doctor jeeva1என்னை ஓட ஓட விரட்டி சிந்தித்து களத்தில் செயல்பட வைத்தவருள் மருத்துவர் ஜீவாவும் ஒருவர்.

என்னைப் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியே எடுத்து களத்தில் செயல்பட வைக்க பல களச் செயல்பாட்டு ஆளுமைகளை என் துறைக்கு அழைத்து வந்து என்னுடன் உரையாட வைத்து செயல்பட்டவர் மருத்துவர் ஜீவா அவர்கள்.

என்னை இரவு 9.00 மணிக்கு மேல் தொடர்பு கொண்டு எனக்குக் களத்தில் வேலைத்திட்டத்தை தீட்டித் தந்து கொண்டே இருந்தவர்கள் இருவர்.

ஒருவர் ஏ.கே.வெங்கடசுப்ரமணியன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, அடுத்து மருத்துவர் ஜீவா. இருவரும் காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள். இருவரும் என் பணிக்கு உறுதுணையாய் இருந்தவர்கள்.

மருத்துவர் ஜீவா சமுதாய நோய்க்கு மருத்து கண்டுபிடிக்கும் சமுதாய மருத்துவராக அறியப்பட்டவர்.

காந்திகிராம பல்கலைக்கழகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டு காந்திகிராம பல்கலைக் கழகத்திற்காக சிந்தித்த மாமனிதர். காந்திகிராமத்தில் பணி செய்வோர் கூட அப்படிச் சிந்தித்தது இல்லை.

அந்த அளவுக்கு காந்திகிராமத்தின் மீது எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டு ஏங்கி நின்றவர். அவர் என்னுடன் களப்பணிக்கு சிந்திக்கும் ஒரு சகாவாக இருந்தார் என்றுதான் கூறவேண்டும்.

அவர் எப்போதும் தேடுதலுடன் வாழ்ந்து கொண்டிருப்பார். ஒன்று மனிதர்களைத் தேடுவார், அல்லது நிறுவனங்களைத் தேடுவார், அல்லது புது யுக்திகளைத் தேடுவார். தேடிக் கண்டுபிடித்து அவரவர்க்குத் தகுந்த பணியைக் கொடுப்பார்.

நிறுவனங்களுக்கும் புதுமைகளுடன் செயல்படத் தேவையான யுக்திகளைக் கண்டுபிடித்துத் தருவார். புத்தகமானால் படித்துவிட்டு நம்மைப் படிக்க வைத்து விமர்சனத்திற்கு இறக்கிவிடுவார்.

ஆங்கிலப் புத்தகமாக இருந்தால் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்தால் உடனே மொழி பெயர்ப்பு செய்து விடுவார். மொழி பெயர்த்த உடனே அச்சுக்குச் செல்ல வேண்டும் எனத் துடிப்பார்.

அந்த அளவுக்கு செயல்பாட்டில் வேகம் அவரிடம் பார்க்க முடியும். எவரிடமும் இல்லாத புதுவித ஓட்டமாகச் செயல்படுவார். அவர் மிக எளிமையாக காந்தியையும் மார்க்ஸையும் இணைத்துப் பார்க்கக் கூடியவர்.

நல்ல சிந்தனைக்கு உடனே செயல் திட்டம் தீட்டி செயல்பாட்டுக்கு களம் வந்து விடுவார். அவரின் தூண்டுதலால் பலரை இயங்க வைத்து சாதனைகள் பல செய்துள்ளார்.

என்னைப் போன்றோரின் மனச்சாட்சியைக் கலங்கடித்து அவர் நினைத்ததை நடத்திக் காட்டி விடுவார். அவர் தன்னைப் பலருடன் இணைத்துக் கொள்வது நேரத்தைப் போக்க அல்ல. அவர் சதா சமூக மூலதனத்தின் மாண்பறிந்து அதைக் கட்டிக் கொண்டேயிருப்பார். அதுதான் அவர் சேர்த்த சொத்து.

அவர் ஊர்சுற்றத் தயங்குவதில்லை. அந்தப் பயணங்கள் என்பது கற்றுக்கொள்வதற்காக. கற்றதை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தது கிடையாது.

கற்றுக் கொள்வதில் எப்போதும் ஆர்வம் மிக்கவர் அவர். அதைவிட கற்றதை நடைமுறைப்படுத்த முயல்வதிலும் அவர் வல்லவர். எதையும் துரிதமாக செயல்படுத்தும் வல்லமை பெற்றவர்.

காரணம் வியாபார யுக்தி அவருக்குக் கைவந்த கலையாக இருந்ததால். இந்த உலகம் வேகமாக இயங்குகிறது, எனவே அந்த வேகத்துக்கு நாம் செயல்படவில்லை என்றால் தோற்றுவிடுவோம் என்று அடிக்கடி கூறுவார்.

பழமையைத் தேடித் தேடிப் பிடித்து படித்து அவைகளில் உள்ள சாரத்தை எடுத்து நவீனப்படுத்திக் கொடுப்பதில் அவருக்கு ஈடு இணை கிடையாது.

காந்திகிராமத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டு காந்திகிராமம் காந்தியத்தை நவீனப்படுத்தி களத்தில் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்.

நவீனத்துவ காந்தியவாதிகளை களத்தில் அடையாளம் கண்டு அவர்களைக் குழுவாக மாற்றி செயல்பட வைத்தவர். அவர்களுக்குத் தேவையான ஆதரவுச் சூழலை உருவாக்குவதிலும், அவர்களின் தொடர்பை விரிவாக்கிக் கொடுப்பதற்கும் கடைசிவரை தொடர்ந்து பயணித்தவர்.

எப்படி அரவிந்த் கண் மருத்துவமனை சேவை வணிகம் என்ற கருத்தாக்கத்தை நடைமுறைப்படுத்தியதோ அதேபோல் நவீனக் கூட்டுறவுச் செயல்பாடுகளுக்கு தான் உருவாக்கிய மருத்துவமனை மூலம் ஒரு புதுக் கருத்தாடலை செயல்பாடுகளுக்குக் கொண்டு வந்தவர். எதையும் நடைமுறைச் சாத்தியத்தின் பின்புலத்தில் அலசிப்பார்த்து கருத்துக் கூறுபவர்.

இயற்கை மானுட உறவின் உன்னதங்களை முப்பது ஆண்டுகளுக்கு முன் புரிந்து கொண்டு பசுமை அரசியல் பேசியவர். பல நேரங்களில் அவர் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார்.

ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று அதில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியைச் சுவைத்தவர் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

அவருடைய இரவு நேர உரையாடல்கள், சாதனை மனிதர்களைச் சந்தித்த அனுபவங்களைப் பகிர்தல் அவரிடம் நான் கண்டு வியந்த செயல்பாடு. அதற்கென்றே ஒரு முறைமை உருவாக்கி வைத்திருப்பார்.

பல அரிய புத்தகங்களைத் தருவித்து மதுரைக்குச் செல்லும்போது என்னிடம் தந்து விட்டுச் செல்வார். அதைப் படித்துப் பார்க்கும்போது, அந்தப் புத்தகங்களிலுள்ள கருத்துக்கள் பஞ்சாயத்துச் செயல்பாடுகளுக்கு எவ்வளவு பொருத்தப்பாடு உடையவையாக இருந்தன என்பதை அவரிடம் நான் கூறும்போது, அவைகளை அப்படியே தமிழில் எழுதுங்கள் என்று வற்புறுத்துவார்.

அப்படி நான் எழுதிய கட்டுரைகள் ஏராளம். அவருடன் நீண்ட பயணம் செய்வது ஒரு தனி அனுபவம். அந்த பயண நேரம் மிகப் பொருளுள்ளதாக மாறிவிடும். எந்தச் சிறுமைப் பேச்சும் இன்றி நாடும், மக்களும் இயற்கையும் என்ற கோணத்திலேயே விவாதங்களைக் கொண்டு செல்வது மிகவும் மனதுக்கு இதமாகவே இருக்கும்.

பல அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும்போது கோபமாகப் பேசுவார். பல உன்னதமான நிறுவனங்கள் தோற்றுப்போவதைப் பார்த்து ரௌத்திரம் கொண்டு என்னுடன் உரையாடி விட்டுச் சொல்வார், “பரவாயில்லை உங்களால் மிக எளிதாக இந்த நிகழ்வுகளை கடக்க முடிகிறது என்னால் கடக்க முடியவில்லை. உங்களை நான் தொந்தரவு செய்து விட்டேன்” என்பார்.

அரிய புத்தகங்களை மொழி பெயர்ப்பார். உடனே அதற்கு முன்னுரை எழுதத் தகுதி வாய்ந்த மனிதரைத் தேடுவார். ஒரு முறை அவர் என்னை அப்படி ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதக் கேட்டுக் கொண்டார்.

அப்பொழுது நான் “வேறு யாராவது பெரிய மனிதர்களைத் தேடுங்கள்” என்றேன். அப்பொழுது கூறினார், நான் முன்னுரை எழுதுவதற்கு ஆள் தேடுவது எதற்கு என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

நான் சமூகவியலில் பெரிய நிபுணர் அல்ல. கட்டுரைகள் எழுதுகின்றேன் பல துறைகளில். ஆனால் எனக்குப் புரிகிற அளவுக்கு புத்தகங்களை மொழி பெயர்த்து தருகிறேன்.

அந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்கள் பொதுமக்களிடம் சேர வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதுகின்றேன். ஆனால் அவைகள் சமூகத்திற்கு பயன்படும் என்பது மட்டும் புரிகிறது. எனவே அவசரமாக மொழி பெயர்ப்பைச் செய்து விட்டேன். ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது.

அந்த புத்தகத்தின் கருத்தாழங்கள் சிதைவுறாமல், மாறாமல் என் மொழி பெயர்ப்பில் நான் கொண்டு வந்து விட்டேனா என்பதை, நிபுணர்களிடம் முன்னுரை வாங்கும்போது கண்டுபிடித்து விடுவேன்”, என்று கூறினார்.

அதன்பின் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தாமஸ் பெயின் எழுதிய பொது அறிவு’ என்ற நூலின் மொழி பெயர்ப்புக்கு நான் ஒரு முன்னுரை எழுதினேன். அப்பொழுதுதான் நான் ஒன்றை ஜீவாவைப் பற்றி புரிந்து கொண்டேன்.

அவர் எதையும் கருத்துக்காக மட்டுமே செய்வதில்லை. மாறாக, இன்றைய சூழலுக்கு அந்தக் கருத்தாக்கம் எதாவது ஒரு வகையில் உதவிடுமா என்ற கோணத்தில் பார்த்துத்தான் செய்வார் என்று நான் அப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.

தாமஸ் பெயின் எழுதிய சிறிய புத்தகம் எனது முதுகலைப் பட்டப்படிப்பில் பாடமாக இருந்தது. மதிப்பெண் வாங்க அதைப் படித்துள்ளேன். அதை இன்று படிக்கும்போது, அதுவும் என் தாய்மொழியில் படிக்கும்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நம் அரசியலுக்கு தாமஸ் பெயின் கூறியது எவ்வளவு பொருத்தப்பாடுடன் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருந்தது.

காந்தியைப் பற்றி லூயி பிஷர் எழுதும்போது கூறுவான் “நான் காந்தியிடம் வியந்து கண்டது பல அவைகளில் ஒன்று சமத்துவப் பார்வை” என்று. அதேபோல் மருத்துவர் ஜீவாவின் சமத்துவப் பார்வை என்னை வியக்க வைத்தது.

அந்தப் பார்வையை நம்மில் வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல, அதை வளர்த்துக் கொண்டு செயல்படுவதில் வல்லவர் அவரே. கடந்த ஆண்டு 2020 டிசம்பர் கடைசி நான் இரவு முழுவதும் காணொளிக் காட்சி மூலம் ஒரு கருத்தாய்வுக் கூட்டத்திற்கு சில நவீன காந்திய அன்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இரவு முழுவதும் அந்த நிகழ்வு நடந்தது. அவருக்கு இரவு ஒன்பது மணி ஒதுக்கப்பட்டிருந்தது.

எனக்கு இரவு ஒரு மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது பேசுவதற்கு. அதில் பங்கேற்றுப் பேசும்போது நம் அரசு மக்களை எப்படி மேய்க்க நினைக்கிறது, சந்தை எப்படி மயக்க நினைக்கிறது, சமூகம் எப்படி பிளவுபட்டு கிடக்கிறது, இதில் யாருக்காக இந்த மக்களாட்சி நடைபெறுகிறது என்பதை ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் நம்பிக்கை தளராமல் ஒரு செய்தியைச் சொன்னார். இன்றைய மயங்கிய இளைஞர் கூட்டத்திற்குள் ஒரு சாரர் நம்பிக்கையுடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருப்பது, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது, இயற்கை வளப் பாதுகாப்பிற்குச் செயல்படுவது, விதைகளைப் பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்வது பெரு நம்பிக்கையைக் கொடுக்கிறது என்று கூறி முடித்தார்.

அவரிடம் நான் கண்டு வியந்த மற்றொரு செயல், தெரியாததைத் தெரியவில்லை, எனக்குப் புரியவில்லை என்று குழந்தைகள் கூறுவது போல கூறுவார். அந்த மனோபாவம் என்பது கற்றுக்கொள்ளத் துடிப்பதாகும்.

எதையும் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தயாராக இருப்பதுடன் துடிப்புடன் செயல்பட தயாராக இருப்பதைக் காணமுடியும்.

ஆனால் கடைசி நேர பல சந்திப்புக்களில் சலிப்பாகவும் இடதுசாரிகள் தேய்வதைக் கண்டு மனம் வருந்தியும், தன்னைப் புதுப்பிக்க காங்கிரஸ் கட்சியும் முனையவில்லை, இடதுசாரிகளும் முனையவில்லை, காந்திய இயக்கங்களும் முனையவில்லை என்ற ஆதங்கத்தில் விவாதங்களை முன் வைத்துக் கொண்டே இருந்தார்.

அடுத்து கூட்டுறவு அடிப்படையில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்று மதுரைக்கு அருகாமையில் அமைக்க முயன்றார். அந்தப் பணிக்கான முயற்சிகள் அனைத்தும் தொய்வு பெற்ற நிலையில் அந்தப் பணியை முடுக்கிவிட ஓய்வு பெற்ற நீதியரசர் சிவராஜ் பாட்டீல் அவர்களின் இல்லத்தில் விவாதித்து முடிவெடுத்து நடைமுறைப்படுத்த ஆயத்தமானோம். அந்தப் பணிதான் அவர் கனவில் உதித்த ஒரு நிறைவடையாப் பணி.

கடைசி வரை இடதும், காந்தியும்தான் இன்றைய மானுடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இடது மற்றும் காந்தியச் சிந்தனை கொண்ட நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலும் செயலிலும் இயங்கிக் கொண்டிருந்தார்.

அவரைப்போல் இன்னொருவர் செயல்பட முடியாது. அவருக்கு மாற்று அவரேதான். அவருக்குச் செலுத்தும் அஞ்சலி என்பது இடதிலும், காந்தியத்திலும் பயணிப்பதுதான். அதுதான் அவருக்கு ஏற்புடையது. அதை நாம் தொடர்வோம்.

- க.பழனித்துரை

Pin It