இலக்கியத்தின் அடிப்படை அலகுகளுள் ஒன்றான வருணனை, காலந்தோறும் சிற்சில மாற்றங்களோடு இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. சங்க இலக்கியங்களுள் ஒன்றாகிய பத்துப்பாட்டுத் தொகுப்பு, அடி நீட்சியின் காரணமாக நீண்ட வருணனைக்கு இடந்தருவதாக அமைந்துள்ளது. பத்துப்பாட்டு எட்டுப்புலவர்களால் பாடப்பட்டது; எனினும் அவற்றின் வருணனையாக்கத்தில் சில தனித்துவமான மரபுகளும் சில பொதுமரபுகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு உயிரையும் பொருளையும் பார்க்கின்ற வெவ்வேறு புலவர்களுக்குத் தோன்றும் கருத்தும் சிந்தனையும் வேறு வேறாக அமைந்தாலும் அவை ஏதோ ஒரு நிலையில் அந்த உயிரினத்தின் அல்லது பொருளின் இயல்பினைப் புலப்படுத்துவதாகவே அமைந்துவிடுகின்றன.

பத்துப்பாட்டில் இடம்பெறும் வருணனையாக்க மரபு என்பது ஓர் உயிரை அல்லது ஒரு பொருளை அவற்றின் இருப்பிடம் அல்லது உறைவிடம், இயல்பு அல்லது தன்மை, உருவம் அல்லது தோற்றம், உறுப்பு அல்லது சினை , செயல் அல்லது தொழில், காலம் அல்லது நேரம், பயன்பாடு அல்லது நன்மை இவற்றோடு இணைத்துப் புலப்படுத்தும் முறைமையாக அமைந்துள்ளது. பத்துப்பாட்டு, இலக்கிய மாந்தர்கள் (நிலமாந்தர், திணைமாந்தர்), தெய்வம், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், நிலம், பொழுது, உணவு, ஆறு, கருவி, நகரம், பேரூர், அரசியல், ஞாயிறு, திங்கள், வெள்ளி, கடல் முதலிய உயிர் மற்றும் இயற்கைப் பொருட்கூறுகளை வருணனையாகப் பதிவு செய்துள்ளது. இவற்றில் விலங்குகள் பறவைகள் ஆகிய நிலையல் உயிர்கள் (இயங்கு உயிர்கள்) மற்றும் தாவரங்களாகிய நிலை உயிர்கள் (இயங்கா உயிர்கள்) ஆகியவற்றைப் பற்றிய காட்சிப்படுத்தல்கள் இக்கட்டுரையில் பகுத்தாராய்ந்து உரைக்கப்பட்டுள்ளன.

மனித இனத்தின் வரலாறு, இயற்கை உயிர்த்தொகுதிகளான விலங்குகள், பறவைகள் தாவரங்கள் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகவே உள்ளது. இயற்கையை வணிக நோக்கத்தோடு பார்க்காமல் அவற்றைத் தங்களுக்கான வாழ்வாதாரமாக - உணவுக்கான பின்புலமாகக் கருதப்பட்ட காலம் வரை அவை பற்றிய அறிவு போற்றத்தக்கவையாக இருந்தன. புலவர்கள் அத்தகைய இயற்கையறிவினை - விலங்குகள், பறவைகள், தாவரங்கள் பற்றிய செய்திகளைத் தங்களின் இலக்கியப் படைப்புகளில் இயல்பாகப் பதிவு செய்துள்ளனர். சங்க இலக்கியங்கள், இவ்வுயிர்த் தொகுதிகளை அழகியல் உணர்வோடு மட்டும் பார்க்காமல் மனித மனங்களின் உணர்வு வெளியீடுட்டுப் பின்புலமாகவும் பயன்படுத்தியுள்ளமை வேறு எந்த மொழி மற்றும் இலக்கியங்களில் காணக் கிடைக்காத தனித்தன்மை வாய்ந்ததாகும்.elephants 437பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகள், பறவைகள், தாவரங்களைப் பற்றிய வருணனைகள் அக்காலப் புலவர்களின் விலங்கியல் மற்றும் தாவரவியல் அறிவினைப் புலப்படுத்துவதோடு அவர்களின் அழகியல் உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இவற்றைக் கீழ்க்காணும் காட்சிப்படுத்தல்கள் வழி வரையறுக்கலாம்.

1. விலங்குகளைக் காட்சிப்படுத்தும் மரபு

பத்துப்பாட்டில் 35 வகையான விலங்குகள் பற்றிய செய்திகள் இலக்கியப் பதிவு பெற்றுள்ளன. இப்பதிவுகளைப் பல புலவர்கள் பாடியுள்ளனர்;;; அவற்றைப் பகுப்பாய்வு செய்து நோக்கும் பொழுது அவை, கீழ்க்கண்ட ஏழு காட்சிக் கூறுகளோடு அமைக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். அவை,

(அ) மன்னர்களின் வலிமையினை விலங்குகளோடு (சிங்கம், புலி) ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு:

சிங்கத்தைத் திருமாவளவனோடு ஒப்பிடுதல்.

அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்

திருமா வளவன் - பட். 298 - 299

(ஆ) ஒரு விலங்கு மற்ற விலங்கினை வேட்டையாடுவது போல் காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

புலி - யானையை வேட்டையாடல்

தொண்டைமான் இளந்திரையன்

- பகைவரை வேட்டையாடல்

பொறி;வரிப் புகர்முகம் தாக்கிய வயமான்

கொடுவரிக் குருளை கொளவேட் டாங்கு

புலவர் பூண்கடன் ஆற்றி பகைவர்

குடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்

வென்றி அல்லது வினைஉடம் படினும்

ஒன்றல் செல்லா உரவுவாட் தடக்கை

கொண்டி உண்டி தொண்டையோர் மருக

- பெரு. 448 - 454

(இ) விலங்குகளை அதன் வாழிடங்களோடு காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

பாம்பு உறை மருது  - பெரு. 232.

பாம்பு உறை புற்று        - பெரு. 277.

பாம்பு ஒடுங்கும் பயம்பு    - மலை. 199.

அளைவாழ் அலவன் - பொரு. 9.

அளைச்செறி உழுவை     - மலை. 505.

(ஈ) விலங்குகளின் இயல்பினைக் காட்சிப்படுத்தல்

எடுத்துக்காட்டு :

பாம்புமணி உமிழ         - குறி. 221.

பரல்தவழ் உடும்பு         - மலை. 508.

(உ) இணை விலங்குகளோடு காட்சிப்படுத்தல்

எடுத்துக்காட்டு :

பெருநல் யானையடு பிடிபுணர்ந்து உறைய

                                                            - பட்.251.

பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி        

மடக்கண் பிணையடு மறுகுவன உகள

                                                            - மது. 275-276.

(ஊ) ஒத்த இன விலங்குகளோடு காட்சிப்படுத்தல்

எடுத்துக்காட்டு :

மான்கணம் மரமுதல் தெவிட்ட - குறி. 217.

கழைவளர் சாரல் களிற்றினம் நடுங்க - மது. 242.

(எ) பல விலங்குகளை ஒருங்கே காட்சிப்படுத்தல்

எடுத்துக்காட்டு :

அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்

புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்

வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து

உருமும் சூரும் இரைதேர் அரவமும்

ஒடுங்குஇருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்

கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்

நூழிலும் இழுக்கும் ஊழ்அடி முட்டமும்

பழுவும் பாந்தளும் உளப்படப் பிறவும்

.. ...... ................. .............. ............

குழுமலை விடரகம் உடையவால்

                - குறி. 253 - 261

2. பறவைகளைக் காட்சிப்படுத்தும் மரபு

எட்டு வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்ட பத்துப்பாட்டில் 23 வகையான பறவைகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அக்காட்சிகளைப் பகுத்தாராயும்பொழுது கீழ்க்கண்ட ஐந்து காட்சிக்கூறுகள், ஒரே மாதிரியாக இலக்கியப் பதிவுபெற்றுள்ளன. அவை,

(அ) பறவைகளை வாழிடத்தோடு காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

புள்ஆர் பெண்ணைப் புலம்பு மடல்              - பெரு. 314.

 ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில்

 ஓங்கு இரும்பெண்ணை அகமடல் அகவ

- குறி. 219-220.

(ஆ) இணைப் பறவையோடு காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

மாதர் வண்டொடு சுரும்பு நயந்து - குறி. 148.

மனைஉறை புறவின் செங்கால் சேவல்

இன்புறு பெடையோடு மன்று தேர்ந்து

- நெடு. 45 - 46.

(இ) ஒத்த இனப் பறவைகளாகக் காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

இறவு அருந்திய இனநாரை - பொரு. 204.

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் - திரு. 76.

யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப - முல். 8.

(ஈ) இரு வேறு பறவைகளை ஒருங்குகே காட்சிப்படுத்தல்

எடுத்துக்காட்டு :

யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப

கலவம் விரித்த மட மஞ்ஞை

- பொரு. 211 - 212.

அழுகுரற் கூகையோடு ஆண்டலை விளிப்ப

- பட். 258.

(உ) பறவைகளை இரை தேரும் நிலையோடு காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

தாது உண் தும்பி          - மது. 655.

புலவுக் கயல்எடுத்த பொன்வாய் மணிச்சிரல்

- சிறு. 181.

3. தாவரங்களைக் காட்சிப்படுத்தும் மரபு

பத்துப்பாட்டில் விலங்குகள் மற்றும் பறவைகளை ஒரே மாதிரியான காட்சிக்கூறுகளோடு வருணனைப்படுத்தியுள்ளது போலவே தாவரங்களைப் பற்றியப் வருணனைகளும் கீழ்க்கண்ட தன்மையில் அமைவதனைக் காணமுடிகின்றது. பத்துப்பாட்டுத் தொகுப்பில் 150 வகையான தாவர வருணனைக் கூறுகள் இடம்பெற்றுள்ளபோதிலும் அவற்றைப் பகுப்பாய்விற்கு உட்படுத்தும்பொழுது கீழ்க்காணும் ஐந்து வருணனைக் கூறுகளோடு அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. அவை,

(அ) தாவரங்களை அதன் உறுப்புகளோடு (கிளைகளோடு) காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

விண்பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்

- குறி. 196.

தீயின் அன்ன ஒண்செங் காந்தள் - மலை. 145.

முள்தாட் தாமரை         - திரு. 73, குறி. 80.

(ஆ) ஒரு தாவரத்தை மற்றொரு தாவரத்தோடு; பிணைத்து - இணைத்துக் காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

பைங்கறி நிவந்த பலவின் நீழல்      - சிறு. 43.

புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூ 

பொன்போல் பீரமோடு புதல்புதல் மலர

- நெடு. 13 - 14.

முடக்காஞ்சி செம்மருதின்     

மடக்கண்ண மயில்ஆல    - பொரு. 189 - 190.

(இ) ஒரு தாவரத்தை அதன் வளரிடத்தோடு காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த

துறுநீர்க் கடம்பு - சிறு. 68 - 69.

நிலவுக் கானல் முழவுத் தாழை - மது. 114.

களர்வளர் ஈந்து      - பெரு. 130.

(ஈ) ஒரு தாவரத்தை அதன் பயன்பாட்டோடு கட்சிப்படுத்தல்.

 எடுத்துக்காட்டு :

தலைநாள் பூத்த பொன்இணர் வேங்கை

மலைமார் இடூஉம் ஏமப் பூசல்

- மலை. 305-306.

நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலம்

- மது. 493.

(உ) ஒரு தாவரத்தைப் பிற பொருளுக்கு உவமையாகக் காட்சிப்படுத்தல்.

எடுத்துக்காட்டு :

அரக்கு விரித்தன்ன பருஏர்அம் புழகு - குறி. 96.

வேய்புரை மென்தோள்         - குறி. 242.

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன    

வேய்கொள் அரிசி    - மலை. 434 - 435.

பொன்கொன்றை மணிக்காயா - பொரு. 201.

இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்

- பொரு.27.

இவ்வாறு, பத்துப்பாட்டில் இடம்பெறும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் பற்றிய காட்சிப்படுத்தல் மரபுகள், சங்க இலக்கியங்களின் பொதுவான வருணனை மரபுகளோடு ஒத்துள்ளன. இவை சங்ககாலப் புலவர்களின் கூர்ந்த உற்றுநோக்கல் மற்றும் இயற்கை அறிவினைப் பற்றிய புரிதலை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இவற்றோடு சங்கப் புலவர்களின் சிந்தனை ஒருங்கிணைவினையும் திணைக்கட்டமைப்பின் - முதற்;பொருள், கருப்பொருள், உரிப்பொருள் கட்டமைப்பின் சீர்மையினையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமையை அறியலாம்.

துணைசெய்த நூல்கள்:

1.பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.

2. பத்துப்பாட்டு மூலமும் பொ.வே.சோமசுந்தரனார் உரையும்.

3. பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் - முனைவர் ச.பொ.சீனிவாசன்.

4. பத்துப்பாட்டு - பொருளடைவு - முனைவர் ச.பொ.சீனிவாசன்.

- ச.பொ.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம் - 695034.

Pin It