கதரைப் பற்றியும், அதை அரசியல் பிழைப்புக்காரர்கள் எப்படி உபயோகித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றியும், கதர் புரட்டு என்கின்ற தலைப்பின் கீழ் இதற்கு முன் பல வியாசங்கள் எழுதியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்திருக்கின்றோம். இதன் பயனாய் அரசியல் வாழ்வுக்காரர்களும், அரசியலில் கலந்து கொள்ளுவதன் மூலமாய் மக்களை ஏமாற்றி பயனடையக் கருதும் சில சுய நலக்காரர்களும், தவிர மற்ற மக்கள் யாவரும் கதரை அடியோடு பஹிஷ்கரித்து இருப்பதும் யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் இப்போதும் அதைப் பற்றி ஏன் எழுதுகிறோம் என்று சிலர் கருதலாம்.

இது எழுத வேண்டியதற்கு ஏற்பட்ட முக்கிய காரணம் என்னவென் றால், சுயமரியாதை இயக்கத்தை பழிக்கவும், தூற்றவும், அதன் மீது மூடப் பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாக்கவுமான, இழிதகைப் பிரசாரத்துக்கு அனுகூலமாக சில காங்கிரஸ்காரர் என்று சொல்லிக் கொண்டு சோம்பேரி யாய் இருந்து வயிர்வளர்க்கும் வீணர்கள் “சுயமரியாதைக்காரர்கள் கதரை வெறுக்கிறார்கள்” என்றும் “ஏழை மக்களைக் காப்பாற்றும் கதருக்கு விரோதமாய் இருந்து ஏழைகளுக்கு துரோகம் செய்கிறார்கள்” என்றும் பொதுக்கூட்டங்களில் விஷமப் பிரசாரமும், திண்ணைப் பிரசாரமும் செய்து வருவதால் கதரின் வண்டவாளத்தை ஏழை மக்களே அறியட்டும் என்கின்ற எண்ணத்தின் மீது கதர் என்ற தலைப்பின் கீழ் மறுபடியும் சில குறிப்புகள் எழுத முன்வந்தோம்.

கதர் என்பது எது என்றால் “பஞ்சை கையினால் அரைத்து, கையினால் கொட்டி, கையினால் நூற்று, கையினால் நெய்த துணிக்கு” கதர் என்று பெயர். இவற்றுள் கையால் பஞ்சை அரைப்பது என்பது இப்போது சாத்தியமற்ற காரியமாகப் போய்விட்டது. யந்திரத்தினால் தான் (ஜின்னிங் செய்ய) அரைக்க முடிகின்றது.

periyar karunanidhiகதரைப் பற்றி கதரை ஆரம்பித்த-கண்டு பிடித்த கதர் கர்த்தாக்கள் ஆரம்பத்தில் கதருக்காக சொன்ன காரணங்கள் யாவரும் அறிந்ததேயாகும். அதாவது,

1. “யந்திரம்” என்பது பேயின் பிரதி பிம்பம் ஆதலால் யந்திர உலகத்தை அழித்து கையினால் வேலை செய்யும் பழய கால வாழ்க் கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமானதால் எல்லோரும் கை ராட்டினத்தில் நூல் நூற்க வேண்டியது என்பதை முக்கிய காரண மாகவும்,

2. இரண்டாவதாக அவனவனுக்கு வேண்டிய சாதனங்களை அவன வனே உற்பத்தி செய்துகொள்ளும் தன்னம்பிக்கை தன்மை யை அடையவேண்டும் என்கின்ற தத்துவத்தில் முதலாவதாக அவன வனுக்கு வேண்டிய துணியை அவனவனே நூற்று அவனவனே நெய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

3. அதன் பிறகு மூன்றாவதாக இந்தியாவுக்கு வேண்டிய துணியை இந்திய மக்களே நூற்று நெய்து கட்டிக் கொள்வார்களேயானால் இங்கிலாந்து தேசம் வரட்சி அடைந்து தரித்திரம் பொங்கி இந்தியர் களிடம் சரணாகதி அடைந்து “சுயராஜ்ஜியம்” கொடுத்து விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

4. நான்காவதாக கைராட்டினத்தால் நூல் நூற்பதானால் இந்தியா வில் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிற ஏழை மக்களுக்கு கதர் ஒரு ஜீவனோபாயமாக இருக்கும் என்றும் அதனால் அனேக ஏழை களுக்கு வேலை கொடுக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

மற்றும் கதர் வேலைத்திட்டமானது இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைக்கும் வரைதான் அமுலில் இருக்குமே தவிர, சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு ஏழைகளுக்கு வேறு தொழில்கள் ஏற்பாடு செய்வதன் மூலம் கதர் திட்டம் எடுத்து விடப்படும் என்றும் சொல்லப்பட்டது. இவைகள் தவிர இன்னும் எத்தனையோ காரணங்களை கதருக்காக சமயோசிதம் போல் ஆளுக்குத் தகுந்தபடி அவ்வப்போது சமாதானமாகச் சொல்லப்பட்டும் வந்தது. இவ்வளவும் சொன்னவைகள் போராமல் வீர வைணவர்கள் வீர சைவர்கள் என்பவர்கள் போல் வீர கதர்காரர்கள் தங்களுடைய அதி தீவிர கதர் பக்தியைக் காட்டுவதற்கு தக்கிளியினால் நூல் நூற்றுக்கொண்டு அதாவது பக்தர்கள் சிறிது ஒழிந்த நேரம் கிடைத்தாலும் சிவசிவ, ராம ராம, என்றும் உரு ஜபிப்பது போல் ஒழிந்த நேரம் எல்லாம் தக்களியினால் நூல் நூற்றுக் கொண்டே இருப்பதின் மூலம் செய்கையில் காட்டிவந்தார்கள். இன்றும் சிலர் அம்மாதிரி செய்தும் வருகிறார்கள். மற்றும் ராட்டினத்தின் மூலமாகவோ, தக்கிளியின் மூலமாகவோ நூல் நூற்பதை தேசிய தவமாகவும், அது ஒரு ஆத்மார்த்த தத்துவமாகவும் சொல்லப்பட்டது.

இவைகள் தவிர கதர் கட்டாதவர்கள் தேசிய சபையில் அங்கத்தினரா யிருக்க அருகதை அற்றவர் என்றும், மற்றும் ராட்டினத்திலோ, தக்கிளியிலோ நூல் நூற்று தேசிய சபைக்கு நூலையே சந்தாவாகக் கொடுக்க வேண்டு மென்றும் சொல்லப்பட்டது.

இவ்வளவும் தவிர ஒரு முக்கிய விசேஷ மென்ன வென்றால் இந்த பத்து வருஷ காலத்தில் இந்த கதர் திட்டத்திற்காக கதர் இயக்கத்திற்கும் பிரசாரத்துக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ரூபாய்கள் பொது ஜனங்களிடம் வசூல் செய்து செலவழிக்கப்பட்டு வந்திருப்பதாகும்.

இவ்வளவு சக்திகளையும், லட்சியங்களையும், தத்துவார்த்தங்க ளையும், மகிமைகளையும், பிரசாரச் செலவையும் கொண்ட கதர் நாளதுவரை பொருளாதாரத்திலோ அரசியலிலோ “ஆத்மார்த்தத்திலோ” தொழில் முறை யிலோ ஏழை மக்களுக்கு-இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு அம்மன் காசு அளவு (அம்மன் காசு என்பது கால் அணாவுக்கு ஐந்துகொண்ட புதுக் கோட்டை நாணயம்) பலனாவது கொடுத்திருக்கிறதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவுடையோருடையவும், நடு நிலைமையோரு டையவும் கடமையாகும்.

கதருக்கு முதலில் கூறப்பட்ட காரணங்களாகிய யந்திரம் கூடாது என்பதானது இனி உச்சரிப்பதற்கே முடியாத காரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் யந்திரம் என்பது அறிவு வளர்ச்சியுடையவும், முற்போக்கு முயற்சியினுடையவும் அறிகுறியாகும். அறிவு வளர்ச்சியும் முற்போக்கு முயர்ச்சியின் பயனும் கூடாது என்று சொல்ல இந்த இருபதாவது நூற்றாண் டில் பயித்தியக்கார ஆஸ்பத்திரியிலும் கூட மனிதன் இருக்க மாட்டான். அன்றியும் கதர் கர்த்தாவாகிய காந்தியாரே நூல் நூற்பதற்கு அதாவது குறைந்த நேரத்தில் அதிகமான நூல் உற்பத்தி செய்யத்தகுந்த ஒரு யந்திரம் (ராட்டினம்) கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப் பதாக விளம்பரம் செய்து இரண்டு வருஷகாலமாய் முயற்சித்து வருகிறார். அந்தப் படி ஒரு ராட்டினம் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டால் அப்போது அதை யந்திரம் என்று சொல்லாமல் என்ன சொல்ல முடியும்? ஒரு சமயம் “சக்ராயுதம்” என்று காந்தியார் பெயரிடக்கூடும். (ஆரியம் (கேப்பை) அரைக்கும் கல்லுக்கும் யந்திரம் என்று தான் பெயர்) ஆகவே அந்தப் பருப்பு இனி வேகாது.

அதற்கு அடுத்த காரணங்களாகிய கதர் இங்கிலாந்தை பட்டினி போட்டு விடும் என்று சொல்லுவது. ஒரு தடவை ராமா என்றால் சகல பாவ மும் போய்விடும் என்பது போன்ற சங்கதிக்குத்தான் சமமாகச் சொல்ல வேண்டுமே ஒழிய மற்றபடி அதில் யாதொரு உண்மையும் இருக்க இட மில்லை. மற்றும் மேலே கூறப்பட்ட மற்ற காரணங்களும் அதுபோலவே பரிகசிக்கத் தக்கதாகத்தான் ஆகிவிடும். நிற்க,

மற்றபடி அவனவனுக்கு வேண்டியதை எல்லாம் அவனவனே செய்து கொள்ளக்கூடிய சக்தியை ஒவ்வொருவனும் அடைய வேண்டுமென் பதானது ஆதியில் மனித சமூகம் காடுகளிலும், மலைப்பொந்துகளிலும் காட்டு மிராண்டிகளாய், காட்டுமனிதர்களாய் திரிந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்பட்டிருக்கக்கூடும். எப்படியெனில் ஒரு மனிதனுடைய தேவை காய், கிளங்கு தவிர வேறொன்றும் இல்லாதிருந்திருக்கும். ஆனால் இப் போதைய காட்டு மிராண்டிக்கும், காட்டு மனிதனுக்கும் கூட இது சாத்திய மாகக் கூடியதல்ல என்றே சொல்லுவோம்.

மேற்கண்ட கொள்கை மூடமக்கள் காதுக்கு இனிமையானதாகவும், ஞாயமானதாகவும் காணக்கூடும். கருத்துக்கு இதைவிட முட்டாள் தனமான கொள்கை வேறு ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் மனித சமூகம் கூடி வாழவேண்டுமானால் கூட்டுறவும் ஒருவருக்கொருவர் சேர்ந்து செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருக்க முடியவே முடியாது.

ஏழைகளுக்கு பலனுண்டா?

எனவே இப்போது சிறிது செல்வாக்கு இருக்கும் ஒரே ஒரு காரணமாகிய "கதர் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கக்கூடியது" என்பதில் ஏதாவது உண்மையோ, நாணையமோ இருக்கின்றதா? என்று பார்ப்போம்.

கதரைப்பற்றிய நமது ஆராய்ச்சி அனுபவத்தில் நூல் நூற்பது ஒரு வெட்டி வேலை என்பதோடு, அது ஏழைகளை ஏமாற்றி நிரந்தரமாய் ஏழை வகுப்பு என்று ஒன்று இருந்து வருவதற்காகச் செய்யப்படும் சூட்சி என்றே முடிவேற்பட்டிருக்கிறது.

ஏன் வெட்டி வேலை?

ஏன் ராட்டினத்தில் நூல் நூற்பதை வெட்டி வேலை என்கிறோம் என்றால் ராட்டினத்தால் ஆணோ, ஒரு பெண்ணோ ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நூல் நூற்பதால் ஒரு அணா அல்லது ஒன்றே காலணா கூலி கிடைக்கின்றது என்பது கதர் நிபுணர்கள் கணக்கு. இந்தப்படி கதர் நூலில் கூலி கிடைப்பதில்லை என்றும், நூல் நூற்பதின் மூலம் நூல் நூற்கும் கூலியும் போய் கையிலிருந்தும் பணம் கொஞ்சம் நஷ்டமாகின்றதென்றும் நாம் சொல்லுகின்றோம். எப்படியெனில் இதை சற்று வாசகர்கள் கவன மாகவும். நுட்ப அறிவு கொண்டும் கவனித்துப் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ளக்கூடும். இல்லாத பக்ஷம் “பார்ப்பான் வயிற்றில் கொட்டும் பண்டம்” மேல் லோகத்தில் ஆவி ரூபமாய் இருக்கிற “பெற்றோர்களுக்குப் போய்சேருகின்றது” என்கின்ற மாதிரியில் தான் “கதர் நூற்றால் ஒரு அணா கூலி கிடைக்கின்றது” என்கின்ற பொய் நம்பிக்கை உண்டாகிவிடும்.

கதர் விளக்கம்

54, இஞ்சு அகலமுள்ள கதர் துணி 10 கஜம் கொண்டது 41/2 ராத்தல் இடை இருக்கும். இதில் சேதாரம், கஞ்சி, கனம் போனால் மீதி 4 ராத்தல் பஞ்சுக்குத் தான் நூற்கப்பட்ட கூலி கொடுக்கப் பட்டிருக்கும். அதாவது ராத்தல் ஒன்றுக்கு 5 அணா கூலி வீதம் 4 ராத்தலுக்கு 1-4-0 கூலி கொடுக்கப் பட்டிருக்கும்.

ஆனால், இந்த 10 கஜம் கதர் துணி என்ன விலைக்கு விற்கப் படுகின்றது என்று பார்த்தால் இன்று 5-10-0க்கு விற்கப்படுகின்றது. இந்த 54, இஞ்சு அகலம் 10 கஜம் துணி இந்திய மில் நூலால் நெய்யப்பட்ட துணி இன்று ஈரோடு பஜாரில் சலவை செய்தது கஜம் ஒன்றுக்கு 0-3-6 வீதம் (10 கஜத்துக்கு) 2-3-0க்கு தாராளமாய் கிடைக்கின்றது. இது கதரை விட எவ்வளவோ மடங்கு துணி மிகவும் நைசாயும், முருக்காயும், கெட்டியாயும் இருப்பதை யாரும் பார்க்கலாம்.

ஆகவே 2-3-0வுக்கு கிடைக்கும்படியான துணியைவிட மட்ட மானதும், முருக்கும், கெட்டியும் இல்லாததுமான முரட்டுத் துணியை கதர் என்கின்ற காரணத்தால் 5-10-0 விலை போட்டு வாங்குதன் மூலம் 4ராத்தல் துணிக்கு 3-7-0 அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். இந்த 3-7-0 அதிகம் கொடுக்கும் பணத்திலிருந்து தான் நூல் நூற்றவர்களுக்கும் 1-4-0 கொடுக்கப் படுகின்றதே தவிர கதரின்-துணியின் பொருமானத்தில் இருந்து கொடுக்கக் கூடியதல்ல என்பதை புத்தியில் பதியவைக்க வேண்டுகிறோம்.

கதர் நூற்பதால் ஜனங்களுக்கு ஒரு ராத்தல் ஒன்றுக்கு நூற்பவர் களுக்குக் கொடுத்த கூலி போக மேல்கொண்டு 0-8-9 அணா வீதம் நஷ்ட மேற்படுகிறது. இது தவிர 2 ராத்தல் பஞ்சில் நூற்கப்பட வேண்டிய துணிக்குப் பதிலாக 4 ராத்தல் பஞ்சு செலவாகின்றது. இதுவும் தவிர 6 மாதத்திற்கு வரக்கூடிய துணி 4 மாதத்திலேயே கிழிந்து விடுகின்றது. மற்றும் துணி முரடாகவும், உபயோகத்துக்கு அசவுகரியமாகவும் இருந்து வருகின்றது.

இதில் தான் ஏழைக் கூலிகளுக்கு தினம் 10 மணி வேலை செய்தால் 15 பை அதாவது 0-1-3 கூலி கிடைக்கிறது என்று சொல்லி ஏமாற்றுகின் றார்கள். இந்த ஏமாற்றத்தை அறிந்து கொள்ளாத மூடர்கள் தான் கதரால் ஏழைகளுக்கு லாபம் என்று சொல்லலாமே தவிர பொருளாதாரக்கணக்கும், புள்ளி விபரமும் தெரிந்தவன் கதரால் மக்களுக்கு ராத்தல் ஒன்றுக்கு 0-13-9 வீதம் பொது ஜனங்கள் பணம் நாசமாகின்றது என்றும், ஒன்றுக்கு இரண்டாக பஞ்சு வீணாகின்றது என்றும்தான் சொல்லித் தீரவேண்டும். இதிலிருந்து நமக்கு தோன்றுவ தென்னவென்றால் ‘ஏழைமக்களை’ 10 மணி நேரம் உழைக்க செய்து வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு 0-1-3 அணா கூலி கொடுப்பதை விட அவர்களை சும்மா உட்காரவைத்து சாப்பாடு போடுவதானால் மேல்கண்டபடி பொதுஜனங்களை ஏமாற்றி நஷ்டமடையச் செய்யும் பணத்தில் இருந்து இன்னம் இரண்டு பங்கு ஜனங்களுக்கு சாப்பாடு போடலாம் என்று தைரியமாய்ச் சொல்லலாம் என்பதேயாகும்.

அன்றியும் கதர் இலாகாவிலோ, வியாபாரத்திலோ கலந்திருப்ப வர்கள் புண்ணிய nக்ஷத்திரங்களில் நாமம், விபூதி, உருத்திராட்சம், துளசி மணி விற்பதில் தங்கள் பக்தியைக் காட்டுவது போல் கதர் தொழிலில் ஈடு பட்டு வயிறு வளர்ப்பதன் மூலமும் பணம் சம்பாதிப்பதன் மூலமும் தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள். இதைக் கண்டு பாமர மக்கள் ஏமாந்து பின் பற்றி வருகிறார்கள்.

காந்தியாரின் தத்துவார்த்தமும், காங்கிரசு தயவும், 10 லக்ஷக்கணக்கான ரூ. செலவு கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரமும் இல்லாவிட்டால் கதர் விற்பனையாகி “ஏழைகளுக்குப் பயன்படுமா” என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப்படி ஒருவர் தயவில் பிழைப்பது தானா “ஏழைகள்” பிழைக்கும் வழி என்றும் இது எத்தனை நாளைக்கு நடக்கும் என்றும் கேட்கின்றோம்.

ஆகவே இந்திய மக்களின் பொது அறிவையும் தேசிய ஞானத்தையும் மதிக்க இந்தக் கதர்பக்தி ஒன்றே போதுமானது.

இந்திய தேசிய தலைவர் என்பவர்களின் நாணையத்தையும், யோக்கியப் பொருப்பையும் கவனிக்கவும் இந்த கதர் பிரசாரம் ஒன்றே போதுமானது. இந்திய தேச பக்தர்கள், தேசீய வாதிகள், தேசத்தொண்டர்கள் ஆகியவர்களின் பகுத்தறிவுக்கும், விடுதலை ஞானத்திற்கும் இந்தக் கதர் பிரசாரமே போதுமானது.

இந்திய பாமர மக்களின் மத சம்மந்தமான அறிவுக்கு அவர்களது சடங்கு ஆச்சாரம், ராமாயணம், பாரதம், பெரியபுராணம். திருவிளையாடல் புராணம் ஆகிய விஷயத்தில் உள்ள நம்பிக்கை முதலியவை எப்படி அளவு கருவியாய் இருக்கின்றதோ அது போல்தான் இந்திய மக்களது பொருளாதார ஞானத்துக்கும், அரசியல் ஞானத்துக்கும் ஏழைகள் விடு தலைக்கும் அவர் களது கதர் தத்துவமே அளவு கருவியாய் இருந்து வரு கின்றது.

கடைசியாக ஏழை மக்களை காப்பாற்றுவது என்பது ஒரு மனிதனி டத்தில் இருந்து 3-7-0வை ஏமாற்றிப் பறித்து ஒரு மனிதனுக்கு 1-4-0 வை கொடுப்பது அல்ல என்றும், ஏழைகள் யார்? அவர்கள் ஏன் ஏழைகளாய் இருக்கிறார்கள்? ஏழைகள் என்கின்ற மக்களே இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனித்து அதற்கு ஏற்றபடி நடப்பதுதான் நாணையமான காரியமாகுமே ஒழிய இந்தமாதிரியான பித்தலாட்டங்களால் ஒருநாளும் ஏழ்மைத் தன்மை நீங்கிவிடா தென்றும் உறுதியாய்ச் சொல்லுகிறோம்.

உதாரணமாக இந்த 10 வருஷ காலமாய் கதர் நூல் நூற்றவர்களுக்கு கொடுத்த கூலியைக் கணக்குப் பார்த்தால் கதர் பிரசாரத்துக்குச் செலவழிக்கப் பட்ட பணத்தைவிட கொஞ்சமாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள் பெயரைச் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி அடைந்த பணம் கதர் நூற்ற “ஏழைகளுக்கு” கொடுத்ததைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.

ஆகவே இனிமேலாவது கதர் பக்தர்கள் தங்களுடைய ஆவேசத்தில் சுயமரியாதைக்காரர்களை வையாமலும், பழிசுமத்தாமலும் வேறு வழியில் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.07.1933)

Pin It