தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிக்கும்போது, தானும் தலைவராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்! வெற்றியாளர்களின் வரலாற்றைக் கற்கும் போது தானும் வெற்றியாளராக வேண்டும் என்ற நினைப்பு ஏற்படும்! அந்த எண்ணமும் நினைப்பும் தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு, கடும் முயற்சி செய்து வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை நாம் அறிந்துள்ளோம்.
விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துத் தானும் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்கிற இலட்சியத்தை மனதில் கொண்டார். இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, அவரையே தமது முன் மாதிரியாகக் கொண்டார்! மருத்துவ இயற்பியல் துறையில் விஞ்ஞானியாக விளங்கி, மருத்துவக் கண்டுபிடிப்பிற்காக உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசை பெற்றவர் ரோசாலியன் யாலோ அம்மையார்!
அணுவை அழிவிற்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதை விட்டுவிட்டு ஆக்கப் பணிகளுக்கும், மருத்துவச் சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதை பல விஞ்ஞானிகள் கண்டறிந்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். அவர்களில் முதன்மையானவராக விளங்கி, அணுவின் மருத்துவச் சேவைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ரோசாலியன் யாலோ ஆவார்.
இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், 19.07.1921 ஆம் நாள், சைமன் சூஸ்மன் - நீ கிளாரா ஜிப்பர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.
இவரைப் படிக்க வைப்பதற்கு வசதியில்லாமல் பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இவரது சகோதரர் நூலகத்திற்குச் சென்று நூல்கள் எடுத்து வந்து தமது தங்கைக்கு கொடுத்து கல்வி கற்பதற்கு உதவினார். நூல்கள் வாங்கவும், கல்விக் கட்டணம் செலுத்தவும் பணமின்றி ஏழ்மை நிலையில் அவரது குடும்பம் தவித்தது.
பள்ளியில் படிக்கும்போது இவருக்குக் கணிதத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால், வால்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு வேதியியல் ஆசிரியரால் வேதியியல் பாடத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், ‘கண்டர்’ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பேராசிரியர் ஹெர்பட் என்.ஓட்ஸ் என்பவர் மூலம் இயற்பியல் பாடத்தில் ஆர்வம் கொண்டார். அக்கால கட்டத்தில் பெண்கள் இயற்பியல் படிப்பது என்பது மிகவும் சிரமமானது. மேலும் படிப்பதற்கு அதிக பணம் தேவைப்பட்டது.
இவரின் பிடிவாதத்தால், பெற்றோர்கள் படிக்க வைக்கச் சம்மதித்தனர். அக்கல்லூரி இயற்பியல் பேராசிரியர் இவருக்கு வழிகாட்டியாக விளங்கினார். அப்பொழுது இயற்பியல் பிரிவில், அணு இயற்பியல் துறை, மிகவும் பிரபலமாக இருந்தது. உலகின் மிகச் சிறந்த பாடப்பிரிவாக இருந்தது. இந்த அறிவியல் துறையில் ஆய்வை மேற்கொண்டவர்கள் பெரும்பாலானோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோசாலியன் யாலோ, 1941 ஆம் ஆண்டில் இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றார்.
இல்லினாய்ஸ் பல்கலைக் கழத்தில் 1941 ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் தலைமை இடமான அர்பனாவில் இன்ஜினியரிங் கல்லூரியின் கலைப்பிரிவு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட 400 பேரில் இவர் ஒருவர் மட்டுமே பெண் ஆவார். பல்கலைக் கழக டீன் இவரைப் பாராட்டினார்.
இல்லினாய்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்து பயின்றபோது, அங்கு உடன் பயின்ற ஆராண்யாலோவை 1943 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ரோசாலியன் யாலோ அணு இயற்பியலில் ஆய்வு செய்து 1945 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் நியூயார்க் நகரில் தொலைத் தொடர்புத்துறையின் ஆய்வகத்தில் பொறியாளர் பதவியில் சேர்ந்தார். அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, அப்பதவியிலிருந்து விலகி, கண்டர் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியரானார்.
நியூயார்க் நகரத்தில் டாக்டர் ‘எடித்கியூம்’ என்பவரின் உதவியோடு, அங்குள்ள ஆய்வகத்தில் ரேடியோ ஐசோடோப்புகளை எப்படி மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை கற்றார்.
புரோன்ஸில் உள்ள வெட்டிரன்ஸ் மருத்துவமனையில் அணு இயற்பியல் ஆலோசகராக சேர்ந்தார். அங்கு ரேடியோ ஐசோடோப் பிரிவு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
என்ரிக்கோ பெர்மி என்ற விஞ்ஞானி அணுவின் உட்கருவைப் பிளக்கச் செய்ததன் மூலம், அணுவை அழிவிற்கு மட்டும் பயன்படுத்தாமல் ஆக்கத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதை உலகிற்கு அறிவித்தார். போருக்கு மட்டும் அணுவைப் பயன்படுத்தாமல் ரேடியோ ஐசோடோப் மூலம் மருத்துவத்திற்காகவும் அமைதிக்காகவும் பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
ரேடியோ ஐசோடோப் பற்றிய அறிவையும், பயிற்சியையும் பெற்ற ரோசாலியன் யாலோ, டாக்டர் ரோஸ்விட் உடனும் மற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடனும் இணைந்து, தமது ஆய்வுகளை எழுதி நூலாக வெளியிட்டார். இவர், டாக்டர் சாலோமன் ஏ.பெர்சன் என்பவருடன் இணைந்து, ரேடியோ ஐசோடோப் முறையைப் பயன்படுத்தி ரத்தம், மற்ற திரவங்களில் உள்ள உயிர்ப்பொருள்கள் மற்றும் நோய் எதிர்ப்புப் பண்பு கொண்ட வேதிப்பொருள்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். மேலும், தைராய்டு நோய் மற்றும் அயோடின் கட்டமைப்பு குறித்து இவ்விருவரும் ஆய்வு செய்தனர்.
பிட்யூட்டரி ஹார்மோன் குறித்த ஆய்வின் மூலம், இன்சுலின் ஒரு ஹார்மோன் அது சுத்தமான நிலையில் கிடைக்கிறது. விலங்குகளின் இன்சுலின் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது. உடலில் அது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்டறியவும், இன்சுலின் சுழற்சியையும், அதன் அளவையும் கண்டறிய ‘ரேடியோ இம்முனாஸே‘ (Radio immunoassay – RIA) என்ற கருவியை 1959 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
நாளமில்லா சுரப்பிகளில் சரக்கும் ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளன. அது சரிவர செயல்படவில்லையெனில், நாளமில்லாச் சுரப்பி பாதிப்படைகிறது. இவற்றை மேற்படிக் கருவிமூலம் கண்டறிந்து நிவர்த்தி செய்திட முடியும்.
இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டு, நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு தடைபட்டவர்களுக்கு மருத்துவம் செய்யப்பட்டது. குறிப்பாக கதிரியக்க அயோடின் மருத்துவ முறையில் அதிகப்படியான தைராய்டு நோயைக் கட்டுப்படுத்த முடிந்தது. மேலும், அறுவை சிகிச்சை செய்யாமலேயே தைராய்டு நோயை குணப்படுத்த முடிந்தது.
ரோசாலியன் யாலோ மற்றும் டாக்டர் பெர்சன் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்த RIA என்ற கருவி மிகத் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் ஹார்மோனை அளவிடவும், பகுத்துப் பார்க்கவும் மற்றும் நாளமில்லாச் சுரப்பி செயலிழந்ததை சரி செய்யவும் பயன்பட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.
டாக்டர் பெர்சன் ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநராக 1973 ஆம் ஆண்டு ரோஸாலியன் யாலோ நியமிக்கப்பட்டார். இவருக்கு 1976 ஆம் ஆண்டு இவரது மருத்துவ ஆராய்ச்சிக்காக ‘ஆல்பர்ட் லஸ்கர்’ விருது வழங்கப்பட்டது. முதன் முதலில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவர்தான் மற்றும் கிரேசி மோரிசன் விருது, அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் கழக விருது, முதலாம் வில்லியம் எஸ்.மிடில்டன் மருத்துவ ஆராய்ச்சிக்கான விருது-முதலிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவருக்கு 1977 ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த விருதை ரோஜர் குல்லிமின் மற்றும் ஆன்ட்ரோ ஸ்கேலி ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொண்டார். அணு இயற்பியல் துறையில் அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.
- பி.தயாளன்