.அதன் தொடர்ச்சியாகவே கடவுள் என்னும் கருத்துருவாக்கம் தொல்பழம் சமூகத்தில் உருப்பெற்றதை அறிகிறோம்.இம்மரபு தமிழ்ச் சமூகப் போக்கில் மதம் சார்ந்த கருத்துநிலையாக உருப்பெற்றதை பிற்காலங்களில் திரு.வி.க.கூறியதைப் போல் முருகு அல்லது அழகு என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

இம்மரபிற்குள் வேதமரபுகள்,உலகாயத மரபுகள் ஆகியவை உருப்பெற்று அதன்வழி உருவான வைதிக மரபுகள் மற்றும் அவைதிக மரபுகள் மூலம் உருவான நாத்திக மரபுகளை - எடுத்துக்காட்டாக, சாங்கியம், ஆதிகால பௌத்தம் ஆகிய பிறவற்றைத் தமிழ்ச் சமூகத்தின் இயற்கை வழிபாடு சார்ந்த மரபோடு இணைத்துப் பார்ப்பதைவிட தனித்துப் பார்க்க வேண்டும்.சாங்கியம் கூறும் பிரகிருதி என்னும் இயற்கை குறித்த உரையாடலும் நம் செவ்வியல் பிரதிகள் வழி உருப்பெறும் இயற்கை மரபுகள் சார்ந்தவற்றையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது.பின்னர் பல்வேறு சமய மரபுகளுக்கு மூலமாக அமைந்த தொடக்க காலத் தரிசனங்களை,மதங்கள் உருவாவதற்கான மூலங்களாகவே காண வேண்டியுள்ளது.

மதச் சிந்தனை மரபு என்பதை மனிதனின் இயற்கை வாழ்மரபோடு இணைத்துப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.நிறுவனமாக உருப்பெற்ற கருத்துகளுக்கும் இயல்பான இயற்கை வாழ்முறைக்குமான முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் செவ்வியல் மரபு இயற்கை நிகழ்வுகளையே தமது கடவுள் கருத்துநிலையாகக் கொண்டிருப்பதை இங்கு வலியுறுத்தலாம்.இந்த மரபு தொடரவில்லை. 

செவ்விலக்கிய மற்றும் தொல்காப்பிய பிரதிகளோடு அல்லது அவற்றில் பெரும்பான்மையாக இடம்பெற்றதோடு நின்றுவிட்டது.பின்னர் பெரும் பூதமாக உருவான வைதிக மற்றும் அவைதிக மரபுகளும் அவற்றின் நிறுவன அமைப்புகளும் அதன் தொடர்ச்சியாக உருப்பெற்ற வலுவான மதநிறுவனங்களும் தமிழின் இயற்கைநெறி மரபை உள்வாங்கிக் கொண்டு விட்டது.அதற்கெனத் தனியான அடையாளங்கள் இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது என்றேகருதமுடிகிறது.வேதமரபுகளும் பிறமரபுகளும் நமது பண்டைச் சமூக வெளியில் விரிவாக உரையாடலுக்கு வந்துவிட்டன;நமது இயற்கை மரபு காணாமல் போய்விட்டது.அதுவே நமது தொடக்க கால கடவுள் கருத்துநிலை அல்லது கடவுள் கருத்தற்ற நாத்திக நிலை என்று புரிந்து கொள்ளலாம்.இக்கருத்து நிலை குறித்து இன்னும் விரிவாக உரையாட வேண்டிய தேவையுண்டு.

மேற்குறித்த தன்மையை நமது அக-புற மரபுகள்,திணை மரபுகள் ஆகியவற்றுக்குள் தேட வேண்டும்.இத்தன்மை குறித்து கெ.அய்யப்ப பணிக்கரின் பதிவை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

"திராவிட அழகியலின் அதிகாரபூர்வமான பதி வேடான பொருளதிகாரம் மனித வாழ்வை அதன் பின்னணியும் உந்து சக்தியுமான நிலவியற்கை யோடும் கால நிலைகளோடும் உறவுபடுத்திக் காணும் ஒரு முழுமையான தத்துவமாகும்."

........

தொல்காப்பியப் பொருளதிகாரம் திராவிட இலக்கியச் சிந்தனையின் பீஜ (நுண்மை/உயிர்மை) வடிவமாகும்.அதனை வளர்த்தெடுத்தால் ஒரு வேளை உலகிலேயே மிகத்தொன்மையான, விழுமியத் தன்மைகொண்ட ஒரு சூழிடவியல் அழகியல் கோட்பாட்டை நாம் பெறலாம்... ஒருவேளை உலகிலேயே வேறெந்த மொழிகளிலும் இது போன்ற தொரு சூழலியல் இலக்கியக் கொள்கை முற்காலத்திலேயே தோன்றவில்லை என்பதால் திராவிடத் திணைக்கோட்பாடு நம்மால் பயன் கொள்ள வேண்டிய ஒருகோட்பாடாகும்.(இந்திய இலக்கியக் கோட்பாடுகள்: சூழல் - பொருத்தம்:2012:120)

பணிக்கரின் இவ்வகையான மதிப்பீடுகளை,இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவின் வடிவமாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.இதிலிருந்து அவனது பகுத்தறிவு/ நாத்திக/பொருள்முதல்வாத சிந்தனை மரபுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தொடர்ச்சியை நாம் இழந் தோம். அதற்கான காரணங்கள் நாம் அறிந்த ஒன்றே.

தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் உருவான நாத்திக மரபைப் புரிந்துகொள்ள எங்கெல்ஸ் வரையறைசெய்யும் பின்வரும் செய்திகள் உதவலாம். (இயற்கையின் இயக்கவியல் - முன்னுரை)

"இயற்கை பற்றிய நவீன ஆராய்ச்சி மட்டும்தான், விளைவுகளைத் தராமல் பெரும்பகுதி மறைந்து போய்விட்ட அராபியர்களின் மிக மிக முக்கியமான,ஆனாலும் தனித்தனியான கண்டுபிடிப்பு களுக்கும் பண்டைப் பழங்காலத்தின் அற்புதமான இயற்கை தத்துவ உள்ளுணர்வுகளுக்கும் எதிர் மேலாக,ஒரு விஞ்ஞானபூர்வமான, முறையான, சர்வாம்ச வளர்ச்சியைச் சாதித்துள்ளது.பிரெஞ்சுக் காரர்கள் மறுமலர்ச்சிக் காலம் என்றும் இத்தாலி யர்கள் புத்துயிர்ப்புக் காலம் என்றும் அழைக் கின்றனர். எனினும் இந்தப் பெயர்களெல்லாம் பூரணமாக உணர்த்தப்படாத ஜெர்மானியர்களான நாம் சீரமைப்புக்காலம் என்றும் குறிப்பிடுகிற அந்த மகத்தான சகாப்தத்திலிருந்து,அந்தக் காலத்தில் நம் மீது வந்து விடிந்த தேசிய பெருந்துயரிலிருந்து தான்,எல்லாச் சமீபகாலச் சரித்திரங்களையும் போலவே இயற்கை பற்றிய நவீன ஆராய்ச்சியின் சரித்திரமும் தொடங்குகிறது.பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே மேலோங்கி வளர்ந்த சகாப்தமே இது...

"புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட கிரேக்கத் தத்துவத்தால் ஊட்ட முறப் பெற்றதுமான சுதந்திர சிந்தனையின் குதூகல உத்வேகம் மேலும் மேலும் வேரூன்றியது;பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல் வாதத்துக்கான பாதையைச் செப்பனிட்டு வகுத்தது...தொடர்ந்து ஏங்கெல்ஸ் இயற்கை விஞ்ஞானத்தின் மீது மனித இனம் நிகழ்த்திக் காட்டிய பல்வேறு செயல் பாடுகளை "இயற்கையின் இயக்கவியல்"என்னும் நூலில் விரிவாகப் பதிவு செய்கிறார்

ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் முதல் உருவான இயற்கை அறிவியலின் மீது மனிதன் வென்றெடுத்த புதிய புதிய கண்டுபிடிப்புகள் இலண்டன் போன்ற நகரங்களில் குறிப்பிடத்தக்க விளைவுகள் உருவாகப் பின்புலமாக அமைந்தன. பொருளாதாரப் பின்புலத்தில் உருவான மாற்றங்கள் ஒருபுறமிருக்க,பண்பாட்டுத் தளத்தில் பல்வேறு இயக்கங்கள் உருவாயின.இதில் கிறித்தவ மடாலயங்களுக்கு எதிரான இயக்கங்கள் வலுவாக உருப்பெற்றன.இந்தப் பின்புலத்தில் காலனிய ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தச் சூழலின் பண்பாட்டுச் செயல்பாடுகளைப் பின் கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

  •  காலனியத்தின் மூலம் கிடைத்த கல்வி மற்றும் புதிய நிர்வாக முறைகள், நமது கரடுதட்டிப் போன மத நடவடிக்கைகளிலிருந்து விடுதலை பெற உதவின.
  •  இந்தியர்கள், காலனியத்தின்  வழிவந்த கிறித்தவத்தை எதிர்கொள்ள, தம்மிடம் உள்ள மதங்களில் மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்தனர்.மதச் சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், சமரச சன்மார்க்கம் ஆகியவை உருவாயின.
  • ஆறுமுக நாவலர் போன்ற புலமையாளர்கள் தங்கள் மதத்திற்குள் காலனிய வளர்ச்சிகளை உள்வாங்கத் திட்டமிட்டனர்.விவேகானந்தரின் செயல்பாடுகளும் இவ்வகையில் அமைந்தவை.

காலனிய இந்தியச் சூழலில்,மதங்களுக்குள் செயல் புரியவே திட்டமிட்டனர்.மதங்களை மறுக்கும் இயக்கங்கள் உருவாகவில்லை.இந்நிலைக்கு மாற்றான இயக்கம் தமிழகச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் உருவானது. மதச் சீர்திருத்த இயக்கங்கள் அல்லது நவீன மத இயக்கமான பிரம்மஞான சங்கம் போன்றவற்றைக் கூட இம் மரபினர் மறுத்தனர்.பிரம்மஞான சங்கம் பற்றிய இம்மரபினர் கூற்று பின்வரும் வகையில் அமைகிறது.

"இப்பரத கண்டமாகிய நாடக சாலையில் சைவர் தங்கள் குழாங்களோடு ஒருபுறம் நடிக்கின்றனர். வைணவர் ஒருபுறம் குதிக்கின்றனர். விவிலியர் ஒருபுறம் ஆடுகின்றனர். இம்மூவர் கூத்தைக் கண்டு சுயாக்கியானிகள் ஒருபுறம் நகைக்கின்றனர்.இத்தகைய நடன மேடையாகிய இவ்விந்து தேசத்தில் தியாசபியாரும்,பிராமண குருமார்களால் ஏற்படுத்தப்பட்டு,மறைந்து கிடந்த பன்மதசாரமாகிய நாடகங் கட்டியாடத் தலைப்பட்டனர். இதனைப் புகழ்வோர் சிலர்,இகழ்வோர் சிலர்;இதில் வெறுப்புளோர் சிலர்,விருப்புளோர் சிலர்.இவ்விருட்குழாத்திற்கு வைரியாகிய சுயாக்கியான சூரியன் தோன்றி நாலு ஐந்து வருடங்களாகத் தனது கிரணங்களைப் பரப்பி,வேடதாரிகளின் வேடங்களைத் தனது மெய்ஞ்ஞான சோதியால் விளக்கிக் கொண்டு வருகிறான்.(சென்னை இலௌகிக சங்கம்: தொகுதி2:2:37)

இவ்வகையில்,மதம் சார்ந்த சொல்லாடல்கள் அனைத் தையும் மறுத்து தமிழ்ச் சூழலில் செயல்பட்ட நாத்திக இயக்கம் குறித்த பின்வரும் தகவல்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  •  ஐரோப்பிய புத்தொளிமரபு வழி உருவான "கிறித்துவ சமய எதிர்ப்பு" மரபில் உருவான சுயசிந்தனையாளர்களின் (Free thought Movement)நேரடி வாரிசாக தம்மை அறிவித்துக் கொண்டனர்.
  • தங்களது அடையாளமாக,புரூனோ வழிப் பட்ட அறிவியல் புரட்சியாளர்களின் செயல் பாடுகளைக் கருதினர்.இம்மரபில் டார்வின் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடித்தனர். தங்களின் கருத்துப் பரப்பலில் அறிவியல் செய்திகளைப் பரப்புவதை முதன்மையாகக் கொண்டனர்.
  • ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரையாடலுக்கு வந்த மால்தூசியன் கோட் பாடு மீது நம்பிக்கை வைத்தனர்.வறுமையைப் போக்க,இக்கோட்பாடு வழி செயல்பட வேண்டும் என்று கருதினர்.
  •  கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் இருப்பதாகத் தம்மால் கூற இயலவில்லை. கடவுள் என்ற பொருள் மீது சந்தேகம் கொண்டுள்ள,நம்பவியலாத"சங்கா நாஸ் திகர்கள்"என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.தங்களது சுயசிந்தனையில் இவ்வகையான கருத்துநிலை இருப்பதற்கான எவ்விதச் சூழலும் இல்லை என்பதாக அவர்கள் வாதம் அமைந்தது.
  • வருணாச்சிரம கோட்பாடு,குறிப்பாகப் பிராமணியக் கோட்பாடுதான் சாதியத்திற்கு மூலமாக அமைந்தது. உயிர்களின் தோற்றத்தை டார்வினியப் பின்புலத்தில் பார்க்காமல், சாதியப் பின்புலத்தில் அணுகுவதை இவர்கள் பெரிதும் எதிர்த்தனர்.
  •  பெண்கல்வி, விதவை மறுமணம், குழந்தை மணமறுப்பு ஆகியவற்றைத் தங்களின் கோட் பாடாகக் கொண்டு செயல்பட்டனர்.

 கடவுள் உண்டென்பவருக்கும் கடவுளின்ன தென்று அறியாதவருக்கும் உள்ள முக்கிய  பேத மென்னவெனில் அறியாதவும் அறியப்படாதவு மாகிய கடவுளைப் பற்றி முழுமையுமறிந்ததாக ஆத்திகர் கொள்ள,நாத்திகர்களோ ஜனங்கள் அறி யாமையால் கடவுளென்று பெயரிட்டழைக்கும் வஸ்து மனதிற்கு இன்னதென அவகாஸப்பட வில்லையென்று உண்மையாய் உரைப்பார்கள். ஏனெனில் கடவுள் ரூபத்திலும் புத்தியிலும் ஞானத்திலும் பூரணனென்கிற கொள்கையால், அபூரணராகிய மனிதன் அறிக்கரிதாய் அகண்ட மாய் நின்ற நிறைவைத் (கடவுளை)திரிகரணங் களாலும் அவகாஸப்படுத்தல் கூடாமை. ஆத்திகர் களால் கூறும் கடவுள் என்னும் சப்தம் சுவக்கி யானிகள் மனதிற்குத் தெளிவாயும் விவரமாயும் அழுத்தந் தரவில்லை...

மேலும் அவர்கள் தங்கள் மனதில் இன்னதென்று அவகாஸப்படாத ஒன்றை யில்லையென்று சொல்லுதல் கூடாமையாலும் அது உண்டென்றுரைக்கும் ஒருவனுக்கு அது இன்ன தென்று இவர்களுக்கு (சுயாக்கியானிகளுக்கு)விரித்துரைக்க அவர்கள் புத்திக்கே அபூரணமா யிருப்பதினாலும் கடவுள் இல்லவேயில்லை யென்று அஞ்ஞானிகளைப் போல ஒருக்காலும் சொல்லார் சுயாக்கியானிகள். நாத்திகம் என்னும் பதத்திற்குச் சுயாக்கியானிகள் கொண்ட அருத்தம் கடவுள் இன்னதென்று அறியாமை.(நாத்திகம் -ஆத்திகர் கொண்ட கடவுள் அல்லாமை) (சென்னை இலௌகிக சங்கம்:தொகுதி1:6:15)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலில் உருவான இந்நாத்திக மரபின் முக்கியத்துவத்தை எப்படி வரையறை செய்வது என்ற உரையாடல் அவசியமாகும். இயற்கை மரபு சார்ந்த தமிழ் நாத்திகமரபு என்பது,புத்தொளி மரபில் சந்தேக நாத்திக மரபாக உருவாகியுள்ளது.கடவுளைச் சந்தேகித்தவர்கள் தமிழ்ச் சூழலில் தான் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். வால்டேர், இங்கர்சால், தாமஸ்பெயின், பிராட்லா எனும் மனிதர்களின் கருத்து நிலைகளைத் தமிழ்ச்சூழலுக்கு உள் வாங்கியவர்களாக இவர்களைக் கருதமுடியும். காலனிய இந்தியப் பகுதியில் வேறெங்கும் இல்லாத சிந்தனை மரபாக இதனைக் கருதுதல் அவசியம். இம்மரபிலிருந்து இவர்கள் சாதி எதிர்ப்பு, வறுமை ஒழிப்பு எனும் கருத்துநிலைகளில் செயல்பட்டனர். இதனை அன்றைய சூழலில், வங்காளத்தைவிட அல்லது வங்காளத்தில் உருவான சீர்திருத்த மரபின் அடுத்தகட்ட மரபாக இதனைப் பதிவு செய்யமுடியும்.

இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாறுகள் அனைத்தும் வங்காளத்தை மையப்படுத்திய பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாறாகவே அமைந்திருப்பதைக் காண் கிறோம்.அங்குக் கடவுள் சிந்தனை மரபில் முற்றிலும் வேறுபட்ட மரபுகள் உருப்பெற்றதற்கான தரவுகள் இல்லை.சீர்திருத்த மரபுகளே உருப்பெற்றன.இவ்வகையான சிந்தனை மரபு பொருள்முதல்வாதச் சிந்தனை மரபை நோக்கிய முதல் அடி என்று கூறமுடியும்.இத் தன்மையைத் தமிழ்மரபில் பேசப்பட்ட நாத்திக மரபின் ஊடாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இம்மரபின் நேரடி விளைவாக,வளமாக 1925இல் உருவான பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.ஏனெனில் பெரியார் போல் செயல் பட்டவர்கள், இந்தியச் சூழலில் வேறு ஒருவரைக் கூற இயலாது.மதமறுப்பு என்பது தமிழ் நாத்திக மரபின் அடிப்படையாக அமைகிறது.பெரியார் தமது நாத்திக மரபாக வரையறை செய்வது பின்வருமாறு அமைகிறது. 1930களில் பெரியாரின் பதிவு இது.

"நான் சமதர்மத்திற்கு உழைக்கிறேன் என்றும் என்னைப் பலர் நாஸ்திகர் என்று சொல்லுகிறார்கள் என்றும்,நான் நாஸ்திகன் அல்ல வென்றும் எனக்காகப் பேசினார்கள். அப்படிப் பரிந்து பேசியதற்காக நான் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆயினும் என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள், நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகின்றார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகிறேன்.

நாஸ்திகத்துக்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்யமுடியாது. அதிலும் சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டு மானால் நாஸ்திகத்தினால்தான் முடியும்.நாஸ்திக மென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பௌத்தரையும் நாஸ்திகர் என்கின்றனர். அதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால்தான்.நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல...

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ,சமத்துவத்திற்கு இட மில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது.கிறிஸ்துவையும் மகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும் சீர்திருத்தமும்தான் காரணமாகும்...(குடியரசு-7.9.1930) சுயமரியாதை இயக்கம் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில்,சமதர்மத்தையும் நாத்திகத்தையும் ஏறக்குறைய ஒரே பொருளில் அணுகியிருப்பதைக் காணமுடிகிறது. ஐரோப்பியப் புத்தொளி மரபில் செயல்பட்ட நாத்திக மரபுகள் குறித்தும் பேசிவந்துள்ளார்.

"லண்டன் பட்டணத்தில் சில ஸ்தாபனங்கள், அதாவது தாராள நினைப்புக்காரர்கள் சங்கம் என்றும் அறிவாளிகள் சங்கம் என்றும் உண்மை நாடுவோர் சங்கம் என்றும் பல சங்கங்கள் ஏற்படுத்தி...பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன.(குடியரசு.28.9.30) என்று பெரியார் குறிப்பிடுவதில் உள்ள "தாராள நினைப்புக்காரர்கள் சங்கம்"என்பது Free thought Societyயை ஆகும்.இவர்கள்தான் சென்னை இலௌகிக சங்கத்தினர் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என்பதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

சமதர்மமும் நாத்திக மரபாகத் தொடங்கிய பெரியார் பின்னர் இந்துமத ஒழிப்பிற்கு அடிப்படையாக கடவுள் ஒழிப்பும் அதனையட்டிய நாத்திக மரபுக் கருத்துகளை தமது கிளர்ச்சிகள் வழி தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார். ஒருவகையில் சென்னை இலௌகிக சங்கத்தினர் நாத்திகம் என்று வரையறைப் படுத்திய முறையில் பெரியாரும் நாத்திகம் என்பதை வரையறை செய்துள்ளார்.

"மக்களுக்கு ஆத்திகம் -நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதே இல்லை.நாத்திகன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் அல்ல;நான் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் அல்ல;இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை...நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை என்பவன் என்று பொருள் இல்லை.புராண இதிகாச வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே-அவற்றைப் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே -பார்ப்பனர்கள் நாத்திகர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். (விடுதலை.26.9.1956) "ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர் லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனு பவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்" என்பது பெரியாரின் நாத்திகக் கட்டளை ஆகும்.

பெரியாரின் இந்நாத்திக முழக்கங்களை சென்னை இலௌகிக சங்கத்தினரும் கொண்டுவந்தனர். பார்ப் பனியம் குறித்த விரிவான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

பெரியார் 1925-1973முடிய சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்து மதத்திற்கு எதிராக நடத்திய கருத்துப் போரின் ஒரு முக்கியமான பகுதியாகவே நாத்திகம் இருந்தது.இந்து மதத்திற்கு அடிப்படையாக இருப்பவை குறித்த விமர்சனமே பெரியாரின் நாத்திகம்.நடைமுறை செயல்பாடுகளுக்கான ஒரு வழிமுறையாக முன்னெடுத்தார்.அதற்கான கிளர்ச்சிகளை முன்னெடுத்தார்.அவரது கிளர்ச்சிகள் இந்துமத அடையாளத்தை அழிப்பதே.இராமாயண எதிர்ப்புக் கிளர்ச்சிகள் இவ்வகையில் அமைந்ததே.

பெரியார் சமதர்மக் கருத்துநிலைகளைப் பிரசாரம் செய்துகொண்டிருந்த காலங்களில், பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் நாத்திகம் குறித்து ம.சிங்காரவேலர் மிக விரிவாகவே எழுதிவந்தார்.1930களில் ம.சிங்கார வேலர், பெரியார், குத்தூசி குருசாமி, ஜீவா ஆகிய அனை வரும் தமிழ்ச்சூழலில் நாத்திகக் கருத்துப் பரப்பலில் தீவிர மாக ஈடுபட்டவர்கள். சிங்காரவேலர் மிக விரிவாகவே நாத்திகமரபுகள் குறித்து எழுதியிருக்கிறார். வளர்ந்து வந்த அறிவியல்கருத்து மரபுகளை அடிப்படையாகக் கொண்டு நாத்திகம் பேசியவர் சிங்காரவேலர்.அவரது எழுத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவில் நாத்திக உரையாடல் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

இவ்வகையில் 1925தொடக்கம் தமிழ்ச்சூழலில் சுயமரியாதை இயக்கமும் இடதுசாரி இயக்கமும் முன்னெடுத்த நாத்திகக் கருத்துமரபு 1950களில் எவ்வகையில் புதிய முகத்தைப் பெறுகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.1934இல் "சென்னை மாகாண நாஸ்திகர் சங்கம்" என்ற அமைப்பின் செயலாளராக ஜீவா செயல்பட்டார். "சமதர்மம்" இதழில் நாத்திகத்தின் மூலாதாரக் கோட்பாடுகள் குறித்து எழுதினார்.இவ்வமைப்பில் சேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அவர் 1954இல் கூறும் செய்திகள் பின்வருமாறு:

பகுத்தறிவுப் பாசறை என்று தன்னைத்தானே பெருமை முழக்கம் செய்துகொள்ளும் திமுகவோ சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் தனது ஆரம்ப பத்தாண்டு வளர்ச்சியின் உருவாக்கமாக மலர்ந்து 1933-34இல் தோன்றிய பகிரங்க நாத்திக இயக்கத்தின் அடிப்படைக் கருத்துகளைக் கூட ஏற்றுக்கொள்ளத் தொடை நடுங்கி பின்னடித் திருக்கிறது.அன்று சிங்காரவேலர் தலைமையில் பகிரங்க நாத்திக இயக்கம் (மார்க்ஸியப் பார்வையில் குறைபாட்டையுடையதாயினும்)நடந்த காலத்தில் அண்ணாதுரை அந்த முகாமின் அருகாமையில்கூட நடமாடினதில்லை. ஈ.வெ.ரா. 1935 ஆரம்பத்திலேயே "சுயமரியாதை இயக்கம்"அவமரியாதை இயக்கமாகிவிட்டது என்று சிங்காரவேலரின் பழிப்புக்கு இரையாகிவிட்டார். (ஜனசக்தி.14.11.1954)

மேலும் திமுக குறித்து ஜீவாவின் கூற்று

"ஒருவனே தேவன் - ஆம் அவனுக்கு உருவ மில்லை. பெண்டு பிள்ளை கிடையாது. அவன் அன்புமயம், அறிவுமயம் என்பது மதத்தை ஒழிக்காது; வளர்க்கும். மார்க்சியம் இந்த 'மத எதிர்ப்பு அறிவியக்கத்தை' கடுமையாக எதிர்க்கிறது. பழைய சுயமரியாதை இயக்கத்திற்குக்கூட திமுகவின் இந்த அறிவியக்கம் எதிரிடையானது." (ஜனசக்தி - 1954)

ஜீவா,இவ்விதம் கூறிய காலங்களில்,திமுக தரப்பில்,கம்யூனிஸ்டுகளின் திட்டத்தில் பகிரங்க மத எதிர்ப்பு இடம்பெறவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்னெடுக்கபபட்டது. இதற்கு ஜீவாவின் பதில் பின்வருமாறு அமைகிறது:

“பலப்பல உருவங்களில் தோன்றும் சமுதாயப் பணிகளில், பாட்டாளி மக்களில் பெருவாரியானவர்களை இழுத்து,உணர்வுபூர்வமாகவும் புரட்சி கரமாகவும் மேன்மேலும் வர்க்கப்போராட்டத்தால்மாத்திரமே,மதநுகத்தடியிலிருந்து,அடிமைப்பட்ட மக்களை விடுதலை செய்ய முடியும் என்றும் எடுத்துக் காட்டினார்.இதனால் மதத்தின் மீது யுத்தப் பிரகடனம் செய்வது கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் கடமை என்பது வெறும் அராஜகவாதச்சொல்லடுக்கேயன்றி வேறொன்று மன்று என்று ஏங்கல்ஸ் பிளாக்குஸ்களைக் குற்றஞ்சாட்டினார்.” (ஜனசக்தி.21.11.1954)

இதன்மூலம் மதம் குறித்த கம்யூனிஸ்டுக் கட்சியின் நடை முறைத் தந்திரம் சார்ந்து ஜீவா வரையறை செய்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் சென்னை இலௌகிக  சங்க நாத்திக நடைமுறையிலிருந்தும்  சுய மரியாதை இயக்கம்,இடதுசாரி இயக்கங்கள் 1930களில் முன்னெடுத்த நாத்திக மரபு குறித்த அணுகுமுறை களிலிருந்தும் 1950களில் மாற்றங்கள் உருவாகிவிட்டன.பெரியார் ஒருவர் மட்டுமே தமது இறுதிக்காலம் வரை தொடர்ச்சியாக நாத்திகப் பிரசாரத்தில் சமரசம்  இன்றி இருந்திருக்கிறார்.திமுகவின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடாக உருப்பெற்றுவிட்டது.இடதுசாரிகளின் அணுகுமுறையும் நேரடியான நாத்திகப் பிரச்சாரம் மற்றும் மத எதிர்ப்பு நடவடிக்கைகளில் நடைமுறைத் தந்திரங்களும் மாறிவிட்டன. இன்று பெரியார் இல்லை. நாத்திகக் கருத்துப் பிரசாரங்கள்  சிறு அமைப்புகளால் செய்யப்படுகின்றன. வெகுசனக் கட்சிகளில் அத்தன்மை முழுதுமாக இல்லை. ஆனால் புறவெளியின் எதார்த்தம் என்பது பின்வரும் வகையில் அமைந்துள்ளது.

  •  மதமே அரசியல் இயக்கத்தின் அடிப் படைக் கருதுகோளாக உருப்பெற்ற வெகுசனக் கட்சிகள் செயல்படுகின்றன.பெரியார் காலத்தில் இப்படியான வெகுசனக் கட்சிகள் மத அடையாளக் கட்சிகளாகச் செயல்பட்டதாகக் கருத முடியாது.மதம் என்பது கடவுள் பிரசாரம். கடவுள் பிரசாரத்திற்கு மாற்று நாத்திகப் பிரசாரமாகத்தான் அமைய முடியும்.
  •  வருணாசிரம மரபின் நவீன வடிவமாக சாதியத்தை அடிப்படையாகக் கொண்ட வெகுசனக்கட்சிகள் இந்திய அரசியலில் உருப்பெற்றுள்ளன.

வெகுசன தளத்தில் செயல்படுவதற்கான அடையாளங்களாக மதமும் சாதியும் பகிரங்கமாக முன்னிறுத்தப் படுகின்றன.நாத்திக மரபுதான் இவ்விருசக்திகளுக்கும் எதிரான போரை நிகழ்த்தியது என்பது வரலாறு.இவ்விரு சக்திகளுக்கு எதிரான போரில் நாத்திகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யமுடியும்.ஏனெனில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு, மதமறுப்பு, சாதிய மறுப்பு என்னும் கருத்தாக்கங்களின் நீட்சியாக அமைகிறது.

இன்றைய புறவெளியில் இத்தன்மைகளை அடையாளப்படுத்தும் அரசியல் இயக்கம் எது? தவிர்க்க முடியாமல் இடதுசாரிகளால் நடத்தப்படும் இயக்கங்களாகவே இருக்க வேண்டும். திராவிட இயக்கம் என்று பெரியாரை அடையாளப் படுத்தி உருவான நாத்திக மரபு, மதம் மற்றும் சாதி முன்னெடுக்கப்படும் சூழலில் முக்கியத்துவம் பெறுவதாகக் கருதமுடியும். தமிழ் நாத்திக மரபு என்பது அடிப்படையில் நடைமுறை நாத்திகச் செயல்பாடுகளே என்று வரலாற்றில் அறிகிறோம்.

இவ்வகையான மரபின் செழுமை சென்னை இலௌகிக சங்கம், சுயமரியாதை இயக்கம் மற்றும் இடதுசாரிகள் வழியே உருவானது. அப்படியான மரபுகள் இன்று புதிய வடிவில் உருப் பெறும் தேவையை மத,மற்றும் சாதிய அமைப்புகளின் செயல்பாடுகள் மூலம் உணர்கிறோம்.

(குறிப்பு: 30.3.2013 அன்று, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தஞ்சாவூரில் நடத்திய திராவிட இயக்கம்:ஒரு மீள்பார்வை என்னும் கருத்தரங்கில் பேசிய பேச்சின் எழுத்துவடிவம்)


பார்வை நூல்கள்

1. அரசு.வீ., (பதிப்பு) சென்னை இலௌகிக சங்கம் ஆறு தொகுதிகள், நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2012

2. ஆனைமுத்து.வே., (பதிப்பு), பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், மூன்று தொகுதிகள், சிந்தனையாளர் கழகம், திருச்சி 1974

3. கவுதமன், பசு(தொகுப்பு), ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான், இரண்டு தொகுதிகள், பாரதி புத்தகாலயம், சென்னை, 2009

4. ரகுநாதன், தொ.மு.சி., (மொழியாக்கம்), கார்ல்மார்க்சும் பிரடெரிக் எங்கெல்சும் - மதத்தைப் பற்றி - 1963, என்.சி.பி.எச்., சென்னை

5. ஜான் பெல்லமி ஃபாஸ்டர், மார்க்சும் சூழலியலும் - பொருள்முதல்வாதமும், இயற்கையும், (மொழியாக்கம்:மு.வசந்தகுமார்), விடியல் பதிப்பகம், கோவை, 2012

6. Chattopadhyaya Debiprasad - Indian Atheism- People Publishing House, New Delhi - 1969

Pin It