இது ஒற்றைப்படையானது அல்ல

தமிழ் அடையாள அரசியல் என்பது ஒற்றைப்படையான, ஒருபடித்தான கருத்தாக்கம் அல்ல. அதனுள் பல்வேறுபட்ட போக்குகள் புதைந்தும் வெளிப்பட்டும் கிடக்கின்றன. அதனுள் பல சமூக வர்க்கங்கள், சாதிகள் ஆகியவற்றின் நலன்களும் மதங்கள் மற்றும் மொழிவழிக் கருத்தியல்களும் திணிந்து கிடக்கின்றன. ஆதிக்க அரசியலும் விடுதலை அரசியலும் குமைந்து கிடக்கின்றன. இக்கருத்தாக்கத்தினுள் ஆழ்ந்து கிடக்கும் உட்போக்குகளைக் கால நேர்க்கோட்டில் முதலில் வரிசைப்படுத்திக் கொள்வோம்.

ஆறுமுக நாவலர் ஈழப்பின்னணியில் தொடங்கிய ஆகமச் சைவ மீட்டுருவாக்கம், கால்ட்வெல்லின் திராவிட மொழிகள் குறித்த ஒப்பாய்வு நூல், பண்டைத் தமிழ் நூல்கள் அச்சேற்றம் - பரவல், இலக்கிய வழி வரலாற்று வரைவியல், வைகுண்ட சாமி, வள்ளலார் போன்றோரின் சிந்தனைகள், அயோத்திதாச பண்டிதரின் பூர்வ பௌத்தம், நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் இயக்கம், பெரியாரின் வரவும் சுயமரியாதைச் சிந்தனையும், சிங்கார வேலர், ஜீவா பங்கேற்ற சுயமரியாதைச் சமதர்மம் என்ற இடையீடு, சைவ சித்தாந்த மீட்டுருவாக்கமும் தகவமைப்பும், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், அண்ணா முதலானோரின் வருகையும் தமிழ் மொழி-இலக்கியம் சார்ந்த அரசியலும், நாடகங்கள்-திரைப்படங்கள்-மேடைப் பேச்சு சார்ந்த வெகுசன ஊடக அரசியல், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் தோற்றம், திமுக அரசியல் அதிகாரத்தை ஈட்டிய நிகழ்வு, ஈழத்தில் தமிழர் போராட்டங்கள், அதிமுக, மதிமுக, பெரியார் திராவிட கழகம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி போன்றவை, ஈழத்தில் இப்போதைய இனப்படுகொலை என நீண்ட நெடிய வரலாற்று வரிசையினை இத்தலைப்பின் கீழ் அடுக்கலாம்.

இத்தனை இயக்கங்களும் கருத்தியல்களும் ஒன்றுக் கொன்று இயைந்தவை அல்ல என்று எளிதில் சொல்லிவிடலாம்; இன்னும் கூடுதலாக, அவற்றுக்கிடையில் தீவிர முரண்களும் உண்டு என்பதை முதலில் பதிவு செய்து கொள்ளுவோம். தொடர்ச்சியும் தொடர்ச்சியின்மையும் கொண்ட போக்குகள் இவை எனலாம். மேற்குறித்த போக்கு களில் சில தமிழ் அடையாள அரசியலை மேட்டுக் குடி சார்ந்ததாக உருவாக்க முயன்று இன்னும் சில அதனை அடித்தள மக்களை நோக்கி இட்டு வந்திருக்கின்றன. இக்கட்டுரையில் தமிழ் அடையாள அரசியலை அதன் உள்ளீடாகத் தொழில்பட்ட எதிரெதிர் போக்குகளாகப் பகுத்து அவற்றிற் கிடையிலான உறவுகளைக் கண்டறிவதற்கு முயற்சி செய்கிறோம். ஒற்றையாகத் தோற்றமளிக்கும் ஒரு சமூக நிகழ்வை இரண்டாகப் பகுத்து அவ்விரண்டு பக்கங்களுக்கிடையிலான உறவுகளைப் பயிலுவதே இயங்கியல் என்று லெனின் வரையறுப்பார். அத்தகைய ஒரு முறையியலையே இங்குப் பயன்படுத்துகிறோம்.

இது ஒருவகைப் பண்பாட்டு அரசியல்

மேலே நாம் வரிசைப்படுத்திய இயக்கங்களும் போக்குகளும் ஒருவகைப் பண்பாட்டு அரசியலை முன்னிலைப்படுத்தியுள்ளன என்பதைக் கண்டு கொள்வதில் சிரமம் இல்லை எனக் கருதுகிறேன். சாதி, சமயம், மொழி, இனம் போன்ற அடையாளங்களின் வழிப்பட்டவையாக இவை உள்ளன. எனவேதான் இவற்றை அடையாள அரசியல் இயக்கங்கள் என்கிறோம். இவற்றில் சாதி என்னும் அடையாளம் அதிக அடிப்படைத்தன்மை கொண்டது என வாதிடவும் இடமுண்டு.

பண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் போன்ற சொல்லாடல்கள் தமிழ்ச் சூழல்களுக்கு அந்தோனியோ கிராம்சி மற்றும் பின்னை நவீனத்துவச் சிந்தனையாளர்களின் வழியாக வந்து சேர்ந்தன. ஆயின் இப்புதிய சிந்தனைகளுக்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே பண்பாட்டு அரசியலும் அடையாள அரசியலும் நமக்கு நன்றாகவே பரிச்சயமாகியிருக்கின்றன எனச் சொல்லவேண்டியுள்ளது. இந்த வகையில் பண்பாட்டு அரசியல் தமிழில் மூத்தது. (சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கு மொழி, இலக்கணம், இலக்கியம், அறம் சமயம், சாதி சார்ந்த ஒரு பண்பாட்டு அரசியல் உண்டு எனவும் நிறுவலாம்.) 1848-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான அதே ஆண்டில் இங்கு யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ஒரு சைவ வித்யா சாலையை நிறுவினார் என்பதைக் காண்கிறோம். 1856-இல் வெளியான கால்ட்வெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் சமஸ்கிருத/தமிழ் மொழிவழி அரசியலைத் தொடங்கி வைத்தது என அறிகிறோம். அன்றிலிருந்து தொடர்ச்சியாகத் தமிழ் அடையாள அரசியல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு இடையீடின்றி நடந்து வந்துள்ளது. எனில் இவ்வகைச் சிந்தனை சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலானது எனக் கூறலாம்.

சிறிது உற்றுக் கவனித்தால், பண்பாட்டு அரசியல் தமிழ்நாட்டில் மட்டும்தான் செல்வாக்கு பெற்றிருந்தது என்று சொல்வதற்கில்லை. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இன்னும் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் நவீன காலத்தில் இத்தகைய அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் வடிவமாக இது இருந்து வருகிறது. மிகப் பழைய சமூகங்கள் வழக்கில் உள்ள உலக நாடுகள் எங்கும் மரபு சார்ந்த சமூகக் குழுக்களை முன்னிலைப்படுத்தி இவ்வகை அரசியல் எளிதில் வேர்கொண்டிருக்கிறது.

தமிழில் பண்பாட்டு அரசியல் நவீன காலத்தில், காலனியச் சூழல்களில் தொடங்கியது என்பதை நாம் அறிவோம். காலனியச் சூழல் ஆங்கிலக் கல்வி, கிறித்தவ மதப் பரவல் போன்றவை அன்றிருந்த தமிழ்ச் சூழல்களில் ஓர் அடிப்படையான பண்பாட்டு மடைமாற்றத்தை (Cultural reorientation) ஏற்படுத்தின எனலாம். அவை தமிழ்ச் சூழல்களில் ஒரு பெரும் தாக்கத்தையும் அதற்கான எதிர்வினைகளையும் தூண்டின. காலனியம் அறிமுகப்படுத்திய மாற்றங்களைத் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு சமூக சக்திகள் பல்வேறு விதமாக எதிர்கொண்டன. சமூக அமைப்பு, சாதி, மதம், பண்பாடு, மனித உரிமைகள், மனித மதிப்பு, சமூக நீதி குறித்த தீர்க்கமான பல புதிய அக்கறைகளையும் கேள்வி களையும் காலனியச் சூழல்கள் முன்வைத்தன. காலனியத்தின் அதிகார அமைப்பில் பல்வேறு சமூக சக்திகள் பெற்றிருந்த வாய்ப்புகள், பூர்வீக சமூக அமைப்பில் அவை பெற்றிருந்த இடங்களைப் புதிய சூழல்களில் தக்கவைத்தல் அல்லது மேம்படுத்திக்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகள் இக்காலத்தில் முனைப்பாக முன்னுக்கு வந்தன.

பழங்காலச் சமூகங்கள் (காலனியச் சூழல்களில்) நவீனப்படும் ஒரு பிரத்தியேக வடிவமாகப் பண்பாட்டு அரசியல் மற்றும் அடையாள அரசியல் தொழில்படுவதாகத் தோன்றுகிறது. பழங்காலச் சமூகங்கள் ஒற்றை நேர்க்கோட்டில் நவீனமயமாக்கத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு தம்மைப் புதுப்பித்துக் கொள்வதில்லை. மாறாக, அச்சமூகங்கள் நவீனமயமாக்கம், மரபு மயமாக்கம் என்ற எதிரெதிரான இரண்டு போக்குகளுக்கிடையில் தம்மை மாற்றத்திற்கு உள்ளாக்கிக் கொண்டன. இந்த எதிரெதிர் போக்குகளின் ஒட்டுமொத்த விளைவாகவே அந்நாடுகளில் நவீனமயமாக்கம் நிகழுகிறது.

இச்சமூகங்களில் நிகழும் மரபு குறித்த சொல்லாடல்களைக் கொண்டு இவை வரலாற்று வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கின்றன என முடிவு செய்துவிடக்கூடாது. மாறாக, மரபார்ந்த அமைப்புகளோடு உறவாடி அவற்றைத் தகவமைத்து முன்னோக்கிச் செல்வதற்கான முயற்சிகளே அவை. இவ்வகை நவீனமயமாக்கம் ஐரோப்பிய நவீன மயமாக்கத்திலிருந்து வேறுபட்டதாக அமையும் (Alternative modernity) என்றும் யூகிக்கலாம். நவீன மயமாக்கம் என்பதை முதலாளியப் பரவல் கொண்டது எனக் கொண்டால், ஒரு பழங்காலச் சமூகம் முதலாளியத்தை ஏற்பதில் தயக்கங்கள் காட்டி மாற்று முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று கொள்ளலாம்.

அடையாள அரசியல் அகவயமானதா, புறவயமானதா?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சாதி, மதம், மொழி ஆகிய அடையாளங்களின் வழி தமது காலனிய ஆட்சியை நிலைப்படுத்திக்கொள்வதற்காக இந்தியர் களைப் பிளவு படுத்தினார்கள், எனவே அடையாள இயக்கங்களுக்குச் சமூக அடிப்படை கிடையாது என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தேசியம் என்பது ஒரு கற்பிதக் குழு (Imagined Community) என்ற பெனடிக்ட் ஆன்றர்சனின் கருத்தாக்கத்தைப் பின்பற்றி அடையாளங்களும் கற்பிதமானவையே என வாதிடுவோரும் உண்டு. இந்நிலையில்தான் அடையாளங்கள் அகவயமானவையா, புறவய மானவையா? என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.

ஆட்சியாளர்கள் பிரித்தாண்டார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆயின் ஏற்கெனவே நமது சமூக வரலாற்றில் இருந்த சமூகப் பிரிவுகளே ஆட்சியாளர்களுக்குப் பயன்பட்டன என்பதைச் சொல்லியாகவேண்டும். ஆசிய உற்பத்திமுறையின் பண்பாக, ஒரு தனி மனிதர் இவ்வகைச் சமூகத்தில் அவர் சார்ந்துள்ள குழுவின் வழியாகவே கணக்கில் கொள்ளப்படுகிறார் என்று மார்க்ஸ் குறிப்பிடு வதை இங்கு நினைவில் கொள்வோம். இதுவே அடையாளத்தின் வரையறை. ஆசிய உற்பத்தி முறையின் ஒரு பண்பாக அடையாள உருவாக்கங்களை மார்க்ஸ் எதிர்நோக்கியுள்ளார். நவீன மயமாக்கச் சூழல்களில், பழங்காலச் சமூகங்களில் வர்க்க உருவாக்கங்களை முந்திக்கொண்டு அடையாள உருவாக்கங்கள் நிகழும் என மார்க்ஸ் எதிர் பார்த்துள்ளார்.

எனவே அடையாளம் என்பது புறவயமானதாகவும் அகவயமானதாகவும், இயங்கியல் பண்பு கொண்டதாக விளங்குகிறது. ஏற்கெனவே சமூகத் தளத்தில் உள்ளடங்கித் தொழில்பட்ட அடுக்குகள் குறிப்பிட்ட ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் தம்மை எடுத்துரைக்கத் (Articulation) தொடங்குகின்றன. குறிப்பிட்ட அந்த வரலாற்றுச் சந்தர்ப்பமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் அமைந்தது. காலனிய முதலாளியம் ஏற்படுத்திக் கொடுத்த பொது அரசியல் வெளி (Public space) சமூக சக்திகளின் எடுத்துரைப்புக்கு இட்டுச் சென்றன. மரபுரீதியான கூட்டு அடையாள வடிவங்கள் தமது பூர்வீக வேர்களை மீட்டுக் கொணர்ந்து நவீன சமூகத்தின் சனநாயக மற்றும் விடுதலை அரசியல் வடிவங்களை ஏற்கின்றன.

அடையாள உருவாக்கங்களில் நிலவுடைமை அல்லது முதலாளியப் பண்பு இல்லை என அறுதியிட்டுக் கூறமுடியாது. தேசியம் என்ற அடையாளத்தை உருவாக்கியதில் முதலாளியத்திற்கு முக்கிய பங்கிருந்தது அல்லவா! இருப்பினும் அயர்லாந்தின், போலந்தின் விடுதலையை மார்க்ஸ் ஆதரித்தார். தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை லெனின் வரையறுத்தார். அடையாள அரசியலில் செய லூக்கமாகப் பங்கேற்பதன் வழியாகவே மக்களின் சனநாயக மற்றும் விடுதலை மனோபாவங்களைச் சோசலிச மாற்றங்களை நோக்கி இட்டுச் செல்ல முடியும். அடையாள இயக்கங்களைப் பழமைச் சக்திகள் தாம் முன்னெடுத்துச் செல்லுகின்றன என்ற சுருக்கமான நிலைப்பாடு மக்களிடமிருந்து சோசலிச சக்திகளை அந்நியப்படுத்திவிடும். நில வுடைமைக் காலத்திய ஆதிக்கங்களைத் தக்கவைக்க அடையாள இயக்கங்கள் உருவாவதுண்டு என்பது உண்மைதான்.

இதற்கு எடுத்துக்காட்டுக்கள் ஆரிய சமாஜம், இந்து மகாசபை போன்றவை. சிங்களப் பெரும்பான்மை அதன் அடையாள அரசியலைப் பாசிசப் பண்புகளோடு வெளிப்படுத்தி வருவதையும் அறிவோம். அடையாள இயக்கங்களினுள் நிலவுடைமை, முதலாளிய மற்றும் சோசலிச சக்திகள் தொழில்பட முடியும். எனவே அடையாள இயக்கங்களை அவற்றின் சமூக சந்தர்ப்பங்கள், வேலைத் திட்டங்கள் சார்ந்த அர்த்தப்படுத்தலோடு அணுக வேண்டும்.

பண்பாட்டு அரசியலை ஏற்பதற்கு எது தடையாக உள்ளது?

கம்யூனிஸ்டுகளைப் பொருத்தஅளவில், பண்பாட்டு அரசியலை ஏற்பதற்கு எது தடையாக உள்ளது என்ற மற்றொரு கேள்வியையும் கேட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. அறியப்பட்ட மார்க்சியத்தின் வர்க்க அணுகுமுறை அல்லது பொருளாதார அணுகுமுறையை ஒற்றைப்படையாக, ஒரு சாராம்சக் கோட்பாடாகப் பயன்படுத்தும்போது அது பண் பாட்டு அரசியல், அடையாள அரசியல் ஆகிய வற்றை அங்கீகரிப்பதைத் தடுக்கிறது. சாராம்சவாதம் (Essentialism) என்றால் என்ன? எல்லாவித சமூக முரண்பாடுகளையும் வர்க்க முரண்பாடு அல்லது பொருளாதார முரண்பாடு என்ற ஒற்றைச் சாராம்சமாகக் குறைத்துப் புரிந்து கொள்ளலாம் என்று கருதுதலே சாராம்சவாதம் ஆகும். எல்லாச் சமூக முரண்பாடுகளுமே வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடுகளே என்று கூறுவது சாராம்ச வாதம்.

ஹெகல் என்ற பிரும்மாண்டமான ஜெர்மன் தத்துவ அறிஞர் உலக நிகழ்வுகள் அனைத்தும் பிரபஞ்ச ஆன்மா என்ற ஒன்றின் வெளிப்பாடுகளே என்று கூறினார். இவரது தத்துவம் கருத்துமுதல் வாதம் என அழைக்கப்படுகிறது. மார்க்ஸ் ஹெகலின் மாணவர். ஆயின் அவர் ஹெகலின் தத்துவத்தைத் தலைகீழாக்கினார். மார்க்சிய பொருள்முதல் வாதம் பிறந்தது. அதாவது, உலகின் பொருள் தன்மை கொண்ட அடிப்படையிலிருந்தே ஆன்மிகச் சிந்தனைகள் தோன்றுகின்றன என மேற்குறித்த தலைகீழ்ப்படுத்தலைப் புரிந்துகொள்ளலாம். ஆயின் அல்த்தூசர் என்ற பிரெஞ்சு மார்க்சியர் இந்த விளக்கத்தை ஏற்பதில்லை.

ஹெகல் எல்லாமே பிரபஞ்ச ஆன்மாவின் வெளிப்பாடுகள் என்றார், மார்க்சியர் சிலர் எல்லாமே பொருளின் வெளிப்பாடுகள் என்றனர், என்ற புரிதலில் இரண்டுமே சாராம்சவாதங்கள் என்கிறார் அல்த்தூசர். இந்த இரண்டுமே ஹெகலியத் தத்துவங்கள்தாம் என்கிறார். எதுவாக இருந்தாலும், ஒன்றை மற்றொன்றின் சாராம்சமாகச் சொல்லுவதே கருத்து முதல்வாதம் என்கிறார் அவர். ஒன்றின் பிரத்தியட்சத் தன்மையை, ஒன்றின் சமூகச் செயல்பாட்டுத் தன்மையைக் குறைத்து, ஒன்றின் சமூக எதார்த்தத்தைக் குறைத்து அதனை மற்றொன்றின் நிழலாக மாற்றும்போது சாராம்சவாதம் தோன்றுகிறது.

இதுதான் கருத்து முதல்வாதம் என்கிறார் அல்த்தூசர். பச்சைப் பசுமரம் ஒன்றை வெட்டி அதன் இலை, கிளைகளை அகற்றி, பலகைகளாக அறுத்து வார்னிஷ் பூசி அதையே மரம் எனக் காட்டுவது கருத்து முதல் வாதம். பச்சைப் பசுமரத்தின் வாழும் எதார்த்தத்தை இங்கு இழந்துவிடுகிறோம். உண்மையில் மார்க்சின் முறையியல் சமூக நிகழ்வு களை அவற்றின் முழு எதார்த்தத்தோடு, ஒன்றை மற்றொன்றாகக் குறைக்காமல், மற்றதன் வெளிப் பாடாகக் கொள்ளாமல், பிரத்தியட்சமாக அணுகு வது என்று அல்த்தூசர் விளக்க மளிக்கிறார். இந்த அர்த்தத்தில் சமூக வாழ்வை அதன் எல்லாச் சிக்கல்களோடும் பலவகை (பொருளாதார, அரசியல், பண்பாட்டு) அமைப்புகளின் கூட்டுச் செயல்பாடாகக் கருதுவதே மார்க்சியம் என்று அல்த்தூசர் விளக்குவார். சிக்கலான சமூக நிகழ்வு களைப் பொருளாதாரம் என்ற ஒற்றைப்படுத்தலுக்கு ஆட்படுத்தும் போதே அது அடையாள அரசியலைப் புரிந்துகொள்ளவிடாமல் நம்மைத் தடுக்கிறது.

தமிழ் அடையாள அரசியலின் சில முடிச்சுகள் /முரண்கள்

நாவலர்: சிக்கல்களின் தொடக்கம்

தமிழ் அடையாள அரசியலின் மிகப் பெரிய சிக்கல் ஆறுமுக நாவலரிடமிருந்தே தொடங்குகிறது. அது சைவ சமயம், வேளாளர் தலைமை ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது. நாவலர் கிறித்தவ மதமாற்றங்களுக்கு எதிர்வினையாக சைவ மீட்டுருவாக்கத்தில் ஈடுபட்டார். கிறித்தவ சமயம் போன்ற நிறுவனத் தன்மை கொண்டதாக அவர் சைவ சமயத்தை உருவாக்க விழைந்தார். கிறித்தவ ஓரிறைக் கொள்கை, கிறித்தவச் சமயப் பிரசார முறைகள், கிறித்தவ சமய மற்றும் சமூக நெறி முறைகள் ஆகியவற்றை முன்வடிவாகக் கொண்டு அவர் சைவத்தை வடிவமைக்க முயன்றார்.

இம் முயற்சியில் அவர் யாழ்ப்பாண சைவத்தின் வெகுசன வடிவங்களை அப்புறப்படுத்தினார். யாழ்ப்பாணக் கோவில்களிலிருந்து கண்ணகி வழிபாட்டை அகற்றினார். சைவக் கோயில்களில் உயிர்ப்பலியிட்டு வழிபாடுகளில் ஈடுபட்ட சாதாரண மக்களை வெளியேற்ற வேண்டும் என முனைந்து செயல்பட்டார். வேளாளச் சாதிக்கு முன்னுரிமை வழங்குவனவாக சைவக் கோயில்களை மாற்றினார். காலனிய அதிகாரப் பரிமாற்றச் சூழல்களில் யாழ்ப்பாணச் சமூகத்தின் முன்னுரிமையுள்ள குடிமக்களாக அவர் வேளாளர்களை முன்னிறுத்தினார். அவர் உருவாக்கிய சைவ வித்யா சாலைகள் தமிழ்க் கல்வி வழங்கியதோடு, ஆங்கிலக்கல்விவழிப்பட்ட வாழ்வாதாரத் தேவை களையும் நிறைவேற்றின. தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசுப் பணிகள் என்ற தொடர்ச்சி கொண்ட முக்கியமான வட்டாரம் அது.

சைவ சமய மீட்டுருவாக்கம் என்னும்போது மரபார்ந்த யாழ்ப்பாண நிலவுடைமைச் சாதிகளின் நலன்களையும், கல்வி-வேலைவாய்ப்பு என்னும்போது காலனியத்துடன் தகவமைத்துக்கொள்ளும் புதிய நடுத்தர வர்க்கத்தின் நலன்களையும் நாவலரின் வேலைத்திட்டம் ஒன்றிணையக் கொண்டுள்ளதைக் காணவேண்டும். நாவலரில் காணப்படும் “மரபார்ந்த”நிலவுடைமைச் சாதிகள்/புதிய நடுத்தர வர்க்கம்”என்ற சேர்க்கை (சைவமும் கல்வியும் என்ற சேர்க்கை) மிகுந்த கவனத்திற்குரியது. காலனியச் சூழலில் புதிதாக உருவாகும் சமூக வர்க்கத்தை மரபுடன் இணைக்கும் (Transitional Class and Transitional) வேலைத்திட்டம் இங்குத் தொழில்படுகிறது.

வள்ளலார்: அடையாள விரிவாக்கம்

நாவலர் ஆகமச் சைவம், வேளாளர், சைவ மடங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டார். ஆயின் தமிழ் நாட்டில் இதே காலத்தில் ஆகமச் சைவம், சைவ மடங்கள் ஆகியவற்றின்பால் அதிருப்தி கொண்ட ஒரு சிந்தனையாளர் உருவாகியிருந்தார். அவர்தான் வள்ளலார் ராமலிங்கர். வள்ளலாரின் சமயப் பார்வை சமரச சன்மார்க்கம் எனப்படுகிறது. நாவலர் போல் ஆகமச் சைவம் எனத் தனது அடையாளப் பரப்பைக் குறைத்துக் கொள்ளாமல். அப்பரப்பை விரிவாக்கும் பண்பு கொண்டது சமரச சன்மார்க்கம் என்னும் பாதை. நாவலர் ஒரு சைவ சமய நிறுவனவாதி. வள்ளலாரோ தத்துவ விசாலம் கொண்ட சிந்தனையாளர். அவர் சைவ சித்தாந்தத்தின் பதி-பசு-பாசம் என்ற தத்துவப் பரப்பை மிக அடிப்படையாகத் தாண்டிச் செல்ல முற்பட்டார்.

உயிரின் முதன்மைப் பண்பு கருணை, இறைவனின் முதன்மைப் பண்பு பெருங்கருணை (அருள்) என்று ஒத்த தன்மை கொண்ட இரண்டு கருத்தாக்கங்களின் வழியாக ராமலிங்கர் தத்துவம் செய்தார். இரண்டுமே கருணையின் வடிவங்கள் தாம் என்ற அளவில் ஓர் ஒருமைவாதம் (Monism) ராமலிங்கரிடம் உருவாகிறது என்பது கவனிக்கத்தக்கது. ராமலிங்கரின் எழுத்துக்களில் வேளாளர் தலைமை பற்றி எதுவும் கூறப்படுவதில்லை. பசி, கருணை போன்ற கருத்தாக்கங்களின் வழியாக வள்ளலாரின் சமயப் பரப்பு மிக விரிந்து சென்றது. வள்ளலாரின் சிந்தனையில் நடைபெறும் அடையாள விரிவாக்கம் (Expansion of Identity) என்ற நிகழ்வை இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, ஆகமச் சைவம் என்ற கருத்தியல் எல்லையையும் சைவ மடங்கள் என்ற நிறுவன எல்லையையும் ராமலிங்கர் மிக லாகவமாகக் கடந்து செல்கிறார்.

காலனியச் சூழலில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் அடையாள விரிவாக்கம் என்ற ஒன்றைக் கோரின என்பது குறிப்பிடத்தக்கது. மரபு ரீதியான சாதி, மதம் போன்ற எல்லைகளைக் கடந்த விரிவாக்கங்களை அக்காலம் கோரியது. சன்மார்க்கம் என்பது அத்தகைய விரிவாக்கத் தன்மை கொண்டது. விரிவடையும் அடையாளத்தில் பசி என்னும் சாதாரண மனிதரின் அடிப்படைப் பிரச்சினை உள்ளுக்குள் வருவது ஓர் அற்புதமான நிகழ்வாகும். பசிக்குச் சமமாக, அதனை எதிர் கொள்ள கருணை முன்வைக்கப்படுகிறது. பசியும் கருணையும் பொது மானுடப் பண்பு கொண்டவை. தமிழகத்தின் தென்பகுதியில் தோன்றியவை குண்டரின் இயக்கத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளும் சுய மரியாதையும் முன்னுக்குக் கொண்டு வரப்படுகின்றன. சைவம் என்ற குறுகிய மேட்டுக்குடிப் பார்வையை இவை கேள்விக்குள்ளாக்கக் கூடியவை.

நாவலர்/வள்ளலார் சந்திப்பில் நவீனகால தமிழ் அடையாள உருவாக்கத்தின் இரு சார்பு நிலைகள் தொழில் படுகின்றன. நாவலர் தமிழ் அடையாளத்தை முந்தியகாலச் சாதி அளவு கோல்களைக் கொண்டு மிகவும் குறுகலாக்குகிறார். வள்ளலாரோ தமிழ் மரபில் அதுவரையில் இல்லாத ஒரு நவீன பண்பின் அடிப்படையில் அதனை விரிவடையச் செய்கிறார். அடையாளம் குறித்த இரண்டு அணுகுமுறைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தோற்றம் பெற்றுவிட்டன.

மத அரசியலிலிருந்து மொழி அரசியலுக்கு

கால்ட்வெல் 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூல் விஞ்ஞானபூர்வமாக எழுதப்பட்ட ஓர் ஆய்வுநூல் என்ற வடிவம் கொண்டது. இது தமிழுக்குப் புதியது. புராணங்களும் மதச் சிந்தனைகளும் ஆதிக்கம் செய்த தமிழ் எழுத்து முறையில் இந்நூல் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தது. அறிவியல் பூர்வமான ஓர் எழுத்து முறையைப் பயன்படுத்தி அந்நூல் ஆரியம்/திராவிடம், சமஸ் கிருதம்/திராவிடம் என்ற வேறுபாடுகளை முன்னிறுத்தியது. மொழி என்ற சமயம் சாராத ஒரு புதுத்தளத்தையும் அது முன்மொழிந்தது. அறிவியல், பகுத்தறிவு, சமயச் சார்பின்மை போன்ற விசயங்கள் மொழியின் வழியாகத் தமிழ்ச் சிந்தனையைக் கைப்பற்ற முனைவதை இங்குப் பதிவுசெய்து கொள்ளலாம்.

கால்ட்வெல்லின் நூல் வெறும் மொழியியல் ஆய்வாக அமையாமல் கூடுதலாக இருவகை நாகரிகங்கள், இருவகைப் பண்பாடுகள், இரு வகைச் சமூக அமைப்புகள் என்று பேசியிருந்தது. ஆரியம்/திராவிடம் என்பவையே அவை. அவை இரண்டுக்குமிடையில் வரலாற்றில் ஒரு துவந்த யுத்தம் நிகழ்ந்து வந்துள்ளது என்ற நிலைப் பாட்டிற்கு அது இட்டுச்சென்றது. தமிழில் அறுபடாத தொடர்ச்சியுடன் ஓர் எழுத்திலக்கிய வரலாறு உள்ளது என அது கூறியது. மொழி, இலக்கியம், பண்பாடு, சமூக அமைப்பு என்ற தொடர்புபடுத்தல் வலுவாகவே பதிவாகியிருந்தது. தமிழ் மரபில் பிராமண எதிர்ப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வேரூன்றியுள்ளது என அந்நூல் நிரூபிக்க முயன்றிருந்தது.

இவை எல்லாமே பின்னால் தமிழ் அடையாள அரசியலின் முக்கிய அடிப்படைகளாகின என்பது குறிப்பிடத்தக்கது. கால்ட்வெல் தனது நூலில் பறையர்கள் இந்துக்களா? பறையர்கள் தமிழர்களா? என்ற கேள்விகளையும் எழுப்பிப் பதில் கூறுகிறார். இக்கேள்வி களை அவர் எழுப்பியதன் பின்புலத்தை யூகிக்க முடிகிறது. தமிழ் என்ற விரிந்த அடையாளத்திற்கு வந்து சேரும்போது அதிலிருந்து அடித்தள மக்களை அந்நியப்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து வந்தது என்பதைக் கால்ட்வெல்லின் கேள்விகளும் விவாதங்களும் எடுத்துக்காட்டுகின்றன. மொழி என்னும் அடையாளத்தினுள் சாதியைப் புகுத்தாதீர்கள் என்ற எச்சரிக்கையைக் கால்ட்வெல் வழங்கு வதாகத் தெரிகிறது.

தமிழில் அச்சு எந்திரப் பயன்பாடும் அது ஏட்டிலக்கியங்களை நூல் வடிவம் பெறச்செய்தன என்பதும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காத்திரமான நிகழ்வுகளாகின. அச்சு எந்திரம் 1000, 2000 என்ற எண்ணிக்கையில் ஒரே நூலைப் பல பிரதிகளாக்கி அவற்றை வாசிப்பவர்களையும் உண்டாக்கியது. வாசிப்பவர்களுக்கிடையில் ஒத்த மனநிலையை உருவாக்கி நேரடித் தொடர்பே இல்லாதவர்களுக்கிடையிலும் ஒரு குழும உணர்வை அந்நூல்கள் ஏற்படுத்தின. இந்தக் கூட்டுணர்வு உருவாக்க நிகழ்வினைத்தான் பெனெடிக்ட் ஆன்றர்சன் கற்பிதக் குழுமங்கள் என்றார். இது நூல், பத்திரிகை மற்றும் கண்ணொளி ஊடகங் களின் பண்பு. நவீனகாலம் உருவாக்கிய பொது வெளியின் பண்பு. குழும உணர்வுகளே கற்பித மானவை என்று இதற்குப் பொருளில்லை.

தமிழில் அச்சு நூல்களின் பதிப்பு தமிழ் மரபு, இலக்கிய வரலாறு, சமூக வரலாறு ஆகியவை பற்றிய மிகப் பெரிய விவாதங்களுக்கான தயாரிப்பினைச் செய்தது. படிப்பறிவு பெற்ற அறிவுத்துறையினரையும், பொது அபிப்பிராயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும் பொதுவெளியையும் அது உருவாக்கியது. பதிப்பு என்பது நூல் தேர்வு, பாடபேதங்கள், முன்னிலைப்படுத்துவது (Focus) போன்ற பல விஷயங்களோடு தொடர்பு கொண்டது எனினும் பண்டைத்தமிழின் பன்முகப் பரிமாணங்களை அது வெளிக்கொணர்ந்தது. விவாதிப்பதற்கும் விளக்கமளிப்பதற்கும் ஏராள மான விஷயங்கள் உள்ளன என்ற நிலையை உருவாக்கியது. அடையாளப் பொருள்கோளியல் (Hermeneutics of Identity) என்ற ஒரு புது முயற்சி தமிழில் இக்காலத்தில் தோன்றி நிலைகொண்டது. பலவகை வாசிப்புகளுக்கான வாய்ப்புகளும் தோன்றின. அவ்வகை வாசிப்புகள் நடுத்தர வர்க்கத்தளத்தினுள் நுழையத் தொடங்கி விட்ட சமூகக் குழுக்களை அடையாளம் காட்டின.

அடையாளப் பொருள்கோடல்களில் வேளாளர் வாசிப்புகளே அதிகமாக இருந்தன என்பது உண்மை. வேளாளர் வாசிப்புகளில் முனைப்பான பிரச்சினையாக அவர்களது சமூக மேம்படுத்தல்அமைந்திருந்தது. வருண வரிசையில் வேளாளர் சூத்திரரே என்ற பிராம்மணரின் மதிப்பீட்டைத் தமிழ் நூல்கள் வாசிப்பின் மூலம் மாற்றியமைக்க அவர்கள் முயன்றனர். தமிழில் வருண வரிசை வேறுவிதமாக அடுக்கப்பட்டிருந்தது என்பதற்கு அவர்கள் தமிழ் நூல்களில் ஆதாரங்களைத் தேடிக் கண்டடைந்தனர். தமிழ்ச்சமயம் என்பதே சைவச் சமயம்தான் என அவர்கள் நிறுவ முயன்றனர். தென்னாடுடைய சிவன் பிரபலம் அடைந்தார்.

சமணபௌத்தம்/சைவம் என்ற பழைய மோதலை அவர்கள் உயிர்ப்பித்தனர். இருப்பினும் வேளாளர் விருப்புகளை மீறிச் சைவத்திற்கு முந்திய சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் சமண பௌத்த காப்பியங்களும் அற நூல்களும் பதிப்பாகின. அவை சுயமான செல்வாக்கை ஈட்டவும் செய்தன. இந்நூல்களை 18 ஆம் நூற்றாண்டு வரை சைவ மடங்கள் வாசிக்கத் தடை விதித்திருந்தன. அவை இப்போது சுதந்திர மாகப் பதிப்பாகி வெளிவந்தன. சைவமல்லாத, வேளாளரல்லாத பிரதிகள் மற்றும் வாசிப்பு களுக்கான வெளி உருவாகியது. இந்த வெளியை உருவாக்கியது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலான தமிழ்ப் பதிப்பியக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சூழல்கள் இக்காலத்தில் மத அரசியலிலிருந்து மொழி அரசியலுக்கு மாறிச் சென்றன என்பது அடிப்படையான ஒரு விசயமாகும். மொழி என்பது மதத்தை விட விரிந்த அடையாளமாகவும் சமயம் சாரா அடையாளமாகவும் இங்கு உருப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருத மொழி அதன் வரலாற்றில் எப்போதுமே சமயம் நீங்கிய வடிவில் தன்னைக் காட்டிக் கொண்டதில்லை. அதன் சமயச் சார்புகள் அடிப்படையானவை, பிரிக்க முடியாதவை. தமிழும்கூட சைவத் தமிழ் என்று குறைந்து போவதற்கு அன்று வாய்ப்புகள் இருந்தன.

ஆயின் தமிழ் பெருமளவில் மதத்திற்குள் மாட்டிக்கொள்ளவில்லை என்பது மொழி சார்ந்த அடையாள உருவாக்கத்தை உறுதிப் படுத்தியது. சமஸ்கிருதத்தின் அடிப்படையான சமயச் சார்பும் தமிழின் சமயச் சார்பின்மையும் எதிரெதிர் பண்பாட்டு அரசியல் வாதங்களாக உருவாக முடிந்தது. சமயச் சார்பற்ற தமிழ், சைவத்திற்கு முந்திய தமிழ் இலக்கியங்கள் என்ற வேளாளரல்லாத தளத்தை உருவாக்கிய சமூக சக்திகள், அவற்றின் பிரதிநிதிகள் ஆகியவை குறித்துச் சில ஆய்வுகள் இன்னும் தேவையாக இருக்கின்றன. இவை கண்டறியப்பட வேண்டும். தமிழ் மொழி சார்ந்த அரசியலின் போக்குகளைப் புரிந்து கொள்வதில் இது முக்கியமான பிரச்சினையாகும்.

தொடரும்...

Pin It