1983ம் வருடம் வரைக்கும், இலண்டனில் இன்று நடக்கும் ஆடம்பரத்துடன் எந்தவொரு பூப்பு நீராட்டு விழாவும் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. அந்தக் கால கட்டத்தில் 40,000 தமிழர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவர்களும் இங்கிலாந்தில் பல பகுதிகளிலும், தங்கள் உத்தியோகம், மேற்படிப்பு போன்ற பல காரணிகளாற் சிதறி வாழ்ந்தார்கள்.
பூப்பு நீராட்டுப் புனிதச் சடங்குகள் நடந்திருந்தாலும் குடும்பங்களிடையே மட்டும் நடந்திருக்கலாம். இன்று நடப்பது போல் பெரிய பிரமாணடமான மண்டபங்களை வாடகைக்கு எடுத்து நடத்தும் ஒரு பணச்சடங்காக நடக்கவில்லை. அக்கால கட்டத்தில் ‘பெரிய பிள்ளையாவது’ என்பது ஒரு குடும்பத்தின் மிகவும் தனிப்பட்ட விடயமாகக் கருதப்பட்டது.
இன்று, வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையே நடக்கும் கலாச்சாரச் சடங்குகளின் பரிமாணங்கள்; பெரிய மாற்றங்களைக் காண்கின்றன.
1983 யூலைக் கலவரத்தின் பின், ஆயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல பகுதிக்குக்கும் இடம் பெயர்ந்தார்கள். இங்கிலாந்தில் 150,000 மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாகச் சொல்லப் படுகிறது.
இன்று, 76 நாடுகளில் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். குடும்பங்கள் சிதறுப்பட்டு, ஐந்து கண்டங்களிலும் வாழ்கிறார்கள். இவர்கள் ஒன்று சேர, குடும்பப் பொது நிகழ்ச்சிகளான திருமணம், பிறந்த தினவிழா, செத்த வீடுகள், பூப்பு நீராட்டு விழாக்கள் என்பன உதவுகின்றன.
இப்போது, பூப்பு நீராட்டு விழாக்களிற் பல, ஒவ்வொருத்தரின் பொருளாதார நிலையை விளம்பரப்படுத்த அல்லது பொருளாதார நிலையை விருத்தி செய்ய நடத்தப்படுவதாகத் தெரிகிறது.
முக்கியமாக, இந்தப் பூப்புனித நீராட்டு விழாக்களின் பரிமாணங்கள், சமுதாய ஆய்வாளர்களால்; உற்று நோக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.
இன்று மேலை நாட்டில் வாழும் தமிழர் வீடொன்றில் பருவமடைந்த பெண், அவள் பிறந்த வீட்டாரின் பல எதிர்பார்ப்புக்களைத் திருப்திப்படுத்த, மறைமுகமாக எதிர்பார்க்கப் படுகிறாள். இந்த சில விழாக்களைப் பார்த்தால், வேறு எங்கேயோ, யார் வீட்டிலேயோ அல்லது தெரிந்த சொந்தக்காரர்கள் வீட்டிலேயோ நடந்த பூப்பு நீராட்டு விழாவை விட பிரமாண்டமாக சிறப்பாக ஆடம்பரமாக நடத்துவது மூலம் தங்கள் பொருளாதார நிலையை மற்றவர்களுக்குக் காட்டத் தங்கள் மகளின் வாழ்க்கையின் முக்கிய தினத்தைப பாவிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
பெண்களின் வளர்ச்சியின் மாற்ற நிலைகளில் அவள் பருவமடையும் நேரம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. சாத்திரங்கள் அல்லது அதன் பலன்கள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. பௌதிக மாறுதல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு காலங்களில் நடக்கும்.
பத்து அல்லது பதினோரு வயதில் பருவமடையும் பெண் இன்னும் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தரும் சங்கடத்தை அனுபவிக்கப் போகிறாள் என்பதன் ஆரம்ப நாள் இந்தப் பூப்பெய்யும் நாள்.
இனி வரப்போகும் வயிற்றுக் குத்து, எரிச்சல் குணங்கள், தலையிடியின் ஆரம்ப நாளிது. உடல், உள மாற்றங்களுடன் சமுதாயத்திற்கும் தனக்குமுள்ள உறவின் மாற்றத்தின் வித்தியாசங்களைக் காண ஒருபெண் தாயாராகும் நாளிது. பெண்ணின் சூலகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை வெளிப்படும். ஒரு வருடத்தில பதின்மூன்று முட்டைகள் வெளிவரும். கிட்டத்தட்ட இன்னும் முப்பத்தெட்டு வருடங்களுக்கு இது தொடரும்.
.இந்த முட்டடையைத் தயார் செய்யும் சூலகம் பெண்களுக்குத் தேவையான சுரப்புகளைச் சுரக்கின்றது. இச்சுரப்பு ‘பெண்மையின்’ வளர்ச்சிக்கு இன்றியமையாதாது. ஒவ்வொரு மாதமும் பெண்முட்டையும் ஆணின் விந்துவும் சேர்ந்தவுடன் பரிணமிக்கும் ஒரு உயிரின் வரவைத் தாங்கும் சக்தியுடன், இச்சூலகத்தின்(கர்ப்பப்பை) சுவர், ஒருவித பொரு பொருப்புடன் தடித்துப் போயிருக்கும். கர்ப்பம் நடைபெறாவிட்டால், இத்தடிப்பு, தளர்ந்து, உதிரத்துடன் உதிர்ந்து விழும். இவ்வுதிரம் பெண்ணுறுப்பு வழியாக வெளியேறும்; இதுதான் மாதவிடாய்.
இது இருபத்தெட்டு நாளைக்கு ஒரு தரம் வரும். முதல் மூன்று நாட்களும் கூடிய உதிரம் வழியும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு போகும். மாதவிடாய் ஒழுங்கில்லாமலோ அல்லது மிகையாகவோ வந்தால் சுரப்பிகளிற் பிரச்சினை இருக்கிறது என்று கருத்தாகும்.
பெரும்பாலும் ஒரு பெண்ணின் உடல் மாற்றங்கள் அவளின் 11-13 வயதுகளில் நடக்கும். இப்போது சாப்பாடு, சுவாத்திய, வாழ்க்கை நிலை மாறுபாடுகளால் சில பெண்கள் 9-10 வயதிலும் முதல் மாதவிடாயைக் காண்கிறார்கள். தமிழ்க் குடும்பங்களில், ஒரு பெண் பருவமடைந்தால் சில சடங்குகள் நடப்பது மரபு. இந்தச் சடங்குகள், அந்தப்பெண் பிறந்த சாதி, குலம், இடம், பொருளாதார நிலை, சமயம் என்பனவற்றின் அடிப்படையில் மாறுபட்டிருக்கும்.
இச்சடங்குகள், ‘இந்துக் கலாச்சாரத்தின்’ அடிப்படையில் நடப்பதாகச் சொல்வது முற்றாகச் சரியல்ல. தமிழர் வாழும் நாடுகளான இந்தியா, இலங்கையில், ஒவ்வொரு பிராந்தியத்திலும் அப்பிராந்தியத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளும், சடங்குகளும் பழக்கத்திலல் இருக்கின்றன. வட இந்தியாவில் நடக்கும் மதச் சடங்குகளுக்கும், தென்னிந்தியாவில் நடக்கும் மதச் சடங்குகளுக்கும் எத்தனையோ வேறு பாடுகளுள்ளன.
இன்று தமிழர்களிடையே நடக்கும் சடங்குகள் இலங்கை, இந்தியாவிலுள்ள பல தரப் பட்ட தமிழ்ப் ‘பிராந்தியக் கலாச்சாரங்களின்’ பின்னணியிற் தொடர்கிறது என்று சொல்லலாம். தென்னிந்தியாவில் இருக்கும் மாமா-மருமகள் திருமணமுறை இலங்கைத் தமிழர்களுக்கிடையில் வழக்கத்திலில்லை.
மாமியார் வீட்டில் மருமகள் வந்து வாழ்வதும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக இல்லை.
சாப்பாடு வகைகளிலிருந்து கலாச்சாரச் சடங்குகளும் பலவித வேறுபாடுகளுடன் செய்யப்படுகின்றன. வித்தியாசமான பிராந்தியக் கலாச்சாரங்களை ஒன்று படுத்துவது அப்பிராந்தியதில் வாழும் மக்கள் பேசும் மொழி, சமயம், பண்பாடு போன்ற விடயங்களாகும்.
இன்று மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் சாமர்த்தியச் சடங்குகள், இந்தியா இலங்கையில் நடக்கும் சடங்குகளை விட வித்தியாசமாக நடக்கின்றன.
எங்கள் கலாச்சாரத்தின்படி பெண்களை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆறுவகையாகப் பிரித்திருக்கிறார்கள்;.
பேதை (07), உலகம் தெரியாத குழந்தை. பெதும்பை(11), குழந்தைக்கும் மங்கைக்கும் இடைப்பட்டவள். மங்கை(13) மாதவிடாய் வந்தவள். மடந்தை(19) என்பவள் கல்யாணமானவள். அரிவை(25) என்பவள் தாயானவள். தெரிவை(31) என்பவள் உலகம் தெரிந்தவள். பேரிளம்பெண்(40) என்பவள் அனுபவமும் அறிவுமுள்ளவள்.
பெதும்பைக்கும் மங்கைக்கும் இடையிலான வயதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் முதல் மாதவிடாயைக் காண்கிறார்கள்.
பருவ வளர்ச்சியின்படி அந்தப்பெண் தாய்மைக்குத் தயாராயிருக்கிறாள் என்பதை இந்த மாதவிடாய் சொல்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் வந்து ஒரு வருடத்தின் பின்தான் பெண் சுரப்பிகள் சரியாக வேலை செய்யத் தொடங்கும் என்பதால் ஒருபெண் மாதவிடாய் வந்ததும் தாயாகிவிடுவாள் என்று சொல்ல முடியாது. வெளியில் குழந்தையாய் ஓடித் திரிந்த பெண் வீட்டுக்குள் வைக்கப்பட்ட காலமிது. மன உணர்வுகள் வளர்ச்சியடையாத பருவமிது.
மாதவிடாய் வந்ததும் வீட்டுக்குள் வைக்கப்பட்டது வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் நடந்தது. இந்த நடைமுறை வெவ்வேறு இனங்களுக்கும் குழுக்களுமிடையில் வித்தியாசமான சடங்குகளுடன் தொடர்ந்தன.
மனித வரலாற்றின் செய்திகளின்படி, எங்கள் மூதாதையோர் காடுகளில் வேட்டையாடித் திரிந்தார்கள். அக்கால கட்டத்தில் மாதவிடாய் வந்த பெண்கள் அந்தக் கூட்டத்திற்கு அபாயத்தைக் கொண்டு வருவதாகப் படிப்பறிவற்ற மக்கள் நம்பினார்கள். காரணம், பெண்களின் தீட்டு இரத்தத்தை மோப்பம் பிடித்த மிருகங்கள், அந்தக் கூட்டத்தையே தாக்கின. இதனால் பருவமடைந்தவுடன் பாதுகாப்பு காரணமாகத் தீட்டு முடியுமட்டும் பெண்களை ஒரு இடத்தில் வைத்தார்கள்.
அக்காலத்தில் எந்த ஒரு மொழியும் விருத்தி யடைந்திருக்கவில்லை. குகைகளில் வாழந்த, ஒரு மொழியும் போசாத மக்கள் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டதையறிவிக்கச் சில சப்தங்களைப்போட்டு மற்றவர்களுக்கு விடயத்தை அறிவித்தார்கள். சில தமிழ்ப் பகுதிகளில் கேட்கும் குரவை ஒலியின் சரித்திரமே இதுதான். சங்கத் தமிழில் குரவை பற்றிக் குறிப்பிட்டிருப்பதாத் தெரிகிறது.
உலகத்தில் பல பாகங்களிலும் பல தரப்பட்ட பூப்பு நீராட்டு விழாக்கள் நடப்பதுபோல் ஆப்பிரிக்க நாட்டிலும் பல வித்தியாசமான சடங்குகள் நடக்கின்றன. உதாரணமாக, ஆப்பிரிக்கக் கிராமத்தில் வயது வந்த பெண்ணுக்கு அவளின் தாய் பரிசளிக்கும் பொருட்களில் அகப்பையும் ஒரு முக்கிய பொருளாக இருக்குமாம் அதன் அர்த்தம் அந்த வயது வந்த பெண் அந்த வீட்டின் குடும்பத் தலைவியாகும் தகமையைப் பெற்று விட்டாள் என்பதாகும்.
இப்படி எத்தனையோ சடங்குகள் உலகமெங்கும் நடந்தாலும் பத்து அல்லது பதினொரு வயதுப் பெண் இந்தச் சடங்குகளின் முக்கியத்தைப் பூரணமாக உணர்ந்து கொள்வார்களா என்பது கேள்விக்குரிய விடயமே.
பதினொரு வயதில் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தாய் தகப்பன் காட்டும் உலகம் தான் அவர்கள புரிந்து கொண்ட உலகம். தாய் தகப்பன் என்ன சொன்னாலும் தலையாட்டும் வயது.
இலண்டனில் அல்லது ஏதோ ஒரு மேற்கு நாட்டில் பெரியபிள்ளையான பெண்ணுக்கு ஒருதரம் மட்டுமல்ல பல தடவைகள் அதாவது ஒரு சில உறவினர்கள் வேறு வேறு நாடுகளில் சிதறி வாழ்வதால் வேறு வேறு நாடுகளுக்குப் போய் விழா வைப்பது எங்கள் கலாச்சாரத்திலிருக்கறதா? குடும்பம் மேல்நாட்டிலும் பெண்ணின் மாமா கொழும்பில், பாட்டி சென்னையில் அல்லது வேறு ஏதோ ஊரில் வாழ்கிற பல குடும்பங்கள் பல உண்டு. அதில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட சடங்குகள் வைத்து ஆடம்பரமாகச் செலவழிப்பது கலாச்சாரமா அல்லது பருவம் வந்த பிள்ளையை ஒரு காட்சிப் பொருளாக்கும் பணவிழாவா?
தென்னிந்திய தமிழர் மரபின் படி பெரிய பிள்ளையான பெண்ணுக்கு, அவள் குடுப்பத்துப் பெணகள் புதுச் சேலை கட்டி, நகை போட்டு அவள் இனி ஒரு கன்னிப்பெண் என்பதைக் கொண்டாடுவார்கள். இந்த வைபவத்தில் ஆண்களின் ஈடுபாடு குறைவு. ஆனாலும், ஒருபெண் தன் தாய் மாமனைத் திருமணம் செய்யும் மரபு இருக்கும். சில குழுக்களில் தாய்மாமன் வந்து பரிசு கொடுப்பது சம்பிரதாயமாக் காணப்படுகிறது.
அத்துடன் கடந்த காலங்களில் உலகில் பல இடங்களில் பாலியற் திருமணங்கள் சாதாரணமாக இருந்தன. ஒரு பெண்ணுக்கு ஐந்து ஆறு வயதில் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்கள். அந்தக் குழந்தைக்குத் தீட்டு வந்ததும் அவள் இனித் தாயாகத் தயாராகி விட்டாள் என்பதைக் கொண்டாடினார்கள். இப்படித்தான் இந்தச் சடங்குகளின் மரபுகள் தொடர்ந்தன, வளர்ந்தன.
உலகிலுள்ள பல நாடுகள், பல கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளுக்குப் பருவமடைதல் குறித்துச் சில முக்கிய சடங்குகள் நடக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் பிராமணர்கள் தங்கள் ஆண் குழந்தைக்கு அவனின் ஐந்து வயதில் உபநயனம செய்து பூணுல் போட்டு வேதாகமங்கள், மந்திரங்களை ஆரம்பிப்பார்கள். சைத்திரியர் ஆறுவயதிலும் வைசியர் ஒன்பது வயதிலும் ஆண்குழந்தைகளுக்குர் பூணுல் போடுவார்கள். யூத மதத்தினா தங்கள் ஆண்குழந்தைகளின் மத சம்பந்தமான சடங்குகளை பதின்மூன்று வயதில ஆரம்பிப்பார்கள். பெண்களுக்கு பன்னிரண்டுவயதில் பருவமடையும் விழாவைக் கொண்டாடுவார்கள்;
யப்பானியர், சமுராய் போன்ற வீரர்களின் படிப்பை பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்வார்கள். பெண்களுக்கு அவர்களின பதினைந்தாவது வயதில் கிமோனா அணிவித்து பருவம் வந்ததைக் கொண்டாடுவார்கள். அமெரிக்க ஹிஸ்பானிக் சமூகம் பெண்களின் பதினைந்தாவது வயதில் அழகிய உடைகள் அணிந்து மெழுகுவர்த்திகள் கொளுத்தி சமய பிராத்தனையுடன் பெண்கள் பருவத்திற்கு வரும் வைபவத்தைக் கொண்டாடுவார்கள். ஸ்பெயினில் பதினெட்டாவது வயது இராணுவத்தில் சேரும் வயதென்பதால் அப்போது ‘வயதுக்கு’ வந்த விழாவைப் பெரிதாகக் கொண்டாடுவார்கள்.
இலங்கையில் பல இடங்களில் பல விதமாக இந்தச் சடங்கு நடக்கும். உதாரணமாக 1960ம் ஆண்டுவரை மட்டக்களப்புப் பகுதியில் பழைய மரபு படியே சடங்குகள் நடந்தன. ஒரு வீட்டில் பெண் வயதுக்கு வந்ததை ஊரக்குச் சொல்ல குரவை ஒலிசெய்வார்கள் பெரிய பிள்ளையான அன்று பின்னேரம் ஒரு சில உறவினர்களுடன் மட்டும் முதல் நீராட்டப்படுவாள். பின்னர் ஏழு அல்லது ஒன்பது நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் மஞ்சள் பூசப்படும். மரக்கறியுணவு கொடுக்கப் படும. உடல், உள பரிசுத்தத்திற்காக இச்சடங்குகள் தொடரும்.
ஏழாம் அல்லது ஒன்பதாம் நாள், சுமங்கலிகள் ஐந்துபேர் வந்து ஐந்து விதமான மலர்கள் போட்ட நீரால் இரண்டாம் சடங்கு செய்வார்கள். பட்டுச் சேலை கட்டி, நகைபோட்டுப் பெற்றோர் பெரியோரிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். உறவினர் சிறு பரிசுகள் கொடுப்பார்கள். முறை மாப்பிள்ளை வீட்டார் ‘மாப்பிள்ளை’க் கல்யாணம் போன்ற சடங்குகளைச் செய்வார்கள். இவற்றிலெல்லாம பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
இந்தியா, இலங்கை மற்றும் உலகில் பல பகுதிகளில் நடக்கும் மேற்கண்ட சடங்குகள் பிராந்திய சம்பிரதாயத்துடனும் சமயத்துடனும், கலாச்சாரத்துடனும் பின்னிப் பிணைந்தவை. ஆனால் இன்று தமிழ்க் குடும்பங்களில், மேற்கு நாடுகளில் ஆடம்பரமாக நடக்கும் பூப்புனித நீராட்டு வைபவங்கள் எந்தக் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது என்பது ஆராய்வுக்குரிய விடயம்.
பெரிய பிள்ளையான பெண்ணுக்குச் சினிமா நடிகைளின் சாரத்தில் அலங்காரம் செய்வது, ஆண்டாள் போல சிங்காரிப்பது என்பன கலாச்சாரம் கடந்த விடயங்கள். இந்த ஆடம்பரங்களை விட, வயது வரும் பெண்ணுக்குச் சொல்ல வேண்டிய விடயங்களைத் தாய்கள் விபரமாகச் சொல்வது அவளின் மனவளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத விடயம். மாத விடாய் வரும்போது பெண்களின் உடலில் எத்தனையோ மாற்றங்கள் நடக்கும். மார்பகங்கள் திரண்டுவரும, அப்போது சில பெண்கள் அசௌகரியமான நோவை உணரலாம். இடுப்பு விசாலமாகும், இதனால் நாரியுழைவு வரலாம். உடல் மாற்றத்தை முழுக்க உணராததால் மனப்பயம் வரலாம்.
பெண்கள் வயதுக்கு வரும் கால கட்டத்தில் அவர்களின் சாப்பாட்டு விடயத்தில கவனமாக இருக்க வேண்டும். பெரியபிள்ளையாகும் கால கட்டத்தில் ‘பார்ட்டி’ வைப்பது மட்டுமல்ல, தனது உடம்பின் வளர்ச்சியை, உள்ளத்தின் குழப்பங்களையும் ஒரு இளம் பெண் உணர்ந்து கொள்ளத் தாய் தகப்பன் உதவலாம்.
மாதவிடாய் வந்தவுடன் பெரிய ‘பார்ட்டி’ வைத்துக்கொண்டாடுவதுபோல் மாதவிடாய் நிற்கும்போதும் ஒரு பெரிய விழா வைத்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அப்போதுதான் ஒரு பெண்ணுக்குச் சில கஷ்டங்களிலிருந்து சுதந்திரம் கிடைக்கிறது.
(‘தாயும் சேயும்’ என்ற எனது மருத்துவப் புத்தகத்தில் இளம்தலைமுறையினர் தெரிய வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன)
-இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்