பண்டைக்காலம் முதலே மனிதர்களிடம் தற்கொலை உணர்வு இருந்து வந்திருக்கிறது. இதற்குக் காரணமாக சமூக, பொருளாதார மற்றும் தனிப்பட்ட காரணங்களைக் கூற முடியும். இதைப் போன்ற காரணங்கள் உள்ள அனைவரும் தற்கொலை முடிவிற்குப் போவதில்லை. சிலர் மட்டுமே தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றனர். ஏன் அப்படி?
உளவியல் நிபுணர்கள் தற்கொலை பற்றிய பல சித்தாந்தங்களை முன்வைக்கின்றனர். எந்தவொரு சித்தாந்தமும் இறுதியானது என்ற நிலையை இன்னும் எட்டவில்லை.
உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு கூறும் தத்துவத்தின்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இறப்பு குறித்த ஒரு ஆர்வம் இருக்கிறதாம். தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள, புரியாத ஒன்றை புரிந்து கொள்ள, இதுவரை அனுபவித்து அறியாத ஒன்றை அனுபவிக்க மனிதருக்குள் ஓர் ஆர்வம் உந்திக் கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.
நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. தற்கொலை செய்து கொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது imipramine receptor sites குறைவாக இருப்பது தெரிய வந்தது. Imipramine receptors என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். செரடோனின் சுரத்தலை தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணம் குறைக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்பவர்களிடம் அதற்கு முன்னதாக சில மாற்றங்கள் காணப்படுகின்றன. உடனிருப்பவர்களால் அந்த மாற்றங்களை உணர முடியும்.
அடிப்படை குணாதிசயங்களில் மாற்றம், எதிலும் பிடிப்பின்றி தனியே ஒதுங்கியிருத்தல், அடிக்கடி எரிச்சலடைதல், வழக்கமான வேலைகளில் நாட்டமின்மை, திடீரென அழுகை...கோபம்...துக்கம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படுதல், மரணத்தைப்பற்றி அடிக்கடி பேசுதல் ஆகிய மாற்றங்களை நெருங்கிய தொடர்புடையவர்கள் கண்டறிந்து தற்கொலைகளை தடுக்க வாய்ப்பு இருக்கிறது.
(நன்றி: கலைக்கதிர், டிசம்பர் 2008)
தகவல்: மு.குருமூர்த்தி