ஒவ்வொரு சமூகத்திலும் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கருத்தாக்கங்கள் உருப் பெறுவது இயல்பு. தொல்காப்பியர் காலம் தொடங்கி தமிழ்ச்சமூகத்தில் பல்வேறு கருத்தாக்கங்கள், இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகள் சார்ந்து உருவாயின. இவ்வகையில் உருவானவற்றைத் தமிழ்ச்சமூகம் கண்டறிந்த அறிவுத் தொடர்பான உரையாடல்கள் என்று கூறமுடியும்.இவ்வுரையாடல்களே குறிப்பிட்ட சமூகத்தின் தத்துவ மரபு என்றும் கூறலாம்.தத்துவ மரபின் வரலாறு பற்றிய தேடலே அறிவுத் தோற்ற வியலாக அமைகிறது.இயற்கை மற்றும் மனித நடவடிக்கை சார்ந்து தமிழ்ச்சமூகத்தில் உருவான தத்துவ மரபுகளைப் பின்கண்ட வகையில் தொகுக்கலாம்.

-  தொல்காப்பியம் மற்றும் சங்கப் பிரதிகள் (திருமுருகாற்றுப்படை போன்றவை நீங்கலாக) பேசும் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட மரபு.இம்மரபு இயற்கையோடு பெரிதும் இணைந்த ஒன்றாக அமைகிறது.இயற்கை நிகழ்வு சார்ந்த அறிவுத் தோற்றவியலாக இதனைக் கருதமுடியும்.

-  சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட பிரதிகள் சார்ந்து வெளிப்படும் உலகாயதத்தை முதன்மைப் படுத்தும் தத்துவ மரபுகள்.

-  நிகண்டுகள், ஆகம நூல்கள் வழி அறியப்படும் மரபுகள்; இவை பல்வேறு சமய உரையாடல் களின் உடன் விளைவாக உருப்பெற்றவை.

-   உலகில் நிகழ்ந்த பல்வேறு புதிய விளைவுகள் வழி பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் உள்வாங்கிக்கொண்ட மரபுகள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பல்வேறு புதிய நிகழ்வுகள் நடந்தேறின. இதுவரை நிகழ்ந்து வந்த நிகழ்வுகள்,புதிய நிகழ்வுகளால் பெரிதும் தாக்கமுற்றன.புதிய சிந்தனை முறைகள் உருவாயின.புதிய கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நவீன கருவிகள் நடைமுறைக்கு வந்தன.அச்சுக்கருவி போன்றவை புதிய சமூக நடைமுறைக்கு வழி கண்டன.இவ்வகையான தன்மைகளைக் கீழ்க்காணும் வகையில் தொகுக்கலாம்.

-  புதிய உற்பத்திக் கருவி மற்றும் புதிய உற்பத்தி முறை ஆகியவை உருப்பெற்றன. மனித உழைப்பு என்பது எந்திரங்களின் உதவியோடு நடை முறைக்கு வந்தது.

-   காலம் காலமாகப் பின்பற்றப்பட்ட நம்பிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன.

-   நடைமுறை வாழ்க்கையில் புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்ததோடு, உலகியல் குறித்த புதிய தத்துவ உரையாடல்களும் உருப்பெற்றன.

-   கேள்விக்கு ஆளாகாமல் நடைமுறையில் இருந்த சமயங்கள் குறித்து, கேள்விகள் எழுப்பப்பட்டன.சமயத்தோடு சார்ந்த கடவுள் இருப்பு குறித்தும் கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.

-   மேற்குறித்த பின்புலத்தில் புதிய சிந்தனைமுறை உருவானது. தமிழ்ச்சமூகத்தின் அறிவுத் தோற்ற வியலில் (Epistemology)புதிய தன்மைகள் உருப் பெற்ற காலமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டைக் கூறமுடியும்.

மேற்குறித்த பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தமிழ்ச்சமூக அறிவுத் தோற்றவியல் குறித்த உரையாடல் மேற்கொள்வது இங்கு நோக்கமாக அமைகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு நிகழ்வுகள் எந்தெந்த அடிப்படைகளில் நிகழ்ந்தன; அவற்றிற்குப் பின்புலமாக அமைந்தவை எவையெவை; பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தவைகளை எப்படி வரையறை செய்யலாம் எனப் பல்வேறு கேள்விகள் முன்னெழுகின்றன.இதனைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் வகையில் சுருக்கமாகத் தொகுக்கலாம்.

-   தமிழ்ச்சமூகத்தில் கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் செல்வாக்கு பெற்றுவந்த வைதீக சமய நடவடிக் கைகள் குறித்த புதிய கண்ணோட்டங்கள் உருவாயின. சமய மறுமலர்ச்சி, சமயச் சீர்திருத்தம், சமரச சன்மார்க்கம் ஆகிய பிற சொல்லாடல்கள் உருவாயின.

-   இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருவான பல்வேறு புதிய சிந்தனை மரபுகள், காலனியமாக இங்கு வடிவம் பெற்றது. கல்வி, சமயம், நிறுவனங்கள் ஆகிய பிறவற்றில் காலனியம் புதிய புதிய செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தியது.

-   கல்கத்தா, பம்பாய், மதராஸ் என்னும் மூன்று முக்கிய நகர உருவாக்கங்கள், அதனைச் சார்ந்த பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகிய பிறவற்றைக் காலனியம் உருவாக்கியது.மொழி மற்றும் இனக்குழுக்கள் புதிய புதிய அடையாளங்களைப் பெறத் தொடங்கின. வரலாறு எழுதுவதற்கான புதிய தரவுகள் கண்டறியப் பட்டன. பழைய பிரதிகள் புதிய கண்ணோட்டத்தில் பொதுவெளிக்கு அறிமுகமாயின.

மேற்குறித்த சூழலில் தமிழகத்தில் செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கம் (1878-1888) என்னும் அமைப்பு,தமிழ்ச்சமூகத்தின் அக்காலத்திய அறிவுத் தோற்றவியல் சார்ந்த வகிபாகம் குறித்துப் பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.இதனைக் கீழ்க்காணும் பொருண்மைகளில் விரிவாக விவாதிக்க இயலும்.

-  சென்னை இலௌகிக சங்கம் என்னும் அமைப்பின் தத்துவார்த்த சார்பு நிலையை எவ்வகையில் வரையறை செய்வது;

-   காலனிய நடவடிக்கைகளிலிருந்து, இவ்வமைப்பு எவ்வகையில் வேறுபட்டுச் செயல்பட்டது என்பதை எவ்விதம் பதிவு செய்வது

-    ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கப் புத்தொளி மரபுகளை இவ்வமைப்பு எவ்விதம் எதிர்கொண்டது என்னும் புரிதல்.

-  காலனிய இந்தியாவில், இவ்வமைப்பின் தனித் தன்மைகள் எவையெவை

-   மேற்குறித்த பின்புலத்தில், தமிழ்ச்சமூக அறிவுத் தோற்றவியலுக்கு எவ்வகையான பங்களிப்பைச் செய்துள்ளது என்ற புரிதல்.

அகில உலக சுய சிந்தனையாளர்கள் அமைப்பு (International Congress of Free-thinkers), மேலை நாடு களில் பதினாறாம் நூற்றாண்டு முதல் படிப்படியாக வளர்ந்து வந்தது.இவ்வமைப்பு உருவாக்கப் பின்புலம் கீழ்க்காணும் கூறுகளில் நடைபெற்றது.

கோப்பர் நிக்கஸ் (1473-1543) பூமி சூரியனைச் சுற்றிவருகிறது, உலகம் என்று கருதப்படும் பூமிப்பந்து தட்டையானது அன்று;அது பந்துவடிவ அமைப்புடையது;ஆகிய பிற கண்டுபிடிப்புகளைச் செய்தார்.அதனை அவர் வெளி உலகுக்கு அறிவித்தால்,தனது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார். ஆனால் புரூனோ (1548-1600) இதனை உலகம் அறியும் வகையில் பல்வேறு இடங்களிலும் சொற்பொழிவுகள் செய்து வந்தார்.

கணித அறிஞரான புரூனோ, இங்கிலாந்து, ஐரோப்பா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் பிற இடங்களிலும் இக்கருத்தைப் பிரச்சாரம் செய்துவந்தார். கத்தோலிக்கக் கிறித்துவம் இதனை ஏற்றுக் கொள்ள வில்லை.இக்கருத்துகள் கிறித்தவ சமயத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.பைபிள் கூறும் கருத்து களுக்கு நேரெதிரானவையாகவும் இருப்பதை அறிந்தனர்.

கத்தோலிக்கரான புரூனோ இவ்வகையில் சொற்பொழிவுகள் செய்து வருவதை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.இதனால் அவரைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தினர். இறுதியில் 1600ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள், அவரை நெருப்பில் இட்டுக் கொளுத்திக் கொன்றனர்.இந்நிகழ்வு உலகில் இருந்த சுயசிந்தனையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

இவர்கள் இணைந்தே அகில உலக சுய சிந்தனையாளர்கள் அமைப்பைப் பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கினர். இவ்வமைப்பு, கிறித்தவ அதிகாரப் பீடங்களுக்கு எதிராகச் (Anti-Church Movement) செயல்படத் தொடங்கியது.வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் செயல்படத் தொடங்கினர்.இவ்வமைப்பினர் முன்னெடுத்த கருத்து நிலைகள் பின்வரும் வகையில் அமையும்.

-   கிறித்தவ மடாலயங்களை எதிர்த்துப் போராடுவது

-  பைபிள் கருத்துக்களை விமர்சனபூர்வமாக மறுப்பது

-  கடவுள் என்னும் கருத்து நிலையைக் கேள்விக்கு ஆளாக்குவது.

-  மதத்தை ஏற்றுக்கொள்ளாது மதச்சார்பற்ற சிந்தனைமுறையை (Secular) முன்னெடுப்பது.

மேற்குறித்த அமைப்பின் ஒரு பிரிவாக இலண்டன் நகரில் “சமயச் சார்பற்ற தேசிய அமைப்பு” (National Secular Society) உருவானது. கி.பி.1860இல் இவ் வமைப்பு உருவாகிவிட்டது. இவ்வமைப்பின் சென்னை நகரப் பிரிவாக இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu free thought union) தொடங்கப்பெற்றது. இவ்வமைப்பு பின்னர் 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் சென்னை இலௌகிக சங்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பதினாறாம் நூற்றாண்டு முதல் கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகம் மூலம் உருவான காலனியம் என்பது,படிப்படியாக வளர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியா என்று சொல்லப் படும் முழு நிலப்பகுதியையும் ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது. 1799 இல் திப்புசுல்தான் வீழ்ச்சியோடு இத்தன்மை நடைமுறைக்கு வந்தது. காலனியச் செயல் பாடுகளைச் சுருக்கமாகப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.

-   இந்தியா என்ற நிலப்பகுதியின் வளங்களைப் பல்வேறு ஐரோப்பிய வணிகக் குழுக்கள் தனதாக்கிக் கொள்வது, படிப்படியாக காலனிய அடிமைக்கு உள்வாங்கப்பட்டு, வளங்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சேர்ப்பது;இத்தன்மை இறுதியில் அனைத்து வளங்களும் பிரித்தானிய மகாராணிக்கே உரியது என்னும் சூழல் 1858இல் உருவானது.

-  கிறித்தவ சமயப் பரப்பலை மேற்கொள்வதற்குப் பாதிரியார்களை வரவழைத்துச் செயல்படுவது; இதன் உடன் விளைவாகவே கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.

-  பிரித்தானிய அரசு, கிறித்தவ நிறுவனங்கள் என்ற இருகூறுகளில் காலனியம் செயல்பட்டது.

மேற்குறிப்பிட்ட காலனியச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நடவடிக்கைகளைச் சென்னை இலௌகிக சங்கம் மேற்கொண்டது.இங்கிலாந்து போன்ற நிலப்பகுதியிலிருந்து, தமது செயல்பாட்டிற்கான கருத்து நிலைகளை உள்வாங்கியபோதும், இந்தியா என்னும் நிலப்பகுதியில் சுயமாகச் செயல்படத் தொடங்கினார்.

காலனிய செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை;காலனிய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.காலனியத்தின் ஒரு பிரிவான மதக்கருத்தாடல்களை முற்றுமுழுதாய்ப் புறக்கணித்தனர்.இவ்வகையில் கிறித்தவ சமயத்தின் எதிர்நிலையில் இவர்களும் செயல்பட்டனர்.இதன்மூலம் தமது தலைமை நிறுவனமான இலண்டன் சமயச் சார்பற்ற அமைப்போடு (London Secular Society) தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். இவ்வகையில் உலகம் தழுவிய கருத்துநிலை ஒன்றின் தமிழகப் பிரிவாக இவர்கள் செயல்பட்டனர்.அன்றைய இந்தியாவில் இவ்வகையான வேறு ஒரு அமைப்பைக் கூறமுடியாது.

இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உருவான தத்துவார்த்த சிந்தனை மரபுகளை இவர்கள் உள்வாங்கினர். பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலைப் போர், இங்கிலாந்தின் சார்டிஸ்ட் தொழிலாளர் இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை சார்ந்து அந்த நாட்களில் உருவான புத்தொளி மரபுகள் குறித்து நாம் அறிவோம். அதைப்போலவே அந்நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்து உருவன தொழிற்புரட்சி குறித்தும் நாம் அறிவோம். இத்தன்மைகளைச் சென்னை இலௌகிக சங்கம் எவ்வகையில் தன்வயமாக்கிக் கொண்டது என்பதைச் சுருக்கமாகத் தொகுக்கலாம்.

-   கோப்பர்நிக்கஸ் (1473-1543), புரூனோ (1548-1600), டார்வின் (1809-1882) ஆகியோர் உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமது அடையாளமாக ஏற்றுக் கொண்டனர்.

-   மால்தூஸ் (1766- 1834) கண்டறிந்த பொருளியல் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர்.

-   ஸ்பீனோசா (1632-1677), வால்டேர் (1694-1778), டேவிட் ஹீயூம் (1711-1776), தாமஸ்பெயின் (1737-1809), இங்கர்சால் (1833-1899), பிராட்லா (1833-1891), அன்னிபெசன்ட் (1847-1933) ஆகிய பிறர் முன்னெடுத்த தத்துவார்த்த உரையாடல்களை முன்னெடுத்தனர்.

சென்னை இலௌகிக சங்கம் மேற்குறித்த செயல்பாடுகளை முன்னெடுத்ததின் மூலம், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் அறிவுத் தோற்றவியலுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்று கருதவியலும். இதனைக் கீழ்க் காணும் வகையில் உரையாடலுக்கு உட்படுத்த இயலும்.

சென்னை இலௌகிக சங்கம்,தமது இயக்கத்தின் இதழான தத்துவ விவேசினியில் (4:8:23.8.1885) பூர்வீக சுயாக்கியானிகள் என்னும் தலைப்பில் புரூனோ, வால்டேர், டேவிட் ஹீயூம், ஸ்பீனோசா பெனிடிக்ட்ஸ், இங்கர்சால் ஆகிய பிறர் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளமை. புரூனோ குறித்த பதிவு பின்வரும் வகையில் அமைந்துள்ளது.

“...இவர் அனேக அனேக உலகங்கள் இருக்கின்றன வென்றும், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூரியனாகவும் அச்சூரியர்களைச் சுற்றி வரும் கோளங்கள் பலவென்றும் கூறினதற்காக இவரை ஆறு வருஷ காலம் வரையிலும் சிறையில் போட்டு வைத்தார்கள். அக்காலங்களில்,கணித சாஸ்திரத்தைப் போதித்து வந்தார்.இவ்வாறு ஆறு வருஷ காலத்திற்குப்பின் இவரை விசாரணை செய்து முறையே தேசப் பிரஷ்டராக்கிக் கண்ட நிஷ்டூரங்களுக்குட்படுத்தி 1600ஆம் வருஷம் பிப்ரவரி மாசம் 16ஆம் திகதி தினம் நெருப்பு ஸ்தம்பத்தில் கட்டிக் கொளுத்தி விட்டார்கள்.

இவர் சித்துக்கெல்லாம் காரணமாயுள்ள பரமாத் மாவினால் உலகம் தொழிற்பட்டு வருகிறதென்றும், சத்துப் பொருளும் சித்துப் பொருளும் நித்தியப் பொருள்களெனவும், சித்துப் பொருள்களிலுமுள்ள தென்றும்,சத்துப்பொருளானது எல்லா ரூபங்களுக்கு முதற் காரணமாகவும் அணி பொருளாகவு மிருக்கின்றதென்றும்;சத்துப் பொருளும் சித்துப் பொருளும் ஒருங்கே கூடிப் பரமாத்மாவாகின்ற தென்றும் நம்பியிருந்தார்.அஃதாவது இவர் ஏக வஸ்துக்கியானியாக விருந்தார்.அஃதுதானென்ன வெனில் இப்பிரபஞ்சத்தைவிட வேறொன்றினும் நம்பிக்கை வையாத நிரீச்சுர வாதியாக விருந்தா ரென்பது திண்ணம். இவர் தனக்கு எது சரியாகத் தோன்றினதோ அதனை நம்பி அதற்காக இறக்க வேண்டிய காலம் வந்துழிப் பிந்திப் புறங்காட்ட நெஞ்சினையுடையவராக விருந்தார்.

இவரைக் கொலை புரிந்ததற்காகப் பழிவாங்க வேண்டு மாயின் கண்ணுள்ள ஒவ்வொரு குருமார்களையும் பலியிட்டுப் பாழடைந்து கிடக்கும் ரோமாபுரியின் கோயில்களை அஸ்திவாரமாகக் கொண்டு,இவ்வித சிரோன்மணிக்குத் தக்கவோர்பிரதமை யெழுப்பும் வரையிலும் அப்பழி அத்தேசத்தாரை விட்டகலாது. D. (தத்துவ விவேசினி:4:8: 23.8.1885)

இவ்வகையில் உலக இயக்கம் குறித்த மதம் சார்ந்த கருத்துநிலைகளிலிருந்து மாறுபட்ட புரூனோவை தங்களது அடையாளமாகக் கொள்ளும் வகையில்,அவர் கொலை செய்யப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டைக் கணக்கிடும் மரபை உலகம் முழுதும் செயல்பட்ட சுயசிந்தனையாளர்கள் கைக்கொண்டனர்.

இதனை சென்னை இலௌகிக சங்கம் தமது இதழ்களில் நடை முறைப்படுத்தியது. எடுத்துக்காட்டாக 1886 என்பதற்கு இணையாக A.S.286 என்று குறித்தனர். புரூனோ கொலை செய்யப்பட்டு 286ஆண்டுகள் ஆகியிருப்பதை நினைவுபடுத்தும் வகையில் அது அமைந்திருக்கிறது. A.D.286 என்பதற்குப் பதில் A.S.286 என்று எழுதினர்.

A.S என்பது Anno-Scientiae என்னும் இலத்தீன் சொல். இதற்குக் காரணகாரியம் குறித்து அறிந்த காலம் (Age of Reason) என்பது சுயசிந்தனையாளர்களின் விளக்கம் ஆகும். இதனை மதச்சார்பற்ற காலக் கணக்கிடலாகக் (Secular Calendar) கருதினர். (The Thinker :2:43, 20.4.1884) சென்னை இலௌகிகசங்கம்,உலகம் தழுவிய சுய சிந்தனையாளர்கள் மரபைத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப் படுத்தியிருப்பதைக் காண்கிறோம்.மதத்திற்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் சுயசிந்தனை மரபு களுக்குமான தொடர்பை விளங்கிக்கொள்வது அவசியம்.

இத்தன்மை சார்ந்தே ஒவ்வொரு குறிப்பிட்ட இனம் மற்றும் அதன்வழி கட்டமைக்கப்படும் தேசம் சார்ந்த தத்துவ வரலாற்றைக் கட்டமைக்க இயலும். இவ்வகையில் தமிழ்ச்சூழலின் தத்துவ வரலாற்றுப் புரிதலை இப் பின்புலத்தில் கவனத்தில் கொள்ளும் தேவையுண்டு. புரூனோவைப் போலவே டார்வின் கோட்பாடுகளையும் சென்னை இலௌகிக சங்கத்தினர் போற்றிப் பேசினர். டார்வின் குறித்த அவர்களது பதிவு பின்வருமாறு அமைகிறது.

“ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினர் மனையில் போஜனஞ் செய்யாதும், ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுப்பினை செய்யாதும்,ஒருவரை யருவர் பகைக்கின்றமையால்,டார்வின் சொல்லிய பிரகாரம் மனிதர் தாழ்ந்த ஜீவஜெந்துக்களினின்றே படிப்படியாக உயர்ந்து மானிட உருத்தாங்கி மேற்பட்டிருக்க வேண்டுமேயன்றி,கடவுளால் சமைக்கப்பட்டார்களென்பதும்,பிரம்ம தேகத்தின் பல இடங்களில் உதித்த இட பேதத்தினால் வருணபேதம் தோன்றியதென்பதும் வழுவான கோட்பாடென்று வெளியிடப்படுகிறது. (M.Masilamony Moodaliar: 1:25; 17.12.1882)

இதன் மூலம் டார்வின் கண்டுபிடித்த பரிணாமக் கோட்பாட்டை (Evolution Theory) இவர்கள் ஏற்றுச் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். இவ்வகையில் அறிவியல் கண்டுபிடிப்பு வழி உருவான மதச்சார்பற்ற கருத்தியலை, இலண்டன் மதச்சார்பற்ற இயக்கம் (London National Secular Society) நடைமுறைப்படுத்தியது.

‘Secular’ என்ற சொல்லாட்சியை இவ்வமைப்புதான் முதல் முதல் உருவாக்கியது. அதன் நேர்வாரிசாக சென்னை இலௌகிக சங்கமும் செயல்பட்டுத் தமிழ்ச் சூழலில் புதிய தத்துவக் கண்ணோட்டத்திற்கு வழி கண்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

தாமஸ் இராபர்ட் மால்தூஸ், 1798இல் “Essay on the Principle of population”என்னும் கட்டுரையை எழுதினார்.1803இல் மீண்டும் அக்கட்டுரை விரித்து எழுதி வெளியிடப்பட்டது. உணவு உற்பத்தி, 1,2,3,4,5 என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைகிறது. மக்கள் பெருக்கம் 1,2,4,8,16 என்னும் விகிதத்தில் நடைபெறுகிறது. இதனால் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் மிகப்பெரும் இடைவெளி உருவாவதாக இவர் கணக்கிட்டார். இக்கோட்பாட்டைப் பின்னர் பலர் ஏற்றுக்கொள்ள வில்லை.குறிப்பாக மார்க்சியக் கோட்பாட்டாளர்கள் மறுத்தனர். இக்கோட்பாட்டை பிராட்லாவும் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஏற்றுக் கொண்டனர். அவர்களது அமைப்பின் மூலம், மக்கள் பெருக்கத்தைக் குறைப்பதற்காகச் சிறுவெளியீடுகளை வெளியிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து அரசு அவர்கள் இருவரையும் கைது செய்தது. வழக்காடி, பின்னர் வெளி வந்தனர்.

மால்தூஸியன் கோட்பாட்டை சென்னை இலௌகிக சங்கத்தினர் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். இதற்கென தாரித்திர நாச சமாஜம் என்னும் அமைப்பை உருவாக்கினர். இதற்கு பி.எல்.நரசு அவர்களைக் காரியதரிசியாக நியமித்தனர். இவர் பிற்காலத்தில் பௌத்த அறிஞராக வாழ்ந்தவர். அன்னிபெசன்ட் அம்மையார், மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைப்பது தொடர்பாக எழுதிய நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்து,

“பிரஜாவிருத்திப் பிரமாணம்” என்னும் தலைப்பில் “தத்துவ விவேசினி” இதழில்தொடராக வெளியிட்டனர். இவ்வகையில் மேலைநாடுகளில் முன்னெடுக்கப்பட்ட வறுமை ஒழிப்பதற்கான செயல் பாடுகளைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த முயன்றனர். இவ்வகையில் புதிய பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் இவர்கள் முன்னெடுத்ததை அறிய முடிகிறது.

சென்னை இலௌகிக சங்கத்தினர் பொருள்முதல் வாதக் கோட்பாட்டை மூர்த்த பூதிய வாதம் (Materialism) என அழைத்தனர். இந்தத் தத்துவம் குறித்து அவர்களது பதிவு பின்வரும் வகையில் அமைகிறது.

யூததத்துவம், யதார்த்த தத்துவம், மானத் தத்துவம் முதலிய தத்துவங்களை யுணராமல் வாயில் வரும்படி கடவுளென்றும், சுவர்க்கமென்றும், நரகமென்றும், பேயென்றும் பிசாசென்றும் சொற் சிருஷ்டிகள் செய்து அறியாமைக்கு ஆட்பட்டு, தெரியாமைக்குத் தொண்டு பூண்டு அந்தகாரத் திற்கு வந்தனஞ் செய்து, நாளவம் போக்கும் ஆஸ்திகர்காள்! எங்கள் மதிமயக்க மொழிய மருந் தொன்றுண்டு. அதைத் தேடிப் புசித்துண்ணுங்கள். உங்கள் மயக்கத்தைப் பரித்தியாகம் பண்ணுங்கள். அம்மாமருந்தோ தத்துவ சாத்திரமேயாம்Ó (தத்துவ விவேசினி: 4:8, 23.8.1885)

இவ்வகையில் இவர்கள் முன்னெடுத்த தத்துவ மரபு என்பதைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள இயலும்.

- ஜுவிஸ் மற்றும் டச்சு இனக்குழுவைச் சேர்ந்த தத்துவ அறிஞரான ஸ்பீனோசா, 18ஆம் நூற்றாண்டின் தத்துவ மறுமலர்ச்சிக்கு முன்னோடியாகக் கருதப் படுகிறார். பைபிள் தொடர்பாகப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் முதன்முதல் விமர்சனம் செய்தவர். இவரது செல்வாக்குக்குட்பட்டு, கவிஞர் ஷெல்லி எழுதிய கட்டுரைதான்; ”The Necessity of Atheism” ஆகும்.

 ஸ்பீனோசா கோட் பாடுகளை சென்னை இலௌகிக சங்கம் ஏற்றுக் கொண்டு, இவரைப் பூர்வீக சுயாக்கியானி என்று அறிமுகப்படுத்தினர். இவ்வகையில் 18ஆம் நூற்றாண்டில் உருவான பகுத்தறிவுத் தத்துவ மரபைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினர் என்று கூறமுடியும்.

-          பாரீஸ் நகரத்தில் வாழ்ந்த வால்டேர்தான் முதன் முதல் மதச்சுதந்திரம் (Freedom of Religion) வெளிப் பாட்டுச் சுதந்திரம் (Free of Expression) ஆகியவற்றை முன்னெடுத்த அறிஞர். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர். ஆட்சி அதிகாரத்திலிருந்து கிறித்தவ மடாலயங்களைப் பிரிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர். இவ்வகையில் ஐரோப்பிய பகுத்தறிவுச் சிந்தனை மரபின் மூலவராகக் கருதப்படுகிறார். இவரது கோட்பாடுகளைச் சென்னை இலௌகிக சங்கத்தினர் பிரச்சாரம் செய்து வந்தனர். அவரது வழியில் செயல்படுபவர் களாகத் தங்களைக் கூறிக் கொண்டனர்.

-     ஸ்காட்லாந்து தத்துவ அறிஞரான டேவீட் ஹீயூம் பகுத்தறிவு மரபு சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். ‘A Treatise of Human Nature (1739), Dialogue Concerning National Religion (1777)’ ஆகிய ஆக்கங்களின் மூலம், மதம் சார்ந்த கோட்பாடு களுக்கு எதிராகச் செயல்பட்டவர். இவரது சிந்தனை மரபுகளை மேலைநாட்டின் சுயசிந்தனை யாளர்கள் உள்வாங்கிச் செயல்பட்டனர். சென்னை இலௌகிக சங்கம், இவரது கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு, தமது இதழ்களில் இவர் குறித்து எழுதி வந்தனர்.

-           இங்கிலாந்தில் பிறந்து, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க நாடுகளில் வாழ்ந்தவர் தாமஸ்பெயின். அமெரிக்காவில் புரட்சிகர சிந்தனை மரபுகளை உருவாக்கிய பெஞ்சமின் பிராங்கிளின் (1706-1790) இவரது நெருக்கமான நண்பர். தாமஸ்பெயின் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கத்திற்கு உட்பட்டவர். தாமஸ் பெயின் எழுதிய ‘The Age of Reason’ என்னும் ஆக்கம், சுயசிந்தனை மரபை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் வளப்படுத்தியது என்று கருதமுடியும். கிறித்தவ மதம் சார்ந்து நிறுவனங்களின் அதிகாரத்திற்கு எதிராகப் போராடியவர் இவர். கிறித்தவ மறுப்பாளரான தாமஸ்பெயின் இறுதி ஊர்வலத்தில் ஆறுபேர் மட்டுமே சென்றனர். அமெரிக்கப் புரட்சியின் தந்தை என்று கருதப்படும், இப்பகுத்தறிவாளர் கருத்துகளை சென்னை இலௌகிக சங்கத்தினர் பிரச்சாரம் செய்துவந்தனர்.

-           அமெரிக்கப் பகுத்தறிவாளரான இராபர்ட். ஜி.இங்கர்சாலை சென்னை இலௌகிக சங்கம் பெரிதும் ஏற்றிப் போற்றியது. “The Future of Religion” என்னும் அவரது நூலை இனிவரும் மதம் என்று மொழியாக்கம் செய்து Ôதத்துவ விவேசினிÕ இதழில் தொடர்ந்து வெளியிட்டனர். மேலைநாடுகளில் பெரிதும் பேசப்பட்ட பகுத்தறி வாளர் இங்கர்சால், தமிழ்ச்சூழலில் சென்னை இலௌகிக சங்கம் முதல்முதல் அறிமுகப் படுத்தியது. பிற்காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. இங்கர்சால் கருத்துக்களை விரிவாகப் பேசியதை நாம் அறிவோம்.

-           கி.பி.1860 இல் ‘‘National Secular Society என்னும் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இலண்டன் நகரில், கிறித்தவ மத அதிகாரத்திற்கு எதிராகச் செயல்பட்டவர் பிராட்லா. இவரோடு இணைந்து தமது இளமைக்காலத்தில் செயல் பட்டவர் அன்னிபெசன்ட் அம்மையார். ‘The

national Reformer, ‘The Free Thinker, The Secular Review, The Malthusian, The Truth seeker, Secular thought, The Liberator’ ஆகிய இதழ்கள் இலண்டனி லிருந்து வெளிவந்தன. இவை சுயசிந்தனையாளர் களால் நடத்தப்பெற்றவை. இவற்றிற்கு மூலமாக இருந்தது இலண்டன் நகரில் செயல்பட்ட மதச்சார்பற்ற அமைப்பு (National Secular Society)ஆகும். இவ்வமைப்பை வளர்த்தெடுத்தவர் பிராட்லா. சென்னை இலௌகிக சங்கம் பிராட்லாவோடு நேரடித் தொடர்பு கொண்டு செயல்பட்டனர். இதற்கான விரிவான தரவுகளை இவர்கள் நடத்திய இதழ்களில் காணமுடிகிறது.

மேற்குறித்த பல்வேறு விவரணங்கள் சார்ந்து காலனிய இந்தியாவில் இவர்களது செயல்பாட்டை பின்வரும் வகையில் மதிப்பீடு செய்ய இயலும்.

-           19ஆம் நூற்றாண்டு, காலனிய இந்தியாவில் சமய மறுப்பாளராகச் செயல்பட்ட குழுவினர்களாக இவர்களை மட்டுமே கருதமுடிகிறது. சமயப் பிரச்சாரம் மேலோங்கிய சூழலில் சமய மறுப்பு இயக்கமாகச் செயல்பட்டிருப்பதைக் கணக்கில் கொள்வது அவசியமாகும்.

-           மேலை நாடுகளில் உருவான புதிய சிந்தனை மரபுகளைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தி யவர்களாக இவர்களைக் கருதமுடியும்.

-           மேலை நாடுகளில் பேசப்பட்ட பொருளாதாரக் கோட்பாடுகளை, காலனிய இந்தியச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்க முயன்றவர்கள் இவர்கள் தான் என்று கூறலாம்.

-           தொழில் புரட்சி சார்ந்த அறிவியல் கருத்துக் களையும் பிரெஞ்சுப் புரட்சி சார்ந்த தத்துவக் கருத்துக்களையும் அமெரிக்க விடுதலை சார்ந்த கருத்துக்களையும் காலனிய இந்தியாவில் தமிழ்ச் சூழலில் பேசியவர்களாக இவர்களைக் கூறமுடியும்.

மேற்குறித்த பல்வேறு விவரணங்கள் சார்ந்து காலனிய இந்தியாவில் - குறிப்பாகத் தமிழ்ச்சூழலில் செயல்பட்ட இவ்வியக்கம், காலனிய இந்தியாவில் வேறு எங்கும் செயல்பட்ட அறிவுசார்ந்த செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். சமய மரபில் சீர்திருத்தங் களை முன்வைத்த வங்காள சிந்தனை மரபுக்கு மாற்றாக, சமய மறுப்பு இயக்கமாகத் தமிழ்ச்சூழலில் செயல் பட்டனர் என்பதைப் பதிவு செய்யும் தேவை நம்முன் இருப்பதாகக் கருதலாம்.

தமிழ்ச்சூழல்சார்ந்த அறிவுத்தோற்றவியல் (Epistemology) குறித்த புரிதலும் அம்மரபு உருவான வரலாறும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு காலச் சூழலுக்கு ஏற்ப புதிய புதிய தத்துவ உரையாடல்கள் உருப்பெறுவதை நாம் மறுப்பதற்கில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தத்துவ உரையாடலில் சென்னை இலௌகிக சங்கம் என்னும் அமைப்பு எவ்வகையில் செயல்பட்டது என்பதைத் தமிழ்ச்சமூக அறிவுத் தோற்றவியலில் ஒரு பகுதியாகக் கொள்ள முடியும்.

இத்தன்மை குறித்து இதுவரை அறியாத நிலை இருந்தது. தற்போது இவ்வமைப்பு குறித்து தத்துவவிவேசினி, The Thinker ஆகிய இதழ்களில் காணப்படும் பதிவுகள் வழி அறிகிறோம். தமிழ்ச்சமூகத்தின் வரலாறு எழுதுவோர் இதனை இனிக் கவனத்தில் கொள்வது அவசியம்.

தத்துவத்துறையின் ஒரு பிரிவாகக் கருதப்படும் அறிவுத் தோற்றவியல், மனித அறிவின் தோற்றச் சூழல்கள், வெளிப்படுத்து முறைகள், அதன் எல்லை ஆகிய பிறவற்றைக் கூறுவதாகக் கருதலாம். தமிழ்ச் சூழலின் தத்துவ உரையாடலில் இவ்வகையான தன்மைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எவ்வகையில் செயல்பட்டது என்ற உரையாடலை மேலும் மேலும் முன்னெடுக்க மேல் கூறப்பட்ட விவரணங்கள் உதவும். இதனை உலகுக்கு அறிமுகப்படுத்தும் கடமை நமக்குண்டு.

குறிப்பு:

சென்னை இலௌகிக சங்கம்; தத்துவம் - கடவுள் - நாத்திகம்; சாதி - பெண்கள் - சமயம்; காலனியம் - விஞ்ஞானம் - மூடநம்பிக்கை; என்ற ஆறு தொகுதிகள், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் 2012 இல் வெளியிடப் பட்டுள்ளது. இவை சென்னை இலௌகிக சங்க இதழ்களான தத்துவ விவேசினி - The Thinker ஆகியவற்றிலிருந்து பதிப்பிக்கப்பட்டவை. பதிப்பித்தவர் வீ.அரசு., இத்தொகுதிகளில் காணப்படும் செய்திகள் மற்றும் பல்வேறு இணைய தளச் செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை உருவாக்கப் பட்டுள்ளது.

Pin It