சிங்கப்பூர் என்பதே மிகப் பெரிய பொருட்களின் விற்பனை சந்தை - “ஷாப்பிங் சென்டராக” - இருக்கிறது. பத்து பெரிய “மால்களை” ஒன்று சேர்த்து கொஞ்சம் குடியிருப்புகளையும், கொஞ்சம் மக்களையும், கொஞ்சம் அலுவலகங்களையும் கூட்டிச் சேர்த்த சந்தை அங்காடிதான் சிங்கப்பூர். “ஷாப்பிங் மால்” என்பது சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த விஷயமாகி விட்டது. பொருட்களை வாங்கச் செல்லும் இடமாக இருந்தது முன்பு. நாளின் வேலை நேரத்தை அங்கு பலர் கழிக்கிறார்கள். பொழுது போகிறது. குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து அவர்களை விடுவித்துக் கொள்ள மிகச் சிறந்த உபாயமாக இருக்கிறது. புகலிடமாகவும் இருக்கிறது.
இப்படி ‘ஷாப்பிங் மாலில்’ அடைக்கலமாகிற மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படம் “Gone Shopping”. இவ்வாண்டில் வெளிவந்திருக்கும் “My Magic” என்ற படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு முக்கியப் பரிசுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. அதில் வரும் குடிகார அப்பாவும், அவரது வளரும் மகனும் முக்கியமாக இடம் பெறுகிறார்கள். குடிகார அப்பா வளரும் பையனை ஒட்டி அவரது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடிவெடுப்பதை அந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது. “Gone Shopping” ஒரு பெண் இயக்குனரின் முதன்முயற்சி என்ற வகையில் குறிப்பிடத்தக்க படமாகும்.
அறுபதுகளில் சிங்கப்பூரை மலாய், சீனப்படங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. 1965ல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றபின் குறிப்பிடத்தக்கபடி படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. 1997ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் “12 Storeys” படம் நுழைந்த போது சிங்கப்பூர் படங்களுக்கான முதல் அங்கீகாரம் உலக அளவில் கிடைத்தது. 1999ல் எட்டு படங்கள் வெளிவந்தது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. 2005ல் அதிக அளவில் படங்கள் தயாரிக்கப்பட்டன. 2008ல் வெளிவந்த எரிக் கூஸின் “My Magic” கொடுத்த வெற்றியும் உலக அளவிலான அங்கீகாரமும் சிங்கப்பூரின் தனித் தன்மையானப் படங்கள் பற்றி முன்மாதிரிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனா, மலாய், தமிழ் ஆகியவை ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. எனவே அம்மொழிகள் சார்ந்த மக்களின் கலாச்சார வாழ்க்கையின் கலவைப் பிரதிபலிப்பாக சிங்கப்பூர் திகழ்கிறது. பூர்வக்குடிகளான ஆட்சி மொழியைப் பேசும் மக்களூடே சீனா, இந்தியா, மலாய், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்தவர்களும், இடம் பெயர்ந்து வந்தவர்களுமாக சிங்கப்பூர் நிரம்பி வழிகிறது. பலமாடிக் கட்டிடங்கள் அவர்களுக்குப் புகலிடமாகிறது. மாடிக் கட்டிடங்களில் அவர்களின் வாழ்க்கை விசித்திரமாகக் கூட அமைந்து விடுகிறது. ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் ஒரே சமயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் ஆச்சர்யமூட்டக் கூடியதாகும் இந்திய வம்சாவழி குடும்ப பூப்பு நன்னீராட்டு விழாவோ, சீனக் குடும்பத்தினரின் சவ இறுதிச் சடங்கோ, மலாய் குடும்பத்தினரின் திருமணமோ ஒரே கட்டிடத்தில் கூட சர்வ சாதாரணமாய் நிகழ்வதுண்டு. தென்னிந்திய உணவுப் பொருட்களையோ, வாழை இலை சாப்பாட்டையோ சுலபமாகப் பெற முடியும்.
சிங்கப்பூரின் 40 சதவீத மக்கள் புத்தமதத்தைப் பின்பற்றுகிறவர்கள். தாவோயிசம், கன்பூசியனிசம், கிறிஸ்துவ மத நம்பிக்கைக் கொண்டவர்கள் 14 சதம் இருக்கிறார்கள். 7 சதவீத இந்திய இந்துவினர் உள்ளனர். 14 சதவீதம் எந்த மதத்தையும் சாராமல் தங்களை சுயசிந்தனையாளர்களாக அறிவித்துக் கொள்கிறார்கள். ஆனால் சுயசிந்தனை வெளிப்பாடுகளுக்கும், எதிர் குரல்களுக்கும் சிங்கப்பூர் ஜனநாயகம் என்றைக்கும் பெரியதாக கௌரவம் தந்ததில்லை என்று சொல்லப்படுவதுண்டு. “ஷாப்பிங் மால்”களுக்குச் செல்வது, சாப்பிடுவது ஆகியவை அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்த விஷயங்கள். பெரும்பான்மையான மக்கள் வேலை நேரத்தைத் தவிர ஒரு பகுதி நேரத்தை அங்குதான் கழிக்கிறார்கள். “பல் மருத்துவரைப் பார்க்கக்கூட அங்குதான் செல்ல வேண்டும்” என்கிறார்கள். நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளங்கள் என்று விரிவான அளவில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக அவை இருக்கின்றன.
பெண் இயக்குனர் லி லின் வீ 23 வயதில் தன் முதல் குறும்படத்தை எடுத்திருக் கிறார். எழுத்தாளராயும் அவர் இருக்கிற காரணத்தால் திரைப்படத்துறையில் சுயாட்சியுடன் அவரால் இயங்க முடிகிறது. 2007ல் வெளிவந்த “Autograph Book” என்ற குறும்படம் அவரின் முக்கியமான முயற்சியாக கணிக்கப்படுகிறது. அவரின் முதல் திரைப்பட முயற்சியான “Gone Shopping” மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
முஸ்தப்பா போன்ற மிகப் பெரிய “ஷாப்பிங் மால்கள்” 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தூங்காத நகரத்தில் தூங்காத அங்காடிகள் அவை. அதில் அடைக்கலம் பெறும் மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது இப்படம். அவர்கள் தங்களின் மன இறுக்கங்களிலிருந்து விடுபட அங்காடிக்குள் அடைக்கலமாகிறார்கள். 40 வயதுப் பெண் பெரிய செல்வந்தராக இருக்கிறாள். வீட்டில் அவளின் தனிமை அவளைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது. தனிமையிலிருந்து தப்புவதற்காக முஸ்தபாவிற்குள் வந்து எதையாவது வாங்கிக் கொண்டிருப்பாள். தினமும் வருகிறவள் என்ற வகையில் எல்லோர்க்கும் பரிச்சயமானவளாக இருப்பாள். தேவைப்பட்டதோ தேவைப்படாததோ வாங்கணும் என்று நினைப்பதையெல்லாம் வாங்கிக் கொண்டிருப்பாள். அவளின் பழைய காதலனைச் சந்திப்பவளுக்கு அங்கேயே இருந்து விடலாம் போலிருக்கிறது. ஆனால் அங்கு எப்போதுமாக இருந்துவிட முடியாது. அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே அவளுக்குச் சித்ரவதையாக இருக்கிறது. உள்ளேயே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாள். உள்ளேயிருக்கும் எல்லோரும் பரிச்சயமானவர்கள் என்றாலும் அந்நியமாகவே உணர்கிறாள். பொருட்களை வாங்குவதில் உள்ள பொறாமை சிலரை தூரம் போக வைக்கிறது.
சிலரை புன்னகையுடன் எதிர்கொள்கிறாள். அங்கேயே தூங்க வேண்டும் போலிருக்கிறது. தூங்குகிறாள். எதிர்ப்புக் குரலாய் கத்த வேண்டும் போலிருக்கிறது. கத்துகிறாள், அழுகிறாள். அங்கிருந்து அவளை வெளியேற்ற செய்வது கூட காவலாளிகளுக்குச் சிரமம் தருவதாகும். அங்கிருந்து வெளியேறுவது என்பது அவளுக்கு வேதனையாக இருக்கிறது. 8 வயது தமிழ்ப்பெண் குழந்தையன்று முஸ்தபாவிற்குள் வந்த பெற்றோரிடமிருந்து பிரிந்து விடுகிறது. அக்குழந்தை ரேணு காணாமல் போனவர்கள் பற்றி அறிவிப்பு தரும் இடத்தில் ஐக்கியமாகிறாள். “என்னை ஏன் விட்டுவிட்டு சென்றீர்கள்” என்று மைக்கில் அறிவித்து கெஞ்சுகிறாள். பொம்மைகளுடன் விளையாடுகிறாள். காவலாளியின் மிரட்டலை எதிர்க்கிறாள். அங்கேயே தூங்கியும் போகிறாள். பெற்றோருக்கான அவளது அழைப்பு முஸ்தபாவிற்குள் அலைந்து திரிந்து கொண்டேயிருக்கிறது. இன்னொரு இளைஞன் 22 வயதுக்காரன் பிரதானமாகிறான். அவனின் நண்பனின் சகோதரியுடன் அங்கு பொழுதைக் கழிக்கிறான். நினைவுச் சின்னமாக கத்தியன்றை வாங்குகிறான். சிறு சிறு கும்பல்களுடன் சண்டையிடுகிறான். நண்பியைப் பிரிக்கும் முயற்சிகளை எதிர்க்கும் அவன் தினசரி காலை முதல் இரவு வரை வேலைபார்க்கும் இயந்திரத் தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு முஸ்தபாவிற்குள் நுழைந்தவன். அவன் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற அழைப்பை நிராகரித்துவிட்டு அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறான். காவலாளியிடம் பிடிபட்டு கேள்விகளுக்குள்ளாக்கப்படுகிறான்.
தாங்கள் அடைக்கலமாகியிருக்கும் இடம் தங்களுக்கு புகலிடமாக இருப்பதை மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவர்களை சித்ரவதைக்குள்ளாக்குகிறது. எங்களை இங்கேயே இப்படியே விட்டுவிடுங்கள் என்று மனதுள் கதறுகிறார்கள்.
கிடைக்கிற நேரங்களையெல்லாம் பெரும் அங்காடிகளுக்குள் அலைந்து திரிந்து நூடுல்சும், காபியும் சாப்பிட்டு பிரிய மனமில்லாமல் வெளியேறும் மக்களின் கூட்டங்களாய் அவை நிரம்பி வழிகின்றன. இத்தகைய பெரிய அங்காடிகள் இந்திய நகரங்களிலும் தற்போது காணக் கிடைக்கின்றன. அங்கும் இதேபோல் 40 வயது திருமணமான 40 வயது பெண்ணையோ, தொலைந்து 8 வயது போன சிறுமியையோ, அலுவலகம் பிடிக்காமல் அலைந்து கொண்டிருக்கும் 22 வயது இளைஞனையோ காணமுடியும்.
இதன் இயக்குனர் லி லின் வீயை பெரும் அங்காடிகள் பெரிய அளவில் பாதித்திருக்கின்றன. அவளின் பள்ளி சிங்கப்பூரின் மிக முக்யமான ஆர்கிட் சாலையில் இருந்திருக்கிறது. பள்ளி முடிந்தபின்பு அவளின் பொழுதுகள் ஆர்கிட் சாலையின் பெரிய அங்காடிகளுக்குள்தான் கழிந்திருக்கின்றன. வார இறுதி நாட்களிலும் பெரும்பான்மையாக விடுமுறை நாட்களிலும் பெரிய அங்காடிகளில் அலைந்து திரிவதுதான் அவளின் பிடித்த விஷயமாகியிருக்கிறது. பெரும் அங்காடிகள் ஆசுவாசப்பட வைத்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தப்படம் என்கிறார்.
“சிங்கப்பூருக்கு வாருங்கள்
சிங்கப்பூரில் ‘ஷாப்பிங்’ செய்யுங்கள்”
என்று வரவேற்பு பலகைகள் எங்கும் வரவேற்கின்றன. ‘ஷாப்பிங்’ செய்வதற்காகவே மேல்தட்டினர் சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். இந்தியத் தமிழர்களுக்கும் மாரியம்மன் கோவிலும், ஷெராங் தெருவும், தைப்பூசத் திருவிழாவும் போல பெரும் அங்காடிகளும் வெகுவாக ஆசுவாசப்படுத்துகின்றன. ‘முஸ்தப்பா’க்கள் அவர்களை உள்ளிழுத்து நுகர்வு பொருட்களை பட்டியலிட்டு வாங்கும் இயந்திரங்களாக்கிவிட்டன. இந்த இயந்திரங்கள் மக்களுக்குள் இருந்து புன்னகை புரிந்து இருப்பை மறந்து அலைந்து திரிகிறவர்களின் குறியீடுகளை லிலின் வீ இப்படத்தில் முன் வைக்கிறார்.
- சுப்ரபாரதிமணியன