"இந்தக் கதை விவகாரத்திலே, சமீபகாலமாக‌ சிறுகதை என்ற சொல்லாட்சி ஒன்று அடி பட்டு வருகிறது.  அந்தப் பதச் சேர்க்கையே நமக்குப் புதிது.  விக்கிரமாதித்தனின் அறு பத்து நாலு பதுமைகள் சொல்லிய சின்னக் கதைகளும் கதைகள்தான்; ராமாயணமும் கதை தான்.  சிறுகதை என்பது நம்மைப் பொறுத்த வரை அளவைத் தான் குறிப்பிட்டுக் காட்டி வந்தது; இப்பொழுது கொடுக்கும் விசேஷ அர்த்தத்தை அல்ல.  இந்தப் பதச் சேர்க்கை வெளிநாட்டுச் சரக்கு.  நமக்கு இந்தப் பதம் இங்கிலீஷிலிருந்து கிடைத்தது......” (புதுமைப் பித்தன்).

புதுமைப்பித்தனின் ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ தொடங்கி ‘கயிற்றரவு’ முடிய உள்ள கதைகளின் செல்நெறியை நம்மால் மதிப்பிட முடியுமா? புதுமைப் பித்தனின் கதைப் பயணத்தை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சொல்லிவிட முடியுமா? கதையை வாசித்த மனநிலையில் உள்ள அனுபவமும் அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற மன அவகாசமும் ஒன்றையொன்று ஒட்டி இல்லை.  அனுபவம் வேறாகவும், எழுத்தில் பதிவு செய்தல் வேறாகவும் இருக்கிறது.  எனவே சிறுகதை என்பது வாசித்து முடித்த கணத்தில் மனசில் அலையும் எண்ண வோட்டங்களைப் பதிவு செய்தல் சங்கடங்களை ஏற்படுத்தும் வடிவமாகும்.  நாவலிலிருந்து சிறுகதை இந்தப் புள்ளியில்தான் வேறுபடுகிறது.  அப்படியானால், சிறுகதைகளைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு எப்படிச் செயல்படுவது? என்ற கேள்வி நம்முள் பூதாகரமாக நிற்கிறது.  சிறுகதைகளைப் பற்றிப் பேசுவது என்பது அவ்வளவு எளிதான செயலாகப்படவில்லை...  வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும்.  அவ்வளவு தான்.  இருந்தாலும், ‘சமகாலச் செல்நெறிகள்’ சார்ந்த இந்தத் தொகுப்பு நூலை வாசித்தநிலையில் ஏற்பட்ட மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 அச்சு ஊடகம், வாசிப்புப் பழக்கம் முதலிய பிற கூறுகள் சிறுகதை என்ற வடிவத்தை எப்படிக் கட்டமைக்கின்றன? அந்தக் கட்டமைப்பிலிருந்து அவ்வடிவத்தைப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கலாமா?

 சமூகத்தில் செயல்படும் பல்வேறு செல் நெறிகள் சார்ந்து அவ்வடிவத்தை மதிப்பிடு செய்வதைவிட, ஒவ்வொரு படைப்பாளியின் சிறுகதை ஆக்கங்களை மட்டும் கால ஒழுங்கில் நின்று மதிப்பீடு செய்வது சரியாக இருக்குமா?

 நாவல் என்பது பல்வேறு பொருண்மைகள் சார்ந்து முழுமையாக இயங்கும் வடிவம்.  அதற்குள் சமூகம் சார்ந்த செல்நெறிகள் தவிர்க்க இயலாமல் பதிவு பெறும்; ஆனால் ஒரு மணித்துளி மன அவகாசத்திற்குள் செயல் படும் சிறுகதைகளுக்குள் விரிந்த பொருண் மையைக் கட்டமைக்க முயலுவது சரியாக இருக்குமா? நாவலின் ஒரு சிறு பகுதியாக அமைவது சிறுகதை.  பகுதியை வைத்துக் கொண்டு முழுமையான கருத்து நிலைகளைக் கட்டமைக்க முடியுமா?

தொன்மங்கள், வட்டாரப் பதிவுகள், விளிம்பு நிலை மக்கள், தலித்துகள், பெண் மையம், எதார்த்த வாதம், மொழியாக்கம், மார்க்சியம், சூழலியல், பெருநகரம், உளவியல், இனவரைவியல், புலம்பெயர்வு, பின்காலனியம் என்னும் மிக விரிந்த பொருண்மை களை அடிப்படையாகக் கொண்டு, சிறுகதைகளை மதிப்பீடு செய்திருக்கும் இத்தொகுதியை வாசித்த மனநிலையில் மேலே குறித்துள்ள பல்வேறு கேள்விகள், சுற்றிச் சுற்றி எழுந்த வண்ணம் இருப்பதை உணர முடிந்தது.  அப்படியானால், சிறுகதைகளை எப்படித் தான் மதிப்பீடு செய்வது? வாசித்த அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானா? என்ற கேள்விக்கும் விடை சொல்ல வேண்டும்.  இவ்விதம் விடை சொல்லும்போது வாசிப்பு அனுபவம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, பொருண்மை சார்ந்த மனநிலை முன்னுக்கு வந்து விடுவதைக் காண முடிகிறது.  இந்த மன உளைச்சலையும் மீறி இத் தொகுப்பை எப்படிப் புரிந்துகொள்வது? என்பதற்கு விடையாகக் கீழ்க்காணும் சில அடிப்படைகளை முன்வைக்க முயற்சி செய்வோம்.

 புதுமைப்பித்தன் ஆக்கங்களிலிருந்து வேறு பட்ட, வளர்ச்சியுற்ற தமிழ்ச்சிறுகதை ஆக்கங்கள் எவ்வகையில் உருப்பெற்றுள்ளன?

 சிறுகதை ஆக்கங்களில், அவற்றின் வெளிப் பாட்டுக்கூறுகள் எவ்வகையில் புதிது புதிதாக உருப்பெற்று வளர்ந்து வந்துள்ளன?

 சமூக இயங்குவெளியில் கவனத்துக்குட் படுத்தும் பொருண்மைகள், சிறுகதை ஆக்கங் களில் எவ்விதம் இடம் பிடித்துள்ளன?

முதலிய பிற உரையாடல்களை நிகழ்த்து வதற்கு இத்தொகுப்பு எவ்வகையில் அடிப்படை யாக அமைகிறது? என்ற நிலைப்பாட்டில் புரிந்து கொள்ள முயல்வோம்.

சுய மரியாதை இயக்கம், காந்தியம், இடது சாரி இயக்கங்கள், பௌத்தக் கருத்துநிலை ஆகிய பலவற்றின் அடிப்படைகளைத் தனது கதையின் உள்நீரோட்டமாகக் கொண்டு ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ என்ற முதல்கதையைப் புதுமைப் பித்தன் எழுதினார்.  அக்கதைக்குள் செயல்படும் தத்துவம் சார்ந்த கருத்துநிலை உரையாடல்கள் மிக விரிவானவை.  1930களில் அக்கதையைப் புதுமைப் பித்தன் எழுதிய போது, தமிழ்ச்சமூகத்தில் அத்தகைய உரையாடல்கள் வீரியத்தோடு முன்னெடுக்கப் பட்டு விவாதிக்கப்பட்டன.  அந்த உரையாடல் வெளியில் புதுமைப்பித்தனும் தமது முதல் கதையின் மூலம் இணைந்துகொண்டார்.  அந்தப் பயணம் ‘கயிற்றரவு’வில் நிறைவுற்றது.  வாழ்க்கையின் அர்த்தங்கள், மனித இழப்புகள், புறச் சூழல்கள் ஆகிய அனைத்துக் கூறுகளையும் ‘கயிற்றரவு’ வழி முதன்மைப்படுத்தியுள்ளார் புதுமைப்பித்தன்.  ஒரு குறிப்பிட்ட கருத்துநிலை சார்ந்து முதல் கதையை உருவாக்கிய புதுமைப்பித்தன்; இறுதிக்கதையில் பல்வேறு கேள்விகளை நம்முன் எழுப்பிவிட்டுச் சென்றுவிட்டார்.

புதுமைப்பித்தனின் மேற்குறித்த பயணத்தின் தொடர்ச்சியாக அமையும் தமிழ்ச்சிறுகதை உலகில், புதுமைப்பித்தன் தொட்டவையெல்லாம், தனித்தனிப் பரிமாணங்களுடன் ஆக்கங்களாக வடிவம் பெற்றிருப் பதைக் காணமுடிகிறது.  புதுமைப்பித்தன் உரு வாக்கிய தொன்மங்களிலிருந்து மேலும் விரிந்த பொருண்மைகளைப் பேசும் தொன்ம மரபுகள் தமிழ்ச் சிறுகதைகளில் உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.  புதுமைப்பித்தன் பதிவுசெய்த திருநெல்வேலி மொழி மற்றும் மக்கள் என்பது, இன்று தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரம் சார்ந்த மெல்லிய வாசனைகளின் இழைகளாகப் பரவும் புகை மூட்டம்போல் சிறுகதைகள் உருப் பெற்றுள்ளன.  வட்டார மரபின் முழு அடையாள மாய் கி.ரா. நம்முடன் வாழ்கிறார்.  வட்டாரம் தொடர்பான உரையாடல், தவிர்க்க இயலாமல் சூழல் சார்ந்த உரையாடலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.  இயற்கை-மனிதன்- சமூகவெளி என்னும் இயங்குதளம் சூழலியலாகப் புரிந்துகொள்கிறோம்.  இம்மரபை முன்னெடுக்கும் தமிழ்ச்சிறுகதைகள் வளமாக உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.  பாலியல் சார்ந்தும் பிற நிகழ்வுகள் சார்ந்தும் மனிதமனம் படும் பாடுகள் பல்வேறு வகையில் பல்கி இருப்பதைச் சிறுகதைகள் வழி உணர்ந்து கொள்கிறோம்.  உலகம் தழுவிய அளவில் உருவான புத்தொளி மரபும், அது ஆசிய - ஆப்பிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்கிய காலனிய மரபும் எத்தகையது என்பதை நாம் அறிவோம்.  அம்மரபு நம் சிறுகதைகளுக்குள் ஊடாட்டம் செய்திருப்பதைக் காண்கிறோம்.  இவ்வகையில் புதுமைப்பித்தனிலிருந்து மேலெழுந்து வந்த பல்மரபுகள் குறித்த புரிதலுக்கு இத்தொகுப்பு உதவுகிறது.

புதுமைப்பித்தன் காட்டிய ‘புதிய நந்தன்’, ‘பொன்னகரம்’, ‘துன்பக்கேணி’, ‘மகாமசானம்’ ஆகிய பிற கூறுகள் இன்று புலம்பெயர்தலாகவும் தலித்தியக் கதைகளாகவும் விளிம்புநிலை மக்கள் குறித்த ஆக்கங்களாகவும், ‘பெண்’ என்ற கருத்து நிலை முதன்மைப்படுத்தலாகவும் பல்வேறு வடிவங் களாக வளர்ந்திருப்பதைக் காண்கிறோம்.  இவற்றின் பல்பரிமாணங்களை இத்தொகுப்பு ஆவணப்படுத்தி யுள்ளது.  இன்றைய சமூகப் பொதுவெளியின் இயங்கு தளத்தின் முதன்மையான சிக்கலாக இருப்பதைக் கதைகள் பாடுபொருளாக்கியுள்ளன.  புதுமைப் பித்தன் தொட்டவற்றின் மூலம் இன்று பிரமாண்ட மான உரையாடல் வெளியாகியுள்ளது.  இதற்கான உரையாடல்களை இத்தொகுப்பு வழி முன்னெடுக்க இயலும்.

இனவரைவியல் பண்பு, மார்க்சியக் கருத்து நிலை, மொழியாக்கமரபுகள், எதார்த்த வாதம் ஆகிய கூறுகளில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை, சிறுகதைத் தமிழ்ச் சூழலில் உருப்பெற்றுள்ள பல் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள, அடிப்படை யான தரவுகளை நமக்கு வழங்குவனவாக அமை கின்றன.  வேறுபட்ட உரையாடல்களை மேலும் மேலும் நிகழ்த்த இத்தன்மைகள் பெரிதும் உதவும்.

இத்தொகுப்பு பல்பரிமாணப்புரிதல் சார்ந்து தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க உந்துதல் தருவதாக அமைகிறது.  சிறுகதை என்னும் ஆக்கத்தின் வடிவம், பாடுபொருள் என்ற இரட்டை நிலையில் மட்டும் இருந்த உரையாடல், பல்வேறு புதிய வெளிகளை நோக்கியும் பயணப்பட முடியும் என்பதற்கு இத் தொகுப்பு எடுத்துக்காட்டாக அமைகிறது.  தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க விரும்பும் வாசகனுக்குரிய அரிய கையேடாகவும், தமிழ்ச்சிறுகதை ஆய்வுலகில் பயணப்படும் ஆய்வாளர்க்கு உதவும் வகையிலும் இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

தமிழ்ச்சூழலில், குறிப்பிட்ட பொருண்மை சார்ந்து, பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும் மரபு மிகவும் அருகியுள்ளதை நாம் அறிவோம்.  ஆங்கில மொழியில் அம்மரபு பெரும் வளமாகச் செயல்படுவதைக் காண்கிறோம்.  இம்மரபைத் தமிழில் முன்னெடுக்க ‘மாற்றுவரிசை’ என்னும் தொகுப்பு நூல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட அனுபவம் எனக் குண்டு.  அவ்வகையில் இத்தொகுப்பு செய்நேர்த்தி யாக உருவாக்கப்பட்டிருப்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறேன்.  இவ்வகையான தொகுப்புகள் தமிழுக்கு மிகவும் தேவைப்படுகின்றன.

(குறிப்பு: ‘தமிழ்ச் சிறுகதைகளின் சமகாலச் செல்நெறிகள்’ என்னும் தொகுப்பு நூலுக்கு எழுதப் பட்ட அணிந்துரை.)

Pin It