இலக்கிய வாசிப்பையும் கலைஇலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளையும் இரு கண்களாகக் கருதி இயங்கி வருபவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த மருதசாமி. ஏறத்தாழ அறுபது ஆண்டு காலமாக தமிழில் வெளிவரும் இலக்கியப் படைப்புகளையும் பத்திரிகைகளையும் தொடர்ந்து ஆர்வமுடன் படித்து வருகிறார். எண்பது வயதைக் கடந்திருக்கும் அவர் இளமைத் துடிப்போடு இன்றும் தேடித்தேடி வாசித்து வருகிறார். அவருடைய வற்றாத ஆர்வமும் உற்சாகமும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்.
கேள்வி: உங்கள் இளமைக் காலத்தில் கல்விச் சூழல் எப்படி இருந்தது? உங்களுக்கு வாசிப்புப் பழக்கம் எப்படி ஏற்பட்டது?
பதில்: மயிலாடுதுறைக்கு அருகிலிருக்கும் அகரக்கீரமுடி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் நான் பிறந்தேன். என் அப்பாவின் பெயர் ரத்தினம். அம்மாவின் பெயர் ராஜம்மா. இரண்டு அண்ணன்மார்களை அடுத்து பிறந்தவன் நான். அப்பா விவசாயம் பார்த்து வந்தார். எங்கள் கிராமத்திலேயே இருந்த தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கூறைநாடு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படித்தேன். கிராமத்திலிருந்து பள்ளிக்கூடத்துக்கு நண்பர்களோடு கூட்டமாகச் சேர்ந்து நடந்துதான் சென்று திரும்புவோம். கிராமத்துக்கும் பள்ளிக்கும் இடையிலிருந்த கேணிக்கரை என்னும் இடத்தில் திருவள்ளுவர் படிப்பகம் என்ற பெயரில் ஒரு படிப்பகம் இருந்தது. நாளேடுகளும் வார மாத இதழ்களும் அங்கே வைத்திருப்பார்கள். அந்த ஊரைச் சேர்ந்த திராவிட இயக்கச் சார்புடைய இளைஞர்கள் கூட்டாகச் சேர்ந்து அந்தப் படிப்பகத்தை நடத்தி வந்தார்கள்.
அந்தப் படிப்பகத்துக்குள் சென்று நாளேடுகளையும் இதழ்களையும் படிக்கத் தொடங்கினேன். படக்கதைகளைப் படிப்பதிலும் உலகச்செய்திகளை அறிந்து கொள்வதிலும் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம்தான் என்னை வாசிப்புப் பழக்கத்துக்குள் இழுத்து வந்தது. என் வயதொத்த இளைஞர்கள் பலரும் விளையாட்டில் ஆர்வமாக இருந்தபோது நான் படிப்பகத்தில் பத்திரிகைகளைப் படித்து பொழுது போக்குபவனாக இருந்தேன். ஒன்பதாம் வகுப்புக்கு வந்த பிறகு நகரிலேயே இருந்த மாணவர் விடுதியில் எனக்கு இடம் கிடைத்தது. அதனால் தினந்தோறும் கிராமத்துக்குச் சென்றுவர வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆகவே, எனக்குக் கிடைத்த ஓய்வுப் பொழுதுகளை பள்ளிக்கூடத்திலேயே இயங்கிவந்த நூலகத்தில் கழித்தேன். படிப்பகத்தில் இருந்ததுபோல பள்ளி நூலகத்தில் வார, மாத இதழ்கள் கிடைக்கவில்லை. செய்தித்தாள் மட்டுமே இருந்தது. கூடவே அடுக்கடுக்காக புத்தகங்கள் இருந்தன. ஏராளமான சிறுவர் கதை நூல்களும் அறிவியல் நூல்களும் இலக்கிய நூல்களும் இருந்தன. அவற்றை எடுத்து படிக்கத் தொடங்கினேன். அக்காலத்தில் மு. வரதராசனார் அவர்கள் எனக்குப் பிடித்த எழுத்தாளராக இருந்தார். அவர் எழுதிய தம்பிக்கு, அன்னைக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்னும் தலைப்புகளில் கடித வடிவில் அவர் எழுதிய புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒருவர் தம் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய நல்ல பழக்கவழக்கங்களைப் பற்றி மு. வ. தம் புத்தகங்களில் விரிவாகவே எழுதியிருந்தார். படிக்கப் படிக்க, அக்கருத்துகள் அனைத்தும் என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருந்தன.
பள்ளிப்படிப்புக்குப் பிறகும் உங்கள் வாசிப்புப் பழக்கம் தொடர்ந்ததா?
என்னை வடிவமைத்துக் கொள்ள உதவியதே அந்த வாசிப்புப் பழக்கம்தான். அது இல்லாமலிருந்தால், ஒரு பாமரனாக நான் எப்படி எப்படியோ ஆகியிருப்பேன். 1960ஆம் ஆண்டில் எஸ். எஸ். எல். சி. தேர்வில் நான் பள்ளியில் உயர்ந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றேன். என் ஆசிரியர்களும் நண்பர்களும் என்னைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்படி அறிவுரை கூறினார்கள். ஆனால், நான் வேலைக்குச் செல்லவேண்டிய ஒரு நெருக்கடியில் இருந்தேன். அந்தக் காலத்தில் அஞ்சல்துறையில் பள்ளியிறுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து மூன்று மாதப் பயிற்சியளித்து அஞ்சல்நிலையத்தில் எழுத்தர்களாகப் பணிநியமனம் செய்தார்கள். 1963இல் அப்படி ஒரு விளம்பரம் பத்திரிகையில் வந்தது. நான் மதிப்பெண் பட்டியலோடு அந்த வேலைக்கு விண்ணப்பித்தேன். மதுரை கோட்டத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அப்போது அறுபது ரூபாய் அடிப்படைச் சம்பளம். அகவிலைப்படியும் இதர படிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட நூறு ரூபாய் சம்பளமாகக் கிடைத்தது. அப்போது அது பெரிய தொகை.
பயிற்சி முடிந்ததும் திண்டுக்கல் அஞ்சல் நிலையத்தில் பணியில் சேர்ந்தேன். திண்டுக்கல்லில் இருந்த நூலகத்தைத் தேடிச் சென்று அங்குக் கிடைத்த புத்தகங்களையும் வார மாத இதழ்களையும் படிக்கத் தொடங்கினேன். அங்கு சென்று ஒரு மணி நேரம் உட்கார்ந்தால் கல்கி, விகடன், குமுதம் என பல இதழ்களையும் படித்து விடலாம். மு. வ. வைத் தொடர்ந்து பிற எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்த நூலகத்தில்தான் எடுத்து வாசித்தேன். செலவைக் குறைத்து சிக்கனமாக இருந்து, பணத்தை மிச்சப்படுத்தி சொந்தமாகவும் புத்தகங்கள் வாங்கிப் படித்தேன். கல்கண்டு இதழ் அக்காலத்தில் நான் விரும்பிப் படித்த இதழ். அதில் வெளிவந்த தமிழ்வாணன் கேள்வி பதில் பகுதி எனக்கு மிகவும் பிடிக்கும். பல உலகத் தகவல்களையும் வரலாற்றுச் செய்திகளையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள அந்த வாசிப்பு எனக்கு உதவியது. திடீரென ஏற்பட்ட ஒரு யோசனையின் விளைவாக, அந்தக் கேள்வி பதில் பகுதிகளை மட்டும் இதழிலிருந்து வெட்டியெடுத்து ஒரு கோப்புக்குள் கட்டிவைத்து சேகரிக்கத் தொடங்கினேன். அதிக அளவில் அவை சேர்ந்ததும், அவற்றையெல்லாம் ஒரு தொகுதியாக பைண்டிங் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டேன். அப்படி பல தொகுதிகள் என்னிடம் இருந்தன.
வயதான பிறகு, தொடர்ந்து பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, அவற்றையெல்லாம் விருப்பத்தோடு கேட்ட நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன். திண்டுக்கல் அஞ்சல் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்ததும் அங்கு ஏற்கெனவே இயங்கிவந்த தொழிற்சங்கத்தில் இணைந்துகொண்டேன். தொழிற்சங்கத்தில் பல நல்ல வாசகர்கள் இருந்தனர். அந்த உறவும் நெருக்கமும் என் வாசிப்புப்பழக்கம் தொடரக் காரணங்களாக இருந்தன. காரைக்குடியில் பணியாற்றிய ஜெகன் போன்ற தலைவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு, போராட்டம் ஆகியவை அவருடைய அடையாளங்கள். தாமரை இலக்கிய இதழ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது தி. க. சி. அவர்கள் அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்தார். ஒவ்வொரு மாதமும் தாமரை இதழைப் படித்ததும் அதில் வெளிவந்த படைப்புகள் குறித்து ஒரு கடிதம் எழுதி அந்த இதழுக்கு அனுப்பிவிடுவேன். பல சமயங்களில் தி. க. சி. என் கடிதத்துக்குப் பதில் எழுதியிருக்கிறார். வெகுகாலம் அக்கடிதங்களையெல்லாம் நான் பாதுகாப்பாக வைத்திருந்தேன். சமீபத்தில்தான் எப்படியோ தொலைந்து விட்டன.
அஞ்சல் துறையில் இணைந்த பிறகும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என் வாசிப்புப் பழக்கமும் தொடர்ந்தது. தொழிற்சங்கப் பொறுப்பில் இருந்த ஜெகன், அக்காலத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவருடைய பங்களிப்புடன் 1968இல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மூன்றாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. குன்றக்குடி அடிகளார், நா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன், தா. பாண்டியன், ஜெயகாந்தன் போன்றோரின் உரைகளை விரும்பிக் கேட்டேன். அந்த உரைகள் எனக்குப் புதிய வெளிச்சத்தைக் கொடுத்தன. அதுதான் நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி. பல புதிய புத்தகங்களை அந்த வளாகத்தில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அவற்றையெல்லாம் வாங்கிவைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினேன்.
பல எழுத்தாளர்களை நேரில் பார்த்திருப்பதாகவும் உரையாடிப் பழகியிருப்பதாகவும் நீங்கள் சொல்லும் தகவல்களைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த எழுத்தாளருடன் நீங்கள் முதலில் நெருங்கிப் பழகினீர்கள்?
நா. பார்த்தசாரதிதான் நான் நெருங்கிப் பழகிய முதல் எழுத்தாளர். அப்போது அவருடைய குறிஞ்சிமலர் நாவலைத் தொடராக ஒவ்வொரு அத்தியாயத்துக்காகவும் காத்திருந்து படித்தேன். அரவிந்தன் இன்றளவும் என் மனத்துக்குள் பதிந்திருக்கும் இலட்சியக் கதாபாத்திரம். என் வழக்கப்படி, குறிஞ்சிமலர் தொடர்கதை அத்தியாயங்களை மட்டும் தனியே கத்தரித்துவைத்து பைண்டிங் செய்து வைத்திருந்தேன். பலருக்கு அதைப் படிக்கக் கொடுத்திருக்கிறேன். அஞ்சல்நிலையத்தில் என்னோடு பணிபுரிந்த கல்யாணசுந்தரம் என்னும் நண்பர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் ஏதோ ஒரு வகையில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி அவர்களோடு நல்லுறவில் இருந்தார். நா. பார்த்தசாரதி ஆண்டுக்கு ஒருமுறை கொடைக்கானலில் சில நாட்கள் தங்கிச் செல்வதை அவர்தான் எனக்குத் தெரிவித்தார். நான் நா. பா. வுடைய வாசகர் என்று தெரிவித்ததும், நா. பா. கொடைக்கானலுக்கு வந்திருந்த சமயத்தில் என்னை அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகப்படுத்தினார். அவர் என்னை ஒரு வாசகராகக் கருதாமல் சக நண்பராகவே என்னை நடத்திப் பழகியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
அடுத்தடுத்து நான் ஒவ்வொரு ஆண்டும் அவரைச் சந்தித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றல் பெற்று நான் மயிலாடுதுறைக்கு வந்து சேர்ந்த பிறகுகூட எங்களுடைய மடல் தொடர்பு தொடர்ந்தது. சில இலக்கிய, கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர் மயிலாடுதுறைக்கு வந்தபோதெல்லாம் நான் அவரைச் சந்தித்துப் பேசியதுண்டு. 1965ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு அன்று அவர் தீபம் என்னும் பெயரில் இலக்கிய மாத இதழைத் தொடங்கினார். அது நான் மிகவும் விரும்பிப் படித்த இதழ். 1987 இறுதியில் நா. பார்த்தசாரதி மறைந்தார். அதையடுத்து 1988ஆம் ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவந்த இதழோடு தீபம் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. இடைப்பட்ட இருபத்து மூன்று ஆண்டுகளாக வெளிவந்த எல்லா இதழ்களையும் படித்து சேகரித்துவைத்திருந்தேன். நா. பா. அவர்களோடு பழகியதைப்போலவே எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்களோடும் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
சிறுகதை, நாவல், கட்டுரைகளில் எதை நீங்கள் விரும்பிப் படிப்பீர்கள்?
என் பதில் உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். எந்த இதழாக இருந்தாலும் நான் முதலில் கட்டுரைகளைத்தான் விரும்பி வாசிப்பேன். அதற்குப் பிறகு அந்த இதழில் வெளிவந்திருக்கக்கூடிய நேர்காணல்களை விரும்பி வாசிப்பேன். நேர்காணல் ஒரு படைப்பாளியின் படைப்புலகத்தையும் அக உலகத்தையும் ஒருசேர நம் முன்னால் வைக்கிறது. இலக்கியம் என்பதற்கு அப்பால் ஓர் எழுத்தாளருடைய கருத்துநிலைகளையும் ஆர்வங்களையும் அறிந்துகொள்ள நேர்காணல்கள் உதவியாக இருக்கின்றன. கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக நான் படித்த பத்திரிகைகளில் வெளிவந்த நேர்காணல்களையெல்லாம் தனியே கத்தரித்து பைண்டிங் செய்து பல தொகுதிகளாக வைத்துள்ளேன். புதிய பார்வையில் வெளிவந்த உங்களுடைய நேர்காணல் பிரதி இல்லை என்று நீங்கள் சொன்னபோது, அதை நான் என்னுடைய தொகுப்பிலிருந்து பிரதியெடுத்துக் கொடுத்ததற்கு அந்தச் சேமிப்புதான் காரணம்.
உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?
ஜெயகாந்தன்
ஜெயகாந்தனுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும்?
ஜெயகாந்தனின் ஒவ்வொரு படைப்பும் எனக்குப் பிடித்தமானதுதான். பிடிக்காதது என ஒன்றுகூட அவர் எழுத்துலகில் இல்லை. நீங்கள் கேட்டதற்காக, எனக்கு மிகமிகப் பிடித்த படைப்புகளைச் சொல்கிறேன். அக்கினிப்பிரவேசம், உண்மை சுடும், ஒரு பிடி சோறு, ட்ரெடில், யுகசந்தி, இலக்கணம் மீறிய கவிதை, பத்தினி பரம்பரை, சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான், ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், கருணையினால் அல்ல, பாரிசுக்குப் போ. புத்தகத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே இப்போதுகூட இந்தக் கதைகளை நான் சொல்லமுடியும். அந்த அளவுக்கு மனத்தில் பதிந்துபோய் இருக்கின்றன. ஜெயகாந்தனைப் பற்றிப் பேச்சு வந்ததும் ஒரு முக்கியமான விஷயம் நினைவுக்கு வருகிறது. 1965இல் அவர் இயக்கி வெளிவந்த உன்னைப்போல ஒருவன் திரைப்படம் ஏதோ காரணத்தால் வெளியூர் திரையரங்குகளுக்கு வரவில்லை. மனமகிழ் மன்றங்களும் இலக்கிய அமைப்புகளும் படப்பெட்டிகளை நேரிடையாக அவரிடமிருந்தே பெற்று திரையிட்டு வந்தன. அப்போது நான் திண்டுக்கல் அஞ்சல் நிலைய ஊழியர்களின் மனமகிழ் மன்றத்தின் செயலாளராக இருந்தேன். ஜெயகாந்தனுடன் தொடர்பு கொண்டு திரைப்படப் பெட்டிகளை வரவழைத்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு ஒரு திரையரங்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு காட்சியென இரு நாட்கள் வெளியிட ஏற்பாடு செய்தேன். இரு காட்சிகளுக்கும் அரங்கு நிறையும் அளவுக்குப் பார்வையாளர்கள் வந்திருந்தனர். அந்தப் படத்துக்குத்தான் அந்த ஆண்டின் மிக உயர்ந்த தேசிய விருது கிடைத்தது. ஜெயகாந்தனின் அறிமுகம் எனக்குப் பல விதங்களில் உதவியாக அமைந்தது. எண்பதுகளில் மயிலாடுதுறையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராக இருந்த சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு அவர் வந்து சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
இத்தனை ஆண்டு காலமாக வாங்கிப் படித்த சிறுபத்திரிகைகளைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா?
காலமெல்லாம் சேர்த்து பாதுகாத்து வைத்திருந்த புதையலை கண்முன்னாலேயே பறிகொடுத்துவிட்டவனின் கதைதான் என் கதை. அறுபதுகளில் நான் பணியில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு சிக்கனமாகச் செலவு செய்து பணத்தைச் சேமித்து வாங்கிய பத்திரிகைகளை எறும்பு சேமிப்பதுபோல சேமித்து வைத்திருந்தேன். 1981ஆம் ஆண்டு வரை அந்தச் சேமிப்பு என்னிடம் இருந்தது. 1982இல் பதவி உயர்வு பெற்று நான் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றேன். புதிய ஊருக்கு என்னால் எல்லாப் புத்தகக்கட்டுகளையும் சுமந்துகொண்டு செல்லமுடியவில்லை. அதனால் ஜெயகாந்தன் புத்தகங்களையும் சில தொழிற்சங்க இதழ்களையும் மட்டும் என்னோடு எடுத்துச் சென்றேன். எஞ்சியிருந்த எல்லாப் புத்தகங்களையும் சிறுபத்திரிகைகளின் தொகுதிகளையும் எடுத்துச் சென்று என் பெற்றோர் வசித்த வீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். பாதுகாப்பின்மை காரணமாக, அவை அனைத்தும் அந்த வீட்டில் கறையானுக்கு இரையாகி விட்டன. என் வாழ்வில் ஏற்பட்ட என்னால் தாங்க முடியாத பேரிழப்பு இது. ஆயினும் நான் மனம் சோர்ந்துவிடவில்லை. போனதை நினைத்து வருத்தப்படுவதில் பயனொன்றுமில்லை என என்னை நானே தேற்றிக்கொண்டு புதிதாக புத்தகங்களையும் இதழ்களையும் வாங்கிச் சேமிக்கத் தொடங்கினேன். இதழ்களில் நல்ல கட்டுரைகளையும் நல்ல புத்தக மதிப்புரைகளையும் நல்ல நேர்காணல்களையும் அஞ்சலிக்கட்டுரைகளையும் படிக்க நேரும்போதெல்லாம் அவற்றையெல்லாம் தனியே வெட்டியெடுத்து தொகுத்து வைத்துக்கொள்வேன்.
இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுண்டா?
பொழுதைப் பயனுள்ளதாக்கி மகிழ தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்கிறேன். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வெளிவரும் இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளைத்தான் முதலில் பார்ப்பேன். மனத்துக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குச் செல்வேன். அதற்காக மயிலாடுதுறையிலிருந்து இரண்டு மூன்று மணி நேரப் பயணம் செய்யவேண்டும் என்றாலும் தயங்கமாட்டேன். புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை என எல்லா ஊர்களுக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறேன். எல்லா ஊர்களிலும் எனக்கு தொழிற்சங்கம் தொடர்பாகக் கிடைத்த நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் சந்திக்க இத்தகு நிகழ்ச்சிகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வேன்.
மொழிபெயர்ப்புப்படைப்புகளைப் படிப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்ப்பு எது?
எனக்கு மிகவும் பிடித்த மொழிபெயர்ப்பு நூல் மாக்சிம் கார்க்கி எழுதிய தாய். சோவியத் பிரசுரம் வெளியிடுவதற்கு முன்பாகவே அந்த நாவல் எழுத்தாளர் தொ. மு. சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பில் அன்னை என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. கா. ஸ்ரீ. ஸ்ரீ. மொழிபெயர்ப்பில் வந்த காண்டேகர் நாவல்களையும் ஆர். சண்முகசுந்தரம், த. நா. குமாரசாமி, குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பில் வந்த நாவல்களையெல்லாம் விரும்பிப் படித்திருக்கிறேன். உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த புதைந்த காற்று, ஊரும் சேரியும், கவர்ன்மென்ட் பிராமணன் நூல்களையும் படித்திருக்கிறேன்.
வீட்டில் நூலகம் வைத்திருக்கிறீர்களா?
கறையான் தின்றதுபோக எஞ்சிய புத்தகங்களையெல்லாம் சேர்த்து வீட்டிலேயே பாரதியார் நூலகம் என்னும் பெயரில் வைத்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள, ஆய்வாளர் இளசை மணியன் நிர்வகித்த பாரதி ஆய்வு மையத்தின் ரகுநாதன் நூலகத்துக்கும், பேராசிரியர் பாஸ்கர் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருடைய வேண்டுகோளை ஏற்று தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கும், மயிலாடுதுறையின் தனியார் கல்லூரி நூலகத்துக்கும், திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித்தின் கூகை நூலகத்துக்கும், திரைப்பட ஒளிப்பதிவு இயக்குநரும் சிறந்த வாசகருமான ஆர். டி. ராஜசேகரின் அலுவலக நூலகத்துக்கும் என்னுடைய சேமிப்பிலிருந்து ஏறத்தாழ ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேன். அவை போக இப்போது என் பாரதியார் நூலகத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் புத்தகங்கள் உள்ளன. 1955 முதல் 2024 வரை சாகித்திய அகாதமி விருது பெற்ற எல்லா தமிழ்ப் புத்தகங்களும் என்னிடம் உள்ளன. 1970 முதல் 2019 வரை இலக்கியச் சிந்தனை அமைப்பின் பரிசைப் பெற்ற எல்லாப் புத்தகங்களும் உள்ளன.
சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்களை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் எதனால் ஏற்பட்டது?
கலை இலக்கிய மேம்பாட்டுக்கும் பன்மொழிகள் புழங்கும் நாடான இந்தியாவில் மொழிகளுக்கிடையே ஒரு பரிமாற்றம் நிகழவேண்டும் என்னும் நோக்கத்துக்காகவும் நேரு பிரதமராக இருந்த காலத்தில் உருவாக்கிய அமைப்புதான் சாகித்திய அகாதமி. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பென தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு விருது அளிப்பதோடு அந்நூலை இந்தியாவில் உள்ள பிற மொழியினரும் வாசிப்பதற்கு உகந்தவகையில் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. அவற்றை வாங்கிப் படிப்பது என்பது, இந்தியப் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்கிற எண்ணத்தால் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிச் சேமிக்கத் தொடங்கினேன்.
(06. 07. 2025 அன்று கடலூரில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தபோது, அவரோடு நிகழ்த்திய உரையாடல் இது)
சந்திப்பு: பாவண்ணன்