george thomson 400அறிவியலும், தொழில்நுட்பமும், உற்பத்தி முறையும், இன்றைய உலகமயமாதல், தாராள மயமாதல் போன்ற நடைமுறைகளால் மிகப் பெரிய அளவில் மாற்றங்களுக்கு உள்ளாகிவிடு கின்றன. இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாயி லாக வளர்ச்சியடைந்த நாடுகள், மனிதனை உழைப்பிலிருந்து படிப்படியாக விலக்கி அவனை அந்நியமாக்கும் போக்குகளைப் பரவலாக்கி வரு கின்றன. வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளின் இயற்கை வளங்களைத் தாறுமாறாகச் சிதைத்து அவை உயிர் வாழ்க்கைக்கும் புதிய நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றன. தொடர்ந்து தட்ப வெப்ப நிலைகளைப் பாதிப்பதோடு, சுற்றுப்புறச் சூழலையும் பெருமளவுக்கு மாசுபடுத்தி அன்றாட வாழ்க்கை முறைகளுக்குக் கடுமையான சோதனைகளைத் தோற்றுவிக்கின்றன.

கடுமையான நெருக்கடிகளுக்கு உலக மக்கள் உள்ளாகிவரும் இன்றைய சூழலில், மார்க்ஸியம் குறித்த அறிமுகத்தைச் செய்யும் விதத்தில் இப் போது மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. பேரா சிரியர் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய இந்த மூன்று நூல்களின் வாயிலாக மனித சமுதாய வரலாற்றின் வளர்ச்சியையும், தொடர்ந்து நிகழும் வர்க்கப் போராட்டத்தின் புதிய தன்மைகளையும் கண்டறிய முடியும்.

சென்ற 1970களில் மார்க்ஸியத்திற்கான அறிமுகம் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மூன்று நூல்களும் தற்போது தமிழில் வெளி யாகி உள்ளன. அவை முறையே, ‘மார்க்ஸ் முதல் மாவோ வரை’, ‘முதலாளியமும் அதன் பிறகும்,’ மற்றும் ‘மனித சாரம்’ ஆகியவை. முதலாவது நூலை எஸ்.வி.ராஜதுரையும், இன்குலாபும் இணைந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு நூல்களையும் எஸ்.வி.ராஜதுரை மொழி பெயர்த் துள்ளார். எவரும் எளிதில் புரிந்துகொண்டு, மனதில் நிறுத்தி அசைபோடுவதற்கும், பொருத்த மாக, எளிமையான தமிழில் தெளிவாக மொழி மாற்றம் செய்துள்ளார்கள்.

தன்னுடைய புதிய முயற்சி குறித்து எஸ்.வி. ராஜதுரை சிறிய விளக்கம் அளிக்கிறார்: “இந்த மூன்று நூல்களும் சோவியத் யூனியனின் தகர்வு, மாவோவின் மறைவிற்குப் பின் சீனாவில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் ஆகியன நிகழ்வதற்கு முன்பு எழுதப்பட்டவை. எனவே, இவற்றில் சொல்லப் பட்ட தகவல்கள், விளக்கங்கள் ஆகியவற்றில் சில கால முரண்பாடுகளாகவே தெரியும். எனினும் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவை பற்றி அடிப்படையான மார்க்சியக் கருத்துக் களையும், விளக்கங்களையும் தெரிந்துகொள்ள இந்த நூல்கள் இன்றும் பயன்படும்.”

‘இவை மூன்றும் மார்க்ஸிய அறிமுக நூல் களாக மட்டுமே கருதப்படவும், படிக்கப்படவும் வேண்டுமேயன்றி இவை தம்மளவிலேயே முழுமை யாக மார்க்ஸியத் தத்துவ நூல்களாக அமைந் துள்ளதாகக் கருதப்படக்கூடாது.’

‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ என்ற நூலை ஜார்ஜ் தாம்ஸன் ஒரு கோட்பாட்டை முன்வைத்துத் தொடங்குகிறார்.

“லெனின் எழுதினார்: வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆக மாட்டார்கள்... வர்க்கப் போராட்டத்தை ஏற்பதை பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்பது வரை விரித்துச் செல்பவனே மார்க்சியவாதியாவான்.” இந்தப் புரிதலோடு மூன்று நூல்களையும் படித்து உணர்ந்து கொள்வது முறையான புரிதலுக்கு ஒருவரை இட்டுச் செல்லும்.

மார்க்சியம், பிறவகையான வரலாற்றுக் கண் ணோட்டங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் மனித வரலாற்றை ஆய்வு செய்து புதிய உலகிற் கான தேவையைப் புலப்படுத்தி ஊக்குவிக்கின்றது. அனுபவ அடிப்படையில் விருப்பு வெறுப்பு சார்ந்த சமுதாய, பொருளாதார, பண்பாட்டு மதிப்பீடுகள் சமுதாயத்தின் முழுமையான இயக்கத்தை அரை குறையாக உணரச் செய்து தாறுமாறான மதிப்பீடு களுக்கு இட்டுச் செல்லுகின்றன. இந்தப் போக்கு வரலாற்றை தர்க்கரீதியான, தன்னிச்சையான மதிப் பீடுகளையும், முடிவுகளையும் முன் வைக்கின்றன. முதலாளித்துவ சமுதாயத்தில் கற்பிக்கப்படும் கல்வியும் வரலாற்றை இந்த விதத்திலேயே கற் பனைக் கண்ணோட்ட அடிப்படையில் உள்ளடக்கி யுள்ளது. மாறாக, மார்க்சியம், சமுதாயத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மேற் கொண்டு பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கான முடிவுகளையும், தீர்வு களையும் முன்வைக்கின்றது. வர்க்கக் கண்ணோட் டத்தில் சமுதாயத்தின் இயங்கியலை அடையாளம் கண்டு வரலாற்றின் மாற்றங்களையும், வளர்ச்சிப் போக்கையும் இனம் கண்டு அடையாளப்படுத்து கிறது. நவீன சமுதாயத்தில் வர்க்கங்களுக்கிடையில் நிலவிவரும் உறவுகளை இந்த நூல், தெளிவு படுத்துவதோடு, முதலாளி வர்க்கப் புரட்சியி லிருந்து பாட்டாளிவர்க்கப் புரட்சிவரை நிகழும் மாற்றங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்து முடிந்த ரஷ்யப்புரட்சியையும், சீனப்புரட்சியையும் முன்மாதிரியாக வைத்து உழைக்கும் வர்க்கத்தின் வளர்ச்சியை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தெளிவுபடுத்துகிறது.

ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் தலைமைப் பாத்திரம் வகித்த பாட்டாளி வர்க்கத்தின் தனித் தன்மையை இது அடையாளப்படுத்துவதோடு தொழிலாளர்களையும், உழவர்களையும் ஒருங் கிணைக்கும் நேச அணியின் கூட்டு நடவடிக்கை களையும் மதிப்பீடு செய்கிறது. மேலும் தேசியப் பிரச்சினைகள் பற்றியும், காலனி ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருந்த நாடுகளின் விடுதலைப் போர் களைப் பற்றியும், அவற்றின் தேசியத் தன்னாட்சி பற்றியும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கு கிறது. பாரிஸ் கம்யூனின் படிப்பினைகளின் அடிப் படையிலிருந்து தோன்றிய கட்சி அகில உலக அளவில் விரிவடைந்த வரலாற்று வளர்ச்சியையும் இது வடிவமைக்கிறது. இத்துடன் 1917-இல் ரஷ்யா வில் நடந்த அக்டோபர் புரட்சிக்கும், 1949-இல் சீனாவில் நடந்த குடியரசு அமைப்பிற்கும் இடை யிலான உலக நிகழ்வுகளை ஜார்ஜ் தாம்சன் ஆழமாக ஆய்வு செய்து இடையறாத வர்க்கப் போராட்ட இயங்கியலைத் தெளிவுபடுத்துகிறார். லெனினுக்குப் பின் வந்த ஸ்டாலின், குருசேவ் ஆகியோரின் தொடர்ச்சியான முயற்சிகளையும், அவற்றின் விளைவுகளையும் குறிப்பிட்டுக் காட்டு கிறார்.

george thomson 401சோசலிச சமுதாயத்தில், “வர்க்கப் போராட்டம், உற்பத்திக்கான போராட்டம் அறிவியல் பரிசோதனை ஆகியவைதான் ஒரு வலுவான சோசலிச நாட்டைக் கட்டுவதற்கான மூன்று பெரும் புரட்சிகர இயக்கங்களாகும். பொதுவுடைமையாளர்கள் அதிகார வர்க்கத்தி லிருந்து விடுபட்டு, திருத்தல்வாதத்தாலும், வறட்டு வாதத்தாலும் பாதிக்கப்படாத, என்றென்றும் வெல்லப்பட முடியாதவர்களாக விளங்க நிச்சய மான உத்தரவாதமாக இருப்பவை இந்த இயக்கங் களேயாகும். பரந்துபட்ட உழைக்கும் மக்கள் திரளினருடன் ஐக்கியப்பட்டு ஜனநாயக சர்வாதி காரம் கை கூடி வரச் செய்வதற்குப் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆற்றல் வழங்கும் நம்பகமான உத்திர வாதமாக இருப்பவை இந்த மூன்று இயக்கங்களே ஆகும்” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்

ஜார்ஜ் தாம்ஸன். தொடர்ந்து, “மார்க்ஸ் கூறியது போல, தத்துவம் மக்கள் திரளினரை இறுகப் பற்றுமானால் அது பொருள்வகைச் சாத்திய மாகி விடுகிறது” என்று அவர் பொருள்முதல் வாதத்தைத் தெளிவாக வரையறை செய்கிறார்.

மார்க்சியத்தைத் தொடர்ந்து அறிமுகப் படுத்தும் விதத்தில், “முதலாளியமும் அதன் பிறகும்” என்ற நூலை ஜார்ஜ் தாம்ஸன் எழுதினார். மக்களின் தேவைகளுக்கான பொருள்கள் பண்ட மாற்றுச் செய்யப்பட்டுவந்த காலத்திலிருந்து வணிக நோக்கத்திற்காகப் பொருள்கள் சந்தைச் சரக்குகளாக மாற்றப்பட்டுப் பின்னர் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிய சரக்கு உற்பத்திமுறை தோன்றிய காலம் வரை யிலான வரலாற்று விளக்கங்கள் இதில் அடங்கி யுள்ளன. தொடர்ந்து உபரி உழைப்பு உபரி மதிப்பு, இலாபம் முதலியன பற்றிய மார்க்சியக் கோட் பாடுகள் எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கப் படுகின்றன. முதலாளிய சமுதாயத்தின் உள்ளார்ந்த முரண்பாடு, தவிர்க்கவியலாதவாறு சோசலி சத்துக்கு வழிவிட்டாக வேண்டிய காரணிகளில் ஒன்றாக இருப்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

ஜார்ஜ் தாம்சன் எழுதிய இந்த மூன்று நூல்களையும் மொழிபெயர்த்ததில் பெற்ற அனு பவத்தை எஸ்.வி.ராஜதுரை இப்படிக் குறிப்பிடு கிறார். “மார்க்சியத்தைக் கற்கத் தொடங்குபவர் களுக்காக எழுதப்பட்ட நூல் என்று பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸன் குறிப்பிட்டுள்ள போதிலும், மார்க்சிய செம்மை நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள பகுதிகள் நிறைந்த இந்நூலை மொழியாக்கம் செய்வதில் நான் திணறிப் போனேன்.”

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், மாவோ போன்றவர்களின் கருத்துக்களைத் துல்லியமாக உணர்ந்து, தெளிவாக விளக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ள ஜார்ஜ் தாம்ஸனின் உழைப்பும், திறனும் இந்த நூல்களின் வாயிலாக வெளிப்படு வதை வாசிப்பவர் உணரமுடியும்.

நிலவுடைமைச் சமுதாயத்தின் மந்தமான இயங்குமுறையை வேகப்படுத்திய முதலாளித் துவம், கடந்த சில நூற்றாண்டுகளில் மனித சமு தாயத்தை எந்த அளவுக்குத் துரிதப்படுத்தியிருக் கிறது என்பதை இந்த நூல் சுருக்கமாகத் தெளிவு படுத்துவதைக் கண்டு வியக்க வேண்டியிருக்கிறது. முதலாளிய ஜனநாயக முறையையும், அதன் உண்மையான தோற்றத்தையும் லெனின் துல்லிய மாக வரையறை செய்வதை முன்வைத்து ஜார்ஜ் தாம்சன் வளர்ச்சியடைந்த நாடுகளைப் பற்றிய தனது மதிப்பீடுகளை முன் வைக்கிறார்: “மேற்கு நாட்டுத் தொழிலாளர்கள் அனுபவித்துக் கொண் டிருக்கும் உயர்ந்த வாழ்க்கைத்தரம், காலனி ஆட்சி அடிப்படையிலும் ஏகாதிபத்திய அடிப்படையிலும் வென்றெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், இப் போது அந்த அடிப்படை நொறுங்கிக் கொண் டிருக்கிறது. ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குத் திறக்கப் பட்ட பகுதிகள் சுருங்கிவர, ஏகாதிபத்திய நாடு களில் உள்ள தொழிலாளர்களைச் சுரண்டுவது கடுமையாகியுள்ளது. முதலாளிய ஜனநாயகம் என்பது முதலாளிய சர்வாதிகாரத்தை மூடி மறைக் கின்ற ஒன்று என்பது வெளிப்பட்டு வருகிறது.”

தொடர்ந்து, அவர் தனிமனித சுதந்திரம், எல்லோரும் ஒவ்வொருவருக்காக, ஒவ்வொரு வரும் எல்லோருக்குமாக, பயன்பாட்டுக்காக உற்பத்தி, பொதுவுடைமை நோக்கி மாறும் கட்டம் போன்ற கருத்துக்களின் அடிப்படையில் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் சோசலிச சமுதாய வளர்ச்சிக் கட்டங்களைத் தகுந்த ஆவணங் களோடு அறிவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு களை நிகழ்த்தி மதிப்பீடுகளை முன்வைக்கிறார். ஆகவே, இந்த நூல் சோசலிச உற்பத்தி அடிப் படையிலான வாழ்க்கை முறையின் சிறப்பையும், தவிர்க்க முடியாத அதன் தேவையையும் அறி வியல் கண்ணோட்டத்தோடு தெளிவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக் கிறது.

மார்க்சியத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஜார்ஜ் தாம்ஸன் எழுதிய அடுத்த நூல் ‘மனித சாரம்.’ விறுவிறுப்பான வாசிப்பிற்கு உகந்ததாக உள்ள இந்த நூலின் தனித்தன்மை பற்றித் தனது அறிமுகக் கட்டுரையில் ஜார்ஜ் தாம்ஸன் இப்படிக் குறிப்பிடுகிறார். “முந்தைய நூல்களைப் போலவே, இந்த நூலிலும் எனது வாதத்திற்கு வலுச்சேர்க்க மார்க்சியச் செவ்வியல் நூல்களிலிருந்து ஏராள மான பகுதிகளை மேற்கோள் காட்டியுள்ளேன். ஆனால், இந்த நூலில் முன்வைக்கப்பட்டுள்ள வாதம் எனது சொந்த ஆராய்ச்சியிலிருந்து பெறப் பட்ட முடிவுகளையே பெரிதும் சார்ந்துள்ளது. உழைப்பு இயக்கம் பற்றிய மார்க்சின் கோட்பாடு, லெனினின் பிரதிபலிப்புக் கோட்பாடு, புலனறிவு, பகுத்தறிவு ஆகியன குறித்த மா சேதுங்கின் கோட் பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உழைப்பு இயக்கம்தான் அறிவியலுக்கும், கலைக்குமான மூலவேர் என்றும், இவை இரண்டுமே சமுதாய ஆற்றலை ஒன்றையொன்று சார்ந்திருக்கும் வெவ் வேறு வடிவங்களை ஒருங்கமைப்பவை என்றும் சாட்ட முனைந்துள்ளேன். தத்துவம், வரலாறு ஆகியவற்றை மட்டுமின்றி, மொழியியல், உள வியல், மானுடவியல், இசையியல், இலக்கியத் திறனாய்வு ஆகியவற்றையும் சார்ந்த ஒன்றுக் கொன்று தொடர்புள்ள பல்வேறு பிரச்சினை களை எனது வாதம் உள்ளடக்கியுள்ளது. எனது முடிவுகள் எந்த அளவிற்கு மார்க்சியச் செவ்வியல் நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள் களை ஆதாரமாகக் கொண்டுள்ளன என்பதை வாசகர் முடிவு செய்து கொள்ளலாம். எனினும் இம்முடிவுகள் இறுதியானவையல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மார்க்சி யத்தை அறிமுகம் செய்யும் வகையில் ‘மார்க்ஸிய மெய்ஞானம்’ என்ற நூலை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. ஜார்ஜ் பொலிட்ஸ ரால் எழுதப்பட்ட அந்த நூலை காலஞ்சென்ற தோழர் ஆர்.கே.கண்ணன் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார். அந்த நூல் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. தொடர்ந்து புதிய சூழலில் மார்க்சி யத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் விதத்தில் ஜார்ஜ் தாம்ஸனின் மூன்று நூல்களை எஸ்.வி.ராஜதுரையும், இன்குலாபும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். இவை என்.சி.பி.எச். நிறுவனத்தால் மிகவும் நேர்த்தியாக வெளியிடப் பட்டுள்ளன.

george thomson 402“தாம்ஸன் மாபெரும் அறிஞரும், பல்கலைக் கழகப் பேராசிரியரும் மட்டுமல்ல. பிரிட்டனின் பொதுவுடைமை இயக்கத்தில் நீண்டகாலம் பணி யாற்றியவர். திருத்தல்வாதத்திற்கெதிராகப் போராடி யவர். ஆலைத் தொழிலாளிகளுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு மார்க்ஸியத் தத்துவத்தைக் கற்றுக் கொடுத்து வந்ததுடன், அவர்களிடமிருந்து புரட்சிகரப் போராட்ட உணர்வைக் கற்றுக்கொண்டு வந்தவர்” என்று இந்த நூல்களின் ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடு கிறார் எஸ்.வி.ராஜதுரை.

“மனித சாரம்” என்ற சமுதாய அறிவியல் நூலைப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் இயங்கியல் கண்ணோட்டத்தோடு பகுப்பாய்வு செய்து வடிவமைத்திருக்கிறார் ஜார்ஜ் தாம்ஸன். மனிதனும், இயற்கையும், வாலில்லா குரங்கி லிருந்து மனிதன் வரை, பேச்சும் பாட்டும், ஆதி அறிவு, இயற்கைத் தத்துவம், மந்திரத்திலிருந்து கலைவரை, நவீன அறிவியலும் தத்துவமும், உருவமும் உள்ளடக்கமும், அறிவாளிகளும் பாட்டாளி வர்க்கமும் என்ற தனித்தனிப் பிரிவு களின் வாயிலாக அறிவியல் அடிப்படையிலான மனித வரலாற்று வளர்ச்சியை ஆழமாகவும், துல்லியமாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் ஜார்ஜ் தாம்ஸன் விளக்குகிறார். இந்த மூன்று நூல்களையும் மிகச் சிறந்த முறையில் மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்கள் என்று எஸ்.வி. ராஜதுரையையும், இன்குலாபையும் பாராட்டுவது மிகையல்ல.

இன்றைய தமிழ்ச் சூழலில் வரலாறு குறித்த தாறுமாறான பலவகைக் கண்ணோட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. அறிவியல் சார்ந்த வாழ்க்கையில் கலந்துள்ள தமிழர்கள் அதன் அடிப்படையிலான வரலாற்றைப் புரிந்து கொள்ள முனைவது காலத்தின் கட்டாயம். புதிய சூழலில் உலகளாவிய தொடர்புகள் எந்த வகை யிலும் புறக்கணிக்கப்பட முடியாதவை. வரலாற்று உணர்வை வளர்த்துக் கொள்ளாத நிலைமையில் வாழ்க்கை பொருள் உடையதாக இல்லை. வாசிப்புக்கு உகந்த வகையில் எளிமையாகவும், தெளிவாகவும் மொழியாக்கம் செய்திருப்பது இவற்றின் தனிச்சிறப்பு.

மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

ஆசிரியர்: ஜார்ஜ் தாம்ஸன்

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை, இன்குலாப்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098.

விலை: ரூ. 160/-

 

மனித சாரம்

ஆசிரியர்: ஜார்ஜ் தாம்ஸன்

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098.

விலை: ரூ.135/-

 

முதலாளியமும் அதன் பிறகும்

ஆசிரியர்: ஜார்ஜ் தாம்ஸன்

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098.

விலை: ரூ.130

Pin It