'தமிழகத்தில் தேவதாசிகள்' என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் கே. சதாசிவன். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை மேனாள் பேராசிரியர், புதைபொருள் ஆய்வு, சமூகவியல் ஆய்வு இவரது ஆய்வுத் துறைகள். ஆங்கிலத்தில் இவரால் எழுதப்பட்ட இந்நூலினைத் தமிழில் தந்தவர் கமலாலயன் ஆவார். மொழி பெயர்ப்பு சரளமாக உள்ளது. இதன் முதல் பதிப்பு 2015 இல் வந்தது.அதன் மூன்றாம் பதிப்பு 2023 இல் வந்துள்ளது. இது அகநி வெளியீடு, கிடைக்குமிடம் 3 பாடசாலை வீதி அம்மையப்பட்டு வந்தவாசி - 604498.
இந்த நூல் ஒரு புலமைசார் நூல் ஆயினும் அது கூறும் கருத்துக்களை கூடுமானவரை எளிமையாகவே இங்கு தர முயல்கிறேன். இந்நூலில் முதல் எட்டு அத்தியாயாயங்களும் தேவதாசி மரபினை அறிமுகம் செய்வதாகவும் அது சமயத்தோடு இணைந்த முறையையும் சிறப்பையும் கூறுவதாகவும் அமைகிறது அதன் பின் வரும் நான்கு அத்தியாயங்களும் அந்த மரபுபிற்காலத்தில் மறு சீரமைக்கப்பட்டமையும் அதன்பின்னால் அது சீரழிந்த விதத்தினையும் அதற்கான காரணங்களையும் கூறுகிறது.
முன்னுரையிலே ஆசிரியர் தென்னிந்தியாவிலே வைஷ்ணவ சமய சைவ சமய வளர்ச்சிக்குத் தாசி ஆட்டம் தான் துணை செய்தது என்று கூறுகிறார். பரதம் பற்றியும் தாசிகள் பற்றியும் இது பற்றி நூல்கள் எழுதியவர்களைப் பற்றி அவர் குறிப்பு முக்கியமானது. தொடர்ந்து இதனை படிக்க விரும்புபவருக்கு இக்குறிப்புகள் உதவும்
அவர் எம் பி ஏ கிருஷ்ணன், ஆச்சார்யா, பி.ஏ சால் அப்பாதுரை, யோகேந்திரன், சந்திரசோரி ஆகியோருடன் இன்னும் பல பெயர்களை யும் உள்ளடக்கி பெரியதோர் எழுத்தாளர் பெயர் பட்டியல் ஒன்று தருகிறார் இது எங்களுக்கு ஒரு பின்னணியைத் தருகிறது. அவர்கள் ஆங்காங்கே கூறியமை இங்கு ஓரிடத்தில் கூறப்படுகிறது என்கிறார்.
இந்த நூல் 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது
1. அறிமுகம்
2. தேவதாசி முறையின் தோற்றம்
3. தேவதாசி முறையின் மீது ஆகமங்கள் மற்றும் பக்தி இலக்கியத்தின் தாக்கம் (கிறிஸ்துவுக்கு பின் 600 தொடக்கம் 900 வரை)
4. தேவதாசிகளின் வாழ்க்கை
5. மேலும் அதிகச் சடங்குகளும் மேலும் அதிகத் தேவதாசிகளும் (900 முதல் 1150 வரை
6. கடமைகளும் பரிசுகளும்
7. உள்ளார்ந்த முரண்பாடு
8. தேவதாசி முறையின்மீது படிந்த கிரகண நிழல் (கிறிஸ்துவுக்கு பின் 1310 இல் இருந்து 1378 வரை)
9. மீளவும் வந்தது இந்த முறை (1355 தொடக்கம் 1565 வரை)
10. சீர்குலைவும் வீழ்ச்சியும் (கி.பி 1565-1800 வரை)
11. தமிழ்நாட்டின் நுண் கலைகளும் தேவதாசிகளும்
12. நிறைவாக எனும் தலைப்பில் அமைந்த நிறைவுரை
உள்ளடக்கம்
இதற்கூடாக இவர் சொல்ல வருவது என்ன?
கி, பி 600 தொடக்கம் கிபி 1800 வரை என ஒரு காலப்பின்னணியில் வரலாற்றோட்டத்தில் இந்த தாசி மரபு எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதும் அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன அவர்களுக்கான கடமைகள் என்ன என்பனவே இதில் கூறப்படுகின்றன. இதில் ஒரு வரலாற்றுப் பார்வை தெரிய வருகிறது ஆசிரியர் வராலாற்றாசிரியரானமையினால் இது இயல்பே.
உலகம் பூராவும் இருந்த கடவுளுக்கு அடிமையாக்கப்பட்ட பெண்கள் பற்றி ஆரம்பத்தில் அவர் கூறுகின்றார். சீனா, எகிப்து. பபிலோன் என்று பல நாடுகளில் தாசிமுறையினை உதாரணங்கள் காட்டுகிறார்.
ஆளும் வர்க்கம் உருவாகி அடிமை முறை தோன்றியபின் அதாவது என்று சமூகப் பிரிவினைகள் தோன்றியதோ அன்றிலிருந்து அடிமைகள் முக்கியமாக இந்த தாசி அடிமைகள் உருவாகத் தொடங்கியதை அதிலிருந்து உய்த்து உணர்கின்றோம்.
இத்தகைய ஒரு முறை அதாவது கடவுளருக்குப் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் முறை எப்படி இந்தியாவில் வந்தது என்று அடுத்து விளக்குகின்றார்
தமிழ்நாட்டில் இம்முறை சங்க காலத்தில் இருந்து வருகிறது என்று கூறிய இவர், அக் காலத்தில் இம்முறை நிறுவனமயமாக்கப்பட்டது என்பதனை சான்றுகள் கொண்டு விளக்குகின்றார்.இந்த நிறுவன மயப்படுத்தலில் சைவம் வைணவம் முக்கியமாகக் கோயில் கலாசாரம் வகித்த முக்கிய பங்கினை கூறுகின்றார்.
ஆகமங்கள் விதித்த விதிகள்
தேவதாசி முறையைக் கோவிலோடு சேர்த்து இறுக்கி விடுவதில் ஆகமங்களின் தாக்கம் பக்தி இயக்கங்களின் தாக்கமும் என எழுதும் பகுதி இந்த நூலில் முக்கிய பகுதியாக எனக்குப் படுகிறது பக்தி இலக்கியங்களை விட ஆகமமே மிகப் பிரதான பங்கு வைக்கின்றது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஆசிரியர். சிவ வழிபாட்டில் தேவதாசிகளின் இடத்தை ஆகமம் நிர் ணயிக்கிறது ஆகமம் நமக்கு தேவ வாக்கு அல்லவா?
ஆலய வழிபாட்டில் நடனம் ஒரு முக்கிய அம்சம் என்று ஆகமம் விதிக்கிறது
16 வகையான வழிபாட்டுச் சடங்குகளை ஆகமங்கள் கூறுகின்றன அதிலே தாசியின் இடம் என்ன என்பதை வரையறுக்கினறன.இதில் முக்கிய இடம் வகிக்கும் ஆகமம் காமிகாகமம். பலி பூஜைகளின் போது எல்லா திசைகளிலும் இருந்து ஆடுதல், தீப ஆராதனையின் போது ருத்ர கணிகையர் ஆடுதல், பூசை முடிய அவள் பூசகரிடம் இருந்து கும்பம் பெறுதல் மூலவரைத் தரிசித்ததும் அவளே முதலில் பாடுதல் வெவ்வேறு வகையான தீப ஆராதனைகளின் போது அவள் ஆடுதல் அவள் மிருதங்கம் வாசித்தல் என்று கோயிலுக்குள் நடைபெற வேண்டிய அவளுடைய ஆடல், ஆடல் இசை என்பன ஆகமத்தால் நிர்ணயிக்கப் படுகின்றதை விவரமாகத் தருகின்றார்
ஒரு வகையில் நடனம் ஆகமநிலைப்படுகிறது, அது சடங்காகிறது என நாம் இதனை விளங்கிக் கொள்ளலாம்
பதினாறு வகையான வழிபாட்டுச் சடங்குகளை அது கூறுகிறது. சுப்ர போத ஆகமம் அவள் வீணை வாசிக்க வேண்டியதைக் கூறுகிறது வீர ஆகமம் மணம் மிகுந்த மலர்கள் கொண்டு சிவ கணிகையரைக் கோயில் அதிகாரிகள் கௌரவிக்க வேண்டும் என்று கூறுகிறது.
பரத நடனத்தில் 108 கரணங்கள் சிலாகிக்கப்படுபவை. அந்த 108 சரணங்களை கை முத்திரை கொண்டு அபிநயிக்க வேண்டுமென இந்த ஆகமங்கள் கூறுகின்றன.
இவ் வகையில் தேவரடியார் முறையைக் கோயிலுக்குள் ஒரு சடங்காக வைத்து அவர்களை அடிமையாக வைத்திருந்த விடையத்தை ஆகமங்களே இறுக்கி வைத்தன என்பது தெளிவாகிறது.
இந்த அத்தியாயத்தில் ஸ்ரீ நாராயண ஐயங்கார் எழுதிய சந்தேகம் ஒன்று எழுப்பப்படுகிறது அது ஓர் முக்கியமான சந்தேகம்.
நாயன்மார் காலத்தில் சிறு சிவன் கோவில் என்றும் பெரும் சிவன் கோவில் என்றும் இரண்டுவகை இருந்திருக்கும். சிறு சிவன் கோவில்கள் தாசிமாரை வைத்திருக்கும் பொருளியல் பலமும் பண்பாட்டுப் பலமும் இன்றி இருந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் இச்சிறு கோவில்கள் கிராமியம் சார்ந்தவை, அங்கு கிராமிய மக்கள் வழிபாடே இருந்திருக்கும். அங்கு பறை ஒலியே இருந்திருக்கும் அங்கு தேவரடியார் இருந்திருப்பரோ? அதனால் கிராமப்புற கோவில்களிலே என்ன நடந்திருக்கும் என்பது அவரது கேள்வி.
சம்பந்தர் தேவாரத்தை எடுத்துக் காட்டி மங்களக்குடி என்னும் ஊரில் பறை ஒலிக்கு நடுவே தேவரடியார்கள், இந்த முறைகளைச் செய்தார்கள் என்று கூறுகிறார். ஆகமங்கள் இப்படி கூறுவதற்கு அரச ஆதரவுகள் கோவில்களுக்கும் ஆகமவாதிகளுக்கும் இருந்தன.
பல்லவர் காலத்தில் புகழ் பெற்றிருந்த காஞ்சி முத்தீஸ்வரர் ஆலயக் கோவில் பரிவாரப் பட்டியலில் 32 அடிகளில் 12 கூத்தர்மார் இருந்ததாகவும் 12 கூத்திகள் இருந்ததாகவும் பல இசைக் கலைஞர்கள் இருந்ததாகவும் கல்வெட்டு குறிப்புத் தருகின்றார்.
தேவதாசிகளின் வாழ்க்கை பற்றிக் கூற வந்த அவர், இந்த தேவதாசிகள் ஏழு எட்டு வயதிலேயே விக்கிரகத்துக்கு முன்னே திருமணம் செய்து வைக்கப்படுவர் என்றும் அதன் பின்னர் இவர்கள் அந்தக் கோயில் இறைவனின் மனைவியாகவே கருதப்படுபவர் என்றும் இதனால் அவர்களுக்கு ஒரு கோவில் அங்கீகாரம் கிடைப்பதையும் காட்டுகிறார். கோவில் அங்கீகாரம் சமூக அங்கீகாரத்தையும் கொண்டு வந்து விடுகிறது என்பதனை நாம் உய்த்து உணரலாம்
விக்கிரகத்திலேயே இருக்கும் தாலியை எடுத்துக் கோவில் ஆச்சாரியார் அவளுக்கு அணிவிக்க வேண்டும். இத்தோடு அவள் கோவில் அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்படுகிறாள். அப்படி ஒப்படைக்கப் பட்டவர்கள்தான் வைணவ சமயத்தில் ஆண்டாளும் சைவ சமயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் செய்த செய்த பரவையாரும் என்ற கருத்தையும் தருகின்றார்.
சமூகத்தின் உயர் நிலையிலிருந்தோரும் தேவரடியார் ஆயினர்
இவ்வண்ணம் திருமணம் செய்து வைக்கப்பட்ட வர்களுள் அரசர்களின் புதல்விகளும் அரச வம்சம் போல அதிகார பணபல வம்சத்திலி ருந்தும் வந்தவர்களும் கூட அடங்குகிறார்கள். குலசேகர ஆழ்வார் மகளான நீளாதேவி இப்படி திருமணஞ்செய்து வைக்கப்பட்டவர் என்கிறார். இச்சமயம் அவர்கள் தங்கள் சொத்துக் களையும் கோயிலுக்கு அளித்துக் கோயில் அடிமை ஆகி விடுவார்கள். அடிமைகள் என்பதை விட கோவிலுக்குரியோர் ஆகி விடுகிறாரக்ள். எனவே, தேவரடியார் என்பவர் சமூக மதிப்பில் குறைந்தவர்கள் அல்ல எனக் கூறவருகிறார். இத்தகைய தேவர் அடியார் சிலர் அரசனுக்குக் காமக் கிழத்தியர்களாக இருந்தனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டுச் செல்கின்றார். குழந்தைகள் பெற அவளுக்கு விருப்பமில்லை என்பதனையும் கூறுகின்றார்.
அவர்களை மேன்மைப்படுத்த அவர்களுக்குத் தலைக்கோல் பட்டமும் பெருநிலப்பரப்புக்களும் வழங்கப்படுவது உண்டு, அவர்களுக்கு நித்திய சுமங்கலி பட்டம் அளிக்கப்பட்டது. அப்பெண்ணை அவர்கள் சுமங்கலிகளாகக் கருதினர் என்பது இதனர்த்தம். சுமங்கலிகளுக்கு வாழ்க்கை வட்டச் சடங்குகளில் தமிழ்ப்பண்பாட்டு மரபில் உயரிய இடம் உண்டு என்பதனை நாம் அறிவோம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. அதாவது இந்த நாட்டியப் பெண்களின் மனோ நிலை எவ்வாறு இருந்திருக்கும்? அவர்கள் மன உணர்வுகள், பிரச்சனைகள், கோபங்கள் குமுறல்கள் எப்படி இருந்திருக்கும்? இவை எதுவும் இந்த ஆகமங்களிலோ கல்வெட்டுகளிலோ குறிப்பிடப்படவில்லை.
சதுரி மாணிக்கம் எனும் ஒரு கணிகை அல்லது தாசி வரி கொடுக்க மறுத்து சோழர் காலத்தில் கோவில் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்த செய்தி கூறும் கல் வெட்டு ஒன்று பற்றி வானமாமலை முன்னர் எழுதியமை இங்கு ஞாபகத்திற்கு வருகிறது)
கோயில் விதித்த கட்டுப்பாடுகள் சுதந்திரமின்மை என்ற எரி நெருப்புகளுக்குள் எரிந்து கொண்டிருக்கிற அவர்கள் மனதுக்கு அலங்காரமாகப் பொருத்தப்பட்ட மேலாடைகளே சடங்கில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட முதலிடமும் பட்டங்களும் ஊதியமும் காணிகளும் வீடுகளும் என்பதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்
இந்த பட்டங்களும் பதவிகளும் செல்வாக்கும் அவர்களைச் சாந்தப்படுத்தும் மேலாடைகள் என ஆசிரியர் கூறுவது முக்கியமானது. ஆராய்ச்சி பிரச்சனை அங்கு தான் இருக்கிறது. இதுவே ஆராயப்பட வேண்டிய முக்கியபகுதி என நான் கருதுகிறேன். ஆனால் இந்த நூலாசிரியர் ஆசிரியர் அந்த ஆராய்வுக்குள் செல்லவில்லை.
அடுத்து வரும் அத்தியாயங்களில் அவளுடைய கடமைகளும் விருதுகளும் பெரிதாக விளக்கப் படுகின்றன. அவர் சொன்ன கூற்றை அவை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. இவ்விடத்தில் ஆசிரியர் அந்த விருதுகளை விபரிக்கிறார். அந்த விருது பெற அவளுக்கான கோவில் கடமைகளும் உள்ளன. இங்கே அவள் சுதந்தி மற்ற கோவில் பூசை விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒருத்தியாகவே காணப்படுகிறாள்.
மூன்றாம் ராஜராஜன் காலத்தில் திருவொற்றியூர் கோயில் நடந்த மாதர்களுக்கு உறவாக்கிய தலைக்கோலி எனும் பட்டமளித்ததுடன் 60 வேலி நிலமுடைய ஒரு கிராமத்தை 3 ஆம் ராஜராஜன் தானமாக கொடுத்தார் என்ற செய்தியையும் கூறுகிறார் அவர்களுக்கு காவிதி என்ற பட்டங்களும் ஊதியப் படிகளும் வீடுகளும் வரி விலக்களிப்பும் அளிக்கப்பட்டன.
இப்படி பல்லவர். சோழர், ஆட்சிக் காலத்தில் தாசிகள் உயர்நிலையில் வைத்துக் கணிக்கப்பட்டனர் என்று கூறிவந்து அவர் இந்த தேவதாசி முறையின் அடுத்த கட்டத்தைக் கூறுகிறார்.
அது விஜயநகர நாயக்க காலமாகும். இந்து மதம் மீண்டும் தன்னை நிலை நிறுத்திய காலம் அது. அக்காலத்தில் தாசி முறை மீளமைக்கப்பட்டது எனக்கூறும் அவர், அதன் பிறகு தாசிகளின் கோவில் நிலை போய் அவர்கள் தேவரடியார் நிலை நின்று கீழிறங்கி, தேவடியாள் ஆன நிலையையும் கூறுகிறார். அந்தப் புனருத்தாரணத்தையும் தேவரடியார் மரபின் வீழ்ச்சியையும் அதற்கான காரணங்களையும் அடுத்து பார்போம்
உயர்ந்த மரபு கீழிறங்கிய கதை
12 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூலின் முதல் 7 அத்தியாயங்களில் கூறப்பட்டவற்றை இது வரை சுருக்கமாகப் பார்த்தோம். இங்கு நான் சுருக்கமாகக் கூறப்போவது எட்டாம் அத்தியாயத்தில் இருந்து இறுதி அத்தியாயம் வரையும் கூறப்பட்ட விடயங்கள் ஆகும்
இந்த இரண்டாம் பகுதியில் தேவதாசி முறையின் மீள் எழுச்சியும் தேவதாசி முறையின் வீழ்ச்சியும் பற்றிக் கூறப் புறப்படுகின்றது. சோழர் ஆட்சி நலிவடைந்த பின்னர் கோயில்களில் தேவதாசிகளுக்கு இருந்த பெரும் மதிப்புகள் குறைய தொடங்கின. பல்வேறு சமூகங்களில் இருந்தும் பலர் தம்மைத் தேவரடியார்களாக தங்களைக் கோயிலுக்கு அடிமைகளாக்கிக் கொண்டதன் காரணமாக அல்லது அடிமைப் பட்டதன் காரணமாக அவர்கள் தேவரடியார்கள் என்று அன்று அழைக்கப்பட்டனர்
1310 க்கும் 1278-க்கும் இடையே கைக்கோள முதலிகள் குடும்பத்தில் இருந்தும் பலர் தேவரடியார்களாகச் சென்றனர் என்ற குறிப்பு கிடைக்கின்றது. இவ்வண்ணம் பல சமூகங்களில இருந்து சென்றவர்கள் தேவர் அடியார்கள் ஆயினர்.
அப்படியாயின் தேவர் அடியார் என்பது ஒரு சாதி அன்று. பல்வேறு சாதிகளும் இணைந்து தேவர் அடியார் என்ற ஒரு சாதியாகத் திரண்டமை தான் உண்மை என்பது நமக்குப் புரிய வருகிறது. சோழர் ஆட்சியின் பின் இஸ்லாமியருடைய செல்வாக்கு தமிழகத்தில் பரவத் தொடங்கியது. இந்துக் கோயில்களுக்கு இருந்த மவுசும் அரச ஆதரவும் குறைய தொடங்கின.
இக்காலகட்டத்தில் விஜயநகர பேரரசு உருவாகியது. அது ஓர் இந்து மதப் பேரரசு. அப்போது பழமை புதுப்பிக்கப்பட்டது. விஜயநகர பேரரசின் வருகை மீண்டும் கோயில்களை உயிர்ப்பித்தன. கோயில்களுக்குள் கலைகள் புகத் தொடங்கின.
இந்த வகையில் தேவரடியார் முறையிலே ஒரு மாற்றம் நிகழ்கின்றது என்கிறார். இப்போதுதான் தேவர் அடியார்கள் தேவதாசி என்ற பெயரைப் பெறுகின்றனர். விஜயநகர பேரரசின் வீழ்ச்சியின் பின் தேவதாசி மரபு இன்னும் கீழிறங்க தொடங்கியது. அவர்களைப் போசிப்பதற்கு கோயில்களோ பெரும் நிறுவனங்களோ இல்லாத காரணத்தினால் அவர்கள் பல இழப்புக்களைச் சந்தித்தனர். சமூக அங்கீகாரம் இருக்கவில்லை சொத்துகள் இருக்கவில்லை.
இதானால் அவர்கள் ஏனையோரில் தங்கி இருக்க வேண்டியவர்கள் ஆனார்கள்.அவர்களிடம் இருந்த ஒரே மூலதனம் ஆடல் பாடல் அழகுதான். இந்த வகையில் கோயில் தேவர் அடியார்கள் தேவதாஸிகளாக மாறினார்கள். அடியார் என்பது கௌரவமான சொல் அதில் அடிமைத்தனம் தெரியவில்லை. தாஸி எனும் சொல் வேறு அர்த்தம் தருகிறது. கோவில் செல்வாக்கிழந்தது. கோவில்கள் இவர்களைப் போசிக்கும் வலிமையும் குறைந்தது. தேவதாஸிகளுக்குப் பணமும் சொத்தும் செல்வாக்கும் தேவைப்பட்டன. அரசர்களின் இடத்தை இப்போது பணம் நிலமுடைய செல்வாக்குமிக்க பிரபுக்கள் எடுத்தனர்.
ஒரு நிலப்பிரபுக்குவுக்கு அடிமைகளும் தேவதாசிக்ளும் இருப்பது செல்வப்பெருக்கின் ஒரு அடையாளமாகவும் கருதப்பட்டது. இதனால் இந்தத் தாஸிகள் பரத்தமைத் தொழிலில் ஈடுபடவும் தொடங்குகிறார்கள். ஆண்களின் பாலியல் வேட்கையைத் தணிவிக்கும் ஒரு சமூகமும் உருவாகத் தொடங்கியது. ஆடலும் அதற்குப் பயன் படுகிறது
அர்ச்சகர்களின் கபடத்தனமும் அரசர்களின் காமவேட்கையும் அதிகரித்தது என்று ஆசிரியர் கூறுகிறார். 1466க்கும் 1485 க்கு இடையில் கவி காளமேகம் எனும் பெரும் கவி மோகனாங்கி என்ற திருவானைக்காவில் இருந்த தாசி மீது காதல் கொண்டிருந்தார். வைஷ்ணவரான அவர் சைவராக மாறி அவளுடன் வாழ்ந்தார். காளமேகத்துக்கு பல தேவதாசிகளின் தொடர்புகள் இருந்தன. தனலட்சுமி, திம்மி, சோமி என்ற தேவதாசிகள் தொடர்பையும் தாஸிகளின் பெயர்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இப்போது தாசிகளின் நோக்கம் சொத்து சேர்ப்பதும் பாலியல் நோக்கமும் ஆகியது. அருணகிரிநாதர் கூட ஒரு தாசியிடம் அகப்பட்டிருந்த கதையைக் கூறுகிறார். இவ்வண்ணம் கோயிலில் தங்களை அர்ப்பணித்து நாட்டியமாடி தேவர் அடியார் என்று பெயர் பெற்ற பெண்கள் இப்போது தேவதாசிகளாக மாறிப் பரத்தையர்களாகக் கீழ் இறங்கினர்
தேவடியார்கள் தேவதாசிகள் ஆகிய கதை இது
பதினோராம் அத்தியாயத்திலே தமிழ்நாட்டின் நுண்கலைகள் பற்றியும் தேவதாசிகள் பற்றியும் ஆசிரியர் கூறுகிறார். அக்காலத்திலே தேவதாசிகளின் ஆடல்களைக் கண்ட பின்னரே கடவுளர்கள் சென்று தமது இருப்பிடங்களில் அமர்வர் என்று ஆசிரியர் கூறுகிறார். ஆலய வழிபாட்டில் இசையும் நடனமும் பிரதான அம்சமாக இருந்தன என்கிறார்.
இந்த இரண்டையும் பயில அவர்களுக்குக் கண்டிப்பான பயிற்சியும் பயிற்சி தர ஆசிரியர்களும் தேவைப் பட்டனர். அக்காலத்தில் கோயில்கள் நடனம் பழக்கும் ஆசிரியருக்கு நட்டுவக் காணி என்ற ஊதியமும் நாட்டியம் பயிலுகின்ற மாணவர்களுக்கு பாணப்பேறு என்ற ஊதியமும் மத்தளம் வாசிப்பவருக்கும் வேறு வாக்கியங்கள் வாசிப்பவர்களுக்கும் உவச்சக் காணி என்ற ஊதியமும் கொடுக்கப்பட்டன. சிதம்பரம் ஆலயத்திலே உள்ள கற்பலகை இதனைக் கூறுகிறது என்கிறார் ஆசிரியர்.
பன்னிரண்டாம் அத்தியாயத்தில் நிறைவுரை கூறி முடிக்கிறார்.
உலகளாவிய முறையிலே இருந்த கோவிலுக்குத் தம்மை அடிமையாக்கும் தாசி மரபு இந்தியாவிலும் தமிழகத் திலும் இருந்ததென்றும் பல்லவர் சோழ காலங்களில் அது ஆலயத்தில் சடங்காக இறையியல் சம்பந்தப்பட்டதாக மதிப்புக்குரியதாக இருந்தது என்றும் விஜய நகர நாயக்க காலத்தில் இது இன்னொரு வகையில் மீண்டாலும் கோயிலை விட்டு வெளியேறிய தாசிகள் நிலப்பிரபுக்களை நம்பி வாழ்ந்த காலத்தில் நடனம் காம வேட்கை எழுப்பும் நடனமாக மாறி தாசி ஆட்டமாக மாறியதென்றும் கூறுகிறார்.
அவருடைய ஆராய்ச்சி நாயக்கர்காலத்துடன் முடிவடைகிறது. இவ்வகையில் இந்த ஆய்வு பல்லவ சோழ நாயக்க ஆட்சிக் காலங்களை மையம் கொண்ட ஆய்வு எனலாம்.அவருடைய கருத்துக்களை சுருக்கமாகக் கூறினால் கோயில் அமைப்போடும் கோயில் வளர்ச்சியோடும் தாசி மரபு வளர்ந்து வந்தது என்று கூறுகிறார். இன்னும் இறுக்கமாகக் கூறினால் மன்னர்களும் மதமும் கொடுத்த ஆதரவு காரணமாக இது பெரிதாக வளர்ச்சியடைந்தது. எல்லா சாதிகளிலும் இருந்து வந்து பலர் தேவர் அடியார்கள் ஆயினர். தேவரடியார் என்பது மதிப்பார்ந்த சொல்லாகவும் மதிப்புக்குரிய சேவை யாகவும் கருதப்பட்டது. பின்னாளில் இது கோயிலுக்கு வெளியே வந்த போது தாசி ஆட்டமாக மாறியது. தேவர் அடியார்கள் தேவதாசிகள் ஆயினர் என்று கூறி இந்த நூலை முடிக்கிறார்
அவர் சான்றாகத் தரும் இத் தகவல்களைக் காண அவர் ஒரு கடும் உழைப்பை மேற்கொண்டு இருக்கின்றார் எனத் தெரிகிறது. நூல் விறு விறுப்பாகச் செல்கிறது. வாசிக்கத் தூண்டுவதாக தகவல்களும் நடையும் அமைந்துள்ளன.
அவரது நூலின் சாரம் தேவர் அடியார் தேவதாசிகளாக மாறினர் என்பதே, செல்வாக்கோடு இருந்த ஒரு சமூகம் செல்வாக்கிழந்து கீழிறங்கியது என்பதே.
ஆய்வு நூலின் சிறப்புகளில் ஒன்று
ஒரு ஆய்வு நூலின் சிறப்பு நூலாசிரியரின் தேடலையும் உழைப்பையும் பொறுத்து அமையும். இந்த ஆய்வை செய்வதற்காக நூலாசிரியர் தேடிய தரவுகள் நூல்கள் என்பன அவர் உழைப்பின் மகத்துவத்தையும் நூலின் தரத்தையும் காட்டுவதாக உள்ளன. அவை யாவும் நூலில் தரப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னரும் அடிக்குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன. அதில் தரும் நூல்கள் முக்கியமானவை,அந்த அடிக்குறிப்புக்கள் அந்த அதிகாரத்தின் உண்மைத் தன்மையை காட்டுவனவாக உள்ளன. இதனை விட பின் இணைப்பிலே தரப்ப்பட்டுள்ள தகவல்கள் முக்கியமானவை.
அதன் விவரம் பின் வருமாறு
தேர்வு செய்து குறிப்புக்கு உதவிய நூல்கள் 152, கல்வெட்டியல்கள் 112 , இலக்கியங்கள் 101, ஆகம சிற்ப சாஸ்திர நூல்கள். 15 புராணங்கள் ஸ்தல புராணங்கள் 48 அயல்நாட்டு பயணிகள் குறிப்புகள் 14 கையெழுத்து பிரதிகள் 44 நேர்காணல்கள் 13, பின்ணிணைப்பில் தேவதாசிகளுக்கு அளிக்கப்பட்ட கூத்திகள் ருத்ரகணி கையர், மாணிக்கத்தார் தொண்டி மகளிர், நக்கன்,பதியிலார் என 13 வகையான பட்டப்பேர்கள் தரப்பட்டுள்ளன. தஞ்சை கோயிலில் பணியாற்றிய 87 விதமான ஊழியர்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியமும் தரப்பட்டிருக்கிறது தேவதாசிகளின் ஆடல் தோற்றத்தையும் இயல்பான தோற்றத்தையும் காட்டும் பத்து அரிய புகைப்படங்களும் 14 சிற்பங்களும் ஒரு ஓவியமும் தரப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வைச் செய்ய அவர் எடுத்த முயற்சியினை அதன் மூலம் நான் அறியக் கூடியதாக இருக்கின்றது.
ஒரு ஆய்வாளன் தரவுகள் தேட இப்படித்தான் உழைக்க வேண்டும். நமது ஆய்வாளர் பலருக்கு இது ஒரு முன்னுதாரணம்.
அவர் சான்றாகத் தரும் இத் தகவல்களைக் காண அவர் ஒரு கடும் உழைப்பை மேற்கொண்டு இருக்கின்றார் எனத் தெரிகிறது. நூல் விறு விறுப்பாகச் செல்கிறது வாசிக்கத் தூண்டுவதாக தகவல்களும் நடையும் அமைந்துள்ளன. அவரது நூலின் சாரம் தேவர் அடியார் தேவதாசிகளாக மாறினர் என்பதே. செல்வாக்கோடு இருந்த ஒரு சமூகம் செல்வாக்கிழந்து கீழிறங்கியது என்பதே. இந்த நூலில் சிறப்பாக அவர் கவனிக்காத விடப்பட்ட பகுதிகளும் உள்ளன
நூலாசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை
பொதுவாக தேவதாசி மரபு பற்றி ஆராய்வோர் கண்டு கொள்ளாத பகுதிகள் அவை, தேவதாசி ஒரு பெண் என்ற வகையிலும் கேவலமாகப் பார்க்கப்பட்ட ஒரு பிறவி என்ற வகையிலும் ஏனைய பெண்கள் போல இயல்பான ஒரு குடும்ப வாழ்வை வாழமுடியாது என்ற வகையிலும் அவளுக்குச் சமூக அமைப்பு ரீதியாக அவளுக்கு சமூகத்தால் வழங்கப்பட்ட ஸ்தானத்தை அவள் மனம் ஏற்க எத்தனை பாடுபட்டிருக்கும்?.
விருப்பமில்லாத ஒருவரோடு உடல் உறவு கொள்வதில் அவள் பட்ட மனச்சிக்கல்கள் எப்படி இருந்திருக்கும்?
உடல் இயல் ரீதியாக எத்தனை வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பாள்?
அதனை அவள் மனரீதியாக எப்படி எதிர்த்திருப்பாள்? என அந்தப் பெண்களின் சமூக நிலையினையும் உள நிலையினையும் கூறும் அந்தப் பெண்களை சக மனுசியாக பார்த்து எழுதும் மனோநிலையுடனான எழுத்துகள் இன்னும் வரவேயில்லை தேவதாசிகளின் வாழ்வையும் அவர்கள் நிலையையும் சமூகத்தில் அவர்களின் தேவையினையும் அவர்களின் சமூக அந்தஸ்தையும் அவ்வக்கால உற்பத்திமுறை் உற்பத்தி உறவுகளுடனும் சமூக அமைப்பின் பின்னணியி்லும் வைத்து ஆராய்தல் மேலும் புரிதலை ஏற்படுத்தும். அத்தகைய ஒரு நூல் வருவதற்கு இத்தகைய நூல்கள் அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
- பேராசிரியர் சி. மௌனகுரு