‘செம்மொழி’என்ற சொல்லாடலை மிக அதிகமாக இன்றைக்கு நிகழ்த்துகின்றோம். 2004-ஆம் ஆண்டு நடுவண் அரசு, தமிழிற்கான ‘செம்மொழி’அறிவிப்பை வெளியிட்ட பின்னரே இச்சொல்லாடல் மிகுதியான அளவில் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டு கடந்த தொன்மை, தனித்து இயங்கும் ஆற்றல், மிக நீண்ட இலக்கிய, இலக்கண வளமை போன்றன ஒரு மொழிக்கான செம்மொழித் தகுதிப்பாடுகளாக வரை யறுக்கின்றனர். இந்தத் தகுதிப்பாட்டைக் கொண்டுள்ள மொழிகள் உலகில் சிலவேயாகும். கிரேக்கம், இலத்தின், அரபு, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகளாகத் தகுதி பெற்று உள்ளன.

இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழித் தகுதிக்கான அறிவிப்பை வெளியிட்ட உடனேயே அரசியல் நெருக்கடியில் இந்திய மொழிகள் சிலவும் செம்மொழி என்ற தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளன. இன்னும் சில மொழிகள் பெற முயற்சித்து வருகின்றன. இது இந்தியச் சூழலில் நிகழும் வேடிக்கையான நிகழ்வாகவே உலக மொழியியல் அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

tamil 500

ஒரு மொழியைச் செம்மொழி என்று பேசிக் கொண்டாலும், அரசியல் நெருக்கடியில் செம்மொழித் தகுதியைப் பெற்றுக்கொண்டாலும் உலக மொழியியல் அறிஞர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வது இல்லை. அறிவார்ந்த செயல்பாடாக அவற்றைக் கருதுவதும் இல்லை. மொழியியல் அறிஞர்கள் (நடுநிலையான அறிஞர்கள்) உலக வழக்கிலிருக்கும் மொழிகளின் சிறப்பு, தொன்மைகள் எல்லாவற்றையும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அவர்கள் பல நிலையில், பல காலம் ஆராய்ந்து தெளிந்ததின் அடிப்படையில்தான் செம்மொழியாக ஏற்றுக்கொண்டார்கள்; இந்திய அரசும் அதை உணர்ந்து ஏற்றுக்கொண்டது. இது ஏதோ அரசியல் நெருக்கடியால் பெறப்பட்டது என்ற மாயை நமது அண்டை மாநிலத்தவர்களுக்கு இருப்பது வேதனைக் குரியது. திட்டமிட்டு சில அமைப்புகள் தவறான எண்ணத்தைப் பொதுமக்களிடம் பரப்பச் செய்கின்றன.

செம்மொழியாக அறிவிக்கப்பட்ட காலத்தில் மைய அரசில், தமிழக அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மேலோங்கியிருந்தன என்பது எதேச்சையாக நிகழ்ந்தது. தமிழக அரசியல் கட்சிகளின் செல்வாக்கு மைய அரசில் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட காரணத் தால், ஏதோ செம்மொழித் தகுதிகள் இல்லாத தமிழுக்கு அந்தத் தகுதியை வழங்கிவிட்டதாக நமது அண்டை மாநிலத்தவர்கள் கருதுவது வேடிக்கையாக இருக்கின்றது. எந்தவகையிலும் அறிவார்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர்கள் கருத்து அமைந்திருக்க வில்லை. இவர்களால் ‘எங்கள் மொழிக்கும்’செம் மொழித் தகுதி வேண்டும் என்ற குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது. தமிழ் மொழி இயல்பாகவே செம்மொழித் தகுதியைக் கொண்ட மொழி என்பதும், அரசியல் அளவில் மட்டுமே அவற்றிற்குச் செம்மொழித் தகுதியை இந்திய அரசு வழங்கியது என்பதும் அந்த சில அறிஞர்களும் அறிந்துகொள்ள மறுப்பது அபத்த மான ஒரு நிலைப்பாடாகும்.

ஒரு மொழி செம்மொழியாவதற்குரிய தகுதிகள் என்ன என்பன இந்தியச் சூழலில் இன்னும் முறையாக வகுக்கப்படவில்லை என்பதற்கும் இவ்வகை நிலைப் பாடுகள் உதாரணமாகின்றன. இதனால் ‘செம்மொழி’என்ற சொல்லிற்குரிய பொருளைப் பலரும் பல வகையில் கூறிவருகின்ற நிலை இங்கு இருந்துவருகின்றது.

1903-இல் பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழியின் வரலாறு’எனும் நூலில் ‘செம்மொழி’என்பதற்கு இவ்வாறு விளக்கம் கூறியிருக்கிறார்.

திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின்கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன் முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதினுணர வல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப் படுவது. இது தமிழ்மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக்கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷைச் சொற்களன்றித் தன் சொற்களே வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ், செம்மொழி யென்பது திண்ணம். இதுபற்றியன்றே தொன்று தொட்டுத் தமிழ்மொழி செந்தமிழ் என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதா யிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற் றானாராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழி யேயாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோடொருங் கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத் தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம் (தமிழ்மொழி வரலாறு, 1950, ப. 122 - 123).

தமிழறிஞர்கள் முதலில் ‘செம்மொழி’என்ற சொல்லாடலை ‘வடமொழி’க்கு மாற்றாகவே முன் வைக்கத் தொடங்கியுள்ளனர் என்ற வரலாற்றுப் புரிதலை மேற்குறித்த பரிதிமாற் கலைஞரின் கருத்து உணர்த்துகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்விப்புலத்தில் தமிழ்மொழி புறக் கணிக்கப்பட்டுள்ளது. காலனிய அரசு தமிழை ஒரு வட்டார மொழியாகக் கருதியது அதற்குக் காரணமாக இருந்தது. இன்னொரு நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு வடமொழி உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காத நிலையும் இருந்தது. அந்தக் காலத்தில் சமநிலையில் பணியாற்றும் ஆசிரியர் களுக்குள் வழங்கப்படும் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. உயர்கல்வி அளவில் தமிழ்மொழிப் புறக் கணிப்பும், ஆசிரியர்களுக்கிடையில் இருந்த ஊதிய ஏற்றத்தாழ்வும் தமிழ் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர் களுக்கு வேதனை அளிக்கும் வகையில் இருந்தன. இதனால் தமிழ்மொழி வடமொழியோடு ஒப்புவைத்து அல்லது மேம்பட வைத்து மதிக்கத்தக்க மொழி என்ற கருத்தாக்கம் தமிழாசிரியர்களால், தமிழறிஞர்களால் முன்வைக்கப்பட்டது.

உயர்கல்வி அளவிலும் கருவி மொழியாகத் தமிழ் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஏனைய கீழைத்தேய மொழிகளான சமஸ்கிருதம், அரேபியம், பாரசீகம் போன்ற மொழிகள் பல்கலைக்கழகத்தில் கருவிமொழி களாக இருந்தன. இந்தப் புறக்கணிப்பால் தமிழ் அறிஞர்கள் பிறமொழிகளோடு தமிழை ஒப்புநோக்கி ஆராய்ந்து அதன் சிறப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர். பரிதிமாற் கலைஞர் எழுதிய ‘தமிழ் மொழியின் வரலாறு’எனும் நூல் இந்தப் பின்புலத்தில்தான் எழுதப்பட்டது. இந்த நூலில் தமிழ் ‘செம்மொழி’என்ற வாதத்தை மிக விரிவான அளவில் அவர் முன்வைத்திருந்தார். அந்தக் காலத்தில் இதே கருத்தை வலியுறுத்தி புலமையளவில் செயல்பட்ட பல தமிழறிஞர்கள் தங்கள் கருத்தை எழுதினர். பல தமிழ்சார்ந்த அமைப்புகளும் மாநாடுகள் நடத்தித் தீர்மானங்கள் இயற்றித் தமிழ்மொழி புறக் கணிப்புக் குறித்த எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்தன.

6,7.5.1918-இல் நடைபெற்ற ‘மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை’கூட்டத்தில் சமஸ்கிருதம் மொழிப் பாடத்தைப் போன்று பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் தமிழ்மொழிப் பாடமும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 24, 25. 5. 1919இல் ‘கரந்தைத் தமிழ்ச் சங்கமும்’இவ்வாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

தமிழ்மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர் தனிச் செம்மொழியென உறுதிப்படப் பல திறத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக்கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ்மொழி, ஓர் உயர்தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக்கொண்டு, இத்தென்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டும் (தமிழ்ப் பொழில், 1919).

தொடர்ச்சியான இவ்வகை கோரிக்கைகளை ஆட்சியாளர்களின் கண்டுகொள்ளாத போக்கைக் கண்டித்து வலியுறுத்தி 21.08.1920இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவில் மீண்டும் இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

எவ்வளனும் இனிது வாய்ந்துள்ள தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக்கழகத்தாரை வற்புறுத்தியும், அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிழை யென்று அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள் வதுடன், கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரிகளில் கலைபயில் கருவிமொழியாகவும் கொண்டு, தங்கள் முதல் கடமையைச் செலுத்தும் படி அவர்களை இப்பெருங்கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் (தமிழ்ப் பொழில், 1920).

1922இல் நடைபெற்ற பதினோராவது ஆண்டு விழா, 1923இல் நடைபெற்ற பன்னிரண்டாவது ஆண்டு விழா 1938இல் நடைபெற்ற வெள்ளி விழா என தொடர்ந்து தமிழ் செம்மொழி குறித்த தீர்மானத்தைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறைவேற்றி வந்தது. இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவும் இன்னொரு வடிவ மாகவும் தமிழிற்கான ‘செம்மொழி’தகுதி குறித்த சமகால குரல்கள் எழுந்தன.

இந்த வரலாற்றிற்கும் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றிய சங்க இலக்கியம் ஒன்றில் ‘செம் மொழி’என்ற சொல்லாட்சி பயின்றுவந்துள்ளது நம் கவனத்தை ஈர்க்கின்றது.

சங்கப் புலவரொருவர் ‘செம்மொழி’என்ற சொல்லை இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் பொருளி லிருந்து முற்றாக வேறுபட்டிருக்கும் ஒரு பொருளில் கையாண்டிருக்கிறார். அச் சொல் சங்க இலக்கிய அக நானூற்றுப் பாடலொன்றில், பயின்றுவந்துள்ளது. இன்றைக்கு நாம் அறிந்துவைத்திருக்கும் பொருளி லிருந்து முற்றாகப் பொருள் மாற்றத்துடன் அச்சொல் பயின்றுவந்துள்ளது. மாமூலனார் எனும் சங்கப் புலவர் கணவனின் பிரிவுத் துன்பத்தை ஆற்ற இயலாத பெண் ணொருத்தி, பெரிதும் துன்புற்றுத் தோழியிடம் வருந்திக் கூறும் அமைப்பிலான பாடலொன்றைப் பாடியுள்ளார். அப்பாடல்,

அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை

வரைந்துதாம் பிணித்த தொல்கவின் தொலைய

எவனாய்ந் தனர்கொல் தோழி ஞெமன்ன்

தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி

உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே

உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக

அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை

சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு

ஏழிற் குன்றத்துக் கவாஅற் கேழ்கொளத்

திருந்தரைநிவந்த கருங்கால் வேங்கை

எரிமருள் கவளம் மாந்திக் களிறுதன்

வரிநுதல் வைத்த வலிதேம்பு தடக்கை

கல்லூர் பாம்பிற் றோன்றுஞ்

சொல்பெயர் தேஎத்த சுரனிறந் தோரே (அகம். 349).

என வருகின்றது.

தோழியே! நம் தலைவர் எம் கைவளை நெகிழ பாலை வழியைக் கடந்து நம்மைக் காட்டிலும் எந்தப் பொருளை எண்ணிச் சென்றுள்ளார்! என்று இல்லறப் பெண், தம் கணவர் பிரிந்து சென்ற துன்பத்தை வருந்திக் கூறுவதாக இந்தப் பாடல் அமைகின்றது. இப் பாடலின் இடையில் அரசன் நன்னனின் சிறப்பு இவ்வாறு சுட்டப்படுகின்றது.

........................... ஞெமன்ன்

தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி

உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே

உரன்மலி உள்ளமொடு முனைபாழ் ஆக

அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை

சூழாது சுரக்கும் நன்னன்

‘நன்னன் என்பான் முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல்போல் நடுவுநிலைமை தவறாத, நின்ற சொல்லையுடைய நல்ல உள்ளத்தினன். வறுமையால் வாடிய சுற்றத்தாருடன் பாணர் முதலியோர் தன்னை நினைத்து வரின் அவர்கள் தகுதி குறித்து ஆராயாது மிகுதியாகக் கொடுத்து மகிழும் பண்பினன்’என்பதாகும் இப்பாடல் வரிகளின் பொருள்.

‘பொருளின் அளவை அறியும் கருவியாகிய துலாக்கோலை ஒத்த குற்றமற்ற செம்மொழியினை - மெய்ம்மொழியினை உடையவன் நன்னன்’என்று நன்னனைச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ‘செம்மொழி’என்றால் ‘மெய்ம்மொழி’என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. தமிழ்மொழி செம்மொழி என்பதற்கு அதன் தொன்மை முதன்மைச் சான்றாக உள்ளதை உலகம் அறியும். ‘செம்மொழி’என்ற சொல்லும் தொன்மையானது என்பதும் தமிழிற்குச் சிறப்புக்குரியதாக உள்ளது.

துணைநின்ற நூல்கள்

1.    சூரியநாராயண சாஸ்திரியார், வி.கோ. 1950. தமிழ்மொழி வரலாறு, திருநெல்வேலி: வி. சூ. சுவாமிநாதன் வெளியீடு.

2.    பரிமளம், அ.மா.பாலசுப்பிரமணியன், கு.வெ. 2004. அகநானூறு மூலமும் உரையும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

3.    ஆசிரியர் குழு. 1919 - 1920. தமிழ்ப் பொழில், தஞ்சை: கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு.

Pin It