பழங்குடி இனங்களின் உரிமைகளை, தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஐக்கிய நாடுகள் சபை, 2019-ஆம் ஆண்டை பழங்குடி மொழிகளின் ஆண்டாக (International Year of Indigenous Languages) அறிவித்திருக்கிறது. உண்மையில், உள்ளூர் அல்லது சுதேசிய மொழிகளில் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப் பட்டிருக்கும் பழங்குடி மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் யுனெஸ்கோவின் நம்பிக்கை மிகுந்த நடவடிக்கை யாகவே இந்த அறிவிப்பைக் கருதவேண்டியிருக்கிறது.

இன்று இந்த பூமியில் 7000 மொழிகள் இருக்கின்றன. அவற்றில் 4 சதவிகித மொழிகளை இப்பூமியில் வசிக்கும் 97 சதவிகித மக்கள் பேசுகின்றனர். மீதமுள்ள 96 சதவிகித மொழிகளைப் பேசுபவர்கள் வெறும் 3 சதவிகித மக்கள்! இந்த 3 சதவிகிதத்தில் மூன்றில் இரண்டு பங்கினராகவும், உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதத்தினராகவும் இருக்கும் பழங்குடியினர் தான் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் தத்தம் பூர்வீகங்களில் வாழ்ந்துகொண்டு, உலகின் எஞ்சியுள்ள 80 சதவிகித பல்லுயிரியல் சூழலைப் பாதுகாத்து வருகின்றனர். பல்லுயிர்ச் சூழலையும், பன்மைத்துவத்தையும் பாதுகாத்து வரும் பழங்குடி யினரே உலகின் அதிதீவிர ஏழைகளில் 15 சதவிகிதமாக அதிகரித்திருக்கின்றனர். ஏழ்மை நிலையில் கடுமை யாகப் பாதிக்கப்படுவது பழங்குடி இனப்பெண்கள் தான். குறிப்பாக, அவர்கள் மகப்பேறு காலத்தில் உடல் நலத்தைப் பேணுவதற்கான வசதியும் சூழலும் அற்றவர்களாக இருக்கிறார்கள். பழங்குடி சமூகத்தில் நிலவும் பாலின ஒடுக்குமுறை, தவறான சிகிச்சை, சமூக நடைமுறையில் பெண்களுக்கு இருக்கும் மதிப்பின்மை முதலிய காரணிகளே அப்பெண்களை இந்நிலைக்குத் தள்ளியிருக்கின்றன என்கிறது உலக வங்கியின் ஆய்வு. 

indigenous language 19 600யுனெஸ்கோ (UNESCO), உலக வங்கி போன்ற அமைப்புகள் பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பாது காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், அந்நடவடிக்கைகளுக்கு சவால்விடும் வகையில், பல நாடுகளின் உள்நாட்டு மொழிக் கொள்கை பெரும்பான்மை வாதம் கொண்டிருக் கின்றன. குறிப்பாக, இந்தியா போன்ற பன்மொழிச் சூழல் கொண்ட நாடுகள் கல்வி, பொருளாதாரம், தொழிநுட்பம், சமூக முன்னேற்றம் முதலியவற்றில் மொழிப்பெரும்பான்மை (பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி) வாதத்தை வலிந்து திணிக்கின்றன. அதனால் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் சிறுபான்மை மொழிகளின் பயன்பாட்டுச் சூழல் குறைந்து அவை அழிவை நோக்கிச் செல் கின்றன. இந்தியாவில் இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு (People’s Linguistic Survey of India) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கை (2012) இதனை உறுதி செய்கிறது. 

தற்போது இந்தியாவில் பேசப்படும் 780 மொழிகளில் 480 மொழிகள் பழங்குடி மொழிகள். இந்திய மக்கள் தொகையில் 8.6 சதவிகிதம் இருக்கும் பழங்குடிகள் அதிகமிருக்கும் அருணாச்சலப் பிரதேசத்தில் தான் அதிகமான (66) பழங்குடி மொழிகள் பேசப்படுகின்றன. 780 மொழிகளில் பழங்குடி மற்றும்

பிற சிறுபான்மை மொழிகள் என மொத்தம் 600 மொழிகள் இன்று அழிவை எதிர்நோக்கியிருக் கின்றன. இது அழிவின் விளிம்பிற்குச் சென்று கொண்டிருக்கும் ஒட்டுமொத்த உலக மொழிகளில் 10 சதவிகிதமாகும். அதுமட்டுமின்றி, இந்திய சுதந்திரத் திற்குப் பின்னான இந்த 72 ஆண்டுகளில் மட்டும் 250 இந்திய பழங்குடி மொழிகள் அழிந்துபோயிருக் கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் இந்திய மொழி களில் 60 சதவிகிதம் அழிந்துவிடும் என்று எச்சரிக்கிறது இந்திய மக்கள் மொழியியல் ஆய்வின் அறிக்கை. ஆனால் அழிந்துகொண்டிருக்கும் இந்திய மொழிகள், இனங்கள், பண்பாடுகள் பற்றி யுனெஸ்கோவிற்கு இருக்கும் அக்கறை, இந்திய அரசிற்கு இல்லை.

பெரும்பான்மை இந்தியர்கள் பேசும் இந்தியே இந்தியாவின் மொழி என்னும் ஜனநாயகத் தன்மை யற்ற கற்பிதத்தை, இந்திய அரசு தொடர்ந்து உயிர்ப்பித்துக் கொண்டே வருகிறது. அதன் விளைவாக பெரும் பான்மை எண்ணிக்கையில் இருக்கும் அட்டவணை மொழிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அசுரத் தனமாக வளர்ந்துகொண்டிருக்கிறது இந்தி. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இந்தி மற்றும் அதன் கிளை மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை 43.63 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இது 2001-ஆம் ஆண்டின் வளர்ச்சியை விட 2.60 சதவிகிதம் அதிகம். அதே நேரத்தில் பிற மொழி களின் வளர்ச்சிவிகிதம் மிகவும் குறைந்திருக்கிறது. தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை 2001-இல் 5.91 சதவிகிதமாக இருந்தது, ஆனால் 2011-இல் 5.70 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதேபோன்று மலையாளம் 3.21 லிருந்து 2.88 ஆகவும், கன்னடம் 3.69 லிருந்து 3.61 ஆகவும், ஒடியா 3.21 லிருந்து 3.10 ஆகவும், பெங்காலி 8.11லிருந்து 8.03 ஆகவும் குறைந்திருக்கின்றன.

இந்தியின் அசுரத்தனமான தாக்குதலுக்கு பல கோடி பேர் பேசும் அட்டவணை மொழிகளே பலியாகிக்கொண்டிருக்கும் போது, சில ஆயிரம் பேர் பேசும் பழங்குடி மொழிகளின் நிலையோ பரிதாப மானது. இந்தியப் பழங்குடியினரைக் குறிக்க ‘ஆதி வாசி’ என்னும் சமஸ்கிருதச் சொல்லை பொதுமைப் படுத்துவது கூட மொழிப்பெரும்பான்மை வாதத்தின் ஒரு பகுதியே.

ஒரே நிலப்பரப்பில் ஒருங்கிணைந்து வாழும் பல சமூகங்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், பொதுச்சமூக அமைப் போடு எவ்விதத் தொடர்புமின்றி தனித்தனி இனக் குழுக்களாக வாழும் பழங்குடியினரின் உரிமைகள் பற்றி பொதுச்சமூகமும், அரசும் சிந்திப்பது மிக அரிதாகிவிட்டது. அவர்களைப் பற்றி நம் பொதுப் புத்தி கட்டமைத்திருக்கும் பிம்பமும் அபாயமானதாக இருக்கிறது. கடந்த நவம்பரில் அந்தமானின் சென்டிலீஸ் பழங்குடியினர் பற்றி நம் செய்தி ஊடகங்கள் பரப்பிய கருத்துகள், சென்டினல் தீவிலுள்ள பழங்குடியினர் குறித்து ஆழமான ஆய்வுகள் செய்தவரும், அப்பழங்குடியினரைப் பற்றி நேரடி அனுபவம் கொண்டவருமான மானுடவிய லாளர் டி.என்.பண்டிட்டை அதிர்ச்சியடைய வைத்தன. தான் வசிக்கும் நிலத்தையும் (சென்டினல் தீவு), தன் இனத்தையும், தான் பேசும் மொழியையும் தக்கவைப்பதற்கான அவர்களின் தற்காப்பு நடவடிக் கைகளையும், உரிமைப் போராட்டங்களையும் நமது ஊடகங்கள் அணுகிய முறை கண்டிக்கத்தக்கதாக அமைந்தது.

இனம், மொழி, சாதி, மதம் என ஏதோ ஒரு பெரும் பான்மையின் வழி நம்மை முதன்மையாகவும், ஆதிக்க சக்தியாகவும் நிறுவிக்கொண்டிருக்கையில் சிறுபான்மையாக இருப்பவை சிதைந்துகொண்டும் அழிந்துகொண்டும் இருக்கிறன. எப்போதும் சிறு பான்மையின் அழிவை பெரும்பான்மை தன் வெற்றி யாகக் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறது. உலகமயச்சூழல் இந்த மனநிலையை மென்மேலும் வளர்த்துக்கொண்டிருக்கும் சூழலில், தனித்தனி இனக்குழுக்களாக மிகச்சிறிய அளவில் தங்கள் பூர்வீகங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களின் இனம், மொழி, கலாச்சாரம் முதலிய அடையாளங் களையும், நிலம்,வாழ்வாதாரம் முதலிய அடிப்படை உரிமைகளையும் காக்க வேண்டியது நமது ஜனநாயகக் கடமை.

Pin It