தோழர் ஆர்என்கே என்று இயக்கத் தோழர்களாலும், ஐயா நல்லகண்ணு என்று மக்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்படும் தோழர் ஆர். நல்லகண்ணு பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். அவரது மரணம் தமிழ் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப் படிப்புக் காலகட்டத்திலேயே உள்ளூரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் வ.உ.சி., முத்துரங்க முதலியார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், திரிகூடசுந்தரம்பிள்ளை, ந.சோமயாஜுலு ஆகிய விடுதலைப் போரட்ட முன்னணித் தலைவர்களின் வீரவுரைகளைக் கேட்டு அரசியல் உணர்வுடன் வளரும் வாய்ப்பைப் பெற்றிருந்தவர். அவ்வுரைகள் இளம் ஆர்என்கேவின் உள்ளத்தில் தேசபக்த உணர்ச்சியை விதைத்தன.
பள்ளி மாணவனாக இருந்த காலகட்டத்தில் அப்பள்ளியின் இந்தி ஆசிரியர் சு.பலவேசம் செட்டியார் கம்யூனிஸ்ட் கொள்கைகளை மாணவர் நல்லகண்ணுக்கு வலுவாக அறிமுகம் செய்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்து, திருநெல்வேலி இந்து கல்லூரியில் இண்டர் மீடியட் படித்துள்ளார். அதன் பின்னர், அதே கல்லூரியில் பட்ட வகுப்பில் சேர்ந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்துவந்த, பிற்காலத்தில் ‘சாகித்திய அகாதெமி’ விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞரும் இலக்கிய ஆய்வாளருமான தொ.மு.சி. ரகுநாதன் அவர்களுடன் அணுக்கமான தொடர்பு ஆர்என்கேவுக்கு ஏற்பட்டது. மாணவராக இருந்தகாலத்தில் தான் அவர் வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’, ‘சோவியத் ரஷ்யா’ உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நூல்களைக் கற்கலானார். இத்தகைய நூல்களைப் படிப்பதற்கும் அவரது பள்ளி ஆசிரியரே காரணமாக இருந்துள்ளார். கல்லூரிக் காலத்தில் மாலை ஊர் திரும்பிய பின்னரும் விடுமுறைக் காலங்களிலும் உள்ளூரில் தனது அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார், ஆர்என்கே.
விவசாயிகளின் – விவசாயத் தொழிலாளர்களின் விடிவெள்ளியாக விளங்கிய பி.சீனிவாசராவ் அவர்களுடன் இணைந்து கிராமப்புறப் பாட்டாளிகளின் உரிமைகளுக்காகப் போராடிய – இயக்கம் கண்ட அனுபவம் ஆர்என்கே அவர்களுக்கு அவரது இளம் வயதிலிருந்தே இருந்துள்ளது. கறார் தன்மைக்கும் கட்டுக் கோப்புக்கும் பெயர்பெற்ற பி.சீனிவாசராவ் அவர்களே ஆர்என்கே அவர்களின் இளமைக்கால இயக்கப் பணிகளைப் பாராட்டி, கட்சித் தலைமைக்கு 1947இல் எழுதிய சிறுகடிதம் ஆர்என்கே அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தொடக்ககால அரசியல் தொண்டைப் பறைசாற்றுகிறது.
1944இல் ஸ்ரீவைகுண்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவராகவும், பின்னர் கிளைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுள்ளார் ஆர்என்கே.
1945இல் மதுரையில் நடைபெற்ற ஏஐடியுசி தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்க இருபது வயது இளைஞராக தனது ஊரிலிருந்து சென்றிருந்த ஆர்என்கேவுக்கு அங்கு ஜீவாவால் நிகழ்த்தப்பட்ட அனல்பறக்கும் அற்புத உரை அவருக்குள் எழுச்சியை உருவாக்கியுள்ளது.
மகாகவி பாரதியின் கவிதைகளில் இளமைக்காலம் முதலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் ஆர்என்கே. பாரதீய ஆவேசத்திற்கு ஆட்பட்டிருந்தவர். பாரதீயப் பரவசம் அவருக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
1947இல் தனது இருபத்தி இரண்டாவது வயதில் எட்டயபுரத்தில் பாரதி மணிமண்படம் கட்ட கல்கி எடுத்த முன்முயற்சிக்குத் தோள்கொடுக்கும் விதத்தில் மக்களிடம் ரூ700 வசூல் செய்து கொடுத்ததன் மூலம் சிறப்புப் பிரதிநிதியாக மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டவர் ஆர்என்கே.
1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. தலைமறைவாக இருந்து கொண்டே இயக்கவேலை செய்து வந்த ஆர்என்கே ஒரு கட்டத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக கிளைச் சிறை, கிளைச் சிறையாக அலைக்கழிக்கப்பட்டார். காவல்துறையினரின் கொடும் சித்ரவதைக்கு ஆளானார். அப்போதுதான் அவரது சகதோழர்களின் புகலிடத்தை அறிந்து கொள்ளும் வெறியில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆர்என்கேவின் மீசையைத் தனது சிகரெட் நெருப்பைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கி தோழர்களைக் காட்டிக் கொடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆர்என்கேவின் மீசைதான் பொசுங்கியதே தவிர, போலீசாரின் ஆசை நிறைவேறவில்லை.
ஆயுள் தண்டனையைத் தீர்ப்பாகப் பெற்ற ஆர்என்கே எட்டாண்டு காலசிறைவாசத்திற்குப் பிறகு 1956இல் விடுதலையானார். விடுதலையான பின்புதான் அவருக்குத் திருமணமாயிற்று.
இளவயதிலிருந்து இடைவிடாத புத்தக வாசிப்பிற்கு வசப்பட்டிருந்தவர் ஆர்என்கே. சிறையிலிருந்த போது சிறைக்குள்ளேயே கட்சித் தோழர்களால் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட புரட்சிகர நூல்களைக் கொண்டு ஒரு நூலகத்தை உருவாக்கினர், கைதிகளாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள். அந்நூலகத்திற்கும் ஆர்என்கே அவர்களைத்தான் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுத்தனர்.
தனது இல்லத்தில் ஒரு நூலகத்தையே உருவாக்கி வைத்திருந்தார் ஆர்என்கே. தமிழ் மட்டுமல்லாது, ஆங்கில நூல்களையும் வாசிப்பார்.
தனது வீட்டு நூலகத்தைப் பொன்னேபோல் போற்றிப் பாதுகாத்து வந்தார்.
‘நிலப்பறிப்பு நடத்தியது யார்?’, ‘கங்கை - காவேரி இணைப்பு’, ‘தமிழ்நாட்டின் வறட்சியைப் போக்கும் வழி’, ‘தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு’, ‘விடுதலைப் போரின் விடிவெள்ளிகள்’, ‘தூக்கு மேடையில் தோழர் பாலு’, ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்’, ‘தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்’, ‘மொழிவழி மாநிலம்’, ‘சமுதாய நீரோட்டம்’ ஆகியவை ஆர்என்கே எழுதிய நூல்கள்’ இவற்றோடு பல சிறு வெளியீடுகளையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
தொழிலாளர்கள், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய ஆர்என்கே தீண்டாமை ஒழிப்பு, சாதிய ஒழிப்பு, சமூக நீதி உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் ஓயாமல் களம் கண்டவர். அன்பும் அடக்கமும் அவரது அணிகலன்களாக விளங்கிய போதும், அறச்சீற்றமும் போர்க்குணமும் அவருக்குள்ளே கடைசிவரை கனன்று கொண்டே இருந்தன.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் என்ற பொறுப்பை மறைவதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புவரை வகித்துவந்தவர் ஆர்என்கே.
நூறாண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்துள்ள தோழர் ஆர்என்கே அவர்களின் அர்த்தமுள்ள பொது வாழ்வும், அவரது அன்பும் – அறம் சார்ந்த அணுகுமுறையும் மாநிலம் முழுவதும் பரவி விரவியிருந்ததை அவரது மரணத்திற்குப் பின்னர் ஆயிரம் ஆயிரமாக அஞ்சலி செலுத்தத் திரண்டு வந்த மக்கள் கூட்டம் பறைசாற்றியுள்ளது.
மக்களின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்ற அரசியல் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு ‘உங்கள் நூலகம்’ வீரவணக்கத்தைத் தனது கனத்த உணர்வோடு வெளிப்படுத்துகிறது.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு