murugasen pandian 450சிறுபத்திரிகை மனோபாவத்துடன் காத்திரமான இலக்கியப் படைப்புகளை வாசிப்பதுடன், படைப்பாளர்களைத் தேடிச் சென்று மணிக்கணக்கில் உரையாடும் இயல்புடைய நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு தமிழில் முதுகலைப் படிப்பில் சேர்ந்தது, தற்செயலானது. அப்புறம் எம்.ஃபில் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். மொத்தம் 35 மாணவர்களில் 28 பேர் கல்லூரிப் பேரசிரியர்கள், எழுவர் மட்டும் எம்.ஏ., முடித்து நேரடியாகச் சேர்ந்திருந்தோம். சமூகவியல் நோக்கில் இலக்கியப் படைப்புகளை ஆராய்ந்திட வேண்டுமென மனதுக்குள் நினைத்து இருந்தேன். இலக்கியப் புத்தகங்களை வாசித்து மேற்கொள்ளும் ஆய்வுதான் முக்கியமானது என்ற கருத்து, எனக்குள் வலுவாகப் பதிந்திருந்தது.

ஒரு நாள் வகுப்பறைக்கு வந்த துறைத் தலைவர் இராம.பெரியகருப்பன், மாணவர்கள் எல்லோரும் அவரவர் சாதி சார்ந்த சடங்குகள், குலதெய்வ வழிபாடுகள் குறித்து ஆய்வேடு எழுதிட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். எனக்குள் கனன்ற இலக்கிய வேட்கை, நசிந்து போனது. ஆய்வேடு தலைப்பைத் தேர்ந்தெடுக்கக்கூட உரிமை இல்லையா? என மனம் கொந்தளித்தது. மாணவர்கள் பெரும்பாலும் சொந்த சாதி சார்ந்து தலைப்புகளில் ஆய்வு செயவதாக எழுதிக் கொடுத்தனர்.

எனக்குள் கொப்பளித்த எரிச்சல் காரணமாக வித்தியாசமாக ஏதாவது செய்திட நினைத்துப் பழங்குடியினர் பற்றி ஆய்வு மேற்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். என்னுடைய ஊரான சமயநல்லூருக்கு அருகில் இருக்கிற சத்தியமூர்த்தி நகரில் வசிக்கிற குடுகுடுப்பைக்காரர்கள் பற்றி ஆராயப் போகிறேன் என வீம்புடன் எழுதிக் கொடுத்தேன்.

எனது நெறியாளரான பேராசிரியர் தி.சு.நடராசன் உற்சாகத்துடன் பச்சைக் கொடி காட்டினார். இப்படியாகத்தான் நாட்டார் வழக்காறு என்று அறியப்பட்ட துறையில், தற்செயலாக நுழைந்து இளம் ஆய்வாளரானேன். அன்றைய காலகட்டத்தில் நாட்டார் வழக்காறு குறித்து விரிவான அளவில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. சரி, குடுகுடுப்பைக்காரர்களை நேரில் பார்த்து வரலாம் என உச்சி வெய்யிலில் இரண்டு மைல் தொலைவு சைக்கிளை மிதித்துக்கொண்டு போனேன்.

சத்தியமூர்த்தி நகர் சிறிய கிராமம், ஐந்தாறு தெருக்களில் வீடுகள். ஆள் நடமற்ற தெருக்களில் ஓட்டு வீட்டுத் திண்ணைகளில் வயதானவர்கள் படுத்திருந்தனர். யாரிடம் எதைக் கேட்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. யோசிக்காமல் தலைப்பைத் தேர்ந்தெடுத்தது குறித்து நொந்த மனநிலையுடன் வீட்டிற்குத் திரும்பினேன். ஆய்வு நெறிமுறை பாடத்தில் இடம் பெற்றிருக்கும் கள ஆய்வு பற்றிய இயலுக்கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இல்லை என்பது புலனாகியது. என்ன செய்யலாம் என்று யோசித்தவுடன் பாவைக்கூத்துக் கலைஞர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற பேராசிரியர் மு.ராமசுவாமி நினைவுக்கு வந்தார்.

முதுகலை மாணவனாக இருந்தபோது நண்பரும் ஆசிரியருமான மு.ராமசுவாமி கடச்சனேந்தல் கிராமத்தில் வசித்த பாவைக்கூத்துக்காரர்களைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டியபோது, உடன் போயிருந்தேன். மராட்டிக்காரரன ராவ் கெத்தாகப் பேசுவதை, ராமசாமி பணிவுடன் கேட்டுக்கொண்டிருந்தார். எனக்குச் சற்று அலுப்பாக இருந்தது. ஏன் இந்த மாதிரி தலைப்பை முனைவர் பட்டத்துக்குப் பதிவு செய்து, கள ஆய்வில் தகவல் திரட்டுவதற்குப் படாத பாடுபட வேண்டும் எனத் தோன்றியது.

ஆனால், இன்று எனது ஆய்வும் கள ஆய்வில் தகவல்களைத் திரட்டுவது என்ற நிலையில், சொல்வதற்கு என்ன இருக்கிறது? அன்றைய காலகட்டத்தில் கள ஆய்வின் மூலம் தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்திடும் போக்கு, அறிமுகமாகிக்கொண்டிருந்தது. எப்படி கள ஆய்வு செய்ய வேண்டுமென வழிகாட்டுகிற வழிகாட்டி நூல்கள் எதுவுமில்லை. ’மேயப் போகிற மாடு கொம்பில் புல்லைக் கட்டிக்கொண்டா போகும்?’ என்ற சொலவடை, இனவரைவியல் ஆய்வாளருக்குப் பொருந்தியது, வேடிக்கைதான்.

புத்தகங்களை முன்வைத்துச் செய்கிற ஆய்வுகளுடன் ஒப்பீடும்போது, இனவரைவியல் ஆய்வில் ஈடுபடுகிற ஆய்வாளரின் பொறுப்பும் எதிர்கொள்கிற சவால்களும் ஏராளம். எனது கள ஆய்வு சார்ந்த இனவரைவியல் ஆய்வு, நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வினை மேற்கொண்டிருக்கிற இளம் ஆய்வாளர்களுக்கு நிச்சயம் பயன்படும் என்ற நோக்கில் அனுபவங்களை விவரித்துள்ளேன்.

இனவரைவியல் என்ற சொல் பெரிதும் பண்பாட்டு மானிடவியலுடன் தொடர்புடையது. ஒரு வட்டாரத்தில் தனித்துவமான போக்குகளுடன் பல்லாண்டுகளாக வாழ்கிற மக்கள் குழுவினர் குறித்துக் கள ஆய்வு மூலம் ஆய்வாளர் திரட்டுகிற தகவல்கள், இனவரைவியல் ஆய்வின் அடிப்படையாகும். பழங்குடியினர் அல்லது குறிப்பிட்ட சாதியினருடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பிறப்பு முதலாக இறப்பு வரையிலான சடங்குகள், கடவுள் வழிபாடு, விவசாயம், சாதியக் கட்டமைப்பு, உணவு, அன்றாட நடைமுறைகள், இயற்கைப் பின்புலம், மதிப்பீடுகள் போன்றவற்றைத் தொகுப்பது இனவரைவியல் ஆய்வு அணுகுமுறையாகும். ஆய்வாளர், குறிப்பிட்ட மக்களுடன் தானும் ஒருவனாக வாழ்ந்து, உற்றுநோக்கல் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களையும், பண்பாட்டுத் தரவுகளையும் மரபுகளையும் பொதுமைப்படுத்தி ஆவணப்படுத்துதல் இனவரைவியலின் தனித்துவம் ஆகும். தரவுகள் அடிப்படையிலான இனவரைவியல் ஆய்வுடன் தொடர்புடைய நிலையில், குறிப்பிட்ட வட்டாரத்தில் வாழ்கிற நாட்டார் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அனுபவங்களையும் தொகுப்பது, இனவரைவியல் ஆய்வாளரின் உடனடிப் பணியாகும்.

இனவரைவியியல் ஆய்வு தொடங்குவதற்கு முதலடியானது ஆய்விற்குட்பட்ட சாதியினர் அல்லது பழங்குடியினர் யார் என்ற கேள்வி, ஆய்வாளரின் மனதில் தோன்ற வேண்டும். எடுத்துக்காட்டாக குடுகுடுப்பைக்காரர்கள் பற்றிய இனவரைவியல் ஆய்வு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆய்வாளர், முதலில் பொதுப்புத்தியில் குடுகுடுப்பைக்காரர் பற்றி உருவாக்கப்பட்டிருக்கிற கதைகளைக் கண்டறிய வேண்டும். ஏற்கனவே நம்பிக்கை சார்ந்து கதைகளில் வெளிப்படும் பதிவுகளும் ஆய்விற்குரியன.

கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த எனது மனம் புனைந்த குடுகுடுப்பைக்கார் பற்றிய விவரணையில் இருந்து ஆய்வினைத் தொடங்கினேன். ”நள்ளிரவு நேரம். கிராமம் மௌனத்தில் அடங்கியிருக்கும். தொலைவில் மெல்லிதாக காற்றைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும் ஓசை கேட்கும். கூடவே நாய்களின் இடைவிடாத குரைப்பொலியும். சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை கணீரென்று ஒலிக்கும்போது, மனம் திடுக்கிடும். அமானுடத்தின் சக்தி, திகிலாகக் கிராமத்தினருக்குள் ஊடுருவும்; மாயப் புனைவின் வால் எல்லோரின் முகத்திலும் உரசிப்போகும். மனதிற்குள்ளிருந்து பயம், திடீரென உடலெங்கும் பரவும்.

ஏதாவது கெட்ட சேதியைக் குடுகுடுப்பைக்காரர் சொல்லிவிட்டல் என்ன செய்வது? ‘இந்தத் தெருவில பெரிய உசிரு ஒன்னு அய்யோனு போகப் போகுது’ என்று சாமக் கோடாங்கி சொன்னால், என்ன செய்ய முடியும்? தெரு விளக்குகள் என்ற பெயரில் குண்டு பல்புகள், வருடத்தில் சில நாட்கள் மட்டும் ஒளிர்ந்த காலகட்டத்தில், எங்கும் பேய்களும் முனிகளும் உலாவிடும் கிராமத்துத் தெருக்களில் நள்ளிரவில் தனியாக இருளை ஊடறுத்துச் செல்லும் குடுகுடுப்பைக்காரனின் இயக்கம் விநோதமானதுதான்.” நவீன வாழ்க்கையில் குடுகுடுப்யை ஒலித்துக்கொண்டு எதிர்காலம் குறித்துச் சொல்கிறவர்களின் பின்புலத்தில் ஏதேனும் அமானுட ஆற்றல் பொதிந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்ற ஆர்வம்தான் கள ஆய்விற்கான அடிப்படையானது.

குடுகுடுப்பைக்காரர்களின் பாரம்பரியமான குலத்தொழில் குடுகுடுப்பை எனப்படும் சிறிய உடுக்கையை ஒலித்துக்கொண்டு குறி சொல்லுதல் ஆகும். அதன்மூலம் மக்களிடமிருந்து பெற்றும் உணவு, தானியம், பழைய துணிகள், பணம் போன்றவற்றைக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் ஊர்ஊராக நாடோடி போலச் சென்று பொருளைத் தேடி அலைகின்றனர். எனினும் அவ்வப்போது, ஊருக்கு வந்து தங்கிச் செல்கின்றனர். வைகாசி மாதம் முழுக்க ஊரில் தங்கியிருப்பது கட்டாயமாகும்.

ஏதோவொரு மாய ஆற்றலினால் பிறருடைய எதிர்கால வாழ்க்கை குறித்தும், நடந்தவை குறித்தும் குறி சொல்லும் திறமை குடுகுடுப்பைக்காரர்களுக்கு இருப்பதாக மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, கவனத்திற்குரியது. இவர்கள் யார்? எங்கிருந்து வருகின்றனர்? இவர்கள் வேலையே குறி சொல்வதுதானா? மாயமந்திரம் அறிந்தவர்களா? பில்லி, சூனியம், ஏவல், வசியம் தெரிந்தவர்களா? இப்படி பல்வேறு கேள்விகள் எனக்குள் தோன்றியதைக் கள ஆய்வில் கண்டறிந்திட வேண்டும் என்பது ஆய்வின் கருதுகோளானது. இன்னொருபுறம் வீட்டு வாசலில் நின்று குடுகுடுப்பையை ஒலித்து, ‘நல்ல சேதி வரப் போகுது” என்ற நன்னம்பிக்கையைக் காற்றில் பரப்புகிறவர்களை எளிதில் புறக்கணிக்க முடியாது இல்லையா? 

குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும்போது, அவர்களுடைய இன்றைய வாழ்க்கைநிலையையும் சூழலையும் அப்படியே ஏற்றுக்கொண்டேன். கல்வியறிவு அற்றவர்கள், அன்றாட வாழ்க்கைக்கான பொருள், உணவு தேடலுக்காக வீடுவீடாகச் சென்று இரந்து நிற்கிறவர்கள், நாடோடி போல அலைகிறவர்கள், நவீன வாழ்க்கைச் சூழலில் இன்றளவும் பழமையான முறையில் வாழ்கிற நாகரிகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள், கீழானவர்கள், தீண்டத்தகாதவர்கள் போன்ற எண்ணங்கள், கள ஆய்வினுக்கு முரணானவை. எளிய மனிதர்கள் என்றாலும் எல்லோரையும் போல பண்புகள் உடையவர்கள் என்ற கருத்துடன் அவர்களை அணுகிடும்போது, தகவல்களைத் திரட்டுவது எளிதாகும். இனவரைவியல் நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறவர்களைப் பற்றிய தாழ்வான அபிப்ராயங்கள் அல்லது பொதுப்புத்தியில் ஏற்கனவே உருவாகியிருக்கும் மதிப்பீடுகளைப் புறக்கணித்துவிட்டு, ஆய்வாளர் எவ்விதமான முன்கூட்டிய அனுமானங்கள் இல்லாமல், திறந்த மனதுடன் அனுகிடும்போது, சரியான தரவுகளைத் திரட்டிட முடியும்.

எண்பதுகளின் தொடக்கத்தில் குறிப்பிட்ட இனக்குழுவினர், பழங்குடியினர், குறிப்பிட்ட சாதியினர் குறித்து ஆய்வை மேற்கொள்வது பெரிதும் மொழியியல் துறையினரின் பணியாக இருந்தது. இருளர், பளியர், நரிக்குறவர் போன்றவர்களின் வாழ்வியல் குறித்தும் அவர்களுடைய பேச்சு மொழிகள் குறித்தும் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகியிருந்தன. அப்புறம் பிலோ இருதயநாத் எழுதிய பழங்குடியினர் பற்றிய புத்தகங்கள், புதிய உலகினை அறிமுகப்படுத்தின. இனவரைவியல் ஆய்வென்றால் கள ஆய்வுதான் முதன்மையானது என்றாலும், ஆய்வு மேற்கொள்விருக்கிற குறிப்பிட்ட குழுவினர் குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டிட வேண்டும்.

அவை ஆய்வின் செல்நெறியைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையானவை. ஆய்வாளர், முதலில் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கிற குழுவினரைப் பற்றிய அச்சு வடிவில் பிரசுரமாகியிருக்கிற தகவல்களைக் கண்டறிந்து தொகுத்திட வேண்டும். அரசாங்க ஆவணங்களான மாவட்ட கெஜட்டியர், மானுவல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நூல் போன்றவற்றில் இருந்து ஆய்விற்குட்பட்ட சாதியினர் அல்லது பழங்குடியினர் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் திரட்டுவது முதன்மையான பணி. ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சியின்போது, பல்வேறுபட்ட மக்கள் திரளினர் குறித்துச் சேகரிக்கப்பட்ட பழைய ஆவணங்களைத் தேடினால், ஆய்வாளர் செல்ல வேண்டிய ஆய்வின் திசைவழி புலப்படும். எட்கர் தர்ஷ்டனின் தென்னிந்தியப் பழங்குடிகளும் சாதிகளும், ஷெரிங்கின் மெட்ராஸ் மாகாணத்தில் பழங்குடிகளும் சாதிகளும் போன்ற ஆங்கிலப் புத்தகங்களில் இருந்து பெறப்படும் ஆய்விற்குட்பட்ட குடியினர் குறித்த அடிப்படைத் தகவல்கள், இனவரைவியல் ஆய்வு குறித்த புரிதலை மேம்படுத்தும். இனவரைவியல்ரீதியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்திருக்கிற முக்கியமான புத்தகங்களைக் கண்டறிந்து வாசிப்பது அவசியம். ஆய்வு தொடர்பாக இதுவரை ஆய்விதழ்களில் பிரசுரமான ஆய்வுக்கட்டுரைகளையும், முனைவர் பட்ட ஆய்வேடுகளையும், கருத்தரங்கக் கட்டுரைகளையும் வாசிப்புக்குட்படுத்த வேண்டும். இணையத்தின் பக்கங்களைத் துழாவி, ஆய்வு தொடர்பாக மின்னணு ஊடகத்தில் பிரசுரமாகியுள்ள தகவல்களைத் தொகுப்பது, ஆய்வை அண்மைக்காலத்தியதாக்கும். களத்திற்குச் செல்லும் முன்னர் ஆய்வாளர் செய்கிற இத்தகைய முன் தயாரிப்புகள், கள ஆய்வில் தகவல்களைத் திரட்டிட எந்தவகையான அணுகுமுறையைப் பயன்படுத்துவது என்று திட்டமிட உதவும்

தகவல்களைச் சேகரிக்கும்போது எவ்விதமான முன்கூட்டிய மனப்பதிவு இல்லாமல் வெளிப்படையாக ஆய்விற்குட்பட்ட மக்கள் குழுவினருடன் பேச வேண்டியதன் அவசியத்தை எனது கள ஆய்வின்போது அறிந்துகொண்டேன். கள ஆய்வில் ஈடுபட்டபோது, முதலில் குடுகுடுப்பைக்காரர்கள் என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. “இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப் போறீங்க? இதுனால உங்களுக்கு எம்புட்டுப் பணம் கிடைக்கும்? எல்லாரையும் போலத்தான் நாங்களும் இருக்கிறோம், இதுல சொல்ல என்ன இருக்கு? எங்களை கிறிஸ்தவராக்கப் போறீங்களா” என்று எதிர்மறையாகப் பேசியதைப் பொறுமையுடன் கேட்டவாறு இருந்தேன். பலரும் தங்களுடைய வாழ்க்கை, வரலாறு, பழக்க வழக்கம் பற்றி அந்நியனான என்னிடம் சொல்வதைச் சற்று மரியாதைக் குறைவாகக் கருதியதைக் கள ஆய்வில் என்னால் கண்டறிய முடிந்தது.

அப்போது 19ஆம் நூற்றாண்டில் எட்கர் தர்ஸ்டன் போன்ற ஆங்கிலேயர்கள் எப்படி இனவரைவியல் ரீதியில் இந்தியாவில் வாழ்ந்த மக்களைப் பற்றி எவ்வளவு தகவல்களைத் திரட்டினர் என நினைத்தேன். பழங்குடியினர் பற்றி வாசித்த ஆங்கிலப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த தகவல்கள் போல நிச்சயம் குடுகுடுப்பைக்காரர் வாழ்க்கையில் இருந்து புதிய செய்திகளைத் திரட்டிட முடியுமென்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன். அடிக்கடி சத்தியமூர்த்தி நகருக்குப் போய், குடுகுடுப்பைக்காரர்களிடம் என்னைப் பற்றிய நம்பிக்கையை உருவாக்கிட முயன்றேன். சில இளைஞர்கள் என்னைப் பார்த்துப் புன்னகைக்கத் தொடங்கினர். நான் பொதுவான விஷயங்கள் பற்றி மெல்லப் பேசினேன். பரஸ்பரம் நம்பிக்கையின் காரணமாக பேச்சு உருவானது. அதற்குள் இரு வாரங்கள் கடந்து விட்டன. நடுத்தர வயதானவர்கள் தந்த சில தகவல்கள் சுவராசியமானவையாக இருந்தன. அவற்றை உடனுக்குடன் கையில் இருந்த நோட்டில் குறிப்பெடுக்கத் தொடங்கினேன். உடனே அவர்கள் பதற்றத்துடன் பேசுவதைக் குறைத்தனர்.

அப்புறம் எனது கள ஆய்வு முழுவதும் ஒருபோதும் பேனா, குறிப்பேட்டைத் தொடவே இல்லை. கள ஆய்வில் திரட்டிய தகவல்களைக் கூடியமட்டும் மனதில் நிறுத்தி, அன்று இரவில் வீட்டிற்குப்போய் விரிவாகக் குறிப்புகள் எழுதினேன். ஒருமுறை டேப் ரிகார்டர் மூலம் ஒலி நாடாவில் தகவல்களைப் பதிவாக்கிட முயன்றபோது, என்னிடம் சரளமாகப் பேசிய குடுகுடுப்பைக்காரர்களில் சிலர் மெல்ல மௌனமானார்கள். பதிவு இயந்திரமும் எனது கள ஆய்வில் உதவியாக இல்லை. குடுகுடுப்பைக்காரர் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவம் எல்லாக் கள ஆய்வாளர்களுக்கும் அப்படியே பொருந்தாது. இனக்குழுவினர் அல்லது பழங்குடியினர் அல்லது சாதியினர் போன்றவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட இயல்பினர். அத்தகையவர்களை அணுகிடும்போது, வேறுபட்ட அணுகுமுறைகளைச் சூழலுக்கேற்பக் கண்டறிந்து கள ஆய்வில் பயன்படுத்த வேண்டும்.

பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர், தான் தேர்ந்தெடுத்த களப்பணியை வறட்சியாக அணுகிடாமல், உயிரோட்டமான மக்கள் குறித்த சமூகப் பதிவுகள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். ஆய்விற்கான பொருட்கள் என்று இயந்திரரீதியில் கருதாமல், ரத்தமும் சதையுமான மனிதர்களிடம் பேசுகிறோம் என்பதை ஆய்வாளர் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆய்விற்குள்ளாக்கப்படும் குழுவினரைப் பிற குழுவினருடன் ஒப்பிட்டு, மட்டமாகக் கருதாமல், அவர்களிடம் வெளிப்படும் நல்லது கெட்டதுமான விஷயங்களைப் பரிவுடன் அணுகிட வேண்டும். அப்பொழுதுதான் களப்பணிக்காகச் செல்கிற கிராமத்தினரின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை உற்றுநோக்குவதும், பழக்கவழக்கங்களைக் கூர்ந்து கவனிப்பதும் நடைமுறையாகும்.

ஓரளவு நெருங்கிப் பழகி அவர்கள் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வரும் மரபுகள், தொன்மங்கள், அடையாளங்கள் குறித்து அவர்களிடம் ஆழமாகக் கேட்டுத் தகவல்களைத் திரட்டுவது அடிப்படையானது. சில அடிப்படையான தகவல்களை வெவ்வேறு தகவலாளர்களிடம் இருந்து மீண்டும்மீண்டும் கேட்டு, அவற்றின் நம்பகத்தன்மையைக் கண்டறிவது, ஆய்வின் தரத்தை மேம்படுத்தும். பூர்வீகக் கதை, வரலாறு, சடங்குகள் போன்றவை குறித்து வேறுபட்ட காலகட்டத்தில், பல்வேறு வயதினரிடம் கேள்விகள் கேட்டுத் தரவுகளைச் சேகரித்து, ஒப்பிட்டுச் சரியான தகவல்கள் எனக் கருதப்படுவனவற்றைக் கண்டறிவது இனவரைவியல் நோக்கில் அடிப்படையான ஆய்வுப் பணியாகும். 

கேள்விகள் அடங்கிய வினாப் பட்டியலைக் குறிப்பிட்ட குழுவினரிடம் கொடுத்து, அவற்றுக்கான விடைகளைப் பெறுவது, புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையிலானது. எடுத்துக்காட்டாக ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 900 எண்ணிக்கையுடைய குழுவினரிடம் வினாப் பட்டியல்களைத் தனித்தனியாகக் கொடுத்து, அவற்றை நிறைவுசெய்து குறைந்தபட்சம் 80% பேர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். பின்னர் வினாக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்களைத் தொகுத்து அவற்றைப் புள்ளிவிவர மென்பொருளைப் பயன்படுத்தி அலசி ஆராய்ந்து, ஆய்வு முடிவுகளைக் கண்டறியலாம். இத்தகைய ஆய்வு முறையியல், அறிவியல் அடிப்படையானது என்றாலும் இனவரைவியல் ஆய்வு, பெரிதும் விளக்கவியல் முறையியலைச் சார்ந்துள்ள நிலையில், உற்றுநோக்கலுக்கும் தகவல்களை வாய்மொழி மூலம் கேட்டுப் பதிவாக்குதலுக்கும் முன்னுரிமை தரவேண்டியுள்ளது. 

எந்தவொரு சமூகக் குழுவினரும் தங்களுடைய முன்னோர்கள் குறித்தும், அவர்களுடைய வரலாற்றுப் பின்புலம் குறித்தும் செவிவழிக் கதைகளாகச் சொல்லிடும் மரபு, தமிழகத்தில் பரவலாக உள்ளது. இன்னொருபுறம் தாங்கள் செய்கிற பாரம்பரியமான தொழிலுக்குத் தங்களுடைய முன்னோர்கள் வந்த முறை குறித்தும் கதைகளை மரபாகக் சொல்லும் வழக்கும் நிலவுகிறது. முழுக்கக் கல்வியறிவு அற்ற இனக்குழுவினரும்கூட தங்களைப் பற்றிய கதைகளை வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துகின்றனர்.

இந்நிலையில் இனவரைவியல் ஆய்வாளர், இனக்குழுவினர் பற்றிய கதைகளைத் தொகுத்திடல் அவசியமானது. கடந்த காலம் குறித்து அல்லது முன்னர் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்கள், நினைவுகளாக மக்களிடம் உறைந்திருக்கின்றன. அத்தகைய வாய்மொழி வரலாறுகள், மொழியின் வழியாக காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன. எனது இனவரைவியல் ஆய்வில் குடுகுடுப்பைக்காரர்கள், ஆந்திராவில் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடைபெற்றபோது, நவாபு மன்னர்களுக்குப் பெண் தர மறுத்துத் தமிழகம் வந்த ஒன்பது பிரிவுகள் அடங்கிய கம்பளத்து நாயக்கர் வம்சாவளியினரில் ஒருவரான நித்திரவார் என்ற பிரிவினராகத் தங்களைக் கருதுவதாகச் சொன்னார்கள். அந்தப் பூர்வீகக் கதையை வயதான குடுகுடுப்பைக்காரர்கள் பலரும் சொன்னதுடன், அது உண்மையில் நடந்த சம்பவம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

ஒரே கதையை வெவ்வேறு தகவலாளர்களிடமிருந்து கேட்டு, அடிப்படையான தகவல்கள் ஒத்துப் போகின்றனவா என்பதை உறுதி செய்திட வேண்டியது ஆய்வாளரின் கடமையாகும். எப்படி குடுகுடுப்பைத் தொழிலுக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன கதை, பின்வருமாறு: கடவுள் எல்லோருக்கும் தொழிலைப் பிரித்து வழங்கியபோது, காட்டில் உறங்கிவிட்ட நித்திரவார் பிரிவினர் பின்னர் விழித்தெழுந்து, தங்களுக்கு ஏதாவது வேலை தருமாறு ஈஸ்வரனிடம் கேட்டனர். ஏற்கனவே எல்லா வேலைகளையும் பகிர்ந்து அளித்துவிட்ட ஈஸ்வரன், தன்னிடமிருக்கிற சித்துடுக்கையையும் சீங்குழலையும் தந்து,’ நீ சொல்வதில் அஞ்சுக்கு ரெண்டு பலிக்கும்’ என்று தந்த வாக்குத்தான் தங்களுடைய குடுகுடுப்பைத் தொழிலுக்கு அடிப்படை என்ற மரபுவழிக் கதை, இனவரைவியல்ரீதியில் முக்கியமானது. இது போன்ற கதைகளை எல்லாப் பழங்குடியினரும் நாடோடிகளும், விளிம்புநிலைச் சாதியினரும் தொன்மக் கதைகளாகச் சொல்கின்றனர். இத்தகைய கதைகள் அறிவியலுடன் பொருந்தாவிட்டாலும், குறிப்பிட்ட பிரிவினரின் கடந்த காலம் குறித்து தருக்கரீதியில் விளக்கிட முயலுகின்றன. 

ஒவ்வொரு நாளும் கள ஆய்வுக்குச் செல்வதற்கு முன்னர் எந்தவகையான தகவல்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை ஆய்வாளர் வரையறுத்துக்கொள்ள வேண்டும். எந்தத் தகவல்கள் குறித்துக் கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று, முன்கூட்டித் திட்டமிடல் அவசியமாகும். குலச் சடங்குகளில் மகப்பேறு, பூப்புச் சடங்கு, திருமணம், ஈமச் சடங்கு போன்றவை முக்கியமானவை. ஆய்வாளர், சடங்குகளை நேரில் பார்த்துத் தகவல்களைத் திரட்டுவதற்கு முன்னுரிமை தரவேண்டும். ஒருக்கால் குறிப்பிட்ட காலகட்டத்தில் நேரில் பாத்துத் தகவல்களைத் தொகுக்க முடியாதபோது, விவரமறிந்த தகவலாளர்களிடமிருந்து சடங்குகள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன என்று தரவுகளைத் தொகுத்திடலாம். வாய்மொழி மூலம் சடங்குகளைப் பற்றிக் கேட்டுப் பதிவாக்கிடும்போது, குறிப்பிட்ட சடங்கு குறித்து நுணுக்கமான முறையில் முழுமையாகத் தொகுப்பது, அவசியமானதாகும். சுருங்கக்கூறின், ஆய்வாளர், தான் தொகுத்திருக்கிற தரவுகள் முழுமையானவை என்ற கருதாமல், இன்னும் விடுபட்டவை இருக்கின்றன என்ற நோக்கத்துடன் தனது இனவரைவியல் ஆய்வைத் தொடர்ந்திட வேண்டும். தகவல்களைத் திரட்டுவதில் இனவரைவியல் ஆய்வாளர், எப்பொழுதும் திருப்தியற்ற மனநிலையுடன் இருந்தால்தான், முழுமையை நோக்கிப் பயணிக்க முடியும்.

இனவரைவியல் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட குழுவினருடன் தயக்கமின்றிப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்னைப் பொருத்தவரையில் ஆய்விற்குட்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் தங்கியிருக்கிற சத்தியமூர்த்தி நகருக்கு ஆய்வாளர் என்ற முறையில் தொடர்ந்து அல்லது அடிக்கடி சென்று நெருக்கமாகப் பழகி, உறவை வளர்த்துக்கொண்டேன். சில நாட்களில் அவர்கள் மணிக்கணக்கில் பேசுகிற சொந்தக் கதையைப் பொறுமையுடன் கேட்டு, முடிந்த அளவில் ஏதாவது ஆலோசனை சொல்லுவேன்.

படித்தவர்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும் என்று அப்பாவித்தனமாக என்னை நம்புகிறவர்களின் நம்பிக்கையை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டேன். வயதான பெண்கள் நான் கேட்கிற கேள்விக்குத் தொடர்பில்லாமல், விவரிக்கிற சம்பவங்களையும் பொறுமையுடன் கேட்பேன். சில நாட்களில் ஏழெட்டு மணி நேரம் பேசியிருந்தாலும், ஆய்விற்குத் தொடர்புடைய தகவல்கள் எதுவுமில்லாமல் திரும்ப நேரிடும். அவர்கள் அன்புடன் வாங்கித் தருகிற குண்டு பாட்டில் கருப்புக் கலர், பாயாசம், தேநீர் போன்ற பானங்களை மறுக்காமல் வாங்கிக் குடிப்பேன். அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆய்வின் தொடக்கத்தில் என்னை வெறுப்புடன் பார்த்த வயதானவர்கள்கூட நாளடைவில் என்னுடன் இயல்பாகப் பேசி பல்வேறு தகவல்களை உற்சாகத்துடன் சொன்னார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதுதான் இனவரைவியல் ஆய்வாளர் என்ற முறையில் எனது ஆய்விற்கான தகவல்களைக் குறுகிய காலத்தில் திரட்டிட வழிவகுத்தது.

கள ஆய்வின்போது சில மாதங்கள் குடுகுடுப்பைக்காரர்களிடம் இணக்கமான உறவு வைத்திருந்த நான், பல்கலைக்கழகத்திற்கு ஆய்வேடு அளித்த பின்னர், அவர்களைப் பற்றி மறந்து விட்டேன். நான், எம்.ஃபில். பட்டம் பெற்ற பிறகு, ஒரு நாள் எங்கள் வீட்டு வாசலில் ’நல்ல காலம் பிறக்குது, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டுக்காரங்களுக்கு கிழக்க இருந்து நல்ல சேதி வரப்போகுதுஞ்’ எனக் குடுகுடுப்பையை ஒலித்துக்கொண்டு வெயிலில் நின்றவாறு குறி சொன்ன குடுகுடுப்பைக்காரரைப் பார்த்தடவுடன், மனதில் நெருடலும் சோர்வும். 1981இல் நடைபெற்ற எனது இனவரைவியல் ஆய்விற்குப் பின்னர் 38 ஆண்டுகள் கடந்து விட்டன. நுகர்பொருள் பண்பாடு காரணமாகத் தமிழகத்தில் பிரமாண்டமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குடுகுடுப்பைக்காரர்களில் கணிசமானவர்கள் கல்வி, வேலை, வீடு என மாறியுள்ளபோதிலும், இன்றைக்கும் எங்கள் வீட்டு வாசலில் சில்லறைக் காசுக்காகக் காத்திருக்கிற குடுகுடுப்பைக்காரரைப் பார்க்க நேரிடும்போது, கள ஆய்வு நாட்கள் நினைவுக்கு வருகின்றன. கூடவே வருத்தமும்.

துறைப் பேராசிரியர் தந்த நெருக்கடி காரணமாகத் தற்செயலாகத் தேர்ந்தெடுத்த குடுகுடுப்பைக்கார்கள் தலைப்பும், அது பற்றிய கள ஆய்வின் காரணமாகச் சந்திக்க நேர்ந்த பெண்களும் ஆண்களும், அவர்கள் விவரித்த அனுபவங்களும் என விரிந்திட்ட ஆய்வில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை ஒருபோதும் மறக்க இயலாது. இனவரைவியல் ஆய்வின் மூலம் குடுகுடுப்பைக்காரர்களின் பண்பாடு, சடங்குகள், பழக்கவழக்கம், உறவுமுறை, குடும்பம், நம்பிக்கை குறித்துத் திரட்டப்பட்ட தகவல்களைத் தொகுத்து என்னால் அளிக்கப்பட்ட ஆய்வேடு, இன்று சமூக ஆவணமாகியுள்ளது. மனித குல வரலாற்றில் இப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தனர்/ இருக்கின்றனர் என்ற பதிவுகளைத் தருகிற இனவரைவியலாளரின் ஆய்வுப் பணி, இன்றியமையாததது என்ற புரிதலை அடையும்போது, இனவரைவியல் ஆய்வின் முக்கியத்துவம் ஆய்வாளருக்குப் புலனாகும்.

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் ஆய்வு.
ந.முருகேசபாண்டியன்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.,
சென்னை, விலை.80/-

Pin It