இடைவிடாத சுற்றுப் பயணங்கள், பொதுக்கூட்டங்கள், தொழிற்சங்கப் பணிகள், இவற்றுக்கு நடுவே கட்டுரைகள் எழுதுதல் எனப் பலவகையிலும், மக்களுக்காக ஓய்வு ஒழிவின்றி உழைத்து வரும் தோழர் தா.பாண்டியன் அவர்களின் குன்றாத இளமையின் மாறாத இரகசியம்தான் என்ன? மக்கள் தொண்டில் அவர் பெறும் மகிழ்ச்சியும், மனநிறைவும் அவரது சீரிளமைத் திறனுக்கு மாமருந்தாக விளங்கி வருகின்றன.
பள்ளி மாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்டுக் கட்சியின் உன்னதமான கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர் தோழர் தா. பாண்டியன் ஆவார்.அழகப்பா கல்லூரியில் மாணவராகப் படிக்கும்போதே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினரானார். அதே கல்லூரியில் பிற்காலத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அவரை இனம் கண்டுகொண்ட தலைவர் ஜீவா அவர்கள் தோழர் தா.பாண்டியன் அவர்களை ஆட்கொண்டார். அதன் விளைவாக முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டார் தோழர் தா.பா. அவர்கள்.
அரசியல் பணியிலும், கட்சித் தொண்டிலும், தொழிற்சங்க நிர்மாணப் பணியிலும் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். தியாகத் தழும்புகளையும் ஏற்றிருக்கிறார். இத்தனைக்கும் நடுவில் சிறந்த இலக்கியவாதியாகவும் அவர் திகழுகிறார்.
ஜனசக்தி இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றும் போதும் இன்றுவரையிலும் அவர் எழுதி வரும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் தமிழக மக்களைப் பெரிதும் கவர்ந்தன, கவர்ந்து வருகின்றன.
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை சாதாரண மக்களும் உணர்ந்து பாராட்டும் வகையில் எளிமையான தமிழில் ஆக்கித் தந்துள்ளார். அதைப்போல கம்யூனிஸ்டு இயக்க நூல்களையும் எழுதியுள்ளார். அயல்நாட்டு இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்கு ஆக்கம் தந்துள்ளார்.
கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகும் பெரும் வாய்ப்பினைப் பெற்றவன் நான். பல்வேறு அரசியல் பிரச்சினைகளுடன் போராட்டக் களங்களில் அவரும் நானும் தோள் கொடுத்து துணை நின்றிருக்கிறோம். குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினைகளில் அவர் காட்டி வரும் உண்மையான ஈடுபாடு மற்றவர்களுக்கு முன்மாதிரியானதாகும்.
பிரதமர் ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட போது அவர் அருகே இருந்த தோழர் தா.பாண்டியன் அவர்களின் முகத்திலும் கால்களிலும் வெடிகுண்டுத் துகள்கள் ஊடுருவி பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று எப்படியோ உயிர் பிழைத்தார்.
தனக்கு நேர்ந்த இந்தத் துயர நிகழ்ச்சியை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதற்கு மேலாக எழுந்து நின்று ஈழத் தமிழரின் துயரைத் துடைப்பதில் அவர் காட்டி வரும் ஆர்வம் என்பது உலகத் தமிழரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
2008ஆம் ஆண்டில் ஈழத்தில் போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ்நாடு முழுவதிலும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்க அவர் முழுமுதற் காரணமாக இருந்தார்.
காந்தியடிகளின் பிறந்தநாளில் அவர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்தின் பல்வேறு கட்சியினரையும் ஒன்றுபடுத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட வைத்தது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மேலவையில் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா அவர்களும் நாடாளுமன்றத்தில் தென்காசி உறுப்பினர் லிங்கம் அவர்களும் ஈழத் தமிழர் பிரச்சினையை எழுப்பினார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் சிவகங்கைத் தொகுதி உறுப்பினர் குணசேகரன் அவர்கள் ஆற்றிய உணர்ச்சிமிகு உரை தமிழக முதல்வரின் கவனத்தை இப்பிரச்சினையில் ஈர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வைத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்ற வைத்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரை இணைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடுவதற்காக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டதில் தோழர் தா.பா. அவர்களின் பங்கு மிக முக்கியமானது.
சென்னை முதல் குமரி வரை மனிதச் சங்கிலி, பரப்புரை பயணங்கள், முழு வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர், தோழர் தா.பா. அவர்கள்.
அது மட்டுமல்ல 2008ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு ஐதராபாத்தில் நடைபெற்றபோது ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முழுமுதற் காரணமாக தோழர் தா.பா. இருந்தார்.
கடந்த 20 ஆண்டு காலத்தில் அகில இந்தியக் கட்சிகள் எதுவும் கவலை கொள்ளாத அல்லது எதிரான நிலை எடுக்கும் ஒரு பிரச்சினை குறித்து ஐதராபாத் மாநாடு மிகுந்த பொறுப்புணர்வோடும் தொலைநோக்குப் பார்வையோடும் கூடி தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் விளைவாக அகில இந்திய அரசியல் அரங்கத்தின் கவனம் ஈழத் தமிழர் பிரச்சினையின்பால் திருப்பப்பட்டது.
சரியான வேளையில் சரியான காலக்கட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகளுக்கும் அவற்றுடன் தோழமை பூண்டு நிற்கும் பல மாநில கட்சிகளுக்கும் இத்தீர்மானம் இலங்கை இனப் பிரச்சினையில் சரியான வழியைக் காட்டியது. இதற்குக் காரணமான தோழர் தா.பா. அவர்களுக்கு உலகத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டவர்கள்.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஈழப்போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது பல இலட்சம் அப்பாவித் தமிழர்கள் பெரும் பாதிப்பிற்கும் உயிரிழப்பிற்கும் ஆளாகும் நிலைமை ஏற்பட்ட வேளையில் போரை நிறுத்துவதற்கு தோழர் தா.பா.செய்த முயற்சிகள் வரலாற்றில் இடம் பெறத்தக்கவை.
தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர உடனடியான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கு தோழர் தா.பா. காரணமாக இருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு தில்லி சென்று பிரதமரைச் சந்தித்துப் போர் நிறுத்துவதை வலியுறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை மட்டுமே தமிழக முதல்வர்
மு. கருணாநிதி அவர்கள் அழைத்துச் சென்றார்.மற்றவர்களை அழைக்கவில்லை. அந்த வேளையில் மாஸ்கோ சென்றிருந்த தோழர் தா.பா. அவர்கள் செய்தியறிந்து உடனடியாக விரைந்து தில்லி திரும்பி சரியான நேரத்தில் பிரதமர் வீட்டிற்கு அழையாத விருந்தாளியாகப் போய்ச் சேர்ந்தார்.
தமிழக முதல்வரும் மற்றவர்களும் சொல்லத் தயங்கியவற்றை பிரதமரிடம் நேருக்கு நேராகக் கூறும் ஆண்மையும் திண்மையும் தோழர் தா.பா. அவர்களுக்கு மட்டுமே இருந்தது. அழைக்காத இடத்திற்குப் போகலாமா என அவர் ஒருபோதும் தயங்கவில்லை.
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது. அதன் காரணமாக தனது சொந்த மான, அவமானத்தை அவர் சிறிதும் பொருட்படுத்தாமல் பிரதமரின் வீட்டிற்கு விரைந்து சென்று சொல்ல வேண்டிய கருத்துக்களைத் துணிந்து எடுத்துக் கூறினார்.
நெருக்கடி மிகுந்த அந்தப் போர் நாட்களின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த நடேசன் அவர்கள் தமிழகத் தலைவர்கள் பலரிடமும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு போர் நிலைமை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தார். குறிப்பாக தோழர் தா.பா.வுடன் தினமும் தொடர்பு கொண்டு அவர் பேசினார்.
“ஆயுதங்களை மௌனிக்கச் செய்கிறோம்.நாங்கள் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருக்கிறோம்.” என புலிகள் திடீரென ஒருநாள் அறிவித்தனர். இந்தியா மட்டுமல்ல உலகமே அந்த அறிவிப்பைக் கண்டு திகைத்தது. ஆனால் அந்த அறிவிப்பிற்குப் பின்னால் தா.பா. அவர்களின் அறிவார்ந்த ஆலோசனை இருந்தது என்பதை நான் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள தனது கட்சித் தோழர்களை மட்டுமல்ல, அகில இந்திய கம்யூனிஸ்டுத் தோழர்களையும் ஈழப் பிரச்சினையின்பால் முழுமையாக ஈர்த்ததன் பின்னணியில் தோழர் தா.பா., தோழர். நல்லகண்ணு, இராசா ஆகியோரின் சீரிய முயற்சிகள் காரணமாக இருந்தன.
இதன் விளைவாக 2011 ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற் கிணங்கி இந்தியா முழுமையிலும் அனைத்து மாநிலங்களிலும் பிற இடதுசாரி சனநாயகச் சக்திகளுடன் இணைந்து நின்று 8.11.2011 அன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி நடத்தியது. வேறு எந்த அகில இந்தியக் கட்சியும் இவ்வாறு செய்யவில்லை.
2012ஆம் ஆண்டு மார்ச் 27 முதல் 31 வரை பாட்னாவில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மாநாட்டிலும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவான தீர்மானம் தோழர் தா. பாண்டியன் அவர்களின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டது.
தோழர் தா.பா. அவர்களின் இந்த உள்ளார்ந்த உண்மையான ஈடுபாட்டின் விளைவாக உலகத் தமிழர்கள் நடுவில் இந்திய கம்யூனிஸ்டுகள் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கின்றன என்று சொன்னால், அது மிகையாகாது.
தன்னலமற்ற தொண்டுள்ளம், மக்களுக்காக எல்லாவிதத் தியாகங்களுக்கும் தயாராகியிருக்கும் நிலை, கறைபடாத கரங்கள், சீரிய சிந்தனையாற்றல், எண்ணித் துணியும் இயல்பு ஆகியவற்றால் தமிழக மக்கள் மதித்துப் போற்றும் உன்னதமான தலைவராக விளங்கியவர் தோழர் தா.பா.
(தோழர் தா.பாண்டியன் 80வது ஆண்டு சிறப்பு மலர்)
05.03.2021 அன்று காரைக்குடியில் நடைபெற்ற 35வது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதிப்புறு கர்னல் நா.ராஜேந்திரன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமுன்னாள் துணைவேந்தர் பேரா.கா.மணிமேகலை,
பேரா ஜானகிராமன், ரோட்டரி சண்முகம், சுப.நாகநாதன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் தாளாளர் அ.சேதுராமன்,
என்.சி.பி.எச். மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் கு.பாலசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பழ.நெடுமாறன்