ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்புதான் தீர்மானிக்கும் என்று மனுதர்மச் சட்டம் சொல்கிறது. அதே கருத்தைத்தான் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டமும் கூறுகிறது.
19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்சு, இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகப் பொருளாதார மாற்றத் திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சுப் புரட்சியால் உத்வேகமடைந்த மக்களைக் கண்டு நடுங்கிய மேலைய வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்விய லைக் கொண்ட நாடோடி இனத்தவர்களைக் கட்டுக் குள் கொண்டுவர விரும்பின. அதன் பொருட்டு அம் மக்களைச் சமூக வாழ்வுக்கு அந்நியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தன.
இந்தியத் துணைக்கண்டத்தைக் கைப்பற்றிய பிரித்தானிய அரசு அதே வழியில் தனது ஆதிக்கத்திற்கு அடிபணியாத மக்களையெல்லாம் காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவுபடுத்தத் தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களை ஏவியது. அந்தச் சட்டங்களில் ஒன்றுதான் சி.டி. ஆக்ட் (Criminal Tribes Act) என்றழைக்கப்படும் குற்றப் பழங் குடிகள் சட்டமாகும்.
இந்தச் சட்டப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவொரு சாதியையும் குற்றப்பரம்பரை என்று அறிவிக்கலாம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒரு சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் பிறவிக் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக் கூடாது. கச்சேரி எனப்படும் இதற்கென ஒதுக்கப்பட்ட மந்தையிலோ அல்லது காவல் நிலையத்திலோ விடிய விடிய விழித்திருக்க வேண்டும். பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தால் நதாரிச்சீட்டு எனப்படும் நடமாடும் சீட்டு பெற வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறுவோர்க்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு.
1871 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு கொண்டு வந்த சட்டத்தில் வீடிழந்தோர், குறி சொல்வோர், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர், பிச்சைக்காரர்கள், நாடோடிகள், அரவாணிகள் ஆகியோர் தண்டிக்கத் தகுதி படைத்தவர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் மேலும் பல்வேறு திருத்தங்களை அச்சட்டத்தில் கொண்டு வந்து தமிழ்நாடு, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், வங்காளம் ஆகிய மாநிலங் களில் 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்.
1911 ஆம் ஆண்டு குற்றப் பழங் குடிகள் சட்டத்தின் கீழ் தமிழ்நாட் டில் 90 சாதிகள் கொண்டு வரப் பட்டன. நாவாபே குறவர், தொம் பர், சேலம் மேல் நாட்டுக் குறவர், ஆத்தூர் கீழ்நாட்டுக் குறவர், வெள்ளையங்குப்பம் படையாச்சி, பிரமலைக் கள்ளர், மறவர், அக முடையார், காலாடி, சுங்காலி, வேப்பூர் பறையர் ஆகியோர் இச் சட்டத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக மதுரை மாவட்டத் தில் வாழ்ந்து வந்த பிரமலைக் கள்ளர்கள் இச்சட்டத்தினால் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
1913 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் மதராஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முதன் முறையாகக் குற்றச்செயல்கள் நடைபெறும் மாவட்டங்களின் புள்ளி விவரக் கணக்கை உள்ளூர் அதிகாரிகளிடம் கோரினார். அதன்படி திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி, மாடு கடத்தல், கொள்ளை, கன்னக்களவு, கொலை முதலிய பெருங்குற்றச் செயல்கள் நடைபெறுவதாக உள்ளூர் அதிகாரிகள் புள்ளிவிவர அறிக்கை அளித்தனர்.
அதன்பிறகு 1914 இல் மதுரை மாவட்டக் காவல் துறைக் கண் காணிப்பாளர் பி.நி. கிளின்ச் என்பவர் இச்சட்டத்தைப் பயன் படுத்தி கீழக்குடி கள்ளர்களை ஒடுக்க வேண்டுமாறு 4.5.1914 இல் அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதன்படி இந்தச் சட்டம் 1915 இல் கீழக்குயில்குடி ஊரில் பிறப்பிக்கப் பட்டது. அந்த ஊரில் வயதுக்கு வந்த ஆண்கள் அனைவரும் கே.டி. (K.D. Known Dacoits) என்னும் பட்டியலில் உடனடியாகச் சேர்க்கப் பட்டனர்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த “நேப்” என்னும் வெள்ளையர் மேலும் மூன்று ஊர்களை இச்சட்டத்தின் கீழ் கொண்டுவர பரிந்துரைத்தார். ஏற்கெனவே கீழக்குயில்குடி ஊரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் செரிக்கான்பட்டி, மேல உரப்பனூர், பூசலப்புரம் ஆகிய ஊர்களுக்கு விரிவுபடுத்தப் பட்டது.
1919 இல் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக “லவ்லக்” என்பவரை அரசு பணி நியமனம் செய்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டது. இவர் வட இந்தியாவிலும், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குற்றப் பரம்பரை குற்றவாளிகளின் மறு வாழ்வுத் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு “லவ்லக்’’ அளித்த அறிக்கை வருமாறு -
“கள்ளர் நாட்டில் குற்றத் தொழில் செய்த கிரிமினல் வாரண் டியர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களைத் திருடர்கள் என்று சொல்வதற்கில்லை. ஸ்காட்லாந்து தேசமாகிய என்னுடைய நாட்டிலும் சோசலிச சமுதாய அமைப்பை விரும்பும் மலை நாட்டினர் உள்ளர்... கள்ளர்களின் மத நம்பிக்கையைக் கவனித்தால், இவர்கள் உலகில் அதிகமாகச் செல்வம் குவித்து வைத்திருப்பதைப் பிரித்து இல்லாதவர்களுக்கு விநி யோகம் செய்யப் படைக்கப் பட்டவர்கள் என்று தங்களைக் கருதுகிறார்கள்.
கீழ்நாட்டுச் சோசலிஸ்டுகள் போலவும், ஏகபோக உரிமையோடு சண்டை போடுவதில் தீவிர விருப் பமுள்ள சமதர்மவாதிகள் வழி யிலும் செல்கிறார்கள் என்று கருதப்பட வேண்டியிருக்கிறது.
இப்போது எடுத்துவரும் குற்றத் தொழில் தடுப்பு முறையும், இவ் வினத்தாரைப் பதிவு செய்து கண்காணித்து வருவதும் சரி என்று நான் கருதுவதற்கில்லை. இதனால் நல்ல பலன் கிடைக்காது. ஒரே பிரதேசத்தில் பதிவான குற்றவாளிகளும் பதிவாகாத இதரரும் இருக்கும் போது, பாகுபாடு செய்து அடக்குவது சிரமம். சட்டப் பிரயோக அடக்குமுறையை மட்டும் கையாண்டால், அது பெரும் ஆபத்தில் முடியும். அடக்குமுறைச் சட்டம் கையாளப்படும் போதே, கள்ளர் சமூகச் சீர்திருத்த நடவடிக் கைகளையும் அமல்படுத்தத் தவறக் கூடாது.’’
கள்ளர் சமூகத்தின் மீது மேற் கண்ட லவ்லக் அறிக்கை பரிவோடு பேசிய போதிலும், சென்னை மாகாண அரசு இவற்றை அலட் சியம் செய்தது.
மாகாண போலீஸ் இன்ஸ் பெக்டர் அறிக்கை, ஆட்சியர் நேப் அறிக்கை, லவ்லக் அறிக்கை என இந்த மூன்றையும் பரிசீலித்து, பிரமலை நாட்டில் வயதுவந்த எல்லா பிரமலை நாட்டுக் கள்ளர் களையும் குற்றத் தொழில் செய்யும் நபர்களாகப் பதிவு செய்யும்படி சென்னை மாகாண அரசு ஆணை பிறப்பித்தது.
இந்த ஆணையின்படி 1918ஆம் ஆண்டு இறுதியில் மதுரையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டது. இதில் முதல்வகுப்பு மாஜிஸ்ட்ரேட் (கைரேகைச் சட்ட கலெக்டர்) ஸ்பெஷல் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஸ்பெஷல் போலீஸ் சப் இன்ஸ் பெக்டர், ஏட்டுகள், கான்ஸ்ட பிள்கள் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி “க்னப்’’ என்பவர் கள்ளர்கள் தங்க ளைப் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொண்டார். இந்தப் பின்னணியில் தான் பிரமலைக் கள்ளர்களின் புகழ்பெற்ற ”பெருங்காமநல்லூர் கிளர்ச்சி’’ நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 3, 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் விடியற் காலையில் ஆயுதங்களோடு காவல் படையினர் ஊரைச் சுற்றி வளைத் தனர். பொது மந்தையில் வைக்கப் பட்ட கைரேகைப் பதி வேட்டில் அனைத்து ஆண்களும் உடனடி யாக கைரேகை வைக்க வேண்டு மென்றும், தவறும் பட்சத்தில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும எச்சரிக்கை செய்யப்பட்ட னர். பெருங்காம நல்லூர் ஊர்ப் பொதுமக்கள் 300க்கும் மேற்பட் டோர் உடனடியாகப் பொது மந்தையில் ஒன்றாகக் கூடினர்.
அப்போது கைரேகைச் சட்டத்திற்கு எதிராகக் காவல்துறையோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். “எங்களில் சிலர் திருடலாம். அதற்காக எல்லோரையும் திரு டர்கள் என்று சொல்வதில் என்ன நியாயம். இது அரசாங்கத்திற்கே மிகப்பெரும் அவமானம். எந்த மனிதனும் குற்றவாளியாகப் பிறப்ப தில்லை. பிறப்பிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் உண்டா? நாங்கள் ஒரு போதும் கைரேகை வைக்க முடியாது’’ என்று கடும் சினத்தோடு பேசினர்.
அந்த மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடி யாத காவல்துறையினர் ஆத்திர மடைந்தனர். அப்போது ஓவாயன் என்பவர் அருகிலிருந்த தனித் துணை ஆட்சியரை நெருங்கினார். அவரது ஒரு கையில் கேழ்வரகு ரொட்டியும், இன்னொரு கையில் கல்லும் வைத்திருந்தார். அமை தியை விரும்பினால் கேழ்வரகு ரொட்டியை எடுத்துக் கொள்வாய் என்றும், அமைதியைக் குலைத்தால் கல்லால் அடிபடுவாய் என்றும் எச்சரிக்கை செய்தார். சமாதான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்ததும் உதவி வட்டாட்சியர் ஜான் அன்பு நாடார் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கண் மூடித்தனமாகச் சுடத் தொடங் கினர். அந்த மக்கள் தற்காப் பிற்காகக் கொண்டு வந்தி ருந்த கத்திகள், மூங்கில் கழிகள், ஈட்டிகள், கவன்கள் மற்றும் பூமரங் போன்ற ஆயுதங்கள் துப்பாக்கி களுக்கு முன்னால் பலனளிக்க வில்லை.
துப்பாக்கிக் குண்டுகளை நெஞ் சிலேந்தியபடி பலரின் உடல் சரிந்தது. மாயாண்டித் தேவர் என்ப வருக்கு மார்பிலும், வயிற்றுப் பகுதி யிலும் குண்டுகள் பாய்ந்ததால் ஈரலும் குடல்களும் வெளியே பிதுங்கிக் கிடந்தன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வருக்கு மாயாக்காள் என்னும் பெண்மணி தண்ணீர் தர முயன்ற போது, ஈவு இரக்கமின்றி அவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்ற னர். மொத்தம் 16 பேர் நிகழ் விடத் திலே மரணத்தைத் தழுவினர். உயிரிழந்தோர் பெயர் பின்வருமாறு –
மாயாண்டித் தேவர் என்ற நொத்தினி (வயது 35)
குள்ளன் பெரிய கருப்பன் , விருமாண்டித் தேவர் ,சிவன் காளைத் தேவர்,
ஆ. பெரியாண்டி , ஓவாயன் என்ற முத்துக்கருப்பன் (வயது 42)
மோளை சின்னாத் தேவர் (வயது 50)
சூ. மாயாண்டித் தேவர் , முனியாண்டி என்கிற மாயாண்டித் தேவர் (வயது 50)
பெ. உடையாத் தேவர் (வயது 35)
உ. சின்னமாயத் தேவர் , மா. பெரிய கருப்பத் தேவர் , ந. வீரணத் தேவர், உ. முத்தையாத் தேவர் , வீரத் தேவர் , பெ. மாயாக்காள் (வயது 43)
இந்த 16 பேர்களின் உடல்களும கட்டை வண்டியில் ஏற்றப்பட்டு, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைக்கப்பட்டது.
பதினாறு பேரைக் கொன்றொழித்த காவல்துறையின் இந்த வெறி அத்தோடு நிற்கவில்லை. 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கைது செய்து கையிலும் காலிலும் விலங்கிட்டது. நீரும் உணவும் தர மறுத்த காவல் துறையினர் 20 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள திருமங்கலம் நீதிமன்றத் திற்கு ஆடு மாடுகளை ஓட்டிச் செல்வது போல கால் நடையாகவே அழைத்துச் சென்றனர்.
பெருங்காமநல்லூர் மக்களின் கிளர்ச்சி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அதன்பிறகு பிரித்தானிய அரசு நெகிழ்வுத் தன்மையோடு இருப்பதாகக் காட்டிக் கொள்ள முனைந்து, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்தியது. கள்ளர் பஞ்சாயத்து அமைப்பு, கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, கள்ளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றைத் தொடங்கி பல் வேறு நலத் திட்டங்களுக்கு வழி வகுத்தது. ஆனாலும் குற்றப்பழங் குடிகள் சட்டத்தை நீக்க முன்வராத கார ணத்தால் இதற்கு எதிரான கண்ட னக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.
குற்றப்பழங்குடிகள் சட்டத்திற்கு எதிராக முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் ரோசாப் பூத் துரை என்று அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் ஆவார். கேரளா வைச் சேர்ந்த இவர் தன்னை பேராயக் கட்சியில் இணைத்துக் கொண்டு மதுரையில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு வந்தார். பெருங்காமநல்லூர் கலவரத்தின் போதும், அதற்கு முன்பும் இச்சட்டத்தால் பிரமலைக் கள்ளர்கள் பாதிக்கப்பட்டபோது இலவசமாகவே நீதிமன்றத்தில் வாதாடினார். இவருக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு “ரோசாப்பூ’’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
1933 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களும் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசார ணையின் போது இச்சட்டத்தின் கொடுமைகள் குறித்தும், அதனை நீக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார். குற்றப்பரம்பரையினர் எனப்படுவோரின் கொடூர நிலை யை எண்ணிப் பார்க்க வேண்டு மென்றும் கிரிமினல் இன மக்கள் சம்மந்தப்பட்ட இந்தச் சட்டம் எங்கே அந்த இன மக்கள் இருந் தாலும் அவர்களுக்குப் பாதக மாகவே இருப்பதாக மனம் வருந்திப் பேசினார்.
1934 ஆம் ஆண்டு மே 12, 13இல் கமுதி அருகில் உள்ள அபிராமம் ஊரில் ஆப்பநாட்டு மறவர்கள் மாநாடு நடத்தபட்டது.
இதில் வரதராஜிலு நாயுடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், சசிவர்ணத் தேவர், பிள் ளையார் குளம் பெருமாள் தேவர், நவநீத கிருஷ்ண தேவர் ஆகிய ஐவர் கொண்ட குழு அமைக்கப் பட்டு இந்தச் சட்டத்தை நீக்குமாறு சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டது.
பிரமலைக் கள்ளர்களுக்கு ஆதர வைத் தெரிவிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களால் 15. 2. 1939 இல் மதுரை திருப்பரங்குன்றத்திலும், 18.6.1939 இல் உசிலம்பட்டியிலும் மாநாடுகள் கூட்டப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “சிறைக்குச் செல் அல்லது கட்டை விரலை வெட்டிக் கொள்! என்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழக்கம் மக்களின் முழக்கமாக மாற்றம் கண்டது.
இந்தியவிடுதலைக்குப் போராடி வந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், ஐ. மாயாண்டி பாரதி, கே.பி. சானகியம்மாள் ஆகியோரும் இச்சட்டத்திற்கு எதிராக கிராமங்கள் தோறும் பரப்புரை செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பிரித்தானிய அரசு பல்வேறு கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளுக்கிடையிலும் விடாப்பிடியாக இச்சட்டத்தைத் தீவிரமாகவே அமல்படுத்தியது. மதுரை மாவட்டத்தில் 1920இல் 20,896 பேரும், 1925இல் 27,166 பேரும், 1937இல் 1,38,083 பேரும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
1937 ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் இச்சட்டம் கடும் எதிர்ப்பைச் சந்தித்த போதிலும், கைவிடப்படவில்லை. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாம் உலகப் போர் காலகட்ட நெருக்கடியில் இச்சட்டத்தின் எதிர்ப்புக் குரல் சற்று குறைந்தே ஒலித்தன.
1947இல் ஏற்பட்ட காங்கிரசு ஆட்சியின் போது இச்சட்டத்தின் எதிர்ப்புக் குரல் மீண்டும் துளிர் விடத் தொடங்கின. சட்டமன்றத்திலும் சட்ட மேலவையிலும் செய் யூர் ஆதிதிராவிடர் இராஜகோபால், ருக்குமணி லெட்சுமிபதி, ஆதிதிராவிடர் ஐ. முனியசாமிப் பிள்ளை, சுல்தான் மூர், ஆர்.வி. சாமிநாதன் ஆகியோர் இச்சட் டத்தை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சுப்பராயன் அவர்கள் 1947 மே 30 ஆம் நாள் தலைமை ஆளுநர் ஒப்புதல் பெற்று, 1947 சூன் 5 ஆம் நாள் இச்சட்டத்தை அடியோடு நீக்கினார்.
குற்றப்பரம்பரைச் சட்டம் என்று அழைக்கப்படும் பிரித்தானிய அரசின் அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட அந்த மக்களின் மனத்தில் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அதே அடக்கு முறை சிந்தனைப் போக்கை சாதிய கண்ணோட்டத்தில் சிலர் வளர்த்திருப்பது முரண்பட்ட செயலாகவும் வேதனைக்குரிய தாகவும் உள்ளது.
ஒட்டுமொத்த தமிழினத்தையும் பிறவிக் குற்றவாளிகளாகப் பார்க்கும் தில்லி அரசின் மனப்போக்கை தமிழர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, அணுஉலை, கச்சத்தீவு, நியூட்ரினோ, மீத்தேன் என்று அடுக்கடுக்கான சிக்கல்கள் தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கின்றன. மற்ற தேசிய இனங்களுக்கு இது போன்றதொரு நெருக்கடிகளைத் தில்லி அரசு உருவாக்கவில்லை.
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்டு செயல்படும் அண்டை மாநிலங்களை எதிர்த்தும் தில்லி அரசை எதிர்த்தும் தமிழர்கள் சாதி விடுத்துப் போராட முன்வர வேண்டும். இது ஒன்றே தமிழர் சமத்துவ அறத்தையும் தமிழர் ஒற்றுமையையும் வளர்க்கும்!