tamil oldஅண்மைக்காலமாக ‘தினமணி’ உட்பட்ட சங்பரிவார ஆதரவு ஏடுகள் சமற்கிருத மேன்மையை உரத்த குரலில் பேசத் தொடங்கி உள்ளன. அத்தோடு, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் தொண்டாற்றிய ஐரோப்பியர் அனைவரையும் கொச்சைப்படுத்தவும், இழிவுபடுத்தவும், அவர்களின் பணிகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கவும் முனைப்பாக இறங்கியுள்ளன.

‘மாக்சு முல்லர் கட்டமைத்த பொய்ப் பரப்புரை!’ என்ற தலைப்பில், கடந்த 16.12.2020-இல், தினமணி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பா முழுமைக்கும் வடமொழி இலக்கியங்களை அறிமுகப்படுத்திய மாக்சு முல்லரின் முகத்தில் அருமை யாக சேறு பூசி இருக்கிறது, அக்கட்டுரை.

வேதங்களைச் செருமன் மொழியில் மொழிபெயர்த்தவர் மாக்சு முல்லர். மற்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் வேதங்கள் பரவக் காரணமானவர் அவர். சமற்கிருத இலக்கியங்களை ஐரோப்பியருக்கு அறிமுகப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் அவர். அத்தகைய மாக்சு முல்லருக்கு “சமற்கிருதமே தெரியாது” என்கிறார் கட்டுரையாளர்.

வேதங்களை மொழிபெயர்த்த அவருக்கு, இந்தியாவின் வரலாற்றை எழுதிய அவருக்கு, இந்தியாவை வந்து பார்க்க ஏன் எண்ணம் வரவில்லை? எனவும் வினவுகிறார், கட்டுரையாளர்.

மேலும், “ஞானத்தைப் போதித்தது ரிக்வேதம்” என்கிறார். அந்த ரிக் வேதத்தை ‘ஆரியப் படையெடுப்பு’ என்று சித்தரித்தது மாக்சு முல்லர் குழு என்கிறார். “அவர் களின் மொழி ஆராய்ச்சிக்குள் அவர்களின் மதத்தைப் பரப்பும் செயல் திட்டம் இருந்தது” என்கிறார்.

“பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றில் சொல்லப்படாத ஆரியர் - திராவிடர் பாகுபாட்டை அவர்கள் முன்வைத்தார்கள்” என்கிறார்.

“ஐரோப்பிய மொழிகளும் இந்திய - ஆரிய மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று நிறுவ அவர்கள் முயல்வதற்குக் காரணம், ஐரோப்பிய வரலாற்றைவிட இந்திய வரலாறு பிற்பட்டதே என்று நிறுவ அவர்கள் ஆசைப்பட்டதே!” என்கிறார்.

சமற்கிருதம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் மொழிதான் என்பதை உலகிற்கு அறிவித்தவர்கள் ஐரோப்பிய மொழியியலாளர்கள் என்பதால், சங் பரிவார்கள் அவர்களின்மேல் சேற்றை வாரி இறைப்பதை ஒரு முழுநேரப் பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

மாக்சு முல்லர் போன்றவர்கள் சமற்கிருத மேன்மையை உயர்த்திப் பிடித்தவர்கள்; கால்டுவெல் முதலானவர்கள் தமிழிய மொழிகளின் தனித்தன்மையை ஆராய்ந்து சொன்னவர்கள்.

சமற்கிருத இலக்கிய வளம் உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு மாக்சு முல்லரே முழுமுதற் காரணர். என்றாலும், செருமன் முதலான ஐரோப்பிய மொழிகளுக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள நெருக்கத்தை மொழிகளின் ஆய்வைக் கொண்டு அவர் விளக்கிக் காட்டியதால், சமற்கிருத மொழி இந்தியாவிற்கு வெளியி லிருந்து வந்த மொழி என்பது வெளிச்சமாகிவிட்டது. இது, இராஷ்டரிய சுயம்சேவா சங் (ஆர்எஸ்எஸ்) பரிவாரங் களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பல்லாயிரம் ஆண்டு வரலாற்றில் சொல்லப்படாதது ஆரிய - திராவிடப் பாகுபாடு என்கிறார்.

“ஆரியன் கண்டாய் - தமிழன் கண்டாய்” என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது பாகுபாடல்லாமல் வேறென்ன?

“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்” என்று புறநானூறு கூறுவது ‘ஆரியர்’ என்னும் இனத்தைச் சுட்டுவதல்லாமல் வேறு எதனை?

ரிக் வேதத்தைப் பற்றிக் கூறும்போது மாக்சு முல்லர், “ஆரிய இன மனிதன் முதலில் பேசிய பேச்சுமொழி ரிக்வேத மொழிதான்” என்கிறார். ஏனெனில், வேத மொழி சமற்கிருதத்திற்கும் முந்தையவடிவம் என்பது மொழி நூலார் கருத்து.

தொன்மை ஆரிய மொழிப் பதிவில் ரிக் வேதம் முதலிடம் பெறுகிறது என்பதையும் மொழிநூலார் சுட்டிக் காட்டுகின்றனர்.

அத்துடன், “ஆரிய இன மக்கள் பற்றிக் கூறும் நூல்களில் முதல் இடம் பெறுவதும் ரிக் வேதமே!” என்கிறார், மாக்சு முல்லர்.

நடு ஆசியப் பகுதிகளில் இருந்தும், வட துருவப் பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்து வந்த பல்வேறு இனக்குழுக்களின் புலம்பல்களும் மனநிலைப் பதிவு களுமே ரிக் வேதம் ஆகும். இவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான கல் தொலைவில் பாடப்பட்ட பாடல்களும், இந்தியக் கண்டத்திற்குள் நுழைந்துவிட்ட பின் பாடப்பட்ட பாடல் களும் ரிக் வேதத்தில் நிரம்ப உள்ளன என்கிறார்கள்.

சூரியன் உச்சத்தில் வட்டமிட்டுக்கொண்டு இருப்பதாக வரும் வருணனைகள், அவர்கள் வடமுனைப்பகுதிகளில் வாழ்ந்தபோது பாடப்பட்டவை என்கிறார்கள். அதே போல, ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் நிலைத் திணைகளை (தாவரங்களை)ப் பற்றி ஆராய்ந்தவர்கள், இந்த நிலைத் திணைகள் (தாவரங்கள்) இந்தியாவிற்கு வெளியே பலநூறு கற்களுக்கு அப்பால் காணப்படுபவை என்கிறார்கள். எனவே, அப் பகுதிகளில் ஆரியர் வாழ்ந்த போது அவை பாடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ரிக் வேதப் பாடல்களில் ஆரியர்களின் வாழ்க்கை முறைகளும், போராட்டங்களும், அவர்களின் எதிரிகள் பற்றிய கருத்து அறிவிப்புகளும், யாகங்களும் பதிவாகி உள்ளன.

வச்சிராயுதத்தை ஏந்திய இந்திரன், சோம பானத்தின் உருவகமான சோமன், சூரியன், அக்கினி, உசை போன்ற கடவுள்களை நோக்கிப் பாடப்பட்ட பாடல்கள் இவை.

வேதமொழிச் சொற்கள் கிரேக்கம், இலத்தீன், செருமன் போன்ற மொழிகளின் சொற்களுடன் நெருங்கிய தொடர்புடையவை.

கிறித்துவுக்கு முந்திய ஐரோப்பியக் கடவுள்களுக்கும், ரிக் வேதக் கடவுள்களுக்கும் அதிக நெருக்கம் இருப்பதாக மாந்தநூல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றால் விளக்கம் பெறும் உண்மை என்ன வென்றால், சமற்கிருதமும் அதன் மூல மொழியான வேத மொழியும் ஆரியர்களின் மொழிகள்; ஆரியர்கள் பல்வேறு இனக்குழுக்களாக இந்தியாவிற்குள் வந்தேறியவர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும், போராட்டங்களும், எதிரிகளை நோக்கிய வசைமொழிகளுமே ரிக்கு களாகப் பதிவுபெற்றுள்ளன என்பதுதான்.

வேதங்கள் இந்திய மக்கள் அனைவர்க்கும் உரியவை என்பது அப்பட்டமான பொய். ஞானத்தைப் போதிப்பது ரிக் வேதம் என்பது பொய்களிலேயே மிகப் பெரிய பொய்.

“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்” என்று முகம்மது நபி குர்ஆனில் கூறுவது போன்றோ, “ஏழைக்கு இரங்குபவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்” என்று இயேசு பைபிளில் கூறுவதுபோன்றோ, மனித மனத்தை மென்மையாக்கும் ஒரு வரியைக்கூட ரிக் வேதத்தில் காண முடியாது.

ரிக் வேதம் முழுவதும் குடிவெறி உளறலும், பகைவனை அழிக்கக் கோரும் வேண்டுதல்களும், பகைவரை நோக்கிய வசை மொழிகளுமே நிறைந்துள்ளன. குளிர் நிலப்பரப்பில் அவர்கள் வாழ்ந்ததால், நெருப்பையும் சூரிய ஒளியையும் புகழ்ந்து கூறும் பாடல்கள் நிறைந்து காணப் படுகின்றன.

ஆனால், வாழ்வின் மெய்யறிவை - ஞானத்தைக் கற்பிக்கும் ஒரே ஒரு வரியைக் கூட ரிக் வேதம் முழுவதும் தேடினாலும் கிடைப்பது கடினம். ரிக் வேதம் திருக் குறளைப் போன்ற வாழ்வியல் அறநூலோ, திருமந்திரம் போன்ற இறையியல் நூலோ அல்ல. திருவாசகம், தேவாரம் போன்ற இறைப் பற்றியல் மன உருக்க நூலுமல்ல. அது வெறுப்பு, பகைமை, பூசலை மட்டுமே பேசுகின்ற நாடலை மக்களின் மனப்பிறழ்ச்சிச் சிந்தனைப் பதிவு நூல்.

ரிக் வேதம் ஞானத்தைப் போதிப்பது, இந்தியச் சிந்தனைச் செழுமையின் முதன் மூலம், இந்தியச் சிந்தனை விழுமியங்களுக்கு எல்லாம் அடிப்படை என்று கூசாமல் பேசித்திரிபவர்கள் அருள்கூர்ந்து ரிக் வேதத்தின் மெய்யியல் ஞானத்தைப் பற்றி எழுதுங்கள்; அல்லது ஓர் ஆய்வரங்கை ஏற்பாடு செய்யுங்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசி மக்களை நம்ப வைக்க முயற்சி செய்யாதீர்கள்.

ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிரிஃபிட் கூறுகிறார் :

“இந்தியாவிற்கு வந்து இறுதியாகக் குடியேறுவதற்கு முன்பான ஆரியர்களின் நிலைமைகளை ரிக் வேதப் பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. சில, இந்திய மதத்தை விட இந்திய ஐரோப்பியப் பண்புக் கூறுகளை வெளிப் படுத்துவனவாக உள்ளன.”

ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் படித்தாலும் திருமூலர், சிவவாக்கியர், தேவார திருவாசக ஆசிரியர்கள், ஆழ்வார்கள் போன்றோரின் இறையியல் கருத்துகளுக்கு ஒப்பாக ஒரு சொல்லையும் காணமுடிவதில்லை!. திருக்குறள் சிந்தனைகளுக்கு இணையான வாழ்வியல் செய்தி ஒன்றுகூட இல்லை.

அதில், பழைமை என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

இந்திரனே! போற்றத் தகுந்ததும், வெற்றிக்கு மூலமாய் இருப்பதும், பகைவரைத் தாழ்த்துவதுமான
திரண்ட செல்வத்தை எங்களுக்குத் தா!
சோம பானத்தைப் பருகி, இந்திரனுடைய வயிறு
கடல் போல் பரவுகிறது; அது, மிகுந்த நீருள்ள மேல்வாய்போல்
ஈரமாய் இருக்கிறது. (மண்டலம் 1 : போற்றி 2)
பொழியப்படும் இந்த சோமரசங்கள் நலம் தருபவை.
வாயுவே வா! இந்தச் சோமத்தைப் பருகு! (மண்டலம் 1 : போற்றி 23)
இந்திரனே! நீ செல்வனான தசுயுவைக் கனத்த வச்சிரத்தால்
கொன்றாய்! யக்ஞங்களைச் செய்யாமலிருக்கும்
சனகர்கள் உன் விதவித நாசத் தன்மைக்கு ஆட்பட்டு
அழிந்தார்கள். (மண்டலம் 1 : போற்றி 33)
சோமனே! நீ பெருகு. ஒவ்வொரு திசையில் இருந்தும்
உனக்கு வலிமை வருக! எங்களுக்கு நீ வலிமையைத் தா! (மண்டலம் 1 : போற்றி 91)
கருப்புத்தோல் கொண்டவர்களை நீக்குபவையும்,
துரிதமானவையும், துலக்கமானவையும், பாய்ந்து இறங்கு
பவையுமான சோம ரசங்களைப் போற்றுங்கள்! (மண்டலம் 9 : போற்றி 41)
சோமன் அவளை முதலில் அடைந்தான்; பிறகு அவளைக்
கந்தர்வன் அடைந்தான்; அக்கினி உன்னுடைய மூன்றாவது
கணவனாய் இருந்தான்; உன்னுடைய நான்காவது
கணவன் மானிடனாய்த் தோன்றுகிறான். (மண்டலம் 10 : போற்றி 85)

ரிக் வேதம் முழுவதும் இப்படி உளறல்கள் தாம்.

தினம் ‘மணிமணி’யாக வரையும் சங் பரிவாரங்களே, ஆதி ஆரியரிக்கு புகட்டும் ஞானம் எது என்பதை விளக்கப்படுத்துங்களேன்!

- இரணியன்

 

Pin It