பிரெஞ்சு மார்க்சியரான லூயி அல்த்தூசர், மார்க்சியம் ஒரு “நெருக்கடி”யினுள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற ஓர் எச்சரிக்கையை 1978ல் அறிவித்தார். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த எச்சரிக்கை கூடுதலான விளைவுகளைச் சந்தித்தது. மேற்கு நாடுகளில் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் வலதுசாரி சிந்தனையும் தாராளவாதச் சிந்தனையும் கூடுதலான அரசியல் ஆற்றல்களை ஈட்டின. நெருக்கடிகள் தீவிரமடைந்தன. வலதுசாரி சக்திகளின் நெருக்கடிகளை இடதுசாரிகள் சந்திக்க முன்வந்தன. “நெருக்கடி” என்ற சொல்லையும் நிகழ்வையும் மார்க்சியர்கள் எதிர்கொண்டனர்.

நெருக்கடி, விமர்சனம் (Crisis, Critique, Critical) போன்ற சொற்களை காண்டிய, ஹெகலிய பின்புலத்தைக் கொண்டு மார்க்சியர்கள் திறனுடன் அணுகினர். ஜெர்மானிய இயங்கியலுக்கு அணுக்கமான நிலைகளிலிருந்து விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. நெருக்கடி, விமர்சனம் போன்ற சொற்களை நேர்க்காட்சிவாத நோக்கில் அணுகுவதைத் தாண்டி, இயங்கியல் பார்வையில் அணுகும் போது, மார்க்சிய வெளிச்சத்தில் கூடுதல் பொருள் காண முடியும் என்ற தெளிவு பிறந்தது. இந்த விவாதங்களின் போது மார்க்சிய இயங்கியலும் அதன் கருத்தாக்கங்களும் விரிந்த பொருண்மைத் தளங்களை எட்டின என்பதையும் காணமுடிகிறது. இயக்கம், முரண்பாடுகள், வேறுபாடுகள், எதிர்வுகள், விமர்சனங்கள், மறுப்பு, இன்மை, போதாமை போன்ற பல சொல்லாடல்கள் விரிந்த எல்லைகளை எட்டி நடைபோட்டன.

iyangiyalum varalaarumஜெர்மனியில் ஃபிராங்ஃபர்ட் மார்க்சியர்கள் போன்றோர் “விமர்சனக் கோட்பாடு” (Critical Theory) என்பது போன்ற புதிய சிந்தனைப் போக்குகளை நிறுவினர். விமர்சனம் என்ற கருத்தாக்கம் ஒரு விரிந்த கோட்பாடாகத் துலக்கம் பெற்றது. விமர்சனம் எனில் இயங்கியல் என்ற அளவிற்கு அச்சொல் புதிய விவாதங்களை, அவற்றில் சாதக பாதகமான பல போக்குகள் உள்ளடங்கி நின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் செல்வோம்.

மேற்குறித்த விவாதங்களில் இடதுசாரிகளுக்கு ஆதாயமான ஒரு நிகழ்வுப்போக்காக “இயங்கியலைத் தீவிரப்படுத்தல்” (Radicalising Dialectics) எனும் சம்பவத்தைக் குறிப்பிட வேண்டும். இயங்கியலைத் தீவிரப்படுத்தல் என்பது விரைவில் மார்க்சியத்தை தீவிரப்படுத்தல், மார்க்சியத்தை மீட்டெடுத்தல் (Emancipating Marxism) என்ற புள்ளிகளை நோக்கி நகர்ந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுச் செல்வோமாக. அதாவது இயங்கியலைத் தீவிரப் படுத்தலின் மூலமாக மார்க்சியம் தீவிரப்படுத்தப் பட்டது என்ற நிகழ்வைச் சந்திக்கிறோம்.

மார்க்சியத்தைத் தீவிரப்படுத்தல் கீழிருந்து மேலாக நிகழுகிறது என்பது முக்கியமானது. அடித்தள மக்களிலிருந்து மேற்தளங்களை நெருங்கலாம். வெகுமக்கள்தான் வரலாற்று நாயகர்கள் என்பதே மார்க்சியத்தின் கணிப்பு. வெகுமக்கள் திரட்சி என்பதே வர்க்கப் போராட்டங்களின் முகப்பு. வர்க்கப் போராட்டங்களைப் பரவலாக்குதலும் தீவிரப்படுத்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ரோசா லக்சம்பர்க், லெனின் போன்றோரின் புரட்சிக்கான வெகுமக்கள் திரட்சி இங்கு வலியுறுத்தப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தத்துவ நிகழ்வே இக்கட்டுரையில் Open Marxism என்று குறிக்கப்படுகிறது.

“திறந்த மார்க்சியம்” என்பது, சமீப காலங்களில் பேசப்பட்டு வந்த “பின்னை மார்க்சியம்” என்பதற்கு மாற்றாகவும் முன்வைக்கப்பட்டது. சில முன்னெடுப்புகளுக்குப் பிறகு, பின்னை மார்க்சியம் பின்வாங்கிக் கொண்டது. அரேபிய வசந்தம், லத்தீன் அமெரிக்க அசைவுகள், கீழை நாடுகளின் “சிறு” எழுச்சிகள், “நாங்கள் 90 சதவீதத்தினர்” போன்ற போராட்டக் குரல்கள் திறந்த மார்க்சியத்துடன் துணை சேர்ந்துகொண்டன. இடதுசாரி வெகுமக்களியம் (Left Populism) பரவலான மக்கள் போராட்டங்களின் அறியப்பட்ட வடிவங்களாக மாற்றம் பெற்று வருகின்றன.

திறந்த மார்க்சியம் என்ற சொல்லுக்கு இணைச் சொல்லாக “இயக்கவியலும் வரலாறும்” என்ற சொற்கள் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன. இயக்கவியலும் வரலாறும் என்ற சொற்கள் மார்க்சியத்தைப் பொறுத்தமட்டில் மிகவும் விரிவானவை, வலுவானவை. மார்க்சிய சொல்லாடல்களில் எங்கு நோக்கினும் மார்க்சியத்தைத் தெளிவு படுத்துவதற்கு இச்சொற்கள் பயன்பட்டு வந்திருக்கின்றன. வரலாறு என்பதை எதார்த்த ஆதாரமாகக் கொண்டே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கருத்தாக்கம் விளக்கப்படுகிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டுப் பிரத்தியட்சத்தை ஆதாரமாகக் கொண்டே மனிதகுல வரலாறு தெளிவு படுத்தப்படுகிறது. வரலாறு, வரலாற்றுப் பொருள் முதல்வாதம் ஆகியன இயக்கவியல் எனும் மற்றொரு தத்துவக் கோட்பாட்டை மையமாகக் கொண்டே மார்க்சியத்தைக் காத்து நிற்கிறது.

காண்டியமும் ஹெகலியமும் மார்க்சியத்திற்கு மெய்யியல் அடர்த்தி கொண்ட பின்புலத்தை வழங்கின. அவை ஜெர்மானிய மரபில் விளைந்தவை. இன்னொரு புறம் அவை மார்க்சியத்திற்குப் பலமான சவாலாகவும் விளங்கின. இப்போதைய திறந்த மார்க்சியத்திற்கும் அதேபோன்ற சூழல்கள் உருவாகியுள்ளன. ஜெர்மனியைப் பொறுத்தமட்டில், காண்டியம் இளமையும் ஆற்றலும் கொண்டது. ஹெகலியம் முதிர்ச்சியும் விரிவும் கொண்டது. காண்டியம் அறிவையும் அறிவொளி இயக்கத்தையும் ஆதரித்தது. கொண்டாடியது. இருப்பினும் அறம், விழுமியங்கள், நேர்க்காட்சிவாதம், கடந்த நிலை மெய்யியல் ஆகியவற்றைத் தூய நிலையில் பாராட்டியது. காண்டின் அறம் பகுத்தறிவு, மனிதநேயம் ஆகியவற்றை அரவணைக்கிறது. இயற்கை விதிகளை ஆதரிக்கிறது.

ஹெகலின் இயங்கியலையும் தர்க்கவியலையும் மார்க்சியம் உள்வாங்கிக் கொண்டது. இயங்கியலின் இன்னொரு வடிவமாக வரலாற்றை அது ஏற்றுக் கொண்டது. இயற்கை, இயற்கையின் வரலாறு, இயற்கையின் இயல்பான செழுமையின் தொடர்ச்சியாகவும் மார்க்சியம் மனிதகுல முன்வரலாற்றைக் கொள்கிறது. இயற்கையின் இயங்கியலாக புவியியல், வானவியல், இயற்பியல், உயிரியல், அதன் பின்னர் மனிதவியல் ஆகியவற்றை வரிசைப் படுத்துகிறது. இயற்கையின் இயங்கியலின் தொடர்ச்சியாக மனிதகுல வரலாறு தோற்றமெடுக்குகிறது. இயற்கையின் வரலாறாக மனிதகுல வரலாறு தோற்றம் பெறுகிறது. பகுத்தறிவு, இயற்பியல், இயங்கியல், வரலாறு ஆகியவற்றின் சிக்கலான கட்டமைப்பாக மார்க்சிய கருத்தாக்கமான “இயங்கியலும் வரலாறும்” என்ற கருத்தாக்கம் ஒரு மாபெரும் பிரச்சினையாக உருப்பெறுகிறது.

இந்த நூலில் மார்க்சியத்தின் மீள்வருகை வரலாறு, அரசியல் பொருளாதாரம், வர்க்கப் போராட்டம், புரட்சியின் வியூகங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்ட இயங்கியல் தளத்தில் சந்தித்துக் கொள்கின்றன. இந்நூலின் ஆகப்பெரிய வலிமையாக இது அமைந்திருக்கலாம். சமூக நெருக்கடிகளைத் தாண்டி, இயற்கைச் சூழல், மானுடவியல் சார்ந்த அறவியல், பேரிடர் அழிவுகள் போன்றவையும் நெருக்கடியான இயங்கியலினுள் இடம் பெருகின்றன.

திறந்த மார்க்சியம் என்ற சொல் மார்க்சியத்தைச் செழுமையடைந்த ஒரு சூழல்களுக்குள் இட்டுச் செல்கிறது. உலக அளவில் மார்க்சியம் தனது முகாம்களைப் புதுப்பித்துக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறது. “திறந்த மார்க்சியம்: இயங்கியலும் வரலாறும்” எனும் இந்நூல் சோசலிச மற்றும் சனநாயகப் புரட்சிகளின் பரப்புகளை விரிவாக்கிக் காட்டுகின்றன.

(விரைவில் என்சிபிஎச் வெளியீடாக வெளிவர உள்ள ‘திறந்த மார்க்சியம் இயங்கியலும் வரலாறும்' நூலுக்கான பதிப்புரை)

- ந.முத்துமோகன்

Pin It