தமிழ் மொழியைத் - தமிழிசையைத்-தமிழ்ப் பண்பை வளர்க்கத் தமிழகத்துச் சான்றோர்களையெல்லாம் ஒன்று திரட்டித் ‘தமிழகப் புலவர் குழு’ வை அமைத்தவர். அதன் தலைவராகவும் திகழ்ந்தவர். தமிழ் மாநிலத் தமிழாசிரியர் சங்கத் தலைவராகத் தொண்டாற்றியவர். தமிழன் உயிர்நாடியான இலக்கணத்தில், பிற்காலத்தில் களைகள் எனத் தோன்றிய வழுக்களை நீக்கிய வண்டமிழறிஞர். அதன் தன்மானம் காக்கத் தமிழ்ச் செய்யுள் யாப்பிலக்கண ஆராய்ச்சியில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழக ‘ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம்’ வெளிவர அதன் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். தமிழாசிரியர்கள் நலம் பெறப் பாடுபட்டவர். அவர்தான், ‘செந்தமிழ்க் காவலர்’ எனப் போற்றப்படும் டாக்டர் அ. சிதம்பரநாதர்.

                chidambaranathanகுடந்தை நகரில், அமிர்தலிங்கம்-பார்வதி இணையருக்கு 03.04.1907 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் சிதம்பரநாதர்.

                குடந்தை பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதலிரண்டு வகுப்புகள் மட்டும் பயின்றார். பிறகு ‘நேடிங்’ உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்புவரை கற்றுத் தேர்ச்சி பேற்றார்; ‘கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி’-யில் இளங்கலை வகுப்பில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்துப் பாராட்டைப் பேற்றார்.

                இவர், கல்லூரியில் மாணவர் சங்கச் செயலாளராகச் செயலாற்றியபோதுதான், அதுவரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வந்த முறையை மாற்றி, முதன் முதலாக, தமிழில் கல்லூரி அறிவிப்புகளை வெளியிடவும், மாணவர்கள் விரும்பிப் படிக்கவும் ஆவன செய்தார். கல்லூரியில் நடைபெற்ற வரலாற்றுத்துறைப் போட்டியில் கலந்து கொண்டு ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி முதல் பரிசைப் பெற்றார். அக்கட்டுரையில், ‘தமிழ்நாடே உலக நாகரிகத்தின் ஊற்று’ என்று சான்றுகளுடன் நிறுவனார்.

                இளங்கலைத் தேர்வில் தமிழில் 1928 ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதன்மை, மாணவனாகத் தேர்ச்சியடைந்ததால், இவருக்கு, சென்னைப் பல்கலைக் கழகம் ‘ஜி.யூ.போப் தங்கப் பதக்கம்’ பரிசாக வழங்கியது. மேலும், அதற்காக ‘பிராங்க்ளின்’ பதக்கத்தையும் இவர் பெற்றார்.

                இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர், சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் சிறிது காலம் எழுத்தராகப் பணி புரிந்தார்.

                சென்னை அரசு முகமதியக் கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பெரியநாயகி அன்பவரை 1933 ஆம் ஆண்டு மணம் புரிந்தார்.

                தமிழ் மீது கொண்ட பற்றால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பில் சேர்ந்து பயின்று முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் தலைவராகவும், பொதுப் பேரவையின் தலைவராகவும், சமூக சீர்திருத்தச் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.

                அண்ணல் காந்தியடிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்தபோது தமிழில் வரவேற்பிதழ் அச்சிட்டுப் படித்தளித்தார்- என்பது குறிப்பிடத்தக்கது. தான் பயின்ற அதே பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக 1935 ஆம் ஆண்டு சேர்ந்தார்.

                தமிழ் நூல்களைக் கற்றாராய்ந்து பிற மொழியாளரும் அறிய வேண்டுமென்பதற்காக, ஆங்கிலத்தில் ‘திருக்குறட்செய்தி’  என்ற ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயார் செய்து அனைத்திந்திய கீழைக்கலை மாநாட்டில் சமர்ப்பித்தார்.

                திருவனந்தபுரத்தில், ‘திராவிட மொழிகளில் செயப்பாட்டுவினை’ என்ற தலைப்பிலும், திருப்பதியில் ‘நக்கீரன் சொல்லாராய்ச்சி’ என்றும், காசியில், ‘பழந்தமிழ்ப் புலவர்கள்’ என்றும், அகமதாபாத்தில், ‘பழந்தமிழ் மன்னர்கள் என்பது பற்றியும் நாகபுரியில்,’ ‘இறையனார் களவியல் உரையில் இடைச்செருகல்கள்’ என்றும், அண்ணாமலை நகரில், ‘சிலப்பதிகாரத்தில் காவிய நலம்’ என்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகள் அளித்தார்.

                பூனாவிலிருந்து வெளிவந்த, ‘நியு இந்தியன் ஒண்டிக்குயரி’, (ஆங்கிலப் பெயர்) கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘இந்திய மொழிக் குழு இதழ்’ (ஆங்கிலப் பெயர்) சென்னையிலிருந்து வெளிவந்த ‘தமிழர் பண்பாடு’ ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

                ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘செந்தமிழ்’ ‘செந்தமிழ்’ ‘தமிழ்ப்பொழில்’ ஆகிய இலக்கிய இதழ்களில் ஆய்வறிஞர்கள் பாராட்டும் வண்ணம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வழங்கினார்.

                மதுரை தியாகராசர் கல்லூரியில் 1965 முதல் 1967 வரை முதல்வராகப் பணியாற்றினார்.

                சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித்தமிழ் பயின்றோர் “வித்துவான்’ பட்டம் பெற இயலாத நிலை இருந்தது. தமிழ்ப்படை நூல்களோடு வடமொழியையும் படித்துத் தேர்ச்சி பெற்றால்தான் ‘வித்துவான்’ பட்டம் வழங்கத் தொடங்கினர். ‘வித்துவான்’ என்பதற்குப் பதிலாக ‘புலவர்’ எனப் பட்டம் வழங்கவும் அன்றைக்குப் போராட வேண்டியிருந்தது. போராடியே வென்றனர்!

                சென்னைப் பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பதவிகளையும் பார்ப்பனர்களே பெற்று அனுபவித்து வந்தனர். பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதியினரும் இடம்பெற வேண்டும் என ஆட்சிக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தும், வாக்கெடுப்பு நடத்தச் செய்தும் வென்றார் அ. சிதம்பரநாதர்.

                அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ‘பார்ப்பனர் - பிறசாதியினர்’- 50:50 என்ற விழுக்காட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது; அதை எதிர்த்து ஆட்சிக் குழுவில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அதை எதிர்த்தும் வழக்காடியும், முறியடித்தார். அ. சிதம்பரநாதர்! அக்காலத்திலேயே, பார்ப்பனரல்லாதோருக்கு சமூக நீதி கிடைத்திட போராடியவர் சிதம்பரநாதர் என்பது வரலாற்றுச் செய்தி!

                சென்னை, ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் ஆகிய பல்கலைக் கழகங்களில் பாடநூல் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை, இளங்கலை வகுப்புகளுக்கான பாடநூல்களில் மணிப்பிரவாள நடை இடம் பெற்று இருந்ததை வன்மையாகக் கண்டித்தார். குப்பைகளைப் பாடநூல்களாக வைக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தினார் அ.சிதம்பரநாதர்”!

                இந்திய அரசாங்கத்தால் 1949 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ‘தத்துவமேதை’ டாக்டர்.எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழுவிடம், “தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும், பயிற்று மொழியாக தாய் மொழியாம் தமிழ் மொழிதான் இருக்க வேண்டும்”- எனக் கருத்துரைத்தார் அ.சிதம்பரநாதர்.

                சாகித்திய அகாதெமியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாளராகப் பணியாற்றினார். அப்போது, சாகித்திய அகாதெமியில் வட இந்தியர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்பு வாதாடினார்.

                நாகப்பட்டினத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அ. சிதம்பரநாதர், “தமிழ் எழுத்துக்களில் எந்தச் சொல்லையும் எழுத முடியும் என்றும், ஆங்கிலத்தில் ‘எஃப்’ (கு) என்ற சொல்வரும் இடங்களைத் தமிழில் எழுதும்போது உச்சரிப்புக் குறையாதிருக்க `ஃ’ என்ற ஆய்த எழுத்தைச் சேர்த்து எழுதலாம்” – என்றும் எடுத்துரைத்தார். அன்று முதல் தமிழகத்தில இம்முறை பரவத் தொடங்கியது.

1. நொடி 2. எழுத்து 3. அசை 4. சொல் 5. வரி 6. தொடர்பு 7. வழக்கு 8. இசை 9. ஒலியியைபு 10. நாக்கு 11. செய்யுள் 12. எல்லை 13. இனம் 14. ஒழுகலாறு 15. பேச்சு 16. கேட்போர் 17. களன் 18. காலம் 19. பயன் 20. வெளிப்பாடு 21. விடுபாடு 22. எண்ணத் தொடர்பு 23. பொது இயற்கை 24. துறை 25. சொல் தொடரியல் 26. சந்தம் .

                அ. சிதம்பரநாதர் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருமுறை பணியாற்றினார். தமிழாசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும், அறநிலையத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்தார். கோவில்களில் உள்ள உண்டியல்களுக்குப் பாதகாப்பளிக்க இரட்டைப்பூட்டு முறை என்பதை நடைமுறைக்குக் கொண்டு வரச் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக மாற்றம் பெறவும் பாடுபட்டார்.

                மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.பி.டி. இராசன், தலைமையில் தருமபுரத்தில் 28.09.1955-ஆம் நாள் நற்றமிழ் அறிஞர்களின் கூட்டம் நடைபெற்றது அப்போது, தருமையாதீனத் தலைவர், டாக்டர் அ. சிதம்பரநாதரின் நற்றமிழ்ப்பணிகளைப் பாராட்டி, ”செந்தமிழ் காவலர்” என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டினார்கள்.

                மாணவர்தம், உள்ளங்கொள்ளப் பாடம் நடத்துபவர், மனதில் பதியும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுபவர் ! காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர் ! பிசிறு தட்டாத மொழி பெயர்ப்பாளர் ! அயல்நாட்டுப் பயணங்களைத் தமிழ், தமிழரின் மேன்மைக்காகவே பயன்படுத்தியர்! கடமையில் கண்டிப்பும் கனிவும் காட்டுபர் ! தமிழே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், அச்செந்தமிழ்க்காவலர் டாக்டர் அ.சிதம்பரநாதர் 26.11.1967-ஆம் நாள் காலமானார்.

                தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அ. சிதம்பரநாதர் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குடந்தையில் ”சிதம்பரநாதர் பேரவை” தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் பாட்டு, பேச்சு, நடனம் ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன, பற்பல பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. தமிழ் உள்ளவரை ”செந்தமிழ்க் காவலர்” டாக்டர் அ. சிதம்பரநாதரின் நீடு புகழ் நிலைத்திருக்கும்.

               - பி.தயாளன்

Pin It