தஞ்சாவூரில் கடைசி மராட்டிய மன்னர் சிவாஜி மிமி 1855-இல் இறந்தபின் ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசு தஞ்சையில் கால் பதித்திருந்த நிலையில் தஞ்சையை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.

இங்கிலாந்து அரசர் அல்லது இளவரசர் காலனி நாடுகளுக்கு வருகை தரும்போது அங்கு நினைவுச் சின்னங்களை ஏற்படுத்துவது வழக்கம்.  இதன்படி வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு 1875-இல் வருகை புரிந்ததன் நினைவாக தஞ்சாவூரில் மருத்துவமனை நிறுவ தீர்மானிக்கப்பட்டது.

இதனை எப்படிச் செயல்படுத்துவது என்று அன்றைய மாவட்ட ஆட்சியர் எண்ணியபோது தக்க சூழல் அமைந்தது. அக்காலகட்டத்தில் மதராஸ் ராஜதானியில் எங்கும் பஞ்சம் ஏற்பட்டது.  ஆனால் (1876-1877) தஞ்சையில் பஞ்சம் இல்லை.  பஞ்சத்திற்காக மற்ற இடங்களில் செலவழித்த தொகைக்கு ஈடான தொகை தஞ்சைக்கு ஒதுக்கப்பட்டதன் விளைவாக அந்நிதியிலிருந்து தஞ்சையில் மருத்துமவனை கட்டப்பட்டது.  இதனைக் கட்ட தீவிரமாக முயற்சி செய்தவர் மாவட்ட ஆட்சியர் ஹென்றி சில்லிவான் தாமஸ்.  இவர் தஞ்சையில் பணி புரிந்த காலத்தில் (1878-1879) மருத்துவமனை கட்டப்பட்டு 1879 மார்ச் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது.  எனினும், இதன் திறப்புவிழா 1880 நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது.

tanjoremedicalclg 600இதற்கான கட்டடங்கள் கட்ட மன்னர் சிவாஜி மிமி மனைவி கைம்பெண் ராணி காமாட்சி அம்மாள் பாய் சாஹிப் நகரத்தின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் ‘இராணி பூங்கா’ என்று  இன்று அழைக்கப்படும் (பல கோடி ரூபாய் மதிப்புள்ள) 40 ஏக்கர் நிலத்தை ஆட்சியர் மூலம் அரசுக்கு அன்பளிப்பாக அளித்தார்.  இதன்படி இம்மருத்துவமனையை ‘இராசா மிராசுதார் மருத்துவமனை’ என்று அழைப்பதைவிட்டு Ôஇராணி மிராசுதார் மருத்துவமனைÕ என்று அழைப்பதே பொருத்தமானது என்று கூறுவோரும் உண்டு.

இராணியின் நிலக்கொடையைத் தவிர, மராட்டிய குடும்பம் ரூ. 30,000/- திருப்பனந்தாள் காசி மடத்துத் தலைவர் இராமலிங்கத் தம்பிரான் ரூ. 25000/- தஞ்சை மிராசுகளான பொறையார் தவசிமுத்து நாடார் ரூ. 2500/- மற்றும் டி.கோபாலகிருஷ்ண பிள்ளை போன்ற பலர் மருத்துவமனை கட்ட பணம் உதவி இருக்கிறார்கள்.  மருத்துவமனைக்கான கட்டடம் கட்ட ரூ. 66,000/- செலவானது.

1898-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மருத்துவமனையை விரிவுபடுத்திய நிலையில் திரு. அண்ணாசாமி தேவரால் ரூ. 7650/- நிதி வழங்கப்பட்டு வெளி நோயாளிகள் பிரிவு கட்டப்பட்டு அன்றைய ஆளுநரால் திறக்கப்பட்டது.

பணப் பற்றாக்குறை பொதுமக்கள் அளித்த நிதியால் ஈடுசெய்யப்பட்டது.  இங்கிலாந்திலிருந்து 34 வயதான வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு 1875-இல் வருகை தந்ததை நினைவூட்டும் விதமாக பொதுமக்களால் நிதி அளிக்கப்பட்டு இம்மருத்துவ மனையில் மெடிக்கல் ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டு ‘ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மெடிக்கல் ஸ்கூல்’ என்று பெயரிடப்பட்டது.  எனினும், நாளா வட்டத்தில் ‘தஞ்சாவூர் மெடிக்கல் ஸ்கூல்’ என்றே பரவலாக அழைக்கப்பட்டது.

இதுதவிர இக்கால கட்டத்தில் மதராஸ் ராஜதானியில் மருத்துவர்களை உருவாக்க ராஜ தானியில் இருந்த ஒரே மருத்துவக் கல்லூரி ‘மதராஸ் மருத்துவக் கல்லூரி’ மட்டுமே.

தஞ்சாவூர் மெடிக்கல் ஸ்கூல் 1883-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி ஆரம்பிக்கப்பட்டது.  இப்பள்ளியைக் கட்ட மதராஸ் மாகாண அரசு ஒரு லட்ச ரூபாய் வழங்கியது.  தொடக்கக் காலத்தில் இந்த ஸ்கூல் தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் போர்டால் நடத்தப்பட்டு, பிறகு 1905-இல் அரசுடன் இணைந்தது.

ஆரம்பத்தில் இன்றைய இராசா மிராசுதார் மருத்துவமனையில், காசநோய் பிரிவு உள்ள இடத்தில் தொடங்கப்பட்டது. பின் தாமஸ் ஹாலுக்கு மாற்றப்பட்டது.  அதன்பின் இதற்கென கட்டடம் கட்டப்பட்டு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு எதிரில் 1920-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றது.

இந்த மெடிக்கல் ஸ்கூலை மருத்துவமனை யுடன் ஆரம்பிக்க மிகவும் பாடுபட்டவர் அன்றைய தஞ்சை கலெக்டர் ஹென்றி சில்லிவான் தாமஸ் (ஐ.சி.எஸ்.). இதனை நினைவுகூறும் விதமாக மருத்துவமனையில் உள்ள நீண்ட பொது அறை தாமஸ் ஹால் என்று பெயரிடப்பட்டது.  இந்த இடத்தில்தான் அவசர சிகிச்சைப் பிரிவு தற்போது நடைபெறுகிறது.  ஆகவே இன்றும் தஞ்சைவாசிகள் அவசரச் சிகிச்சைக்குச் செல்லும்போது ‘தாமஸ் ஹாலுக்குச் செல்கிறேன்’ என்றே சொல்வது வழக்கம்.

இந்த ஸ்கூலில் ஆண்டிற்கு 15 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் பெரும்பாலோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதில் பிரைவேட் மாணவர்கள், இராணுவ மாணவர்கள் மற்றும் உதவித் தொகை பெற்று படிப்பவர்கள் என மூன்று வகையில் மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர்.  இதில் மதராஸ் மாகாண மாணவர் பிரைவேட்டாகப் படித்தால் ரூ. 60/- ஸ்கூலுக்குக் கட்டணமாகவும், வெளிமாநிலத்தவர் ரூ. 100/- கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

இதில் படித்துத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பெரும்பாலோர் தனிப்பட்ட முறையில் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.  சிலர் டீ எஸ்டேட், ஸ்பின்னிங் மில், ரயில்வே, சுரங்கம் ஆகியவற்றில் பணிபுரிந்தனர்.  இராணுவ மாணவர்கள் மீண்டும் ராணுவத்திற்கே திரும்பினர்.  உதவித் தொகை பெற்று கற்றவர்கள் தவறாது அரசில் வேலைபார்க்க வேண்டும் என்ற விதியுடன் சப் அஸிஸ்டெண்ட் சர்ஜன் என்ற பதவியில் பணி புரிந்தனர்.  இவர் களுக்கு மாத ஊதியம் ரூ. 75-5-175 என்ற விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டது.  அன்றைய மதராஸ் மாகாணத்தி லிருந்த சென்னை, விசாகப்பட்டினம் ஸ்கூலை ஒத்தே தஞ்சாவூரிலும் தேர்வுகள் நடைபெற்றன.  இந்த ஸ்கூலில் சேரத் தகுதி, எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.  நான்கு ஆண்டுகள் மருத்துவம் கற்றபின் தேர்வில் வெற்றி பெற்றவர்க்கு எல்.எம்.பி என்ற சான்றிதழ் மெடிக்கல் ஸ்கூலினால் வழங்கப்பட்டது. ஏனெனில் இவ்வகை மெடிக்கல் ஸ்கூல்கள் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட வில்லை.  1924-ஆம் ஆண்டு கணக்குப்படி தஞ்சை ஸ்கூலில் ஒரு பெண் கூட மருத்துவம் படிக்கவில்லை.

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஒரு பரிசோதனைக் கூடத்துடன் ஒரு பெரிய கட்டடம் கட்டப்பட்டு 1920 டிசம்பரில் திறக்கப்பட்டது.  அச்சமயத்தில் படித்தவர்கள் 322 மாணவர்கள் என்றாலும் 400 மாணவர்கள் படிக்கக் கூடிய அளவிற்கு ஸ்கூல் வசதியாக இருந்தது.  இந்த ஸ்கூலில் படித்தவர்கள் அறுவை சிகிச்சை கற்றுக் கொள்ள ஒரு கட்டத்தில் தஞ்சையிலிருந்து மதுரைக்குச் சென்று பயிற்சி பெற்றனர்.

பறக்கும் டாக்டர் என்ற புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் இரங்காச்சாரியும், மருந்துகளைப் பற்றிய நூல் எழுதிய ‘ஏழைப் பங்காளர்’ டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியாரும் இந்திய மருத்துவக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய கேப்டன் டாக்டர் சீனிவாச மூர்த்தியும் தஞ்சை ஸ்கூலில் பணியாற்றிப் பெருமை சேர்த்தவர்கள்.

இம்மருத்துவமனையில் வேல்ஸ் இளவரசர் (எட்வர்ட் vii) மனைவி அலெக்ஸாண்ட்ரா பல மருத்துவமனைகளுக்கு தன் அறப்பணி கொடை யினை வழங்கி பலரது அன்பைப் பெற்றிருந்தார்.  இக்கால கட்டத்தில் பிரிட்டீஷ் பேரரசர் சார்லஸ் V (அலெக்ஸாண்ட்ராவின் மகன்) அவர்களின் இந்திய வருகையை நினைவூட்டும் விதமாக அவருடைய தாயார் பெயர் சூட்டப்பட்டு மகளிர் பகுதி ‘இராணி அலெக்ஸாண்ட்ரா மெட்டர்னிட்டி மருத்துவமனை’ (QUEEN ALEXANDRA MATERNITY HOSPITAL) என அழைக்கப்பட்டது.  இப்பகுதி பொதுமக்கள் கொடை ரூ. 40,000/- மூலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.  பிறகு அரசு நிதியால் மகளிர் மற்றும் குழந்தைக்கான புறநோயாளிகள் பிரிவு ரூ. 12,600/-க்குக் கட்டப்பட்டது.

1902-இல் இம்மருத்துவமனை மதராஸ் இராஜதானியில் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.  இவ்வாண்டின் கணக்குப்படி 1537 உள்நோயாளிகள், 29,000 வெளி நோயாளிகள் நாள்தோறும் வருகைதரும் வெளிநோயாளிகள் எண்ணிக்கை சுமார் 100 என இருந்தது.  இங்குப் பணிபுரிந்த மாவட்ட மருத்துவ அலுவலர்கள் (DMO) அனைவரும் ஐரோப்பியர்கள்.  விடுதலைக்குப் பிறகே திருச்சி டாக்டர் மதுரம் போன்றவர்கள் இப் பதவியில் பணிபுரிந்தனர்.

இம்மருத்துவமனையின் கண்காணிப்பாளராக சிறப்பான முறையில் பணியாற்றி புதிய கட்டடங் களைக் கட்டியவர் லெஃப்டினண்ட் கர்னல் டபிள்யூ. ஆர்.ஜெ.ஸ்ரோக்கி.

1918-இல் காலனி அரசு மேலும் புதிய வார்டு களைக் கட்டியதை மதராஸ் ராஜதானி சட்டசபை மெம்பர் அலெக்சாண்டர் கார்டியூ திறந்துவைத்தார்.

ஆரம்ப காலத்தில் இந்தியன் மெடிக்கல் சர்வீஸ் மற்றும் மாவட்ட போர்டினால் மருத்துவமனை பராமரிக்கப்பட்டு வந்த பின்பு 1905-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அரசின் கீழ் வந்தது.

மருத்துவமனையின் பல பகுதிகள் முதல் உலகப் போர் (1914-1918) வெற்றியின் நினைவாக விரிவுபடுத்தப்பட்டன.  இதில் ஒரு அங்கமாக கண் மருத்துவமனைக்கான அடிக்கல் நீதிபதி வாலேஸ் என்பவரால் நாட்டப்பட்டு, பிறகு 40 படுக்கைகளோடு கண் நோயாளிக்கான கட்டடம் கட்டப்பட்டு, கவர்னர் லார்டு வர்சாலிஸ் கோச்சனால் 1926 ஜூலை 19-ஆம் தேதி வர்சாலிஸ் சமாதானத்தை நினைவூட்டும் விதமாகத் திறக்கப்பட்டது. அரசு இதற்கான கட்டடத்திற்கு ரூ. 25,000/- வழங்கியது.  மக்கள் பங்களிப்பாக ரூ. 45,000/- கொடுக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் காசின் கோட்டை ஜமீன்தார் நன்கொடையினால் குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவு, புதிய மகளிர் மருத்துவமனை, காசநோய்ப் பிரிவுக்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன.

1930-இல் மருத்துவம் பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை 54,318.  மதராஸ் ராஜதானி நகர்ப்புறம் தவிர்த்த மருத்துவமனைகளில் இங்கு மட்டும்தான் ஏற்ற உபகரணங்களுடன் அறுவை அரங்கு மற்றும் எக்ஸ்ரே பிரிவு இயங்கியது.  தென்னிந்தியாவிலேயே சென்னைக்கு அடுத்து தஞ்சாவூரில் 1912-இல் எக்ஸ்ரே கருவி பாட்டரியினால் இயங்கியது. இதை கல்கத்தாவில் பயிற்சி பெற்ற டாக்டர் குருசாமி முதலியார் இயக்கினார்.  பெண்களுக்கான 26 படுக்கை களுடன் கூடிய புதிய பகுதி ஆகியவற்றுடன் சிறப்புடன் இயங்கியது.

ஆனால், புகழ்பெற்ற தஞ்சாவூரில் மெடிக்கல் ஸ்கூல் 1933 மே முதல் தேதி மூடப்பட்டது.  ‘மெடிக்கல் கல்லூரிகளாக உயர்த்த வேண்டும் என்பதற்காகவே மெடிக்கல் பள்ளிகளை மூடுகிறோம்’ என்று அன்றைய நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் இதற்குக் காரணம் கூறினார்.

அமைச்சர் கருத்திற்கான உருவாக்கம் 1956-இல் அன்றைய முதலமைச்சர் காமராஜரால் கொடுக்கப் பட்டது.  இதற்கான நிலக்கொடை 80 ஏக்கர் தஞ்சை ரோட்டரி சங்கம் வழங்கியது.  இக்கொடையின் பெரும்பங்கு பி.ஏ. யாகப்பா நாடாரால் கொடுக்கப் பட்டது. மற்றவை சட்டசபை உறுப்பினரான ஏ.ஒய்.எஸ். பரிசுத்த நாடார், ராவ்பகதூர் அருளானந்த சாமி நாடார், கே.வி. சீனிவாசன், டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி போன்ற பலரால் கொடையாகத் தரப் பட்டன.  இதன் பயனாக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் 1958 ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்றைய இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் நாட்டப்பட்டது.  அது விரிவடைந்து தற்போது அனைத்துப் பிரிவுகளும் உள்ளடங்கிய கல்லூரியாக இயங்கி வருகிறது.

இராசா மிராசுதார் மருத்துவமனையில் இயங்கிய பல மருத்துவப் பிரிவுகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது இங்குக் கண் மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் ஆகிய பிரிவுகள் மட்டும் இயங்கிவருகின்றன.

Pin It