ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளத்தொடங்கிய பின்னர் அறிவியல் தொழில் நுட்பம் வளர கல்வியும் வளரத்தொடங்கியது. இது தொழில் புரட்சியினால் எழுந்த ஒரு பெரும் மாறுதல். இந்நிலையில் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பித்ததோடு தமிழிலும் கற்பிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

இக்காலக்கட்டத்தில் அலோபதி மருத்துவம் இந்தியாவில் ஜனநாயகப்படுத்தப்பட்டு, யாவரும் புரிந்து அறிந்து கொள்ளும் நிலையில் இதற்கான நூல்கள் எழுதப்பட்டன. ஆரம்பக் கட்டத்தில் 1900-ஆம் ஆண்டிற்கு முன் எழுதிய அல்லது மொழி பெயர்த்தவர்களில் பெரும்பாலும் பாதிரியார்கள், படிப்பு அந்தஸ்துடைய உயர்சாதி வகுப்பினர் மட்டுமே. பிறகுதான் உள்நாட்டினர் எல்லோரும் சொந்த முயற்சியில் நூல் எழுத முனைந்தனர்.

தொடக்கக் காலத்தில் வடமொழி; சமய மொழியாக மக்களிடம் அழுத்தம் கொண்டிருந்தாலும், அறிவியல் அறிவு பெற்றவர்கள் தமிழை விட வடமொழியறிவு நிரம்பப் பெற்றவர்களாக இருந்ததால் இந்நூற்களில் கலைச் சொற்கள் பெரும்பாலும் வடமொழியிலேயே அமைந்தன.

மேலும் இக்காலத்தில் உயர் சாதிக்காரர்களுக்கு உயர் படிப்பு என்றிருந்தது. ஆகவே ஒரு கையில் வேதங்களையும், மற்றொரு கையில் தமிழையும் எடுத்துக் கொண்டனர். மேலும் இந்திய மொழிகள் அனைத்திலும் அக்காலத்தில் வடமொழி சொல்லாட்சி இருந்து வந்துள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இதைத் தற்பொழுதுகூட தென்னிந்திய மொழி களான மலையாளம், கன்னடம் போன்ற மொழி களில் காணலாம். இப்போக்கு, தமிழகத்தில் மட்டு மின்றி இலங்கையிலும் கிட்டத்தட்ட சமகாலத்தில் ஏற்பட்டது.

19-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மருத்து வத்தைத் தமிழில் முதன் முதலில் வடித்த டாக்டர் பிஷ்கீறீன்தான் புத்தகங்களைச் கலைச்சொல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது சிறப்புடையதாகும்.

டாக்டர் பிஷ்கீறீன்தான் மருத்துவ நூல்களை மொழிபெயர்த்தல் மட்டுமின்றி அவைகளுக்கான கலைச்சொற்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளுக்கும் சில வழிமுறை வகுத்துக் கொண்டார்.

இதனை அவர் கூறும் பொழுது (1) தமிழில் உண்டோ என்றபின், (2) பூரணமான சொல் பெற வழுவும் பொழுது... ... சமஸ்கிருதத்தில் தேடவும், (3) தமிழிலாவது சமஸ்கிருதத்திலாவது காணாத போது... ... எனத் தெளிவாகக் கூறுகிறார். இதை இவர் வார்த்தையில் கூற வேண்டுமெனில் (இரண வைத்திய நூல் முன்னுரை) “இதில் வழங்கிய பரிபாஷைச் சொற்களுள் தமிழ் அதிகம். அது ஒவ்வாத இடத்து ஆரிய மொழிகள் வரும்; சில இடங்களில் தமிழ் எழுத்தில் இங்கிலீஷ் மொழிகளும் வரும்”. இவர் குறிப்பிட்டபடி நூலில் கலைச்சொல், எண்ணிக்கையில் கூட தமிழ், வட சொல், ஆங்கிலம் என்ற நிலையிலேயே உள்ளன.

இவரின் கலைச்சொல், கோட்பாடு தமிழுக்கு முதலிடம் கொடுத்தாலும், இக்காலக் கட்டத்தில் வடமொழி உயர்ந்த மொழி, அறிவியல் மொழி என்ற கருத்தின் காரணமாக வடமொழியையும், ஆங்கிலத்தையுமே கலைச் சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் கிறீன் நூலை மொழிபெயர்த்த பொழுது உபயோகித்த அகராதி வில்சன் 1834-இல் கல்கத்தாவில் அச்சிட்டு வெளிவந்த வடமொழி - ஆங்கில அகராதி, மற்றொன்று வில்லியம்ஸ் 1851-இல் லண்டனில் அச்சிட்டு வெளிவந்த ஆங்கில - வடமொழி அகராதியும் ஆகும். இதையும் ஒரு மூலகாரணமாகக் கொள்ளுதல் வேண்டும்.

இதன் தாக்கமாகக் கிறீன் நூற்களின் பெயர்களே வடமொழியில் உள்ளன. எ.கா.: அங்காதி பாதம், இரண வைத்தியம், மனுஷ சுகரணம், வைத்தியாகரம், எண்ணிக்கையில் மிக நல்ல தமிழ் கலைச்சொற்கள் காணப்படுகின்றன. எ.கா.: Carcinoma - புற்று, Carbuncle - பிளவை.

பிளவை போன்ற சொற்கள் இருப்பினும், வடசொல் பரவிக் கிடப்பதால் இன்றைய பார் வையில் டாக்டர் கிறீன் புத்தகங்களைப் படிக்கும் பொழுது வடசொற்களே மிகுந்துள்ளன என்ற மயக்கத்தைக் கொடுக்கிறது. எ.கா.: Absorption - சோஷணம், Anemia - நிருதிரம், இரத்தம்.

மருத்துவ நூல் எழுதுவதில் ஆரம்பக் கட்ட மானதால் அறிந்த கலைச்சொற்களில் எது சிறந்தது? என சீர்தூக்குவது சற்று கடினமாக இருந்திருக் கலாம். ஏனெனில் பேச்சுத் தமிழில் ‘சி’ என்பதற்கு ஸியும், ‘ச’ என்பதற்கு ஸவும் இருந்த காலங்கள். அதாவது வடமொழி ஆட்சி செய்த பொற் காலங்கள்.

இவருடைய கலைச்சொல்லை அன்றைய நிலையில் கூர்ந்து நோக்கும் பொழுது மருத்து வரை, “சத்திர வைத்தியன்” என்றும், வேகம் என்பதற்கு “சடுதி” என்றும் குளியலுக்கு “ஸ்நானம்” என்றும் வடமொழியிலே கருத்துத் தெளிவுகள் இலகு தமிழில் கருத்துப் பரிமாற்றம் உள்ளது.

ஒலியமைதிக்காகத் தேவையான இடத்தில் கிரந்த எழுத்துக்களும் மிகுதியாக உள்ளன. ‘சாமுல்’ என்ற பெயரை சமுல் எனவும், டேனியல் என்ற பெயரை ‘தனைல்’ எனவும் ஒலி பெயர்த்துள்ளார். தமிழில் சொல்லின் முதலில் ட, ல, வருவது இல்லை. இருப்பினும் டாக்டர் கிறீனினால் லங்கை, லண்டன் என்பவற்றிலே ‘இ’ புகுத்தப்படவில்லை. தேவையான இடத்தில் ஆங்கிலச் சொற்கள் அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எ.கா.: கார்பன்.

இதே போல கிரிஸ்டல் (Crystal) என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு‘சிறுஸ்தல்’ எனப்படுகிறது. இதில் வட எழுத் துடன் தமிழ் விகுதியையும் இணைத்துள்ளார். உரைநடை சொல்லாட்சியின் போதும் ‘மிச்சமான,’‘சீசா,’  ‘கொஞ்சம்’என்று பேச்சுத்தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. (எ.கா.): எலும்புகளிலே அவைகளுக்கு வைரமும் பெலனுங் கொடுக்கிற சுண்ணாம்பும், அத்தோட கூட உடம்புக்குரிய செலதிம் என்னும் பசையும் இருக்கின்றன. இதில் Celatin செலதிம் ஆகியுள்ளது.                             

இப்படியாக பல இலக்கண நெகிழ்வுகளைச் செய்த டாக்டர் கிறீன் 1875-ஆம் ஆண்டில் எஸ். சுவாமிநாதன், சாப்மன் போன்றவர்களின் உறுதுணையுடன் மருத்துவத்துறை தொடர்பாக இரண்டு கலைச்சொல் அகராதியை வெளியிட்டு, கலைச்சொல்லாக்க முயற்சிக்கு வழிகாட்டி உள்ளார்.

டாக்டர் கிறீனைத் தொடர்ந்து மருத்துவ நூல்களை எழுதிய ம.ஜகநாத நாயுடு தான் எழுதிய நூலான “சாரீர வினா விடை”யில் “சில இங்கிலீஸ் பதங்களுக்குத் தமிழ்ப் பிரதியங்கள் அகப்படுவது கடினமாய் இருக்கின்றது. அவை களுக்குப் பிரதியங்கள் கற்பனை செய்யலாம். ஆனால் கற்பனை சொற்களால் சந்தேகமும் ஆட்சே பனையும் உண்டாகுமென்று கருத்துக்கொண்டு, இங்கிலீஷ் பதங்களே உபயோகப்படுத்தி இருக்கின்றன. நமது தேச ஜனங்களுடைய கையிலேறி வாசிக்கப்பட்டால் அந்தக் குறையும் படிப்படியாய் நீங்கிவிடும்” என்று நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இவர் இப்படிக் கூறினாலும் பக்கத்துக்குப் பக்கம் டாக்டர் கிறீனின் நூலைப்போலவே மிகவும் சிறப்பான, அரிய தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆங்கில ஒலிபெயர்ப்புச் சொற்கள் இங்கிலீஷில் உள்ளது என்று எல்லா இடங் களிலும் கூறப்படுகிறது. எ.கா.: குழந்தை எலும்பு மிருதுவாய் இருக்கும். அதற்கு இங்கிலீஷில் கார்டிலேஸ் என்றும், தமிழில் தருணஸ்தி, குருத் தெழும்பு என்றும் பெயர், என்பதைப்போன்று வாக்கியங்களுடன் சொற்கள் உள்ளன.

இதில் ஒரு சொல் வடசொல்லாகவும், மற்றொரு சொல் நல்ல தமிழ்ச் சொல்லாகவும், எ.கா.: Abortion - கருவழிதல், அசனுகம் என்று அடுத்தடுத்து வருவது கவனிக்கத்தக்கது. சில இடங்களில் படிப்பவர் எப்படியும் புரிந்தே ஆக வேண்டும் என்பதை நினைத்தோ என்னவோ! சில இடங்களில் ஒரு சொல்லிற்கு பல கலைச் சொற்கள் அடுத்தடுத்து உள்ளன. எ.கா.: Anus - மலத்துவாரம், பவனவாய், ஆஸணம், குதம், அடானம், சுழிகார ரோகம், Diarrhoea - சீதபேதி, சீதக் கழிச்சல், வயிர்க்கொட்டல் என்பதோடு ஒரு தெலுங்குச் சொல்லும் உள்ளது.

ஏனெனில் இவர் தாய்மொழி தெலுங்கு மற்றும் இவர் தெலுங்கில் இரண்டு புத்தகங்களை மொழி பெயர்த்துள்ளார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. ஒரு குறிப் பிடத்தக்க செய்தி நூலில் பல இடங்களில் நல்ல தமிழ்க் கலைச்சொற்கள் தலைப்புகளில் இருப்பினும் உரைநடையில் சொற்கள் நடைமுறைப் படுத்தப்படும் பொழுது வடமொழிச் சொல்லே ஆட்சி புரிகிறது. ஆனாலும் வடச்சொல்லுக்குப் பின் அடைப்புக்குறிக்குள் இருந்த நல்ல தமிழ் சொற்கள் தற்பொழுது வழக்கத்தில் வந்துள்ளது.

கிரந்த எழுத்துக்களையும் டாக்டர் கிறீனைப் போல தேவையான இடங்களில் தங்கு தடையின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன (Ejaculatory Duct - இஜாகியுலேடொரி டக்ட்). ஆனால் பேச்சுத்தமிழ் (நாட்டுப்புறச் சொற்கள்) தவிர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல சொற்களைத் தேடி ஒருமித்து எழுதியிருப்பது, நூல் எழுத எடுத்துக் கொண்ட இவர் நோக்கையும் உழைப்பையும் காட்டுகிறது. இவர் கிறீனைப் போலவே புத்தகங் களுக்கும் வடமொழியிலேயே தலைப்புகளைச் சூட்டியுள்ளார். “இங்கிலீஷ் வைத்திய சங்கிரகம்” இதிலுள்ள 7 அத்தியாயங்களில் Anatomy சாரீரம் என்றும், Physiology சாரீர வியாபார சாஸ்திரம் ஒலி பெயர்ப்புகளில் இங்கிலீஷ் சப்தத்திற்கு தகுந்த தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் அவ்வித தமிழ் எழுத்துக்களின் கீழ் இங்கிலீஷ் எழுத்துக்களைப் போட்டிருக்கிறோம்.

எனவும், Hygiene “சுகபரிபாலனம் தினசரியை” எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய நிலையில் வடசொல் ஆட்சி கிறீனுக்குப் பிறகு நீடிப்பதை உணர முடிகிறது.

இதே போல் வடசொல் கலைச் சொற்கள் நீடிப்பதை 1908-இல் ரங்கூனிலிருந்து திரு. சாமு வேல் என்பவரால் மானிட மர்ம சாஸ்திரம் அல்லது சிசு உற்பத்தி சிந்தாமணி என்ற நூலிலும் உணர முடிகிறது. இதில் அருஞ்சொற்கள் பெரும் பாலும் வடமொழி மற்றும் ஆங்கில ஒலி பெயர்ப் பாகவே உள்ளன.

எ.கா.: ஆங்கில மருத்துவத்தில் குழந்தை பிறக்கும் பொழுது ஏற்படும் மூன்று நிலைகளை Dilatation of Cervix, Apperance of the Head, Expulsion of the Placenta என்பது இந்நூலில் யோனி விசால மாதல், சிசு உதயமாதல், மாயை வெளிப்படல் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ஞடயஉநவேய என்பது மாயை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இக்காலத்தில் சூலொட்டி, நச்சுக்கொடி அல்லது நஞ்சுக்கொடி என எழுதப்பட்டு வருகிறது.

1911-இல் பி.எஸ். ஈஸ்வரம் பிள்ளை எழுதிய மெட்டீரியா மெடிக்காவில் பெரும்பாலும் எல்லா சொற்களும் ஆங்கில ஒலி பெயர்ப்புகள், ஏனெனில் அத்துனையும் அலோபதி மருந்துகள். எ.கா.: பெனஸெட்டின். இதுபோல கிரந்த எழுத்துக் களும் அதிகம்.

மேலும் இப்புத்தகத்தில் கலைச்சொற்களை (ஒலி பெயர்ப்புக்களை) தமிழில் உச்சரிக்க ஒரு புது யுத்திகளைக் கையாண்டுள்ளனர். இதைப் பற்றி முன்னுரையில் “ஒலி பெயர்ப்புகளில் இங்கிலீஷ் சப்தத்திற்கு தகுந்த தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் அவ்வித தமிழ் எழுத்துக்களின் கீழ் இங்கிலீஷ் எழுத்துக்களைப் போட்டிருக்கிறோம். அதன்படி உச்சரிக்க” என்று கூறப்பட்டுள்ளது.

சற்று இதை விளக்கமாகக் கூற வேண்டு மெனில் ஆங்கில ஒலி மாறாதிருப்பதற்கான முயற்சி என எண்ணலாம். இன்பியூஷன் என்ற சொல்லில் ‘பி’ (P)- க்குக் கீழ் ‘எப்’ (F) ஆங்கில எழுத்துப் போடப்பட்டுள்ளது. இதே போன்று ஆண்டிபெப்சின் என்ற சொல்லில் பெ-க்கு கீழ்‘எப்’ (F) - க்குக் கீழ் ‘பி’ (P) ஆங்கில எழுத்தில் உள்ளன.

1920-இல் “காம சாஸ்திரம்” எனும் நூலில் உரைநடை தங்குதடையின்றி சரீரம், ஸ்திரி, தேகாரோக்கியம், சல்லாபம், ஸ்கலிதம் போன்ற சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது போல 1924-இல் டாக்டர் நெல்சனால் மொழி பெயர்க்கப்பட்ட ‘ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும்’ என்ற நூலில் ஆரம்ப பதிப்புகளில் பிரஜோத்பதி, துன்மார்க்க நோய்கள் என்று மருத்துவ தலைப்புகள் உள்ளன. இதில் கலைச் சொல்லாக Organism உயிரி என்றும் tranquilizer - சாந்தகாரி என்றும், Microscope - பெருங்காடி என்றும் நோயாளி சீக்காளி எனவும் குறிக்கப்படுகிறது. (Sick - சீக்கு ஆகி-- Sick Person - சீக்காளி ஆகியுள்ளது).

1923-ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்வி இயக்குநரால் அமைக்கப்பட்ட குழுவே கலைச் சொற்களை தயாரித்தது. பிறகு அரசு விஞ்ஞான இயல்களுடன் மற்ற பாடங்களுக்கும் சேர்த்து கலைச் சொற்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஆங்கில ஒலிபெயர்ப்பு, மற்றவை வட சொற்கள். இதனைக் களையும் விதமாக சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் ஓரளவுக்குத் தூய தமிழில் புத்தகங்களை வெளியிட்டன. பின்னர் 1940-இல் அரசு அமைத்த குழுவின் சொற்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் 1938- இல் வெளிவந்த சுந்தானந்த பாரதியின் உடலுறுதி நூலில் ஆங்கில ஒலி பெயர்ப்புகளும், வட எழுத்துக்களும் மிகக் குறைவாகவும், தமிழ்ச் சொற்கள் மிகுந்தும் காணப்படுகின்றன. எ.கா.: Oxygen - உயிர்க்காற்று, Vitamin - சத்து, இன்றைய நிலையில் Cell - செல் எனக் கூறப்படும் பொழுது கண்ணறை என்பது அரிய தமிழ்ச் சொல்லாக உள்ளது.

இதே காலக்கட்டத்தில் இலங்கையிலும் கலைச்சொற்களாக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன என்றாலும், அரசு ஆதரவுடன் 1950-ஆம் ஆண்டில்தான் முழு அளவில் மேற்கொள்ளப் பட்டது.

இதன்படி...

1. உடற்றெழிலியலும் உடனலவியலும் (Physiology & Hygiene - 1957), 2. பிறப்புரிமையியல் குழியவியல் கூர்ப்பு (Genetics - Cytology Evolution - 1963), 3. உடற்றெழிலியலும் உயிரி ரசாயனவியலும் (Physiology & Bio- chemistry - 1965) 4. உடலமைப்பியலும் இழையவியலும் (Anatomy & Histology - 1965), 5. மருந்தியல் விஞ்ஞானம் (Pharmacology - 1965) 6. நோயியல் (Pathology - 1965), 7. பொது உடனலம் (Public Health - 1957) ஆகிய அரசு சார்பில் மொத்தம் வெளியிடப்பட்ட 38 தொகுதிகளில் 7 தொகுதிகள் மருத்துவம் தொடர்பானவைகள்.

இலங்கையில் பேராசிரியர் சின்னத்தம்பி 1949-லிருந்து 1980 வரை 5 புத்தகங்களை எழுதி யுள்ளார். இதில் ஒன்று மொழிபெயர்ப்பு நூல் (அ) அயனாந்த தேச நோய்கள் - 1949, (ஆ) மகப் பேற்று மருத்துவம் - 1969, (இ) பிரயோக உடற் றொழிவியல் - 1971, (ஈ) நலம் பேணல் - 1980 இவைகளில் வட சொற்களுக்குப் பதிலாக நல்ல தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றன என்றாலும், நல்ல தமிழில் மொழித் தூய்மை என்ற பொருளில் பேசு வதற்கு அல்லது எழுதுவதற்குக் கூச்சச் சொற் களாகத் தோன்றும் சொற்கள் இடம் பெற்று உள்ளன. எ.கா: குண்டிக்காய் தட்டம் - Kideny Tray.

மேலும் கிரந்த எழுத்துக்கள் முற்றிலும் தவிர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. Syring - சிறுங்கி, Jam - யாம், Jelly - யெல்லி, Paris - பாரிசு. ஒட்டுமொத்தமாகக் கூற வேண்டு மெனில் கருத்துக்கு முதலிடம் கொடுக்காது மொழிக்கு இவர் முதலிடம் கொடுத்துள்ளார்.

இதன் பிறகு அறிவியலாளர்கள் மொழித் தூய்மை மட்டும் போதாது எனக் கருதி கருத்துச் செறிவுடன் பொருட்செறிவுக்கும் சரியான இடம் கலைச் சொல்லில் அளிக்க முனைந்தனர். இதனை வரலாறு ரீதியாகப் பார்க்க “ஆரோக்கியமும் நீடித்த ஆயுசும்” என்ற 15 பதிப்பு கண்ட நூல் பொருத்தமுடையதாகும். எ.கா.: முதல் பதிப்பு களில் துன்மார்க்க நோய்கள் பிறகு மேக நோய்களாக மாறியுள்ளது.

1945-இல் மக்களுக்கு எளிதில் விளக்க டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனால் வீட்டு வைத்தியம் எனும் நூல் வெளிவந்துள்ளது. இதில் Arteries - வடிகுழாய் எனவும், Kidney - சிறுநீர் பிரித்தியாகவும் இடம் பெற்றுள்ளன. இவைகள் இவ்வுறுப்புக்களின் ஒரு இயக்கத்தை மட்டும் நினைத்துக்கொண்டு, மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் வழக்கத்தி லுள்ள பல சொற்களும் கையாளப்பட்டுள்ளன.

Back Pain- - இடுப்பு வலி, Gonorrhoea - மேகவெட்டை, வெட்டைச்சூடு. இந்தக் காலத்தில் தூய தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் கலைச்சொல்லாக்கத்தில் பல மாற்றங்கள் இலக்கண விதிகள் மீறல்களுடன் நடைபெற்றன. அதே நேரத்தில் பல நல்ல தமிழ்ச் சொற்களும் உருவாகின.

 கிரந்த எழுத்துக்களில்தான் மருத்துவம் எழுத முடியும் என்ற நிலையில் Heart என்பதற்கு ஹிர்தயம் என எழுதப்பட்டு வந்தது. இது இதயம் ஆனது.

தமிழ் இலக்கணத்தில் சொல்லின் முன்னாள் வராத எழுத்துக்கள் பின்னால் வரக்கூடாத எழுத்துக்கள் என்ற விதி தடம் புரண்டது. எ.கா.: Laser - இலேசர் ஆகாது லேசரே ஆனது. இதே போல் Chloroform - க்ளோரோபாம் என மொழி மெய்யெழுத்தை விரும்பாத நிலையில் குளோரோ பாம் எனச் சொல் வடிவமைக்கப்பட்டது. இந் நிலையில் குருதி என்ற தமிழ் சொல்லுக்குப் பதில் இரத்தம் என்ற பழகு தமிழ்ச்சொல் நிலைத்து விட்டது.

இதே போல் ஒலி பெயர்ப்பு செய்கையில் பொருளில் மயக்கம் நேர்ந்துவிடக்கூடாது என நினைத்து, வேண்டிய நிலையில் கிரந்த எழுத்துக் களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்ப ட்டுள்ளது. எ.கா.: Anti Histamine - ஆண்டிஹிஸ்டமின் எனப்பட்டது. இதையே ஆண்டி இசுடமின் என்றால் பொருள் மாறக்கூடும். மருத்து வத்தில் ஒரு சொல் பல காலகட்டங்களில் பல பரிமாணங்களை எடுத்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

தற்காலத்தில் குடல் இறக்கம் என்று கூறப் படும் Hernia - இடைக்காலத்தில் ஹிர்னியா என ஒலி பெயர்ப்புடனும், தொடக்க நிலையில் அண்ட வாதம், ஓதம், குடல் வாதம், குடல் அண்டம் எனவும் அழைக்கப்பட்டன.

 கலைச்சொல் ஆக்கப் பணியின் வரலாற்று உரையைக் கூர்ந்து கவனிக்கும் போது சித்த மருத்துவத்தினால் நமக்குக் கிடைத்த கலைச் சொற்கள் குறைவு. ஆகையால் கலைச் சொற் களுக்கு ஒரு நிலையில் பக்தி இலக்கியங்களிலும் மற்றும் இலக்கிய நூல்களிலும் தேட வேண்டி யதாக இருந்தது. ஆனால் மருத்துவம் பரவலாக்கப் பட்ட பின் அறிவியல், அரசியல் போக்கிற்கிணங்கக் காலத்திற்குத் தகுந்தவாறு மொழியாக்கம் பெற்று, அதன் பின்னர் மொழித் தூய்மை மட்டும் போதாது.

அறிவியலாளர்களும், கலைச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டவர்களும் உணர்ந்ததன் காரணமாக, தற்பொழுது கருத்துச் செறிவும், இலக்கண நெகிழ்வும், பொருள் தெளிவும் கொண்ட கலைச் சொற்கள் உருவாகி வருகின்றன. எனினும் உலக மயமாக்கல் எனும் போர்வையிலும், தொலைக் காட்சி, வானொலியில் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் “தங்கலீஸ்” காரணமாகவும் சில தினசரி இதழ்களும் கங்கணம் கட்டிக் கொண்டு, இரு மொழி உரைநடைகளை எழுதுவதாலும் ஒரு நேரத்தில் Oxygen - ஐ உயிர்வளி என்று கூறப் பட்டது. பிராணவாயு ஆகி மறுபடியும், ஆக்சிஜன் ஆகிவிட்டது. இன்று தமிழுக்கு இதை நிறுத்த உயிர்வளி தேவைப்படுகிறது என்றால் மிகையில்லை.

பாரதியார் கூட தன் நூற்களில் வட சொல்லை மிகையாகப் பயன்படுத்தி கலைச்சொல்லில் ஆங்கில நீக்கத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார்.

இன்றைய தின இதழ்களில் பார்க்கும் பொழுது இன்று ஸ்டிரைக் நாளை பஸ் ஓடாது, மார்க்கெட் டல்லாக உள்ளது என்று தலைப்புச் செய்திகளில் சொற் பிரயோகங்கள் உண்மையில் மிக தெளிவாக செய்திகளைச் சொல்லுகிறோம் என்பது போல் ஒரு நாடகம் நடத்தப்பட்டு, தமிழ் சிதைக்கப் படுகிறது. இதனை இப்படியே விட்டு விட்டால் ஒரு புது மொழியாக தங்கலீஷ் உருவாகிவிடும். ஆகவே மொழித்தூய்மை கெடாது இருக்க வட மொழிக்கு குரல் கொடுத்து நீக்கும் போக்கு பெருகியதைப்போல், ஆங்கிலம் வழங்கு வதை நீக்கப் பாடுபடவேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

உள்ள சொற்களுக்கு ஊறு நேரா வண்ணம் சேகரித்து, ஆவணப்படுத்த வேண்டும். இவை களைத் தரப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதனால் நல்ல சொற்கள் வழக்கொழிந்து போகா வண்ணமும் காப்பாற்ற இயலும். தடம் மாறும் அறிவியலார்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வண்ணம் ஓர் கலைச்சொல் தீர்வகம் செயல்படவேண்டும்.

கலைச்சொல் அகராதிகளை இலங்கை அரசு வெளியிட்டதைப் போல் தமிழகத் திலும் கலைச்சொல் அகராதிகள் முறையாக வெளி வரவேண்டும். இதில் தமிழர் குடியேறிய நாடு களில் உள்ள அறிஞர்களும் (எ.கா.: இலங்கை, சிங்கை, மலேசியா) இடம்பெற வேண்டும்.

பல நாட்டுக் கூட்டமைப்பு ஒருமைப்பாட்டுக் குழுவின் மூலம் தமிழக வெளியீடுகள் இலங்கை, மலாயா போன்ற நாடுகளிலும் படித்துப் பயன் பெற வாய்ப்பு உண்டு.

அவ்வப்பொழுது வெளிநாடுகளில் நடை பெறும் மருத்துவ முன்னேற்றங்களை அறியும் வண்ணம் ஒரு மொழிபெயர்ப்பு மையம் அமைய வேண்டும்.

முடிவுரை:

இவையனைத்தையும் விட மிக இன்றியமை யாதது ஒன்று உண்டு. 100 மொழிகளைப் பேசி எழுதி வந்த இந்தோனேஷியா சுதந்திரம் பெற்ற வுடன் மக்களவைச் சட்டத்தின் மூலம் பாஷா இந்தோனேசியாவே இனிப் பயிற்சி மொழி, இந்தச் சட்டத்தை இனிவரும் எந்த அரசும் மாற்றக் கூடாது என்ற நிலையில் அங்கு அம்மொழி கோலோச்சி வருகிறது. தமிழகத்தில் தந்தை பெரி யாரின் எழுத்து மாற்றம் லை, னை ஆக மாறியது சட்டத்தினால்தான். ஆக மருத்துவம் இனித் தமிழில்தான் கற்பிக்கப்படும் என்ற ஒரு சட்டமே தரப்படுத்தப்படும் கலைச் சொற்களைப் பயன் படுத்தவும் தமிழ் வளரவும் உதவும்.