ஒரு நாட்டு மக்களைச் சீர்திருத்த வேண்டுமானால் - அவர்களிட முள்ள மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க வேண்டுமானால் - அவர்களிடமுள்ள சாதிசமய பேதங்களை ஒழித்து சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழச் செய்ய வேண்டுமானால் தைரியமாக அவர்களிடம் குடி கொண்டிருக்கும் குற்றங்களை எடுத்துக் காட்ட வேண்டும் - இவ்வாறு தேச மக்களிடம் படிந்து கிடக்கும் குற்றங்களை அவர்களுடைய எதிர்ப்பையும், வெறுப்பையும் எதிர்பாராமல் எடுத்துக் காட்டுவதன் மூலந்தான் அவர்களைச் சீர்திருத்தஞ் செய்ய முடியும். தேசத்தின் நன்மைக்கு மக்களுடைய சீர்த்திருத்தத்திற்கு எந்தெந்தக் காரியங்களை ஒழிக்க வேண்டும், எந்தெந்தக் காரியங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் விஷயங்களைப் பகுத்தறிவுடன் ஆராய்ந்துத் தன் மனத்திற்கு பட்டதை தைரியமாக ஜன சமூகத்திற்கு எடுத்துக் கூறும் தலைவர்களால்தான் - இயக்கங்களால்தான் எந்த தேசமும் முன்னேற்றமடைய முடியும்.periyar and maniammai kidsஇவ்வாறில்லாமல், மக்களுடைய பழக்க வழக்கங்களுக்கு அவர்களுடைய பழய கொள்கைகளுக்கு விரோதமான அபிப்பிராயங்களை வெளியிட்டால் பொதுஜனங்கள் நம்மை எதிர்ப்பார்கள்; அவர்களிடம் நாம் தலைவர்களாக விளங்க முடியாது; பொதுஜனங்களால் நாம் தூஷிக்கப் படுவோம் என்று பயந்து கொண்டு அவர்கள் அனுசரித்து வரும் மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டே சீர்திருத்தஞ் செய்ய முயலும் தலைவர்களாலும், இயக்கங்களாலும் ஒரு சீர்திருத்தமும் செய்ய முடியாது என்பது சீர்திருத்தவாதிகளின் முடிவான அபிப்பிராயமாகும்.

இந்த அபிப்பிராயத்துடன் நமது நாட்டில் உள்ள தலைவர்களின் போக்கையும், இயக்கங்களின் நடத்தைகளையும் கவனித்தால் அநேகமாக எல்லாத் தலைவர்களும், எல்லா இயக்கங்களும் பாமர மக்களின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு விரோதமான பிரசாரத்தைத் தாராளமாகவும் அஞ்சாமலும் செய்வதில்லை என்பது விளங்கும். ஆனால், தேசமக்களின் முன்னேற் றத்திற்கு காலநிலையை அனுசரித்து எந்தக் காரியங்களைச் செய்வது சரி யென்று படுகிறதோ அந்தக் காரியங்களை யாருடைய தயவுக்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல், இது வரையிலும் பகுத்தறிவுக்குப் பொருத்தமான - பொது ஜனங்களின் மூடப் பழக்க வழக்கங்களுக்கு விரோதமான - சிறந்த கொள்கைகளை ஆண்மையுடன் வெளியிட்டு வருவது நமது இயக்கம் ஒன்றேயாகும்; நமது இயக்கத் தோழர்களே யாவார்கள்; என்பது நமது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.

இம்மாதிரியான சீர்திருத்த அபிப்பிராயங்களைப் பாமர மக்களிடம் பரப்பி வருவதனால் அவர்களை இது வரையிலும், ஏமாற்றிக் கொண்டிருந்த எல்லா கூட்டத்தாருக்கும் நமது இயக்கத்தின் மேலும், நமது இயக்கத் தோழர்களின் மேலும், குரோதமும் பொறாமையும் ஏற்பட்டு நமது இயக் கத்தைப் பற்றியும், நமது இயக்கத் தோழர்களைப் பற்றியும் பலவகையான தப்புப் பிரசாரங்கள் செய்து வருகின்ற விஷயம் குடி அரசு வாசகர் களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த செய்தியாகும்.

முக்கியமாக நமது இயக்கத்தின்மேல் துவேஷத்தைக் கற்பித்துப் பொதுஜனங்களிடத்தில் பிரசாரம் பண்ணுகிறவர்கள் பிச்சை வாங்கும் புரோகிதக் கூட்டத்தாராகிய பார்ப்பனர்களும், அவர்களுடைய வார்த்தை களையும், அவர்களுடைய பிழைப்புக்கு ஆதாரமாக ஏற்படுத்தப்பட்டி ருக்கும் மதம், வேதம்,புராணம், சுவர்க்கம், நரகம், கடவுள், மோட்சம் என்னும் புரட்டுக்களின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் பகுத்தறிவற்ற ஏமாந்த சோணகிரிகளாகிய சில பார்ப்பனரல்லாதார்களும், கூலிக்கு மாரடிக்கும் சில காலிகளுமே ஆவார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெற்று விளங்கும் தேசீயப் பத்திரிகைகள் என்பனவும், வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்ட மற்றும் சில கூலிப் பிரசாரக் குட்டிப்பத்திரிகைகளும், நமது இயக்கத்தின் பேரிலும், தோழர்களின் மேலும், பல ஆதாரமற்ற அற்பத்தனமான அபாண்டமான பழிகளைச் சுமத்திப் பாமர மக்களிடம் பொய்ப்பிரசாரம் பண்ணிக் கொண்டிருக்கின்றன என்பதும் வாசகர்களுக்குத் தெரியாத செய்தி அல்ல.

நம்மைப் பற்றி சுயநலக்காரர்களும், மோசக்காரர்களும், கூலிக் காரர்களும், அயோக்கியர்களும் அவதூறுப் பிரசாரம் பண்ணிக் கொண்டி ருந்தாலும் நமது இயக்கம், நாளுக்கு நாள் பொதுஜனங்களின் மனத்தில் ஆழமாக ஊன்றி அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தி வருகின்றன என்பதை எந்த எதிரிகளும் மறுக்கமுடியாது.

இதற்கு உதாரணம் அடுத்தடுத்து பல இடங்களில் ஜில்லா மகாநாடுகளும், மாகாண மகாநாடுகளும், தாலூகா மகாநாடுகளும் நடந்து வருவதைக் கொண்டே அறியலாம். சென்ற 1931-ம் வருஷத்தில் தூத்துக்குடியில் ஒரு மகாநாடும், காரைக்குடியில் ஒரு மகாநாடும், பொறையாற்றில் ஒரு மகாநாடும், நன்னிலத்தில் ஒரு மகாநாடும், லாலுகுடியில் இரண்டு மகாநாடுகளும். விருதுநகரில் பல மகாநாடுகள் சேர்ந்த ஒரு மாகாண மகாநாடும், திருவாரூரில் ஒரு மகாநாடும், சென்னையில் பல மகாநாடுகள் சேர்ந்த ஒரு மகாநாடும், ஆக 9 மகாநாடுகள் நடந்திருக்கின்றன. கணக்கிட முடியாத பொதுக்கூட்டங்களும் நடந்திருக்கின்றன. இந்த மகாநாடுகளெல்லாம் மந்திரிகளுடைய தயவைக் கொண்டோ, ஸ்தலஸ்தாபனத் தலைவர்களின் தயவைக் கொண்டோ, ஜமீன்தாரர்களுடைய தயவைக் கொண்டோ, பெரிய பணக்காரர்களுடைய தயவைக் கொண்டோ நடைபெறவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இதைக் கொண்டு நம்மை அரசாங்கத்தின் தயவை நாடுகிறவர்களென்றும், உத்தியோகஸ்தர்களின் தாசர்களென்றும், நமது எதிரிகள் பிதற்றித் திரிவது வீண்புரட்டு என்பதை உணரலாம். ஆனால் பொது ஜனங்களின் ஊக்கத்தினாலும், வாலிபர்களின் முயற்சியாலுமே மேற்கூறிய நமது மகாநாடுகள் யாவும் நடைபெற்றன என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். இந்த மாதிரி வேறு எந்த இயக்க மகாநாடுகளும் நடந்ததில்லை, நடப்பதில்லை என்று தைரியமாகச் சொல்லுவோம். இந்த மகாநாடுகளில் சென்ற 26, 27-12-31-ந் தேதி சனி, ஞாயிறுகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நமது சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி இப்பொழுது கவனிப்போம். மற்ற மகாநாடுகளைப் பற்றிய விஷயங்களை அவ்வப்போது நமது பத்திரிகையில் எழுதி வந்ததைப் படித்திருப்பீர்கள்.

நமது மாகாணத்தின் தலைநகரமாகிய சென்னையில் நமது இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலும் நமது இயக்க சம்மபந்தமாக ஆங்காங்கே பல சமயங்களில் பல பொதுக்கூட்டங்கள் நடந்ததைத் தவிர சுயமரியாதை இயக்கத்தின் பேரால் ஒரு மகாநாடேனும் நடந்ததில்லை., இதற்குக் காரணம் நமது இயக்கப் பிரசாரம், அங்கு சரிவர நடத்தப் படாததும், நமது இயக்கத்தின் உண்மையான கொள்கைகள் பொது ஜனங்களுக்குத் தெரியாததும், இக்காரணங்களால் சென்னை நகரப் பொது ஜனங்களின் எண்ணம் நமது இயக்கத்தில் திரும்பாததுமே ஆகும் என்பதை நாம் தாராளமாக மறைக்காமல் ஒப்புக்கொள்ளுகிறோம்.

சென்னை நகர மக்களிடம் ஆங்கில நாகரிகம் எவ்வளவு குடி கொண்டிருக்கிறதோ அதைவிடப் பதினாயிரம் மடங்கு அதிகமாக மூடப் பழக்கவழக்கங்கள் அவர்கள் இரத்தத்தில் ஊறிப் போயிருக்கின்றன என்பதைச் சென்னை நகரத்தில் சிறிது அனுபவமுடையவர்களும் அறிவார்கள். அவர்கள் கொண்டாடாத பண்டிகைகளும், கும்பிடாத சாமிகளும், செய்து கொள்ளாத பிரார்த்தனைகளும், அநுஷ்டிக்காத விரதங்களும், நம்பாத மூட நம்பிக்கைகளும், செய்யாத புரோகிதச் சடங்குகளும், தரித்துக் கொள்ளாத மத வேஷங்களும், நமது மாகாணத்தில் வேறு எந்த பாகத்திலும் இல்லவே இல்லை. சர்வகலாசாலைப் பட்டங்கள் பெற்றவர்கள் முதல், எழுத்து வாசனை அறியாத பாமரர்கள் வரையில் இந்நிலைமையில் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாதவர்கள். அரசாங்க மந்திரிகள் முதல் தெருக் கூட்டும் தோட்டிகள் வரையில் எல்லோரும் இந்த நிலைமையிலேயே இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒன்றே ஒன்று சொல்லுகிறோம். கால்சட்டை, மேல்சட்டை, கழுத்துச் சுருக்கு, காலில் பூட்சு முதலியவைகளை நாகரிகமாக அணிந்திருப்பதோடுங் கூட காதில் வயிரக் கடுக்கன்களும், கைகளில் காப்பு கொலுசு களும், நெற்றியில் பட்டைநாமங்களும், கழுத்தில் அங்கவஸ்திரமும் அணிந்திருக்கும் வைதீக நாகரீகஸ்தர்களைச் சென்னை நகரில்தான் காணலாம். இந்த அலங்கோலமுள்ள நாகரீகத்தை வேறு எந்த இடத்திலும் காண முடியாது. இத்தகைய மக்கள் நிறைந்த இடத்தில் பொது ஜனங்களின் பெரிய தாராளமான ஆதரவாலும் முயற்சியாலும் பெண்கள் மகாநாடு, தொண்டர் மகாநாடு இவற்றுடன் கூடிய ஒரு சுயமரியாதை மகாநாடு நடப்பதென்றால் நமது இயக்கம் பொது ஜனங்களின் கவனத்தை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிற தென்பதை யோசித்துப் பாருங்கள். இனி அம்மகாநாட்டின் நிகழ்ச்சிகளைச் சிறிது கவனிப்போம்.

மகாநாடு நடந்த இரண்டு தினங்களிலும், நமது இயக்கத் தோழர்கள் செய்த ஒவ்வொரு பிரசங்கங்களையும் மண்டபங் கொள்ளாமல் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும், அளவற்ற சந்தோஷத்தோடும், ஊக்கத்தோடும், மூட பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்னும் ஆவேசத்துடனும் அப்படியே ஏற்றுக் கொண்டது குறிப்பிடத் தகுந்ததாகும். மகாநாட்டில் தலைமை வகித்தவர்களும், பேசியவர்களுமான ஒவ்வொரு தோழர்களும் நமது இயக்கக் கொள்கைகளை சென்னை நகர மக்களின் கண்கள் திறக்கும் படி விளக்கமாக அஞ்சாமல் ஆண்மையோடும், ஊக்கத்தோடும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

நமது இயக்கம், நமது மக்களாகிய ஆண், பெண்கள் அனைவரும் சம சுதந்தரம் பெற்று உலக வாழ்வில் உயர்வு தாழ்வில்லாத இன்பத்தை அனுபவித்து வரவேண்டுமென்பதற்காகவே பாடுபடுகின்றது என்னும் விஷயம் சுயமரியாதை இயக்கத்தின் உண்மையை அறிந்தவர்களுக் கெல்லாம் தெரிந்த செய்தியாகும். இதற்குத் தடையாக இருப்பவைகளான பார்ப்பன ஆதிக்கம், புரோகிதப்புரட்டு, வேத புராண இதிகாச சாஸ்திரங்கள், அவைகள் மேல் உள்ள நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, இவற்றுக்கெல்லாம் காரணமான ஆத்மா நம்பிக்கை ஆகியவைகள் அடியோடு ஒழியவேண்டும் என்று கூறுகின்றோம். இந்த விஷயங்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட எல்லா மதங்களும் வேரோடு, அடியோடு, கிளையோடு வீழ்ந்து மாள வேண்டும் என்று சொல்லுகின்றோம்.

மதங்கள் ஒழிந்தால் சாதிகள் ஒழியும்; மூடநம்பிக்கைகள் யாவும் ஒழியும்; எல்லோரும் அரசியலில் சமத்துவம் பெறலாம்; ஏழைகள் துயரம் நீங்கும்; ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் ஒழியும் என்று சொல்லி வருகின்றோம். நமது மக்களின் உயர்வு தாழ்வுக்கும், ஒற்றுமைக் குறைவுக்கும் காரணமாயிருப்பவைகளை யெல்லாம் ஒழிக்காமல் அவற்றைப் பாதுகாத்து நிலைநிறுத்தப் பாடுபடும் காங்கிரஸ் முதலிய இயக்கங்களை ஒழிக்க வேண்டுமெனக் கூறுகின்றோம். இவ்விஷயங்களையெல்லாம் சுயமரியாதை மகாநாட்டைத் திறந்து வைத்த தோழர் சிங்காரவேலு அவர்கள் பிரசங்கத்திலும், வரவேற்புத் தலைவர் தோழர் லட்சுமி நரசு அவர்கள் பிரசங்கத்திலும், தலைவர் தோழர் பார்த்தசாரதி அவர்கள் பிரசங்கத்திலும், பெண்கள் மகாநாட்டைத் திறந்து வைத்த சகோதரி கிரிஜாதேவி அவர்கள் பிரசங்கத்திலும், வரவேற்புத் தலைவர் சகோதரி குஞ்சிதம் அவர்கள் பிரசங்கத்திலும், தலைவர் சகோதரி அன்னபூரணி அவர்கள் பிரசங்கத்திலும், தொண்டர் மகாநாட்டு வரவேற்புத் தலைவர் சகோதரி சகுந்தலா அவர்கள் பிரசங்கத்திலும், தலைவர் சகோதரி இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்கள் பிரசங்கத்திலும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மகாநாட்டினால் சென்னை வாசிகள் அனைவரும், காங்கிரஸ் மக்களின் சாதி, மத, பழக்கவழக்கக் கொடுமைகளைப் போக்கி அவர்களை உண்மையான சுதந்தர முடையவர்களாகச் செய்யக்கூடிய ஸ்தாபனம் அல்ல வென்றும், இத்தகைய விடுதலையைத் தருவது சுயமரியாதை இயக்கமே என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள் என்று கூறலாம். “காங்கிரஸ் ஒன்றே விடுதலையளிக்கும் ஸ்தாபனமாகும். ஆகையால் எல்லோரும் காங்கிரசிலேயே சேர வேண்டும். இனி பார்ப்பனரல்லாதார் கட்சி, சுயமரியாதைக் கட்சி முதலியவைகள் நமது நாட்டிற்குத் தேவையல்ல’’ என்று பலர் பிரசாரம் பண்ணியதன் புரட்டையும் சென்னைவாசிகள் அறிந்து கொண்டார்கள் என்றே சொல்லுவோம்.

சென்னை மகாநாட்டில் இப்பிரசங்கங்களில் தோழர் சிங்காரவேலு அவர்களின் பிரசங்கத்தில் உள்ள இரண்டொரு விஷயங்கள் மாத்திரம் நாம் ஒப்புக் கொள்ள முடியாதவை என்பதை இச்சமயத்தில் கூறாமல் இருப்பதற்கில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை மாத்திரம் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

நமது இயக்கக் கொள்கைகளில், ஜாதிகளையும், மதங்களையும், சடங்குகளையும் ஒழிக்கக் கலப்புமணம் அவசியமானது என்பதும் முக்கிய மானதொன்றாகும். இவ்விஷயம் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமும் ஆகும். ஆனால். தோழர். சிங்காரவேலு அவர்கள் தமது பிரசங்கத்தில், “நமது தேச ஜாதி கலப்பு மணத்தால் ஒழியும் என்று சிலர் கருதுகின்றார்கள். ஆனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் தனிப்பட்ட ஒரு ஜாதியாகின்றார்கள். இந்த விதங்களால் இன்னும் ஜாதிகள் வளர்ந்து வருகின்றன’’ என்று கூறியிருப்பதை நாம் ஒப்புக்கொள்ளமுடியாது. தற்போது கலப்பு மணம் செய்து கொள்ளுகின்றவர்கள் குறைவாயிருப்பதனாலும் கலப்பு மனஞ் செய்து கொள்ளுவதனால் பாதகம் இல்லை என்ற எண்ணம் நமது மக்களிடம் உண்டாகாததனாலும், இவர்கள் தனி ஜாதியாக இருப்பதைப்போல காணப்படுகின்றார்களே யொழிய உண்மையில் இவர்கள் தனி ஜாதியாராக இல்லை. கலப்பு மணம் அதிகப்பட அதிகப்பட, ஜாதியென்னும் பாறை தூள் தூளாகச் சிதறி, பொடியாக பறந்துபோய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜாதி, மதம், சடங்குகள் என்னும் பாறைகளை உடைத்துத் தூளாக்கிப் பறக்கச் செய்யும் கருவி கலப்பு மணத்தைவிட வேறொன்றும் இல்லையென்பதே நமது இயக்கத்தின் அபிப்பிராயமாகும். இது கல்வியினாலும் ஆகும். அந்நியநாட்டில் உள்ள பல மேதாவிகளும், நமது நாட்டிலுள்ள பல பேரறிஞர்களும் இதையே வற்புறுத்தி வருகிறார்கள்.

சென்னைச் சுயமரியாதை மகாநாட்டில், காங்கிரஸ், காந்தி, ஹிந்தி முதலியவைகளைக் கண்டித்தும், செங்கற்பட்டு, ஈரோடு, விருதுநகர், மகாநாடுகளில் நிறைவேறிய தீர்மானங்களை ஆதரித்தும் யாதொரு எதிர்ப்புமின்றிப் பொது ஜனங்களின் ஏகமனதான அபிப்பிராயத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதனால் சென்னைப் பொது ஜனங்கள், காங்கிரஸ் பித்தலாட்டங்களையும், சுயமரியாதை இயக்கத்தின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாம்.

சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்டில் நிறைவேறியுள்ள தீர்மானங்களும் பெண்களின் சமத்துவத்திற்கும், சுதந்தரத்திற்கும் பெரிதும் ஏற்றதாகவே யிருக்கின்றன. சென்ற 28 - 12 - 31-ல் சென்னை ‘செனட்’ மண்டபத்தில் இந்தியப் பெண்கள் மகாநாடு சகோதரி பி. கே. ராய் அவர்களின் தலைமையில் நடந்தது. அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் சகோதரி நாசிர் உசெய்ன் அவர்கள். இவ்விருவர் பிரசங்கங்களும், பெண்கள் சுதந்தரத்திற்கான விஷயங்களை எடுத்துக் காட்டுகின்றன. அம் மகாநாட்டிலும் பெண்கள் சுதந்தரத்திற்கும், சமத்துவத்திற்கும் ஏற்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

ஆனாலும் அத்தீர்மானங்களைக் காட்டிலும், அம்மகாநாட்டிற் பேசியவர்களைக் காட்டிலும் நமது சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்டுத் தீர்மானங்களும், பேச்சுக்களும் முற்போக்குடையதாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நமது சுயமரியாதைப் பெண்கள் மகாநாட் டில், பெண்களின் அடிமைக்கு முதற் காரணமாக இருக்கின்ற மதங்கள் ஒழிய வேண்டும் என்றே எல்லாச் சகோதரிகளும் கர்ஜித்தார்கள். இந்த வாசனை யானது கொஞ்சங்கூட ‘செனட்’ மண்டபத்தில் நடந்த இந்தியப் பெண்கள் மாநாட்டில் வீசவில்லை என்பதை அந்த மகாநாட்டு நிகழ்ச்சிகளைப் படித்தவர்களும், பார்த்தவர்களும் அறிவார்கள். ஆயினும் வயதேறிய மத நம்பிக்கையுள்ள பல பெண் மக்கள் கூடிய இந்திய பெண்கள் மகாநாட்டில் பலத்த விவாதத்தோடும், திருத்தத்தோடும் பிரஜா உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டிருப்பதை நாம் பெரிதும் பாராட்டுகிறோம். மற்றும் பெண்கள் சுதந்தரத்திற்காக நிறைவேற்றப் பட்டிருக்கும் எல்லாத் தீர்மானங்களையும் பாராட்டுகிறோம்.

இனி நமது சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாட்டைப் பற்றி நாம் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. இவ்வளவு தூரம் நமது நாட்டில் சுய மரியாதை இயக்கம் பரவவும், பொது ஜனங்கள் இவ்வியக்கக் கொள்கைகளை உணர்ந்து கண் விழிக்கவும் செய்தவர்கள் சுயமரியாதைத் தொண்டர்களாகிய தோழர்களே யென்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தோழர்களின் இடை விடாத - சுயநலங் கருதாத - யாருடைய தயவு தாட்சண்யங்களுக்கும் கட்டுப்படாத உழைப்பினால் தான் நமது இயக்கம் சம்பந்தமான இத்துணை மகாநாடுகளும், கூட்டங்களும் நடைபெறுகின்றன என்பதை யாரும் அறிவார்கள். ஆகவே அவர்கள் மகாநாட்டில் பேசிய பேச்சுக்கள், நமது இயக்கத்தை இன்னும் அதிதீவிரமாக நாடு முழுதும் பரவச் செய்து பொது ஜனங்களை ஏமாறாமல் எழுப்பிவிடக் கூடியனவாகவேயிருந்தன. அப்பேச்சுக்களையும், அப்பேச்சாளர்கள் எடுத்துக் காட்டிய உண்மைகளையும் ஆணித்தரமான அபிப்பிராயங்களையும் கேட்ட கிழவர்கள் முதல் வாலிபர் வரை ஆண் பெண்கள் அனைவரும் மதப்புரட்டு, காங்கிரஸ் புரட்டு, வைதீகப் புரட்டு, சடங்குப் புரட்டு முதலியவைகளை விளக்கமாகத் தெரிந்து கொண்டு அடிக்கடி சந்தோஷ ஆரவாரஞ் செய்தனர்.

கடைசியாக ஒரு விஷயத்தை மட்டும் கூறி முடிக்கின்றோம். நமது தலைவர் ஈ. வெ. ராமசாமி அவர்கள், உடல் நலமில்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் மனிதத் தன்மையற்ற பேடிகள் சிலரும் “சிவநேசர்கள்” என்றும், “தேசீயவாதிகள்” என்றும், “சைவப் பெரியார்கள்” என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அயோக்கியர்கள் சிலரும் “ஈ. வெ. ராமசாமி இப்படியே எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு வேறு உலகம் போய்விட வேண்டும், போய் விட்டால் நாடு நன்மையடையும்” என்று முட்டாள் தனமாகவும், சிறிதும் உலக ஞானமில்லாமலும், பத்திரிகைகளில் எழுதினார்கள். தங்கள் சாமிகளை வேண்டிக் கொண்டார்கள். பிறகு, ஈ.வெ. ராமசாமியும் தோழர். எஸ். ராமநாதனும் ஐரோப்பா சுற்றுப்பிரயாணம் போயிருக்கின்றதை அறிந்ததும் அப்பேடிகள் ஆனந்தக் கூத்தாடினார்கள். நமது இயக்கம் செத்து போய்விடும். தங்கள் வயிற்றுப் பிழைப்பு நாடகத்தை யாதொரு விக்கினமும் இல்லாமல் நடத்திப் பொது ஜனங்களை ஏமாற்றலாம் என்று கும்மாளம் போட்டார்கள். ஆனால் இத்தகைய பேடிகளின் அடிவயிற்றில் நெருப்பு எரியும்படி நமது மகாநாடு சென்னையில் வெற்றிகரமாக பொது ஜனங்களின் தாராளமான ஆதரவுடன் நடைபெற்றது. இதிலிருந்தாவது நமது எதிரிகளாகிய வயிற்றுப் பிழைப்புக் காரர்கள், நமது இயக்கம் பொதுஜன இயக்கம் என்பதையும் தலைவர்கள் சுயநலத்திற்கான இயக்கம் அல்ல வென்பதையும் உணர்ந்து வாயடங்குவார்களென்று நினைக்கிறோம். கடைசியாக இந்த சென்னை மகாநாட்டை முன்னின்று நடத்திய நமது இயக்கத் தோழர்களையும் பொதுஜனங்களையும் நாம் பாராட்டுவதுடன் நமது தலைவர்களான ஈ. வெ. ராமசாமியும், எஸ். ராமநாதனும் ஐரோப்பா சுற்றுப்பிரயாணத்திலிருந்து திரும்பி வருவதற்குள் இது போல இன்னும் பல மகாநாடுகளும் நடைபெறும் என்று எதிர் பார்க்கிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 03.01.1932)