1923 அக்டோபர் 20ஆம் தேதி ஆலப்புழையில் புன்னப்புரை என்னும் ஊரில் தையல் தொழிலாளரான சங்கரன், அக்கம்மாள் ஆகியோரின் இளைய மகனாக தோழர் அச்சுதானந்தன் பிறந்தார். அவர் பிறக்கும் போது கேரள சமூகம் மறுமலர்ச்சியின் தொடக்க காலத்தில் பயணித்தது. பொய்கையில் அப்பச்சன், அய்யங்காளி, ஸ்ரீ நாராயண குரு போன்றோர் கேரளத்தில் சமூக சீர்திருத்தத்தின் சிந்தனைகளை விதைத்தனர். மிகவும் வறுமையான சூழலில் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய தோழர் வி. எஸ் நான்கு வயதில் தனது அம்மாவை இழந்தார். வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட அவரது அம்மா ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டிருந்த ஒரு குடிசையில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தார். தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரை தூரத்தில் நின்று மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது.
பின்பு 11ஆம் வயதில் தந்தையையும் இழந்தார். தந்தையின் மரணத்திற்குப்பிறகு வறுமை காரணமாக ஆப்பிரின் என்னும் ஆங்கிலேய கயிறு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.
திருவிதாங்கூரில் சாதிய ஒடுக்குமுறை தலைவிரித்து ஆடியது. ஜமீந்தார்களும் திவான்மார்களும் ஆங்கிலேயர்களும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாகவே நடத்தினர்.
ஒரு பக்கம் சாதிய ஒடுக்குமுறை மற்றொரு பக்கம் முதலாளித்துவத்தின் சுரண்டல் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக நகர்ந்தது. தான் வேலை செய்த கயிறு தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கப்பட்டது. தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி தொழிலாளர்களை திரட்டிப் போராட்டம் நடத்துவதற்காக வி.எஸ். துணிந்தார். அங்கிருந்துதான் அச்சுதானந்தன் என்னும் கம்யூனிஸ்ட் கட்டமைக்கப்படுகிறார்.
சுரண்டலுக்கு எதிரான முதல் போராட்டம் அவரது தலைமையில் இத்தொழிற்சாலையில் நடத்தப்பட்டது. அவருக்கு 14 வயது இருக்கும் போது இப்போராட்டம் நடைபெறுகிறது. ஆங்கிலேய ராணுவம் அவரைக் குறி வைக்கிறது. மீனவத் தொழிலாளிகள், கயிறு தொழிலாளிகள், காயங்குளத்தில் குட்டநாட்டில் விவசாய தொழிலாளர்கள் போன்றோரின் உரிமைப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கும் இளைஞராக மாறுகிறார். அவ்வேளையில் கேரளத்தின் தோழர்களின் தோழன் என்று அறியப்படும் தோழர் பி. கிருஷ்ண பிள்ளையிடம் அவர் அறிமுகமாகிறார். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக ஆரம்ப காலத்தில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இ. எம். எஸ். நம்பூதிரிபாடின் தலைமையிலான காங்கிரஸ் சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைகின்றார். அன்று முதல் அவர் மனதளவில் கம்யூனிசத்தை ஏற்கிறார்.
இளமையிலேயே ஜமீன்தார்களின் கொடுங்கோல் ஆட்சி முறையை எதிர்க்கிறார். கொட்டாம்பட்டியில் கஞ்சி குடிக்க மாட்டோம், தம்புரான் என்று உங்களை அழைக்க மாட்டோம் என்னும் கோஷத்தை எழுப்பி விடுகிறார். அந்த முத்திரை வாக்கியத்தை குட்டநாட்டில் உள்ள விவசாயிகள் மனதார உள்வாங்கிக் கொண்டு ஜமீன்தார்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் எழுச்சி பெறுகின்றனர். அத்துடன் வி. எஸ். அச்சுதானந்தன் ஒரு தொழிலாளி சமூகத்தின் இளம் தலைவராக மாறுகிறார். அவரை ஆங்கிலேய அதிகாரிகள் குறி வைக்கின்றனர். 1930களில் கம்யூனிஸ்ட் கட்சி தடைச் சட்டம் திருவிதாங்கூரில் அமலாகிறது.
கம்யூனிஸ்ட் கொள்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களை தேடிப்பிடித்து ஆங்கிலேயர்களும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட மன்னர்களின் சிப்பந்திகளும் வேட்டையாடினர். எனினும் கேரளத்தில் கம்யூனிஸ்ட் போராட்டம் அதிதீவிரமாக நடைபெற்றது. திருவிதாங்கூரை ஆண்டு வந்த மன்னர்களில் ஒருவரான திவான் சர் சி. பி, கம்யூனிஸ்டுகளாக செயல்பட்டு வரும் இளம் தோழர்களை வேட்டையாடுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கிறார். அக்காலத்தில் கம்யூனிஸ்ட்வாதிகள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். அவ்வாறு ஆலப்புழாவில் விவசாயிகளை ஒன்று சேர்த்து புன்னப்புரை- வயலார் போராட்டம் நடைபெறுகிறது. வெறும் 23 வயதை மட்டுமே எட்டி இருந்த வி. எஸ் அச்சுதானந்தன் முழுமனதாக அதில் செயல்பட ஆரம்பித்தார். பலமுறை ஆங்கில ராணுவத்தால் அவர் வேட்டையாடப்படுகிறார். எனினும் மீண்டும் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தலைமறைவு வாழ்க்கையின் போதும் கூட போராட்டத்தின் கிளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தோழர் அச்சு தானந்தன் செயல்பட்டு வருகிறார்.
அன்றைய திருவிதாங்கூர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. பி பத்ரோஸின் வேண்டுதலுக்கு இணங்க தோழர் சச்சிதானந்தன் கோட்டயத்தை அடுத்துள்ள பாலா என்னும் ஊருக்கு தலைமறைவு வாழ்க்கையை வாழ்வதற்காக அனுப்பி விடப்படுகிறார். அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர் மாற்றப்படும். அவ்வாறு வி. எஸ் அச்சுதானந்தனுக்கு அலெக்ஸ் என்னும் பெயர் அளிக்கப்பட்டது. அவர்களுக்கென்று செய்திகளைக் கொண்டு செல்ல கம்யூனிஸ்ட் ரகசிய தோழர்கள் செயல்படுவார்கள். அவர்கள் ரகசிய தூதுவர்கள் டாக் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் வி.எஸ்.அச்சுதானந்தனின் அருகில் சென்று கட்சி கொடுத்த காகிதத்தை கொடுத்து திரும்பும் வழியில் திருவிதாங்கூர் போலீஸ்காரர்கள் சந்தேகத்தின் பெயரில் சிறை பிடித்தனர். 1946 அக்டோபர் மாதம் 23ஆம் தேதி அது அரங்கேறியது. அதன் பின் போலீஸ்காரர்கள் அவரைத் தங்களுடைய கஸ்டடியில் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே அச்செய்தி ஆலப்புழையில் சி. ஐ. டியாக இருந்த வாசு பிள்ளை என்னும் அதிகாரிக்கு கைமாறப்பட்டது.
இங்கு தலைமறைவாக இருந்த ஒருவரை கைது செய்துள்ளோம். அவரின் பெயர் அலெக்ஸ் என்று கூறுகிறார். தாங்கள் தேடிக் கொண்டிருந்த அந்த அச்சுதானந்தன் தான் இவரா? என சந்தேகமாக உள்ளது. ஆகையால் நீங்கள் இங்கு விரைந்து வரவும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை கேட்டு ஆனந்தம் அடைந்த சி.ஐ.டி வாசுபிள்ளை உடனடியாக பாலா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு சென்றபோது அச்சுதானந்தனை அடித்து சித்திரவதைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்டுகளைப் பற்றி அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைப் பற்றி கூறவில்லை என்றால் அடித்துக் கொன்று விடுவோம் என்று போலீசார் மிரட்டினர். அதற்கு ஒத்துழைப்பு வழங்காத அச்சுதானந்தன் எவ்வளவு அடி வாங்க முடியுமோ அவ்வளவு அடியை வாங்குகிறார். போலீஸ் அவரை சக்கையாகப் பிழிந்து எடுத்தது. இதனிடையே அவரை அடையாளம் காட்டுவதற்காக ஆலப்புழா ஸ்டேஷனிலிருந்து வந்திருந்த வாசுபிள்ளை அவரை மேலும் சித்திரவதைப்படுத்த முடிவு செய்கிறார். சாக்குகளிலும் துணிகளிலும் கருங்கல் கட்டப்பட்டு அவ்வுடல் அடித்து சின்னாபின்னம் ஆக்கப்பட்டது. எவ்வளவு அடித்தாலும் அவர் தனது தோழர்களை காட்டிக் கொடுக்க மறுத்தார். பின்பு அங்கிருந்த போலீஸ்காரர் லாக்கப் கம்பிகள் வழியாக அவருடைய காலை இழுத்து வைத்து தனது கையில் இருந்த பயோனட்டை வைத்து பாதத்தில் குத்தி ஒரு ஓட்டையை போட்டார். ரத்தம் பொதுபொதுவென ஒழுகியது. உறுதியுள்ள கம்யூனிஸ்ட் ஆக இருந்த வி. எஸ் தன்னை எவ்வளவு சித்திரவதைப்படுத்தினாலும் தனது தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறக்கூடாது என்ற உறுதியோடு இருந்தார்.
போலீஸ்காரர்கள் அவர் இறந்து விடுவார் என்று முடிவு செய்தனர். பின்பு அங்கு நிரந்தரக் குற்றவாளியாக இருந்த கள்ளன் கோலப்பன் என்ற கைதியின் உதவியுடன் அந்த உடம்பை போலீஸ் ஜிப்பில் ஏற்றினர். மீனச்சல் ஆற்றின் கரையோரமாக அவ் உடலை தூக்கி எறிய போலீஸ்காரர்கள் திட்டமிடுகின்றனர். ஆனால் போகும் வழியில் உடம்பு அசைவது போல் அந்தக் கைதி கோலப்பனுக்கு தோன்றியது. போலீஸ்காரர்களிடம் "சார் உயிர் இருக்கிறது, இவரை அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு போனால் காப்பாத்தி விடலாம்" என்றார். சரி அவ்வாறே ஆகட்டும் என்று போலீஸ்காரர்கள் சம்மதித்தனர். அவ்வாறு மாசக்கணக்கில் ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு அச்சுதானந்தனின் உயிர் காப்பாற்றப்பட்டது. போராட்டத்திற்கான மறுஜென்மம் அது. அத்துடன் அச்சுதானந்தனின் போராட்டம் பல மடங்கு அதிகரித்தது.
பாவப்பட்டவர்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும், சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்காகவும் அவருடைய சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி கேரளத்தில் சாத்தியமானது. ஒருங்கிணைந்த கேரளத்தில் 1956இல் நடைபெற்ற தேர்தலில் 60 சீட்டுகளைப் பெற்றது. ஐந்து சுயேட்சைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் ஏறியது. ஆனால் 1957ல் அதில் ஒரு குறுக்கீடு ஏற்பட்டது. தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ரோசம்மா புன்னூஸ் என்னும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பிரபலமான தலைவர் பி. கே நாயரின் வேட்பு மனு போதுமான காரணங்கள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டதை ஒட்டி காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்த தேர்தல் வழக்கு வெற்றி பெற்று அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. அப்போது வி. எஸ் அச்சுதானந்தனின் போராட்ட குணத்தை காணமுடிந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலப்புழா மாவட்ட செயலாளராக இருந்தபோது தான் அச்சுதானந்தன் அத்தேர்தல் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆறு மாதமும் கடுமையான குளிர் நிலவும் மூணாறுக்கு அவர் வந்து சேர்ந்தார். கட்சிக்கு சொந்தமாக கட்டிடம் கூட இல்லை. எல்லாம் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது அல்லது பெரிய பெரிய முதலாளிகளின் கைவசம் மட்டுமே இருந்தது. மூணாறில் 1975 வரை ஆங்கில வியாபாரிகளின் ஆட்சி தான் நடைபெற்றது. பெயருக்கு மட்டுமே மூணார் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக அறியப்பட்டிருந்தது. தனது இளமைக்காலம் முதல் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தையும் அவர்களுடைய அடாவடித்தனத்தையும் கண்டு வளர்ந்த அச்சுதானந்தன் அதனைக் கண்டு அஞ்சவே இல்லை. தொழிலாளர்களை தன்னுடன் சேர்த்தார். ஒரு எஸ்டேட்டிலிருந்து மற்றொரு எஸ்டேட்டிற்கு செல்ல வேண்டுமானால் சுமார் மூன்று முதல் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை நடக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்கி இருந்த லாயங்கள் ஆங்கிலேய கண்காணிமாரின் கண்காணிப்பில் இருந்தது. கம்பெனியில் வேலை செய்யாதவர்கள் யாரும் அங்கு நுழையகூட முடியாத நிலை ஏற்பட்டது. தொழிலாளி சமூகத்திலிருந்து உயர்ந்து வந்த தொழிற்சங்கத் தலைவர்களின் துணையுடன் தோழர் அச்சுதானந்தன் 36 எஸ்டேட்டுகளையும் சென்றடைந்தார். பகலும் ராத்திரியும் தேர்தல் வேலையில் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் அரிசி, சர்க்கரை, தானியங்கள் போன்றவற்றின் சாக்குகளில் தான் அவர் படுத்து உறங்கினார்.
அன்று துடிப்புடன் செயல்பட்ட 11 இளம் தோழர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அவர்களில் பெரும்பாலானோர் மூணார் நகரத்தை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்களில் கூலி வேலை செய்து வந்தனர். அவர்களின் உதவியுடனே அந்த நாட்களைக் கழித்தார். சில நேரம் உணவு கிடைக்கும். சில நேரம் உணவு கிடைக்காது. ஹோட்டலில் மிச்சம் மீதி உள்ள உணவுகளைக் கொண்டு வந்து தோழர்கள் அவருக்குக் கொடுப்பர். எஸ்டேட் தொழிலாளர்களின் வீடுகள் அதைவிட பரிதாபமான நிலையில் இருந்தது. அங்கிருந்து அவருக்கு ஒரு கம்பளி கூட கிடைக்காது எனினும் தொழிலாளத் தோழர்கள் அவர்களால் முடிந்த அளவிற்கு தங்களது தோழரான அச்சுதானந்தனுக்கு உதவி செய்து வந்தனர்.
இவ்வாறு நாட்கள் நீங்கின. பரபரப்பான அந்தத் தேர்தல் கேரளத்தை மேலும் பரபரப்பாகியது. காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் முதிர்ந்த காங்கிரஸ் தலைவர் கர்மவீரர் காமராஜர் மூணார் பகுதிக்கு வருகை தந்தார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி போன்றோர் அந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்காக களம் இறக்கப்பட்டனர். ஆனால் அச்சுதானந்தன் பிரமுகர்கள் யாரையுமே களம் இறக்கவில்லை. இளையராஜா அவரது அண்ணன் பாவலர் பாஸ்கரன் போன்றோரின் குழுவைப் பயன்படுத்தி இசையால் தொழிலாளர்களிடம் ஓட்டு வாங்க முயற்சி செய்தார். மட்டுமன்றி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த எம். ஜி. ஆர். மூணாருக்கு ஒரு படப்பிடிப்பிற்காக வந்திருந்தார். அவரையும் தங்களுக்கு சாதகமாக வி. எஸ் பயன்படுத்திக் கொண்டார்.
மூணார் ஒரு தொழிலாளர்களின் களம் ஆகையால் தேர்தல் செலவிற்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து வந்திருந்த தோழர் ஜீவானந்தம், ராமமூர்த்தி போன்றோரின் உதவியுடன் தமிழகத்தில் பிற பகுதிகளுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கடிதங்களை அனுப்பினார். தோழர்கள் தங்களால் முடிந்த பணத்தை காசோலையாக அனுப்ப வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வாறு தொழிலாளர்களும் தோழர்களும் தங்களால் முடிந்த பணத்தை மூணாறுக்கு அனுப்பினர்.
தேர்ந்தெடுப்பு செலவு போக மீதமுள்ள பணத்தை அங்குள்ள கட்சித் தலைவர்களிடம் கொடுத்து கட்சி ஆபீஸில் கட்ட வேண்டும் என்று கூறி நிதியை ஒப்படைத்துவிட்டு அச்சுதானந்தன் மூணாறில் இருந்து வெளியேறினார். சில நாட்களுக்குப் பிறகு தேர்தல் முடிவு வெளிவந்தது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளார் ரோசம்மா புன்னூஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி. கே நாயரை விட 7800 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி அடைந்தார். ஒருங்கிணைந்த கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான வெற்றிகளில் ஒன்றாக அந்த வெற்றி வரலாற்றில் இடம் பிடித்தது. ஏனெனில் 60 சீட்டை மட்டுமே பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சி 5 சுயேட்சை எம்எல்ஏக்களுடன் ஆட்சியைத் தக்க வைத்தது. இவ்வாறு செல்லும் இடங்களெல்லாம் போராட்டத்தின் தீயைப் பற்ற வைத்த தோழர் வி. எஸ். ஒரு நூற்றாண்டின் கம்யூனிஸ்ட் வரலாற்றை போராட்டத்தால் நிரப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இது போன்ற ஒரு தலைவர் அரிது. அச்சுதானந்தன் மக்களின் தலைவர். அவர் செல்லும் இடமெல்லாம் எப்பொழுதும் சாதாரணத் தொழிலாளர்கள், குழந்தைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அவரைப் பற்றிக் கொள்வர்.
அவர் முன்னெடுக்கும் எல்லாப் பிரச்சினைகளும் மக்கள் பிரச்சினைகளாகவே இருந்தது. கடந்த காலங்களில் அவர் உயர்த்திய பிரச்சினைகள் எல்லாம் ஏழை எளியவர்களின் பிரச்சினைகளாக இருந்ததற்கு காரணம் அவர் தனது கொள்கையில் என்றும் உறுதியானவராக இருந்தார். முதலாளித்துவ சாம்ராஜ்யத்துவ சக்திகளுக்கு அவர் எப்போதுமே பயப்படவில்லை. மூணார் தேயிலைக்காடுகளில் நடைபெற்ற பொம்பிளை ஒருமைப் போராட்டம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.
2015 செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட எட்டு நாட்களாக மூணார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அப்போராட்டத்தை கேரள சமூகம் முக்கியமான போராட்டங்களில் ஒன்றாகக் கருதியது. அரசியல்வாதிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் போராட்டக் களத்தில் வி. எஸ் அச்சுதானந்தன் என்னும் புரட்சியாளர் வந்தவுடன் எட்டு மணி நேரத்தில் அப்பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. தலைமுறை தலைமுறையாக மூணாறை மூணாறாக மாற்றிய தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஒரு 10 சென்ட் இடத்தையாவது வழங்க வேண்டும் என்று நிரந்தரமாக கம்பெனிக்காரர்களிடமும் அரசாங்கங்களிடமும் முறையிட்டுக் கொண்டே இருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் முதலமைச்சராக இருந்தபோது டாட்டா கம்பெனியினர் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் சர்க்கார் பூமியை மூணாறில் பிடித்தெடுத்தார்.
அது முறைப்படி தொழிலாளர்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆகையால் அவரை சாதாரண மக்கள் 'போராளிகளின் போராளி' என்றே அழைக்கின்றனர். இவ்வாறு சென்ற இடமெல்லாம் தோழர் வி. எஸ். தொழிலாளர்களின் தோழரானார்.
ஆகையால் இந்நூற்றாண்டில் வாழ்ந்த கம்யூனிசவாதிகளின் மாதிரியாக அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட்வாதிகளான தோழர் சங்கரய்யா, தோழர் நல்லகண்ணு போன்றோரைப் போல கேரள மக்களின் மனதில் அவரும் நீங்காத புரட்சியாளராக மரணத்திற்குப் பிறகும் தொடர்வார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் தலைசிறந்த தலைவர்களாகக் கருதப்படும் இ. எம். எஸ், ஏ. கே. ஜி போன்றோர் தங்களை தொழிலாளி வர்க்கத்தின் தத்துப் பிள்ளை என்றே அடையாளப் படுத்திக்கொள்ள ஆசைப்பட்டனர். அவ்வாறே மக்களால் அழைக்கப்பட்டனர்.
ஆனால் வி. எஸ் என்றுமே தொழிலாளி வர்க்கத்தின் சொந்த மகனாகவே தொழிலாளர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார். ஆகையால் தான் இந்நூற்றாண்டில் நடைபெற்ற மனிதர்களுக்கான போராட்டங்களில் வி. எஸ் என்னும் இரண்டு எழுத்து போராட்டத்தின் முகமுத்திரையாக பதிக்கப்பட்டது.
- Dr. பிரபாஹரன். கெ