தமிழ் இலக்கிய வரலாற்றில் காலச் சூழல்களுக்கேற்பப் பல்வேறு இலக்கியங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. அவ்வாறு இடைக்காலத்தில் தோன்றித் தமிழுக்கு வளம் சேர்த்த தொண்ணுற்றாறுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன. இவற்றுள் சிற்றிலக்கியங்களுக்கான வித்துகள் தொல்காப்பியத்தில் உள்ளன. தொல்காப்பியத்தில்,

“குழவி மருங்கினும் கிழவ தாகும்”1

என்ற நூற்பா பிள்ளைத் தமிழுக்கும்,

“ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப

வழக்கொடு சிவணிய வகைமை யான”2

என்ற நூற்பா ‘உலா’ இலக்கியத்திற்கும்,

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைச் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீகிச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”3

என்ற நூற்பா ஆற்றுப்படைக்கும் வித்தாக அமைந்த பகுதிகளாவன. “தொல்காப்பியத்தின் புறப்பொருள் துறைகளான இயன்மொழி வாழ்த்து, நொச்சி மாலை, உழிஞை மாலை ஆகியவை பிற்காலத்தில் தனிச் சிற்றிலக்கியங்களாக வளர்ச்சியுற்றன”4 என்று கூறுவர். தொல்காப்பியர் தொடர்நிலைச் செய்யுட்குரிய வனப்பு எட்டனுள்  ‘விருந்து’ என்ற வனப்பு பற்றி,

       “விருந்தே தானும்

       புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”5

என்று குறிப்பிடுகிறார். இந்நூற்பா புதியதாகப் படைக்கப்படுகின்ற இலக்கியங்களைப் பற்றிப் பேசுகிறது.

இஸ்லாமிய இலக்கியங்கள்

வணிகத்தின் பொருட்டும், இஸ்லாமிய மார்க்கத்தை உலகில் வாழ்கின்ற மக்களுக்கெல்லாம் அறிவிக்கும் பொருட்டும் பல நாடுகளுக்குச் சென்ற இஸ்லாமியர்கள்  தமிழகத்திற்கும் வந்தனர். இங்கு வந்து மக்களோடு மக்களாக ஒன்றினர். மக்கள் வாழ்க்கையோடு ஒன்றியது மட்டுமன்றி, தமிழ் இலக்கிய உலகிலும் கால்பதித்தனர்.6 இந்நூலின் வாயிலாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தையும் தோற்றுவித்தனர். மேலும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமிழில் உள்ள எல்லா இலக்கிய வடிவங்களிலும் இலக்கியங்களைப் படைத்ததுடன் முனாஜாத்து, கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, படைப்போர் முதலிய இஸ்லாமியர்களுக்கேயுரிய தனிவகை இலக்கிய வகைமைகளையும் படைத்துத் தமிழ்ப் படைப்புலகில் வெற்றியும் கண்டனர்.

இஸ்லாமியச் சிற்றிலக்கியங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருட்களைப் பற்றிப் பேசுவன பேரிலக்கியங்கள். இவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்து வருவன சிற்றிலக்கியங்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புக்களைப் பெற்றுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுள் சிற்றிலக்கியங்கள் மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்ட அளவில்  தோன்றியுள்ளன. “இவைகள் பெரும்பாலும் கோவை, சதகம், கலம்பகம், அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ், தூது, பதிகம், இன்னிசை, குறவஞ்சி, தசரத்தினம், அலங்காரம், சரமகவி, பல்சந்த மாலை, வாயுறை வாழ்த்து, திருமண வாழ்த்து, ஒருபா ஒருபஃது, பஃறொடை, ஆற்றுப்படை, பள்ளு, சதுர்ப்பிரபந்தம், மஞ்சரி முதலான இன்னபிற தமிழ்ச் சிற்றிலக்கியப் பிரிவுகளையே சார்ந்துள்ளன.”7

இஸ்லாமிய இலக்கியங்களின் தோற்றுவாயாக அமைந்த மாலை என்னும் சிற்றிலக்கியமே, இஸ்லாமியச் சிற்றிலக்கிய உலகில் சிறப்பிடம் பெறுகின்றது. பல்சந்த மாலையாகத் தொடங்கிய மாலை என்னும் சிற்றிலக்கியம் இருநூறுக்கும் மேற்பட்ட அளவில் பெருகியுள்ளது.

“இஸ்லாம், தமிழுலகில் இடம்பெறத் தொடங்கியதும் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியத்தின் தொடக்கமும் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது எனலாம். இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் கி.பி. பன்னிரெண்டு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளாகிய ஏழு நூற்றாண்டுக் கால எல்லைக்குட்பட்டன ஆகும்”8 என்று இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின்  காலத்தை வரையறுக்கின்றனர்.        

இவ்வாறு  பரந்துபட்ட கால அளவில் தோன்றிய இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியக்கியங்கள், தமக்கு மட்டுமேயுரிய புதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்களையும் பெற்றுச் சிறந்து விளங்குகின்றன.

முனாஜாத்து, கிஸ்ஸா, நாமா, மசாலா, படைப்போர் முதலியன இவ்வாறு தோன்றியன. இவை இஸ்லாமியர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய கொடை ஆகும்.

இஸ்லாமியர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பினைத் தொடக்க காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் குறிப்பிடவில்லை. அந்தந்தக் காலத்தில் எழுதப்பட்ட அந்தந்த இலக்கிய வடிவங்களுக்கேற்ப யாப்பமைதிகளையும் ஏனைய இலக்கண வரையறைகளையும் பெற்று அமைந்த இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களில் அறபு, பாரசீக மொழிச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. சமயக் கருத்துக்களை மக்களுக்கு எடுத்தியம்புவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட சிற்றிலக்கியங்களில் பெரும்பாலும் பாட்டுடைத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களுடன் மற்ற இறையடியாளர்களும் இடம் பெற்றுள்ளனர். உருவமற்ற, ஈடு இணையற்ற இறைவனாக அல்லாஹ் இருப்பதால் அவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எந்த ஓர் இலக்கியமும் எழுதப்படவில்லை.

புதுவகைச் சிற்றிலக்கியங்கள்

தமிழ் இலக்கியத்தில் பல்வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. அவ்வகைச் சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் இஸ்லாமியப் பாவலர்கள் படைத்துத் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர்.

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளைச் சாராத சிற்றிலக்கிய வகைகளையும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ளனர். அவற்றுள் ஐந்து வகைச் சிற்றிலக்கியங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த சிற்றிலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. அவையாவன:

1. படைப்போர்

2. முனாஜாத்

3. கிஸ்ஸா

4. மஸ்அலா

5. நாமா

என்பனவாகும்.

இவ்வைந்து புதுவகை இஸ்லாமியச் சிற்றிலக்கியங்களுள் படைப்போர் தமிழ்ச் சொற்றொடரால் அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகையாகும்.

முனாஜாத், கிஸ்ஸா, மஸ்அலா ஆகிய மூன்றும் அறபுப் பெயரால் அழைக்கப்படும் சிற்றிலக்கியங்களாகத் திகழ்கின்றன.

‘நாமா’ பாரசீகச் சொல்லால் அழைக்கப்படும் இஸ்லாமியச் சிற்றிலக்கியமாகும்.

படைப்போர்

இஸ்லாமியர்களை இஸ்லாம் அல்லாதோர் எதிர்த்துப் போராடிய நிகழ்வுகளை படைப்போர் இலக்கியம் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. படை, போர் என்னும் இரண்டு சொற்களாலான ‘படைப்போர்’ என்னும் சொற்றொடர் அடிப்படையில் ஒன்றைக் கூறுவதாகவே உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய படைப்போர் இலக்கியங்கள் இஸ்லாத்தை எதிர்த்த பகைவர் தலைவனின் பெயரைக் கொண்டே இயற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் தமக்கென வகுத்துக் கொண்ட இலக்கியக் கோட்பாடுகளை மையமிட்டுப் படைக்கப்பட்ட தனித்துவமான இலக்கிய வகையான படைப்போர் இலக்கிய வகை இஸ்லாமிய மார்க்கக் கோட்பாடுகளும் தமிழ் இலக்கிய மரபுகளும் கலந்த புதிய இலக்கிய வகையாகும்.

இவ் இலக்கிய வகைக்குத் தோற்றப் பின்புலமாக இஸ்லாமிய மார்க்க நெறியின்  தோற்ற வளர்ச்சி வரலாற்றுப் பின்புலங்களே முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன. அவ்வச் சூழல்களில் நிகழ்ந்த போர்களே இவ்விலக்கிய வகையின் தோற்றத்திற்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளன.

இப்போர்கள் அனைத்தும் இஸ்லாமிய வரலாற்றில் தற்காப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களேயன்றி வலிந்து மேற்கொள்ளப்பட்ட போர்கள் அல்ல என்பதையும் உணர்தல் வேண்டும். திருக்குர்ஆனும் நபிமொழிகளும் போர்களை வலியுறுத்தவில்லை; தற்காப்பிற்காகவே அவற்றை மேற்கொள்ள அவை அறிவுறுத்துகின்றன.

அறபுமொழி இலக்கியங்களிலும் இஸ்லாமிய மார்க்கத்தில் நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் யாவும் பதிவாகியுள்ளன.

சக்கூன் படைப்போர்

படைப்போர் இலக்கியங்களுள் காலத்தால் முந்தியது ‘சக்கூன் படைப்போர்’ ஆகும். இந்நூல் இயற்றப்பட்ட விவரங்களை இந்நூலின் ஆசிரியரான வரிசை முகியித்தீன் புலவரே நூலில், “ஹிஜ்ரி 1098, 1686 ஆம் வருடம் ஆவணி மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி, வெள்ளிக்கிழமை நண்பகல் நேர குத்துபா தொழுகைக்குப் பின்னரே சக்கூன் படைப்போர் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று குறித்துள்ளார்.

‘சக்கூன் படைப்போர்’ இஸ்லாம் அல்லாத கூட்டத்தாருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரினையே பாடுகின்றது.

இப்படைப்போரில் இஸ்லாம் அல்லாத கூட்டத்தாரின் தலைவனாக சக்கூன் என்பவனே திகழ்கிறான். ஈராக் நாட்டின் தலைவனான சக்கூனிடத்துப் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையை வலியுறுத்த வேண்டி மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இப்போர் நிகழ்கின்றது.

போரின் இறுதியில் சக்கூனும் அவனது கூட்டத்தாரும் தோற்றுவிட்டனர்; பிறகு இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையினை ஏற்றுக் கொண்டனர். அவனிழந்த நாடு அவனிடமே மீண்டும் அளிக்கப்படுகிறது. அவன் இஸ்லாத்தின் வழியில் ஆட்சி புரிவதாக சக்கூன் படைப்போர் நிறைவு பெறுகிறது.

ஐந்து படைப்போர்

படைப்போர் இலக்கிய வரிசையில் ஐந்து படைப்போர் என்பது காலத்தால் இரண்டாவது நிலையில் தோன்றிய படைப்போர் இலக்கியமாகும்.

ஐந்து படைப்போரின் உட்பிரிவுகளாக,

1. இபுனியன் படைப்போர்

2. உச்சி படைப்போர்

3. வடோச்சி படைப்போர்

4. தாகி படைப்போர்

5. இந்திராயன் படைப்போர்

ஆகிய படைப்போர் இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்காணும் இவ் ஐந்து படைப்போர் இலக்கியங்களின் பெயர்களில் இடம்பெற்றிருக்கும் இபுனியன், உச்சி, வடோச்சி, தாகி, இந்திராயன் முதலான பெயர்கள் அவ்வப் போர்களில் இஸ்லாம் அல்லாதாரின் கூட்டத்திற்குத் தலைமையேற்று வரும் தலைமை மாந்தரின் பெயர்களே.

இறவுசுல்கூல் படைப்போர்

‘இறவுசுல்கூல் படைப்போர்’ என்ற இந்நூல் குஞ்சுமூசு லெப்பை ஹாஜி ஆலிம் புலவரவர்களால் பாடப்பட்டது. “பூவாறு” என்னும் நகரைச் சேர்ந்த இவர் செய்யிது முகம்மதென்பவரின் புதல்வராவார்.

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இறவுசுல்கூல் பெயரிலமைந்த படைப்போருக்கு ‘சல்கா படைப்போர்’ என்னும் பெயரும் உண்டு.

‘சல்கா’ என்ற பெண்ணின் வரலாற்றை இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.

இந்நூல் இஸ்லாத்தை எதிர்த்துப் போராடிய சல்காவின் தந்தை இறவுசுல்கூல் என்பவனைப் பற்றி மட்டுமன்றி கற்பு நாயகி என்று அழைக்கப்படுகின்ற ‘சல்கா’ அல்லாஹுத் தஆலாவின் உண்மைத் திருத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய இயற்கை ஆற்றலை அறிந்து இஸ்லாத்தின் மீது ‘ஈமான்’ எனும் நம்பிக்கை கொண்டு  இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றியும் குறிப்பிடுகின்றது.

சையிதத்துப் படைப்போர்

இஸ்லாமியப் படைப்போர் இலக்கியங்களில் காலத்தால் மூன்றாவதாகத் தோன்றிய படைப்போர் இலக்கியமாகத் திகழ்வது சையிதத்துப் படைப்போர் ஆகும். ‘இறவுசுல்கூல் படைப்போர்’ எனும் நூலை இயற்றிய குஞ்சுமூசுப் புலவரே இந்நூலையும் இயற்றியுள்ளார். இவர் பெண்களைத் தலைமை மாந்தராகப் பெற்றுச் சிறக்கும் படைப்போர் இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

இஸ்லாமியப் படைப்போர் இலக்கியங்களுள் சையிதத்துப் படைப்போர், இறவுசுல்கூல் படைப்போர் ஆகிய இரண்டு படைப்போர் இலக்கியங்கள் மட்டுமே போர் நிகழ்வுகளைப் பெண்கள் தலைமையேற்று நடத்தும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

இவை தவிர, அப்துல் காதிர் புலவர் இயற்றிய காசீம் படைப்போர், வாலை அப்துல் காதிர் சாகிப் புலவர் இயற்றிய மலுக்கு முலுக்கின் படைப்போர், செய்யது முகம்மது புலவர் இயற்றிய நபுஸுப் படைப்போர், அ.லெ.அ. அமீது இயற்றிய இபுலீசுப் படைப்போர், காளை ஹஸனலிப் புலவர் இயற்றிய வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கர்பலா களப்போரினை விவரிக்கும் ஹூசைன் படைப்போர் ஆகிய படைப்போர் இலக்கியங்களும் இன்ன பிற நூல்களும் இஸ்லாமியப் புலவர்களால் படைப்போர் இலக்கியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.

முனாஜாத்து

‘முனாஜாத்து’ என்னும் அறபுச் சொல்லுக்கு இரகசிய உரையாடல் (Secret Conversation with Allah) என்பது பொருள்; வழிபாட்டுப் பிரார்த்தனை என்பதும் முனாஜாத்துப் பாடல்களுக்குப் பொருந்தும். ‘புகழ்ந்திரப்பு’ என்பதையும் முனாஜாத்துக்குரிய கருத்தாகக் கொள்ளலாம்.

முனாஜாத்துப் பாடல்கள் பாடாத இஸ்லாமியப் புலவர்களே இல்லை எனும் அளவிற்கு இஸ்லாமியப் புலவர்கள் எண்ணிறந்த முனாஜாத்து இலக்கியங்களைப் படைத்துள்ளனர். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவர்களின் பெயர்களிலேயே இம் முனாஜாத்து இலக்கியங்களின் பெயர்கள் அமைந்திருக்கும்.

அல்லா பேரில் முனாஜாத்து, றசூலுல்லா பேரில் முனாஜாத்து, பாத்திமா (றலி) அவர்கள் பேரிலான முனாஜாத்து, அஹ்ஸனுல் முனாஜாத்து, ஆற்றங்கரை நாச்சியார் முனாஜாத்து, குணங்குடி மஸ்தான் சாகிபு வலியுல்லா ஞானப் புதையல் அறபு முனாஜாத்து, குத்பு நாயகர் புகழ் முனாஜாத்து, ஹக்கு பேரில் முனாஜாத்து, மீரான் சாஹிபு முனாஜாத்து போன்று பல முனாஜாத்து இலக்கியங்கள் இஸ்லாமிய இலக்கியத்திற்கு வளம் சேர்க்கின்றன.

கிஸ்ஸா

‘இஸ்லாம்’ என்னும் அறபுச் சொல்லுக்குக் ‘கதை’ என்பது பொருளாகும். ‘கிஸ்ஸா’ என்னும் சொல் ‘கஸஸ்’ என்னும் அறபு அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. ‘கஸஸ்’ என்பதற்கு அறபு மொழியில் ‘கதையுரைத்தல்’ என்னும் பொருள் உள்ளது.

தமிழில் நாட்டுப்புறக் கதைகள், கதைப் பாடல்கள் எவ்வாறு பழமையும் முதுமையும் பெற்றுத் திகழ்கின்றனவோ அது போலவே அறபு மொழியில் ‘கிஸ்ஸா’ திகழ்கிறது.

தமிழில் தோன்றிய முதல் ‘கிஸ்ஸா’ இலக்கியம் சைத்தூன் ‘கிஸ்ஸா’. இதனை கி.பி. 1874 இல் ஷேக்லெப்பை என்பார் இயற்றியுள்ளார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் தோன்றியுள்ளன.

சைத்தூன் கிஸ்ஸா, அய்யூப் நபியினுடைய கிஸ்ஸா, முகம்மது அனீபு கிஸ்ஸா, சுல்தான் இபுறாகிமுடைய கிஸ்ஸா, யூசுபு நபி கிஸ்ஸா, குலேபகாவலி கிஸ்ஸா, தமிமுல் அன்ஸாரி அவர்களின் கிஸ்ஸா முதலிய கிஸ்ஸாக்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ளன.

மஸ்அலா இலக்கியங்கள்

‘மஸ்அலா’ என்னும் அறபுச் சொல்லிற்கு ‘வினாவிடை’ என்பது பொருளாகும். ‘மஸ்அலா’ என்னும் அறபுச் சொல் ‘ஸூஆல்’ (Su’al) - (கேள்வி) எனும் அறபு வேர்ச் சொல்லிருந்து தோன்றியதாகும். அறபு மொழியில் ‘மஸ்அலா’ என்பதன் பிறிதொரு பொருள் ‘பிரச்சனை’ என்பதாகும். ஆகவே புதுவகை இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய வடிவங்களுள் ஒன்றான ‘மஸ்அலா’ என்பதற்கான நேரடியான பொருள் பிரச்சனை அல்லது வினாவிடை என்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாமிய மார்க்கம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு மார்க்க அறிஞரை அணுகி அவரிடம் வினா எழுப்பி விடைபெறுவது வழக்கமாக இருந்தது. அந்த வகையில், இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான - இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகள் தொடர்பான ஐயங்களை வினாவாக எழுப்பி விடை பெறும் இலக்கியமாக இவ் இலக்கிய வகை இருக்கின்றது.

கி.பி. 1572இல் தோன்றிய ஆயிர மஸ்அலாவென்று வழங்கும் அதிஜயபுராணம், தவத்துது என்னும் வெள்ளாட்டி மஸ்அலா (கி.பி.1856), நூறு மஸ்அலா (கி.பி. 1876) ஆகிய மஸ்அலா நூல்கள் இஸ்லாமியத் தமிழ் மஸ்அலா இலக்கியங்களுள் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.

நூறு மஸ்அலாவோ இலக்கியச் சுவை மிகுந்தும் மொழிநடையில் ஏனைய இரு மஸ்அலாக்களிலிருந்து சிறந்தும் காணப்படுகின்ற புகழ்பெற்ற நூலாகும்.

நாமா

‘நாமா’ (Nama) என்னும் இச்சொல் நாமே (Nameh) என்னும் பாரசீகச் சொல்லின் தமிழ் வடிவமாகும். பாரசீக மொழியில் ‘நாமே’ என்னும் சொல் கதை அல்லது நூல் அல்லது தொடர் வரலாறு எனப் பொருள்படுகிறது.

பாரசீக மொழியில் ‘நாமே’ என்னும் சொல் ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பிரிவினைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு செய்திகளை ஒரு தொடர் நிகழ்வுகளாகப் படைத்துக் காட்டும் ஓர் இலக்கிய வகையாகவும் இவ் இலக்கிய வகை திகழ்கிறது.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் இஸ்லாமியக் கருத்துகளையும் வரலாறுகளையும் தமிழுலகில் பரப்புதல் வேண்டும் என்ற ஆதங்கமே நாமா என்னும் புதுவகை இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவதற்குக் காரணமாயிற்று என்பார் ம. முகம்மது உவைஸ்.

முதன்முதலில் தமிழில் நாமா இலக்கிய வகையைப் படைத்த பெருமை ஐயம்பேட்டை மதார் சாஹிப் புலவர் அவர்களையே சேரும். இவர் 1751 ஆம் ஆண்டு மிஃறாஜ் நாமா என்னும் இலக்கியத்தைப் படைத்தார். இந்நூலில் புலவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு 1758ஆம் ஆண்டு சையது முஹம்மது அண்ணாவியார் அவர்களால் ‘அலிநாமா’ பாடப்பட்டுள்ளது.

இதற்குப் பின் 1799ஆம் ஆண்டு மாலிக் சாஹிப் என்பார் தொழுகை நாமாவை இயற்றியுள்ளார். 1868இல் ஆகிறத்து நாமா இயற்றப்பட்டுள்ளது.

‘சக்கராத்து நாமா’, ஆகாயத் நாமா, இபுலீசு நாமா, தஜ்ஜால் நாமா, நசீகத்து நாமா, ஹக்கீகத் நாமா, முனாஜாத் நாமா, கல்ஸர் நாமா போன்ற   முப்பதுக்கும் மேற்பட்ட நாமா நூல்கள் கிடைத்துள்ளன. இவை இஸ்லாமிய இலக்கிய வகைகளுள் குறிப்பிடத்தக்க இடத்தினையும் பெறுகின்றன.

படைப்போர், முனாஜாத்து, கிஸ்ஸா, மசாலா, நாமா உள்ளிட்ட ஐந்து இஸ்லாமியப் புதுவகை இலக்கியங்கள் மட்டுமன்றி திருமண வாழ்த்து என்று ஓர் இலக்கிய வகையும் ‘நொண்டி நாடகம்’ என்றோர் இலக்கிய வகையும் இஸ்லாமியர்கள் படைத்த புதுவகை இலக்கியங்களாக இடம்பெற்றுள்ளன.

இவ்விலக்கியங்கள் அனைத்தும் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கு அணிசேர்ப்பதுடன் தமிழன்னைக்குப் புதிய அணி ஆபரணங்களைப் படைத்த பெருமையையும் பெற்றுத் திகழ்கின்றன.

அடிக்குறிப்புகள்

1.      க.வெள்ளைவாரணன் (உ.ஆ.), தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம், நூ.24,ப.289.

2.      மேலது., நூ.25, ப. 292.

3.      மேலது., நூ.30, ப. 333.

4.      ந.வீ.செயராமன், சதக இலக்கியங்கள், ப. 10.

5.      க. வெள்ளைவாரணன் (உ.ஆ.), தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், நூ. 231, ப.1028.

6.      ம.முகம்மது உவைஸ், பீ.மு. அஜ்மல்கான், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி 1, பக்.84-88

7.      மேலது., தொகுதி 3, ப.14

8.      மேலது.இ ப.15.

பேராசிரியர் உ. அலிபாவா,  தலைவர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.