“அவர்தாம் பெரியார் - பார்

அன்பு மக்கள் கடலின் மீதில்

அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு

வஞ்சகர்க்கோ கொடிய நெருப்பு

மிக்க பண்பின் குடியிருப்பு

விடுதலைப்பெரும் படையின் தொகுப்பு

தொண்டு செய்து பழுத்தபழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்”

என்று பெரியார் மீது பாரதிதாசன் பாடிய பாடல், ஆர்.பி. அவர்களுக்கும் பொருந்துவதாகும். தாடியில்லாத பெரியாராகவே அவரை நான் தரிசிப்பது வழக்கம். மனிதநேயமும் அறிவுத் தாகமும் அவரது உடன் பிறவிகள்; அவரது நட்போ அனைவருக்கும் மலிவுப் பதிப்பு; ஆகாதவர் பார்வைக்கு அவர் நெருப்பாகத்தான் தோன்றுவார்! விலங்குகளையே நகைகளாய் அணிந்திருந்த அடிமைகளை மீட்க அவதரித்த ஸ்பார்ட்கஸ் அல்லவா அவர்.

தலையிருப்பவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிடலாம் என்கிற தைரியம் இப்போது வந்திருக்கிறது; தொண்டுகள் மூலமாகவே தூய தலைவராகக் கனிந்தவர் எங்கள் ஆர்.பி. அவரது மண்டைச் சுரப்பின் மகிமையை அறிவுலகம் அறியும்; அவரது மனக்குகையில் உலவும் மார்க்சியச் சிறுத் தையின் காம்பீர்யம் பகைவர்க்கும் புரியும்!

தலைவர் ஆர்.பிக்கு அறிமுகம் தேவையில்லை; இளைஞர் ஆர்.பியை - அவர் தோழர் ஆர். பியாகப் பரிணமிக்க உந்திய அனுபவச் சுவடுகளை அனைவரும் அறிந்திருக்க இயலாது; இதோ ஒரு சிறிய அறிமுகம்:

1926இல் ஆர்.பி. அவர்களை ஈன்று பெருமை தேடிக் கொண்டவர்கள் அரங்கநாதன் - ஜானகி அம்மாள் தம்பதியர். தாய்மாமன் அண்ணாமலை யாரிடம் முதன்முதலில் தமிழ்க் கல்வி பெற்றார் ஆர்.பி. பெரியபுராணம், நன்னூல் ஆகியவற்றை அவர் தம் தாய் மாமனிடமே பாடம் கேட்டார். புலவர் கோவிந்தனிடமும் ஊரில் கல்லூரி ராஜா பிள்ளையிடமும் தமிழ் படித்தார். தம்மை வளர்த்து ஆளாக்கிய தமையனாரே தமக்குக் கல்விச் செல்வம் வழங்கிய வள்ளல் என்பார் ஆர்.பி.

ஜஸ்டிஸ் கட்சியின் மீதுதான் அவருக்கு முதலில் ஆர்வம் தோன்றியது. 1942-இல் தேசிய இயக்கத்தின் வீச்சு அவரையும் தாக்கியது. அப்போது சுயமரியாதை கற்பிக்கும் ‘குடியரசு’ம் தேசியம் போதிக்கும் ‘ஆனந்த போதினி’யும் தமிழாய்வு நடத்தும் ‘செந்தமிழ்ச் செல்வி’யும் அவரை ஆட் கொண்டிருந்தன.

1947-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கம்யூனிஸ்டு பாலனுக்கும் தி.க. மதியழகனுக்கும் கருத்து மோதல் நடைபெற்றது. அது பச்சையப்பன் கல்லூரியிலும் பிரதிபலித்தது. ஆனர்ஸ் மாணவர் ஆர்.பி. அப்போது மதிழயகன் பக்கம்தான் இருந்தார்.

ஈ.வே. கி. சம்பத்தின் அறைத் தோழராக இருந்த ஆர்.பி. அது குறித்து, மோகன் குமாரமங்கலத்துடன் வாக்குவாதம் நடத்தியிருக்கிறார். மோகனது தர்க்க நியாயமும், தத்துவப் பார்வையும் ஆர்.பியை இடது சாரிப்போக்கில் செலுத்தி, இறுதியில் சென்னை மாணவர் பேரவைக்கு இழுத்துச் சென்றது. அது கம்யூனிஸ்டுகளின் முன்னணி ஸ்தாபனம். அதன் அன்றைய தலைவர்கள் இசை இயக்குநர் எம்.பி. சீனிவாசனும் என்.சி.பி.எச். இயக்குநர் ராதாகிருஷ்ண மூர்த்தியும் ஆவர்.

1944 வரையில் பொதுவுடைமை நூல்கள் இந்தியாவில் கிடைப்பதற்கு வழியில்லை. போருக்குப் பிறகு பிரிட்டிஷ் ஆசிரியர்களின் புத்தகங்கள் வரத் தொடங்கின. பச்சையப்பன் கல்லூரி விரிவுரை யாளர்கள் பரிந்துரை செய்த ‘ஆறில் ஒரு பங்கு சோவியத்’ என்றும் ஹ்யூலெட் ஜான்ஸன் எழுதிய நூலும், வெ.சாமிநாதசர்மாவின் ‘காரல்மார்க்ஸு’ம் டாக்டர் சுப்பராயனின் ‘புதிய ருஷ்யா’வும் தம்மைக் கம்யூனிஸ்ட் ஆக்கிய தத்துவ நூல்கள் என்று ஆர்.பி. குறிப்பிடுவது வழக்கம்.

இந்தியன் பாங்கில் இருந்த தொழிற்சங்கத்திற்குத் தத்துவார்த்த அடிப்படை அமைத்துத் தரும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை. இன்றைய பிரபல மார்க்ஸிஸ்டு ஒருவரை ஆர்.பியும் நண்பர்களும் சந்தித்தனர். “இந்தியன் பாங்கில் மட்டும் உங்கள் நடவடிக்கைகளை மும்முரமாக வைத்துக் கொள்ள வேண்டாம்; செட்டியாரை எந்தச் சூழ்நிலையிலும் நாம் பகைத்துக் கொள்ள முடியாது” என்றாராம் அந்த மகாநுபாவர். தத்துவத்திற்காகத் தலைவர் களேயே பந்தாடும் ஒரு பாசறையில் இப்படியொரு தளபதியா? என்று மனம் வெதும்பினாராம் ஆர்.பி.

நாங்கள் ஜீவாவை அணுகியிருந்தால் இப்படித் தான் வெடித்திருப்பார் என்கிறார் ஆர்.பி. “உண்டியல் எடு; ஒவ்வொரு காசாகத் திரட்டு. கோமான்களிடம் நிதிதிரட்டினால் கொள்கைகளை மறந்துவிட வேண்டியதுதான்” என்பாராம் ஜீவா.

இலக்கியம், இசை உட்பட எந்தக் கலையிலும் பெரியாருக்கு ஈடுபாடில்லை. போர்க் குணத்தை மழுங்கடிக்கும் போதைப் பொருள்களாகவே அவை ஆளப்படுவதால் இயல்பாகவே அவருக்கு அவற்றின்மீது எரிச்சல் உண்டு. வெறும் பொழுது போக்குக் கலைகளில் ஆர்.பிக்கும் விருப்பமில்லை; அவற்றை ரசிக்கும் பொறுமையும் இருந்ததில்லை. ஆனாலும் ஆராய்ச்சி அணுகுமுறையுடன் எதையும் பரிசீலிக்கும் பக்குவத்தை மார்க்ஸிய ஞானம் அவருக்கு அளித்துள்ளது; இந்நோக்கில் அவர் ஜீவாவையே பிரதிபலிக்கிறார் எனலாம். அதே போல், ‘கலாசாரப் புரட்சி’யையும் ஆர்.பி. அடியோடு வெறுப்பவர். அது மாவோயிஸம், மார்க்ஸிஸம் அன்று எனக் கருதுபவர். உலக வரலாறு நமக்களித்த கலைப் பொக்கிஷங்களை அழிக்க நாம் யார்? என்று கேட்பவர்.

ஆர்.பி. ஒரு மார்க்ஸிய அறிஞர் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. ‘மொழி’ முதல் ‘மூலதனம்’ வரை மூல பிதாக்கள் கொண்டிருந்த கருத்துகள் யாவை என்று அவரால் பட்டியல் போட்டுக் காட்ட முடியும். அரசியல், வரலாறு, இலக்கியம், வழக்காறு ஆகிய எதனையும் மார்க்ஸிய மதிப்பீடு செய்யவல்ல சமூக விஞ்ஞானி அவர்.

‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வெற்றிப் பயணம்’ என்னும் அவரது நூல் அமெரிக்க ஒற்றர் களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது; ‘கருத்துக் களத்தில் மார்க்ஸீயம் = லெனினியம்’ என்னும் நூலில் முதன்முதலாகப் பொதுவுடைமைத் தத்துவம் முழுமையான தமிழில் முறையாக விளக்கப்பட்டு உள்ளது. ‘மார்க்ஸீயமும் வேதாந்தமும்’ என்கிற ஆங்கில நூலில் ஆர்.பி. மேலைய தத்துவக் கூறு களையும் இந்திய தரிசனங்களையும் பற்றிய அரிய தொரு விமர்சனம் வரைந்துள்ளார். அந்நூல் அவர் ஒரு தத்துவப் பேராசிரியர் என்று அடை யாளம் காட்டக்கூடிய நூலாகும்.

சென்னையில் வாழும் வடமொழி அறிஞர் களில் தலை சிறந்தவர் எனப்படும் ஒரு முதியவரை ‘வடமொழி இலக்கிய வரலாறு’ நூலின் முன்னுரைக்காக நான் சந்தித்தேன். ‘எனது முன்னுரையைவிட ‘இந்து’ பத்திரிகையில் எனது விமர்சனம் உங்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றார் அவர். ஆனால் அவர் எழுதிய விமர்சனம் அவர் ஒரு மொழி வல்லுநர்தானா என்கிற ஐயத்தையே எழுப்பியது. “வடமொழி எக்காலத்திலும் பாமரரின் பேச்சுமொழியாக இருந்ததில்லை;

அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழியே இல்லை. சாட்சாத் சிவபிரானே அனாதி காலத்தில் ரிஷிகளின் செவிகளில் ரகஸ்யமாக உபதேசிக்க, அவர்கள் மட்டுமே தமக்குள் பேசிக்கொண்ட பெருமொழி அது; அப்படி இருக்க அதில் பாரசீகப் பண்பாடும், தமிழ்ச்சொற்களும் எப்படிக் கலந் திருக்க முடியும்?” என்கிற ரீதியில் நூலாசிரியரை அவரது விமர்சனம் சாடியிருந்தது.

ஆர்.பி.யின் அணிந்துரையோடு அந்நூல் வெளி வந்தது. ஆர்.பி. தமிழறிஞர்தாம் - வடமொழி வல்லுநரில்லை. ஆயினும் வடமொழி வரலாறு பற்றிய மேலைய இந்திய ஆய்வாளர் இயற்றிய அத்தனை நூல்களையும் கற்று விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதோடு மார்க்ஸிய வெளிச்சத்தில் அவற்றை மறுபரிசீலனை செய்திருப்பவரும் ஆவார். அவரது அரிய முன்னுரையின் ஒரு பகுதி இது; “சமஸ்கிருதத்தை அந்தணர் மொழி என்றும் தேவபாஷை என்றும் சொல்லி ஏகபோக உரிமை கொண்டாடி அதனைச் சிறைப்படுத்துவது தவறு; அதே நேரத்தில் இந்திய சமுதாயத்தில் அம்மொழி வகித்த பாத்திரத்தை, சமூக விஞ்ஞானக் கண் ணோட்டத்துடன் அணுக மறுத்து அதில் உள்ள தெல்லாம் பொய், பித்தலாட்டம், மாயை என்று கருதுவதும் அறிவீனம்.”

ஆர்.பி. ஓர் ஆலமரம்; அவரது நிழலில் விழுந்து வேர் விட்டு நிற்கும் விழுதுகள் எத்தனையோ. விழுதுகள் இன்று விருட்சங்கள் ஆகியிருக்கலாம். ஆனாலும் அவை அவரது விழுதுகளே!

ஆர்.பி. ஒரு மழைமேகம்; அனுபவச் சுரங்கத்தில் இருந்து ஆலோசனைகளை அள்ளி வழங்கும் அருள் மேகம். அவர் சென்ற இடமெல்லாம் செழிக்கும்; நின்ற இடமெல்லாம் நித்தம் ஒரு பூப்பூக்கும். ரிசர்வ்வங்கிக்குக் கிடைத்த ரிஷ்ய சிருங்கர் அவர்!

ஆர்.பி. ஒரு சரித்திரம். இப்படி ஒரு மகத்தான மனிதர் சராசரி மனிதர்களான நம்மிடையிலும் தோன்ற முடியும் என்பதற்கு அவர் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு. அவரது சாதனைகளை ஏ! வங்கி ஊழியர் வரலாறே! நீ எடுத்துக்காட்டு!

ஆர்.பி. ஒரு கலங்கரை விளக்கம். திசைமாறும் தோணிகளுக்கு வழி கூறும் ஒளி வெள்ளம். கருத்துக் குருடர்களைக் கரையேற்ற முயன்று, அவர்தம் முரட்டு மொழிகளுக்கு இலக்கான அருள் உள்ளம். ஆயினும் ‘கடை விரித்தேன் கொள்வாரிலை; கட்டி விட்டேன்’ என்னாமல் கடைசி வரை போராடும் தமிழ் உள்ளம்!

ஆர்.பி. ஒரு சமுத்திரம். சிந்திப்பதை நிறுத்திக் கொள்ளும் நாள் வரை, மாமேதை மார்க்ஸ் ஓய்வைப் பற்றியே சிந்தித்ததில்லை. எங்கள் மார்க்ஸும் அப்படியே. ஆம்! ஆர்.பி. ஒரு சமுத்திரம் - அவரது அலைகள் என்றும் நிரந்தரம் - அவருக்கு ஓய்வில்லை!

நீ எங்கள் கீதாசிரியன்

நீ எங்கள் மூலதனம்!

முதலாளித்துவ அழுக்கேறிய முளைகளை

‘மூலதன’த்தால்

சலவை செய்ய முயலும்

மார்க்ஸிய ஞான ரதம்!

உன்னையே ‘முத’லாக்கி

நீ உழைத்த உழைப்பால் அல்லவா

விலங்குகள்போல் நடத்தப்பட்ட நாங்கள்

இன்று

விலங்குகளை மட்டுமே இழந்து நிற்கிறோம்!

நீ எங்கள் புறநானூறு!

பண்பாட்டின் படிமக் கலம்!

பகைவர் அளித்த காயத்தை மார்பிலும்

நண்பர் விளைத்த சேதத்தை முதுகிலும்

சுமந்தபடி-

தொழிற்சங்கக் கொடியைத்

தூக்கி நடைபோடும் அடலேறு!

உனது வரலாறே போராட்ட வரலாறு!

நீ எங்கள் திருக்குறள்!

மனிதகுல மேம்பாட்டை முன்னிறுத்தி,

புனிதஒளி பாய்ச்சும் பொதுச்சுடர்!

நீ எல்லோருக்குமாக எரியும் மெழுகுவர்த்தி

ஆயினும் நாங்கள் -

தீபத்தை ஏந்திக் கொண்டே

தெருவைத் தடவிக் கொண்டிருக்கிறோம்!

நீ எதையும் எழுத்தெண்ணிப் படிப்பவன்

வெல்லும் சொல் இன்மை அறிந்து

சொல்லும் சொல் வல்லவன்!

உனது சொற்கள் -

ஸ்வரங்களை விட இனிமையானவை

கணைகளை விடக் கூர்மையானவை

ஆயினும் நாங்கள் -

ஓட்டல் டபராக்கள் ஓசையிலே,

உன்னத ராகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!

நீ எங்கள் கீதாசிரியன்!

சரியான அர்ஜுனர்கள் கிடைத்தால்

சரித்திரம் படைக்கக்கூடிய பேராசிரியன்!

ஆகவே-

உனது ஓய்விலும்

புதிது புதிதாய்க் கீதைகள்

பிறக்கத்தான் போகின்றன

புதிது புதிதாய் அர்ஜுனர்கள்

கிடைக்கத்தான் போகின்றனர்!

Pin It