சிறுவயதில் கிராமத்தில் பார்த்து ரசித்த பறவைகள் பலவற்றை இப்போது பார்க்கமுடிவதில்லை. பள்ளிப் பருவக் காலத்தில் ஓடைக்கரையில் வளர்ந்திருந்த மரங்களிலும், கிணற்று மேட்டிலிருந்த மரங்களிலும் பார்த்து மகிழ்ந்த பறவைகளைக் காணலாம் என்ற ஆவல்கொண்டு ஊருக்குப்போகும்போதெல்லாம் முயன்று தேடிப் பார்க்கிறேன்; ஏமாற்றமே தொடர்ந்து எனக்குக் கிடைத்து வருகின்றது.
மானாவாரி நிலத்துக் கற்குவியல்களின் சந்து பொந்துகளிலும், துவரை, காராமணி, மொச்சைப் பயறுகளின் சாலை ஓரங்களிலும் காடை, கௌதாரிகள் சிறிதாக இடமமைத்து முட்டைகள் இட்டு வைத்திருக்கும். கட்டுக்காடை, பக்காடை, பூங்காடை, செங்காடை, வாள்காடை, அரிகாடை, பனங்காடை எனக் காடையுள் பலவகை உண்டு என்பதை கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். காடையும் கௌதாரியும் தரையில் இடமமைத்து முட்டையிடக்கூடிய பறவையினம் ஆகும். மிக உயர்ந்தும் பறக்கக்கூடியதல்ல இப்பறவைகள். அதன் முட்டையை எடுத்து, மாட்டுச் சாணிக்குள் வைத்துச் சுட்டெடுத்துத் தின்ற நினைவு இன்றைக்கும் இருக்கிறது.
நண்பர்களோடு சேர்ந்து மாட்டு வாலின் முடியெடுத்துக் கண்ணி வைத்துக் காடை, கௌதாரிகளைப் பிடிக்க முயற்சித்தது உண்டு. கண்ணியை வைத்துவிட்டுச் சற்றுத் தொலைவிலிருந்து காடை, கௌதாரி போன்றே சீழ்க்கை செய்து அழைப்பான் நண்பன் ஒருவன். சிலநாள் மட்டுமே அதை நம்பி ஏமாந்து வந்து கண்ணியில் மாட்டிக்கொள்ளும். பலநாள் அவை எங்களை ஏமாற்றியதுண்டு. இலுப்பை மரத்திலேறி பச்சைக்கிளியின் பொந்துகளில் கையைவிடப்போய் கிளியிடம் கொத்து (கடி) வாங்கியது உண்டு. மரம் ஏறியதற்காக அப்பாவிடம் அடி வாங்கியதும் உண்டு.
சிட்டுக் குருவிகள் கிணற்றுச் சேரத்தில் முளைத்திருக்கும் செடிகளில் கூடி கட்டி குடியிருக்கும். மழைக் காலத்தில் கிணற்றில் நீர் ஊறி நிரம்பியிருக்கும்போது கூடுகளைத் தொட்டுப்பார்த்துக்கொண்டே நீச்சல் அடித்ததுண்டு. மிக உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தில் உள்ள குருவிக் கூட்டில் எத்தனை முட்டைகள் இருக்குமோ என்று எண்ணி ஏங்கியதுண்டு. குயிலின் குரலுக்கு எதிர்க்குரல் கொடுத்து மகிழ்ந்ததுண்டு. கூட்டைக் காணச் சென்று காக்கை துரத்த பயந்து திரும்பி ஓடி வந்ததுண்டு.
காடை, கௌதாரி, ஆந்தை, மைனா குருவி, நொள்ளக் குருவி, சிட்டுக் குருவி, தேன் சிட்டு, தையல் சிட்டு, தித்திதாங் குருவி, தூக்கணாம் குருவி, டிக்டிக் குருவி, சாவுக் குருவி, வெட்டுக்கிளி, மரம்கொத்தி, வெள்ளக் குருவி, மஞ்சா குருவி, மானத்தாங் குருவி, கருவெட்லாங் குருவி, வண்ணாத்திக் குருவி, உள்ளாங் குருவி, அடைக்கலாங் குருவி, உருளைக் கட்ட குருவி, பச்சைக்கிளி, மீன்கொத்தி, கொக்கு, கோட்டான், தண்ணீர்க் கோழி ஆகிய பறவைகளைச் சிறுவயதில் பாட்டி சொல்லக் கேட்டுத் தெரிந்திருந்திருக்கிறேன். அவற்றுள் பலவற்றைப் பறந்துசெல்லும்போது பார்த்தும் மகிழ்ந்திருக்கிறேன்.
இவற்றுள் சில பறவைகள் சிறு சிறு செடிகளில் மட்டுமே கூடமைத்து வாழக்கூடியன. சில பெரிய மரங்களில் கூட்டை அமைத்துக்கொள்ளும். இந்தப் பறவைகளுள் பலவற்றை இன்றைக்குப் பார்க்கவே அரிதாக இருக்கின்றது. சில குருவிகளின் பெயர்கள் கிராமத்திலும் வழங்குவதாகத் தெரியவில்லை. செல்போன் டவர்களின் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவியின் இனமே இன்னும் கொஞ்ச காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. வளர்ச்சி எனும் பெயரில் இயற்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று புதைத்து வருவதன் கண்ணெதிர் சாட்சியாக நாம் வாழ்ந்து வருகிறோம்.
பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுமானத்திற்காகவும் அவற்றிற்குப் பாதை அமைத்துக் கொடுப்பதற்காகவும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்கள் கட்டாயமாகப் பிடுங்கப்படுகின்றன. கட்டடங்கள், பாதைகள் அமைக்கும் பகுதியில் உள்ள மரங்களும், குறுக்கேயுள்ள சிறு சிறு ஓடைகள், விவசாயக் கிணறுகள் போன்ற நீர்நிலைகளும் அழித்தொழிக்கப்படுகின்றன. மரங்களெல்லாம் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்டுவிடுகின்றன. ஓடையில் உள்ள சிறு சிறு மரங்களையும் வயலோரங்களில் உள்ள பெரிய மரங்களையும் ஆதாரமாகக் கொண்டு வாழும் பறவையினங்கள் வாழ்வதறியாது தவித்துப்போகின்றன. எஞ்சி நிற்கும் பறவைகள், பாதையமைத்த பின்னர் ஏற்படும் போக்குவரத்தின் பேரிரைச்சல், மாசுபாட்டினால் மெல்ல அழிந்துவருகின்றன.
வளர்ச்சி எனும் பெயரில் இயற்கையின் எல்லா நிலைகளையும் அழித்தொழித்துவிடுகிறோம். அவற்றிற்குரிய மாற்றுவழியையும் நாம் இன்னும் சிந்திக்கவில்லை. இயற்கையின் அழிவைக் கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கும் நாம், இயற்கையைப் போற்றிப் பாதுகாத்துள்ள சில வரலாற்றுக் குறிப்புகளை, நிகழ்வுகளைக் காணுகின்ற, படிக்கின்றபோது வியப்படைந்து நிற்கிறோம். அதை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பார்த்துக் கையறுநிலை அடைகின்றோம். மிக நெடுங்காலத்திற்கு முன்னர் ஒரு நாட்டையாண்ட மன்னர் பறவைகளின் பாதுகாவலராக இருத்திருக்கிறார் என்ற செய்தி நம்மை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்துகின்றது.
சங்க இலக்கியத்தில் நானூறு அகப் பாடல்களின் தொகுப்பான அகநானூற்றின் இரண்டு பாடல்கள், நாட்டை ஆண்ட மன்னர் ஒருவர் பறவைகளின் பாசத்திற்குரியவராக இருந்திருக்கிறார் என்ற செய்தியைத் தருகின்றன. அந்த இரண்டு பாடல்களும் சங்கக் கவி பரணர் என்பார் பாடியதாகும்.
முதல் பாட்டு (181) இல்லற வாழ்க்கை இனிதாக அமைய பொருள் வேண்டும். அந்தப் பொருளைத் தேடித் தன் அன்பு மனைவியைப் பிரிந்து காடுகள் பல கடந்து சென்று கொண்டிருக்கிறான் ஒரு ஆண்மகன். இடைவழியிலே அவனுடைய மனமானது தன் மனைவியின் நினைவால் பெரிதும் துன்புறுகிறது. அந்தத் துன்புறும் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக அமைந்தது.
ஆய் எயினன் என்பவன், முருகனை ஒத்த வலிமையோடு பகைவர் பாதுகாத்து நிற்கும் கோட்டைகளை வென்ற வெற்றிச் சிறப்பினையுடைய பெரிய படைகளைக் கொண்டவனும், போரிடுவதில் வல்லவனுமான மிஞிலி என்பவனோடு போர்க் களமெல்லாம் குருதியால் குருதி நிறம் அடையுமாறு கடுமையாகப் போரிட்டு, முடிவிலே தானும் தோற்று மடிந்தான்.
எயினன் பறவைகளின் பாதுகாவலன் என்பதால், அப்பகுதியில் இருந்த பறவைகளும், வேற்றுப் பகுதியிலிருந்து வந்த புதிய பறவைகளும் சேர்ந்து சூரியக் கதிர்களின் வெம்மையானது அவன் உடலின்மீது படாது இருக்குமாறு, பெருந்திரளாகக் கூடி வட்டமிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன. பின் அவை ஒருங்கே கூடிச் சென்று,
மகரக்கொடியினை உச்சியிற்கொண்ட வானைத் தீண்டும் மதிலையும் சிகரம் காணமுடியாத அளவுக்கு மிகவுயர்ந்துள்ள மாடங்களைக் கொண்ட நல்ல அரண்மனைகளையும் உடைய, காவிரிப்பூம்பட்டினத்தை உடையது சோழநாடாகும்; அந்நாட்டில் ‘ஆலமுற்றம்’ என்னும் அழகிய இடம் புது வருவாயையுடைய ஊர்களைக் கொண்டது; அவ்வூர் சோழ மன்னர்களால் பாதுகாக்கப்படும் சிறப்பினை உடையது; பூக்கள் விரிந்த அகன்ற துறையினையுடைய காவிரியின் பேராற்றினது, மிக வேகத்துடன் வரும் வெள்ளமானது நுண் மணலைக் கொண்டுவந்து சேர்த்து மேடாக்கிய வெண்மையான மணற்குவியல்களையும், உலகம் எல்லாம் போற்றும் நல்ல புகழையுடைய, நான்கு மறைகளாகிய பழைய நூலினைத் தந்தருளிய முக்கண்களையுடைய பரமன் எழுந்தருளிய சிறப்பினையும் உடையது. அங்கு அழகுபெறுமாறு இயற்றப்பெற்ற பொய்கைகள் சூழ்ந்துள்ள பொழிலின்கண், சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர்களது கையால் செய்யப்பெற்ற மணற்பாவைகள் விளங்கும் துறையினிடத்தே தங்கும்.
அத்தகைய சிறப்புக்களைக் கொண்ட சோழநாட்டில்தான் மணப்பொருள்களை விலைகூறி விற்பவரது பண்டங்களின் மணம் கமழுகின்ற, வண்டுகள் மொய்க்கும் ஐம்பகுதியாகிய கூந்தலினையும் மூங்கில் போலத் திரண்ட அழகாகக் காண்பதற்கு இனிய மென்மையான தோளினையும் உடைய அழகிலே மிகுந்தவளான நம் தலைவி இருந்த மணம் கமழுகின்ற தெருக்களையுடைய பெரிய மணற் குன்றம் என்னும் ஊர் அமைந்துள்ளது.
நெஞ்சே! அணுகுதற்கு அரிய காட்டினைக் கடந்து செல்லவும் துணிவதாய் இல்லை; பின்னே நின்று மீண்டும் மனைவியிடம் செல்ல எண்ணி விட்டாய்; அவ்வாறு நினைத்துவிட்டாய் என்றால் எம் மனைவி தங்கியிருக்கும் குன்றத்தை அடைந்து எம் நிலையினை எடுத்துக்கூறுவாயாக!
மனைவியைக் காண நினைக்கும் கணவனின் மனதைச் சொல்ல நினைத்த பரணர் எயினனின் குணத்தைச் சுட்டியிருப்பது சிறப்புக்குரியதாகும். எயினனின் சிறப்பைச் சொல்லாமலும் மனைவியை நினைத்து ஏங்கும் கணவனின் மனதைப் புலவரால் சுட்டிக் காட்டியிருக்க முடியும். மன்னனின் செயல் பரணரின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றது. அதனால் அப்படிப் பாட புலவர்க்கு மனம் வரவில்லை. போர்க்களத்தில் எயினன் இறந்துகிடந்தபோது அவன் உடல்மீது வெயில் படாத வகையில் பறவைகள் ஒன்றுகூடிப் பறந்து இறகால் நிழலமைத்தன என்று பாடுகிறார்.
பறவைகள் போர்க்களத்தில் இறந்துகிடந்த மன்னருக்கு இறகால் நிழலமைத்துக் கொடுத்திருக்கும் என்ற புலவரின் குறிப்பை முழுவதுமாக ஏற்கமுடியாது. என்றாலும், ஆய் எயினன் பறவைகளை நேசித்துப் பாதுகாத்திருக்க வேண்டும், அதைப் புலவர் கற்பனையில் மிகைப்படுத்திப் பாடியிருக்க வேண்டும் என்று நம்மை சிந்திக்கச் செய்து அச்செய்தியை ஏற்கச்செய்கிறது. இல்லையேல் ஒன்றுமில்லாமல் புலவரால் பாடியிருக்க முடியாது. கற்பனை என்பதே ஒன்றன் மிகைதானே. பரணர் மற்றொரு அகநானூற்றுப் பாடலிலும் (208) இந்தச் செய்தியைப் பதிவுசெய்திருக்கிறார். முன்சொன்ன பாட்டின் சூழலிலிருந்து இப்பாட்டின் சூழல் வேறானதாக அமையப்பெற்றுள்ளது.
பாட்டின் சூழல் ‘தன் காதலியைக் களவிலே கூடி மகிழ்ந்து நீங்கும் ஆடவன், அவளுடைய சிறந்த தன்மைகளையும், தான் கூடிய நிகழ்வையும் நினைந்து, அவளைப் போற்றித் தன் நெஞ்சிற்கு உரைப்பதாக’ அமைவது.
நெஞ்சே! நம் காதலி மாந்தளிர் நிறத்தினள். அவளது அழகிய கூந்தல், பழங்கள் பல தொங்கும் பலா மரங்களை உடையதும் ஓரி என்பவனுக்கு உரிமை உடையதுமான கொல்லிமலையில் கார்காலத்தில் மலரும் மலரைப் போன்ற மணத்தை உடையது. அவள் இவ்விரவில் என்னுடன் கூடி மகிழ்ந்துவிட்டுச் சென்றாள்.
வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான், வாயில்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் கருணை வாழ்வு வாழ்பவன். வைகறைப் பொழுதிலும் தனது அரண்மனை வாயிலில் தன்னைக் காண்பதற்காக வந்து, தேனடைகள் நிறைந்த தன் குன்றத்தைப் புகழ்ந்து பாடும் அகவுநர்கள் (பாணர்களுக்கு) வேண்டினால், பட்டத்து யானையைக்கூட வழங்குவான். ஆய் எயினன், நன்னன் என்பவனுடைய நண்பனாகிய, உயர்ந்த தேரினையும் யானைப் படையையும் உடைய மிஞிலியோடு பாழிப் பறந்தலை என்னுமிடத்தில் நண்பகல் நேரத்தில் வாட்போர் செய்து இறந்தான். அதனை அறிந்த பறவைகள், தம்மிடம் அவன் மிகுந்த கருணையுடையவன் என்பதால், அவனது உடலில் வெயில் படாதவாறு வானில் ஒன்றாய்க்கூடிப் பறந்தன. இந்தப் பாசமிகு காட்சியைப் பொறாமையாலும், கோபத்தாலும் ‘நான் சென்று பார்க்கமாட்டேன்’ என்று போராற்றலுடைய நன்னன் அரண்மனையில் மறைந்துகொண்டான்.
எயினனின் உறவினராகிய வேளிர்குல மகளிர், போர்க்களத்திற்கு விரைந்தோடி வந்து, தமது பூமாலைகளைப் பிய்த்தெறிந்துவிட்டு, அவன் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பகைவரின் படைகளை வென்று, தனக்கும் தன் சுற்றத்தார்க்கும் உண்டாகிய பழியைப் போக்கும் குணமிக்கவனான அகுதை என்பவன் எயினனின் நண்பன். அவன் இச்செய்தியைக் கேள்வியுற்று மிஞிலியோடு போர் புரிந்து, மகளிரின் அழுகையைப் போக்கினான். அதைப் போல, நான் இவ்விரவில் வந்துள்ளதை அறிந்து, உப்பினால் போடப்பட்ட அணையை எளிதில் உடைத்துக்கொண்டு பெரிய மழையால் உண்டாகிய வெள்ளம் பாய்வதைப் போல, தலைவி தன் நாணத்தால் கட்டுப்படுத்த இயலாத காமம் காரணமாக வந்து என் துயரத்தைப் போக்கினாள். அவள் வாழ்க!.
மிஞிலி பாரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். நன்னனின் நண்பன். நன்னன் புன்னாட்டின் மீது போர் தொடுத்தபோது, ஆய் எயினன் அவனை எதிர்த்துப் போரிட்டு அந்நாட்டைப் பாதுகாத்திருக்கிறான். அதனால் நன்னன் அவனுக்குப் பகையானான். பாழிப் பறந்தலையில் நன்னனுக்குத் துணையாக வந்து எதிர்த்த மிஞிலியோடு போரிட்டு ஆய் எயினன் இறந்துபோன செய்தி அகநானூற்றின் 396ஆம் பாடலில் வருகின்றது.
போர்க்களத்தில் இறந்து கிடந்த ஆய் எயினனுக்குப் பறவைகள் சிறகுகளால் நிழலமைத்துக் கொடுத்ததாகப் பரணர் இரண்டு பாடல்களில் பதிவு செய்திருப்பது, பறவைகளைப் பாதுகாத்து நேசித்தவராக மன்னர் எயினன் இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகின்றது. எயினர் குடி பற்றிய செய்தி பெரும்பாணாற்றுப்படையில் (129) வருகின்றது. எயினர் குடியை வேடர் குடி என்று சுட்டுகிறார் நச்சினார்க்கினியர். வேடர், வேட்டைத் தொழில் செய்வோர் என்பதைப் பழந்தமிழ் நூல்களால் அறிகிறோம். எயினன் வேட்டைக் குடியினராக இருந்தும் பறவைகளை நேசித்திருக்கிறார். அதனால் அவன் இறந்த பின்னர் பறவைகள் சிறகுகளால் நிழல்தந்து நன்றி செலுத்தியுள்ளன.
நம் காலத்தில் மனித வளர்ச்சியை மட்டுமாகக் கொண்ட பயணத்தில், இயற்கை நிலைகள் அழிப்பு அதனால் மாசுபடுதல் ஆகியன மிகச் சாதாரணமாக நிகழ்கின்றன. இதனால் இயற்கையை நம்பி வாழக்கூடிய உயிரினங்கள் முதலில் பலியாகின்றன. அவற்றுள் பறவையினங்கள் முதலிலிருக்கின்றன. வேட்டைச் சமூகத்து எயினன் இறப்பினால் பெருந்துன்பம் அடைந்து வருந்தின அன்றைய பறவைகள். நம் காலத்துப் பறவைகளுக்கு மானுட சமூகமே வேட்டைக்காரர்களாகத் தெரிகின்றன; அதனால் அவை ஒட்டுமொத்த மனித சமூகத்தைப் பார்த்து பயந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. நிழல் தந்த பறவையினங்கள் நிழலைத் தேடி அலைந்து திரிகின்ற சோகம் நம் கண்களுக்குத் தெரியவில்லை.