எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வைத் தொடங்கியவர். தம் வாழ்நாள் முழுவதும் நெஞ்சம் நிறைந்த மனிதநேயத்தோடு வாழ்ந்து ஒரு மானிடனாகக் காலமானார். ஜெய காந்தன் தமிழ் முற்போக்கு மரபின் முன்னத்தி ஏர். எளிமையும், உண்மையும்தான் அழகு என்பதைத் தனது எழுத்தின் மூலம் நிரூபித்தவர். அவரின் சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் சமூக ஒடுக்குதல்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும் உள்ளான விளிம்புநிலை மனிதர்களை மையப் படுத்தின. மனித உணர்வுகளையும், மனித உறவு களையும் தன் வசீகர எழுத்தால் வாழ்க்கைச் சித்திரங்களாக மாற்றிக் காட்டியவர். அவர் எழுத்து, பேச்சு, பத்திரிகைப் பணி, திரைப்பட முயற்சி எல்லாமே புழங்கிய திசையில் போகாமல் புதிய பாதையை உண்டு பண்ணியவை. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் தனக்கென கம்பீரமானதொரு தோற்றத்தை உருவாக்கியவர். எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத சமரன். தமிழ் உரைநடையில் ஜெயகாந்தனின் பாணி தனித்துவம் மிக்கது. புதுமையானது.

jayakanthan 416

ஜெயகாந்தன் முறையாகக் கல்வி பயிலாதவர். ஆனால் ஆழமாக வாழ்க்கையைக் கற்றவர். அவர் சொல்வது மாதிரி அச்சுக் கோர்க்கும் போது தலை கீழாக எழுத்துக்களைப் பழகிச் சரியாகத் தமிழைக் கற்றவர், சித்தரியத்தில் தேர்ந்தவர், வள்ளலாரிடம் நெருக்கமுண்டு. கம்பனில் மூழ்கியவர், ருஷ்யப் பேரிலக்கியங்களில் பரிச்சயமிக்கவர், ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் அவருக்கு ஆற்றலிருந்தது. பாரதியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர். தான் கற்றவற்றைத் தன்னில் உரசி உரசி தனித் துவங்களைப் பெற்றவர் அவர்.

இளம் ஜெயகாந்தன் கம்யூன் வாழ்வில் வளர்ந் தவர். அவரின் ஆளுமை உருவாக்கத்தில் எல்லை யில்லாத உலக அன்பை விதைத்த ஜீவாவுக்கும், போர்க்குணமிக்க கலக வித்தை ஊன்றிய பால னுக்கும், இந்திய அறவியல் மரபை மார்க்சியத்தில் இனம் காட்டிய ஆர்.கே.கண்ணன், எஸ்.இராம கிருஷ்ணனுக்கும் முக்கியப் பங்குண்டு.

தமிழ்ச் சூழலில் எழுத்தாளனுக்கும், எழுத் துக்கும் உரிய மதிப்பைப் பெற்றுத் தந்தவர் ஜெய காந்தன். தன் வாழ்நாளில் தன் அர்ப்பணிப்பு மிக்க கலாபூர்வமான எழுத்துப் பங்களிப்புக்காக உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். காந்தியத்திலும், மார்க்சியத்திலும் ஆழ்ந்த ஈடு பாடும், நம்பிக்கையும் கொண்டவர். ஏழை, எளிய சாமானிய மக்களின் மீது பேரன்பும் கரிசனமுமே அவரின் எழுத்தை வெற்றி பெறச் செய்தன. மக்கள் இயக்கத்தின்பாலும், மக்களின்பாலும் அவர் கொண்ட பற்றுறுதியும் நம்பிக்கையும் எதிர்கால எழுத்தாளர்களும், கலைஞர்களும் பின்பற்றத் தக்கவை.

ஜெயகாந்தனின் எழுத்து அதுவரை கண்டு கொள்ளப்படாத மக்கள் திரளை அவர்களின் எல்லாவித அழுக்குகளோடும் அழகுகளோடும் முதல் முறையாக இலக்கியமாக வார்த்தெடுத்தது. நகர, பெருநகர உதிரிப் பாட்டாளிகள், கைவிடப் பட்டவர்கள், காயப்பட்டவர்கள் ஆகியோரை அவரது பேனாமுனை தழுவிக் கொண்டது. தாங்களும் மனிதர்கள்தான். வாழப்பிறந்தவர்கள் தான். எங்களுக்கும் வாழ்க்கை உண்டு என அவர் களுக்கு உணர்த்தியது மட்டுமல்ல; குடிமைச் சமூகத்துக்கு இவர்கள் குறித்த கரிசனத்தையும் ஜெயகாந்தனது இலக்கியப் படைப்புகள் உரு வாக்கியது எனலாம்.

ஜெயகாந்தன் தமிழ்ச் சமூகம் உணர்ச்சி கரமான நிலைகளை உருவாக்கி வைத்திருந்த ஆண் - பெண் உறவு குறித்த மிக இயல்பான மீறல்களை தன் எழுத்துக்கள் வழியே உருவாக்கிக் காட்டினார். காதல், திருமணம், கற்பு, குடும்பம் ஆகியன பற்றிய மிகக் கூர்மையான விமர்சனங்கள் அவரிடம் இருந்தன. ஆணோ, பெண்ணோ தற்சார் போடு இருக்க வேண்டியதை வலியுறுத்தின அவர் எழுத்துக்கள். குறிப்பாக பெண் வாழ்வை நம்பிக்கை களால் நிரப்பிக் காட்டியவை அவரது இலக்கி யங்கள். ஒரு வகையில் தமிழில் பெண்ணிய எழுச்சிக்கு ஜே.கேவும் ஒரு உந்துசக்திதான்.

அரசியலில், சமூகம் சார்ந்த கருத்துக்களில் அவர் மனசுக்குப் பட்டதை வெளிப்படையாகக் கூறினார். இதில் மாறுபாடுகள் இருக்கலாம். பல விதங்களில் காந்தியையும், மார்க்சையும் ஒருவரில் ஒருவரை இணைப்பது அவரின் அவாவாக இருந்தது. மார்க்சியத்தை இந்த மண்ணிலிருந்தும் கட்ட மைக்க அவர் முயன்றார்.

ஜெயகாந்தன் காட்டாற்று வெள்ளமென தமிழ் இலக்கிய பெருநிலத்தை வளப்படுத்தியவர். அவர் தீவிரமாக எழுதியவை சுமார் இருபத்தைந் தாண்டுகள். அதுதான் அவரின் சாதனைக் காலம். ஏறக்குறைய இறுதி முப்பதாண்டுகள் அவர் தீராதப் பேச்சிலேயே கழித்தார். தமிழ்ச் சூழலில் ஒழுக்க மதிப்பீடுகளைக் கடந்து அவரது ‘சபை’ அங்கீகரிக்கப்பட்டது. காரணம் அவர் உருவாக்கி யிருந்த ‘எழுத்தாளன்’ என்கிற பாவனை. அவர் இறுதிவரை எழுத்தாளன், கலைஞன் என்கிற கர்வத்தையும், கம்பீரத்தையும் இழக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சினிமா நடிகர்களுக்கு இணையாக நாயக பாவங்களுடன் கூடிய பிம்பங்களை உரு வாக்கி, கட்டிக்காத்தவர் ஜெ.கே.தான். அவர் விடுதலையின், போராட்டத்தின், கம்பீரத்தின் குறியீடு.

ஜெயகாந்தன் தன்னை உருவாக்கிய கம் யூனிஸ்ட் கட்சியை என்றும் விட்டுக் கொடுத்த தில்லை. உலகப் பார்வையையும், சமூகப் பார்வை யையும் கம்யூன் வாழ்விலிருந்தே அவர் பெற்றார். “அச்சுக்கலை, எழுத்துக்கலை, பத்திரிகைக் கலை யாவற்றையும் பயிற்றுவித்த கலாசாலை கம்யூனிஸ்ட் கட்சி தான்... அகர முதல எழுத்தெல்லாம் நான் கற்றது ஜனசக்தி பிரஸ்ஸில் அச்சுக் கோக்கும் கம்போஸிங் கேஸ்களில்தான்” என்று பிரகடனம் செய்தவர் அவர். நான் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் ஒரு போதும் கம்யூனிஸ்ட் எதிரியாக மாட்டேன் ((You can call me a non-communist, But I can never be an anti - communist)) என்பார். இதனை எத்தனை முரண்பாடுகள் நேர்ந்தபோதும் இறுதிவரைக் காப்பாற்றினார்.

ஜெயகாந்தன் எதையும் பார்த்து, கேட்டு, கற்பனை செய்து எழுதியவரல்லர். எழுத்தாளர் பலருக்கும் வாய்க்காதது அவருக்கு அமைந்தது. மிக நெருக்கடியான, தனித்துவிடப்பட்ட வாழ்க் கையை இளம் வயதிலேயே அவர் வாழவேண்டி நேர்ந்தது. “எனது அக்கால நண்பர்கள் அனை வரும் தொழிலாளர்களே. ஓட்டல் தொழி லாளிகள், முடிதிருத்துகிறவர்கள், மரம் அறுப்ப வர்கள், சர்க்கார் ஆபீஸ் குமாஸ்தாக்கள், ப்யூன்கள், கான்ஸ்டபிள்கள், கேரளத்தைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலாளிகள் ஆகியோர். இவர்களில் சிலரே அரசியலில் நாட்டம் உடை யோராயிருந்தனர். இவர்களில் நானே வயதில் இளையவன்” என்பார் அவர். தானே தொழி லாளியாக வாழ்ந்ததும் தொழிலாளர் பலரோடு வாழ்ந்ததும்தான் அவரின் கதைக் களனாகப் பின்னாளில் அமைந்தன. தோழர் இஸ்மத் பாட்ஷா, கவிஞர் தமிழ் ஒளி, எழுத்தாளர் விந்தன், பத்திரிகையாளர் விஜய பாஸ்கரன் போன்றோரின் அறிமுகமும் நெருக்கமும் இவரை அச்சகம், பதிப்பு, பத்திரிகை, எழுத்து என்றச் சூழலுக்குள் அமைந்திற்று எனலாம். ஜனசக்தி, பிரசண்ட விகடன், சமரன், சக்தி, சரஸ்வதி, மனிதன், சாந்தி, சாட்டை, ஜெயபேரிகை, ஜெயக்கொடி, ஞானரதம், கல்பனா, நவசக்தி உள்ளிட்ட பல இதழ்களில் ஜே.கேவின் பங்களிப்பு இருந்தது. ஆனந்த விகடன் தொடங்கி வெகுஜன இதழ்களின் பிரவேசம் அடுத்து நிகழ்ந்தது. இடம் மாறியது, இதழ்கள் மாறியது, கடைசி வரை ஜே.கே. மாறவில்லை. யாரும் அவருக்கு முதலாளி இல்லை. தன் கருத்துக்கு, மனதுக்கு ஒத்தவர்களோடு அவர்கள் ஒப்பும்வரை இருந்தார்.

ஜெயகாந்தனின் முதல் கதை ‘பிச்சைக்காரன்’, (1950) பா.சொக்கலிங்கம் நடத்திய ‘சௌபாக்கியம்’ இதழில் வெளிவந்தது. முதல் தொகுப்பு 1954 ஏப்ரல் மாதம் ‘ஆணும் பெண்ணும்’ என்ற தலைப் பில் கிட்டு பதிப்பகம் வெளியீடாக வந்தது.

ஜே.கே. தன் ஆரம்ப எழுத்துக்களை அவ்வளவாகக் கொண்டாடவில்லை. தன் கணக்கிலும் வரவு வைக்கவில்லை. 1957இல் ‘வாழ்க்கை அழைக் கிறது’ நாவலில் தொடங்கி 1986இல் ‘ஜயஜய சங்கர’ நாவல் வரை அவரின் எழுத்துப் பயணம் நெடியது. சுமார் முப்பது ஆண்டுகள் ஜெய காந்தன் யுகமாக அமைந்தது. கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், திரைப்படம் என்று படைப் பிலக்கியங்கள் ஒருபுறம். அவரின் அ-புனைவு எழுத்துகள் படைப்புகளுக்கு இணையான கவனத்தைப் பெற்றன. நினைத்துப் பார்க்கிறேன், மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன், அரசியல் அனுபவங்கள், கலை உலக அனுபவங்கள்,

ஆன்மீக அனுபவங்கள், பத்திரிகை அனுபவங்கள், பேட்டிகள், முன்னுரைகள், சபை நடுவே... போன்ற அனைத்தும் விடுதலைக்குப் பின்னான தமிழ் நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்றுக் களஞ்சியப் பகுதிகள் எனலாம். இவையாவும் அவரின் உரை யாடல்களின் நீட்சியாக அமைந்தவை. ஒருவித எள்ளலும், துள்ளலும் அவரிடம் உண்டு. தருக்க அடிப்படையிலான- விவாதங்கள் - வினா- விடை கள் என்பதாக அமைந்த அவரின் உரைநடை தமிழுக்குப் புதிது. தமிழ் உரைநடையைச் செறிவும், நுட்பமும், அழகும் கூடிவரச் செய்ததில் ஜெயகாந்தனுக்குப் பெரும் பங்குண்டு.

ஜே.கே. முற்போக்கு முகாமிலிருந்து தன் எழுத்தைத் தொடங்கினார். அவரின் உச்ச எழுத் துக்கள் யதார்த்தத்தை, சமூக யதார்த்தத்தைப் பிரதிபலித்தன. நவீனத்துவ சாயலுடன் பின் னாளையப் படைப்புகள் ஒருவித லட்சியவாத மாகச் சுருங்கியதும் உண்டு. அவர் கோட்பாடு களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. ‘சூத்திரங் களுக்குள் (கோட்பாடுகளுக்குள்) எழுதுவதானால் நீ பண்டிதனாகப் போ. படைப்பு வேறு’ எனத் தனக்கே உரிய பாணியில் பேசினார். ஆனால் இலக்கி யத்தின் சமூகப் பங்களிப்பை மறுத்தாரில்லை. சோவியத் உள்ளிட்ட உலகப் படைப்புகள் வழியே படைப்பின் தாக்குறவுகளை அறிந்தவராகவே இருந்தார்.

“இலக்கியமும் சமூகமும் நெருங்கிய சம்பந்த முடையவை. இலக்கியம் என்பது சமூக வாழ்க் கையின் சாசனம் என்று நினைக்கிறேன். அது வாழ்க்கையை, வளர்ச்சியை, மேன்மையைப் பிரதி பலிக்கும். அந்த மேன்மையை அழுத்திக் காண் பிப்பதற்காகச் சில எதிர்மறை விஷயங்களை

அது தொட்டுச் செல்லும். எதிர்மறையான ஒரு போக்குக்கு இலக்கியம் உதவிகரமாக அமையாது. மனிதரின் மேன்மையையும் வளர்ச்சியையும் பிரதி பலிப்பதும், அழுத்தம் கொடுப்பதுமே இலக்கி யத்தின் நோக்கம் என்ற கொள்கையைச் சார்ந் தவன் நான்” என்று மிகச் சரியாகவே இலக்கி யத்தின் செல்வாக்கை அவர் குறிப்பிடுவார்.

மேலும், “என்னை முதலாளித்துவம் பயன் படுத்திக் கொண்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். அது தவறு, நான்தான் முதலாளித்துவத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தக் குதிரையில் ஏறி, அது ஓய்ந்து போகும் வரை சவாரி செய்து அடக்கி அதன் முழங்கால்களை உடைத்தவன் நான்” எனத் தன் பணியை மதிப்பிடுவார். ஜே.கே. இறுதிவரை எழுத்தாளனின் சார்பு நிலையை வலியுறுத்தி வந்தார். நல்ல இலக்கியம் எது? எழுத்தாளன் யார் என்கிற கேள்விக்கு விடை யளிக்கும் போதெல்லாம் இதனை வலியுறுத்து வார். “எழுத்தாளனுக்கு Social Consciousness வேண்டும். எதைப் பற்றி எழுதுகிறோம் என்ற பிரக்ஞை வேண்டுமல்லவா? அதுதான் சமுதாயப் பிரக்ஞை. நீங்கள் எழுதுவதை உங்கள் காலத்துக்குப் பிறகும் இந்தச் சமுதாயம் காப்பாற்றி, படிக்கப் போகிறது. அதற்கு ஏற்ப நாம் எழுதப் போகிறோம் என்ற நினைப்புதான் இந்த Consciousness.

அதுதான் நல்ல இலக்கியத்துக்கு அடையாளம். சமூகம் எக்கேடு கெட்டால் என்ன என்று எழுதுகிற கலைஞனை சமூகம் மிதிக்கும். அவனைப் பற்றி சமூகத்துக்கு என்ன கவலை? சமுதாயப் பிரக்ஞை இல்லாத இலக்கியமே கிடையாது.” என்று சற்றுக் கடினமாகவே வலியுறுத்திப் பேசுவார்.

ஜெயகாந்தன் தன்னைச் சுற்றிப் பல புதிர் களை அனுமதித்தார். அவரின் நடத்தை, எதிர் வினை, சீற்றம் ஆகியன குறித்து ஏராளம் கதைகள் உண்டு. அவற்றை அவர் ரசிக்கவும் செய்தார். மடம் என்றும் சபை என்றும் சுட்டப்பட்ட அவருக்கான நண்பர்கள் ‘உவப்பத் தலை கூடுதல்’ தனித்த ஒன்று. அச்சபையில் அவரே தலைவர், நாயகர். அவரை உள்ளும் புறமும் உள்வாங்கிய நட்புச் சுற்றம் அவருக்கும் வாய்ந்தது. இராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது மாதிரி அவர் இருக்கும் இடத்துக்கு சபை நகரும். பயணங்களில், கூட்டத்திற்குச் செல்லுமிடங்களில் சபை முளைக்கும். புது இடம், சூழல்... எக்கவலையுமின்றி ஜே.கே. யின் வீட்டு மாடி போல போகிற இடங்கள் ஆகிப்போகும். தீராதப் பேச்சு, அவரின் கட்டற்றச் சிந்தனைகள் அரங்கேறும் இடம் அது. கிரேக்க ஞானிகள், தமிழ்ச் சித்தர்கள், இஸ்லாமிய சூஃபிக்கள் போல ஜே.கே.யை இச்சபை உருவாக்கிற்று.

ஜே.கே. சமரசமற்று கருத்துரிமையைப் போற்றி யவர். தமிழ்ச் சூழலில் பல அதிர்ச்சிகரமான விவாதங்களை அச்சமின்றி நடத்தியவர். வெகுஜன முன் வைப்புகளுக்கு எதிரான சண்டமாருதமென முழங்கியவர். அவர் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல பேச்சிலும் எழுத்திலும் தன் தரப்பு நியாயங்களை அடுக்குவார். வள்ளலாரிடத்தும், சித்தர்களிடத்தும் அவருக்குத் தாக்கம் இருந்தது. கம்பனை ரசித்து விவாதிப்பார். ஒருவித ஆன்ம தேடலுக்கு இலக்கானதும் உண்டு.

இலக்கியத்தில், சமூக விசயங்களில் தீவிரமான சார்பு நிலையை மேற்கொண்டார். நெருக்கடி, நிலை, திராவிட இயக்கம், ஈழம், சங்கர மடம், பின்னாளில் உலக மயம் (அமெரிக்கா), சமஸ் கிருதம் போன்றவற்றில் அவரின் நிலைப்பாடுகள் விமர்சனத்துக்கு உரியன.

ஓர் எழுத்தாளர் தீவிர எழுத்தில் இருந்து ஒதுங்கிப் பல்லாண்டுகள் கழித்தும் தனது இருப்பை நிலைநாட்டிக் கொண்டது என்பது ஜே.கே.வுக்கே பொருந்தும். ஜெயகாந்தனால் நேரடியாக ஒரு படைப்புப் பரம்பரை உருவாகா விட்டாலும் அவரின் தாக்கத்தால் எழுத வந்த வர்கள் பலர். தீவிர வாசகர்களானவர்கள் பலர். குறிப்பாகப் பெண்களை, நடுத்தர வர்க்கத்தை பழைய வரலாற்றுக் கற்பனைக் கதைகளில் இருந்து மீட்டு, நடப்பு வாழ்க்கைச் சாளரங்களைத் திறந்து காட்டியவர் ஜே.கே. எனலாம்.

ஜே.கே. வாழ்க்கையைக் கொண்டாடியவர். எதன் பொருட்டும் தற்கொலைகள் கூடாது என வலியுறுத்தியவர். நம்பிக்கை, வாழ்க்கை மீதான தீராப்பற்று ஆகியவற்றைத் தன் படைப்புகளில் விதைத்தவர். வாழ்க்கை என்பது தட்டையானது அல்ல. அது ஒரு கலைடாஸ்கோப் என்று மெய்ப்பித்தவர். புயல், சிங்கம், சிறுத்தை, யானை, புரட்சி முதலான பெயருக்கு முன்பின் ஒட்டுக் களை கடுமையாக விமர்சித்தவர். இந்த எல்லா அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடியவர் ஜே.கே.

“நேசிக்கத் தெரிந்தவர்கள் நேசிக்க வேண்டும். பதிலுக்கு நேசம் கிடைக்காது. அது கிடைத்தாலும் நெடுநாள் ஒட்டாது. ஆனாலும் நாம் நேசிக்க வேண்டும். நேசிக்க முடியாதவர்கள் பற்றியும், நேசத்தை மறந்தவர்கள் பற்றியும் யோசிக்க வேண்டும். யாரும் நம்மை நேசிக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். நேசிக்கக் கற்க வேண்டும். நேசிக்கக் கற்பிக்கவும் வேண்டும். இதுவே வாழ்க்கை எனக்குத் தந்த படிப்பினை” என்ற ஜே.கேயின் வார்த்தைகளை வாழ்க்கை யாக்குவோம்!

“நாளை என்பது மெய்யல்லவோ- அதில்

நாமிருப்பதொரு பொய்யல்லவோ- எனில்

மீளவும் பிறப்பது அரிதரிது- மண்

மீது நம் சந்ததி மிகப்பெரிது”

என ஒரு கவிதையில் ஜே.கே. எழுதுவார். மீளப் பிறப்பது அரிதுதான். ஆனால் ஜெயகாந்தனின் சந்ததி மிகப்பெரிது. இங்கும்... எங்கும்... அது வியாபிக்கும்!

Pin It