முப்பது வயதிற்குள் உடல் பருமனானால் முன் கூட்டிய மரணம் ஏற்படும் ஆபத்து 75% அதிகரிக்கிறது. இங்கிலாந்தில் மூன்றில் இரண்டு பங்கு வயது வந்தோர் உடற்பருமன் உள்ளவர்கள். அங்கு ஆணின் சராசரி எடை 85 கிலோவிற்கும் கூடுதலாக உள்ளது. பெண்ணின் சராசரி உடல் எடை 73 கிலோகிராம் ஆகும்.

man obesity1993ல் இருந்ததை விட இது 6 கிலோ அதிகம். அதிக உடல் எடை வயதுடன் தொடர்புடையது. வாழ்வின் பிற்பகுதியில் உண்டாகும் உடல் எடை உயர்வுடன் ஒப்பிடும்போது தொடக்கத்தில் ஒருவர் தம் உடல் எடையில் ஏற்படுத்திக் கொள்ளும் உயர்வு முன் கூட்டிய மரணத்திற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த ஆய்வு ஸ்வீடன் மல்மா (Malmö) லண்ட் (Lund) பல்கலைக்கழக ஆய்வாளர்களால் 17 முதல் 60 வயது வரை உள்ள 620,000 பேரிடம் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் இளம் வயதில் இயல்பான உடல்வாகுடன் இருப்பவர்களை விட முப்பது வயதிற்குள் உடல் பருமனான பெண்கள் 84% முன்கூட்டியே மரணமடைவர் என்றும், ஆண்கள் 79% அகால மரணமடைவர் என்றும் கண்டறியப்பட்டது. நோயாளிகளின் உடல் எடை 60 வயது வரை ஆண்டுதோறும் அரை கிலோ வீதம் அதிகரிக்கிறது. ஆனால் பொதுவாக இந்த நிலை முப்பது வயதிற்குள் இருக்கும் பருமனானவர்களுக்கு மாறுகிறது.

ஒவ்வொரு அரை கிலோ எடை அதிகமாகும்போதும் இத்தகைய ஆண்கள் 24% மற்றும் பெண்கள் 22% முன்கூட்டி இறக்க நேரிடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் நடந்த உடற்பருமனுக்கான ஐரோப்பிய காங்கிரஸின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பாதிப்புகள் ஆண்களில் 23 வயதில் இருந்தும் பெண்களில் 12 வயதில் இருந்தும் தொடங்குகிறது.

இதய நோய்கள், டைப் 2 சர்க்கரை நோய் போன்ற மற்ற பல காரணங்களால் இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கிறது. பெண்களின் அதிக உடல் எடை எல்லா வகையான புற்றுநோயையும் ஏற்படுத்துகிறது.

இருபது அல்லது விடலைப் பருவத்தில் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. இளம் வயதில் உடல் எடை அதிகமாவதால் ஒருவர் பிந்தைய வாழ்வில் நாட்பட்ட நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளர் ஹையென் லா (Huyen Le) கூறுகிறார். எடையில் ஏற்படும் அதிகரிப்பு 30 முதல் 45 வயதில் உள்ளவர்களுக்கு 52 சதவிகிதமாகவும் 45 முதல் 60 வயதில் இருப்பவர்களுக்கு 25 சதவிகிதமாகவும் உள்ளது.

“இளம் வயதினர் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்துள்ள உணவுகள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும். உடற்பயிற்சி செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும். வாழ்வின் முக்கியமான இந்த கட்டத்தில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்கு ஆதரவளிப்பது நீண்ட நாள்  நீடிக்கக்கூடிய பயன்களைத் தரும். இளம் வயதில் ஒருவரின் உடல் எடை ஓரளவிற்கு அதிகமானால் அதே நிலை பல ஆண்டுகளுக்கு நீடித்தால் அது முன்கூட்டிய இறப்பை அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்வை நம் முன்னோர் வாழ்ந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழும் வாய்ப்பைப் பெற்றனர்” என்று மற்றொரு மூத்த ஆய்வாளர் பேராசிரியர் டான்யா ஸ்டாக்ஸ் (Prof Tanja Stocks) கூறுகிறார்.

உப்பின் தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான செயல்பாட்டு அமைப்பின் (Impact and Research at Action on Salt) தலைவர் சோனியா பாம்போ (Sonia Pombo) ஆய்வு முடிவுகள் பற்றி கூறுகையில் “குறிப்பாக விடலைப் பருவத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு ஆரோக்கியம், நீண்ட ஆயுளை வலுவாகப் பாதிக்கிறது. சத்துகளற்ற உணவுச் சூழலில் இருந்து நாம் நம் இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கவில்லை.

ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்கள் உடனடியாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். குழந்தைகள், இளம் விடலைப் பருவத்தினரிடையில் இவற்றின் சந்தைப்படுத்துதல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆரோக்கிய உணவிற்கான வாய்ப்பு சுலபமாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

“இந்த ஆய்வு மற்றொரு எச்சரிக்கை. இளமையில் எடை அதிகரிப்பு உடற்பருமனை மட்டும் ஏற்படுத்துவதில்லை. டைப் 2 சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள், சில வகை புற்றுநோய்கள் மற்றும் மன நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆயுளைக் குறைக்கிறது. விரைவு உணவுகள், அவற்றின் மிதமிஞ்சிய விநியோகம், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆதிக்கம் செய்யப்படும் இன்றைய உணவுச் சூழ்நிலையில் பலரும் முப்பது வயதிற்குள் உடற்பருமன் உள்ளவர்களாக மாறுகிறார்கள். செயல்பாடற்ற வணிக உணவு முறைகளின் நீண்டகால தோல்வியின் விளைவே இது” என்று உடற்பருமன் தடுப்புக்கான ஆரோக்கிய கூட்டமைப்பின் (Obesity Health Alliance) இயக்குனர் கேத்தரீன் ஜெனர் (Katharine Jenner) கூறுகிறார்.

ஆரோக்கியமான உணவுச் சூழலை உருவாக்குவதன் மூலம் மக்களின் சராசரி ஆயுளை அதிகரிக்கலாம். இது சிகிச்சையை விட மேலானது. சத்துள்ள உணவுகளை சுலபமாகக் கிடைக்கச் செய்தால் இதைத் தவிர்க்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.