தமிழ் வாசகர்களுக்கு ‘இந்திய மெய்யியல்’ பற்றிய அறிமுக நூல்கள் மிகக் குறைவு; விரிந்து பரந்த ஆய்வு நூல்களும் மிகமிகக் குறைவு. கி.லஷ்மணன் எழுதிய ‘இந்தியத் தத்துவஞானம்’ என்ற நூலும், வெ.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்த தேவி பிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘இந்தியத் தத்துவம் - ஓர் அறிமுகம்’ என்னும் நூலும் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இந்த நூல்களுடன் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள மிருணாள் காந்தி காங்கோபாத்தியாயா எழுதிய ‘இந்தியாவில் மெய்யியல்’ என்ற நூலையும் இந்திய மெய்யியலைப் பயில்வோர் அனைவரும் கற்க வேண்டும். இந்நூல் சா.ஜெயராஜ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.

sa_jayaraj_450‘இந்தியாவில் மெய்யியல்’ என்னும் இந்நூலின் ஆசிரியரான மிருணாள் காந்தி காங்கோபாத்தியாயா நியாய மெய்யியல் முறையில் மிகப்பெரும் ஆய்வாளர்; சமஸ்கிருதத்தில் உள்ள மெய்யியல் நூல்களை ஆழ்ந்து நுணுகிக் கற்றறிந்தவர். இவருடைய சமஸ்கிருத மெய்யியல் நூல் புலமையைக் கண்டு அறிஞர்கள் வியந்துள்ளனர். மிருணாள் காந்தி தனது சமஸ்கிருத நூல் புலமை மூலம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா பல நூல்கள் எழுது வதற்கு உதவி செய்துள்ளார். இதற்காக, தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா ‘இந்திய நாத்திகம்’ என்ற நூலை மிருணாள் காந்திக்குக் காணிக்கை யாக்கியுள்ளார்.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவும், மிருணாள் காந்தி காங்கோபாத்தியாயாவும் கருத்து வேறுபாடு உடையவர்களாயினும், ‘நியாய மெய்யியல் முறை’ என்ற நூலை இணைந்து எழுதியுள்ளனர். இந்நூல் மிகமிக முக்கியமான நூல் ஆகும். இத்தகு புலமையாளரான மிருணாள் காந்தி, தேவிபிரசாத் பதிப்பித்த ‘அனைவருக்குமான உலக மெய்யியல்’ பற்றிய நூல் வரிசையில் இந்தியாவிலிருந்த மெய்யியல் முறைகளின் தோற்றம், வளர்ச்சி, உள்ளடக்கம் பற்றி அறிமுக வாசகர்களுக்கு எழுதிய நூலே ‘இந்தியாவில் மெய்யியல்’.

‘இந்தியாவில் மெய்யியல்’ நூலை வாசித்த போதும், வாசித்து முடித்து, இந்நூல் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து விடுபட முடியாமல் யோசித்த போதும் எழுந்த சிந்தனைகளை இந்நூல் அறிமுகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த நூல் அய்ந்து இயல்களைக் கொண்டு உள்ளது. ‘அறிமுகம்’ என்ற முதலாவது இயல் இந்தியாவில் இருந்த மெய்யியல் முறைகளைக் கற்றுக்கொள்ள முயல்வதற்கு முன்னால், கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களை விவரிக்கிறது. இந்திய மெய்யியல் முறைகளை நோக்குவதற்கான அணுகுமுறை, மெய்யியல் முறைகளின் காலத்தை நிர்ணயிப்பதில் உள்ள தடைகள், மெய்யியல் முறைகளைப்பற்றிய வகைப்பாடுகள் ஆகியவற்றை இந்த இயல் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுகிறது.

‘மெய்யியல் முறைகளும் அவற்றின் இலக்கியங் களும்’ என்னும் இரண்டாம் இயல் மெய்யியல் முறைகளின் இலக்கியங்கள், அவற்றின் உள்ளடக்கம், காலம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது. சமஸ் கிருதத்தில் உள்ள மெய்யியல் நூல்கள் அனைத்தும் - முற்கால உபநிடதங்கள் தவிர - கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியவையே என்ற உண்மை இவ்வியலைப் படித்து முடித்த பின்னர் கிடைக்கிறது. இந்த உண்மை தமிழ் வாசகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தும். இந்த இயலில் ஒவ்வொரு மெய்யியல் முறையின் இலக்கியம், அதனுடைய உள்ளடக்கம், காலம் பற்றித் தெளிவான சித்திரத்தைத் தந்துள்ளார் மிருணாள் காந்தி. இது தமிழ் மெய்யியல் வரலாற்றை ஒப்பிட்டு ஆராய்வதற்கு உதவி செய்யும்.

மூன்றாம் இயல் ‘இந்திய மெய்யியலில் பேசப் படும் சில பிரதான விவாதப் பொருள்கள்’ என்ப தாகும். இவ்வியல் ஒவ்வொரு மெய்யியல் முறையின் அறிவு பற்றிய கொள்கைகளையும், பயன், நோக்கத் தையும் ஆராய்கிறது. நான்காம், ஐந்தாம் இயல்கள் அணுவைப் பற்றிய கருதுகோள்களையும், கடவுள் ஏற்பு, மறுப்பு விவாதங்களையும் எடுத்துரைக்கின்றன. இந்த மூன்று இயல்களும் இந்திய மெய்யியல் முறை களின் வளர்ச்சியை, அவற்றின் பேசு பொருள்கள் பற்றிய விவாதங்களை எடுத்துரைப்பதன்வழி விளக்கு கின்றன.

இந்த நூல் சமஸ்கிருத மெய்யியல் நூல்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே இந்திய மெய்யியலைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள பல விசயங்களைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. மிக முக்கியமாக சமஸ்கிருத மெய்யியல் நூல்களின் காலத்தைப்பற்றி இந் நூலில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனத்திற்கு உரியவை ஆகும். இந்நூலின் வழி நோக்கினால் தமிழில் உள்ள மணிமேகலை, நீலகேசி, பெருங் கதை உள்ளிட்ட பல நூல்கள் மெய்யியலைப்பற்றித் தரும் விவரங்கள் சமஸ்கிருத நூல்களின் சமகாலத் தவையாகவும், தெளிவானவையாகவும் இருக்கின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

இந்நூலில் ஆசீவகத்தைப் பற்றி ஒன்றும் கூறப்பட வில்லை என்று அணிந்துரையில் ந.முத்துமோகன் விமர்சிக்கிறார். ஆசீவகத்தைப் பற்றி பாலி மொழி நூல்களில் ஒரு சில குறிப்புகளும், மிகப் பெரும்பான் மையான குறிப்புகள் தமிழ் நூல்களிலும் உள்ளன. ஆசீவகம் தனித்த ஒரு மெய்யியல் முறை என்பதை முதன்முதலில் ஏ.எல்.பாஷமே தமிழ் நூல்களை ஆதரமாகக்கொண்டு எடுத்துக் கூறியுள்ளார். ஏ.எல்.பாஷத்தின் நூலை ஆதாரமாகக் கொண்டே ஆசீவகத்தைப் பற்றிப் பலரும் பேசுகின்றனர். சமஸ்கிருத நூல்களை மட்டுமே மூலங்களாகக் கொண்ட மிருணாள் காந்தி ஆசீவகத்தைப் பற்றிக் கூறாதது வியப்பொன்றும் இல்லை. சமஸ்கிருதத்தில் ஆசீவகத்தைப் பற்றிய குறிப்புகளே இல்லை. ஆசீவகர்கள் இயற்றிய நூல்களொன்றும் இல்லை. இதைப் போன்றே தாந்திரிகம், சைவத்தைப் பற்றிக் கூட மிருணாள் பேசாதுள்ளதைப் பற்றி வியப் படைகிறார் முத்துமோகன். தாந்திரிகம் ஒரு மெய்யியல் முறை அன்று; அது தொல்சிந்தனை முறை. பிறகு மிக முக்கிய இறையியல் அனுபவ வாதமாக உருவெடுத்தது. தாந்திரிகத்திலிருந்து தோன்றிய சைவமும்கூட ஓர் இறையியல் சிந்தனையே. இந்நூலில் வட இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த இறையியல் பள்ளியைப் பற்றியும்கூட மிருணாள் காந்தி எடுத்துக் கூறவில்லை. அவருடைய நோக்கம் இந்திய மெய்யியல் முறைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுவதே! அதை அவர் நன்றாகவே செய்துள்ளார்.

மேலும், முத்துமோகன் ‘உபநிடதங்களிலிருந்து இந்திய மெய்யியல் வரலாற்றை திடுதிப்பென்று மிருணாள் காந்தி தொடங்கிவிட்டார்’ என்றும் அணிந்துரையில் விமர்சித்துள்ளார். இந்நூல் ‘அனைவருக்குமான உலக மெய்யியல் பற்றிய நூல் வரிசை’யில் ஒரு நூல். இவ்வரிசையின் ‘கூhந க்ஷநபinniபேள’ என்ற முதல் நூலில் தேவி பிரசாத் சட்டோபாத்தி யாயா மெய்யியல் வரலாறு சிந்து சமவெளியி லிருந்து தொடங்குவதையும், மெய்யியல், இறையியல் ஆகியவை தோன்றுவதற்கான சமூகப் பின்புலத்தைப் பற்றியும், இந்திய வரலாற்றில் பண்டைய நகரமய மாதலின் சிறப்புத் தன்மைகளைப் பற்றியும் கூறி யுள்ளவற்றையும் அனைவரும் கற்க வேண்டும்.

மிருணாள் காந்தியின் ‘இந்தியாவில் மெய்யியல்’ நூல் சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ள வரலாற் றையே தருகின்றது. அதற்கு இணையான வரலாற்றை உடைய தமிழ் இலக்கியங்களில் உள்ள மெய்யியல் வரலாற்றை எழுத வேண்டியது நமது பணி.

இந்த நூல் அறிமுக நூல் என்று சொல்லப் பட்டாலும், அதிகம் கற்றறிந்தவர்களுக்கும் புதியன வற்றைக் கற்றுத் தரும் வகையில் எழுதியுள்ளார் மிருணாள் காந்தி. தமிழில் உள்ள மெய்யியல் இலக்கியங்களிலிருந்து அழகான கலைச் சொற்களை எடுத்து, தெளிவான நடையில் இந்நூலை மொழிபெயர்த்துள்ளார் சா.ஜெயராஜ்.

இந்தியாவில் மெய்யியல்

ஆசிரியர் : மிருணாள் காந்தி காங்கோபாத்தியாயா

தமிழில் : சா.ஜெயராஜ்

வெளியீடு : என்.சி.பி.எச்.

விலை : ரூ.150/-

Pin It