கருந்தேக்கில் 

வடித்த உடல் 

செம்மையிலே 

வார்த்த உயிர் 

வெள்ளியிலே 

இழைத்தெடுத்த 

வெட்டுவாள் மீசை 

எப்போதும் 

பசுமை மேலாடும் 

பச்சைத் தமிழர் 

புலவர், 

தமிழேருழவர் 

கி.த.ப. 

தமிழுக்கு மட்டுமா, 

தமிழுரிமைப் போருக்கும் 

ஆசான் பேராசான்! 

 

ஒரு நூற்றில் 

முக்கால் பங்கு 

ஓடிமுடியும் போதும் 

நில்லாத கால்கள் 

ஓய்வு கொள்ளாத எழுத்து 

விட்டுக் கொடுத்தல் 

இல்லாத பேச்சு 

போராட்ட அழைப்பென்றால் 

மறுப்புச் சொல்லாத 

போர்க் குணம்! 

இவரைக் 

கிழவர் என்பீரா? 

இல்லை,  

கிளர்ச்சியாளர்! 

தமிழாசிரியர் என்பீரா? 

இல்லை, தமிழுரிமைப் போராளி! 

பச்சையப்பன் என்பீரா? 

இல்லை, படைக்கஞ்சா வீரர்! 

கிளர்ச்சியாளர் 

தமிழுரிமைப் போராளி 

படைக்கஞ்சா வீரர் 

அவரே கி.த.ப. 

 

குணமேந்திய சினம் 

குழந்தைக் குறும்பு 

அகந்தை போல் 

அறியார்க்குத் தெரியும் 

அறிவுச் செருக்கு, 

தமிழன் தமிழாசிரியன் 

எனும் 

பெருமிதம் அவர்க்கு. 

 

புதுவை விடுதலை 

பொதுமை ஆக்கம் 

மொழி இனக் காப்பு 

தமிழீழ மீட்பு 

களம் எதுவாயினும் 

விசையுறு வில்போல் 

சீறிக் கிளம்புவார். 

தாய்த் தமிழ் காக்க 

நடைப் பயணம் என்றால் 

தளராது நடப்பார். 

பட்டினிப் போரென்றால் 

உண்ணாப் பந்தியில் 

முந்தி வந்துக் 

குந்தும் கருங்குயில். 

 

தமிழைப் பழித்தாரை 

எவர் தடுத்தாலும் 

இவர் விடார். 

செந்தமிழைச் சிதைப்பாரை 

எட்டி உதைத்து 

எள்ளி மகிழ்ந்திடுவார். 

 

அய்யா கி.த.ப.! 

செந்தமிழே உயிரென்பீர்! 

நறுந்தேனாய் 

நலந்தரும் தமிழிழென்பீர்! 

செயலினை மூச்சினை 

அதற்களிப்பீர்! 

தமிழ் நைந்தால் 

நைந்து போகும் 

வாழ்வென்பீர்! 

நன்னிலை தமிழ்க்கென்றால் 

உமக்கும்தான், சரி! 

நன்னிலை உமக்கென்றால் 

நற்றமிழுக்கும் 

உற்ற தோழர் 

எமக்கும்தானே! 

- தியாகு

Pin It