முத்தமிழ் இப்போது ஐந்தமிழ் என்றும் அதற்கு மேலும் கிளைத்து வளரும் நவீன காலம் இது. இயற்றமிழைத் தவிர, இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழின் நிலை பொதுநிலையில் தேங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. தமிழிசை முயற்சிகள் இப்போது மிகவும் அருகிவிட்டன. அண்மைப் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் மேலெழுந்து வரும் தமிழ்த்தேசிய எழுச்சி உண்மையில் இசை மற்றும் நாடக வளத்தினை மிகுதியும் கவனத்தில் கொள்ளவே இல்லை. தமிழிசையே முற்று முழுவதுமாகத் தமிழ் நாட்டிலிருந்து துடைத்தெடுக்கப்படும் காலகட்டத்தில் புதிய கீர்த்தனை உருவாக்கம் குறித்துச் சிந்திப்பது பேராசை யாகவே முடிந்துவிடுகிறது. ஆனால் நாடகம் இன்னும் இசைத்தமிழின் சோக நிலையை எய்தவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழில் நாடகம் என்ற பெயரில் வெளிவருபவை பெரும்பாலும் நாடகம் என்ற வடிவத்தின் தனித் தன்மையை உள்வாங்கியவை அல்ல. இலக்கிய நாடகம், வரலாற்று நாடகம், சமூக நாடகம், சிறுவர் நாடகம் என்று அறிவிப்புடன் அச்சுவாகனமேறி அரசு நூலகத் துறையில் வரிசையில் நின்று இடம்பிடிக்கும் இந்நாடகங்கள், ‘நடிக்கப்படுவது நாடகம்’ என்ற புரிதலை அறவே விலக்கியனவாக இருக்கின்றன. உலகின் எந்த மொழி யிலும் இல்லாதவகையில், ‘படிப்பதற்கேற்ற நாடகங்கள்’ என்ற புதிய பதாகையைத் தமிழ்நாடகம் ஏந்திவருகிறது. இந்த அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் நாடகப் பனுவல்கள் மேடையேற்றத்திற்குக் கிஞ்சித்தும் பயன்படுவது இல்லை.

நாடகத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும் நாடகவியலாளர்கள் பனுவல்களை எழுதுவதோடு, தமிழின் புனைகதைப் படைப்பாளிகளில் பலரும் நாடகப் பனுவல்களை எழுதும் முயற்சியில் இருந்திருக்கின்றனர். புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிச் சுந்தர ராமசாமி வரை பல புனைகதைப் படைப்பாளிகள் நாடகம் எழுதி யிருக்கின்றனர். நாடக சபைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படும் டி.கே.எஸ்.சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ர நாமம் ஆகியோரின் காலத்தில் எழுத்தாளர்களிடம் நாடகப்பனுவல்களை எழுதச் சொல்லிப் பெற்று அரங் கேற்றியுள்ளனர். நவீன புனைகதை எழுத்தாளர்களில் சிலரும் நாடகப் பனுவல்களை எழுதியுள்ளனர். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘அரவான்’ தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்த்தப்பட்டது. ‘அனுமதி பெற்று நிகழ்த்தப்பட வேண்டும்’ என்ற அறிவிப்புடன் எழுத்தாளர்களின் நாடகப் பனுவல்கள் நூலாவது உண்டு. ஆனால் ‘ஒருபோதும் அரங்கேற்றப்பட அனுமதி இல்லை’ என்று மார்தட்டிக் கொண்டு அச்சேறும் நாடகப் பனுவல்களும் உண்டு. ஜெயமோகனின் நாடகத் தொகுப்பு இப்படியான குறிப்புடன் வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடகச் செயல்பாடுகளில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் புதிய நாடகப் பனுவல் உருவாக்கத் திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்முகராஜாவின் ‘குதிரை முட்டை’ அண்மையில் வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்ற நாடகப் பனுவல் ஆகும். நாடகப் பனுவல் மற்றும் நிகழ்த்தல் குறித்த விமர்சனக் கட்டுரைகளுடன் அப்பனுவல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாடக அரங்காற்றுகைக்குப் பிறகு முருகபூபதியின் நாடகங் களும் நூலாக்கம் பெறுகின்றன. இவற்றைத் தவிர விரல் விட்டு எண்ணத்தக்க பனுவல்களே வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பெண்ணிலைவாத நாடகப் பனுவலாசிரியர் களில் எம்.எஸ்.காந்திமேரி குறிப்பிடத்தக்கவர். ‘காட்டுக் குள்ளே திருவிழா’ என்ற குழந்தைகள் நாடகப் பனுவல் தொகுப்புக்குச் சொந்தக்காரர். ‘நளாயினி என்றொருத்தி.. தீ’ என்ற நாடகப் பனுவலின் வழியாகத் தமிழ்ப் பெண்ணிலை வாத அரங்கிற்குப் பங்களிப்பைச் செலுத்தியவர். அவரது மூன்றாவது நாடகத் தொகுப்பு ‘பொம்மக்காவின் மூன்று பெண்கள்’.

பொம்மக்கா திருவிழாவிற்கு வந்து பொம்மைகளை வைத்துக் கதை சொல்லி விற்கும் கலைஞர். அவள் குழந்தை களுக்கும் பெரியவர்களுக்கும் மூன்று பெண் பொம்மை களை வைத்துக் கதை சொல்லுகிறாள். அவள் கதையினைச் சொல்லச் சொல்ல அக்கதையே நாடகமாக விரிகிறது. கொடிய வறுமையிலும் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தன் ஏழு குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்ட தாகக் குறிப்பிடப்படும் நல்லதங்காள் கதையினைச் சொல்லும் பொம்மக்கா, நல்லதங்காள் தற்கொலை முடிவைக் கைவிட்டுத் துணிச்சலுடன் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் தெம்புடன் மீண்டு வருவதாகச் சொல்கிறாள்.

பொம்மக்கா சொல்லும் இரண்டாவது கதை பாஞ்சாலியைப் பற்றியது. கௌரவர் சபையில் பணயப் பொருளாக வைக்கப்பட்டுத் தோற்கப்பட்டு இழுத்து வரப்படும் பாஞ்சாலி, சபையில் துணிச்சலுடன் பேசு கிறாள். வியாசன், வில்லிபுத்தூரார், நல்லாப்பிள்ளை, பாரதியார் ஆகியோர் படைத்துக்காட்டிய பாஞ்சாலிக்கும் பொம்மக்கா முன்வைக்கும் பாஞ்சாலிக்கும் ஏணி வைத் தாலும் எட்டாத வித்தியாசங்கள். இவள் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் விடுதலை முழக்கமிடும் பாஞ்சாலி. ஆகவேதான் தன் கணவர்களுடன் வாழ விருப்பமின்றித் தனியே வாழுவதென்று முடிவு செய்து அதைச் சபைக்கு அறிவிக்கிறாள்.

பொம்மக்காவின் மூன்றாவது பெண் இயேசு கிறித்து காலத்தில் தண்டனைக்கு விசாரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளி. ‘உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர்கள் இவள் மீது கல்லெறியலாம்’ என்ற இயேசுவின் கருணைக்குப் பாத்திரமான பெண், இங்கு வெடிப்புறப் பேசுகிறாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய சமூகத்தின் மீது சீறிப் பாய்கிறாள். பாலியல் ஒழுக்கக் கேடு ஆணாதிக்கத்தின் விளைச்சலே என்பதைப் பறையறிவிக்கிறாள். அவளுடைய கேள்விக்கணைகள் சமூகத்தின் உறங்கும் மனசாட்சியைத் தட்டி எழுப்புகின்றன.

மூன்று பெண்களின் கதையைச் சொல்லும் பொம்மக்கா, இறுதியில் நாடு, காலம் வேறுபட்ட அம்மூன்று பெண்களையும் சந்திக்க வைக்கிறாள். நீண்ட கூந்தல் மட்டுமே தங்களிடம் உள்ள ஒற்றுமை என்று வியக்கும் அப்பெண்கள் புரட்சிகரக் கருத்தாலும் ஒன்றுகின்றனர்.

பெண்நிலைவாதச் சிந்தனை வரலாற்றை மறு விசாரணை செய்கிறது. இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என அனைத்துமே தூசு தட்டப்பட்டுப் புது வாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. இவ்வாசிப்பில் புனிதங்கள் கட்டுடைக்கப்படுகின்றன; மௌனங்கள் கலைக்கப்படுகின்றன; இடைவெளிகள் இணைக்கப் படுகின்றன; கரடுதட்டிப்போன சிந்தனைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இது வரலாற்றுச் செல்நெறியின் தவிர்க்க இயலாத இயங்குவிதி. உண்மையில் சமூகம் மரிக்கொண்டும் வளர்ந்துகொண்டுமிருக்கிறது என்பதன் ஆரோக்கியமான அடையாளங்கள் இவை.

பொம்மக்காவின் மூன்று பெண்களும் துயரங் களைச் சுமப்பவர்கள். ஆனால் புதிய பெண்ணிலைவாத வெளிச்சத்தில் புடம் போடப்பட்ட தங்கங்களாக மின்னுகின்றனர். புதிய வெளிச்சத்தோடு உலகுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழுகின்றனர். பெண் நிலைவாத நாடக அரங்கின் அடுத்த படிநிலை வளர்ச்சி இப்பனுவல் என்பதை அழுத்தமாகச் சொல்லலாம்.

பனுவலாசிரியர்தான் பொம்மக்கா பொம்மக்கா தான் பனுவலாசிரியர். இந்த இரசவாதம் உறுத்தலின்றி நடந்திருப்பது பனுவலின் வெற்றியாகும். விரித்த கூந்தல் துயரத்தின் குறியீடு. ஆனால் அக்குறியீட்டை இந்நாடகப் பனுவலில் புதிய குறியீட்டுக்குப் பயன் படுத்தியிருக்கிறார் பனுவலாசிரியர்.

பொம்மக்காவின் கதைசொல்லும் மொழி வசீகரத் துடன் வெளிப்பட்டுள்ளது. ஆனால் புதிய வரலாற்றைப் படைக்கும் மூன்று பெண்களின் மொழிகளும் தட்டை யாக இருக்கின்றன. கனதியற்ற மொழியினால் உக்கிரமாக இருக்க வேண்டிய பகுதிகள் ஆறிய பழங்கஞ்சியாக உள்ளன. பனுவலாசிரியர் நாடகப் பாத்திரங்களுக்கேற்ற மொழியில் அக்கறையும் கூடுதல் கவனமும் செலுத்தி யிருந்தால் இப்பனுவல் வேறொரு கனதியான தளத்தினை அடைந்திருக்கும்.

புதிய நோக்கு, களம், சொல்முறை ஆகியவற்றுடன் களத்திற்கு வந்துள்ள ‘பொம்மக்காவின் மூன்று பெண்கள்’ நவீன பெண்ணிலைவாத நாடக அரங்கின் கவனத்திற்கு உரியவர்கள். இப்பனுவல் அரங்காற்றுகை செய்யப்படும் போது இன்னும் புதிய அலைகளையும் அதிர்வுகளையும் உருவாக்கும் எனலாம்.

பொம்மக்காவின் மூன்று பெண்கள் (நாடகம்)

ஆசிரியர்: எம்.எஸ்.காந்திமேரி

பதிப்பகம்: எம்.எம்.ஆர். கல்வியியல் அறக்கட்டளை,

புதுச்சேரி ,விலை: ரூ.85/-

Pin It