‘தமிழ்ப் பெண்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தினருக்கு விருந்தாகட்டும்; ஆண்களின் ரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்.’

Eelam ladyஇவை ஏதோ இலங்கையில் சிங்கள இன வெறி பிடித்து அலையும் உள்ளூர் ரவுடி சொன்ன வார்த்தைகள் அல்ல; இலங்கை ராணுவ அமைச்சக செயலாளரான கோத்தபய ராஜபக்சே விட்ட வெளிப்படையான அறிக்கை. இவை இலங்கை ராணுவத்தினரை உற்சாகப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான வன்புணர்ச்சிக்கும் கொலைவெறிக்கும் அவர்களைத் தூண்டுவதற்காக மட்டும் சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல. இந்தச் சொற்களுக்குப் பின்னால் இரண்டு உண்மைகள் மறைந்துள்ளன. சிங்கள ராணுவத்தின் முழு வெற்றிக்குப் பின்னர் ஈழத்தமிழர்களின் நிலை என்னவாகும் என்பதையும், இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு எப்படிப்பட்டது என்பதையும் இந்த அறிக்கை தெளிவாக அறிவிக்கிறது. இதற்குப் பின்னரும் ஈழநிகழ்வுகளை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்ப் பெண்கள் என்று கோத்தபய சொல்வது யாரையோ அல்ல; நம் சகோதரிகளைத்தான் என்பதாவது நம் மக்களுக்குப் புரிகிறதா?

என்னதான் நடக்கிறது இலங்கையில்? பெரிதாக ஒன்றும் இல்லை. ஓர் இனம் இன்னொரு இனத்தை அழிக்கிறது; அவ்வளவுதான். வரலாற்றில் இது ஒன்றும் புதிதல்ல. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவம் திட்டமிட்டு குண்டுகளை வீசித் தாக்குகிறது. மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்படுகின்றன. பெண்களும் குழந்தைகளும் கூட கொன்று குவிக்கப்படுகிறார்கள். உலகம் முழுதும் போர்களில் பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைக் கூட சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறது இலங்கை ராணுவம். தன்னை ராணுவபலம் மிக்க நாடாக உலகிற்கு அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது ‘பவுத்தம்’ பேசும் சிங்கள அரசு. விடுதலைப் புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத் தேவையான ராணுவ உதவிகளைத் தாராளமாக வழங்கி வருகிறது ‘காந்தியம்’ பேசும் இந்திய அரசு. இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும், பாகிஸ்தானும் சிங்கள அரசின் இனவெறிப் போருக்கு உதவி வருகின்றன.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இலங்கைப் பிரச்னையை இந்தியா கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு ‘நியாயமான’ காரணங்கள் உண்டு. இங்கு நடந்த இன அழித்தொழிப்பு நிகழ்வுகளையே நம் மத்திய, மாநில அரசுகள் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அப்படி இருக்கும் போது பக்கத்து தேசத்தில் என்ன நடந்தால் நமக்கென்ன என்றுதான் நம் அரசுகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நினைக்கின்றன. நினைப்பதோடு மட்டுமின்றி, மக்களையும் அவ்வாறே சிந்திப்பதற்குப் பழக்குகின்றன. இலங்கைப் போரை முன்னிருத்தி தமிழ்நாட்டில் நடக்கும் ‘அரசியல்கள்’ காணச் சகிக்கவில்லை.

சிங்கள ராணுவ தளபதியான சரத் ஃபொன்சேகா சொன்னாராம், ‘தமிழக அரசியல்வாதிகள் எல்லோரும் கோமாளிகள்’ என்று. உடனே கொதித்தெழுந்தார்கள் நம்முடைய தன்மானத் தமிழ் அரசியல்வாதிகள். அவர்களுக்குப் பழக்கப்பட்டுவிட்ட மக்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நாம் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டதைத்தானே பொன்சேகா கூறியிருக்கிறார் என்று கூட அவர்கள் நினைத்திருக்கலாம். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பது கிடக்கட்டும். அவர் சொன்னதில் உண்மையில்லையா? ஈழப்பிரச்னையில் நம் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளும் அவர்கள் விடும் அறிக்கைகளும் கோமாளித்தனமானவை இல்லை என்று சொல்ல முடியுமா?

இந்த வேடிக்கை நாடகங்களையெல்லாம் தொடங்கி வைத்தவர் நம் முதலமைச்சர் மு.கருணாநிதி. இலங்கையில் போரை நிறுத்த அந்நாட்டு அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்; இல்லையென்றால் தி.மு.க., எம்.பி.,க்களும் அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று காரசாரமாக ஓர் அறிக்கை விட்டுப் பார்த்தார். தி.மு.க., தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் கூட இந்தக் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஈழப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட எல்லோருமே அவசரப்பட்டு சந்தோஷப்பட்டனர். ஆனால் அதற்குப் பிறகு அதைப் பற்றி அவர் மூச்சுகூட விடவில்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியில் வந்தவுடன் பத்திரிகையாளர்களிடம் தெளிவாகச் சொன்னார். ‘இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று. இந்தச் செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. ஆனால் கருணாநிதியின் கண்ணில் மட்டும் படாமல் போனதை நினைத்து தமிழ்நாடே வியந்தது. அவருடைய இந்த ராஜினாமா பூச்சாண்டியை தி.மு.க., இடம்பெற்றிருக்கும் மத்திய அரசு கொஞ்சம் கூட கண்டு கொள்ளவேயில்லை. ‘இலங்கைத் தமிழர் பிரச்சினை அப்படியொன்றும் எங்களுக்கு முக்கியமானதல்ல’ என்பதை அடையாளப்படுத்தும் விதமாக பலத்த எதிர்ப்புகளை மீறி இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்புவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தியது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் போர், இந்தியா=இலங்கை கிரிக்கெட் போட்டி அளவுக்குக் கூட முக்கியமானதல்ல என்று தெளிவாக அறிவிக்கும் காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் தொடர்ந்து ‘கெஞ்சி’ கொண்டிருந்தார். அவர் இலங்கைப் பிரச்சினைக்காக தன்னுடைய உயிரையும் இழக்கத் தயார் என்றார். பின்னர் ஆட்சியை இழக்கத் தயார் என்றார். உண்மையில் மத்திய அரசில் வகிக்கும் அமைச்சர் பதவிகளைக் கூட அவர் இழக்கத் தயாரில்லை என்பது எல்லோருமே அறிந்ததுதான்.

தன்னுடைய பங்குக்கு ஜெயலலிதாவும் ஈழப்பிரச்சினை பற்றி அறிக்கைகள் விட்டு பரபரப்பூட்டினார். ‘என்னுடைய ஆட்சியாயிருந்திருந்தால் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிக்கும் தேசத்துரோகிகள் அனைவரையும் கைது செய்திருப்பேன்’ என்று வீரவசனம் முழங்கினார். அப்படியென்றால் அ.தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சித் தலைவரான வைகோவைத்தான் முதலில் அவர் கைது செய்ய வேண்டியிருந்திருக்கும். ஒருவேளை வைகோவை தி.மு.க., அரசு கைது செய்ய வேண்டும் என்றுதான் அவர் இந்த அறிக்கையில் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரோ என்னவோ? சட்டப்படி கைது செய்யப்பட வேண்டிய ஒருவருடன் ஜெயலலிதா ஏன் தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரித்து வரும் பா.ம.க.,வும் கூட மத்திய அமைச்சர் அன்புமணியின் பதவியை இழக்கத் தயாரில்லை. அக்கட்சி தி.மு.க.,வின் நிழலில் ஒதுங்கிக் கொண்டு மத்திய அரசை எதிர்த்து அறிக்கைகள் விடுவதோடு நிறுத்திக் கொண்டது. ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு துரோகம் செய்வதாக கடும் அறிக்கைகள் விடும் ராமதாஸ், அப்படி துரோகம் செய்யும் மத்திய அரசில் பா.ம.க., தொடர்ந்து அங்கம் வகிப்பதன் ‘ரகசியத்தை’ மட்டும் கடைசி வரை வெளியிடவேயில்லை. ஈழப்பிரச்சினையில் ஐ.நா., தலையிட்டு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும்; தமிழகக் கட்சிகள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறிக்கைகள் விடுவதோடு தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டார் தே.மு.தி.க., தலைவர் கேப்டன் ‘பிரபாகரன்’. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் இலங்கைப் பிரச்சினைக்காக ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் இருந்து பார்த்தார்.

இலங்கைப் பிரச்சினையில் நம் அரசியல் தலைவர்கள் எல்லோரும் சொல்வது கிட்டத்தட்ட ஒன்றுதான். அரசியல் தீர்வு காணவேண்டும் என்பது. ஆனால் அரசியல் தீர்வுக்காகக் காத்திருந்து அது எட்டப்படாமல் போன உச்சகட்ட அதிர்ச்சியில்தான் அங்கு தமிழர்களின் ஆயுதமேந்திய போராட்டம் தொடங்கியது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். இடதுசாரிகளின் பக்கவாத்தியத்துடன் ஜெயலலிதா தொடர்ந்து தனி ஈழம் என்பது சாத்தியமில்லாதது; அரசியல் தீர்வு ஒன்றுதான் இப்பிரச்சினைக்கு வழி என்று அறிக்கை விட்டு வருகிறார். அவர்கள் கூறுவது போல் உண்மையிலேயே இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஓர் அரசியல் உடன்படிக்கை ஏற்பட்டு விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? அந்த உடன்படிக்கையை சிங்கள அரசு மதித்து நடக்கும் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா? அவருக்குக் கூட ஒரு வேளை இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகளை எதிர்த்து காலம் காலமாகப் பிரச்சாரம் நடத்திவரும் இடதுசாரிகளும் இவ்வாறு நம்பலாமா?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வைத்து விட்டால் அதுவே தான் தமிழின மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்பது போன்ற பாவனையை உருவாக்கிக் கொண்டிருந்தார் கருணாநிதி. ஆனால் அவருடைய கோரிக்கையை மத்திய அரசு தொடக்கத்தில் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. இதற்காக வருத்தம் வெளியிட்ட நம் முதல்வருக்கு நன்றாகவே தெரியும்; பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று சிங்களப் பேரினவாத அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து விடப் போவதில்லை என்று. அப்படியே அவர் தீர்வு காண முயற்சித்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது என்பதும் கருணாநிதிக்குத் தெரியாமல் இருக்காது. இலங்கை அரசுக்கு மறைமுகமாக ராணுவ உதவியளித்து வரும் மத்திய அரசிடம் இருந்து பலனை எதிர்பார்க்கும் அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் அப்பாவியா என்ன?

தமிழ்நாட்டில் அரசியல் நடத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை தி.மு.க., மத்திய அரசுக்கு எடுத்துரைத்த பின்னர், அக்கட்சியின் பரிதாப நிலையைக் கண்டு போனால் போகிறதென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சிவசங்கர் மேனனை இலங்கைக்கு அனுப்பினார்கள். அவர் ராஜபக்சேவுடன் நடத்திய பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிட வேண்டுமென்று நியாயமான கோரிக்கையை முன்வைத்தார் கருணாநிதி. ஆனால் அவற்றையெல்லாம் வெளியில் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பட்டமாகக் கூறியது தமிழக காங்கிரஸ் கட்சி. மக்களுடைய வரிப்பணத்தில் வெளியுறவுச் செயலாளர் இலங்கை சென்று நடத்திய பேச்சுவார்த்தை விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை ஒரு மாநில முதலமைச்சருக்கே இல்லை எனுமளவுக்கு காங்கிரஸ் ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறதா? ஆனால் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவை ‘உலகின் தலைசிறந்த ராணுவ தளபதி’ என்று வர்ணித்த சிவசங்கர் மேனன், ராஜபக்சேயுடன் என்ன பேசியிருப்பார் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானதல்ல.

தமிழ்நாட்டில் எதிர்ப்பு கொஞ்சம் தீவிரமான நிலையில் வேறுவழியின்றி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அவரும் போனார்; வந்தார். தமிழர்களின் தலையில் குண்டுகள் விழுவது தொடர்ந்தது. முதலில் இருந்தே ‘போரை நிறுத்துவது எங்கள் வேலை அல்ல’ என்று கூறி வந்த பிரணாப் முகர்ஜி, இலங்கை சென்று விட்டு வந்த பின்னர், ‘சிங்கள அரசு செய்வது சரிதான்’ என்று கூறி மேலும் அதிர்ச்சி தந்தார். அவருடைய இந்த அறிக்கையே ராஜபக்சேயுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை விபரங்களை அறியப் போதுமானதாயிருந்தது. இதற்கும் தி.மு.க., தரப்பிலிருந்து பெரிதாக எந்த எதிர்வினையும் எழவில்லை.

ஈழப்பிரச்னையில் தொடர்ந்து நடந்த பரபரப்பான சம்பவங்களாலும் அறிக்கைகளாலும் தமிழ் மக்களுக்கு நன்றாக பொழுது போனது. சினிமாக்காரர்களும் தங்களுடைய பங்குக்கு எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்து மக்களை ‘என்டர்டெயின்’ பண்ணினார்கள். திரைப்பட இயக்குனர்கள் ராமேஸ்வரம் சென்று போராட, அர்த்தமில்லாத பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டிற்கே சென்று ‘டான்ஸ்’ ஆடும் நடிகர்கள், போராட்டம் என்றதும் வசதியாக சென்னையிலேயே நடத்தி முடித்தார்கள். மேடையில் எல்லோரும் சினிமாவில் நடிப்பதை விடப் பிரமாதமாக நடித்துக் கைதட்டல்களை அள்ளினார்கள். பின்னர் வீட்டுக்குப் போய் ‘போராடிய’ களைப்பில் நிம்மதியாகத் தூங்கினார்கள். இடையில் உண்மை உணர்வுடன் பேசி மாட்டிக் கொண்டது சீமானும் அமீரும்தான். பாவம். தங்களுடைய உணர்வுகளுக்கு உரிய மரியாதை தமிழ்நாட்டில் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்த அப்பாவிகள்.

இன்னும் சொல்ல வேண்டியது தமிழ் ஊடகங்களின் அரசியலை. மத்திய அரசைப் போன்றே எந்த தனியார் தொலைக்காட்சியும் ஈழப்பிரச்சினையை வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை. இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது இங்கு ‘மானாட மயிலாட’ என்று ஆடித் தீர்த்தார்கள். விதிவிலக்காக தமிழ்நாட்டில் ஒரு சிலர் மட்டுமே பார்க்கும் மக்கள் தொலைக்காட்சி மட்டும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. செய்திகளில் தொடர்ச்சியாக இப்பிரச்சினை குறித்து அதிகம் பேசிய அந்த தொலைக்காட்சி, ஈழம் குறித்த பரபரப்பான தொடரையும் ஒளிபரப்பி கவனத்தை ஈர்த்தது. அதைக் கூட பொறுக்க முடியாத சில வெகுசன ஊடகக்காரர்கள் அந்தத் தொடரைக் குறை கூறினார்கள்.

Eelam ladyஒரு நல்ல மாற்றம் என்னவென்றால் பத்திரிகைகள் இப்பிரச்சினை பற்றி அதிகம் பேசின. சரியாகவோ அல்லது அரைகுறையாகவோ இப்பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதிகம் எழுதிக் குவித்தன. ஆனால் அவற்றுள் சில பத்திரிகைகள் பண்ணிய இன அரசியல்தான் வாசிக்கச் சகிக்கவில்லை. குறிப்பாக, பார்ப்பன பின்புலத்துடனான சில இதழ்கள் ஈழத்தமிழர்கள் மீதான தங்கள் வெறுப்பையும் அவர்கள் ஒடுக்கப்படுவது பற்றிய தங்கள் மகிழ்ச்சியையும் மறைமுகமாக செய்திகள், கட்டுரைகள், வாசகர் கடிதங்கள், பேட்டிகள் (ஒரு நாளிதழ் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிய கருணாவின் நீ...ண்ட பேட்டியைத் தொடர்ந்து வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்தது. அந்தப் பேட்டி ராஜபக்சே எழுதிக் கொடுத்ததை அப்படியே அவர் ஒப்பிப்பது போலிருந்தது.) மூலமாக வெளியிட்டன. இப்பத்திரிகைகள் ஈழத்தமிழர் பிரச்சினையை ஆரிய திராவிட இனப்பிரச்சினையாகவே இன்னும் அணுகி வருகின்றன. இவர்களைப் பொறுத்தவரை சிங்களர்கள் பவுத்தர்களாக இருந்தாலும் அவர்கள் ஆரியர்கள். இதனால் சிங்கள ராணுவத்தின் வெற்றிகளை ‘என் இனமடா நீ’ எனும் வெற்றிப் பெருமிதத்துடன் கொண்டாடினார்கள். இவர்களின் அரசியலுக்கு இவர்களுடைய இனமல்லாத மக்களும் பலியானதுதான் வேதனை. என்ன செய்வது? யார் என்ன சொன்னாலும் மெய்ப்பொருள் காணும் அறிவு இல்லாத அப்பாவித் தமிழினம்!

இலங்கைப் பிரச்சினையில் எல்லோரும் அரசியல் மட்டுமே பண்ணிக் கொண்டிருக்க பள்ளி, கல்லூரி மாணவர்களும் வழக்கறிஞர்களும் உண்மையான போராட்டத்தில் குதித்தனர். இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்பதில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பள்ளி மாணவன் அளித்த பங்களிப்பைக் கூட மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வரவில்லை. தமிழ்நாட்டில் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் சோர்வடையத் தொடங்கிய நிலையில் அதனை தீவிரப்படுத்தும் விதமாக, யாரும் எதிர்பாராத நிகழ்வாக தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் எனும் இளைஞர் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்து போனார். இது மக்களிடையே மீண்டும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை சற்றும் விரும்பாத முதலமைச்சர் ‘இந்தச் சாவை அரசியலாக்க வேண்டாம்’ என்று அறிக்கை விட்டுப் பார்த்தார். ஆனால் மேலும் சில தீக்குளிப்புச் சம்பவங்கள் அரங்கேறின.

ஜெனீவாவில் ஐ.நா., அலுவலகம் முன்பு முருகதாசன் எனும் இளைஞர் தீக்குளித்து இறந்து ஈழப்பிரச்சினையில் ஐ.நா., மற்றும் உலகநாடுகளின் கவனத்தைக் கொண்டு வர முயற்சித்தார். ஆனால் இந்தச் சம்பவம் நடந்தது ஐ.நா., அலுவலகப் பணியாளர்களுக்கே கூட தெரியாமல் போனதுதான் உச்சகட்ட வேதனை. தமிழ்நாட்டின் நடுத்தர, உயர்குடி மக்கள் இச்சம்பவங்கள் பற்றிய செய்திகளை விளம்பர இடைவேளைகளின் போது பார்த்து ‘உச்’ கொட்டிவிட்டு அவசர அவசரமாக மெகா சீரியல்களுக்குத் தாவினார்கள்.

கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்து மாநில அரசுக்கு மேலும் எரிச்சலூட்டினார்கள். மாணவர்களின் போரட்டத்தைக் கண்டு எதிர்ப்பு பெரிதாகி ஆட்சி பறிபோய்விடுமோ என்ற கவலையில் அவசர அவசரமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறையளித்து மாணவர்களின் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தது மாநில அரசு. மேலும் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய பொது வேலை நிறுத்தத்தையும் தன்னுடைய அதிகாரத்தின் மூலம் ஒன்றுமில்லாமல் செய்து காட்டியது.

இலங்கைப் போரில் விடுதலைப் புலிகளின் இறுதிக்கட்டத் தாக்குதல் எந்த மாதிரியானதாக இருக்கும் எளிதில் கணித்து விட முடியாத ஒன்று. என்றாலும் புதுக்குடியிருப்பும் பறிபோய் விட்ட நிலையில், புலிகளின் சகாப்தம் கிட்டதட்ட முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது. தமிழர்க்கென்று தனி ஈழம் கேட்ட அந்தப் போராளிகள் இன்று தனித்தீவாய் முல்லைத் தீவுக் காடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டனர். ஈழத்தமிழர்கள் இனிமேல் சிங்கள பேரினவாத அரசினுடைய ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடுவார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் புலிகள் இயக்கத்தை ஏற்பது மற்றும் ஏற்காததில் சொந்த நலன் சார்ந்த விருப்பு, வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கையில் தமிழர்களின் நலனுக்காகப் போராடுவதற்கு இனி யாரும், எந்த அமைப்பும் இருக்கப் போவதில்லை. அப்படியே இருந்தாலும் அவற்றை நசுக்கியெறிவது ஒன்றும் சிங்கள பேரினவாத அரசுக்கு கடினமான காரியமாக இருக்காது.

இனி தமிழர் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே நிகழும் வன்முறைச் சம்பவங்களைக் காரணம் காட்டி அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நிகழாத இடங்களில் ‘நிகழ்த்தப்பட்டு’ இனப்படுகொலைச் சம்பவங்கள் சிங்கள ராணுவத்தால் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ அங்குள்ள அப்பாவித் தமிழர்களுக்காக எந்தக் குரலும் வலுவாக ஒலிக்கப் போவதில்லை. ஏற்கனவே போரினால் தங்கள் வேர்களை இழந்து வெளிநாடுகளில் அனாதைகளாக அலைந்து திரியும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும். சொந்த மண்ணில் அரசே நடத்தும் சிங்களக் குடியேற்றங்களுக்காக தங்களுடைய நிலங்களை இழந்து வீடு, வாசல் ஏதுமற்றவர்களாக கேட்பதற்கு நாதியற்று அலையும் அற்ப ஜீவிகளாக அவர்கள் திரிவதை உலகமே வேடிக்கை பார்த்து மகிழும்; நாமும்தான். தமிழர் வாழும் பகுதிகள் சிங்கள அரசின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வந்த பிறகு அங்கு அமைதி திரும்பி விடும்; மயான அமைதி.

‘எங்கே எவன் செத்தால் எனக்கென்ன?’ எனும் மனநிலை தமிழர்கள் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் கொள்ளியைப் போன்றது. சிங்கள பேரினவாதம் அடையும் வெற்றிகள் இந்தியாவின் பேரினவாத அரசியலுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இங்கு இன்னும் பல ‘மோடி’கள் உருவாகும் பேராபத்து வெகுதொலைவில் இல்லை. போர்வெறியுடன் அலைந்த அசோகருக்கு ஞான ஒளி அளித்து அவனை அமைதிப்பாதைக்குத் திருப்பியது பவுத்தம். ஆனால் போரின் மூலமாக தனக்குப் பிடிக்காத ஓர் இனத்தையே எப்படி அழிப்பது என்று உலகுக்கே கற்றுத் தந்து கொண்டிருக்கிறது சமகால ‘சிங்கள பவுத்தம்’.
தமிழரின் அறிவார்ந்த ஆய்வுச் சிந்தனைப் போக்கை விட்டுவிடாமல் காத்து வரும் இனம் ஈழத்தமிழினம். (இதனால் உண்டான எரிச்சலில்தான் சிங்கள ராணுவம் தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாட்டுப் பொக்கிஷமாக விளங்கிய யாழ் நூலகத்தை எரித்துச் சாம்பலாக்கியது.) அந்த இனம், இனி கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள பேரினவாத அரசால் அழித்தொழிக்கப்படுவதை நம்முடைய ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் மவுனம் காக்கும். இதனால் அங்கு நடப்பவை நமக்குத் தெரியாமலே போகக் கூடும். தெரிந்தாலும் நாம் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடப் போவதில்லை. ஏனென்றால் இவற்றையெல்லாம் விட பெரிய பிரச்சினைகள் நமக்கு நிறையவே உள்ளன.

‘சிம்பு நயன்தாரா ஒன்று சேருவார்களா?’ ‘சச்சின் ஏன் சதமடிக்கவில்லை?’ ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ ‘அரசி’யில் அடுத்த வாரம் என்ன ஆகும்?’ ‘அடுத்த பிரபுதேவா யார்?’ என்று நம்முடைய வாழ்வியல் ஆதாரங்களையே கேள்விக்குள்ளாக்கும் இப்படிப்பட்ட பல சவால்களுக்கிடையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால், ஈழத்தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் நமக்கு பெரிய விஷயமாக இருக்கப் போவதில்லைதான். முல்லைத் தீவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டபோது இங்கே ‘வில்லு’ படத்திற்கு விசில் பறந்து கொண்டிருந்தது. எல்லாம் போகட்டும். இனி வரும் காலத்தில் வரலாற்றுப் புத்தகங்களில் இந்த வரிகள் மறக்காமல் இடம் பெற்றிருக்கும்.

‘இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் தமிழர்கள் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள்.’

- கணேஷ் எபி, (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It