Stan Swamyகிறிஸ்தவத் துறவி ஸ்டான் சுவாமி மரணத்தை நோக்கி மோடி அரசினால் தள்ளப்பட்டார்.

இன்று மரித்துவிட்டார்.

அவர் செய்த குற்றம் எளிய ஆதிவாசி மக்களுக்குத் தொண்டு செய்தது.

ஆனால் பிரதமர் மோடியைக் கொலை செய்ய நடந்த சதியில் அவரும் உடந்தை என்று டெல்லி அரசு குற்றம் சுமத்தியது.

மாவோயிஸ்ட் பயங்கரவாதி என்று பழி சுமத்தியது.

சிறையில் தள்ளியதோடு அவர் பிணையில் வெளி வரமுடியாமல் தடுத்து வதை செய்தது.

கொரோனா நோய் தாக்கியும் கூட அவருக்குப் பிணை தர விடாமல் அரசு தடை போட்டது.

இறுதியில் கொரோனா அல்ல அவரைக் கொன்றது.

அதிலிருந்து போராடி மீண்டார் அந்த 84 வயது முதியவர்.

ஆனால் தொடர்ச்சியான வதை தாளமுடியாமல் அந்தப் பெருந்தகை இறுதி மூச்சு விட்டார்--இன்று.

நண்பர்களே, அவர் நினைவைப் போற்ற வேண்டிய நாம் யாரும் இதை ஒரு சடங்காக மாற்றிவிடக் கூடாது.

உருக்கமாகவும், ஆவேசமாகவும் பதிவுகள் இட்டுவிட்டுப் பிறகு வழக்கம் போல் வாழ்வது இழிவாகும்.

இதில் நம் தலையாக கடமை ஒன்றுதான்.

துறவி ஸ்டான் சுவாமி நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிர்த்தெழ வேண்டும்.

இனி அனைவரும் இன்று நடக்கும் கொடுங்கோல் ஆட்சி பற்றி ஆழமாகக் கற்க முற்படவேண்டும்.

அதன் பொருட்டுக் கடுமையாக உழைக்கவேண்டும்.

எதிரிகள் பற்றிய ஆழமான புரிதலை நாம் வளர்த்துக் கொள்ளத் தவறினால் நமது மனிதத் தன்மை என்பது வெறும் மேல் பூச்சு மட்டுமே என்று பொருள்.

நாம் யார் பக்கம்?

மக்கள் பக்கமா, இல்லையா?

இதுவே அனைத்திலும் முக்கியமான கேள்வி.

இதில் நடுநிலை என்பது பெரிய குற்றமாகும். போதிய அக்கறையும், உழைப்பும் காட்டாதிருப்பதும் அவ்வாறே பெரும் குற்றமாகும் .

மக்கள் பக்கம், நீதியின் பக்கம் நாம் நிற்க முடிவெடுத்தால் மக்கள் விரோதிகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவேண்டும்.

அவ்வாறு புரிதல் ஏற்பட்டால்தான் அதன் அடிப்படையில் நம்முள் ஒற்றுமை ஏற்படும்.

இந்தப் புரிதலோடும், ஒற்றுமையோடும் நம் எதிரியை பலவீனப் படுத்தி நம்மை பலப் படுத்திக் கொள்வதை நாம் சமூக ஊடங்கங்கள் மூலம் ஓயாமல் செய்யத் தொடங்குவோமாக !

இந்த சபதத்தோடு எனது பதிவுகளை வாசியுங்கள். ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். சொந்தமாக இயன்றவரை ஆய்வுகள் மேற்கொள்ளுங்கள்.

இவற்றையெல்லாம் இடைவிடாமல் செய்யத் தொடங்கும் நமக்குள் அந்த உண்மைக் கிறிஸ்தவர் ஸ்டான் சுவாமி புத்துயிர்ப்பு பெற்று எழுவார், நம்மோடு எப்போதும் இருப்பார்.

வாழ்க மாமனிதர் ஸ்டான் சுவாமி!

அறிவும், அன்பும், அறமும் துணை

மானுட சகோதரத்துவம் ஓங்குக!

அன்புடன் மருதமுத்து

                           *****

நெகிழ்ச்சியோடு ஒரு கூடுதல் செய்தியும் படமும் இணைக்கிறேன்--

காலம் காலமாக எனது நீண்டகாலப் போராட்டப் பாதையில் அனைத்தையும் இழந்து என்னோடு கரம் கோத்து, எதிர்ப்பட்டஅனைத்து துன்ப, துயரங்களையும் தாங்கி, ஏழை எளியோர், தலித் மக்கள் மத்தியிலெல்லாம் நெடுநாள் என்னோடு வாழ்ந்திருந்து இன்றுவரை என் பணிகளுக்கெல்லாம் அடித்தளமாக இருந்துவரும் எனது மனைவி போர்க்கொடி என்னும் வாலண்டைன் லூர்து ராணி அவர்கள் 1980ல் (என்னைச் சந்திக்குமுன்) பெங்களூர் நகரில் மாமனிதர் ஸ்டான் சுவாமியின் தலைமையில் சமூகப் பணிக்கான பயிற்சி பெரும் நல்வாய்ப்பு பெற்றவர். 

அன்று போர்க்கொடியும், மற்ற பல தொண்டர்களும் தங்கள் ஆசான் ஸ்டான் சுவாமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கீழே இணைத்துள்ளேன். இது எங்கள் இருவரின் விலைமதிப்பில்லாத சொத்தாக இருந்துவருகிறது. மெய்த் துறவி, மக்கள் தொண்டர் ஸ்டான் சுவாமி எங்களோடு வாழ்ந்து வருவதாகவே உணர்கிறோம்.

கீழே உள்ள போட்டோவில் உச்சி வரிசையில் கண்ணாடி போட்டு உயரமாக நிற்பவர் தந்தை ஸ்டான்.

sten swamy groupphtoஇரண்டாம் வரிசையில் வலது ஓரத்தில் புடவை அணிந்து வெள்ளை ஜாக்கெட் போட்டிருப்பவர்தான் எனது மனைவி வாலண்டைன் லூர்து ராணி (போர்க்கொடி).

வாழ்க அந்த மெய்யான கிறிஸ்து நேசர்!

- பேராசிரியர் மருதமுத்து

Pin It