இப்புவிமண்டலம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் கடந்துவிட்டது. உயிர்களின் தோற்றத்தின் பின்னணியில்உயிரணு கூட்டமைப்பு கண்டறிதலும், டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவமும், மார்க்கனின் சமுதாய வளர்ச்சி குறித்த ஆய்வும், ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது போன்ற கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மனித குல வளர்ச்சியின் அடிநாதமே உழைப்பு என்ற மகத்தான சக்தியாலே நிகழ்ந்தது என மனித குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைகாலத்தில் உழைப்பின் பாத்திரம் குறித்த ஏங்கெல்சின் படைப்பில் இருந்து குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் நுhல்கள் வரைமனித குல வரலாறு மற்றும் இயற்கை, சமுதாயம், சிந்தனை இவைகளை பற்றிய ஆய்வு குறித்த விஞ்ஞானம் அனைத்தின் அடிப்படையில் இந்த நுhல் எழுதப்பட முயற்சி செய்துள்ளார் ஆசிரியர் கோவை சதாசிவம்..

புவிவெப்பமயமாக்கல் குறித்து உலகம் முழுவதும் பெரும்பகுதி வளர்முக நாடுகள் கவலையோடு இதற்கான மாற்று நடவடிக்கைகளை உருவாக்கி வரக்கூடிய அதே நேரத்தில் இந்த புவிவெப்பமயமாக்கலுக்கு காரணமான முதல் பெரும் குற்றவாளி அமெரிக்காவாகும். ஆம்.. உலகின் மொத்த சுற்றுப்புறச் சூழலில் 20 சதத்திற்கும் மேலாக அமெரிக்கா கடந்த 200 ஆண்டுகளாக மாசுப்படுத்தி வருகிறது. 1970க்கு பின்னர் மிகவேகமான தொழில்வளர்ச்சி காரணமாக மின்சார தேவையை கருத்தில் கொண்டு 140 கோடி மக்களை கொண்ட சீன தேசம் பெரும் பகுதி நிலக்கரி மூலம் 70 சத ஆற்றலை உற்பத்தி செய்து வருவது தற்போது பசுமைக்கூட வாயுவை கூடுதலாக வெளிப்படுத்தி வருகிறது.

இயற்கை அன்னையின் நீரை, நிலத்தை, காற்றை, உயிரினங்களை பாழ்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக சாடுகிறது. அது நீலகிரி மாவட்ட தற்போதைய மழை பாதிப்பின் பின்னணியில் இருந்த பல்வேறு அம்சங்களை கணக்கில் எடுத்தால் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள வன அழிப்பின் கோரத்திற்கு பின்னால் உள்ள உலகமயம் கற்றுக்கொடுத்த லாபவெறியை அற்புதமாக எடுத்துரைக்கிறது. மலைகளின் மண்சரிவை பாதுகாத்து வந்த மரங்களை, வனங்களை அழித்து தேயிலை, காப்பித் தோட்டங்களும், கட்டிடங்களும் என உருவாக்கியது எப்படி பட்ட பாதிப்பை உருவாக்கியது என்பதை கண்கூடாக கண்டோம்.

இயற்கையின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்பாதை இடையூறு செய்யும் போது பல்வேறு மாறுபட்ட நிலைமைகளை உருவாக்குகிறது. யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பகுதிகள் அழிக்கப்பட பட அவைகளின் பயணங்கள் மாறி இரயில்வே டிரக்குகளில் அடிப்பட்ட சாகிறது. பாலக்காடு பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட யானைகள் ரயில் அடிப்பட்டு செத்துப்போனது. யானைகளின் கழிவுகள் கூட பெரும் பகுதியான பறவையினங்களுக்கு உணவாகவும், புதிய பகுதிகளில் தாவர இன உற்பத்திக்கும் பயன்பட்டு வந்தது. இந்த இயற்கை சுழற்சி மறுக்கப்படுகிறது. பறவைகள் சரணலாயம், அமைதிப்பள்ளதாக்குகள், வனங்கள், விலங்கினங்கள் அனைத்தும் பாதிப்பை சந்தித்துக் கொண்டு இருக்கின்றன.

புதிய தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரை, நிலத்தை, காற்றை மாசுப்படுத்துவதோடு மட்டுமல்ல மனித குலத்தின் ஆதாரமான உணவு உற்பத்தியையும் சேர்த்து பாதிக்கிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், கரூர் மாவட்ட தொழிற்சாலை சாய மற்றும் இதர கழிவுகளால் 40000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 ஆண்டுகள் ஆனாலும் பாழ்பட்ட நிலத்தை பண்படுத்த முடியாத அவலம் ஒரத்துபாளையம் பகுதியில் நிகழ்ந்துள்ளது.இது தென்னை மரத்தின் இளநீர் தண்ணீர் கூட நிறம் மாறும் அதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நதிகளில் எல்லாம் மணல் திருட்டு ஒரு பகுதி, கழிவுகளின் கலப்படம் மறுபகுதி என மாசுபடுத்தல் குறித்து எந்தவிதமான தடுப்பு ஏற்பாடும் இல்லாமல் அனைத்தையும் பார்வையாளராக இருந்து செயல்படுகிறது மத்திய மாநில அரசுகள்.

அதிகார வர்க்கத்தின் லஞ்ச லாவண்ய ஊழல்கள் சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டை மேலும் அதிகரிக்க செய்து கொண்டே இருக்கிறது. காடுகளின் ராஜாக்களாக இருந்த பழங்குடி மக்கள் இன்று ஒரு செண்ட் நிலம் கூட இல்லாமல் வனங்களை விட்டு விரட்டப்படும் நிலை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இப்படி சமூகம் சார்ந்து, இயற்கையின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையோடு உழைப்பை செலுத்தி அற்புதமான புகைப்படங்களோடு அழகிய வடிவில் உயிர்ப் புதையலை கோவை சதாசிவம் படைத்துள்ளார்.

நூல் அறிமுகம் : அரவிந்தன்

உயிர்ப் புதையல்

( காடும் காடுசார்ந்த உலகமும் )

ஆசிரியர் : கோவை சதாசிவம்.

வெளிச்சம் வெளியீடு,

விலை ரூ. 120/