இந்தியா, இயல்பிலேயே இயற்கை வளம் மிகுந்த நாடு. உலகின் மிகப்பெரிய மலையான இமயமலைத் தொடர்களையும், மேற்குத் தொடர்ச்சி மலைகளையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும், இந்திமா கடலையும் எல்லைகளாகக் கொண்டு பன்முகத் தன்மைகளை ஒருங்கிணைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து மாறி மாறி வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இயற்கையோடு இயைந்த உயிரினங்களோடு இங்கே மனிதர்கள் தங்களது வாழ்க்கையை மெய்யியலோடு ஒன்றாகக் கலந்து வரலாற்றில் இயங்கி வருகிறார்கள். அதன் விளைவாக மக்கள் அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிட மெய்யியலுக்கு முதன்மை அளிப்பதையே மேலான வாழ்க்கை முறையாகக் கருதி இன்று வரை தொடர்ந்து வாழ்கிறார்கள்.

aattanathi book on western ghatsஆதி வேதகாலம் முதல் இன்றுவரை இயற்கையையும், வாழ்க்கையையும் ஒன்றிணைக்கும் மெய்யியலையே உயர்வானதாகக் கருதுகிறார்கள்.

அதன் அடிப்படையிலேயே ஆன்மிகம், சமயம், சிந்தனை, தொழில், நடைமுறை, உறவுகள் போன்ற வாழ்க்கைக்கு அடிப்படையானவைகளாகத் தேர்ந்தெடுத்து காலப்போக்கிற்கேற்ப மாற்றியும், பாதுகாத்தும் வளர்த்தார்கள்.

அந்த வகையில், பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றி வளர்ந்தன. அவை இயற்கையின் அடிப்படை அம்சங்களையே ஆன்மிக உறவுகளின் உள்ளீடுகளாக அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதுவே, இந்தியாவின் மெய்யியலாகவும், ஆன்மிகமாகவும் இன்று வரை நின்று நிலவி வருவதை நாம் காண்கிறோம். இதனாலேயே இந்தியா கணக்கற்ற வேறுபாடுகளுக்கும், மாறுபாடுகளுக்கும் நடுவில் அமைதியாக வாழ்ந்து வருகிறது.

அறிவியல் தொழில¢நுட்ப வளர்ச்சி கட்டுக்கடங்காத அளவில் வளர்ந்து வரும் சூழ்நிலையில் மண்ணில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் சிரமத்திற்கும், அழிவிற்கும் உள்ளாகும் ஆபத்து நெருங்கி வருவதை உணர்ந்த இயற்கை வல்லுநர்களும், அறிவியலாளர்களும் மக்கள் சக்தியை விழிப்படையச் செய்து வருகிறார்கள்.

அதற்காக, அவர்கள் காட்டு இலாக்காவின் ஆதரவில் உள்ள வனவிலங்குச் சரணாலயம், தாவர வகையினங்கள், மரவகைகள், நீர்நிலைகளைப் பாதுகாக்க அதிகாரிகளையும், ஊழியர்களையும் நியமனம் செய்து பாதுகாக்கிறார்கள்.

அந்த வகையில் நூலாசிரியர் ஆட்டனத்தி வன விலங்கு மற்றும் காடுகளைப் பாதுகாக்கும் அரசு அலுவலராக இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குள் வாழ்ந்து தான் பெற்ற அனுபவங்களையும், புரிதல்களையும், அறிதல்களையும் இந்த நூலில் தகுந்த புள்ளிவிவரங்களுடன் பதிவுசெய்துள்ளார்.

“மேற்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்ட்ரா, குஜராத் வரை சங்கிலித் தொடர்போல் 1600 கிலோ மீட்டர் தூரம் வரை பரவிக்கிடக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவிற்குப் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. தமிழ் நாட்டில் மலைகளை மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என இருபிரிவுகளாகப் பிரிக்கலாம்.”

தொடர்ந்து, ஆசிரியர் அந்த மலைத் தொடர்களுக்குள் இயங்கும் உயிரினங்களைப் பற்றியும், தாவரங்களைப் பற்றியும், நீர்நிலைகளைப் பற்றியும் தகுந்த ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களையும் ஆழமாகவும் தெளிவாகவும், கூர்மையாகவும் பதிவுசெய்து விளக்குகிறார்.

அத்துடன் அவைகளின் புகைப்படங்களை அதிக எண்ணிக்கையில் பரவலாக அச்சிட்டு, மாறுபட்ட வகையில் நீண்ட பட்டியல்களுடன் அடையாளப் படுத்துகிறார். இதுவரை கண்டிராத அவைகளின் இயல்பான வடிவங்களை அந்தத் தொகுப்புக்களில் கண்டு வியப்படையலாம். அந்தப் புகைப்படங்களின் பின்னால் ஆசிரியரின் ஆர்வமும் முயற்சியும், உழைப்பும் தெளிவாகப் புலப்படுகின்றன.

அங்கங்கே அமைக்கப்பட்ட சில உயிரினங்களின் சரணாலயங்கள் பற்றிய விவரங்களையும் அங்கு பாதுகாக்கப்படும் விலங்குகள் பற்றிய புள்ளிவிவரங்களையும், வாழ்வியல்களின் முறைகளையும் வியக்கும் வகையில் அடையாளம் காட்டுகிறார்.

அந்த வகையில் கலக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், கன்னியாகுமரி வன உயிரின் சரணாலயம், கன்னியாகுமரி சரணாலயம், நெல்லைவன உயிரின சரணாலயம், வில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில்கள், வன உயிரின சரணாலயம் போன்ற வன விலங்குகளின் சரணாலயங்களின் தனிச் சிறப்புகளைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார். அடுத்து, மேகமலை வன உயிரின சரணாலயத்தின் தனித் தன்மையையும் குறிப்பிடுகிறார்.

“தமிழ்நாட்டின் பெருமைக்குரிய வகையில் உள்ள தாமிரபரணி, காரையாறு, கோவலாறு, மணிமுத்தாறு, பேயாறு, உள்ளாறு, கௌதலையாறு ஆகிய ஆறுகளில் கலந்து பாபநாசத்தில் படர்வது பரவசமூட்டும் நிகழ்வு” என்று நீர்வளத்தைப் பற்றிக் கூறி வியப்படைகிறார்.

அடுத்து, முதுமலை தேசியப் பூங்காவில் வாழும் பழங்குடி மக்களைப் பற்றி வருத்தம் அடைகிறார்.

“மேற்குத் தொடர்ச்ச¤ மலைகளில் குற¤ப்பாக முதுமலையில் வசிக்கும் பழங்குடியினர் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். ஆண்டாண்டுக் காலமாக வசித்து வந்த இருப்பிடம் பூர்வீகமும் கூட இதனால் பழங்குடியினர் கலாச்சார மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். கால்நடைகளை (மாடுகள், எருமைகள்) வைத்து வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர்கள் அரசு கொண்டுவந்த சட்டங்களால் கால்நடைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்படும் சூழல் உருவானது.”

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் வழியாகப் போக்குவரத்து காரணமாக விபத்துகளும், உயிர்ப் பலிகளும் அவ்வபோது நிகழ்வதால் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதற்கு அங்கங்கே புலிகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புவியியல் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

“புலிகள் காப்பகம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமும் காடு காப்பாற்றப்படுவதன் மூலம் நமக்கும், நம் தலைமுறைக்குமான உயிர்க்காற்றும், தண்ணீரும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வன உயிரினங்கள் நன்முறையில் காப்பாற்றப்படுவதற்கும், புலிகள் காப்பகம் பெரும்பங்கு வகிக்கிறது. 138 கிராமங்களில் 900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாயம் தேன் சேகரித்தல், சில வனப் பொருட்கள், கிழங்குகள், எரிப்பொருட்கள், மரம் மற்றும் மீன் போன்றவைகளை சேகரித்தல் இவர்கள் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் உதவுகிறது.”

அதைத் தொடர்ந்து யானை டாக்டர் வை.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய சிறுகுறிப்பைத் தந்ததோடு அவர் பங்களிப்பையும் குறிப்பிடுகிறார்.

“இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவராவார். இவர் யானைகள் நிருபராகவும் களப் பணியாளராகவும் மற்றும் யானைகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவராகவும் அறியப்படுகிறார். இவர் முதுமலை தெப்பக்காடு முகாமை நடத்தினார். மேலும் உலகளவில் டாக்டர் கே.யானை மனிதர் மற்றும் யானை டாக்டர் என்றும் அறியப்படுகிறார்.”

“மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி யானைகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முறைக்காக அறியப்பட்டார். இது எளிதான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாகும்.

அதற்குப் பிறகு பறவையியலாளர் டாக்டர் சலீம் அலியைப் பற்றிய தனித்தன்மைகளைக் குறிப்பிடுகிறார். “சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். பறவைகளின் நல்வாழ்வும் பாதுகாப்பும் இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்று சூழலியல் சார்ந்த கருத¢தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.”

“இந்திய பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடும் ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற தன் வரலாற்று நூலும் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும்.”

1958 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் 1976 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருதினையும் சலீம் அலி பெற்றார்.”

தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் தனித் தன்மைகளையும், இயற்கை அமைப்பையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு விளக்கம் அளிக்கிறார். அவைகளைத் தொல்லியல், புவியியல், நிலவியல் என்று தனித்தனியாக ஆய்வு செய்கிறது. அதைப் போலவே, சூழலியலையும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள புனிதத் தலங்கள் பற்றியும் குறிப்பிட்டு விளக்குகிறார்.

சூழலியல் அறிவியலாளர்களாகப் போற்றப்படும் விண்வெளி அறிவியலாளர் கி.கஸ்தூரிரங்கன் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையும், பங்களிப்பையும் அவருடைய சாதனைகளையும் விவரிக்கிறார். சூழலியலைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பற்றியும், அதில் பங்கேற்கும் சூழலியல் வல்லுநர்களையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

மக்களுக்கான சூழலியலாளர் பேராசிரியர் மாதவ் காட்கின் வாழ்க்கையையும், சாதனைகளையும் தொகுத்து சுருக்கமாகவும், தெளிவாகவும் தன் கருத்துக்களை முன்வைக்கிறார்.

அடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய காட்கின் அறிக்கை மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கை போன்றவைகளைக் குறிப்பிட்டு அவைகளின் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் குறிப்பிடுகிறார். அதைப்போலவே உம்மன் சாண்டியின் பரிந்துரைகளின் சிறப்பம்சங்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறார்.

தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடலுயிர்கள், நுண்ணுயிர்கள், பல்கிப் பெருகிப் பரவலாகக் காணப்படும் சுற்றுச்சூழல் அமைப்பையே பல்லுயிர்ப் பெருக்கம் என்கிறோம். இவற்றின் உயிர்ச் சமநிலைகளைப் பாதுகாப்பதன் மூலமே மனித இனம் சிக்கல் இல்லாமல் வாழ முடியும்.

“இதற்கு வளர்ச்சியால் பல்லுயிர்ப் பெருக்கமும், உயிர்ப் பண்மியமும் சுற்றுச் சூழலும், இயற்கையும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் எனப் புரிந்துகொள்வோம்.”

அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இயற்கைச் சூழல் பாதிக்கப் படக் கூடாது என்ற நோக்கில் இந்த நூலில் ஏராளமான தகவல்களும் கருத்துக்களும், எளிமையாகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் பதிவாகியுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் | ஆட்டனத்தி | என்சிபிஎச், சென்னை | விலை.ரூ.300/-

- சி.ஆர்.ரவீந்திரன்

Pin It