I

அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமாகவும், பல்வேறு இனத்தவர்கள் வாழ்ந்த மாநிலமாகவும் விளங்கிய மாநிலம் வங்காளம். இந்தியாவின் பிற பகுதிகளைவிட நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் செல்லும் மாநிலமாகவும் விளங்கியது. ஐரோப்பாவின் பிரான்சைப் போன்று தனித்துவமானது. பிரான்சில் ஏற்படும் மாற்றம் ஐரோப்பா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். 1789, 1830, 1848 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவுகளை ஐரோப்பா முழுவதும் உணர்ந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பிரெஞ்சுப் புரட்சியின் கோஷங்கள் பின்னர் உலக நாடுகளிலும் பரவின. அதனால்தான் ‘பிரான்சு தும்மினால் ஐரோப்பாவிற்கு சளிபிடிக்கும் என்று கூறப்படுவதுண்டு. அதே போல், இந்தியாவில் உணர்வலைகளை ஏற்படுத்திய மாநிலம் வங்காளம். ‘இந்தியா தான் வங்காளத்தின் மாகாணமோ?” என்று காந்திஜி ஐயப்படுவதுண்டு.

பிரிட்டிஷ் ஆதிக்கம் முதலில் வேரூன்றிய மாநிலம் வங்காளம். மேலை நாட்டு இலக்கியம், கல்வி, அரசியல் சிந்தனைகள், கலாசாரம் இவற்றுடன் பூர்ஷுவா பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கத் திற்கு உள்ளான முதல் மாநிலமும் வங்காளம்தான். 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாடு இத்தாலி. அதே போல், கல்வி, அரசியல், சமயம், சமுதாயம் ஆகிய அனைத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வுதான் ‘வங்காள மறுமலர்ச்சி’. வங்காள மறுமலர்ச்சியின் பல்வேறு பரிணாமங்களை பல்வேறு கால கட்டங்களில் உணரலாம்.

1814-1833    :      ‘இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி’ எனப்படும் இராஜாராம் மோகன் ராய் கல்கத்தாவில் தமது பணிகளைத் துவக்கியது முதல் அவரது மறைவு வரையில் இக்கால கட்டத்தின் மையமாகத் திகழ்ந்தார்.

1833-1857    :      இராஜாராம் மோகன் ராயின் மரணம் முதல் இந்திய முதல் சுதந்திரப் போர் துவக்கப் பட்டது வரையில்

1885-1905    :      இந்திய தேசிய காங்கிரஸின் துவக்கம் முதல் வங்கப் பிரிவினை வரையில்.

1905-1919    :      வங்காளப் பிரிவினை, சுதேசி இயக்கம் ஆகியவை முதல் காந்திஜியின் தலைமையிலான ஒத்துழையாமை இயக்கம் வரையில்.

II

1814-1833

கீழை நாடுகளின் பண்டைய விவேகம், நவீன மேற்கத்திய கலாசாரம் ஆகிய இரண்டின் சிறப்பையும் தனது கூரிய அறிவுத் திறத்துடன் ஆராய்ந்து உணர்ந்து பாராட்டியவர் ராம்மோகன் ராய். பாரசீக மொழியில் இவர் எழுதிய “ஒரு - கடவுட் கொள்கையினருக்கு அன்பளிப்பு” என்ற நூலில் அனைத்துச் சமயங் களுமே ‘ஒரு - கடவுட் கொள்கையைத் தான்’ அடிப்படையாகக் கொண்டுள்ளன எனவும், மக்களின் விசேஷமான வழிபாட்டு முறைகளே சமயங்களை வேறுபடுத்தின என்றும் வலியுறுத்தினார். இந்து சமயத்தில் காணப்பட்ட தவறான கருத்துக்கள், நடைமுறைகளை எதிர்த்தார். பாமர மக்களுக்காக வேதாந்தத்தை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். 1815-ஆம் ஆண்டு கல்கத்தாவில் இவர் ஏற்படுத்திய ‘ஆத்மிய சபை’ முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவர்கள் சந்தித்து விவாதிக்கும் சபையாக விளங்கியது. அதே சமயம், 1821 - 1823 - இல் வெளி யிட்ட தனது ‘பிராமண சஞ்சிகை’ (க்ஷசயாஅயniஉயட துடிரசயேட)யில் இந்தியாவின் தலைசிறந்த பாரம்பரியங் களையும் பெருமைப்படுத்தினார். வெறும் விமர்சகராக மட்டுமல்லாது இந்திய பாரம்பரியத்தை அடிப் படையாகக் கொண்ட, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய சமயம் ஒன்றையும் ஏற்படுத்த விரும்பினார். இதன் விளைவுதான். 1828, ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று நிறுவப்பட்ட பிரம்ம சபா ஆகும்.

புதிய கல்வி : காலத்திற்கொவ்வாத வரட்டுத் தத்துவங்களைப் பயில்வதைவிடப் பயனுள்ள மேற் கத்திய விஞ்ஞானத்தை அளிக்கும் புதிய கல்வியை ஆதரித்தார். இவரால் நிறுவப்பட்ட ஆங்கில - இந்துப் பள்ளியில், எந்திரவியல், வானநூல், வால்டேரின் நூல்கள், யூக்ஸிடின் கணிதம் ஆகியவை பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தன. பின்னர் 1835-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக் கொள்கைக்கு ராம்மோகன்ராயின் கருத்துக்களே அடிப்படையாக அமைந்திருந்தன. வங்க மொழியில் முதன்முதலில் உரைநடை நூல்களை எழுதியவர்களில் ராம் மோகன்ராயும் ஒருவர். 1826-இல் வெளியிடப் பட்ட அவரது “வங்க மொழி அகராதி” தற்கால வல்லுநர்களாலும் பாராட்டப்படுகின்றது.

பெண்ணுரிமை : பெண்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளைக் கடுமையாகச் சாடினார். இந்துக் கோட்பாட்டில் கூறப்படாத ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க இவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுதான் 1829-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியன்று பெண்டிங்கால் இப்பழக்கம் சட்ட விரோதமாக்கப்பட்டது. “பெண் களின் பண்டைய உரிமைகள்” (1822) என்னும் நூலின் மூலம் பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டுமென்று கோரினார். பலதார மணங்களைச் சாடினார்.

சாதியம் : இந்திய சமுதாயத்தின் ஒற்றுமை யின்மைக்குக் காரணம் சாதி முறை தான் என்று சாடினார். சாதிப் பிரிவினையால்தான் மக்கள் நாட்டுப் பற்றற்றுக் காணப்படுகின்றனர். ‘அவர் களது அரசியல் நன்மைகளையும் சமூக மேம் பாட்டையும் கருதி’ சமயத் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்தினார்.

அரசியல் : அரசியல் உரிமைப் போராட்டத் திலும் ராம்மோகன்ராயின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். ஆங்கிலேய ஆட்சியால் தோற்றுவிக்கப் பட்டு வரும் நடுத்தர வகுப்பினரே பின்னர் பொது மக்களது விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்துவர் என்று தீவிரமாகக் கருதினார். 1823-இல் வெளியிடப்பட்ட ‘அவசர பத்திரிகைச் சட்டம்’, 1827-இல் இயற்றப்பட்ட இந்தியர்களுக்கு எதிரான ‘ஜீரிச் சட்டம்’ ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். 1833-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டயத்தைப் புதுப்பிக்க முனைந்தபோது ஏற்பட்ட எதிர்ப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றார். உள்நாட்டு வர்த்தக வளர்ச்சிக்காகக் குரல் கொடுத்தார். பொது மக்களின் கருத்துக்களை வெளியிடுவதற்காக “சம்வாத கௌமுதீ” மற்றும் “மிராத் - உல் - அக்பர்” ஆகிய பத்திரிகைகளை 1821, 1822 ஆகிய ஆண்டுகளில் துவக்கினார். இங்கிலாந்து சென்ற போது 1831-இல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியர்கள் சார்பாகப் பல விண்ணப்பங்களை சமர்ப்பித்தார். இந்தியக் குடியானவர்களின் நிலை, பொருளாதார நிலை, வரிவிதிப்பு முறை, கம்பெனியின் நீதி நிர்வாகம் ஆகியவற்றை விளக்கினார். உயர் பதவிகளில் இந்தியர்களை நியமித்தல், நீதி, நிர்வாகத் துறை களைப் பிரித்தல், நிர்வாகச் சீர்திருத்தம் பற்றிய இவரது திட்டங்களே பிற்கால அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.

வங்காள மறுமலர்ச்சிக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த ராம்மோகன்ராயின் கருத்துக்களால் கவரப் பட்ட பலர் அவருக்கு உற்ற துணையாக நின்றனர். நவீன கல்வித் துறையில் துணை நின்றவர் டேவிட் ஹேர் என்பவர். ‘மாநிலக் கல்லூரி’ என்று இன்றும் அழைக்கப்படும் இந்துக் கல்லூரியை 1817-இல் துவக்க உதவியவர். ஏழைக் குழந்தைகளுக்காகவும், பெண் குழந்தைகளுக்காகவும் உருவாக்கப்பட்டது தான் ‘பள்ளிக் கழகம்’ (1818).

இரவீந்திரநாத் தாகூரின் பாட்டனாரான துவாரகநாத் தாகூர், பிரசன்ன குமார் தாகூர், தாராசந்த் சக்ரவர்த்தி போன்றோரும் ராம்மோகன் ராயின் முயற்சிகளில் உறுதுணையாக நின்றவர் ஆவர்.

III

‘இளம் வங்கமும்’ தீவிரவாதமும்

வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் ஒரு கால கட்டத்தில் சம்பிரதாயங்களை வெறுத்து அதி தீவிர சிந்தனைப் போக்கைக் கொண்ட இயக்கமும் இடம்பெற்றது. ராம்மோகன்ராயின் காலத்திலேயே இந்துக் கல்லூரியில் அதிதீவிரவாதம் முளைவிட்டது. இதுதான் பின்னர் ‘இளம் வங்காள இயக்கம்’ எனப் பெயர் பெற்றது. இந்துக் கல்லூரியின் பேராசிரியரான டெரோசியோலின் சிந்தனை, தர்க்கங்களால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் உருவாக்கிய இயக்கம் தான் ‘இளம் வங்காளம்’, “என்கொயரர்” என்ற ஆங்கில ஏட்டையும் “ஞானான் வேஷன்” என்ற வங்க மொழிப் பத்திரிகையையும் 1831-முதல் நடத்தினர். கலாசார விவகாரங்களைவிட பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில்தான் அதிகம் நாட்டம் செலுத்தினர். சமயத்திலும், சமுதாயத்திலும்

பின்பற்றப்பட்ட சடங்குகளை மீறினர். கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினர். நடுத்தர வகுப்பு குடும்பங் களிலிருந்து வந்த மாணாக்கர்களே அதிகம் பங்கு வகித்தனர். 1843-இல் ஏற்படுத்தப்பட்ட “வங்காள பிரிட்டிஷ் இந்திய சங்கம்’ மக்களின் உரிமைகளைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கியது. அதிகக் கல்வி அறிவற்ற பெண்களுக்கும் புரியக்கூடிய எளிய நடையில் வங்க மொழியில் ‘மாத சஞ்சிகை’ என்ற பத்திரிகையைத் துவங்கினர். சமஸ்கிருதத்தை கலக்காமல் வங்க மொழி உரை நடையில் தூய்மையைக் கையாளுவதில் முனைப்பாக விளங்கியது இப்பத்திரிகை.

தாரா சந்த் சக்ரவர்த்தி, கிருஷ்ண மோகன் பானர்ஜி, ராம் கோபால் கோஸ், ரசிக் கிருஷ்ண மல்லிக், பியாரி சந்த் மித்திரர், ராதாநாத் சிக்தர், ராம்தனு லகிரி, தக்ஷிணரஞ்சன் முகர்ஜி, சிவசந்திர தேவ் போன்றோர் இவ்வியக்கத்தில் பெரும் துணையாய் நின்றவர்கள். பிரிட்டிஷ் அரசின் ‘கருப்புச் சட்டங்களை’ எதிர்த்தல், பெதூன் மகளிர் கல்லூரியின் துவக்கம், ஏழைக் கூலியாட்களுக்காக போராடியது ஆகியவை இவ்வியக்கக் காலத்தின் முக்கிய நிகழ்வுகளாகும்.

எனினும், ஒரு சிறு குழுவினர் மட்டுமே செயல்பட்டதால் பெரும் மேற்போக்கான ஒரு சிற்றலை போல் இவ்வியக்கம் மறைந்துவிட்டது. 1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டப்படி இந்தியர்கள் அரசாங்க வேலைகளில் பணி அமர்த்தப்பட்டனர். எனவே, இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலர் அரசாங்கப் பணியில் சேர்ந்தனர். நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர் களாக இருந்ததால் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினை களில் கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. மேலும், அக்காலகட்ட வங்காளம் இத்தகைய தீவிரவாத அரசியல் போராட்டத்திற்குத் தயாராக இல்லை. எனவே தான், நிறைந்த அறிவும், திறனும் கொண்டிருந்த டெரோசிரியர்கள் என்னும் இக்குழுவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.

மிதவாத சீர்திருத்தம்:

டெரோசிரியர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்த பின்னர் மிதவாத சீர்திருத்தக் காலம் தொடங்கியது. 1843-இல் தேவேந்திரநாத் தாகூரின் தலைமை ஏற்பட்டது. துவாரகநாத் தாகூரின் மகனான தேவேந்திரநாத் தாகூர் ராம்மோகன் ராயால் நிறுவப்பட்ட ஆங்கிலோ - இந்துப் பள்ளியில் பயின்றவர். இவர் துவக்கிய ‘தத்வபோதினி சபை’ (1839) வங்காளத்தின் அறிவியல் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றது. ஒழுக்கம், உயரிய லட்சியங் களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. 1843-இல் வெளியாகத் துவங்கிய ‘தத்வ போதினிப் பத்திரிகை’ கருத்தாழமிக்க கட்டுரைகளை வெளியிட்டது. பிரம்ம சமாஜிற்கு புத்துயிர் அளித்தார். இவரது நண்பரான அக்ஷய குமார் தத்தரின் முயற்சியால் 1850-இல் பிரம்ம சமாஜத்தின் அடிப்படையில்

ஒரு மாறுதல் ஏற்பட்டது. பழைய இந்து சமய மறை நூல்களை மட்டுமல்லாது, எல்லோருக்கும் பொதுவான கடவுட் கோட்பாட்டை அடிப்படை யாகக் கொண்டதாக அது மாறியது.

சமூக சீர்திருத்தப் பணிகளில் மீண்டுமொரு எழுச்சியை ஏற்படுத்தியவர் ஈஸ்வர சந்திர வித்யா சாகரர் ஆவார். அரசாங்கக் கல்வி ஆய்வாளராகப் பணியாற்றிய காலத்தில் நான்கு மாவட்டங்களில் 35 மகளிர் பள்ளிகளையும், 20 மாதிரிப் பள்ளி களையும் துவக்கினார். குழந்தை மணத்திற்கு எதிராகவும், பலதார மணத்திற்கெதிராகவும் இயக்கம் நடத்தினார். 1855-இல் விதவை மணத்தை ஆதரித்துப் பெரும் பிரச்சாரத்தை நடத்தினார். தனது கூற்றிற்கு ஆதாரமாகப் பண்டை மறை நூல்களையே எடுத்துக் காட்டினார். விதவை மணத்திற்கு ஆதரவாக 3000 கையெழுத்துக்கள் அடங்கிய விண்ணப்பம் ஒன்றைத் தயாரித்தார். 1856-இல் விதவை மறுமணச் சட்டத்தை அரசாங்கம் இயற்றியது. மறுமணம் செய்து கொண்ட விதவை களை உறவினர் ஒதுக்கி வைத்தால் அப்பெண் களுக்கு நிதி உதவியும் செய்யப்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியர் சங்கம்

தீவிரவாதிகள், மிதவாதிகள், பழமைவாதிகள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து 1851-இல் துவங்கிய அமைப்புதான் ‘பிரிட்டிஷ் இந்தியர் சங்கம்’ தேவேந்திரநாத் தாகூரைச் செயலாளராகக் கொண்ட இச்சங்கத்தில் இந்தியர்கள் மட்டுமே உறுப்பினராயிருந்தனர். 1853-இல் ‘ஹிந்து பாட்ரியாட்’ என்ற ஏடு இந்தியரின் குறைகளையெல்லாம் தொகுத்து ஒரு விண்ணப்பமாகத் தயாரித்தது. இதுவே, பின்னர் பல போராட்டங்களுக்கும் ஆதாரமாயிருந்தது.

அவுரி, உப்பு ஆகியவற்றின் மீதான பிரிட்டிஷாரின் முற்றுரிமையை நீக்க வேண்டு மென்றும், இந்தியத் தொழில்களுக்கு அரசாங்க உதவி அளிக்கப்பட வேண்டுமென்றும், உயர் பதவி களில் இந்தியர்களை நியமித்தல், இந்தியரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சட்டமன்றத்தை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய கோரிக் கைகளாகும். இந்திய பூர்ஷ்வாக்களின் முதல் அரசியல் கோரிக்கைகள் இவையே.

குடிவாரதாரர்களின் இன்னல்

களைக் களைதல், ஐரோப்பியர்களை விசாரிக்கும் அதிகாரத்தை சாதாரண மாவட்ட நீதிமன்றங் களுக்கு அளித்தல் போன்ற முயற்சிகளுக்கு இச் சங்கம் ஆதரவளித்தது. பலதரப்பினரையும் திரட்டி அரசியல் கிளர்ச்சியை நடத்தும் புதிய முறையை வங்காளம் விரைவாக உருவாக்கி வந்தது. நாட்டின் முதலாவது மருத்துவக் கல்லூரி, கல்கத்தா பொது நூலகம் நிறுவப்பட்டன. 1854-இல் வெளியான கல்வி அறிக்கை (நுனரஉயவiடிn னுநளயீயவஉh) அடுத்த அரை நூற்றாண்டிற்கான கல்வித் திட்டத்தை உருவாக்கியது. 1856-இல் மக்கள் கல்வித்துறை (னுநயீயசவஅநவே டிக ஞரடெiஉ ஐளேவசரஉவiடிn) நிறுவப்பட்டது. 1857-இல் மூன்று ராஜதானி நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன.

IV

1857-1885

இந்திய முதல் விடுதலைப் போருக்குப் பின்னர்

1857-ஆம் ஆண்டு விடுதலைப் போர் பலதரப் பட்டதாகும். ‘வங்காளப் படைப் பிரிவு” என்ற ஒன்றின் சிப்பாய்களே முதலில் கிளர்ந்தெழுந்தனர். ஆனால் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. பிரிட்டிஷ் இந்தியர் சங்கம் அதிமிதவாதக் கொள்கையைப் பின்பற்றியது. ஆனால், 1859-1860-இல் வெடித்த அவுரிப் போராட்டம் வங்காளத்தின் அரசியல் விழிப்புணர்வில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவுரியைக் கட்டாயமாகப் பயிரிடுமாறு தோட்ட முதலாளிகள் செய்த கொடுமைகள் குடியானவர்கள் மத்தியில் பெரும் எழுச்சியைத் தூண்டிவிட்டன. 1859-இல் லட்சக்கணக்கான குடியானவர்கள் அவுரி பயிரிட மறுத்தனர். ‘இந்து பாட்ரியர்ட்’ போராட்டத்தை ஆதரித்துப் பல கட்டுரைகளை வெளியிட்டது. அரசாங்க அதிகாரியாக இருந்த தீனபந்து மித்திரர், புனை பெயரில், 1860-இல் எழுதிய “நீல் தர்ப்பன்” நாடகம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மதுசூதன தத்தர் என்னும் கவிஞர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1860-இல் நியமிக்கப்பட்ட ‘அவுரி விசாரணைக் குழு’ மேற்கொண்ட முயற்சியால் அவுரி சாகுபடியில் பல கட்டு திட்டங்களை ஏற்படுத்தியது.

தீனபந்து மித்திரரின் நண்பரான பங்கிம் சந்திர சட்டர்ஜி, வங்க உரைநடைக்கு அழகிய இலக்கிய வடிவம் கொடுத்த மிகச் சிறந்த வங்க எழுத்தாளர். முதல் வரலாற்று நாவல் ‘துர்கேஷ் நந்தினி’ (1865) சமூக நாவலான ‘விஷ விருட்சம்’ (1873), ‘கமல காந்தா’ (1875) ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும். 1872-ல் இவர் துவக்கிய ‘வங்க தர்ஷன்’ தான் வங்க மொழியில் தோன்றிய முதலாவது பெரும் கலாசார ஏடாகும். 1812-இல் நூல் வடிவில் வெளிவந்த “ஆனந்த மடம்” தேசிய உணர்வை இலக்கியத்தின் வாயிலாகப் பரப்பிய தாகும். இந்நாவலில் வரும் ‘வந்தே மாதம்’ கீதம் தான் இன்றளவும் தேசிய உணர்வின் வெளிப் பாடாக உள்ளது.

இந்தியாவின் பண்டை இலக்கியம், வரலாற்றை ஆராய ஏற்படுத்தப்பட்ட ‘ஆசிய ஆராய்ச்சிக் கழகத்தின்’ (ஹளயைவiஉ ளுடிஉநைவல) துணைச் செயலராகவும், பின் தலைவராகவும் பணியாற்றியவர் ராஜேந்திரலால் மித்திரர். 1882-இல் வங்காள ஆராய்ச்சிக் கழகமான ‘சாரஸ்வத்சமாஜ்’ என்பதை நிறுவிய மிகச் சிறந்த வரலாற்றறிஞர். 1867-இல் “வங்காள சமூகவியல் சங்கம்” 1867-இல் விஞ்ஞான வளர்ச்சி சங்கம் ஆகியவையும் நிறுவப்பட்டன.

இக்கால கட்டத்தில் பிரம்ம சமாஜம் கேசவ சந்திர சேனரின் முயற்சியால் மிகத் தீவிரமாக வளர்ந்தது. இவரது பணிக்காக மகரிஷி தேவேந்திர நாத் தாகூர், 1862-இல் இவருக்கு ‘பிரம்மானந்தர்’ என்று பெயர் சூட்டினார். சமயம் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தேசியம் : இலக்கியம், சமயம் ஆகிய துறை களில் தோன்றிய மறுமலர்ச்சி தேசிய அரசியல் உணர்வையும் நன்கு தூண்டிவிட்டது. ‘தேசியம்’ என்ற சொல்லால் அனைவரும் கவரப்பட்டனர். 1861-இல் மிதனபூரில், “தேசிய பெருமையை வளர்க்கும் சங்கம்” (ளுடிஉநைவல கடிச வாந ஞசடிஅடிவiடிn டிக சூயவiடியேட ழுடடிசல), “தேசிய உணர்வைத் தூண்டும் சங்கம்”

(ளுடிஉநைவல கடிச ளுவiஅரடயவiபே சூயவiடியேட ளுநவேiஅநவே) ஆகியவை நிறுவப்பட்டன. 1880-க்கு பிறகு, இந்து மேளா முறைகள் மறைந்து மேற்கத்திய கருத்துக்களும் முறைகளும் பின்பற்றப்பட்டு நவீன அரசியல் கிளர்ச்சி வளரத் தொடங்கியது. சமய வடிவங்கள் மறைந்து, அரசியல் வடிவத்தைக் கொண்ட கிளர்ச்சி வலுப்பெறத் தொடங்கியது.

சிசிர் குமார் கோஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் அரசியல் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். சுரேந்திரநாத்தின் தீவிரம் காரணமாக, இவரது பெயரை ஆங்கிலேயர் சற்றுத் திரித்து - ளுரசசநனேநச சூடிவ - இறுதி வரை பணியாமல் போரிடுபவர் என்று அழைத்தனர். 1876-இல் இவர் துவக்கிய ‘இந்தியர் கழகம்’ சிவில் சர்வீஸ் விதிகளைத் திருத்துவது, பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவற்றிற்காகப் போராடியது. 1878-ஆம் ஆண்டு பத்திரிகை (வாய்ப்பூட்டு) சட்டம், ஆயுதச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்தது. 1882-இல் கொண்டு வரப்பட்ட இல்பர்ட் மசோதாவை ஐரோப்பியர்கள் எதிர்த்தனர். ஐரோப்பியர்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய அதிகாரிகளுக்கு வழங்கும் இம்மசோதாவை இச்சங்கம் தீவிரமாக ஆதரித்தது. 1885-இல் தலசுயாட்சிச் சட்டம், குடிவாரச் சட்டம் ஆகியவை லிபரலிசத்தை நடைமுறைப்படுத்தின. பத்திரிகை (வாய்ப்பூட்டு) சட்டம் ரத்து செய்யப் பட்டது. “இந்தியர் சங்கத்தால்’ ஏற்படுத்தப்பட்ட அரசியல் கிளர்ச்சி அனைத்திந்திய அடிப்படையில் தேசிய உணர்வை எழுப்பியது. இவ்வாறு தோன்றியது தான் 1883-இல் கூடிய முதலாவது தேசிய மாநாடு.

V

1885-1905

தேசிய மாநாடும் தேசிய காங்கிரஸும்

இந்திய காங்கிரஸைத் துவக்கும் முதல் முயற்சி களில் ஈடுபட்டவர்களில் வங்காளத் தலைவர் யாரும் இல்லை. வங்க தேசிய மாநாட்டின் இரண்டாவது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரத்தில் ஹ்யூமும் அவரது நண்பர்களும் பம்பாயில் காங்கிரஸைக் கூட்டினர். எனினும், தேசிய காங்கிரஸின் இரண்டாவது கூட்டம் 1886-இல் கல்கத்தாவில் கூடியபோது பழைய தேசிய மாநாடும், புதிய தேசிய காங்கிரஸும் ஒன்றிணைந்தன.

விரிவான இயக்கமாக காங்கிரஸை வளர்த்த வர்களில் வங்காளத் தலைவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. று.ஊ. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆனந்த மோகன் போஸ், ரமேஷ் சந்திர தத்தர், விபின் சந்திர பால், துவாரகநாத் கங்குலி போன் றோரின் பணி சிறப்பானதாகும். துவாரகநாத் கங்குலியின் மனைவியும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பட்டதாரியுமான கதம்பினி கங்குலிதான் 1889, 1890 மாநாட்டிற்கு வந்த முதல் பெண் பிரதிநிதி ஆவார்.

1896-ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின் போது நடத்தப்பட்ட முதல் தொழில் கண்காட்சிக்குத் தூண்டு கோலாயிருந்தது வங்காளமே. “தொழில் துறையில் ஒரு புதிய வேகத்தை உண்டாக்கி, பின்னர் சுதேசி இயக்கம் தோன்றக் காரணமா யிருந்தது இக்கண்காட்சியே” என்று சுரேந்திரநாத் கூறினார்.

அரசியல் கிளர்ச்சி நீடித்தாலும், இலக்கிய, கலாசாரத் துறைகளில் காணப்பட்ட மறுமலர்ச்சி தொடர்ந்து நீடித்தது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார வீழ்ச்சியை விவரித்து எழுதியவர். பொருளாதார - வரலாற்று அறிஞர் ரமேஷ் சந்திர தத்தர். முதலாவது முக்கிய பெண் எழுத்தாளர், தேவேந்திரநாத் தாகூரின் மகளான சுவர்ணகுமாரி தேவி. இவரது சகோதரர் துலிஜேந்திரநாதரால் 1877-இல் தொடங்கப்பட்ட ‘பாரதி’ என்ற கலாசாரப் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுத் திறமையாகச் செயல்பட்டவர் சுவர்ணகுமாரி தேவி.

ஜகுதீச சந்திர போஸ், பிரபுல்ல சந்திர ராய் ஆகியோரின் விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இக் காலத்தின் சிறப்புகளாகும். இச்சூழலில் வங்காளக் கலாசாரத் துறையில் பிரகாசிக்கத் தொடங்கியவர் தான் இரவீந்திரநாத் தாகூர்.

இரவீந்திரநாத் தாகூர் (1861-1941)

“பாஷைக்குள் வலுவும் வளைவு நெளிவுகளும் புகுத்திப் பழைய மரபிலிருந்து புரட்சி செய்த இலக்கிய வடிவங்களையும், வண்ணங்களையும் அமைத்துப் பிரபலமாக்கி, வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தி அதனைத் தனித்துவம் அடையச் செய்தார் தாகூர்” என்று கே.எம்.பனிக்கர் குறிப்பிடுகின்றார். மிக இளம் வயதிலேயே தேசப் பற்றுப் பாடல், விமர்சனக் கட்டுரைகள், நாடகங்கள் என்று எழுதிய பெருமைக் குரியவர் தாகூர். தேசியம் பரவிக் கொண்டிருந்த சூழலில் “மோனத்தில் இருக்க முடியவில்லை” என்று தன்னை தேசியத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

தேசிய வாதிகளின் மிதவாதப் போக்கினைக் கண்டித்தார். “சாதனா” என்ற மாத ஏடு ஒன்றினை நடத்தினார். பங்கிம் சந்திரரால் நடத்தப்பட்டு வந்த ‘வங்க தர்ஷன்’ பத்திரிகையை 1901-இல் மீண்டும் உயிர்ப்பித்தார். 1894-இல் ‘சாகித்ய பரிஷத்’ என்னும் வங்காள இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்ட போது சமூகம் பற்றிய அவரது விசாலமான கண்ணோட்டம் வெளிப் பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் வங்காளி மொழியினைப் பாடமொழியாக்க வேண்டுமென்று கூறினார். சமுதாயம் முழுவதும் தன்னிறைவு பெற்றதாக அமைய வேண்டும் என்றார். 1901-இல் சாந்திநிகேதனத்தில் புகழ்மிக்க பள்ளியை நிறுவினார். கிராமக் கைத்தொழில்கள், விவசாயிகள் கூட்டுறவு, இந்து முஸ்லிம் ஒற்றுமை ஓங்க வேண்டுமென்றும் கூறினார். இந்திய அரசியல் விழிப்பில் முன்னணியில் நின்ற வங்காளியையும், மராட்டியர்களையும் ஒன்று இணைக்கும் நோக்கத்துடன் சிவாஜி திருவிழாக் கொண்டாட்டத்தை 1904-இல் ஆதரித்தார். ஆனால் அந்தத் திருவிழாவில் பவானி வழிபாட்டை ஏற்க வில்லை. அரசியலில் மதம் கலப்பதைக் கடுமையாக எதிர்த்தார்.

“பகவத் கீதையும் வேண்டும் வந்தே மாதரம் பாடலும் வேண்டும்

 மதமும் வேண்டும் தேசியமும் வேண்டும்”

என்பது நம் விழாக்காலக் கருவிகளையும் பிரிட்டிஷ் பேண்டு வாத்தியத்தையும் ஒன்றாக இசைப்பது போலாகும்” என்று சாடினார்.

பாரம்பரியத்தின் மீது மதிப்பும் அதே சமயம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் அவரது பண்பினால் 1905-க்குள் இந்திய கலாசாரத்தின் தலைசிறந்த பிரதிநிதியாக தாகூர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

VI

1905-1919

வங்காளப் பிரிவினையும் சுதேசி இயக்கமும்

வங்காளத்தில் வளர்ந்து வந்த தேசிய உணர்வால் அச்சங்கொண்ட ஆட்சியாளர்கள், அந்த இயக்கத்தை முறியடிப்பதற்காக 1905-ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வங்கப் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்கப் பிரிவினையை எதிர்த்து அனைத்து இன மக்களும் ஒன்று திரண்டனர். “வங்க தர்ஷன்” என்ற தன் ஏட்டின் மூலம், வங்க மக்கள் ஒன்றுபட்டு நிற்கவும், போராடவும் உறுதி பூண்டு விட்டனர் என்று தாகூர் அறிவித்தார். தாகூர், ரஜனிகாந்த சேன் போன்றோரின் தேச பக்திப் பாடல்கள் நாடு முழுவதும் பாடப்பட்டன.

‘சுதேசியம்’ என்ற உணர்வு ஓங்கியது. அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. சுதேசிய ஆலைகள், தொழில்கள் தொடங்கப்பட்டன. வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த 1905, அக்டோபர் 16-ஆம் நாளை ‘ஒற்றுமை நாளாக’ அனுசரித்தனர். ராக்கி கயிற்றை ஒருவருக்கொருவர் அணிவித்துக்கொண்டு சகோதர உணர்வை வெளிப் படுத்தினர். இதற்கென விசேடமாக தாகூர் எழுதிய பாடல் தெருக்களெங்கும் பாடப்பட்டன.

விரைவில் சுதேசிய இயக்கம் தீவிரவாதக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்தது. 1906-ஆம் ஆண்டு ஜூனில் திலகர் கல்கத்தா வந்தார். இளைஞர் திருவிழாவாக ‘விராஷ்டமி’ கொண்டாடப்பட்டது. பிரம்ம பாந்தவ உபாத்தியாயா தீவிரவாதப் போக்கின் மையமானார். பின்னர், விபின் சந்திரபாலர்,. அரவிந்த கோஷ் ஆகியோரின் எழுச்சி ஏற்பட்டது. சுயராஜ்யம் குறிக்கோளானது. 1907-ஆம் ஆண்டு சூரத் மாநாட்டில் காங்கிரஸ் பிளவுபட்டது. அதே சமயம் அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களும் கடுமையாக இருந்தன. இதனால் தீவிரவாத இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பல சதித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், மிண்டோ - மார்லி சீர்திருத்தங்களில் முஸ்லிம் களுக்குத் தனித் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரினர். 1906-ஆம் ஆண்டு டிசம்பரில் டாக்கா நவாப் தலைமையில் நடை முறைக் கல்வி மாநாடு பின்னர் முஸ்லிம் லீக்காக உருவெடுத்தது. 1911-ஆம் ஆண்டு டில்லி தர்பாரின் போது பிரிட்டிஷ் அரசர் வங்கப் பிரிவினையை ரத்து செய்ததுடன் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லி மாற்றுவதாக அறிவித்தார்.

முதல் உலகப் போரின் முடிவில் இந்தியர்கள் சுயராஜ்ஜியத்தை எதிர்பார்த்தனர். அதே சமயம், இந்தியத் தொழிலாளர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது. அரசாங்கத்தின் அடக்குமுறையைத் தீவிரப்படுத்தும் வகையில் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1919-ஆம் ஆண்டின் ஒரு நெருக்கடியான சூழலில்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அரசியல் அரங்கில் தலைமை ஏற்றார். இதன்பின் வங்காளத்தின் கலாசார வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டன. மேலும், அரசியல் விவகாரங்களே முக்கிய இடத்தைப் பெற்றன.

இந்நிலையில், தீவிரவாதத்தையும், வன் முறையையும் விரும்பாத தாகூர் இயக்கத்திலிருந்து விலகி, சாந்தி நிகேதனத்தில், இலக்கியப் பணியில் முழுமையாக ஈடுபட்டார். 1911-இல் ‘இலக்கியத் துறையின் பேரரசர்’ என்று போற்றப்பட்டார்.

1913-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1914-இல் துவங்கப்பட்ட ‘சபுஜ் பத்ரா’ என்ற உயர்தர வங்காள ஏட்டில் தாகூரின் முதிர்ச்சி நிறைந்த இலக்கியப் படைப்புகள் வெளியாயின.

தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் தனது முற்போக்குச் சிந்தனையைக் கைவிடவே இல்லை. தாய்மொழிக் கல்வி, ஆண் - பெண் சமத்துவம் போன்றவற்றிற்குப் பெரும் முக்கியத் துவம் அளித்தார். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் முதன்முதலில் வங்க மொழியில் உரை யாற்றியவர் தாகூர். தனக்கென ‘கலை - இலக்கிய சமய’ உலகத்தைக் கொண்டிருந்த தாகூர் 1921-ஆம் ஆண்டு ‘விஸ்வபாரதி’ என்னும் உலகப் பல்கலைக் கழகத்தை நிறுவித் தம் வாழ்க்கையில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதே சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை வன்மையாகக் கண்டித்து வைசிராய்க்கு இவர் எழுதிய கடிதம் இந்தியர்கள் அனைவரின் உணர்வு களையும் பிரதிபலித்தது. அதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தையும் துறந்தார்.

தலித்துவத்தை விரும்புபவரும், தனிமனித வாதமும் கொண்ட தாகூர் காந்தியடிகளின் பரந்து பட்ட மக்கள் இயக்கத்தை ஏற்கவில்லை. ‘எமது தலைவர் என்று காந்திஜியைப் பாராட்டினாலும் பாமர ஜனங்கள் கண்மூடித்தனமாக அடிமை மனப்பான்மையுடன் காந்திஜியைப் பின்பற்று வதாகக் கண்டித்தார். தேசியம் என்ற பெயரில் ‘தனிமனிதனின்’ தனித்துவத்தைத் தடைப்படுத்தக் கூடாது என்றார். துணியின்றி மக்கள் நடுங்கிக் கொண்டிருக்கும் போது, அந்நிய நாட்டுத் துணிகள் என்று அவற்றை எரிப்பது என்ன நியாயம் என்று வினவினார். ‘மாடர்ன் ரிவியூ’வில் வந்த இவரது கட்டுரைகளுக்கு காந்திஜி ‘யுவ இந்தியா’ மூலம் பதிலளித்தார்.

சர்வதேச அரங்கில் சகோதரத்துவத்தைப் பரப்ப மேற்கொண்ட பயணங்கள் ஏராளம். “மேற்கு - கிழக்கு ஆகிய இரண்டின் இலட்சிய ஒற்றுமையை வற்புறுத்தியதிலும், இந்திய தேசியத்தின் அடிப் படைகளை அகலமாக்கியதிலும் தாகூருக்கு இணை தாகூர் தான். இந்தியாவின் தலைசிறந்த சர்வதேசிய வாதி தாகூர் தான்” என்று பண்டித நேரு குறிப் பிடுகின்றார். அந்நியரின் பிடியிலிருந்தாலும் இந்தியா ஒரு நாள் வெல்லும் என்றார். “நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாக விழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்களுடைய செல்வத்தின் மேலே தெய்வ சாபமிருக்கிறது” என்று அமெரிக்காவில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். “எல்லோரும் சமநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்” என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இருந்தார்.

தமது எண்பதாண்டு வாழ்நாளில் தாகூர் தொடாத இலக்கியத் துறையே இல்லையெனலாம். எனினும், தனது இறுதி ஸ்தானம் கவிஞனாகவே இருக்கும் என்று நம்பினார். அதனால்தான் 1912-இல் தனது எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது ‘கீதாஞ்சலி’ உட்பட கவிதைகளையே தெரிந்தெடுத்தார். அவை அவரது வாழ்க்கைத் தத்துவத்தை வெளிக்காட்டின. எளிமையும், உணர்ச்சி வேகமும், நேருக்கு நேரான சம்பாஷணைப் போக்கும் கொண்டிருந்தன. உள்ளத்துத் தெளிவு வாக்கினிலே ஒளியாக வெளிவந்தபடியால், கால தேச எல்லை களைக் கடந்த அவற்றை மொழிபெயர்க்கவும் ஏதுவாக இருந்தது. இப்பணியைத் தொடங்கு முன்பு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகச் சொற்களுக்குச் சுதிகூட்டி உளக்காட்சிகளுக்கு உருவம் கொடுத்து வந்தவர் தாகூர். எனினும், தன் கவிதைகள் எட்டத் தவறி யவற்றைத் தம் இறுதிக் காலத்தில் உணர்ந்தார். கண்ணை மட்டும் மயக்குவதாக அமையாமல் உழைப்பாளி மக்களுக்குத் தன் இதயாபிமானத்தை வழங்கக்கூடிய கவிதையே தேவை என்பதை உணர்ந்தார். விவசாயியின் கவிஞனை, அவனது தோழனை, உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்கும் சொல்லையும், செயலையும் கொண்ட கவிஞனே தேவை என்பதை உணர்ந்தார். அவன் பாசாங்கிலிருந்தும், பசப்பிலிருந்தும், ஆடம்பரத்தில் இருந்தும், தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். தனது சாதாரண மனிதனின் பாடல்கள் மூலம் அவனது உண்மையான, வாய் திறவாத இதயத்தில் ஒளி பாய்ச்ச வேண்டும் என்று விழைந்தார்.

19-ஆம் நூற்றாண்டிலிருந்து வழிகாட்டியாய் விளங்கிய வங்காளம் இந்தியாவின் இலக்கிய கலாசார சாதனைகளின் சின்னமாகவும் விளங்கியது. இங்குத் தோன்றிய இரவீந்திரநாத் தாகூர் ‘நவ இந்தியாவின் கலாசார பிரதிநிதி’ என்று கூறுவதில் மிகை யில்லை. “இந்தியாவின் சிந்தனை வளர்ச்சியில் குறிப்பாகத் தனக்குப் பின் வந்த தலைமுறை யினரைப் பாதித்ததில் இரவீந்திரரின் செல்வாக்கு பிரம்மாண்டமானதாகும். அவர் இலக்கியம் படைத்த வங்காள மொழி மட்டுமின்றி இந்தியாவின் பிற மொழிகளிலுள்ள இலக்கியங்களும் அவரின் சிருஷ்டிகளினால் ஓரளவு உருப்பெற்றுள்ளன. தாகூர் இந்தியாவின் தலையாய மனிதாயதவாதி” என்ற பண்டித நேரு தமது ‘னுளைஉடிஎநசல டிக ஐனேயை’ நூலில் குறிப்பிடுவது உண்மையாகும். ஏனெனில், இந்தி யாவின் ஆத்மீகப் பெருமைக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் விளங்கியவர் தாகூர்.

Pin It