அரசியல் கட்சியின் தலைமையில் இருக்கும் அண்ணாமலை, ஆடு, ஆடு என்று ஆடவும் கூடாது, கோணிப் புளுகன் கோயபல்ஸ் போலப் பேசவும் கூடாது, நாகரீகம் இல்லாமல்.
1937ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையும் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் களத்தில் வலிமையாக நின்று கொண்டு இருக்கிறது தி.மு.கழகமும், அதன் ஆட்சியும்.
தி.மு.க தமிழை வளர்க்கவில்லை அழிக்கிறது என்றும், ஆங்கிலத்தைத் திணிக்கிறது என்றும் அண்மையில் கொஞ்சமும் கூச்சமும், நாணயமுமின்றிப் பேசியிருக்கிறார் அவர்.
தி.மு.கழகத்திற்கு அண்ணாமலையின் ‘சர்ட்டிபிக்கட்’ ஒன்றும் தேவையில்லை. வேண்டுமானால் அமித் ஷாவிடம் போய் அவர் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்.
சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாள மொழிநடையில் இருந்த தமிழைச் செந்தமிழாக மீட்டது தி.மு.கழகம்.
வடநாட்டு இந்தி வெறியர்களின் ஆதிக்கக் கொட்டத்தை அடக்கித் தமிழைத் தமிழ் நாட்டின் அரியணையில் அமர வைத்தது தி.மு.கழகம்.
அறிஞர் அண்ணாவின் அழகு தமிழும், நாவலரின் நல்ல தமிழும், கலைஞரின் கனிந்த தமிழும், பேராசிரியரின் பொதிகைத் தமிழும், அவர்களின் எழுத்தும், பேச்சும் என்று எதுவும் தெரியாத அண்ணாமலையின் வாய்ச்சவடால் உப்புக்கும், புளிக்கும் கூட உதவாது.
ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட உலக அறிவைத் தருகிறது என்பது கூட அந்த ‘மேதாவி’க்குத் தெரியவில்லை.
தி.மு.கழகத்தின் நிலைப்பாடு, அண்ணாவின் இருமொழிக் கொள்கை மட்டும்தான்.
தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் இணையாகத் தான் இருக்குமே ஒழிய, இந்திக்கு அவை இடம் தராது.
இருட்டுக்குள் பூனை உருட்டுவது போல அண்ணாமலை, இனியும் ‘உருட்டாமல்’ இருக்க வேண்டும் தமிழ்நாட்டில்.
- கருஞ்சட்டைத் தமிழர்